வீரமுள்ள ஆணை தேர்ந்தெடுத்து விட்டீர்களா, சரி அடுத்த கட்டமாய் அந்த ஆசாமியிடம் சரி பார்க்க வேண்டிய குணநலன், அவனுடைய பொறுப்புணர்ச்சி.
பொறுப்புணர்ச்சி என்ன அப்படி ஒரு முக்கியமான மேட்டரா, அது இல்லாவிட்டால் தான் என்ன, எத்தனையோ பெண்களுக்கே கூட தான் பொறுப்புணர்ச்சியே இல்லை, அதனால் என்ன? என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அர்தநாரியாக இருந்தாலும், உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் லைட்டாகயாவது பொறுப்புணர்ச்சி இருந்தால் தான் அது உயிர் வாழவே முடியும். காலையில் எழுந்து இயற்கை கடன்களை முடித்து, வயிற்றை நிரப்பிக்கொள்ள தோதான இடமாக தேடிபோய், பொறுப்பாய் மேய்து முடித்து விட்டு மாலையில் இருப்பிடம் திரும்பிவிடுவது என்று தானே ஆடு மாடுகள் கூட இயங்குகின்றன. இப்படி தன் வாழ்வாதாரத்திற்கு தானே உழைத்துக்கொள்ளும் self preservation சுயபராமறிப்பு நடவடிக்கைக்கு கூட பொறுப்புணர்ச்சி ரொம்ப அவசியம் ஆயிற்றே.
சரி, கால்நடை லாஜிகிலிருந்து மனிதர்கள் பக்கம் திரும்புவோம். பாலின வித்தியாசங்களை ஓரம்கட்டிவிட்டு பார்த்தால் மனிதர்களும் உயிரினங்கள் தான், அவர்களுக்கு சுயபராமறிப்பு நடவடிக்கைகள் பல உண்டு. இதை தவிற ஆடு மாடு மாதிரி மனிதர்கள் போய் எங்கும் நுனிபுல் மட்டும் மேய்ந்துவிட்டு வயிறு நிறப்புக்கொள்ள முடியாது. படிப்பு, அறிவு முன்னேற்றம், வேலை, தொழில், வருமானம், ரிலாக்ஸ் பண்ண நல்ல பொழுது போக்குகள், நல்ல நண்பர்கள் என்று பல விதமாய் பிழைக்கும் திறனை அதிகரித்துக்கொண்டால் தான் வயிறும், மனசும் நிறையும். இந்த எல்லா நடவடிக்கையிலும் ஈடுபட எக்கசெக்க பொறுப்புணர்ச்சி வேண்டுமே. இப்படி பொதுவாகவே மனிதர்கள், எப்பாலாக இருந்தாலும் பொறுப்பால் மட்டும் தான் சொல்லிக்கொள்கிற அளவிற்காவது தங்களை முன்னேற்றிக்கொள்ள முடியும்.
இதையும் தாண்டி சமுதாய ரீதியாக பார்த்தால், பெண்களை விட ஆண்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் இருக்கிறார்கள். அது கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு போய் விண்ணீயோகம் செய்யும் வேலையானாலும் சரி, அடைத்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையானாலும் சரி, ஊர் நிற்வாகம் ஆனாலும் சரி, பங்கு சந்தையானாலும் சரி, தேச பரிபாலனமாலும் சரி, எங்கெல்லாம் குறித்த நேரத்திற்குள் மட மடவென வேலையை முடிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த வேலையை ஆண்களே செய்கிறார்கள். ஏன் இந்த வேலைகளை பெண்கள் செய்தால் ஆகாதா? என்று குறுக்கு கேள்வி கேட்க உங்களுக்கு தோன்றினால், உங்களுக்கான கொசுறு