என்ன ஆகிவிட்டது இந்த தமிழ் பெண்களுக்கு? புறனாற்று காலத்தில் மிக தெளிவாக இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்த இதே பெண்கள், போஸ்ட் மார்டன் யுகத்தில் ஆண்குழந்தைகளை முந்தானையிலேயே முடிந்துவைத்துக்கொள்ள முயல்கிறார்களே, ஏன்?
இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம்: புறனானூற்று காலத்து பெண்களுக்கு, குறைந்த பட்சம் தமிழ்நாட்டில், நிறைய பவர் இருந்தது. அதில் முக்கியமான பவர், தன் துணையை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரம். இந்த சின்ன விஷயம் மனித குணத்தை எப்படி இந்த அளவிற்கு மாற்றும் என்கிறீர்களா?
ஆட்சர்யமான உண்மை தெரியுமா: உலகில் உள்ள எல்லா ஜீவராசியிலும் பெண் மிருகம் தான் ஆணை கலவிக்கு தேர்வு செய்யும். ஆண் பிற ஆண்களோடு போட்டியிட்டு, “தான் எவ்வளவு பெரிய கொம்பன்” என்பதை நிருபவிக்கும். இப்படி போட்டியில் ஜெயிக்கும் ஆணை மட்டும் தன்னோடு இணைய அனுமதிக்கும் பெண். இப்படி பெண் மிக கவனமாக ஜெயிப்பவனையே ஜலித்தெடுத்து இனம் சேருவதை தான் செக்ஷுவல் செலக்ஷன் sexual selection என்றார் சார்ல்ஸ் டார்வின். ஆண் பெண் என்கிற இந்த இரண்டு பாலினம் இருக்கும் எல்லா மிருகங்களும், அவ்வளவு ஏன், செடி கொடிகளுமே கூட இந்த செக்ஷுவல் செலக்ஷன் என்கிற கலவியல் தேர்வு முறையை பயன் படுத்துகின்றன. பயன்படுத்தியே ஆகவும் வேண்டும், காரணம் இது தான் சிறந்த மரபணுக்களை தேர்ந்தெடுக்க, இயற்கை வைத்திருக்கும் ஒரு வடிகட்டு வழி. இந்த மரபணு போட்டியில் ஜெயிக்கவே உலகெங்கும் உள்ள ஆண் விலங்குகள் கொம்பு, பிடரி, கொண்டை, சிறகு, தோகை, தந்தம் என்று பல விதங்களில் “என் மரபணு எவ்வளவு உசத்தியானது பார்” என்று விளம்பரப்படுத்தும் உடல் பாகங்களை வளர்த்துக்கொள்கின்றன. சில விலங்குகள் இதற்கு இன்னும் ஒரு படி மேலே போய், பாட்டு, ஆட்டம், வாசனை, வெளிச்சம், என்று பல வித ஜால வேலைகளில் ஈடுபட்டு பெண்களை கவர முயல்கின்றன.
ஆதிகால மனிதர்களும் இந்த இயற்கை வழியில் தான் செயல் பட்டார்கள். ஆண் தன் வீரம், பராக்கிரமம், விளையாட்டு, கலை, பேச்சு, சாகசம், திறமை என்று வெளிபடுத்துவான். அல்லது மற்ற மிருகங்களின் கவர்ச்சி பாகங்களை கடன் வாங்கி அதை தான் அணிந்துக்கொண்டு பெண்களை அசத்த பார்ப்பான். ஆண்களுக்குள் நடக்கும் போட்டிகளில் வென்றுவிட முயல்வான். இப்படி எல்லாம் தன் கவர்ச்சியை கடை பரப்பி காட்டுபவனை பெண் லபக் என்று பிடித்துக்கொள்வாள்…..அவன் மரபணுக்களை கொண்டு வலிமையான பிள்ளைகளை பெற்றுக்கொள்வாள்.
சே சே, இதெல்லாம் அபாண்டம், பெண்கள் இப்படி எல்லாம் செய்யவே மாட்டார்கள் என்று அவநம்பிக்கையாக இருக்கிறதா? ராமாயண சீதை ராமனை எப்படி தேர்ந்தெடுத்தாள்? "கவுசல்யா சுப்ரஜா ராமா, இதோ சீதை நான் உனக்கு தான்" என்று உடனே அவன் மடியில் விழுந்தாவிட்டாள்? மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே இருந்தாலும், இந்த வில்லை உடைத்து உன் வலிமையை நிரூபவி, என்று சொல்லவில்லையா? ராமன் மட்டும் அன்று வில்லை உடைக்காமல் இருந்திருந்தால், அன்னலும் நோக்கி அவளும் நோக்கியதெல்லாம் utter waste ஆகியிருக்குமே!
ஆக, மனிதர்களிலும் அந்த காலத்தில் பெண் தான் ஆணை தேர்வு செய்தாள். ஒரு ஆணின் மரபணுக்கள் மறுமைக்கு பரவுவதும், வீணாகி சூனியமாகி போவதும் ஒரு பெண்ணின் முடிவை பொருத்து தான் இருந்தது. அதனால் அக்கால பெண்களுக்கு ஆண்களின் மேல் கொஞ்சம் பவர் இருக்க தான் செய்தது.
