Friday, January 22, 2010

கொஞ்சம் டார்வின், கொஞ்சம் நீயூட்டன்


உலகிலேயே ரொம்ப உன்னதமான கருவி எது என்று கேட்டால், நீங்கள் எத்தனையோ வஸ்துக்களை உடனே சொல்லுவீர்கள்….கம்யூட்டர், கேமரா, ஐ ஃபோன், ராக்கெட், ஏவுகனை என்று எந்த நுட்பமான கருவியாக இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட நுனுக்கமான, ஸ்வாரசியமான, fully loaded அதிசயங்கள் பலவும் இருக்குற அதிஅசத்தலான கருவி, மனித மனம் தான். இது பேசும், யோசிக்கும், கற்பனை செய்யும், ஃபொடோ எடுக்கும், காபி அடிக்கும், கணக்கு போடும், எந்த அதிநவீன ராக்கெட்டை விடவும் மிக அதிகமான ஸ்பீடில் இடம், காலம், கட்டமைப்பு என்றூ எல்லாவற்றையும் தாண்டி ஓடும், ஒரே ஷணத்தில் வெவ்வேறு சேனல்களுக்கு மாறூம், தன்னை தானே புது புது விதங்களில் வெளிபடுத்தி, தினம் தினம் புது புது ஸ்வாரஸ்ய விளையாட்டுக்களில் ஈடுபடும், காதல், பாசம், பெருமை, ஆசை என்று பல உணர்ச்சிகளை உண்டுபண்ணூம், அதிகபட்ச சந்தோஷம், அதிக பட்ச துக்கம் என்று நேர் எதிரான நிலைகளை நிமிடங்களில் ஏற்படுத்தும்…..இப்படி இத்தனை அம்சங்கள் இருக்கும் உலகின் மிக பிரத்தியேகமான இந்த கருவியை நாம் எப்படி கொண்டாட வேண்டும்!

ஆனால் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? இந்த உன்னதமான கருவியை வெறூம் நினைவேற்றுதல் என்கிற ஒரே ஒரு வேலைக்காக மட்டும் பயன்படுத்தி, அதற்கு மதிப்பெண்கள் வேறு போட்டு, பாஸா ஃபெயிலா என்றெல்லாம் சொல்லி, எல்லைகளே இல்லாத இந்த கருவியை, சின்னஞ்சிறு கடுகு சைஸ் வட்டதினுள் அடைத்து, அற்ப விஷயத்திற்காக பயன்படுத்தி அதை கொச்சை படுத்துகிறோம்.

இது ஒரு கொடுமை போதாதென்று, மதம், மொழி, இனம், பிராந்தியம், மரபு என்றெல்லாம் வெவ்வேறு குட்டி குட்டி வட்டங்களை போட்டுக்கொண்டு, இந்த மனம் எனும் மிக வலிமையாக கருவியின் காலில் சங்களிகள் மாட்டிவிடுகிறோம்….கம்பீரமான சிங்கம், யானை, கரடியை எல்லாம், ஒரு கூண்டில் அடைத்து அதன் தன்மையை அடியோடு அழித்துவிடுவது மாதிரி, நம் மனம் எனும் இந்த அலாவுதின் விளக்கை, வெறுமனே, அலங்கார பொருளாக அலமாரியில் வைத்து விடுகிறோம்.

இப்படி தங்கள் மனம் சிறை பட்டிருப்பதே தெரியாமல், பெரிதாய் வாய் கிழிய பேசிக்கொள்ள வேறு செய்வார்கள்: ”தமிழ் பொண்ணூங்கனா இப்படி தான் இருக்கணும், எங்க ஊர் பழக்க வழக்கம் இது தான், இதை மாற்றவே முடியாது, எங்க குலவழக்கம் இது தான் இது தான் எங்க பாரம்பரியம், இதை மாற்றீனால் பெரிய தப்பாயீடும்” என்று ஏதாவது வெற்று செண்டிமெண்டை விடா பிடியாக பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்.

இன்னும் சிலர், “நம்ம நாட்டு கலாச்சாரம் இது தான், இப்படியே இருந்தா தான் நல்லது. நம்ம பாரம்பரியத்துல தான் நம்ம பெருமையே இருக்கு, இதை மாற்றவே கூடாது….” என்று ஏதாவது பெரிசு பிதற்றினாலும், “ எதற்கு வம்பு, நமக்கு உடன் பாடு இருக்கிறதோ இல்லையோ, பெரிசு சொல்லுகிறது, செய்து தொலைக்கலைன்னா, காதுல ரத்தம் வர வரைக்கும் ரம்பம் போட்டு பிராணனை வாங்கிடும், பிரச்சனை பண்ணாம பேசாம செய்துட்டு போயிடலாம்” என்று ஒப்பேற்றீக்கொண்டே இருப்பார்கள்

இதை விட தமாஷான இன்னொரு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள், “எல்லாரும் சொன்ன சரியா தானே இருக்கும், எனக்கெதுக்கு வம்பு, மெஜாரடி பக்கமே நானும் சாஞ்சிடுறேன்” என்று தன் சொந்த அறிவை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் மந்தை மிருகம் மாதிரி கூட்டத்தோடு கூட்டமாய் மேய்வதே மேல் என்றூ இருந்து விடுவார்கள்.

இதை விட கோமாளியாய் வேறு சில மனிதர்கள், “உயர் அந்தஸ்துல இருக்குறவங்க என்ன செய்தாலும் சரியா தான் இருக்கும், அதையே நாமும் காபி அடித்தால் தானே கவுரவமாக இருக்கும்”, என்று எந்த விதமான சுயசிந்தனையுமே இல்லாமல் யாரோ செய்யும் அர்த்தமற்ற காரியங்களை அப்படியே அடிபிரளாமல் தானும் பிரதியெடுத்து பின்பற்றுவர்.

இப்படி எத்தனையோ விதங்களில் அழகழகான சங்களிகளை மாட்டி, மனம் எனும் இந்த மாய விசையை அப்படியே மழுக்கடித்து, வெறும் ஒரு மெமரி ஸ்டிக்காய் மாற்றி விடுகிறார்கள்.