தகவல், நிச்சயம் இந்த எல்லா குறித்த-நேரத்திற்குள்-முடிக்க-வேண்டிய time bound வேலைகளை பெண்களாலும் செய்ய முடியும் தான். ஆனால் பெண்களுக்கு குடும்பம், குட்டி, வீட்டு நிற்வாகம் என்று எத்தனையோ பிக்கல் பிடுங்கள்கள் இருப்பதினால் அவர்கள் நேரத்தை அவர்களாலேயே தீர்மாணிக்க முடியாது. அவசரமாய் மீட்டிங்கிற்கு கிளம்பும் போது குழந்தைக்கு வாந்தி ஜூரம் என்றால் அம்மா மீட்டிங்கை நினைப்பாளா, குழந்தையின் உடல்நிலையை கவனிப்பாளா? அப்படியே மீட்டிங் தான் முக்கியம் என்று இந்த தாய் நினைத்து காரியசிரத்தையாய் வேலைக்கு போனாலும், “இவள் எல்லாம் ஒரு தாயா, குழந்தையை விட வேலை அவளுக்கு முக்கியமாக போய் விட்டதா?” என்று தானே இருக்கும் பப்ளிக் ஒபீனியம். அப்படியே ஏதோ நிர்பந்ததினால் இந்த தாய் வேலையே முக்கியம் என்று போனாலும், அவள் மனசு அதில் லயிக்காதே. ஆக பெண், அதுவும் தாய் என்று ஆகிவிட்டால் அவளுடைய முக்கியமான சமூக பணி, அடுத்த தலைமுறையை கண்ணும் கருத்துமாக வளர்ப்பது தான். மிச்சம் மீதி இருக்கும் உதிரி சமூக வேலைகளை இதனாலே ஆண்கள் வேலை என்று அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டி உள்ளது.
மற்றபடி, பெண்கள் டெலிவரி செய்தால் கேஸ் சிலிண்டர் போக வேண்டிய இடத்திற்கு போய் தான் சேரும், சாக்கடை சுத்தம் ஆக தான் செய்யும், ஊர் நிர்வாகம் முதல் நாட்டு நிர்வாகம் வரை சகலமும் பெண்களால் செய்ய முடியும். ஆனால் இப்படி எல்லா வேலைகளையும் பெண்களே ”எங்களாலும் முடியும்” என்று இழுத்து போட்டு செய்து விட்டால், அப்புறம் ஆண்கள் என்ன தான் செய்வார்கள்? வசதியா போச்சு என்று தூக்கம், சீட்டு கட்டு, மதுவகைகள், வெட்டி அரட்டை என்று ஜாலியாக திரிவார்கள். “பொறுப்பா, அப்படினா, கிலோ எவ்வளவு?” என்று உங்களையே கேட்பார்கள்! அதனால் தான் முதிர்ந்த கலாச்சாரங்கள் அனைத்துமே, “பொறுப்போடு செயல் படுபவன் தான் ஆதர்ஸ ஆண்” என்று ஆண்களை இன்னும் இன்னும் பொறுப்பாய் செயல் பட ஊக்கு விக்கின்றன.
இதெல்லாம் பொது வாழ்விற்கு பொருந்தும் விளக்கங்கள். நம்ம மேட்டருக்கு வருவோம்….ஆண் பெண் உறவென்று வரும் போது, அதில் ஆண் பொறுப்புள்ளவனாய் இருப்பது ரொம்பவே முக்கியம். காரணம் பெண் ஒன்றும் பொழுது போக்கிற்க்காக எந்த ஆணோடும் உறவு வைத்துக்கொள்வதில்லை. உறவு முதிர்ந்ததும் திருமணம், குழந்தை, குட்டி என்று தன் இயற்பியல் பணிகளை biological dutiesசை செய்தாக வேண்டும் என்பதில் பெரும்பாலான பெண்கள் மிக தெளிவாகவே இருக்கிறார்கள். இந்த பயலாஜிகல் கடமைகளை செய்ய இவளுக்கு ஒரு பொறுப்பான துணைவன் கிடைக்காவிட்டால் இவள் பாடு ரொம்பவே திண்டாட்டமாக போய் விடுமே!
