Tuesday, July 8, 2008

தசாவதாரம், ஒரு பின் குறிப்பு...

படம் வந்து இத்தனை நாளாச்சே, போய் தான் பார்ப்பமே என்று நாகப்பட்டிணம் பாண்டியன் தியேட்டரில் நைட் ஷோவிற்கு சகாக்களுடன் போனேன். படத்தை பற்றி மஹா கேவலமான விமர்சனங்களை ஏற்கனவே படித்துவிட்டதால், சொதப்பல்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டதோ என்னவோ, படம் மிக நன்றாகவே இருப்பதாக தோன்றியது. இரண்டு நாள் தூங்காது வேலை செய்த களைப்புக்கூட தெரியாமல் எல்லோரும் கண்கொட்டாமல் திரையை உன்னிப்பாய் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இந்த படத்தை பற்றின ஒரு சின்ன பின் குறிப்பு உள்ளது. இந்த படத்திற்கான story discussion நடந்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு துணை இயக்குனர், “கமல் சார் பத்து கெரக்டர்ல நடிக்கிறா மாதிரி படம் மேடம், நான் ஒரு கதை பண்ணியிருக்கேன், நல்லா இருக்கானு சொல்லுங்க” என்றார். கதைகள் கேட்பது தான் என் தொழில் ஆயிற்றே! கேட்டு வைத்தேன். ரொம்ப சுமாராய், பத்து கெட் அப்பில் கமல் தோன்றுவதை தவிற வேறு எந்த சரக்கும் இல்லாத ஒரு insipid கதையை அவர் சொல்ல, நான் பெரிய ஆர்வம் காட்டாமல், “கதை ஓகே தான், ஆனாலும்....” என்று இழுக்க, “உங்க கிட்ட வேறு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க மேடம்” என்று அவர் தொணக்க, நானும் Dan Brown எழுதின Angels and Demons கதையை தழுவி தமிழாக்கம் செய்து, antimatterருக்கு பதில் ஒரு பயோவெப்பனை செருகி, மதம், மனித மனம் + பத்து கமல்களை சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லி, புத்தகத்தை கடன் எல்லாம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு என்ன ஆனது அன்று யாம் அறியோம் பராபரமே என்று நான் பாட்டிற்கு தேமே என்று என் வேலையில் மூழ்கிக்கிடந்து, வேலை மூம்முரத்தின் சைக்கிள் கேப்பில் நைட் ஷோவிற்கு போனால்....சாட் சாத் அதே Angels and Demons, அத்தனை அழகாக தமிழாக்கப்பட்டு, இந்திய contextடில் கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்ததை கண்டு, சும்மா சொல்ல கூடாதுப்பா, கலக்கிவிட்டார் கமல்! என்று அசந்து போனேன் நான்.

angels and demonsசின் theme கொஞ்டமும் சிதறாமல், மதம், மனிதனேயம், விஞ்ஞானம், இயற்கை, ஆன்மீகம் வர்ஸஸ் நாத்தீகம் சர்ச்சை என்று எல்லா ingredientsசையும் அழகாய் கலந்து, வேட்டிகன் போப்பாண்டவர்கள் தேர்வு பிரச்சனைக்கு பதிலாக சைவர்கள்-வைணவர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட துவேஷம் பற்றின வரலாற்றை சேர்த்து, கூடவே சுனாமியையும் கிலைமாக்ஸில் பயன்படுத்திக்கொண்டது கமலின் கதைசொல்லும் கெட்டிக்காரத்தனத்திற்கு இன்னொரு எ.கா.

நேபோலியன் குலோதுங்கர் கெட அப்பில் அசத்தலாய் இருந்தார். வில்லன் கேரெக்ரட் வெரி குட்டாய் இருந்தது. ஆனால் கமலின் பெரிய கண்கள் இந்த பத்து கேரக்டர்களை உருவாக்க பெரிய தடையாய் இருந்தன போலும்! பிராஸ்தெடிக் முகங்கள் கொஞ்சம் நெருடலாக இருந்தன, கொஞ்சம் மெல்லிதாக இருந்திருந்தால் முகம் உப்பிக்கொண்டது போல் இருந்திருக்காதோ? குணா கமலின் கருப்பு நிறம் இயல்பாக இருந்தது, ஆனால் பூவராகன் கமல் சொரியாஸிஸ் வந்தவர் போல, கொஞ்சம் கலரும் textureரும் விகாரமாகவே இருந்தார். ஜப்பானிய கமல் முகம் ரொம்ப அகலம், உயரக்கமல் கைகள் சைஸ் மேட்ச் ஆகவில்லை, பாட்டி கமல் முகம் ஹாலோவீன் முக மூடி மாதிரி பயமுருத்தலாய் இருந்தது. ஆனால் பாட்டிகமலின் ஒடுங்னின சைஸ் தத்ரூபமாய் இருந்தது!புஷ் கமல் புருவம் இன்னொரு சொதப்பல்! ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தோற்றகுறைகளை தன் body language + voice modulationனை கொண்டு சரிகட்டிவிட்டார் கமல்.