இந்த ஏற்பாடு யானைக்கும், சிங்கத்திற்கும், புலிக்கும் சரிபட்டு வந்தாலும், மனித ஆணுக்கு இது கொஞ்சம் நெருடலாக இருந்தது…….”இவள் என்ன நம்மை தேர்வு செய்வது, அதற்கு பதில் இவளை நாம் தேர்வு செய்துவிட்டால், அப்புறம் எல்லா பவரும் நமக்கு தானே?” அதனால் பெண்ணின் இந்த கலவியல் தேர்வு முறையை முறியடிக்க ஆண்கள் பல ஐடியாக்களை பிரயோகித்தார்கள். அதில் முக்கியமானது: ஆணை தேர்வு செய்ய தனக்கு அதிகாரம் இருப்பதாக இவள் நினைத்தால் தானே வம்பு, அப்படி ஒரு அதிகாரமே தனக்கு இல்லை என்கிற அளவிற்கு அவள் மனதை மாற்றிவிட்டால், அதன் பிறகு அவளை அடக்கி ஆள்வது சுலபமாகிவிடுமே.
ஒருவரையோ, ஒரு பாலினத்தையோ, ஒரு இனக்குழுவையோ, அடக்கி ஆள சில சுலபமான யுத்திகளை மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த யுத்திகளை காலம் காலமாய் மனிதர்கள் பிறரை அடிமைகளாக்க பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
யு 1) ”பிறவியிலேயே நீ தாழ்த்தி, கடவுள் உன்னை அப்படி ஈனமாகவே படைத்தார், அதனால் இயல்பிலேயே நீ மட்டம், நான் தான் உசத்தி” என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையை முதலில் அவர் மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்
யு 2) “நீ தாழ்த்தி என்பதற்கு நிரூபனங்கள்…” என்று அவருக்கு இயல்பாக இருக்கும் உடல், மன, சமூக அமைப்புக்களை மட்டம் தட்டி, அதையே ஏதோ அசிங்கம் மாதிரி சித்தரித்து அவர்களுகென்று மான உணர்வே இல்லாத அளவிற்கு அவர்கள் மூளையை மழுங்கடிக்க வேண்டும்.
யு 3) ஏதோ காலத்தில் அவர்கள் நன்றாக வாழ்ந்த சரித்திரம் இருந்தால், அதை அப்படியே இருட்டடித்து, ”உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே நீ அடிமையாக இருக்க மட்டுமே படைக்க பட்டவள்” என்று மாற்று கருத்துக்கு இடமே இல்லாதபடி சொல்லி வைத்துவிட வேண்டும். அப்போது தான் அவளுக்கு சுயமரியாதையே ஏற்படாது, தனக்கு நடக்கும் இழிவுகளை இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மனநிலை ஏற்படும்
யு 4) நாம் இப்படி சொல்லி வைத்ததெல்லாம் சரியா தவறா என்று தானே யோசித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க அவள் முற்பட்டுவிட்டால், நம் குட்டு வெளிபட்டுவிடுமே. அதனால், “உனக்கு அறிவே இல்லை, உனக்கு படிப்பே வர்றாது” என்றும், “நீ புத்தகத்தை தொட்டாலோ, பாடத்தை கேட்டாலோ அது மஹாபாவம், அப்புறம் நகரத்தில் உன்னை எண்ணெய் கொப்பறையில் போட்டு வருத்தெடுப்பார்கள்,” என்று பயமுறுத்தி வைப்பது. கல்வி வாய்ப்புக்களே தராமல் அவளை மடச்சியாகவே வைத்திருப்பது……இதெல்லாம் அவள் சுய அறிவை ஆஃப் செய்து விடும் என்பதால் அதன் பிறகு அவளை நம் இஷ்ட்டபடி வளைத்து போடலாமே.
யு 5) இப்படி எல்லாம் நாம் மூளை சலவை செய்து வைத்தும், அவள் நமக்கு ஊழியம் செய்யாமல் வேறு எவனிடமாவது ஓடிவிட்டாள்? அதனால், “நீ எனக்கு மட்டுமே விஸ்வாசமாய் இருந்து, நான் எவ்வளவு மோசமாய் இருந்தாலும் பதிபக்தியோடு என்னை கவனித்துக்கொண்டால், சொர்கத்தில் உனக்கு ஒரு சீட்டும், வரலாற்றில் உனக்கொரு நல்ல பெயரும், பீச் ஓரமாய் உனக்கொரு சிலையும் கிடைக்கும்….” என்று வாக்குருதிகளை அள்ளி தெளித்தால், ஏற்கனவே அச்சம், நாணம், மடம், பயிற்ப்பு என்று இருக்கும் இந்த அற்ப பெண்ணுக்கு நம் யுத்திகள் புரியவா போகிறது…..அது பாட்டிற்கு அடிமையாய் இருப்பதில் ஆனந்தம் காணும். இவளை போல இன்னும் பல அடிமைகளை சேர்த்து வைத்து மரபணுக்களை மடமடவென்று பரப்பிக்கொண்டால், மரபணு போட்டியில் இந்த ஆணுக்கு தானே வெற்றி.....
ஆனால் இதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது. பவரே இல்லாத சூழ்நிலையிலும் தனக்கென்று ஒரு பவரை உருவாக்கிக்கொண்டாள் பெண்.