Thursday, December 31, 2009

Tuesday, December 15, 2009

Monday, December 7, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 27

என்ன ஸ்நேகிதி, போன இதழை படித்து விட்டு, படிப்பு அவ்வளவு முக்கியம் இல்லைனு சொல்லுறாங்களே, அப்படினா ஆம்பிளையோட அறிவை எப்படி தான் எடை போடுறதாம், என்று யோசிக்கிறீர்களா? நீங்களே பார்த்திருப்பீர்களே, மெத்த படித்திருப்பார்கள் ஆனால் சுத்த பேக்காக இருப்பார்கள், எதுவுமே படித்திருக்க மாட்டார்கள் ஆனால் ஊரையே ஏலம் போட்டு விற்றே விடுவார்கள். ஆக படிப்பு என்பது எந்த மனிதனின் அறிவையும் அளவிட்டு விடாது.

அப்ப அறிவை எப்படி தான் அளவிடுவது என்று தானே கேட்கிறீர்கள். அறிவுக்கு சில அறிகுறிகள் உண்டு:


1. அறிவுள்ளவன் சுயமாக யோசிப்பான். உதாரணத்திற்கு இந்த மாப்பிள்ளை எடுத்து கொள்வோமே. அவன் புது மனைவி அவனிடம் போய், ”நாம் ஒரு குக்கர் வாங்கலாமே, தினமும் உலை வெச்சு சாதம் வடிக்கிறதுனா கேஸ் எவ்வளவு வேஸ்டாகுது. கஞ்சு தண்ணீயில சத்தெல்லாமும் வேற வீணா போகுது, குக்கர் வாங்கினா, ஒரே நேரத்துல, சாதம், காய், பருப்புனு நிமிஷத்துல சமச்சிடலாம், சத்தும் வீணாகாது, கேஸ் செலவும் மிச்சம்” என்று அபிப்ராயம் சொல்ல, அந்த பையன் உடனே, “அடடா, என் பொண்டாட்டிக்கு என்னே பொருப்புணர்ச்சி! என்ன ஒரு எரிபொருள் சிக்கனம்,” என்று உச்சி குளிர்ந்து போய் வெகுவாய் பாராட்டுவான் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தான் இல்லை. பையன் மிக மும்முரமாய் அடுத்து உதிர்த்த பொன் மொழி என்ன தெரியுமா? “என் அம்மாவை கேட்டியா? அவங்க என்ன சொன்னாங்க?”

“கேட்டேனே, அவங்க என்ன இருந்தாலும் வடிச்ச சாதம் மாதிரி வர்றாதுனு சொல்லுறாங்க. ஆப்டரால் ஒரு குக்கர் வாங்குற விஷயம், இதை நாமலே பேசி முடிவு பண்ணிக்கலாமே, இதுக்கு எதுக்கு அத்தைய இழுக்கணும்?” என்று மனைவி அலுத்துக்கொள்ள மாப்பிள்ளை, “என் அம்மாவுக்கு தெரியாதது உனக்கு தெரியுமா? என்ன படித்துவிட்ட திமிரா?” என்று கோபிக்க, குக்கர் வாங்கலாமா வேண்டாமா என்று பேச்சு அப்படியே திசைமாறி போய், அவன் அம்மாவை மனைவி எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்கிற லெக்சரில் போய் முடிய, அவன் மனைவி, ”ஆஹா என்ன ஒரு அம்மா செண்டிமெண்ட்” என்று உருகியா விடுவாள்? போயும் போயும் ஒரு குக்கர் மேட்டர், இதில கூட சுயமா யோசிச்சு ஒரு முடிவு எடுக்க முடியலையே?” என்று மனதிற்குள் நினைத்தாளோ இல்லையோ, உடனே அவள் மனதில் அவனுக்கான மதிப்பெண், பங்கு சந்தை மாதிரி படாறென சரிந்தே போனது.
ஆக இந்த சுய புத்தி தான் அறிவின் முதல் அடையாளம்.

