Monday, November 3, 2008

ஆடவர் குணங்கள்

அடக்கி வாசித்து ஒளிவு மறைவாய் செயல்படுவது தான் ஆண்களை ஹேண்டில் செய்யும் முதல் அஸ்திரம் என்றெல்லாம் போன சிநேகிதியில் பார்த்தோமே... இத்தனை நாட்களில் நீங்கள் எத்தனை ரகசியங்களைக் காப்பாற்றினீர்கள்? எவ்வளவு ஒளிவு மறைவு சாதியப்பட்டது உங்களுக்கு? குறைந்த பட்சம் 35 சதவிகிதம் முடிந்தது என்றால் நீங்கள் பாஸ், அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள யூ ஆர் ரெடி. இல்லை என்றால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து உங்கள் ஓட்டை வாயை அடக்கிப் பாருங்கள். வெற்றிகரமாய் அடக்கிவிட்டீர்கள் என்றால், நீங்களும் அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள ரெடி.

அடுத்த அஸ்திரம் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா? தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது. இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, ``சீ, இவன் தேறமாட்டான்'' என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இரண்டாம் பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம். அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள். இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று, வழிக்குக் கொண்டு வருகிறேன், என்று பெண்கள் ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

அதை விட்டுவிட்டு, குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், நேரம் வீணாவதோடு, அரை ஆணை முழு ஆண் ஆக்குவதுதான் ஆட்டமே என்றான பிறகு, ஆண் ஏன் அரையாக இருக்கிறான் என்று எடுத்த எடுப்பிலேயே விதண்டாவாதம் பேசினால், இந்த ஆட்டத்தில் எப்படி முன்னேறுவதாம்?

ஆக, ஆண்களை ஹேண்டில் செய்ய வேண்டுமா, நீங்கள் கற்றுப் பழக வேண்டிய அடுத்த பாடம், அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் முக்கியமான மேட்டரே, இந்த அப்படியே ஏற்றுஃபிகேஷன்தான். இது தான் உங்களுக்கான இந்த ஹோம் ஒர்க். உங்களைச் சுற்றியுள்ள உருப்பட்ட, உருப்படாத, ஆண்களைக் கண்டு மன சஞ்சலப்படாமல், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையைப் பழக்கிக் கொள்ள முயலுங்களேன்.

இதில் நீங்கள் தேர்ந்து விட்டீர்கள் என்றால், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த பாடத்தைக் கற்றுக் கொள்ள நீங்கள் ரெடி!

17 comments:

வால்பையன் said...

இந்த பகுதியில டிப்ஸ் முழுக்க முழுக்க ஆண்களுக்கு தான் இருக்கு

Dr N Shalini said...

அப்படியா?!

வால்பையன் said...

ஆடவர்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது
மறைமுகமாக ஆடவர்களுக்கு கொடுக்கும் டிப்ஸ் தானே!

நன்றி அனைத்து பயனுள்ள தகவல்களுக்கும்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பேராண்மை மிக்க ஆண்கள் பெண்களின் அனுக்கத்திற்குக் கிடைப்பதில்லை என்பது சரியான கருத்துதானா?

பேராண்மை மிக்க ஆண்கள் அனைவரும் விவேகானந்தராகவோ,பெரியாராகவோதான் இருக்க முடியும் என்பது ஒரு மூடிய சிந்தனையாகத் தோன்றவில்லையா?

அவர்கள் வெளித்தெரியாமல் போகிறார்கள் என்பதாலேயே இவ்வகை கல்யாணகுண ஆண்கள் இல்லை என்பது அர்த்தமில்லையே!வேண்டுமானால் அவர்களின் விகிதாசாரம் குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அதற்கும் பிள்ளைகளின் வளர்ப்பின் மூலம்,பெண்களே ஒரு வகையில் காரணம் என்பதுதான் வாழ்வின் விநோதம்.ஆண் என்னதான் நேரம் ஒதுக்கினாலும் பரினாம இனக் கவர்ச்சி விதிகளின் படி ஆண்குழந்தைகள் பெருமளவு தாயின் கவன ஈர்ப்பிலேயே வளர விரும்புகிறார்கள் என எண்ணுகிறேன்.

என் தாயும் கூட சிறுவயதில் என்னைத் கண்டிக்க நேர்ந்தால்,"உன் பெண்டாட்டி வந்து,பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறாள் பார் இது போல்,என என்னைத்தான் நோவாள்,எனவே இது போல செய்யாதே,என...

எனவே நல்ல கணவர்கள் உருவாவது நல்ல தாய்களாலேயே சாத்தியம் என நினைக்கிறேன்.

