Sunday, March 14, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 31

ஒரு ஆணை தேர்ந்தெடுக்கும் முன் அவன் அம்மாவின் குணம் நாடி குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி எல்லாம் போன ஸ்நேகிதியில் பார்த்தோம். இனி அவன் அப்பா கேரெக்டரின் முக்கியத்துவம் என்ன என்றும் தெரிந்துக்கொள்வோமே.

அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு. அதெப்படி என்று யோசிக்கிறீர்களா?

அந்த பெண் திருமணமாகி தன் கணவனுடன் வாழ போனாள். வண்டியில் அவன் பெற்றோர், பின் இருக்கையிலும், புது மணத்தம்பதிகள் முன் இருக்கையிலும் அமர்ந்து போய் கொண்டிருக்க, அந்த மாப்பிள்ளை பையன், மனைவியிடம், “என் தோலில் சாய்ந்துக்கொள்” என்று அடம் பிடிக்க, மணப்பெண்ணூம் நாணி, கோணி, மறுத்துப்பார்த்து, கடைசியில் அவன் ஆசையை நிறைவேற்ற, வண்டி இறங்கியதும், மாமியார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் உனக்கு நிமிர்ந்து உட்கார முடியாதா? அவனுக்கே இடம் பத்தாமல் கஷ்டபட்டுகிட்டு இருக்கான், நீ ஏன் அவன் மேல சாஞ்சி டிஸ்டர்ப் பண்ணே?”

இப்படி ஆரம்பித்து, தொடர்ந்து மாமியார் கோபமாகவே இருந்தாள். தன் வீட்டிற்கு அழைத்து போன மருமகளுக்கு ஒரு ஆரதி எடுக்க கூட அவளுக்கு மனமில்லை. வந்ததும் வராததுமாய் மருமகளிடம் வள் என்று விழுந்தாள், “இந்த வீட்டுல என்னென்ன இருக்குனு கவனிச்சி வெச்சிகிட்டு, உன் சொந்தகாரங்களுக்கு சொல்லீடாதே, அப்புறம் எல்லாரும் இங்கேயே வந்து உட்கார்ந்திடலாம்னு நினைச்சிக்க போறாங்க.” மகனின் அறைக்கு மருமகளை அழைத்து போனாள், “என் பையனோட டை, சாக்ஸை எல்லாம் எடுத்து உன் தம்பிக்கு குடுத்துடாதே, எல்லாம் வெச்சது வெச்சபடி இருக்கணும்….”

அந்த மாமியாருக்கு தெரியும் தான், அவள் மருமகள் பணக்காரி என்று, இருந்தாலும், அவளால் இப்படி எல்லாம் குத்தலாக பேசாமல் இருக்கவே முடியவில்லை. மருமகள் தன் கணவனுக்கு ஆசையாக எதையாவது சமைத்தால், ”இதை எல்லாம் மனிஷன் சாப்பிடுவானா,” என்று எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழைய சாம்பாரை எடுத்து தன் பையனுக்கு பரிமாறுவாள். மருமகள் தன் கணவனுக்கு கேக் என்றால் பிடிக்குமே என்று முட்டையை வாங்கி வந்தால், அதை ஒளித்து வைத்து விடுவாள் மாமியார். மருமகள் தன் கணவனின் சட்டைகளை தானே தன் கையால் இச்திரி செய்தால், “உனக்கு போட தெரியாது, நானே கடையில குடுத்து பண்ணிக்கிறேன், அது தான் அவனுக்கு பிடிக்கும்” என்பாள். இதை எல்லாம் விட பெரிய கூத்து, மகனும் மருமகளும் தனியாக இருந்தால் எங்கே மகன் மயங்கிவிடப்போகிறானோ என்று பயந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பையன் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள், “என்னமோ தெரியலை, உடம்பே சரியில்லை…..” என்ற ஒரு வசனத்துடன்.

மகன் தனியாக மாட்டினால் போதும், அவன் மாட்டாவிட்டாலும் ஃபோன் செய்தாவது புலம்பித்தள்ளூவாள், “அம்மா உனக்காக எவ்வளவோ கஷ்டபட்டிருக்கேன், என்ன இருந்தாலும் அவ நேத்து வந்தவ…..” பொருத்து பொருத்து பார்த்த மருமகளுக்கு போக போக சகிப்புத்தன்மை தேய்ந்துக்கொண்டே போக, தன் கணவனிடம் தனக்குண்டான உரிமையை பெற அவள் முயற்சிக்க ஆரம்பிக்க, வழக்கம் போல குடும்பத்தில் பெரிய குருக்ஷேத்திரமே வெடித்தது…..

இதில் பெரிய கேள்வியே, “இந்த மாமியாரும் ஒரு பெண் தானே, அவளும் கல்யாணம், கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்தவள் தானே, ஒரு பெண்ணின் மனதை அவளும் புரிந்துக்கொண்டு நடப்பது தானே இயல்பு. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் அற்பமாக நடந்து வாழ வந்தவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறாள் இந்த அம்மாள்? ” என்பது தானே. இங்கே தான் மாமனாரின் கேரெக்டர் முக்கியமாகிறது.