“குழந்தைக்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், கரண்ட் பில் கட்டணூம், சொந்தகாரங்க கல்யாணத்திற்கு போகனும்…” என்று குடும்ப தலைவனுக்கு என்று எத்தனையோ பொறுப்புகள் உண்டே. இந்த வேலைகளை எல்லாம் மறந்து விட்டு, டீவி, ஃபோன் அரட்டை, இண்டர்நெட் அழகிகள், கழிப்பறை தவம் என்று நேரத்தை அநியாயத்திற்கு விரயம் செய்துவிட்டு, “இப்ப செய்யபோறீங்களா இல்லையா?” என்று மனைவி, கடைசி அஸ்திரமாய், வேலை நிறுத்தம் செய்து, அம்மா வீட்டுக்கு போறேன் என்று வெளி நடப்பு செய்யும் அந்த தருணத்தில், “சும்ம நை நைங்காதே, செய்துக்கிட்டு தானே இருக்கேன்” என்று கடைசி நேர கர்ம வீர்ராய், ஏதாவது ஒப்பேற்றிவிட்டு, தன் குட்டு வெளியே தெரியாமல் இருக்க, அதே ஓவர் பந்தா, உதார், மிரட்டல், உருட்டல் என்று திமிரும் ஆணுக்கு வாழ்கைபடுபவளின் கதியை யோசித்துபாருங்களேன். என் துணைவு, என் குழந்தைகள், என் குடும்பம், என் சமூகம், என் கடமை, என்கிற பொறுப்பே இல்லாத உதவாக்கரை ஆணோடு இனைந்துவிட்டால் ஆண் செய்ய வேண்டிய வேலை, பெண் செய்ய வேண்டிய வேலை என்று இரண்டு சுமைகளையுமே இந்த ஒருத்தி மட்டுமே தனியே சுமக்க நேரிடுமே.
இதுவும் போக ஆண் பெண் உறவில் நிறைய கொடுக்கல் வாங்கள் உண்டு. பொருளாக இல்லாவிட்டாலும், நேரம், உணர்ச்சி, பாசம், அன்பு, அக்கறை என்று பல உசத்தியான விஷயங்களை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள். தன் வீடு, தன் குடும்பம், தான் பழக்கபட்ட உணவு, உடை, வசதிகள் என்று எத்தனையோ எத்தனை விஷயங்களை விட்டு கொடுத்து தான் பெண் தன் துணைவனின் வீட்டிற்கு குடி பெயர்கிறாள். இப்படி தன் சுயத்தையே விட்டு கொடுத்து, தன் ஒருவனை நம்பி மட்டுமே ஒரு பெண் வருகிறாள் என்றால் அவளை அந்த ஆண் எவ்வளவு பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும்? இவனை நம்பி இவள் பிள்ளைகள் வேறு பெற்றுக்கொண்டு விட்டால், அவன் தகப்பனாய் தன் பிள்ளைகளை அவயத்தில் முந்தியிருக்க எவ்வளவோ பாடுபட்டு உழைத்தாக வேண்டுமே? அதற்கு எவ்வளவு பொறுப்பாய் இவன் செயல் பட்டாக வேண்டும்! இந்த அளவுக்கான பொறூப்புணர்ச்சி எல்லாம் திடுதிப்பென்று ஒரு நாளில் ஏற்படாதே. அவன் இயல்பிலேயே பொறுப்பானவனாய் இருந்தால் மட்டும் தானே இது சாத்தியம்?
இந்த வம்பே வரக்கூடாதென்றால் ஆரம்பத்திலேயே உங்களுக்கு பெட்டிஷன் போடும் ஆண் பொறுப்பாக இருக்கிறானா என்று கவனியுங்கள். இதை போய் எப்படி கண்டுபிடிப்பது என்கிறீர்களா? சிம்பிள்!
1. காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு எக்சர்சைஸ் செய்வேன், வாக்கிங் போவேன், பேப்பர் படிப்பேன், செய்தி கேட்பேன், அப்புறம் கிளம்பி வேலைக்கு போவேன்….என்பது மாதிரியான ரொடீன்கள் ஏதாவது வைத்திருக்கிறானா என்று பாருங்கள். அதெல்லாம் எதுவுமே இல்லை. சோம்பிகிடந்து விட்டு, இஷடப்பட்ட நேரத்தில் எழுந்து, எந்தவித குறிக்கோளுமே இல்லாமல் சுற்றி வந்துவிட்டு, கோயில் காளை மாதிரி அவன் வெட்டியாக பொழுதை போக்கினால், ஊகூம், பையன் தேரமாட்டான்!