Note:Please remove word verificaiton in commment moderation settings

Anonymous said...

உங்களுடைய கருத்து நடுநிலையாக இல்லை. ஒருதலைப்பட்சமாக கருத்து கூறுவது டாக்டருக்கு அழகல்ல.

வேலன். said...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்....கணவன் அமைவது..? மீண்டும் ஒரு முறை கட்டுரையை படித்து பெருமூச்சு விட வேண்டியது தான்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Cable சங்கர் said...

உங்கள் கருத்துகளை நான் வரவேற்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை இந்த பதிவுக்கு வந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
http://cablesankar.blogspot.com/2008/12/1.html

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நிறையா எழுதுங்கம்மா........



எங்களுக்கு கதை கேட்கறது ரொம்ப பிடிக்கும்

சாணக்கியன் said...

என்னங்க ‘அரை ஆண்’, ‘குறை ஆண்’ அப்படின்னு அநியாயத்துக்கு மட்டம் தட்டறீங்க? :-) பெண்கள் எல்லாரும் நிறையோடதான் இருக்காங்களா? சரி,பெண்களுக்கான தொடர்னு அப்படி எழுதறீங்க போல...

Anonymous said...

Hello Dr Shalini, Ive heard lots about you and seen you in some TV programs. I really like your writing and this is my first visit to your blog.

This may be slightly off-topic, but just to let you know certain things. You have quoted a few people as ideal 'men' in history. Like every others, our Prophet Muhammed (peace be upon him) is missing in the list.

Just have a look at this to know about our Prophet's treatment of his wives:

http://www.rasoulallah.net/subject_en.asp?hit=1&lang=ar&parent_id=5&sub_id=240


Islam places a lot of importance on the institution of marriage and has taught us how it is important to keep our spouses happy. Just to let you know of Islam, Dr. Nothing more.

Your sister in humanity.

Dr N Shalini said...

you are right, Prophet Mohammed was also a wonderful alpha male, who treated women with utmost chivalry. I'm sorry about the omission. Pls rest assured that I'll mention this in future articles.

Anonymous said...

ஐயோ ஐயோ! நல்ல காமெடி போங்க!

குறை ஆண்களை குறை பெண்கள் ஏற்று வழி நடத்துவது என்பது . . . is only like blind leading the blind.

at least in ஆண்கள், there have been some நிறை ஆண்கள் – உதாரண புருஷர்கள்.

(and no, these few did NOT necessarily owe their greatness to women. பெண்களே இல்லாது போயிருந்தாலும் அவர்கள் மேலான நிலையை அடைந்திருப்பார்கள். your assertion that they have become உதாரண புருஷர்கள் only due to the effect of women is an attempt at borrowing from their greatness.)

மேலும், பெண்களில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு உதாரண ஆதர்ஷங்கள், இது போல, மத்தவன எப்புடி மடக்குறது, ஆம்பளைய எப்புடி வழிக்கு கொண்டு வர்றதுன்னு கணக்கு போட்டுக்கிட்டிருக்கல.

பெண்கள், இது போல, ஆண்களை எப்படி handle செய்வது என்றெல்லாம் யோசிப்பதில் நேரத்தை செலவிடாமல் தங்களை முன்னேற்றிக்கொள்ள மட்டும் எத்தனித்தால், தேவையற்ற games மற்றும் politics எல்லாம் இல்லாமல் போகும்; ஆண்களும் தங்கள் வேலையைப் பார்ப்பார்கள்; எல்லாருமே சீக்கிரத்தில் உருப்புடலாம்.

ஒரு மனநல மருத்துவரே இப்படியெல்லாம் ஒருதலைப் பட்சமாகவும் தவறாக திசை திருப்பும் விதமாகவும் எழுதுவது வருத்தத்தை அளிக்கிறது. நீங்க காட்டும் வழி இருபாலருக்கு இடையில் சதுரங்க விளையாட்டைத் தான் பெருக்குமே தவிர இணக்கத்தையோ புரிதலையோ உண்டு பண்ணாது.

உள்ளூர, இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

-அ.சாதாரணபுருஷன்.

வால்பையன் said...

நண்பர் சாதாரண புருஷனுக்கு!

இவுங்க உளவியல், உடலியல் ரீதியான பாடம் நடத்திகிடு இருக்காங்க!

நீங்க சொல்ற சமூகவியல் இல்ல!

நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அதை நடத்தினால் நாங்களும் படிப்போம்!

Anonymous said...

நண்பர் வால்பையனுக்கு,

சமூகம் என்பது எதுங்க? சொல்லுங்க. நீங்களும் நானும் இந்தப் பதிவ எழுதுற டாக்டரும் நாம எல்லாரும் சேர்ந்தது தானேங்க சமூகம்.

