என்ன ஸ்நேகிதியே, உணர்ச்சிவசப்படாமல், விமர்சிக்காமல், குற்றங்கண்டுபிடிக்காமல், பெண்பாலின கண்ணோட்டமில்லாமல், ஆண்களை வேடிக்கை பார்க்கும் man-watching என்கிற ஸ்வார்சியமான பொழுதுபோக்கிற்கு உங்களை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களா?
ஆல் ரைட்! இப்போது, திரும்பி, உங்கள் அருகே இருக்கும் யாராவது ஒரு x, y, z, இளைஞனை லைட்டாய் கவனியுங்கள். அது வரை தேமே என்று இருக்கும் ஆண், நீங்கள் அவனை பார்க்கிறீர்கள் என்ற உடனே, திடீரென உதவேகம் அடைகிறானா? தலையை சிலுப்பிக்கொள்வது, வாட்சை திருகுவது, அநாவசிய உடல் அசைவுகளில் ஈடுவடுவது, ஸ்டைல் செய்துக்கொள்ளுவது என்று ஏதேதோ புது மாற்றங்கள் அவனுக்குள் நிகழ்வதை கவனிக்கிறீர்களா?
தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்றதுமே லேசாய் அலர்ட் ஆவது எல்லோருக்குமே இயல்பு தான். ஆனால் பெண் அலர்ட் ஆனால், ஒன்று தன்னை தற்காத்துக்கொள்வதற்காக, தன் உடலை சிருக்கிக்கொள்ள முயல்வாள், கொஞ்சம் அலட்டல் பேர்வழி என்றால், தன் உடலை கொஞ்சம் விளம்பரப்படுத்த ஆரம்பிப்பாள். இது தான் பெண்களின் இயல்பு.
ஆனால் ஆண் அலர்ட் ஆனால், தோலை நிமிர்த்தி, முதுகை புடைத்து, புஜங்களை வெளிபடுத்தி, உடனே தன் உடலை பெரிதாக காட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான். இப்படி உடம்பால் மட்டும் இன்றி தன் குணத்தாலும் தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயல்வான். தன் தகுதிகள், திறமைகள், சாதனைகள், வெற்றிகள், தனக்கு இருக்கும் ஆள் பலம், அந்தஸ்து, தன் பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள், தன் பாரம்பரியத்தின் உயர்வுகள், தனக்கு பரிச்சையமான பெரிய மனிதர்கள், என்று எடுத்த எடுப்பிலேயே தன்னை பற்றி ஒரு பெரிய விளம்ப சுருளை விரிக்க ஆரம்பித்து விடுவான் ஆண்.
இதை எல்லாம் நான் கேட்டேனா? இவனாகவே எதற்காக இத்தனையும் சொல்லி தொலைக்கிறான் என்று உங்களுக்கு வியப்பாக கூட இருக்கும். ஆனால் நீங்கள் கேட்கிறீர்களோ, இல்லையோ, தன்னுடைய வீர தீர பரக்கிரமங்களை அவன் அடுக்கிக்கொண்டே போவான். அவனிடம் உள்ள வசதிகள், ஆடம்பரங்கள், அவனுடைய செல்வாக்கு, அவனுக்குள்ள பலங்கள் என்று தன்னை பற்றியே, கொஞ்சம் கூட கலைப்பே இல்லாமல் கிலோ கணக்கில் பேசிக்கொண்டே போவான்.
சும்மா ஒரு நாகரீகத்திற்க்காக தலையாட்டி, உம் கொட்டி வைப்போமே என்று நீங்களும், தன்னை பற்றி அப்பட்டமாய் பெருமை அடித்துக்கொள்வது அநாகரீகம் என்று உணராமல் அவனும் தொடர்ந்து இந்த உரையாடலை நீட்டிக்க, கடைசியில் யாராவது அல்லது எதுவாவது வந்து உங்களை மீட்டால் தான், அப்பாடா என்று நீங்கள் தப்பிக்கவே முடியும்.