அந்த ஆசாமி தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இந்த வம்பே வந்திருக்காது. ஆனால் அவர் அந்த காலத்து ரோமியோ, மனைவியை தவிற மற்ற பெண்களிடமெல்லாம் தித்திப்பாய் பேசியே தன் வாழ்வின் பெரும் பொழுதை கழித்திருந்தார். ரிடையர் ஆகும் வரை பெரிதாய் எதையும் சம்பாதித்திருக்கவும் இல்லை. வாய் கிழிய வீண் ஜம்பப்பேச்சு, சதா சுய பிரதாபம், என்று எப்போதுமே அரைக்குடமாய் இருந்த அவர், அறம், பொருள், இன்பம், வீடு என்று எல்லா விஷயத்திலும், மனைவிக்கு குறையை மட்டுமே வைத்து விட, அவர் மனைவி தான் பாவம் என்ன செய்வாள்?

வெளிநாட்டு பெண் என்றால், கணவன் சரியில்லை என்று கண்டு பிடித்த உடனே அவனை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்திருப்பாள், ஆனால் இவள் இந்திய பெண்ணாயிற்றே, அதுவும் அந்த காலத்து பெண். கல்லானாலும் அதே கணவனை கட்டிக்கொண்டு அழுவதை தவிற அவளுக்கு வேறு வழி இல்லை. ஆனாலும் அவளும் பெண் தானே. அவளுக்கும், பாசம், பற்று, அன்பு, அரவணைப்பு, எல்லாம் தேவைபடுமே. அவளை பாராட்டி, ஊக்குவித்து, ”உனக்கு நான் இருக்கிறேன், கவலை படாதே,” என்று ஆறுதல் சொல்ல ஒரு ஆண் மகன் கிடைக்க மாட்டானா என்று அந்த தாயும் ஏங்கத்தானே செய்வாள்? இந்த இமோஷனல் தேவையை எப்படி தீர்த்துக்கொள்வாள்? சந்தர்ப்பம் அமைந்து, அதற்குண்டான துணிச்சலும் இருக்கும் பெண்கள், யாராவது ஒரு கள்ளக்காதலனையாவது கொண்டு இந்த இமோஷனல் தேவையை தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவு துணிவில்லாத தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகனையே தன் இமோஷனல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வாள்…..

“உன் அப்பா சரியில்லை, பார் அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்குன்னு யார் இருக்கா? நீயாவது வளர்ந்து ஆளாகி, அம்மாவை பார்த்துகிட்டா சரி…” பையனிடம் புளம்பி தள்ளி அம்மா செண்டிமெண்ட்டை அதிக பட்சமாய் இவள் பிரயோகிக்க, பையனும், “பாவம் அம்மா, அப்பா தான் அவளிடம் அன்பாகவே இல்லையே, அம்மாவை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று சகலத்தையும் செலவழிக்க தயாரானான். சம்பாதிக்க ஆரம்பித்த உடனே, அம்மாவுக்கு புடவை, நகை, வீடு, வசதி, என்று மகன் தாராளமாய் செலவழிக்க, அம்மாவும் ”என் புருஷனால தான் நான் சுகப்படலை, என் மகனாவது என்னை நல்லா பார்த்துக்குறானே” என்று உச்சி குளிர்ந்து போனாள்…..அம்மா இவ்வளவு குஷியாவதை பார்த்து, மகனும் அவளை மேலும் மேலும் கவனித்துக்கொண்டே போக, கடைசி வரைக்கும் அந்த பையனுக்கு தெரியவே தெரியாது, அவன் தன் தாய்க்கு செய்வதெல்லாம், ஒரு கணவன் செய்ய வேண்டிய கடமைகளை என்று.

மகன் போய் கணவனின் கடமைகளை செய்வதா, அதுவும் இந்த புண்ணிய மண்ணிலா, இதென்ன அபாண்டம் என்று உடனே ஓவர் ரியாக்ட் செய்துவிடாதீர்கள். கணவனின் கடமை என்றால் உடனே கலவியல் கடமைகளை மட்டும் நினைத்துக்கொண்டால் எப்படி? பேச்சுத்துணை, பாராட்டு, அவசரத்தில் உதவி, போக்குவரத்து துணை, உடை, நகை, வீடு, வசதி, கேளிக்கை, கௌரவம், இதை எல்லாம் விட பெண்களின் மிக முக்கிய தேவையான பவர்! இப்படி எத்தனையோ விஷயங்களுக்காக பல பெண்கள் இன்னமும் ஆணையே நம்பி இருக்க, அவளுக்கு வாய்த்த கணவன் இதை எல்லாம் கொடுத்தருளவில்லை என்றால், உடனே அம்மாக்காள் இவற்றை எல்லாம் தன் மகனிடம் இருந்து தான் பெற முயல்கிறார்கள்.

இதை எல்லாம் மகன் செய்யும் போது, அவன் தன்னை அறியாமல் தன் தாயுக்கே, கணவன் ஸ்தானம் வகித்து விடுகிறான். அவளுக்கே அவளுக்கு என்று அந்த தாய்க்கு ஒரு நல்ல கண்வன் வாய்த்திருந்தால், “எனக்கு இதை எல்லாம் செய்ய உன் அப்பா இருக்கிறார், நீ உன் குடும்பத்தை பார்” என்று சொல்வாள். ஆனால் கணவன் சரியாக வாய்க்காத பெண்களால் இப்படி சொல்ல முடியாதே, “பொண்டாட்டி வந்துட்டானு அம்மாவை மறந்துடாதேடா” என்று தானே கெஞ்சுவாள்? மருமகளையும் ஏதோ, தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து கொண்டுபோக வந்த பூச்சாண்டி மாதிரித்தானே நடத்துவாள்?