அப்புடி இருக்குறப்போ, தனி மனித உளவியலில் தவறான புரிதல்கள் ஏற்பட்டால், அது சமூகத்தையும் தானேங்க பாதிக்கும்.

கொஞ்சம் யோசிச்சீங்கன்னா, உளவியல், உடலியல், சமூகவியல், இதெல்லாமே தனித் தனி பெட்டிகளுக்குள்ள அடைபட்ட களங்கள் அல்ல; ஒன்றோடொன்று பிணைந்து கலந்த களம் தான் என்பது இயல்பில் விளங்கும். நம்முடைய புரிதலுக்காக விஞ்ஞானம் என்கின்றன ஒன்றை இயற்பியல், வேதியியல், உயிரியல் அப்புடீன்னு பிரிச்சு படிச்சுக்கிறோம், இல்லீங்களா, அதே மாதிரி தானே இதுவும். "Humanities" என்று சொல்லப்படக்கூடிய அந்தப் பொது சித்தாந்தத்துக்குள் வரக் கூடியவை தான் இவை யாவுமே.

அதனாலே, நாளை நான் சமூகவியல் பாடம் எடுக்க பதிவு துவங்குறேன்னு வைங்க. உளவியல்ல தவறான பாடங்கள் படித்து வருபவர்களை சமூகவியலுக்காகத் திரும்ப சீராக்குவது என்பது கொஞ்சம் சிக்கலான, இன்றே தவிர்க்கப்படக்கூடிய, வேலை.

கணிதம் சரியாகத் தெரியாதவன் இயற்பியலில் தடுமாறுவதைப் போல, உளவியலின் ஆதாரங்களைப் பயிலாமல், மேம்போக்காக, சமூகத்திலுள்ள மற்றவர்களை உளவியல் நோக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்க முற்படுவது (அதைத் தானே இந்தப் பதிவும் இது போன்ற வேறு சில பதிவுகளும் செய்கின்றன!) சமூகவியல் நோக்கில் ஒரு அபாயகரமான போக்கு தான் என்பதை அறவே மறுத்துவிட முனைவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதே ஆகும்.

இதைப் போன்ற போக்குகளை இப்போதே சீர்படுத்த எழும் குரல்களை அடக்குவது நாளை எங்கே கொண்டு போய் விடும் தெரியுமா? "சினிமாவால் சமுதாயம் கெட்டுதா இல்லை சமுதாயத்துல இருக்குற விஷயங்களைத் தான் சினிமால சொல்றாங்களா" என்று இன்று நாம பாக்குற பட்டிமன்றங்கள் போன்றே, நாளை, வலைப்பதிவுகளால ஆண்கள்/பெண்கள் இப்புடி நடந்துக்குறாங்களா, இல்லைன்னா, இவுங்க நடந்துக்குறதத் தான் பதிவுகளா எழுதுறாங்களான்னு ஒரு பட்டிமன்றம் போடுற அளவு இதைப் போன்ற விஷயங்கள் ஒரு பெரும் சமுதாயச் சிக்கலை உண்டு பண்ணிவிட நிறையவே வாய்ப்புண்டு.

உங்களுடைய, என்னுடைய, மற்றும் எல்லாருடைய ஒட்டுமொத்த (அதாவது பெண்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) நன்மையையும் முன்னிட்டதே எனதந்தக் கவலை (அல்லது அக்கறை) என்பது மட்டும் புரிந்தால் கூட சரி!

-அ.சாதாரணபுருஷன்.

Aishwarya Arunkumar said...

Dr, I'm amazed when u include info from Tamizh ilakanam/ literature like.. 1.தன்மை,2.நிறை,3.ஓர்ப்பு,4. கடைபிடி.. And what you have mentioned about normal man is very true. First, i got furious telling myself why are men of these kind, but then "A man is not born, he is made" made me to think. I wasted my time in correcting his imperfections and he started to correct mine. Result was we were always fighting!! Yes, as you said i can change my man only when i accept whatever he is. Very very true!! - Aishu

Unknown said...

Can I know, who is the author of this (and which book - literature)?

(i.e தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. -- அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு )

Who is the author தொல்காப்பியர் / பாரதிதாசனின் ?

Can you quote from where you took these as well...

Thanks,
Muthuveerappan

ஜிஎஸ்ஆர் said...

எவ்வளவு பெரிய குழப்பமான விஷயங்களை எல்லாம் குழந்தைக்கு கதை சொல்ற மாதிரி அழகா சொல்ல முடியுது!

தங்களின் இந்த கட்டுரையை படிக்கும் போது தான் நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை சிந்திக்க வைத்து விட்டீர்கள்...