Wednesday, November 4, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 25

என்ன சிநேகிதிகளே சென்ற இதழில் சொன்னதை வைத்து நியாய தர்மங்களுக்கு கட்டுபட்டு நடக்கும் இண்டெகிரிட்டியுள்ள நல்லவனாய் தேர்ந்தெடுக்கப் பழகிக்கொண்டீர்களா?


பல பேர் நினைக்கிறார்கள், நல்லவன் என்றால், சிகரெட் பிடிக்கக்கூடாது. மதுவை தொட்டே பார்த்திருக்கக்கூடாது பெண்கள் என்றாலே தெய்வம் என்று மட்டும்ட நினைத்து கையெடுத்து கும்பிடுபவனாக இருக்க வேண்டும். படிப்பு, வேலை, வீடு, ஆபீஸ் என்று மட்டுமே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தம புருஷனை கட்டிக்கொண்டால் தான் வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு உத்தமபுத்திரனை எனக்கு தெரியும். அவனுக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது மதுவென்றால் ‘‘உவாக்’’ சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு அருவெறுப்பு. வெளிநாட்டில் வாழ்ந்ததாலும் வாழ்நாள் முழுக்க சுத்த சைவமாக இருக்கும் மஹா கொள்கை வீரன். நாள் தவறாமல் சாமி கும்பிடுவான். இதை எல்லாவற்றையும் விட பெரிய ஹைலைட், அவன் பெண்களை நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டான். அவன் எதிரில் ஒரு அப்சரஸே வந்து நின்றாலும் கொஞ்சம் கூட சலனப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் அறிவுக் களஞ்சியம். படிப்பில் இத்தனை மும்முரம் காட்டியதால் அவன் தொழிலில் வெற்றியடைந்தான். வசதியாக வாழ்ந்தான். அவன் அம்மாவுக்கு அவனை நினைத்தால் அவ்வளவு பெருமை ‘‘என் பையனைப் போல ஒரு நல்லவன் இந்த அண்ட சராசரத்திலேயே இல்லை. இவனைக்கட்டிக்க கொடுத்து வெச்சிருக்கணுமே’’ என்று எல்லோரிடமும் அலட்டிக்கொள்வார்.

கொடுத்து வைத்தாளோ இல்லையோ இந்தப் பையன் அவன் பெற்றோர் பார்த்து பார்த்து சலித்து எடுத்துக்கொடுத்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டான். திருமணத்திற்கு முன்னால் அந்த பெண்ணிடம் பேசுவது, அவளை வெளியே கூட்டிப்போவது, அப்படி இப்படி ஜொள்விட்டு ஈஷிக்கொள்வது என்பது மாதிரியான ‘‘அசிங்கங்கள்’’ எதையுமே செய்ய அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘‘எங்கம்மா என்னை அப்படி எல்லாம் வளர்க்கலையாக்கும்’’ என்று அவன் பாட்டிற்கு தன் தொழிலிலேயே மும்முரமாய் இருந்தான். திருமண நாள் அன்று வரை தன் எதிர்கால மனைவியைப் பார்க்கவோ, பேசவோ அவன் முயற்சி செய்யவே இல்லை.

திருமணமும் இனிதே நடந்தேறியது. முதல் இரவு முடிந்தது. அதன் பிறகு இரண்டாம் மூன்றாம் இரவுகளும் தாண்டிப் போயின. வாரம், மாசம், வருஷம் என்று காலம் ஓடிக்கொண்டே போனது. ஆனால் அவன் மனைவி மட்டும் கண்ணகியை விட சிறந்த கற்புக்கரசியாக இருந்தாள். கண்ணகியை கோவலனாவது தொட்டிருந்தான். ஆனால் இவளை அவள் கணவன் கூட தொட்டிருக்கவில்லை. அந்த அளவுக்கு புனிதமான ஆத்மா அவள் புருஷன்! அவன் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தால், இரண்டே மணி நேரத்தில் படித்து முடித்து விடுவானாம். ஆனால் அவன் மனைவியை மட்டும் வருடக்கணக்கில் திறக்காத புத்தகமாய் அப்படியே புதிது போலவே வைத்திருந்தான். ஏன் தெரியுமா?