காலம் காலமாய் எல்லா ஊர்களிலுமே இப்படி ஒரு மனமுடக்கு முறை இயங்கி வந்துக்கொண்டே இருந்தாலும், ரொம்ப சில சாமர்த்தியசாலிகள் இந்த வலைகளுக்குள் எல்லாம் விழாமல் தப்பித்து விடுகிறார்கள். தங்கள் மனதின் முழு ஆற்றலையும் பிரம்மாண்டத்தினையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்…..இனம், மதம், மொழி, பின்புலம், பாலினம், பாடதிட்டம், என்றூ எல்லா விலங்குகளுக்கும் டிமிக்கி கொடுத்து, தன் சுயத்தை தேடி பிடித்து பிரகாசிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சார்லஸ் டார்வின்….இவர் இங்கிலாந்தின் ஒரு பிரபல குடும்பத்தை சேர்ந்த டாக்டரின் மகன். மகனும் தன்னை போலவே ஒரு டாக்டர் ஆனால் தான் தனக்கு பெருமை, பையனுக்கு பிழைக்க நல்ல வழி என்று நினைத்து அவர் அப்பா,, சார்லஸை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். சார்லஸ் அந்த கல்லூரிக்கு போய் மருத்துவத்தை தவிற மற்ற எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்…. வண்டுகளில் எத்தனை வகை, அதில் ஆண் எது பெண் எது, அவை எப்படி இனபெருக்கம் செய்கின்றன, மிருகங்களின் தோலை பதப்படுத்துவது எப்படி, பூமியின் மேல் பாரைகள் எப்படி தோன்றின…இதை எல்லாம் தெரிந்துக்கொண்டதற்க்காக, மருத்துவ கல்லூரியில் அவருக்கு என்ன கூடுதல் மதிப்பெண்ணா கொடுத்திருப்பார்கள்!

தலைவர் பாடத்தில் கோட்டடித்தார். அதனால் நொந்துபோன சார்லஸின் அப்பா, குறைந்த பட்சம் மதகல்வியில் ஒரு பட்டமாவது வாங்கினால், ஏதாவது ஒரு சர்ச்சில் பாதரியார் ஆக்கிவிடலாம், ஆயுசுக்கும் வருமானம் கிடைத்துவிடும், என்று திட்டமிட்டு, சார்லஸை கேம்பிரிட்ஜில் சேர்த்தார். அங்கேயும் சார்லஸ் வண்டு பிடிக்கிறேன், வாத்து வளர்க்கிறேன், பாறைகளை ஆராய்ச்சி செய்கிறேன், தீவுகளுக்கு சுற்றிபயனம் போய் பவள பாரைகளை பார்த்துவிட்டு வருகிறேன், என்று எப்போதுமே ஓ பி அடித்துக்கொண்டே இருந்தார். நல்ல வேளையாக அவர் பேராசிரியருக்கு சாரல்ஸ் மேல் ஒரு பிரியம் என்பதால் கடைசி நேர தனிடியூஷனெல்லாம் வைத்து எப்படியே ஓப்பேற்றி, பையனை பாஸாக்கி விட்டார்.

இப்படி பாஸான பிறகும் டார்வின், குட் பாயாய் போய் ஏதோ ஒரு மாதா கோயிலில் பங்குதந்தையாய் சேர்ந்துக்கொள்ளவில்லை, அதற்கு நேர்மாறாய் சம்பளமே இல்லாமல் சும்மா ஒரு கப்பலில் போய் உலகை சுற்றி பார்க்க பயணம் மேற்கொள்ள விரும்பினார். சும்மா இருப்பாரா, சார்லஸின் அப்பா? கூடாது என்று கராராய் கண்டிஷன் போட்டார். ஆனால் சார்லஸ் விடவில்லை. நைஸாக தன் தாய் மாமாவிடம் சொல்லி, அப்பாவை கன்வின்ஸ் பண்ண வைத்து, சம்பளமில்லாத கப்பல் வேலைக்கு போயே போய்விட்டார். அந்த கப்பலில் உலகம் முழுக்க சுற்றி வந்தபோது தான், பைபிளில் சொன்னது போல உலகத்தையும், அதில் வாழும் உயிர்களையும் கடவுள் என்கிற ஓர் ஆசாமி ஒரு வாரத்தில் படைத்ததாக சொல்வதெல்லாம் சுத்த கட்டுகதை என்று கண்டுபிடித்தார். பரிணாம வளர்ச்சி ஏவல்யூஷன், எனும் மிக முக்கியமான ஓர் அறிவியல் புரிதலை எப்போது தான் கண்டு கொண்டார்.

டார்வினுக்கு முன்னாலும் எத்தனையோ பேர் உலகத்தை சுற்றி இருக்கிறார்களே. ரொம்ப தூரம் போவானேன், நம்மூர்காரர்களே, கடாரம் கொள்ளவும், கம்போஜம் கொள்ளவும், வணீகம் செய்யவும் திரைகடலோடி, எத்தனையோ வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்களே….இவர்கள் எவர் கண்ணிலும் படாத இந்த பரிணாம வளர்ச்சி என்கிற சங்கதி எப்படி சார்லஸ் டார்வின் கண்ணில் மட்டும் பட்டது?

அதே மாதிரி தான் நியூட்டன்…அப்பிள்கள் முதன்முதலில் சாகுபடி ஆன காலத்தில் இருந்தே எத்தனை கோடி ஆப்பிள்கள் எத்தனை கோடி மனிதர்களின் எதிரில் விழுந்திருக்கும்?….அந்த அத்தனை கோடி மனிதர்களுக்கும் தோன்றாத புவீஈர்ப்பு சக்தியின் புரிதல் நியூட்டனுக்கு மட்டும் எப்படி சாதியமானது?

சிம்பிள்! டார்வினும் நியூட்டனும், சொல் பேச்சை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கும் சோம்பேறிகள் இல்லை. யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே கேட்டுக்கொண்டு இராமல், “ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எதனால்? யாரால்? எப்போது? இப்படியே தான் இருக்க வேண்டுமா? வேறு எப்படி எல்லாம் இருக்கலாம்?” என்று தங்களுக்கு விதிக்கப்பட்ட விலங்குகளை தாண்டி, தங்கள் மனதை முழுதாக விரித்து எந்த வித திரைகளுமே இல்லாமல், நிர்வாணமான பார்வையால் உலகை பார்த்ததினால் தான் அவர்களால் திடுக்கிடும் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முடிந்தது.

இப்படி, “சுயமாக யோசிப்பேன், சரி என்று பட்டால் தான் செய்வேன்”, என்று அழிசாட்டின்யம் செய்யும் இந்த மனிதர்களை பல பேருக்கு பிடிக்காது. ஆனால் விசித்திரம் என்ன தெரியுமா, இந்த மாதிரி ”லாஜிக் இல்லைனா ஒத்துக்க மாட்டேன்”, என்று பிடிவாதம் பிடிக்கும் இம்மனிதர்களால் தான் மனித சமுதாயமே உயர்ந்திருக்கிறது.