2. வேலையில் அவன் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று கவனியுங்கள். இன்று இதை இதை எல்லாம் செய்ய போகிறேன், என் வேலையில் எனக்கு இத்தனை ஸ்வாரசியம் என்றூ இருப்பவன் என்றால் ஓகே. சும்மா பெயருக்காக வேலைக்கு போய் விட்டு, அரட்டை, ஊர் நியாயம், வெட்டி பேச்சு என்று வெறூமனே பெஞ்சை தேய்த்துவிட்டு வரும் கேஸ் என்றால் சீ, சீ, நாட் ஓகே. இதையும் தாண்டி சில ஒட்டுண்ணிகள் இருக்கும், ரொம்ப சாமர்த்தியமாய் பேசி, எந்த வேலையும் செய்யாமல் மற்றவர்களை டபாய்த்தே உயிர் வாழும் இந்த மாதிரி அட்டைரக ஆசாமியாக இருந்தால், வேடிக்கையாக பேசி சிரிக்கவேண்டுமானால் அவன் லாயக்கி. ஆனால் இந்த மாதிரி மற்றவரை ஏமாற்றி பிழைக்கும் manipulative மனிதர்களோடு காலம் முழுக்க சேர்ந்து வாழ்வது என்பது முடியாத காரியமாயிற்றே.
3. வேலையில் accountableலாக, பிறர் கேள்வியே கேட்காவிட்டாலும், நியாயமான முறையில் நடந்துக்கொள்கிறானா என்று பாருங்கள். சிலர் யாரும் பார்க்காவிட்டால் ஓ பி அடித்து விட்டு, கண்காணிக்க ஆள் இருந்தால் மட்டும் யோசிய சிகாமணிகள் மாதிரி வேலையில் மும்முரம் காட்டுவாரகள். இந்த மாதிரி பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஆசாமி எப்படி குடும்பத்திற்கு ஒத்து வருவான்? எப்போதுமே, “நீ செய்கிறாயா இல்லையா என்று நான் கண்காணித்துக்கொண்டே இருப்பேன்?” என்று மனைவியால் இருக்க முடியாதே. அதனால் யார் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், தன் வேலையில் நியாயமாக நடந்து கொள்கிற பொறுப்புள்ள ஆசாமி தானா என்று கவனியுங்கள்.
4. புற வாழ்க்கை போக அக வாழ்விலும் ஒரு ஆண் பொறுப்பாய் இருக்க வேண்டுமே. பிறந்த நாள், திருமண நாள், மாதிரியான முக்கியமான தேதிகள், இத்தனை மணிக்கு ஃபொன் செய்வேன், வந்து விடுவேன், அழைத்து போவேன் என்று கொடுக்கும் வார்த்தைகள், இவற்றில் எல்லாம் குட் பாயாக நடந்துக்கொள்கிறானா என்று கவனியுங்கள். நியாயமான காரணத்தினால் மறந்துவிட்டான், தாமதமாகி விட்டது என்றால் பரவாயில்லை, ஆனால் இதை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியே இல்லாத ஞானசூனியம் என்றால் கதையே கந்தலாகி விடுமே!
5. தன் குடும்பம், இதை தானே பராமறிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இருக்கிறதா என்றும் கவனியுங்கள். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால் நான் தான் இன்று காலை சமைத்தேன் அல்லது உணவை வெளியில் இருந்து வாங்கி வந்தேன், என்று சொல்பவன் ரொம்பவே குட் பாய். இப்படி பட்ட பையன் தான் நாளை மனைவி குழந்தைகளின் நலனிலும் அக்கறையாக இருப்பான். அதை விட்டு விட்டு, “யார் எக்கேடு கெட்டாலும், எனக்கு செய்ய வேண்டியவதை முதலில் செய்துவிட்டு போங்கள்” என்று இடம், பொருள், ஏவல் புரியாமல் தன்னை பற்றி மட்டுமே கவலைபடும் சுயநல கேஸ் என்றால், ஊகூம், நாட் அட் ஆல் ஓகே.