சிரேஸி மோஹனின் பிராமினிக்கல் யூமர் ரொம்பவே போரடிக்க ஆரம்பித்துவிட்டது, என்ன ஒரே ஆறுதல் கதா நாயகியின் பெயர் ஜானகி இல்லை! என்ன, இத்தனை வட்டார வழக்குகளை போட்டு பிழந்துக்கட்டியதில், பல இடங்களில் வசனமே புரியவில்லை. போதாதகுறைக்கு ஓவர் dense ஆங்கிலத்தில் தலைவர் தன் புலமையை பிய்த்து உதர, கொஞ்சம் என்னை மாதிரி மக்குகள் மேல் கருனை காட்டி, சிம்பிலாய் மொழியை கையாண்டிருக்கக்கூடாதா என்று தோன்றியது. அதுவும் அண்ணன் பாட்டுக்கு chaos theory, ebola hybrid, intelligent design, tectonic plate, Na Cl என்றெல்லாம் கிரேக்கமும், லத்தினும் பேச....அவர் நிறைய ஓம்ஒர்க் செய்திருக்கிறார் என்று புரிகிறது. ஆனால் படம் பார்க்கும் என்னை போன்ற பாமரர்கள் ஸ்கூல் ஓம் ஒர்க்கையே டிமிக்கி கொடுத்து பழகியவர்கள், படம் பார்த்து பொழிது போக்கலாம் என்று தியேட்டர் போனால், கையில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி இல்லாமல் வசனமே புரியாது என்றால், வாட் an அநியாயம்! ஆனால் புரிந்த வசனங்கள் முழுக்க ரொம்பவே சுவையாக இருந்தன. போகிற போக்கில் பெரிய பெரிய யோசிக்கவைக்கும் கருத்துக்களை அநாயாசமாக தூவிவிட்டுபோகிறார் மனிதர். எல்லாமே புரிந்திருந்தால் இன்னும் எவ்வளவோ என்ஜாய் பண்ணியிருக்கலாம்.

ஆர்ட் டைரெக்ஷம் அமர்க்களமாய் இருந்தது, சுனாமி காட்சிகள் ஒரே ஒரு கார் மூழ்கல் இடத்தை தவிர செம சூப்பராய், தத்ரூபமாய் இருந்தன!

கனவு டூயட், என்ற பெயரில் இடைசெருகிய பாடல்கள் இல்லாதது படத்தை
உலகத்தரமாய் ஆக்கியது. இசை, பின்புல ஓசை இரண்டுமே பொருத்தமாய் இருந்தன.

criticism comes easier than craftsmanship தான், ஆனால் தன் பலங்கள் மற்றும் பலவீனங்களை கமல் மாதிரியான ஒரு dedicated artist புரிந்துக்கொண்டால் அவர் படைப்புக்கள் இன்னும் சூப்பராய் இருக்குமே. அதனால் அவர் கூடவே இருக்கும் சகாக்கள், எல்லாவற்றுக்கும் உம் கொட்டி ஓகே பண்ணாமல் கொஞ்சம் சரியான feedback கொடுத்தால் பெரும்பாலான கண்ணை உருத்தும் தவறுகளை தவிர்த்திருக்கலாம்!

ஆனால் ஒன்று, தசாவதாரம் மாதிரியான புராதானமான கான்செப்டை ஏஞ்சல்ஸ் ஆண்ல் டெமன்ஸ் மாதிரியான புதிய தீமோடு கலந்து ஜனரஞ்சகமான ஒரு ரீமிக்ஸை கொடுத்து கலக்கிவிட்டார் கமல், hats off to his ingenuity!