புத்தர், மஹாவீரர், ஏசு,முகமது மாதிரியான மெய்ஞானிகள் ஆகட்டும், நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன், டாக்கின்ஸ், ஹாக்கிங் மாதிரியான விஞ்ஞானிகள் ஆகட்டும், லூதர், ராமானுஜர், லிங்கன், பாரதியார், நேரு, பெரியார் மாதிரியான சமூகஞானிகள் ஆகட்டும், எந்த துறை ஞானியாக இருந்தாலும், அவர்களில் பிறவி குணம் ஒன்று தான்: ஏற்கனவே யாரோ எவரோ, சொன்னதையோ, செய்ததையோ, அப்படியே நம்பி, பழைய கட்டமைப்புகளுக்குள் மட்டும் இருந்து யோசிக்காமல், எல்லா வரம்புகளையும் தகர்த்தெரிந்து விட்டு, எந்த வித எல்லைகளுமே இல்லாத தாரள போக்குடன், திரைகளே இல்லாத நிர்வாண பார்வையால் இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்து புது புது விதங்களில் யோசித்து, யாருக்கும் புலப்படாத பல அரிய கண்டுபிடுப்புகளை அநாயாசமாய் சொல்லிவிடுகிறார்கள்.

அதே நிர்வாண பார்வை கொஞ்சம் நமக்கும் இருந்தால் நம்முடைய சிந்தனை எப்படி மாறும்? கொஞ்ச நேரத்திற்கு நாம் யார், என்ன, எந்த ஊர், எந்த மதம், எந்த மொழி, எந்த ஜாதி, என்ன பாலினம், அவ்வளவு ஏன் மனிதர்கள், பூலோகத்தை சேர்ந்தவர்கள் என்கிற எல்லா பிரக்ஞைகளையுமே மறந்து, வேடிக்கையாய் ஒரு விளையாட்டில் ஈடுபடலாமா? வேற்றுலகில் இருந்து பூமிக்கு வந்த ஒரு புது ஜீவராசியாய் உங்களை எண்ணிக்கொள்ளுங்கள்… அதுவும் சாதாரண சோப்லாங்கி ஜீவராசி இல்லை, நியூட்டன் மாதிரி, டாவின் மாதிரி, நுனுக்கமாய் யோசிக்கிற பேரறிவாளியான வேற்றுலக அமானுஷ்யர் நீங்கள் என்று வைத்துக்கொள்வோமே….இப்போது, திரும்பி, இந்த பூலோகத்தையும், அதில் மனிதன் என்று பேர் சொல்லிக்கொண்டு திரியும் இந்த ஜந்துவையும் பாருங்கள். சாதாரண பார்வையில் அல்ல, எந்தவித முன்பதிவுகளுமே இல்லாத அந்த ஸ்பெஷல் நிர்வாணப்பார்வையால் பாருங்கள்….திடுக்கிடும், பல ஸ்வாரசியமான சமாசாரங்கள் உங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும்….

யார் இந்த பெரியார்.....(12)

ராமு திடுதிப்பென ஈரோட்டை விட்டு காணமல் போனதும், பையன் எங்கே என்று கவலை பட ஆரம்பித்தார் அவர் அப்பா வெங்கட நாயகர். ஆரம்பத்தில் அவர் பையன் காணாமற்போனதை ரொம்ப ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை…..வேற எங்கே போவான்,? ஒரு வாலிபன், அதுவும் பணக்கார வீட்டு பையன், எங்கெல்லாம் போயிருக்க கூடும்? யாராவது மைனர் ஸ்நேகிதன் வீட்டில் தங்கியிருப்பான், அல்லது ஏதாவது தாசி வீட்டில் கிடப்பான் என்று அசட்டையாகவே இருந்தவர், இந்த இடங்களில் எல்லாம் தேடியும் பையன் கிடைக்கவில்லை என்றதும் தான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார்.


அதுவரை ராமு தன்னுடனேயே இருந்திருந்த போது, வெங்கடருக்கு பையனின் அருமை தெரிந்திருக்கவில்லை, ஆனால் தன் வலது கை மாதிரி எப்போதும் தன்னுடனேயே இருந்து தன் எல்லா வேலைகளில் பக்க பலமாய் இருந்த மகன் தன்னுடன் இல்லையே என்ற இழப்பை அவர் ஒவ்வொரு நாளும் வேதனையுடன் உணர்ந்தார். அதுவும் போதாதென்று ராமு தான் ஊருக்கே செல்லப்பிள்ளை ஆயிற்றே, எல்லோரும், “ராமு எங்கே?” என்று கவலை படும் போதெல்லாம் வெங்கடருக்கு பக் என்று அடித்துக்கொள்ளும்.

என்ன தான் அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தாலும், மூத்தமகன் கிருஷ்ணசாமி, கோயில், பக்தி, பாட்டு, பாகவதம், சித்தமருத்துவம் என்று குடும்ப தொழில் சாரா வேறூ துறைகளில் ஈடுபட்டிருந்ததினால், அவர் அம்மாவுக்கு தான் செல்லம். எவ்வளவு தான் குறும்புக்காரன், வாயாடியாக இருந்தாலும், வெங்கடருக்கு தன் இளைய மகன் மேல் தான் அதிக பாசம். எப்போதும் கூடவே இருக்கும் தன் துடுக்கான மகனை இழந்த தவிப்பில் அவர் தினம் தினம் மகனை தேடும் படலத்திலேயே இருந்தார்.

பையனை தேடி கண்டு பிடிக்க ஊர் ஊராய் ஆள் அனுப்பினார். ராமுவின் நண்பர்களின் வீடுகள், டிராமா கன்பேனிகள், என்று சந்தேகத்திற்கு இடமான எல்லா இடங்களில் தேடியும் மகன் கிடைக்கவில்லை. அந்த காலத்திலேயே கிட்ட தட்ட இரண்டாயிரம் ரூபாய் வரை செலவழித்து தந்தி, தபால், நேரே போய் தேடிவர ஆள் என்று அவர் எவ்வளவோ செலவழித்தும் பையன் மட்டும் கிடைத்த பாடே இல்லை.

”சரி தான், ஒரு பிள்ளையை இழந்தோம்”, என்ற முடிவுக்கே வந்து புத்திர சோகத்தில் வெங்கடர் வாடிபோனார். ஈரோட்டில் அப்பா இந்த பாடு பட்டுக்கொண்டிருக்க, ராமு காசியை விட்டு கிளம்ப முடிவு செய்தாலும், மீண்டும் ஈரோட்டிற்கு போவதாய் இல்லை. நேரே எல்லூர் போய் சேர்ந்தார்.

