Friday, March 18, 2011

டெஸ்டோஸ்டீரான் ததும்பும் ஆண்

மனித பெண் உடல் ரோமங்களை இழந்ததில் சுகம் அதிகம் உணர ஆரம்பித்தாலும், இதுலும் ஒரு அசவுகரியம் இருந்தது. குரங்கு பாணீயில் உடல் முழுக்க ரோமம் இருந்த போது, குட்டி அம்மாவை பற்றிக்கொள்ள இது ரொம்பவே சவுகரியமாய் இருந்தது. இன்றும் குரங்குகுட்டிகள் அம்மாவின் வயிற்றை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், அம்மா மரத்திற்கு மரம் தாவினாலும் விழுந்துவிடாமல் பத்திரமாகவே இருக்கும். ஆனால் மனித பெண்ணுக்கு உடல் ரோமம் நீங்கியதால், அவள் குட்டியின் பாடு திண்டாட்டம் ஆகிபோனது. இதனால் அங்கே இங்கே தாவும் வேலையை எல்லாம் நிறுத்திக்கொண்டு, குழந்தை சுயமாய் நடக்கும் வரை அம்மா அதன் பக்கத்திலேயே இருந்து பராமறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


இப்படி பெண்கள் எல்லாம் பிள்ளை பராமறிப்புக்கு முதலிடம் கொடுத்து, ஒரே இடமாய் இருக்க ஆரம்பிக்க ஆண்களின் நிலை இதற்கு நேர்மாறாய் இருந்தது. அவனுடைய கைகளுக்கு புதிய நுனுக்கங்கள் சாதியமாகிவிட, இந்த கைகளை வைத்துக்கொண்டு அவனால் சும்மாவே இருக்க முடியவில்லை. அதனால் கை வேலைபாடுகள் பலவற்றை செய்ய ஆரம்பித்தான்…….சிப்பிகளையும் கற்களையும் தேய்த்து ஆயுதங்களை உருவாக்கினான். இந்த ஆயுதங்கள் சின்ன சின்ன வேட்டைகளுக்கு உகந்ததாய் அமைந்துவிட, வேட்டை மனித ஆணின் இஷ்ட பொழுதுபோக்காய் மாற ஆரம்பித்தது.

குரங்காய் இருந்தவரை மனிதர்கள் அவ்வளவாக வேட்டையாடி இருக்கவில்லை. ஆனால் மனிதர்களாய் மாற ஆரம்பித்தபோதோ, பெரிதாகிக்கொண்டே இருந்த அவர்களது மூளைக்கு கூடுதல் போஷாக்கு தேவைபட்டது. அப்போதென்று பார்த்து உலகெங்கும் The Great Ice Age என்று சொல்லப்படும் கொடும்பனிக்காலம் பரவிவிட, தாவரங்கள் எல்லாம் பனியில் பட்டுப்போயின. தாவிரபட்ஷிணியாய் வாழ்வது சிரமமான காரியமானது. அதனால் மனிதர்களில் ஒரு பிரிவினர் மட்டும், மாமிச பட்சினிகளாய் மாறினார்கள்.

காய்கனிகளை போல மாமிசம் மரத்தின் காத்துக்கொண்டிருக்காதே, அவற்றை வேட்டையாடி கொண்டு வரவேண்டுமே. கொடும்பனிகாலத்தின் குளிர், பெரிதாகிக்கொண்டிருந்த மனித மூளையின் எரிபொருள் தேவை, கொஞ்சமாய் சாப்பிட்டாலும் நெடுநேரத்திற்கு சக்தி கொடுக்கும் மாமிச புரதத்தின் fuel economics…….இவை எல்லாமாய் சேர்ந்து மாமிசத்தின் மவுசை அதிகரித்திருக்க, இந்த காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப மனித பெண்களும் தங்கள் துணை தேர்வு விதிகளை வளைந்து உருமாற்றினார்கள். அதுவரை ஆணின் துணையை வெறும் சுகத்திற்காக மட்டுமே நாடிய பெண்கள் வரலாற்றின் முதல் முறையாக உணவிற்க்காக ஆண்களை அண்டி பிழைக்க ஆரம்பித்தார்கள். இதனால் அதிக உணவை (மாமிசத்தை) வேட்டையாட தெரிந்தவனையே பெண்கள் எல்லோரும் பெரிதாய் விரும்பி உறவாட முயல,”வேட்டுவ வீரியம்” ஆணின் கலவியல் வெற்றியலை நிர்நியிக்க ஆரம்பித்தது.