இப்படி தன் சுய பிரதாபத்தை பாடிக்கொள்வது தான் ஆண்களின் ஒரு முக்கியமான இயல்பு. சில ஆண்கள் இதற்கு ஒரு படி மேலே போய்விடுவார்கள். தானே தன் சுயபிராதபத்தை பாடிக்கொள்வது கவுரவ குறைச்சல் என்று, இந்த புகழாரம் சூட்டும் வேலைக்கென்றே ஒரு ஆளை பக்கத்திலேயே வைத்துக்கொள்வார்கள். தன்னை பற்றி பேசிக்கொள்ள எல்லாம் பெரிய விருப்பம் இல்லாதவர் போல இவர் அமைதியாக இருக்க, கூடவே இருக்கும் இந்த ஜாலரா கோஷ்டி, “அண்ணன் ஆஹா ஓஹோ” என்று எடுத்து இயம்பும்.
ஆக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தன் புகழை மற்றவர்கள் தெரிந்துக்கொண்டே ஆக வேண்டும் என்று ஆசை படுவது தான் ஆணின் இயல்பு. இளைய வயதுக்காரர்கள், முதிர்ச்சியில் சின்னவர்கள் என்றால், தானே தன் புகழை பறைசாற்றிக்கொள்வார்கள். கொஞ்சம் நாகரீகம் தெரிந்த, வசதி வாய்ப்புக்கள் கொண்ட பெரிசு என்றால், இதற்காகவே ஆட்களை நியமித்துக்கொள்வார்கள். அந்த காலத்து அரசர்கள், அவைக்கு வரும் போது, முழம்முழமாய் அவரை போற்றி, உயர்த்தி பேசி, கடையில் “இத்தனை பெருமைகள் வாய்ந்த இந்த மன்னன், பராக், பராக், பராக்!” என்று முடிப்பார்களே, அதை போல!
அதெல்லாம் சரி, ஆண்கள் ஏன் இப்படி, இத்தனை சிரமப்பட்டு, தங்களை பெரிய மனிதர்களாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்? யாருக்காக இத்தனை அலட்டல்? இப்படி பெரியமனிதனாய் தன்னை காட்டிக்கொள்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? என்று யோசிக்கிறீர்களா? வெரி, குட், இப்போது தான் சமர்த்தான அறிவியல் மாணவி என்று நிரூபவித்து இருக்கிறீர்கள்!
ஸோ, ஆண்கள் எதற்காக, தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்? அப்போது தான் மற்றவர்கள் அவனை மதிப்பார்கள் என்று. Lack of something to feel important about is the greatest tragedy a man can have என்பார்கள் தெரியுமா? தான் எந்தவித முக்கியத்துவமுமே இல்லாதவன் என்ற எண்ணம் தான் ஒரு ஆணுக்கு இருப்பதிலேயே மிக மோசமான துக்கம். அந்த சோகநிலை தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று தான் ஆண்கள் எல்லாம், தங்களை முக்கியமானவர்களாய் காட்டிக்கொள்ள பெரிதும் போராடுகிறார்கள். சொல்ல போனால், தன் வாழ் நாள் முழுவதையுமே அநேக ஆண்கள் இந்த முக்குயத்துவ விகித்தை அதிகரிப்பதற்க்காவே செலவிடுகிறார்கள்.
இத்தனை பாடுபட்டு, இந்த முக்கியத்துவ விகித்த்தை அதிகரிக்கத்தான் வேண்டுமா? மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்று ஏன் அவனுக்கு தோன்றுகிறது? பிறர் மதித்தால் அவனுக்கு அப்படி என்ன கிடைத்து விட போகிறது என்று நீங்கள் ஏலனமாக கூட நினைக்கலாம்....ஆனால் உண்மை என்ன தெரியுமா, பிறர் அவனை மதிக்கிறார்களோ, இல்லையோ, மற்றவர்கள் தன்னை மதிப்பதாக அவன் நம்பினால் தான் அவன் உடல் ரசாயணங்கள் சரியாகவே உற்பத்தி ஆகின்றன!