இதனாலேயே, இது வரை தான் அனுபவித்த சொகுசான வாழ்க்கையையும், செக்யூரிட்டியையும் கெடுக்கவே வந்த எதிரி என்கிற மாதிரியே, பல மாமியார்கள் மருமகள்களை பாவிக்கிறார்கள். மருமகளை இப்படி எதிரியாக நினைப்பதினால் தான், ”அவ சரியில்லைடா, அம்மாவை மன்னிச்சிடு, நான் தெரியாம உன்னை இப்படி ஒரு பாழும் கிணத்துல பிடிச்சு தள்ளீட்டேன்” என்று மருமகளை மட்டம் தட்டி, “உனக்கு நான் முக்கியமா, அவ முக்கியமா?” என்று மகனிடம் சண்டைகள் போட்டு, ”தாயா தாரமா” என்று தேர்ந்தெடுக்கும் தர்ம சங்கடத்திற்கு அவனை தள்ளி, சின்னத்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். தன் மகனின் விஸ்வாசத்தை தன் பக்கமே நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியை சரிகட்டிக்கொள்ள…..

இதற்கு நேர் எதிராய், தனக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்த்த மாமியார்கள் எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி, மருமகளிடம் மிகவும் ஆசையாக பழகுகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பெருந்தன்மையாக நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவன் சரியில்லை, மகனை நம்பி தான் வாழ்க்கையே என்றிருக்கும் மாமியார்களோ, ராட்ஷசிகள் மாதிரி போராடி, மகனின் குடும்ப வாழ்க்கையே நாசமாக்கி விடுகிறார்கள். தன் மகனின் வாழ்க்கையை ஒரு தாயே பாழாக்குவாளா? என்று உங்களுக்கு ஆட்சரியமாக இருக்கிறதா?

உயிரியலில் இதெல்லாம் ரொம்ப சகஜம் தான்! ஆடு, மாடு, மான் மாதிரியான தாவிர பட்சினிகளாட்டும். நாய், பூனை, சிங்கம், கழுகு மாதிரியான மாமிசபட்சினிகளாகட்டும். தாய், தான் போட்ட குட்டிகளில் ஒன்றை தானே சாப்பிட்டு, தெம்பேற்றிக்கொள்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு செயலே. ஏன் அந்த தாய் அப்படி செய்துவிடுகிறது? இயற்கையில் எல்லாவற்றுக்குமே ஓர் உள்ளர்த்தம் இருந்தாக வேண்டுமே? விஷயம் இது தான், தான் போட்ட குட்டிகளில் பிழைக்க முடியாத ஏதாவது இருந்ததென்றால், அதை பிற மிருகங்கள் சாப்பிட்டுவிடும். எப்படியும் வீணாகப்போகும் அந்த எரிபொருளை எல்லாம் தாய் தானே உட்கொண்டு விட்டால், மற்ற குழந்தைகளை பராமறிக்கும் சக்தியாவது கிடைக்குமே. அதனால் தான் பிழைக்க தோதில்லா பிள்ளைகளை காட்டுவாசி தாய்கள் தாமே தின்றுவிடுகின்றன……அதே போல தான் மனித தாயும். தான், தன் மனைவி, என்று கூடி தன் மரபணுக்களை இம்மைக்கும் மறுமைக்கும் பரப்பிக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் இல்லாத மகன், அல்லது மகள் என்றால், அதன் வளங்களை தானே உட்கொண்டுவிடுகிறாள் மனித தாய்….. அவளுக்கென்று வளங்களை கொண்டு வந்து தரவேண்டிய அவள் கணவன் கையாளாகாதவனாய் இருந்தால்.

ஆக ஸ்நேகிதிகாள், பையனின் அம்மா அவனுக்கு நல்ல பண்புகளை சொல்லி தந்திருக்கிறாளா என்று பார்ப்பது முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம் அவன் அப்பாவின் ஹஸ்பெண்டிங்க் திறமை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு அப்பாவே இல்லை, அல்லது, இருந்தும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள துப்பில்லாத வெட்டி கேஸ் என்றால், உஷார்……இந்த இன்செக்யூரிட்டியே அந்த மாமியாரை இம்சை அரசியாக்கிவிடும். ஆண்களின் போரிலாவது ஆயுதங்கள் கண்ணுக்கு தெரியும், ஆனால் இந்த பெண் புரியும் போரில் அவள் பிரயோகிக்கும், ”அம்மா செண்டிமெண்ட்” என்கிற இந்த பிரம்மாஸ்திரம் இருக்கிறதே, உலகிலேயே அது தான் மிக சக்திவாய்ந்த ஆயுதமே! கண்ணுக்கே தெரியாத இந்த ஆயுதத்தை பயன் படுத்தித்தான் பல இந்திய தாய்மார்கள் தங்கள் சுயநலத்திற்க்காக தங்கள் மகன்களின் வாழ்க்கையை பஸ்பமாக்கிவிடுகிறார்கள்….எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியினால்…..