இன்றும் அந்தமானில் வாழும் ஜாரவா பழங்குடியினரிடையே இந்த மரபு நடைமுறையில் இருக்கிறது. ஜாரவா பெண்களை மணக்க விரும்பும் ஆண், தானே போய் வேட்டையாடிய கறியை தன் கையாலேயே பக்குவமாய் சமைத்து, பெண்ணுக்கு கொடுப்பானாம். அவன் கொண்டுவந்த கறி பிடித்திருந்தால் தான் பெண் அவனை தேர்ந்தெடுத்து, கூடிவாழ்வாளாம்.

ஆனால் வேட்டை என்பது சாதாரண காரியம் இல்லையே. வெகு தூரம் நடந்து, தன்னை விட பெரிய வலிய மிருகங்களை கொன்று, அதன் கறியை சுமந்து, காடு மேடு, மலைகளை கடந்து குகைக்கு திரும்ப வேண்டுமே……..இவ்வளவு கடுமையான உழைப்பை செய்ய வேண்டுமானால் அவனுக்கு ஒலிம்பிக்ஸ் வீரனை மாதிரியான கட்டுமஸ்தானான உடல் தேவை படுமே. இன்றைய ஒலிம்பிக்ஸ் வீரர்கள் நெஸாய் ஹார்மோன் ஊசிகளை போட்டு, உடம்பை செயற்க்கையாக உப்பி புடைக்க வைத்து, வீரியத்தை கூட்டிக்கொள்கிறார்கள். அந்த காலத்தில் இந்த தில்லு முல்லுக்கெல்லாம் வழியே இல்லையே…..நேர்மையாய், இயற்க்கைமுறைபடி, அவனவன் உடம்பில் இவனே அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலை பெரிதாக்கிக்கொண்டாலே ஒழிய வேட்டையில் அவன் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்த தேவைக்கு ஈடு கொடுத்து, மனித ஆணின் மரபணுக்கள் மருவிக்கொண்டே இருக்க, அவன் உடல் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஆணின ஹார்மோனை அதிகமாய் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

இந்த டெஸ்டோஸ்டீரோன் இருக்கிறதே, அது ரொம்பவே ஸ்வாரசியமான ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் ஆண்மைக்கே காரணம். சொன்னால் ஆட்சரியப்படுவீர்கள்: ஜனிக்கும் போது, எல்லா கருக்களுமே பெண்ணாய் தான் உருவாகின்றன. இன்றும் மனித கருக்கள் அனைத்துமே ஆரம்ப காலத்தின் பெண் வடிவாய் தான் இருக்கின்றன. ஆறு வாரம் இப்படி பெண்ணாய் கருவரை வாசம் செய்த பிறகு தான், Y குரோமோசோம் இருக்கும் கருக்கள், டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த டெஸ்டோஸ்டீரோன் அந்த கருவின் உடல் முழுக்க பரவி, ஏற்கனவே பெண்ணாய் இருக்கும் இந்த கருவை, வேறில் இருந்து நுனி வரை, rewiring செய்து ஆண்மை படுத்திவிடுகிறது. இப்படி masculinize செய்யபடுவதால் தான் ஆண் உருப்புக்கள், ஆண்மைத்தனமான உடல் அமைப்பு, ஆண் என்கிற பாலியல் அடையாளம் எல்லாம் ஏறபடுகின்றன.

இப்பேற்பட்ட மகிமைகள் வாய்ந்த இந்த டெஸ்டோஸ்டீரோனை தான் ஆதிகால ஆண்களின் உடல்கள் மிகவும் அதிகமாய் சுரக்க ஆரம்பித்தன. இதனால் மனித ஆண் மனித பெண்ணை விட மிக உயரமாய், வலிமையாய், தேக உறுதி கொண்டவனாய் மாற ஆரம்பித்தான்.

இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான் ததும்பும் ஆணை தேர்ந்தெடுத்தால் தான் தனக்கு தன் குட்டிகளுக்கும், உணவு, பாதுகாப்பு, எல்லாம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், அதிக டெஸ்டோஸ்டீரோன் இருக்கும் ஆணோடு கூடினால் தானே அதற்குண்டான மரபணுக்களை இவள் குழந்தைகள் பெற முடியும்……….அப்போது தானே அடுத்த தலைமுறையும் சுபிட்சமாய் வாழ முடியும்.

ஆக தன் உணவு என்கிற அண்மைகால அனுகூலத்தை விட, அடுத்த தலைமுறைக்கான மரபணு தேர்வு என்கிற தொலைநோக்கு அனுகூலமும் இதில் ஒளிந்திருந்ததால் பெண்கள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் ஆண்களாய் பார்த்து தேர்ந்தெடுத்து உறவு கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் ஆண்களுக்குள் ஒரு டெஸ்டோச்டீரோன் போட்டி தலையெடுக்க ஆரம்பித்தது……… ஆனால் துரதுஷ்டவசமாய் இதற்கு சில பக்க விளைவுகள் ஏற்பட, அதனால் மனித வரலாற்றில் பல புது திருப்பங்கள் உருவாயின.