ஆண்கள் ஆண் தன்மையுடன் இருக்க காரணமே டெஸ்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன் தான். இந்த ஹார்மோனின் சுரத்தல் வெளிஉலக அனுபவத்தை பெருத்தே இருக்கிறது. ஒரு ஆண் தான் முக்கியமானவன், மற்றவர்களால் போற்றப்படுகிறவன், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமானவன் என்று நினைத்துக்கொண்டாலே ஒழிய அவனுக்கு போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரப்பதில்லை.
டெஸ்டோஸ்டீரான் போதுமான அளவில் சுரக்கவில்லை என்றால் ஆணின் மனம் சோர்வாகிவிடுகிறது, வாழ்வை வெறித்து, எதிலுமே நாட்டமில்லாமல் சோம்பிக்கிடக்கிறான் ஆண். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு மாநகரின் நடைபாதையோர கால்னடையை எடுத்துக்கொள்வோமே. குறிப்பாக நாய்கள். நாய்களின் இன்பெருக்கத்தை குறைக்கும் யுத்தியாய் மாநகராட்சிக்கார்ர்கள் ஆண் நாய்களை பிடித்து போய், விரை நீக்கம் செய்துவிடுகிறார்கள். விரைகளை நீக்கிவிட்டால், இனி விந்தணுக்கள் உற்பத்தி ஆகாது, விந்தணூக்களே இல்லை என்றால், இனம் பெருகாதே!
ஆனால் விரைகள் தான் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஆண்பால் ஹார்மோனை உறப்த்தி செய்கின்றன. விரைகள் நீக்கப்பட்டால், டெஸ்டோஸ்டீரோன் சுரத்தல் நின்று போய்விடும். அதனால் என்ன என்கிறீர்களா? மும்பை சாலைகள் அனைத்திலும், இரவு, பகல் பாராமல், குண்டு குண்டாய் சுருண்டு கிடக்கும் ஆண் நாய்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்! டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி இல்லாத்தால் இந்த நாய்கள் எல்லாம் உடல் உழைப்பில் ஆர்வமே இல்லாமல், வெறூமனே தூங்கிக்கொண்டிருப்பதினால், எடை பெருத்து, சோம்பேறியாகி விட்டிருக்கின்றன! எதிலுமே எந்த நாட்டமும் இல்லாமல், அக்கடா என்று கிடக்கின்றன!
ஆக, டெஸ்டோஸ்டீரான் இல்லாத ஆண்குலத்தின் நிலை இப்படி தான் ஆகிவிடும். எந்த வித வேட்கை உணர்வுமே இல்லாமல் சும்மா இருப்பதே சுகம் என்று மனிதர்கள் ஆகிவிட்டால், அப்புறம் மனித இனம் அழிந்தேவிடுமே.
அதனால் தான் மனித ஆண் தன் டெஸ்டோஸ்டீரான் அளவை முடிந்த மட்டும் அதிகமாக்கிக்கொள்ள முயல்கிறான். முக்கியத்துவம் என்ற அளவுக்கோளை வைத்து எப்போதுமே அவன் தன்னை தானே அளந்துக்கொண்டே இருக்கிறான்.
சோம்பிக்கிடக்கும் ஆணால் யாருக்கும் எந்த பயனும் இல்லையே, வேட்கை கொண்ட ஆண்கள் இருந்தால் தானே சமுதாயம் உருப்படும். அதனால் தான் ஆணின் இந்த இயல்பே பற்றி தெரிந்த கெட்டிக்கார மனித பெண்கள் எல்லாம், தாமும் கூட சேர்ந்து அவனுக்கு தூபம் போட்டு, அவன் டெஸ்டோஸ்டீரானின் அளவை அதிகரிக்க உதவுகிறார்கள்.