எல்லூரில் டி, என் சுப்ரமணிய பிள்ளை என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் மராமத்து இலாகாவில் மேற்பார்வையாளராய் பணிபுரிந்தார். முன்பு ஈரோட்டில் வேலையில் இருந்த காலத்தில் இருந்தே ராமுவோடு நல்ல பழக்கம். ரயில் நிலையத்தில் இறங்கியதுமே சுப்ரமணிய பிள்ளையின் வீடை விசாரித்து கண்டு பிடித்து போய் சேர்ந்தார் ராமு. அவர் போய் கதவை தட்டுவதற்குள் நள்ளிரவாகி விட்டிருந்தது. கதவு திறந்தது. பிள்ளை வெளிய வந்தார், துறவியாய் தன் எதிரே நின்ற ஆசாமி யாரென்று அவருக்கு தெரியவில்லை. ராமு தன்னை அறிமுக படுத்திய போது, அவர் குரலை கேட்டு தான், “ஈ வெ ராவா?” என்று சந்தேகம் வர, வெளிசத்தில் அவரை உற்று பார்த்து ஊர்ஜிதபடுத்தியதும், “வாங்க வாங்க” என்று உடனே வரவேற்றார் பிள்ளை.

உள்ளே வந்த சாமியாரை விசித்திரமாய் பார்த்த தன் மனைவிக்கு ராமுவை அறிமுக படுத்தினார். பணக்கார வீட்டு மைனராய், பட்டும், பொன்னுமாய் மின்னியே பார்த்திருந்த ராமுவை இப்படி முற்றும் துறந்த முனி கோலத்தில் பார்த்து பிள்ளையும் அவர் மனைவியும் சிரித்துவிட, பிள்ளை உடனே தன் சட்டை, துண்டை எடுத்து ராமுவுக்கு கொடுத்து உடுத்த சொன்னார்.

சுப்ரமணிய பிள்ளையின் வீட்டிலேயே ராமு தங்கிக்கொண்டார். பிள்ளையிடம் மட்டும் தன் காசியாத்திரை-துறவர கதை சொல்லிவைத்து, வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் ராமு. பிள்ளையும் இந்த ரகசியத்தை காப்பாற்ற வாக்களிக்க, ராமு ஒரு மாதம் முழுக்க அங்கேயே ஒரு வேடிக்கை ஸ்நேகிதராய் வசித்து வந்தார்.

இப்படி எல்லூரில், யாரோ ஒரு வாலிபன் என்கிற அடையாளமற்ற நிலையில் ராமு சுப்ரமணிய பிள்ளையுடன் சுற்றிக்கொண்டிந்த போது, கடை வீதி பக்கம் போனார்கள். அங்கே ஒரு கடைகாரர், எள் அளந்துக்கொண்டிந்தார். அதை பார்த்ததும் ராமுவுக்கு தன் மண்டி கடையின் நினைவுகள் மலர்ந்தேவிட, பல வருட பழக்கமான வியாபாரித்தனம் தலை தூக்க, தன்னை அறியாமல் எள்ளை கையில் அள்ளி, ”என்ன விலை?” என்றார் தன் வழக்கமான அதிகார தோரனையில். அந்த கடைக்கு சொந்த காரர் மோதே வெங்கன்னா கனிகர ஸ்ரீராமுலு என்பவர் இவரை நிமிர்ந்து பார்ப்பதற்குள், ராமு ஸ்வாரசியம் இழந்து எள்ளை அப்படியே விட்டுவிட்டு நடையை கட்ட, ஸ்ரீராமுலு, “எவரு இவரு?” என்று பின்னால் வந்த சேவகனை விசாரித்தார்.

அன்றே ஸ்ரீராமுலு ஒரு கடித உரையை எடுத்து, ஸ்ரீமான் வெங்கட நாயகர், மண்டித்தெரு, ஈரோடு, என்கிற முகவரிக்கு எழுதினார்: தங்கள் மகன் என் கடைக்கு வந்தார்; சரக்கை பார்த்தார். ஆனால் என் கடையில் கொள்முதல் செய்யாமல் வேறு கடையில் செய்திருப்பதாய் தெரிகிறது. நான் தங்களுக்கு என்ன குற்றம் செய்தேன்? இதுவரையில் எப்போதாவது நாணயம் குறைவாய் நடந்திருக்கிறேனா? தயவு செய்து உங்கள் மகனுக்கு எழுதி, எனக்கு சிபாரிசு செய்யுங்கள்”

தபால் கிடைத்ததும், வெங்கட நாயகரால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ” என் ராமு, எல்லூரிலா? ஏழு குண்டலவாடா, வெங்கட்ரமணா, என் பையன் கிடச்சிட்டான்!” என்று ஒரே குஷியாகிவிட்டார். இத்தனை வாரங்களாய் தேடியும் கிடைக்காமல் இருந்த ராமுவை பற்றிய தகவல் கிடைத்து தெரிந்ததும், வெங்கடரின் வீட்டாரும், சுற்றுவட்டாரத்தினரும் சந்தோஷப்பட, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “உடனே புறப்படறேன், ராமுவை போய் பார்த்து கையோட கூட்டீட்டு வர்றேன்” என்று அன்றே பையனை தேட கிளம்பிவிட்டார் வெங்கடர்.

அவர் நினைத்திருந்தால் வேறு யாராவது ஆளை அணுப்பி, ”இந்த சேதி உண்மையா என்று கண்டு பிடித்துவிட்டு வா, இது நம்ம ராமு தானானு ஊர்ஜிதபடுத்தீட்டு வா”, என்று வேறூ விதமாக செயல் பட்டிருக்க முடியும். ஆனால் தன் ஆசை மகனை காண வேண்டும் என்கிற அவர் தந்தை பாசம், மாற்று சிந்தனைக்கே வழி இல்லாமல் தடுக்க, நேரே எல்லூர் போய் சேர்ந்து கடிதம் எழுதிய ஸ்ரீராமுலுவை போய் பார்த்து, சுப்ரமணிய பிள்ளையின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு நேரே அவர் வீடு போய் சேர்ந்தார் வெங்கடர்.

அவர் சுப்ரமணியபிள்ளையின் வீட்டை அடைவதற்குள் இருட்டி விட்டிருந்தது. பையனை பார்க்கும் ஆவலில் நெரம் காலம் பார்க்காமல் வெங்கடர் கதவை தட்ட, பிள்ளை வந்து கதவை திறந்தவர், விருந்தாளியை பார்த்து ஆட்சரியப்பட்டு, உள்ளே அழைத்து வந்து உடகார வைத்தார். அப்பா வருவதை பார்த்து ராமு அவர் அருகில் வர, வெங்கடர் படு ஆவேசமாய், “ராமு எங்கே? முதல்ல என் பையன் எங்கிருக்கானு சொல்லுங்க, மத்தவிஷயத்தை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.”

அப்பாவின் தவிப்பை பார்த்து விட்டு, ராமு இன்னும் அவரை நெருங்கி, “நான் தான் நைனா” என்று அறிமுக படுத்திக்கொண்ட போது தான் வெங்கடர் தன் மகனையே கவனித்தார். “ராமா, என்னடா இப்படி ஆயிட்ட? அப்பா, உன்னை பெத்ததனால, பார்க்காத ஊரெல்லாம் பார்த்துட்டேன் நானு”, என்று கண் கலந்தினார்.