2. அறிவுள்ளவன் பிறர் கருத்துக்களை காது கொடுத்து கேட்டுக்கொள்வான். பிறர் சொல்வதில் எது உண்மை எது இட்டு கட்டிய கதை, என்று மிக துள்ளியமாக பகுத்தறிந்து விடுவான். இந்த டிஸ்கிரீஷன், discretion, எனப்படும் பகுத்தறிவு தான் அறிவின் அடுத்த முக்கியமான அறிகுறி. நீங்களே பார்த்திருப்பீர்களே, உலக விஷயம் தெரியாத வெகுளிகள் யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளில் மெய் பொருள் காணும் அறிவே அவர்களுக்கு இருப்பதில்லை. பல ஆண்கள் இப்படி இருப்பதுண்டு. அதுவும் குறிப்பாக, தன் தாய், தமக்கை என்கிற தாய்குலங்கள் எதை சொன்னாலும், அது தப்பா சரியா என்று கொஞ்சம் கூட யோசித்துப்பார்க்காமல் சாவி கொடுத்த பொம்மை மாதிரி அப்படியே பாயும் தன்மை பல ஆண்களுக்கு இருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

உதாரணத்திற்கு: அந்த கணவன் எந்த கடை அரிசி? என்று கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு குண்டு. அவன் மனைவியின் பிரதான குறிக்கோளே எப்படியாவது அவனை டயெட்டிங் இருக்க வைத்து, கனிசமான எடையை குறைத்து மற்ற நார்மல் மனிதர்களை போல அவனையும் ஆக்கிவிடவேண்டும் என்பது தான். அதற்காக எண்ணெய் பலகாரம் என்றாலே “ஓவர் மை டெட் பாடி” என்று மிக தீவீரமாய் அவனை பாதுகாத்துவந்தாள் மனைவி.

இதை பற்றி கேள்வி பட்ட அவன் வீட்டு தாய் குலம், “அவள் யாரடா உன்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடாதேனு சொல்ல? வாய்க்கு ருசியா ஒரு பூரி, பேப்பர் ரோஸ்ட், போண்டானு செய்து தரலைன்னா அப்புறம் உனக்கெதுக்கு ஒரு பொண்டாட்டி….நேத்து வந்தவ, அவளுக்கு என்ன தெரியும் உன் உடம்பை பற்றி? என் பையன் சரியா சாப்பிடாம இப்படி துரும்பா இளச்சி போயிட்டானே….” என்று உடனே மடமடவென லிட்டர் லிட்டராய் எண்ணெயை ஊற்றி, எதை எல்லாம் அவன் சாப்பிடவே கூடாது என்று மனைவி பாதுகாத்தாலோ, அதை எல்லாம் ஒரே நாளில் வரிந்துகட்டிக்கொண்டு செய்து போட, அறிவுள்ளவன் என்ன செய்வான்?

மனைவி உடலிளைத்து ஆரோகியமாக இருக்க தானே இந்த பாடு படுகிறாள், தாய்குலமே என்றாலும் அவர் செய்து தருவதை சாப்பிட்டால், பரலோகத்திற்கு போகும் பயனசீட்டு துரிதமாய் கிடைத்து விடுமே என்று லைட்டாகவாவது பகுத்தறிந்து யோசித்து இருப்பானே. ஆனால் பூரியும், போண்டாவும் கண்னை மறைக்க, “என் அம்மாவுக்கு என் மேல எவ்வளவு ஆசை, இந்த வயசிலும் கஷ்டப்பட்டு எனக்காக ஆசை ஆசையாய் இத்தனையும் செய்து தருகிறார்களே, நீயும் இருக்கியே ராட்ஷசி, எண்ணை பலகாரமே என் கண்ணில் காட்டாமல்!” என்று உடனே சோறு கண்ட இடமே சொர்கம் என்று சாய்ந்து விட்டான்.