ஆக, பையனை ஓகே சொல்வதற்கு முன்பு, அவன் அப்பாவை தரபரிசோதனை செய்துபாருங்கள். அவர் நல்ல கணவனாக இருந்தால், உங்கள் கணவன் உங்களுக்கே தான். அவர் சுத்த வேஸ்டாக இருந்தால், போச்சு, உங்கள் கணவர் உங்கள் மாமியாருக்கு தான்!

Thursday, March 11, 2010

நிர்வாணப்பார்வை 3: எத்னோ செண்ட்ரிஸம்….

குழந்தைகளுக்கும் பெருசுகளுக்கும் அறிவு விஷயத்தில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா? குழந்தைகள் உலகை புதிய கண்களோடு பார்க்கிறார்கள், அதனால் அவர்களுக்கு எல்லாமே அதிசயமாகவும், ஸ்வாரசியமாகவும் தோன்றுகின்றன. எதையுமே முன் அபிப்ராயம் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக பார்க்கும் போது, எல்லாவற்றையுமே ஒரு தெளிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க அவர்களால் முடிகிறது. இதனால் தான் குழந்தைகளால் மிக வேகமாக, மிக திறமையாக பல புதிய விஷயங்களை கிரகித்துக்கொள்ள முடிகிறது. நம்மால் பதிலே சொல்ல முடியாத கேள்விகளை சளைக்காமல் கேட்டு துளைக்கிறார்கள்.

இதற்கு நேர்மாறாக பெரியவர்கள். எதை எடுத்தாலும் “அது தான் எனக்கு தெரியுமே, “ என்கிற முன் அபிப்ராயத்தோடே உலகை பார்ப்பதால், அவர்களால் எதையும் முழுமையாக புரிந்துக்கொள்ள முடிவதில்லை. காரணம் இந்த முன் அபிப்ராயமே அவர்கள் மனதை பெரும் அளவிற்கு நிரப்பிவிடுவதால், அவர்கள் உலகை பார்பதே மீதமுள்ள அறை குறை மனசுடன் தான். இப்படி அறையும் குறையுமாய் உலகை பார்ப்பதினால் தான் அவர்கள் பல விஷயங்களை கவனிக்கவே தவறிவிடுகிறார்கள். அதனால் தான் பெரியவர்களுக்கு எதையும் கிரகித்துக்கொள்ளுதல் போக போக கடினமாகிக்கொண்டே போகிறது.

அதனால் தான் எதையும் புரிந்துக்கொள்வதற்கு முன்னால் குழந்தையின் blank slate என்கிற நிலைக்கு வருவது உசிதம். இப்படி நிர்வாணப்பார்வையில் உலகை அளந்தால் தான் எல்லா ஞானமும் சாத்தியம்…. இதை பல காலமாக சமண பௌத துறவிகள் சொல்லிக்கொண்டே வந்திருந்தாலும், அறிவியல் ரீதியாக இந்த நிர்வாணப்பார்வையின் முக்கியத்துவத்தை விளக்கியவர் மானுடவியல் நிபுணரான பிரானிஸ்லா மேலினாஸ்கீ

மெலினாஸ்கீ போலாந்தை சேர்ந்த ஒரு மானுடவியல்காரர். உலக போரின் போது இவர் ஆஸ்திரேலியா பக்கமாய் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் போலாந்துக்காரர் என்பதால் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட ஆஸ்திரேலியாவில் அவர் நடமாடுவது சட்டபடி குற்றமாக கருதப்பட்டது (காரணம் போலாந்துக்கு எதிராக இங்கிலாந்து போர் புரிந்துக்கொண்டிருந்தது) அதனால் அவரை டிராப்ரியண்டு தீவுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அந்த தீவு முழுக்க வெறும் ஆதிவாசிகள் தான் வசித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஆதிவாசிகளுடன் வருடக்கணக்கில் தங்கி மானுடவியல் ஆய்வுகளை நடத்தினார் மெலினாஸ்கீ.

இப்படி ஒரு புதிய கலாச்சாரத்தை முதன் முதலில் பார்த்த போது மெலினாஸ்கீ ரொம்பவே திண்டாடி போனாராம்…..”இவங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க? ஏன் இப்படி பேசுறாங்க? ஏன் இதை எல்லாம் சாப்பிடுறாங்க?” என்று ஆரம்பத்தில் அவருக்கு பல கேள்விகள் எழுந்து மக்களுடன் சகஜமாய் பழக விடாமல் தடுக்க, போக போக அவருக்கே புரிந்தது, “நான் என்னையும், நான் வளர்ந்த ஊரையும், அங்கு இருக்கும் மரபுகளையும் உசத்தி என்றே நினைக்கிறேன். அதை எப்போதுமே ஒப்பிட்டு பார்த்து தான் இவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறேன்….இப்படி நான் என்னை உசத்தி பிறரை மட்டம் என்று நினைத்துக்கொண்டே இருந்தால், இவர்களை இவர்களது பின்புலத்தோடு என்னால் புரிந்துக்கொள்ளவே முடியாது. அதனால் என்னுடைய “எங்க வழக்கம் மாதிரி வர்றாது” என்கிற இந்த எத்னோ செண்ட்ரிக் நினைப்பை எல்லாம் ஏறக்கட்டினால் தான் இவர்களை சரியாக புரிந்துக்கொள்ள முடியும்” என்று முடிவு கட்டினார். தன் மனதில் தன்னை பற்றியும் தன் பாரம்பரியத்தையும் பற்றி இருந்த பதிவுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, புதிதாய் பூமிக்கு வந்தவனை போல ஒரு நிர்வாணப்பார்வையுடன் அத்தீவு மக்களை கவனித்தார்…..அப்போது தான் அவருக்கு மானுடவியல் ஞானமெல்லாம் ஒவ்வொன்றாய் உதயமானது.