அவன் தன்னை பற்றி பீற்றிக்கொள்ளும் போது, ரொம்பவும் கவனமாய் அவனை ஊக்குவிக்கிறார்கள். இவர்களும் கூட சேர்ந்து ஒத்து ஊதி, ஆமாம் ஆமாம், நீ உண்மையிலேயே ரொம்ப பெரியவன் தான் என்ற மாயையை அவன் மனதில் ஏற்படுத்துகிறார்கள். புகழ் ஒரு பெரிய போதை என்பதால் ஆண்களும் அதற்கு அடிமையாகி போகிறார்கள். புகழ்ச்சிக்காகவே தன் தன்மைகளை மாற்றிக்கொள்ளவும் முயல்கிறார்கள்! ஆக, வெறும் புகழ்ச்சி என்கிற அங்குசத்தை வைத்தே எத்தனை பெரிய வலிய ஆண்களையும் வீழ்த்தி, தன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள் பெண்கள்!
ஆக, முக்கியத்துவம், புகழ்ச்சி, ஆகியவை தான் இந்த வாரத்து ஓம்வர்க். நீங்கள் உக்குவிக்க முயலும் ஆண்களை உயர்வாக நடத்துங்கள், அவர்களை “நீ பெரியவனாக்கும்” என்று நம்பவையுங்கள். பிறகு பாருங்களேன், இந்த நம்பிக்கை சுரக்க தூண்டும் டெஸ்டோஸ்டீரானின் உபயத்தால், உண்மையிலேயே பெரிய மனிதனாய் மாறி காட்டுவான் ஆண்!
இதற்கு நேர் எதிராக, யாரவது ஒரு ஆணை பார்த்து, “சீ, நீ எல்லாம் ஒரு மனித பிறவியா? உன்னை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை போடா!” என்று அட, நீங்கள் சொல்லக்கூட வேண்டாம், லேசாக உங்கள் முகத்தை ஒரு சுழி சுழித்தாலும் போதும், அவ்வளவு தான், அவன் ஈகோ எரிமலை வெடித்து கிளம்ப, தகித்து துடித்துப்போவான் ஆண்.
ஆக, பிறரின் நன்மதிப்பு- குறிப்பாக பெண்களின் நன்மதிப்பு தான் ஆண்கள் தங்கள் முக்கியத்துவத்தை அளவிடும் மீட்டர் என்பதினால், தரமான ஆண்களை கண்டால் தாராளமாக முக்கியத்துவம் தந்து ஊக்குவியுங்கள். தரங்கெட்ட ஆண் என்றால், ஜெஸ்ட் இக்நோர் ஹிம். பிரயோகித்துப் பாருங்களேன், இந்த முக்கியத்துவமீட்டரின் மகிமை அப்போது தான் உங்களுக்கு புரியும்!
10 comments:
தரம் கெட்ட ஆண்களை தவிர்ப்பதால் டெஸ்டோஸ்டீரோன் குறைவு ஏற்பட்டு அவனுடைய சந்ததி இல்லாமல் போகும் . இப்போது இருகிண்ட தரம் கெட்ட ஆண்கள்
உருவாகவும் பெண்கள் தான் காரணமா ?
neenga enn docter eppajume uniform mathri ory dresha poddu irukenga..anthey green colour dresh or blue colour..arivali girls ennda epadi than dresh poddauma?...
//ஆனால் ஆண் அலர்ட் ஆனால், தோலை நிமிர்த்தி, முதுகை புடைத்து, புஜங்களை வெளிபடுத்தி, உடனே தன் உடலை பெரிதாக காட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான்.... தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயல்வான்.//
இருங்க ஒரு பொண்ணு லைட்டா நம்மை லுக்கு விடுது புஜத்தை காட்டி எப்படி ரியாக்சன் என்று பார்த்துவிட்டு வருகிறேன்:)
///ஆனால் ஆண் அலர்ட் ஆனால், தோலை நிமிர்த்தி, முதுகை புடைத்து, புஜங்களை வெளிபடுத்தி, உடனே தன் உடலை பெரிதாக காட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான். இப்படி உடம்பால் மட்டும் இன்றி தன் குணத்தாலும் தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயல்வான்.///
இதற்குக் காரணம் ஆணுடைய புகழாசை கிடையாது என்பது எனது கருத்து.மேற்சொன்ன செய்கைகளை எல்லாம் ஒரு ஆண் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணைப்பார்த்தோ , சிறு பள்ளிக் குழந்தையைப் பார்த்தோ செய்வதில்லை.பருவப் பெண்களைக் கண்டே செய்கிறான்.ஆக மேற்கூறபட்ட ஆணின் செயல்களுக்குப் பெண்ணாசை தான் காரணமே ஒழிய , புகழாசை அன்று.