மகனை பார்த்த சந்தோஷமே அவர் மனதை நிறைத்துவிட, இரண்டு நாட்கள் வேறூ எதை பற்றீயுமே பேசாமல் அங்கேயே தங்கி மகனின் அருகாமையை அனுபவித்து மகிழ்ந்தவர், மூன்றாம் நாள், “ஊருக்கு போலாமா?” என்று பையனை கேட்டார். அதுவரை ஈரோட்டிற்கு போவது பற்றியே யோசிக்காமல் இருந்த ராமு, அப்பா கேட்டதுமே, “சரி” என்று தலையாட்டிவிட்டார்.

ஹைதரபாதில் தன் நண்பருக்கு திந்தி கொடுத்தார்….சொப்பு பெட்டி, எல்லா நகைகளுடனும் பத்திரமாக வந்து சேர்ந்தது. அதை தன் தந்தையிடம் சமர்பித்தார் ராமு. என்ன ஏது என்று தெரியாமல் பெட்டியை திறந்து பார்த்த வெங்கடர், உள்ளே ராமுவின் எல்லா நகைகளும் அப்படியே இருப்பதை கண்டு அதிர்ச்சி உற்றார். “அட ராமசாமி, இவ்வளவு நாளா எப்படியடா சாப்பிட்டே?” காரணம் அது நாள் வரை பையன் நகைகளை விற்று தான் சாப்பிட்டிருப்பானாக்கும் என்று அவரே முடிவெடுத்திருந்தார். “சாப்பாட்டு என்னடா பண்ணே?”

“இத்தனை நாளா ஈரோட்டுல எத்தனை பேருக்கு நீங்க சதாவிருத்தி அன்னதானம் செய்தீங்க, அதை எல்லாம் மொத்தமா வசூல் பண்ணீட்டேன்” என்று ராமு வேடிக்கையாய் சொல்ல, வெங்கடருக்கு ஒரு பக்கம் சிரிப்பு, தன் மகனின் பிழைக்கும் திறனை கண்ட பெருமை, இன்னொரு பக்கம், தன் ஆசை மகன் இப்படி எல்லாம் திண்டாடும் படி ஆகிவிட்டதே என்ற வருத்தம்.

“சரி, நகைகளை போட்டுக்கோ” என்றார். ராமுவிற்கு நகைகளின் மேல் நாட்டமில்லை, அதனால் அவற்றை அணிய மறுத்தார். “நீ இத்தனை நாளூம் இந்த நகைகளை விற்று தான் வயித்தை கழுவுனேனு ஊர்ல எல்லாரும் அநாவசியமா பேசுவாங்கடா, இப்ப போட்டுக்க, ஊருக்கு போய் சேர்ந்ததும் வேண்ணா கழட்டிக்கலாம்” என்று அப்பா அறிவுருத்த “சரி” என்று ரயில் சீட்டிற்க்காக விற்கபட்ட அந்த ஒன்றரை சவரன் மோதிரத்தை தவிர மற்ற எல்லா நகைகளையும் மாட்டிக்கொண்டார் ராமு.

எல்லூரை விட்டு கிளம்பி, சென்னை வழியாக ஈரோடு போய் சேர்ந்தார்கள் அப்பாவும் மகனும். பரிவிற்கு பிறகு மீண்டும் சேர்ந்ததினால், மகனின் மீது தனக்கிருந்த அதிக பட்ச பாசத்தை புரிந்துக்கொண்டார் வெங்கடர். ”அதிகமான பொறுப்புக்களை கொடுத்து வைத்தால் தான் பையன் சன்யாசம் கின்யாசம்னு எங்கேயும் போயிடாமல் என்னுடனேயே இருப்பான்” என்று வெங்கடர் தான் ரிடையர் ஆகிவிட முடிவு செய்தார். தன் மண்டியின் பெயர் பலகையை மாற்றி “ஈ வெ ராமசாமி நாய்க்கர் மண்டி” என்று பெயரிட்டார்.

வெங்கடரின் திட்டம் வேலையும் செய்தது. துறவு ஆசையை பற்றி யோசிக்கக்கூட நேரம் இல்லாத அளவிற்கு மண்டி வேலையிலேயே மும்முரமாய் ஈடுபட்டார் ராமு. துறவர எண்ணத்தில் முழுமையாய் ஈடுபட அவருக்கு நேரம் இருக்கவில்லையே தவிற ராமுவின் மனதில் அந்த துறவர மனநிலை அழியாமல் அப்படியே வேறூண்டி விட்டிருந்தது. அதை அவரே கூட அப்போது உணர்ந்திருக்கவில்லை.

Friday, January 8, 2010

சித்திரவதை: ஓர் உளவியல் பார்வை.

போரில் தோற்றுபோன எதிரி நாட்டு வீரனை சிங்கத்தின் எதிரில் தள்ளி, அவன் அதனோடு போராடி, அடிபட்டு, மிதிபட்டு, கடிபட்டு, காயம் பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி செத்து மடிவதை ஏதோ ஒரு விதமான கேளிக்கையாக பார்த்து மகிழ்ந்த ரோமானியர்கள். கொல்லை, கொலை, கற்பழிப்பு, ராஜ துரோகம் மாதிரியான தவறுகளை செய்த ஆண்களை நடுதெருவில் நிறுத்தி மாறுகால், மாறுகை வாங்கும் அரேபியர்கள். வேதம் ஓதுவதை தற்செயலாக கேட்டு விட்டாலும், பெண்கள், அடிமைகள், சூத்திரர்கள் மாதிரியான ~கீழ்நிலைகாரர்களின்~ காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும் என்று போதித்த ஆரியர்கள்.

அரசுக்கு எதிராக பேசினால் அவனை பைத்தியம் என்று பட்டம் கட்டி, சிறையில் அடைத்து, தனிமையில் அவனை போட்டு வாட்டி வதைக்கும் அந்த கால ருஷ்யர்கள், அவ்வளவு ஏன் - அரசுக்கு எதிராக பேசினாலோ எழுதினாலோ, ~செடிஷன்~ என்று பழி போட்டு, அந்தமான் சிறை, ஆஸ்திரேலியா சிறை என்று நாடுகடத்தி, கஷ்டபடுத்திய ஆங்கிலேயர்கள், அவர்கள் போன பிறகும், ~ரொம்ப பேசின, உன்னை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி எடுத்து, தோச்சி தொங்கவிட்டுடுவேன்~ என்று தயங்காமல் மிரட்டும் அநேக தேசங்களின் காவல் துறைகள் என்று எல்லா காலத்திலும் மனிதர்களுள் இப்படிபட்ட கோரமான இந்த வன்முறை குணம் வெளிபட்டுக்கொண்டே தான் இருக்கிறது. அதன் உச்சகட்ட வெளிபாடான சித்திரவதையும் நடந்துக்கொண்டே தான் வந்திருக்கிறது.