அவன் அவ்வளவு நல்லவன்! ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும். அவளிடம் எப்படிப் பழக வேண்டும். அவளோடு எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பது மாதிரியான எந்தத் ‘‘தப்பு தண்டாவும்’’ செய்யத் தெரியாத அக்மார்க் கற்புக்கரசன் அவன், அட, இந்த கலிகாலத்துல இவ்வளவு நல்லவனா என்று யாரும் அவனைப் பாராட்டவே இல்லை.‘‘இப்படியும் ஒருத்தன் இருப்பானா? இவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா, இவன் மூஞ்சுக்கு கல்யாணம் ஒரு கேடா?....’’ என்று எல்லோரும் அவனைப் பரிகாசம் தான் செய்தார்கள்.

இத்தனைக்கும் அவன் ரொம்பப் படித்தவன் தான், பணக்காரன் தான்...எந்த விதமான கெட்ட பழக்கமுமே இல்லாத, சுத்த சைவமான நல்லப்பையன் தான். ஆனால் ‘‘சீ பாவம்’’ என்று அவனுக்காக இரக்கப்பட அவன் மனைவி ஒருத்தியை தவிர ஒட்டு மொத்த உலகமுமே அவனை ஒரு கோமாளியாகத்தான் பார்த்தது. யூ நோ வொய்.

‘‘எனக்கு எந்தத் தப்புமே செய்ய தெரியாது. நான் அவ்வளவு உத்தமனாக்கும்.’’ என்று இருக்கும் ஆண்களை இந்த உலகம் மதிப்பதே இல்லை... எல்லா விதமான ஜித்து வேலைகளையும் தெரிந்துக்கொண்டு, பிறகு என் தகுதிக்கு இது இது ஓக்கே. இது நாட் ஓக்கே என்று தனக்கென்று ஒரு தரத்தை தக்க வைத்து கொள்பவனையே சிறந்த ஆண் என்று நாம் அனைவரும் கருதுகிறோம்.

அதிலும் குறிப்பாக ஆண்-பெண் உறவு என்று வரும் போது, பெண்ணிடம் செக்ஸியாக நடந்துகொள்ள கூடத்தெரியாதவனை நிஜமான ஆண் என்று யாரும் மதிப்பதே இல்லை. அண்ணன்-தங்கை உறவிற்கும், காதலன்-காதலி அல்லது கணவன்-மனைவி உறவிற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசமே இது தானே. அதனால் தானே, செக்ஸே இல்லாத திருமணத்தை சட்டம் கூட ஏற்றுக்கொள்வதில்லை.

அதனால் சிநேகிதிகளே, உங்களுக்கு ரூட் விடும் ஆண் நல்லவனா என்று பார்ப்பதை விட்டு விடுங்கள். ஓவர் நல்லவன் என்று தன்னை காட்டிக்கொள்ள முயலும் ஆண்கள் அநேக சந்தர்ப்பங்களில் ‘தில்’ இல்லாத கோழைகளாக தான் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஓவர் நல்லவர்களை கட்டிக்கொண்டு இளமையையும், நேரத்தையும் வீணடிக்க முடியுமா என்ன? நூறு சதவிகிதம் தூய்மையான தங்கத்தை வைத்து எதுவுமே செய்ய முடியாது. அதற்காக டோட்டல் தகரத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்க முடியுமா என்ன?

‘‘சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. எப்படி என்ஜாய் செய்வது என்றே தெரியவில்லை. அதனால் நான் ராமனாகிப் போனேன்.’’ என்று இருக்கும் ஆண் நல்லவன் அல்ல. அவன், இயலாமையில் தவிக்கும் கையாலாகாதவன். நல்லவனை தேர்ந்தெடுக்கிறேன் பேர்வழி என்று இது மாதிரி ஒரு ஞானப்பழமாக பார்த்து தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அப்புறம் இல்வாழ்க்கையே இம்சையாகி விடும். இந்த மாதிரி too good but fit for nothing ரக ஆண்களை நண்பர்களாக தூரத்திலிருந்து பார்த்து, ‘‘அட, இப்படிக் கூட ஆம்பிளைங்க இருக்காங்களா?’’ என்று அதிசயிக்கலாம். ஆனால் குடும்பம் நடத்தவெல்லாம் முடியாது.