ஆக இந்த “எங்க ஊர்/இனம்/மொழி/மதம்/மரபு/நம்பிக்கை/பாரம்பரியம் தாம் பெஸ்ட். மத்ததெல்லாம் வேஸ்ட்” என்று தன்னை முன்னிலை படுத்தி சிந்திக்கும் இந்த எத்னோ செண்ட்ரிஸம் இருக்கிறதே….இது நம் பார்வையை சுருக்கிவிடும். அறிவியலில் சுயத்துக்கு வேலையே கிடையாது என்பதால் இந்த சுயபிரதாப தன்மை விட்டு ஒழிந்தால் தான் தெளிந்த ஞானமே சாத்தியம்.

உதாரணத்திற்கு இந்தியாவில் வாழும் நாமெல்லாம், மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மத குற்றம் என்று நினைக்கிறோம். (இதே இந்திய வேதங்கள் தொட்டதற்கெல்லாம் யாகம் வளர்த்து, அதில் கோ பலி செய்து, அதன் மாமிசத்தை பிரசாதமாய் எல்லோருக்கும் விண்ணியோகமும் செய்தது ஒரு தனி கதை) ஆனால் ஐரோப்பாவில் வாழும் எல்லோருமே ஸ்பஷ்டமாய் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆஃப்ரிக்காவில் உள்ளவர்கள் புழு, பூச்சு, வண்டு மாதிரியானவற்றை சாப்பிட்டு கொள்கிறார்கள். சீனாவில் வாழ்பவர்கள் நாய், எலி, கறப்பாண்பூச்சி, பாம்பு, பல்லி மாதிரியானவற்றின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். தாய்வானின் உள்ளவர்கள் அபார்ஷன் செய்யப்பட்ட மனித சிசுக்களையே உணவாக சாப்பிடுகிறார்கள்…..இதை எல்லாம் கேட்ட உடன் கூசி சிணுங்கி, “சீச்சீ, இப்படி எல்லாமா தின்பார்கள்? என்ன கேவலமான மனித ஜென்மங்கள்” என்று நீங்கள் முகம் சுளித்தால், போச்சு, நீங்கள் ரொம்பவே எத்னோ செண்டிரிக்கான மனிதர்……உங்கள் கலாச்சாரத்தை தவிற பிற மனிதர்களை சமநோக்கோடு பார்க்கும் பக்குவம் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று அர்த்தம்.

அதற்கு மாறாக, “அது சரி, அந்தந்த ஊர்ல என்னென்ன புரத சத்து கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்குறாங்க….that that people, that that protein” என்று உணர்ச்சி வசப்படாமல், சகிப்புத்தன்மை சொட்ட சொட்ட, சமநோக்கோடு யோசிக்கிறீர்களா? வெரி குட். உங்களுக்கு எத்னோ செண்ட்ரிஸம் இல்லை. உங்களுக்கு எல்லா ஞானமும் இனி சாத்தியம்!

Wednesday, March 10, 2010

நிர்வாணப்பார்வை 2: யாதும் ஊரே!

புகழ் பெற்ற ஓவியர் திருவாளர் எம். எஃப். ஹுசைனுக்கு கட்டார் நாடு குடியுரிமை கொடுத்ததை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதை உசைனும் ஏற்றுக்கொண்டாரே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பொதுவாக, நாம் சின்ன குழந்தைகளாய் இருக்கும் காலம் தொட்டே, “இந்தியா என் தாய் நாடு, இந்தியர்கள் எல்லோரும் என் உடன் பிறந்தவர்கள், என் தாய் நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்....” என்றெல்லாம் சொல்லவும் நினைக்கவும் நாம் பயிற்றுவிக்க படுகிறோம்.

இதனாலேயே என் நாடு என்கிற ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுவிடுகிறோம். ஆனால் இதுவும் ஒரு வித மாயை தான்.

உதாரணத்திற்கு இந்தியா என்கிற இந்த நாட்டையே எடுத்துக்கொள்வோமே. ஒரு காலத்தில் சிந்து நதி ஓடிய பகுதியை தான் இந்தியா என்று அழைத்தார்கள் பாரசீகர்களும், கிரேக்கர்களும், அரேபியர்களும்.....அப்படி பார்த்தால், அந்த சிந்து நதி இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பிரதேசம் தான் நிஜமான இந்தியா. ஆனால் அந்த பிரதேசம் இப்போது இருப்பதென்னவோ ஆஃப்பாக் என்றழைக்கப்படும் ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதியில் தான்.

ஒரு காலத்தில் கன்னியாகுமரி பகுதி என்பது திருவான்கூர் அரசரின் சமஸ்தானத்தை சேர்ந்த ஒரு தொகுதி மட்டுமே. 1947ழுக்கு முன் இந்த ஊர் காரர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லை, திருவான்கூர்காரர்கள் தான். ஆனால் 1947ழுக்கு பிறகு அவர்களின் அடையாளம் மாறி, இந்தியர்களாய் தங்களை நினைத்துக்கொள்ள அவர்கள் பழகிவிட்டார்கள்.