6. இதையும் தாண்டி பொது விஷயங்களில் அவன் எவ்வளவு பொறுப்புள்ளவனாக இருக்கிறான் என்றும் கவனியுங்கள். தெரு முனை கிடைத்தால் சிறு நீரடித்து அபிஷேகம் செய்வது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, தான் பயன் படுத்திய பிளாஸ்டிக், பேப்பர், ரப்பர் மாதிரியான மக்கா குப்பைகளை அப்படியே போட்டுவிட்டு போவது, தண்ணீர் குழாய், திறந்த கதவுகள், லைட், ஃபேன் மாதிரியான உபகரணங்களை உபயோதித்து முடித்ததும், அதை நிறுத்தவோ, மூடவோ நினைக்காமல் அப்படியே விட்டு விட்டு போவது. ஈர துண்டு, திறந்த குப்பிகள், பேனா, கத்தி, என்று எடுத்த பொருளை தன் உரிய இடத்தில் வைக்காமல் அப்படியே போவது, ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தேர்தலின் போதும் ஓட்டு சாவடி பக்கம் போகாமல் தொலைகாட்சி முன்னால் ஸ்தம்பித்து கிடப்பது….என்பது மாதிரியான சமூக பொறூப்புணர்ச்சியற்ற தன்மைகளை வெளிபடுத்தும் ஆணாக இருந்தால், அவன் திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஏறக்கட்டுங்கள் அவனை. சமூக அக்கறையற்ற இவனை மாதிரி அக்றிணையோடு கூடுவதை விட நீங்கள் கன்னியாஸ்திரியாகவே போய்விடலாம்.
ஆக தான், என்கிற சுயம், தன்னுடைய வேலை, குடும்பம், உற்றார் உறவினர் என்கிற அகம், தன் ஊர், உலகம், தன் சுற்றுசூழல் என்கிற புறம் என்கிற இந்த மூன்று உலகிலும் அவன் பொறுப்பானவனாக இருந்தால் ஓகே, அவனோடு உறவு கொள்வதில் அர்த்தமுள்ளது. இந்த மூன்று உலகில் எதுலுமே பொறுப்பில்லாமல் சுற்றும் கேஸ் என்றால் அவன் குடும்ப/சமூக வாழ்விற்கு ஏற்றவனே இல்லை என்பதால் அவனை அப்படியே விட்டு விடுவது பெட்டர்.
இதற்கு நேர்மாறாக சில ஆண்கள் இருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பே, எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராக விரும்பி, இப்படி செய்யாதே, இதை இதை இப்படி இப்படி தான் செய்ய வேண்டும் என்று எக்கசக்கத்துக்கு விதிமுறைகளை வைத்து, ஓவர் பொறூப்பாய் எல்லோரையும் உயிரை வாங்கும் இந்த மாதிரி அளவிற்கதிகமான ஆர்வகோளாறு கேசுகள் படுத்தும் இம்சை ரொம்பவே தாங்க முடியாதது. அதனால் பொறுப்புணர்ச்சியுள்ள ஆணாக தேடுகிறேன் பேர்வழி என்று இந்த மாதிரி திராபை கேஸுகளை தப்பித்தவறியும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள்! ரூல்ஸ் பேசியே பிராணனை வாங்கி விடுவார்கள்!
ஆக ஸ்நேகிதிகாள், உங்களுக்கு ரூட் விடும் ஆணின் பொறுப்பு உணர்ச்சி விகிதத்தை கவனியுங்கள். ஓரளவிற்கு பொறுப்பாய், இருக்கும் ஜாலி டைப் ஆசாமி என்றால் வெரி குட். பொறுப்பே இல்லாத பொடிமட்டை கேஸுகளும், ஓவர் பொறூப்பாய் உயிரை வாங்கும் சின்சியர் சிகாமணிகளும் சும்மா விளையாட்டாய் பேசி, சிரிக்க மட்டும் தான் லாயக்கி, வாழ்க்கைதுணையாய் இருக்கும் வாய்ப்பை எல்லாம் இவர்களுக்கு தரமுடியாது என்பதால், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க். உங்களை சுற்றி இருக்கும் ஆண்களின் பொறுப்பு விகிதத்தை கணக்கிடுங்கள் பார்ப்போம்.
1 comment:
உங்கள் தகவல்கள் பெண்களுக்கு உதவுகிறதோ இல்லையோ, என்னை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல உதவுகின்றன. வெகுவாகவே உதவுகின்றன.
Post a Comment