மனிதர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? மற்ற மிருகங்களும் இப்படி எல்லாம் நடந்துக்கொள்வதுண்டா என்று சற்றே திரும்பி நம் சக ஜீவராசிகளின் நடத்தையை கொஞ்சம் நோட்டம் விட்டால், ஆட்சர்யம் ஆனால் உண்மை….வேறு எந்த ஜீவராசியும் தன் இனத்தை சேர்ந்த பிறரை இப்படி எல்லாம் இம்சிப்பதே இல்லை. என்ன தான் ஆக்ரோஷம், போட்டி, பஞ்சம் என்று வந்தாலும், எந்த ஆண் சிங்கமும் பிற ஆண் சிங்கங்களை சித்திரவதை செய்வதில்லை. சிங்கம் மட்டுமல்ல, நடப்பன, நீந்துவன, பறப்பன, ஊர்வன, என்று சகல விதமான ஜீவராசிகள் அனைத்திலுமே இப்படிப்பட்ட சித்திரவதை குணம் இருப்பதே இல்லை. ஆஃப்டரால் மிருகம் என்று நாம் அசட்டை செய்யும் இத்தனை கோடி ஜீவராசிகளில் எவையுமே இப்படி சித்திரவதை செய்யவில்லை, ஏன் தெரியுமா? காரணம் இந்த விலங்குகளுக்குள் ஒரு எழுதப்படாத சட்டம் இது: உன் இனத்தை சேர்ந்தவரை நீ துன்புறுத்தவே கூடாது. ஏதாவது போட்டி என்றால், பலபரிட்சை செய்து யார் பெரியவன் என்று மோதிப்பார்க்கலாம், அப்போதும், எதிராளி, ~சரி, போதும், இனி முடியாது. நான் தோற்றுவிட்டேன், ஒத்துக்குறேன், ஆளை விடு~ என்ற சமிக்ஞை செய்தால் உடனே `பிழைத்து போ~ என்று பெருந்தன்மையாய் விட்டு போய்விட வேண்டும். அதற்கு மேலும் கொக்கறித்துக்கொண்டிருக்கவோ, ஓவராய் இம்சிக்கவோ கூடாது..- இது தான் உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் பொதுவான விதி. இந்த விதியை மீறினால் மிருகங்களின் ஜனத்தொகை அபாயகரமான அளவிற்கு குறைந்துபோக நேரிடும் என்பதினால் இயற்கை இந்த விதியை மிகவும் ஆழமாய் இந்த மிருகங்களின் மூளையில் பதித்திருக்கிறது. அதனால் இந்த மிருகங்கள் இந்த விதியை மீறுவதே இல்லை, என்ன தான் சண்டை என்றாலும், எதிராளி, “சரண்டர்” என்ற சமிக்ஞையை தெரிவித்ததுமே சமாதானமாகி, சாந்தமாக பிரிந்துப்போய்விடுகின்றன.

ஆனால் எந்த விதியாக இருந்தாலும், அதற்கு மசியாத சில தருதலை கேசுகளும் இருக்கத்தானே செய்யும். அப்படி இந்த விதியையும் மதிக்காத இரண்டு மிருகங்கள் உண்டு. ஒன்று மானுடமாகிய நாம், மற்றொன்று நம்முடைய மிக நெருங்கிய உறவான சிம்பான்சி குரங்குகள். இந்த இரண்டு ஜீவராசிகளில் மட்டும் தான் தன் இனத்தை சேர்ந்தவர்களையே சித்திரவதை செய்து பார்க்கும், இந்த விசித்திரமான பழக்கம் இருக்கிறது.

அது ஏன் இப்படி, இந்த இரண்டு வானரங்கள் மட்டும் இப்படி இயற்கையின் விதிக்கு மாற்றாக செயல் படுகின்றன என்று நுனுக்கமாக பார்த்தால், பல விஷயங்கள் தெளிவாகின்றன. இந்த இரண்டு ஜீவராசிகளுக்கு மட்டும் தான் இதற்கு அடிப்படையான சில தன்மைகள் இருந்தன. அவை (1) தலைவன், தொண்டன் என்ற ஆளுமை நிலைகள் (2) தலைவன் அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் அவன் ஆணைபடி நடக்கும் தொண்டர் குணம் (3) தலைவன் என்ன சொன்னாலும், செய்தாலும், ஏன் எதற்கு என்று சுய அறிவை பயன்படுத்தி எதிர் கேள்வி கேட்காமல், அப்படியே அடிபிரளாமல் காபி அடிக்கும் தொண்டரின் தன்மை (4) தன் இனத்தை சேர்ந்தவர்களையே ‘நம்ம ஆள்” (ingroup), “வெளி ஆள்” (out group) என்று பிரித்து பார்க்கும் போக்கு.

இதற்கும் சித்திரவதைக்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்தீர்களானால், மௌரிய பேரரசன் அசோக சக்ரவர்த்தியின் கதையை ஒரு தரம் நினைவு கூர்ந்து பாருங்கள்……அவன் கலிங்கத்திற்கே போகாமல் வெறுமனே தன் தளபதியை அணுப்பி, “வெற்றியுடன் வா” என்று சொல்லி வைத்தான். தலைவனின் ஆணைபடி செயல் பட்ட அந்த படை தளபதி, தன் சொந்த அறிவையோ, தயவு, தாட்சன்யமோ இல்லாமல் கலிங்கர்கள் அனைவரையும் சகட்டு மேனிக்கு போட்டு தாக்கியதில், மௌரிய படைகள் எளிதில் வெற்றி பெற்றார்கள். அதற்கு அப்புறம் தான் அசோகன் அந்த ஏரியா பக்கமே வந்தான். வந்தவன் போர்களத்தில் குத்துயிரும் கொலை உயிருமாய் அங்கஹீனமாய் விழுந்து கடந்த கலிங்க வாலிபர்களை கண்டதும், “சே, இதற்கு தானா ஆசைபட்டாய் அசோகா நீ?” என்று உடனே சோகமாகி, அடுத்த நாளே பௌதம் தழுவி, சாம்டாட் அசோகாவிலிருந்து, சமத்துவ அசோகனாய் மாறினானே, ஏன்?