ஆக நாடு என்பது வெறும் ஒரு நம்பிக்கை தான். மற்ற நம்பிக்கையை போல அதுவும் மாறக்கூடியது தான். சின்ன குழந்தை பிறந்த புதிதில், தன் தாயின் கரங்களையே தன் உலகமாக நினைக்கும். கொஞ்சம் வளர்ந்ததும், அந்த அறையை மட்டுமே தன் உலகமாக நினைக்கும். அதே குழந்தை வளர வளர, தன் வீட்டையும், தன் தெருவையும், தன் ஊரையும், தன் நாட்டையும், தன் உலகம் என்று கருதிக்கொள்ளும். சிலர் இந்த வளர்ச்சியோடே நின்று விடுகிறார்கள். ஆனால் இதை விட அதிக சிந்தனா சக்தியும், பரந்த மனமும் உள்ளவர்களுக்கு நாடு என்பது கூட ஒரு சின்ன வட்டம் தான். அதனால் அவர்கள் தன் கண்டத்தையும், அதையும் தாண்டி, இந்த மொத்த பூமியையும், அதற்கு அப்பாலும், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் தன் உலகமாகவே கருதுகிறார்கள். அவர்களை பொருத்தவரை இந்த அண்ட சராசரமே அவர்களுக்கு உலகம் தான்…..

இந்த அளவு பறந்து விரியும் மனம் கொண்ட மனிதர்களை எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி நாம் எல்லோருமே எப்போதுமே உளமாற பாராட்டி இருக்கிறோம். உதாரணத்திற்கு விஷ்வ பாரதி, என்கிற பல்கலை கழகத்தை துவக்கிய ரபீந்திரநாத் தாகூர். உலகில் என்ன நடந்தாலும், அது என்னவோ தன் வீட்டில் நடந்தது மாதிரி பாடிய மஹாகவி சுப்ரமண்ய பாரதி. மற்ற நாட்டு பெண்களை போலவே தமிழ் பெண்களும் முடியை வெட்டிக்கொண்டு, பாண்டு சட்டை போட்டால் தேவலை என்று யோசித்த பெரியார்….இவர்கள் எல்லாம் நம்ம ஏரியா Transnational Heroes, என்றால், ஆர்ஜெண்டீனாவில் பிறந்தாலும், கூபாவின் சுந்ததிர போருக்காக போராடிய ஷே குவேரா, யுகஸ்லோவியாவில் பிறந்தாலும் கல்கத்தா வீதிவாழ் மனிதர்களுக்காக உழைத்த அன்னை தெரெசா……என்று இந்த பட்டியலில் பலர் இருக்க தான் செய்கிறார்கள்.

அதே பட்டியலில் இப்போது ஓவியர் எம் எஃப் உசைனும் சேருகிறார் என்பது அவருக்கு பெருமையே.

Monday, March 8, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 30

எந்த மாதிரி ஆணை தேர்ந்தெடுத்தால் ஓகே, எந்த மாதிரி ஆணாக இருந்தால் அவனை உடனே கழற்றிவிட வேண்டும் என்பது பற்றி எல்லாம் இத்தனை வாரங்களாக பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் வரிசையில் அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மஹா முக்கியமான ஒரு அம்சம் அந்த ஆணின் வாழ்வில் ஏற்கனவே வந்து போன பெண்கள்!

நாம் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்டோம், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பிற்கும் பெண்ணிம் மூளை வடிவமைப்பிற்கும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன. இதனாலேயே ஒரு ஆணால் பெண்ணை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியாது, காரணம் பெண் உலகை பார்க்கும் விதமும், விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் விதமும், ஒவ்வொன்ருக்கும் கொடுக்கும் முக்கியத்துவமும், ரியாக்ட் செய்யும் விதமும் ரொம்பவே வித்தியாசமானவை. இவ்வளவு வித்தியாசங்களையும் அவன் திடுதிப்பென்று பார்த்தால் ரொம்ப குழம்பிப்போய்விடுவான், எப்படி கையாள்வது என்று தெரியாமல் திண்டாடுவான், இதனால் உறவு ஊசலாட ஆரம்பித்துவிடும்.

இப்படி திடுதிப்பென்று ஒரு பெண்ணை அணுகி, அறியாமையினால் அவன் சொதப்பி காரியாத்தை கெடுத்து விட கூடாதென்றால், அவனுக்கு ஏற்கனவே சில பெண்களுடனாவது பரிச்சயம் இருந்து, ஓகோ பெண் என்றால் இப்படி இப்படி வித்தியாசமாய் தான் யோசிப்பாள், செயல் படுவாள். அவள் இப்படி இப்படி சொன்னால், செய்தால் அதற்கு இது இது தான் அர்த்ஹ்டம். அவளை நான் இப்படி இப்படி கையாண்டால், மேட்டர் ஓவர் என்று புரிந்த கொள்ள வாய்ப்பு இருந்தாக வேண்டுமே. அந்த வாய்ப்பையும் புரிதலையும் ஏற்படுத்த, அவன் வாழ்க்கையில் பல பெண்கள் இருந்தாக வேண்டும்.