யார் எதற்க்காக என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள், அவர்களின் உள்நோக்கம் என்ன? யார் சொல்வது நியாயம்? யார் சொல்லில் அதிக நன்மை என்று எல்லாம் லேயர் லேயராய் யோசிக்க நிறைய அறிவு வேண்டும், பல ஆண்களுக்கு இந்த street smartness எல்லாம் போதுமான அளவில் இருப்பதில்லை. ரொம்ப காலம் அடிபட்ட பிறகு ரொம்ப லேட்டாய் தான் உணருவார்கள், தாயும் பிள்ளையுமே ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்று. ஆனால் உலக அறிவு அதிகம் இருக்கும் ஆண்கள் சீக்கிரமே தெரிந்துக்கொள்கிறார்கள், that that man, that that life என்று, அதனால் எந்த கொம்பன் வந்து சொன்னாலும் உடனே குருட்டுத்தனமாய் நம்பாமல் தங்கள் பகுத்தறிவை பயன் படுத்தி, பாகுபடுத்தி பார்த்து, தனக்கு சரி என்று தோன்றுவதை மட்டும் செய்து ஜெயிக்கிறார்கள்


3. அறிவின் அடுத்த வெளி பாடு open mindedness, திறந்தமனப்பான்மை - அதாவது புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம், அப்படி தெரிந்துக்கொண்ட புது விஷயம் உபயோகமானதாய் இருந்தால் அதை உடனே ஸ்வீகரித்துக்கொள்ளும் இலகுத்தன்மை. சில பேருக்கு புது விஷயம் என்றாலே ரொம்ப அலர்ஜி, எது எது எப்படி எப்படி இருக்கிறதோ, அது அது அப்படி அப்படியே இருந்தாலே ஷேமம் என்று நினைப்பார்கள். புது மனிதர்கள், புதிய தகவல்கள், புது தொழில் நுட்பம், புதிய உணவு, புதிய கலாச்சார மாற்றம் என்றால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ”அந்த காலத்துல” என்று எப்போதுமே பழம் பெருமை பேசிக்கொண்டு, தங்களை நிகழ் காலத்திற்கு கொண்டுவராமல் அப்படியே தேங்கி நின்றுக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பிற்போக்கான மனிதர்கள் தானும் முன்னேற மாட்டார்கள், பிறரையும் முன்னேற விடமாட்டார்கள். ஆனால் காலம் இவர்களுக்காக காத்திருக்குமா என்ன? அது பாட்டிற்கு தன் வேகத்தில் போய் கொண்டே இருக்கும். காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை புதுபித்துக்கொண்டே வரும் மனிதர்கள் இந்த கால ஓட்டத்தில் முன்னேறி போய் கொண்டே இருப்பார்கள். பின் தங்கிப்போனவர்கள் இருந்த சுவடியே இல்லாமல் காணாமல் போவார்கள். இதை தான் எவல்யூஷன் என்பார்கள். இயற்க்கைக்கு தான் ஈவு, இரக்கம், கருணை, தயை இதுவுமே கிடையாதே. எல்லாமே survival of the fittest தானே. ஃபிட் என்றால் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே போக வேண்டும், இல்லாவிட்டால் முன்பு பூமியில் வாழ்ந்து மறைந்த டைனாசோர்கள் மாதிரி மாறாமல் நின்றவர்கள் மாய்ந்துவிடுவார்களே.

அதனால் தான் அறிவாளி ஆண்கள் எப்போதுமே தங்களை மீண்டும் மீண்டும் புதுபித்துக்கொண்டே இருப்பார்கள். Life long learning என்று வாழ்நாள் முழுக்க லேட்டஸ்ட் விஷயம் எல்லாவற்றிலுமே அத்துபடியாக இருப்பார்கள். அப்படி இல்லாமல், “என் பரம்பரையில் இப்படி தான். என் அம்மாவுக்கு இது தான் பிடிக்கும், என் மதநூல் இப்படி தான் சொல்லுது…” என்றூ குருட்டுத்தனமாய் பழைசையே கட்டுக்கொண்டு அழும் ஆண், பெண்களை முன்னேறவே விடமாட்டான். “ஆறு மணியாச்சுனா பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டக்கூடாது, பொம்பளைனா அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும்….எட்டு கஜ புடவை தான் நம் பாரம்பரியம்,” என்று க்ரேதாயுதக்கதைகளை சொல்லியே கழுத்தறுப்பான்.