ஏன் என்றால் (1) மனிதர்களும் வானர இனம் என்பதால் அவர்களுக்குள்ளும் தலைவன், தொண்டன் என்ற ஏற்றத்தாழ்வான ஆளுமை நிலைகள் social hierarchy உண்டு. இந்த ஆளுமை நிலைகளுக்கு உட்பட்டு தான் மனிதர்கள் எப்போதுமே செயல் படுகிறார்கள்.

(2) தலைவன் அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் அவன் ஆணைபடி நடக்கும் தொண்டர் குணம் மனிதர்களுக்கும் உண்டு என்பதால் தலைவனின் ஆணைபடி காரியம் செய்யும் போது தன் சொந்த அபிப்ராயத்தையும் நியாய தர்மங்களையும் அச்சமையத்திற்கு மறந்தே போய்விடும் கைபாவை தன்மை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தன் எதிரில் “போதும் என்னை விட்டுடு, நான் சோத்து போயீட்டேன், ஒத்துக்குறேன், ஆளை விடு” என்று மிருங்களுக்கே புரியும் சிக்னலை கொடுத்தாலும், இந்த மனிதர்கள் அதை கண்டு கொள்வதில்லை. காரணம், சுயமாய் யோசிக்கும் தன்மையை தான் அவர்கள் இழந்து விட்டார்களே. அதனால், “சரண்டர் சிக்னலை பார்த்தால் சண்டையை நிறுத்திவிடு” என்கிற விதியையும் இவர்கள் மீறிவிடுகிறார்கள். அவர்கள் அந்த விதியை மீறுவதை தலைவன் ஒருவன் மட்டும் தான் சுட்டிக்காட்டி, “ஸ்டாப்” சிக்னலை கொடுக்க முடியும். அந்த தலைவன் அந்த ஏரியாவிலேயே இல்லை என்றால், அவனால் இந்த சண்டையில் குறிக்கிட முடியாமல் போய்விடும்.

(3) ஒரு வேலை தலைவன் அந்த இடத்திலேயே இருந்து தொலைத்தாலும், அவனை சரியாக எடை போட்டு அவன் தேறுவானா மாட்டானா, அவன் சொல்படி நடக்கலாமா கூடாதா என்று யோசிக்கும் தன்மையை மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். அதனால் தான் ஆட்டு மந்தைமாதிரி முதல் ஆடு என்ன சொன்னாலும், செய்தாலும், ஏன் எதற்கு என்று சுய அறிவை பயன் படுத்தி எதிர் கேள்வி கேட்காமல், அப்படியே அடிபிரளாமல் காபி அடித்து, தலைவன் துன்புறுத்தினால் தானும் அப்படியே துன்புறுத்தி ஆன வேண்டும் என்று நினைத்து விடுகிறார்கள்

(4) தன் இனத்தை சேர்ந்தவர் (in group) என்றால் தன்னை போலவே அவருக்கு எல்லா உரிமைகளும் ஏற்பட்டுவிடுமே. இப்படி சமமான மனிதர் என்று அங்கீகரித்து விட்டால், அப்புறம் அந்த நபருக்கும் தனக்கு நிகரான மதிப்பு மரியாதை கொடுத்தாக வேண்டுமே. இப்படி பரந்த மனப்பான்மையாய் இருக்க மனம் வராதவர்கள், என்ன இருந்தாலும் நான் தான் மனித இனம், நீ என்னை மாதிரி இல்லை. அதனால் நீ வேறு (out group). நீ வேறாக இருப்பதினால் உன்னை நான் என்னை மாதிரியே நடத்த வேண்டியதில்லை. அதனால் உன்னை நான் என்ன செய்தாலும் தகும் தான்” என்று தனக்கு தானே ஒரு சால்ஜாப்பை சொல்லிக்கொண்டு, “சப் ஹூமன்” subhuman நிலைக்கு தள்ளப்பட்ட மனிதர்களை வேற்று இனமாக்கி, அவர்களை சித்திரவதை செய்வதை நியாயப்படுத்தி விடுகிறார்கள். இதற்கு நல்ல உதாரணமாக ராணுவங்களைச் சொல்லலாம். ஒரு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அனைவரும், உட்குழுவாகவும், எதிரி நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அனைவரும், வெளிக்குழுவாகவும் கருதப்படுவதால் தான் போர் என்ற பெயரால் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்க காரணமாகின்றன.

இப்படி எல்லாம் இன்னொருவரை sub human நிலைக்கு தள்ளி அவரை கஷ்டபடுத்தினால், தன் நிலை ஒங்கும், இதனால் தன்னை கண்டு பிறர் அஞ்சி நடுங்கி, முன்னிலும் நிறைய மரியாதை செலுத்துவார்கள், ”நம்ம பிழைப்பு சுலபமாகிவிடும்” என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வன்முறை இயல்பாகவே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாக இன்று நாகரிக சமுதாயமாக மாறியிருந்தாலும், வன்முறை இன்னும் மனதின் அடி ஆழத்தில் படிமமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாகரீகத்தின் வளர்ச்சியால், இது போன்ற வன்முறை செயல்களை தடுக்க சட்டம், ஒழுங்குமுறை என மனித சமுதாயம் தனக்குள் ஒரு கட்டுபாட்டை வகுத்துக் கொண்டது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள், உட்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பொதுவாக கருதப்படுவதால், தனது குழுவைச் சேர்ந்தவர்கள் மேல் வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்றும், வெளிக்குழுவை சேர்ந்தவர்கள் மேல், தனது குழுவை பாதுகாக்கவும், தனது அதிகாரத்தை நிலைநாட்டவும், வன்முறையை பிரயோகிக்கலாம் என்றும் சராசரி மனிதர்கள் நினைக்கிறார்கள்

ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இப்படி பிறரை இம்சிக்கும் இந்த தன்மையை எந்த சமயத்திலும் மனித சமுதாயத்தின் மேலானவர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை. தன் சகமனிதனை துன்புறுத்துவது தான் இருப்பதிலேயே ஈனமான செயல் என்று கருதி, அந்த அநியாயம் செய்யும் நபரை ஒதுக்குகிறார்கள். அதுமட்டுமல்ல, தன்னால் பிறர் துன்பப்படுட்டதை கேள்வி பட்டாலோ, நேரில் பார்த்தாலோ, உடனே அதற்காக வருந்துபடி தான் இயற்கை மனித மனதை அமைத்திருக்கிறது.