இப்படி இருந்தே ஆக வேண்டிய அந்த அதிமுக்கிய பெண்கள் வரிசையில் முதலில் வருவது அவனுடைய அம்மா. ஆண் பெண் உறவில் இருக்கும் அந்நியோநியத்தை கொஞ்சம் சயிண்டிஃபிக்காக நீங்கள் உற்று நோக்கினால், உடனே புரியும் விஷயம், காதல் என்பது தாய் சேய் பாசவெளிபாடின் ஒரு தொடர்ச்சி! ஒரு தாய் எவ்வளவு ஆசையாக தன் குழந்தையின் உடலை தொட்டு ரசிக்கிறாள், கட்டிபிடித்து, முத்தமிட்டு, கொஞ்சி, தாலாட்டு, சீராட்டி, பராமறித்து, அவள் உறவாடும் இந்த விதம் தான் குழந்தையின் மூளையில் புதிய நரம்பு இணைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இப்படி தாயின் ஸ்பரிசம் மற்றும் கொஞ்சுதல் எல்லாம் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு ரொம்பவே அதிகமாக தேவை படுகின்றன, காரணம் இப்படி தாயோடு ஒட்டி உறவாடும் போது, ஆண் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தில், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்ற தூண்டுதலை ஏற்படுகிறது. இது தான் இந்த ஆண் குழந்தையின் பிற்கால தாம்பத்திய வாழ்வின் தரத்தையும், இதனால் ஏற்படக்கூடிய வாரிசுகளின் எண்ணிக்கையையும் நிர்நயிக்கும்.

ஆக, ஒரு ஆண், பெண் என்றால் இப்படி தான் இருப்பாள் என்று அனுமானிப்பதே அவன் அம்மாவை வைத்து தான். அவனுக்கு அம்மாவே இல்லை என்றால்? குறைந்த பட்சம், அம்மா மாதிரி வேறு ஒரு செவிலி கேரெக்டர் இருந்து, இதே புரிதலை ஏற்படுத்தினாலும் போதும், அல்லது தன் நண்பர்களின் அம்மாக்களை பார்த்து பரிச்சயப்பட்டாலும் போதும்.

அம்மா இருக்கிறாள், ஆனால் அவள் கொஞ்சம் முசுடு, குழந்தையிடம் அன்பாக இருக்கவெல்லாம் அவளுக்கு தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன்…..இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா, என்று நீங்கள் ஆட்சரியப்படலாம், ஆனால் உண்மை என்ன தெரியுமா? தாய்மை உணர்வு என்பது மட்டும் தான் இயற்கையில் வருவது, அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற சமாசாரம் எல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளும் விஷயமே.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த ஒரு மாமியார் கேரக்டரை எடுத்துக்கொள்வோமே, இந்த லேடி பிறந்த போது அவர்கள் வீட்டில் தரிதிரம் தலைவிரித்து ஆட, இவளை வளர்க்க முடியாமல் தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாள் தாய். ஆயா, ஆயா, என்று தன் பாட்டியோடே ஒட்டிக்கொண்டு வளர்ந்தாள் மகள். பாட்டி தனக்கிருந்த எத்தனையோ வேலைகளில் பிஸியாக இருந்ததால் குழந்தையை கொஞ்ச எல்லாம் அவருக்கு நேரமே இல்லை. எப்போதும் சாமி கும்பிடுவதும், காசு பணத்தை பற்றிய கவலையிலேயே இருப்பது, என்று பாட்டி காலம் கழிக்க, பேத்தியும் சின்ன வயதிலேயே சாமி கும்பிடுவது, பாட்டியின் காசை எண்ணித்தருவது, வீட்டை சுத்தம் செய்வது, என்றே பழகி விட்டாள். இந்த பெண் வளர்ந்து திருமணம் செய்துக்கொண்ட போது தான் இந்த வளர்ப்பு முறையின் சிக்கலே வெளிபட ஆரம்பித்தது.

இவள் கணவனோ எக்கசெக்க ஆசையோடு அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிய, இவளோ, “சீச்சீ, எச்சில் பட்டு வட்டது” என்று அவனை தள்ளிவிட்டு ஒதுங்கி ஓட, கணவனுக்கு அவளோடு தாம்பத்தியம் கொள்வதே பெரிய போராட்டம் ஆனது. இவள் காமநீர்களை அசுத்தம் என்று நினைத்தால், கட்டிபிடிப்பதும், முத்தமிடுவதும் பெரிய ஸ்வாரசியமாக அவளுக்கு படவில்லை. அவன் ஆசையாக பேசினாலும், “எதற்கு வெட்டியாக பேசிக்கொண்டிருக்கிறாய், போய் சம்பாதிக்கிற வழியை பார்” என்பாள். தனது இஷட பொழுது போக்கான இறைவழிபாட்டில் மணிகணக்கில் மூழ்குவாள். இறைவழிப்பாட்டு நாட்களில் இனசேர்க்கைக்கு இணங்க மாட்டாள்.