பெண்ணாசைக்குக் காரணம் மனிதனின் ஆதிவேட்கை.ஆதிவேட்கையின் சூட்சுமம் இனப்பெருக்கம்.இனப்பெருக்கத்திற்குக் காரணம் நீட்சி( தனது இனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனும் உணர்வு ).நீட்சிக்கான காரணத்தை அறிவியல்பூர்வமாகத் தேடினாலும் அது ஆன்மீகத்தில் தான் சென்று முடியும்.
என்ன டாக்டர் சொல்றிய...
உங்கள் அறிவியல் கண்ணோட்டம் சூப்பர். ஆனால் ஒரு கொசுறு பாயிண்ட், ஆண்கள் பெண்களை பார்த்தால் மட்டும் இப்படி அலெர்ட் ஆவதில்லை. வேறெந்த ஆபத்தை பார்த்தாலும் இப்படி தான் அலெர்டாகிறார்கள்:)
அதனால் இது பேசிக் சர்வைவல் ரெஸ்பான்ஸ் தான். மற்றபடி, நீட்சிக்கும் ஆன்மீகத்திற்கும் இருக்கும் சம்பந்தம் யோசிக்க வேண்டிய விஷயம்!
"ஆண்களின் பாஷை" மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது,மனதின் தோழியே!
தவமியற்றியார் சொல்வது போல் பருவப் பெண்களைப் பார்த்து மட்டும் இல்லை; பெண் என்று ஒரு பிராகிருதியைக் கண்டால் போதும் அவர்களுக்கு.
நல்லது...மனைவிமார்கள் எல்லாம் கணவன்மார்கள விமர்சிக்காமல் , தட்டு கரண்டிகளை விட்டெறியாமல் Man Watching செய்தால் எவளவு நன்றாக இருக்கும்.. எனவே தாங்கள் இந்த டெக்னிக்கை பிரத்யேகமாக மணமான பெண்களுக்கு கற்றுக்கொடுக்குமாறு , அனைத்துலக ஆண்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
//ஆனால் ஆண் அலர்ட் ஆனால், தோலை நிமிர்த்தி, முதுகை புடைத்து, புஜங்களை வெளிபடுத்தி, உடனே தன் உடலை பெரிதாக காட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான்.... தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயல்வான்.//
அப்பிடியா?
பதிவிற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பின்னூட்டம்...
பதிவனாய் பல வருடங்களாக கோல் போட்டாலும் உங்களைப் போன்ற பல பிரபலங்கள் பதிவுகள் எழுதி வருவதைக் கூட அறியாமல்தான் இருந்திருக்கிறேன்.
நிற்க, தங்களது பதிவுகள் சமூகத்திற்கு பலனளிக்கக்கூடியது. துறை சார்ந்த நிபுணத்துவத்தால் எழுதப்பட்டவை. ஆனாலும், மிக நீண்ட பதிவுகள் அயற்சி ஊட்டக்கூடியவை. கணிணியில் வாசிப்பதில் இருக்கும் சிரமம் அது. கொஞ்சம் சிறுசாய் போட்டால் நல்ல பலன்கள் இருக்கும். - இது என் அபிப்ராயம்.
ஆண்களைப்பற்றி இவ்வளவா இருக்கா ??ஃ
ம்ம். ஒரு நாள் இருந்து முழுதாக படிக்கணும்.
தொடரிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்
Post a Comment