இந்த அமைப்பை மீறி, யாராவது பிறர் துன்புருவதை பார்த்து சந்தோஷப்பட்டால், அதை ஒரு மனகோளாறாகவே கருதுகிறது மனநலமருத்துவத்துறை. இந்த கோளாறை, antisocial personality disorder, psychopathic personality என்றெல்லாம் பெயரிட்டு, அதற்கு வைதியமும் செய்ய வழிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

துரதுஷ்டவசமான சில சந்தர்பங்களில் தலைமை பதவி வகுக்கும் மனிதனுக்கு இப்படி ஒரு மனகோளாறு நேர்ந்திருந்தால் அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை கற்பனை செய்து பாருங்களேன், அட கற்பனை கூட செய்ய வேண்டாம், அடால்ஃப் ஹிட்லரை ஒரு முறை நினைத்து பார்த்தாலே போதுமே. இப்படி தலைவன் கொடூரமனநிலைகாரனாக இருந்து, அவன் தொண்டர்கள் “கண்மூடித்தனமாக கீழ்படிந்திருந்தால்“ (Blind obedience) என்ன ஆகும் என்பது ஹிட்லரின் உபயத்தால் நம் அனைவருக்கும் இன்று தெரியும். இருந்தாலும், இன்னும் நமக்குள் இனம் கண்டுபிடிக்கப்படாத பல ஹிட்லர்களும், சுயமாய் யோசிக்காமல் அடிமைமனநிலையில் கண்ணை மூடிக் கொண்டு, தனக்கு வரும் உத்தரவுகளுக்கு கீழ்படியும் இயந்திரங்காய் அவர்களுக்கு சில பணியாள்கள் கிடைத்துவிடுவதால் தான் இன்னும், இனபடுகொலைகளும், அதிகார துஷ்பிடயோகங்களும், சித்திரவதைகளும், இம்சைகளும் தொடர்கின்றன.

இதை எல்லாம் தடுக்கவே முடியாதா? இப்படியே இருந்தா எப்படி? என்று நீங்கள் யோசித்தால், ஒன்றை கவனியுங்கள்: வளர்ந்த நாடுகளான, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளில், சித்திரவதை குறித்த புகார்கள் மிகக் குறைவு. இது போன்ற புகார்கள் வந்தாலும், நடவடிக்கைகள் மிகக் கடுமையாக இருப்பதாலும், இது போன்ற புகார்களை விசாரிக்கவென்று சிறப்பான கட்டமைப்பு வசதிகளை வைத்திருப்பதாலும், இந்தக் குற்றங்கள் மிகக் குறைவான அளவிலேயே நடக்கின்றன.

1991ல் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறலாம். 1991 மார்ச் 3 அன்று, லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையைச் சேர்ந்த 4 காவல்துறையினர், ராட்னி கிங் என்ற ஒரு கருப்பரை, லத்தியால் கடுமையாக ஒரு பொது இடத்தில் வைத்துத் தாக்கினர். இந்த தாக்குதலை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஜார்ஜ் ஹாலிடே என்பவர், வீடியோ எடுத்தார். அந்த வீடியோ, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும், அமெரிக்காவே கொந்தளித்தது.

அமெரிக்க நீதிமன்றத்தில் அந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டு, வழக்கு நடந்தது. வழக்கின் இறுதியில், 1992ம் ஆண்டு அந்த நான்கு அதிகாரிகளும், விடுவிக்கப் பட்டனர்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் கலவரம் மூண்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தக் கலவரத்தில், 53 பேர் இறந்தனர். 2383 பேர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப் பட்டு, தாக்குதலில் சம்பந்தப் பட்ட 4 போலீஸ் அதிகாரிகளில் இருவருக்கு தலா 30 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு தீர்ப்பளிக்கப் பட்டது.

இதைப் போலவே வளர்ந்த உலக நாடுகள் அனைத்திலும், ~பதில் சொல்லி ஆகணும்~ என்கிற இந்த Accountability ரொம்பவே கடைபிடிக்க படுகிறது. இந்த பொறுப்புகளை கண்காணிக்க அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டு, இந்த அமைப்புகளை, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் கண்காணிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப் பட்டு செயல்படுத்தப் படுகின்றன.

ஆனால் இந்தியா போன்ற ஜனதொகை வீக்கம் அதிகமான வளரும் நாடுகளில் இப்படி எந்த தார்மீக நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை. சட்டதிட்டங்களும், கையேடுகளும் இருந்தாலும், அவை நடைமுறையில் பின்பற்றபடுவதில்லை. காரணம் இங்கு தனி மனிதனின் உரிமையையோ மானத்தையோ பாதுகாக்க யாருக்கும் பெரிய அக்கறை இல்லை. ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்தியா மாதிரியான நாடுகள் உலக தரத்திற்கு உயரவே முடியாதென்பதால், மற்ற எல்லா நாகரீக நாடுகளை போல இந்தியாவும், எல்லா மனிதர்களையும் கவுரவமாக நடத்தி, வன்முறை, சித்திரவதை மாதிரியான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அதை தடுத்து, தட்டிகேட்டு, நியாயம் வழங்க தயாராவது அவசியம்.

தட்டிகேட்பதும், நியாயம் வழங்குவதும், காவல் துறைக்கும், சட்டதுறைக்கும் உரித்தான விஷயங்கள், ஆனால் தடுத்து காப்பது, மனநலமருத்துவத்தின் பணி தானே. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மனித நேயம், பிறரை தன்னை போல பாவித்து விட்டு கொடுத்து, அன்பு செலுத்தும் போக்கு, எந்த பிரச்சனையானால் வன்முறையில் ஈடுபடாமல் பேசி தீர்த்துக்கொளும் மக்கட்பண்பு, எந்த வித்தியாசம் இருந்தாலும், எல்லா மனிதர்களும் சமமே, அவர்கள் எல்லோரையுமே ‘ingroup’பாய் பார்க்கும் மனப்பாண்மை என்று மேம்பட்ட மனங்களை வளர்த்தால், எதிர்காலத்தில் இந்த வன்முறை குணங்கள் தலை தூக்காமல் தடுக்க முடியும். ஆனால், இப்போதைய பாடத்திட்டங்களோ இது பற்றி எதுவுமே கண்டுக்கொள்ளாமல், மனப்பாடத் தகுதிகளை மட்டுமே வளர்த்து, ரேசில் ஓடும் குதிரைகளை போல சம்பாதிக்க மட்டுமே பிள்ளைகளை ஊக்குவிக்கிறது. இத்தகைய போட்டி மனப்பான்மைதான், வளர்ந்து பெரிய மனிதர்கள் ஆன பிறகும் கூட, தொடர்ந்து சுயநலமாய் சிந்தித்து, கொடூரங்களை செய்ய தூண்டுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் முதலின் நம் பாடதிட்டங்களை மக்கட்பண்புக்கு முதலிடம் கொடுப்பதாக மாற்றி அமைக்க வேண்டும்.

இத்தனை முன் எச்சரிக்கைகளையும் மீறி வன்முறை குணம் தலை தூக்கினால், அதை ஒரு கோளாறு என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்த மனவைத்தியத்தை துரிதமான ஆரம்பித்தல் அவசியம்.