மனைவி இப்படி எந்த செக்ஸ் உணர்ச்சியுமே இல்லாத ஜடமாய் இருப்பது போக போக கணவனை கஷ்டப்படுத்த, தன் காதல் தேவைகளை தீர்த்துக்கொள்ள, கணவன் தன் பல பெண் தோழிகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். இந்த எல்லா தோழிகளுமே, அவன் காதல் திறமைகளில் திக்கு முக்காடி போவார்கள், ஆனால் அவன் மனைவி மட்டும், சீ கிட்ட வராதே என்றே ஒதுங்கி ஓடுவாள். இருந்தாலும் இவன் விடா பிடியாக மனைவியை உறவுக்கு உட்படுத்தியதில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. குழந்தை உச்சா போனான், ஆய் போனான், உடம்பு சரியில்லாமல் அவள் மேலேயே வாந்தி எடுத்தான், இதை எல்லாம் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பையனை, தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு தன் கணவனுடன் வேறு ஊருக்கு போய் அவன் சம்பாதியத்தை பாதுக்காப்பதையே தன் முக்கிய கடமையாகக்கொண்டாள். இதற்கிடையில் அவள் மீண்டும் கருவுற்று இன்னொரு ஆண் மகனை பெற்றெடுத்தாள். துரதுஷ்டவசமாக இந்த பையன் பிறந்ததும் அவள் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து விட, முதல் மகனை தன் அம்மாவிடமே விட்டு விட்டு, இளையவனை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு போய் விட்டாள்.

முதல் மகன் தன் பாட்டி, கொள்ளுபாட்டி, அத்தை, மாமி, அவர்களின் மகள்கள் என்றூ பல பெண்களின் அரவணைப்பில் வளர்ந்ததால் அவன் நார்மல் ஆண் ஆனான், திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியெல்லாம் பெற்று சௌக்கியமாய் இருந்தான். ஆனால் இளைய மகன் தன் தாயுடன் தனிமையிலேயே வளர்ந்தான். அவனை அம்மா கட்டிப்பிடித்ததில்லை, கொஞ்சியதில்லை, முத்தமிட்டதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் போடுவாள், அதனால் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல், நன்றாக சாப்பிட மட்டும் அவனுக்கு தெரிந்திருந்தது. அவன் அம்மா அவனை வெளியிலேயே அனுப்பாமல் வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்ததால், அவனுக்கு மாற்று தாய்கள் கூட யாரும் அமையவில்லை. அவன் இயல்பிலேயே அன்பானவன், மென்மையானவன், எல்லோரிடமும் பிரியமாக இருக்க அவனுக்கு பிடிக்கும் தான்…..ஆனால் அதை எப்படி செய்வது என்று அவனுக்கு கடைசி வரை தெரியவே இல்லை. அதனால் கூச்ச சுபாவியாய், வெளி நபர்கள் யாரிடமும் அதிகம் பேசாமலேயே வளர்ந்து ஆளானான்.

அவன் அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தான், அம்மாவோ, டோட்டல் அப்நார்மல், என்பதால் அவனுக்கு பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என்கிற வித்தை கடைசி வரைக்கும் தெரியவே இல்லை. அதை பற்றி அவன் அப்பாவிற்கு ரொம்ப கவலை, தனக்கு பின் தன் மகன் தனிமைபட்டு போய்விடக்கூடாதே என்று அவர் அரும்பாடுபட்டு, அவனை புரிந்துநடந்துக்கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாய் பார்த்து தேர்ந்தெடுத்து அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். அவனுக்கும் அவன் மனைவி மீது கொள்ளை ஆசை தான் என்றாலும், ஒரு பெண்ணிடம் ஆசையை எப்படி வெளிபடுத்துவது என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

இதற்கிடையில் வழக்கமான மாமியார் மருமகள் பிரச்சனைகள் கிளம்பிவிட, அதையும் எப்படி கையாள்வது என்று தெரியாமல் பையன் தத்தளிக்க, எல்லா குழப்பங்களும் சேர்ந்து அந்த பையனின் திருமண வாழ்க்கை பெரிய தோல்வியில் முடிந்தது…..அவன் நல்லவன் தான், அவன் மனைவியும் அவன் மேல் உயிராகத்தான் இருந்தாள், ஆனால் திருமணம் ஏன் தோற்றுப்போனது என்று அனலைஸ் செய்து பார்த்தால், அவன் அம்மாவின் அப்நார்மல் தனம் தான் அதற்கு வேர் காரணம் என்பது புரியவந்தது. தாயின் அரவணைப்பே இல்லாமல் வளர்ந்த இந்த அம்மாவிற்கு தன் கணவனிடமும் காதலாய் வாழ தெரிந்திருக்கவில்லை, தன் மகனையும் அவள் கட்டித்தழுவி கொஞ்சாமல் விட்டதால், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்கிற இந்த லிங்க்கே அவள் மகனின் மூளையில் ஏற்பட்டிருக்கவில்லை. இதே தாய்க்கு பிறந்த மூத்த மகன் மட்டும், பல செவிலித்தாய்களின் உபயத்தால், சரியான நரபு இணைப்புக்களை பெற்றுவிட அவன் வாழ்க்கை தப்பி இருந்தது.

ஆக, ஸ்நேகிதிகாள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண், உத்தமனாக, நல்லவனாக, உயர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் அம்மா ஒரு உதவாக்கரையாக இருந்தால், அது உங்கள் உறவை பல விதங்களில் பாதிக்கும் என்பதால் வெறும் அந்த ஆணை மட்டும் வைத்து உறவை முடிவு செய்துவிட முடியாது. அவன் அம்மா நார்மலா, அப்நார்மலா என்று நிர்ணயிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்….இது பற்றி எல்லாம் மேலும் பல சமாசாரங்கள் அடுத்த ஸ்நேகிதியில்.