4. உலகில் உள்ள மிக புத்திசாலிதனமான ஜீவராசிகள் எவை தெரியுமா? குரங்கு, யானை, நாய், டால்ஃபின், மனிதர்கள்….இந்த எல்லா ஜீவராசிக்கும் உள்ள ஒரு பொதுவான குணம் என்ன தெரியுமா? இவை தான் ரொம்ப அதிக விளையாட்டுத்தனமும், ஹாசிய உணர்வும் கொண்ட ஜீவராசிகள். இவற்றுக்கு தான் நகைசுவை உணர்வு அதிகம். ஆக அறிவுக்கும், விளையாட்டு தனமான நகைசுவை உணர்வுக்கும் நேரடி தொடர்பு உண்டு.
நீங்களே கவனித்திருப்பீர்களே, அறிவாளி ஆண்களுக்கு தான் எக்கசெக்க நகைசுவை உணர்வு இருக்கும். கொஞ்சம் அறிவு மக்கர் என்றாலும் அவர்களுக்கு ஹாசிய உணர்வும் குறைந்திருக்கும். அதுவும் போக, அறிவாளி ஆண்களுக்கு சின்ன சின்ன விஷயங்களிலும் ரசனை இருக்கும், சிறு சிறு சில்மிஷங்கள், ஸ்வாரசியமான குறும்புகள் என்று எப்போதுமே துடிப்போடு இருப்பார்கள். அவர்களை வம்புக்கு இழுத்தாலும் கூட அதையும் வேடிக்கையாய் கையாண்டு சுலபமாய் சமாளிப்பார்கள்.

5. அறிவாளி ஆணின் அடுத்த அடையாளம் அவனுக்கு பரந்த மனப்பாண்மை இருக்கும். நீங்களே பார்த்திருப்பீர்கள், வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், “எங்க ஜாதி தான் உலகத்திலேயே உசத்தி” என்று அடம் பிடிக்கும் டொட்டல் பட்டுகாட்டு மனப்பான்மை வாய்ந்த ஆண்களும் இருக்கிறார்கள், எங்கேயோ ஏதோ பூங்குன்றத்தில் பிறந்துவிட்டு, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று விசாலமாய் யோசிக்கும் லோக்கல் ஆசாமிகளும் இருக்கிறார்கள். அறிவுள்ளவன் தன் சிற்றூரின் விளிம்பை விட்டு வெளியே கூட எட்டிபார்த்திராதவனாய் இருந்தாலும், அவன் அறிவு பறந்து விரிந்தே இருக்கும். அதுவே அறிவு குறைவானவன், எத்தனை ஃபாரின் டிரிப் அடித்தாலும், கிணற்று தவளையாகவே இருந்து விடுவான்.

ஆக ஸ்நேகிதிகாள், கவனமாய் உங்கள் ஆணை பாருங்கள். படிப்பு என்பது இப்போதெல்லாம் பணம் கொடுத்து வாங்கி விடும் பித்தலாட்டம் ஆகிவருகிறது. ஆக வெறும் கல்வி தகுதியை மட்டும் வைத்து ஒருவனை அறிவாளியா இல்லையா என்று நிர்நயித்துவிட முடியாது.



சுய சிந்தனை, பகுத்தறிவு, திறந்த மனப்பான்மை, நகைசுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, மாதிரியான அறிவின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இந்த 5 குணங்களும் குறைந்த பட்சம் நாறப்து சதவிகிதமாவது இருந்தால் பையன் பாஸ். இல்லாவிட்டால் ஊகூம், ஃபெயில் தான். இவை அத்தனையும் அறுவது சதவிகிதத்திற்கு மேலேயே தென்பட்டால் வாவ் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்! இனி அவனிடம் அடுத்து என்ன அம்சங்களை அலசலாம் என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்க்கலாம்.