அதற்காக, ‘‘சந்தர்ப்பம் கிடைத்ததோ இல்லையோ, அதற்கெல்லாம் காத்திராமல் நானே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு இதே திருப்பணியாய் திரிகிறேன்’’ என்று சதா சர்வ காலமும், ‘தீனி, தம்மு, சரக்கு, ஃபிகர்’, என்றே அலையும் அற்ப கேசாக இருந்தாலும் அவனை மனிதனாக கூட மதிக்க நமக்கு மனசு வராது! அதனால சிநேகிதிகளே, ஓவர் நல்லவனாய் இருந்து உயிரை வாங்கும் வெத்து கேசுகளையும், வாழ்க்கையை வெறும் அற்ப சிற்றின்பத்திலேயே செலவிட்டு வீணடிக்கும் குப்பை கேசுகளையும் ஓரம் கட்டுங்கள்.

இந்த இரண்டு எக்ஸ்டிரீம்களுக்கு இடையில் இருக்கும். ‘‘எனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியும். மது அருந்தத் தெரியும். பெண்களை கொண்டாடத் தெரியும். ஆனால் அதே வேலையாக இருப்பதில்லை. அந்தந்த வயசுல அதை அதை பரிசோதனை செய்து பார்த்தாச்சு. இப்ப அதை எல்லாம் தாண்டி வந்துட்டேன்’’ என்று களவும், கற்று மறக்கவும் தெரிந்த ஆணாய் தேர்ந்தெடுக்க முயலுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தும் அனுபவிக்க ஆசை இருந்தும், அதை அடக்கி ஆள பழகுகிறவனே கண்ணியமான ஆண். அவனைத் தான் நிஜ ஹீரோ என்று எல்லோரும் கொண்டாடுவோம்.

இப்படிப்பட்ட நிஜ ஹீரோ ஒருவனை எப்படி கண்டு பிடிப்பதாம் என்று தானே கேட்குறீர்கள்? சிம்பிள். உங்களை முற்றுகை இடும் ஆண்களை கவனமாகப் பாருங்கள். நல்லவன், கெட்டவன் என்கிற ஒரே அளவுகோலை வைத்து அவனை எடை போடுவதை நிறுத்துங்கள். நல்லவனை வைத்துக் கொண்டு நாமென்ன சாமியார் மடமா நடத்தப் போகிறோம்? சம்சாரவாழ்விற்கு ஒத்து வருவானா மாட்டானா என்கிற கண்ணோட்டத்தோடு மட்டும் அவனை அளவிடுங்கள். ஆல் தி பெஸ்ட்!

5 comments:

Abdul Rahman said...

வணக்கம் சகோதரி!,
உங்களது எழுத்துகளை பல வருடங்களாக வாசித்து வருகின்றேன்.நல்ல நடை,உங்களது எழுத்துகள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.

kayal said...

All the best nu mudichirukeenga ? Chapters over ah?

Murali said...

You are writing this blog for girls and women’s to handle their partner in a better way....and it is well known physicist...great work ...but whatever you are writing is u r own view. If u write things which have some solid medical proof with respect to men psychology than it would be more useful.

I have one question if u take it in positive way u can give reply else u can leave it.

I hope u r proficient in handling men.....how u sleeted ur life partner and Do u thing u r life partner is 100% perfect.


Sorry if any of my comment hurts you. my intention is not to hurt anyone.

குமரன் said...

ஷாலினி,

உங்களை டிவியிலும், அதற்கும் முன்பாக சில பத்திரிக்கைகளில் கட்டுரைகளில் படித்து பழக்கம்.

உங்கள் கண்ணோட்டம், உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது. பிளாக்குக்கு எப்பொழுது வந்தீர்கள்? ஒரு பயலும் எதுவும் சொல்லலியே!

ஆனால், உங்களின் ஆண் பெண் புத்தகத்தில் ஆண் பெண் அரசியல் குறித்த குறிப்பை பார்த்து அரண்டு போனவன்.

இனி உங்கள் பிளாக்குக்கு வருவேன். என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

தனி காட்டு ராஜா said...

//அவன் அவ்வளவு நல்லவன்! ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும். அவளிடம் எப்படிப் பழக வேண்டும். அவளோடு எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பது மாதிரியான எந்தத் ‘‘தப்பு தண்டாவும்’’ செய்யத் தெரியாத அக்மார்க் கற்புக்கரசன் அவன், அட, இந்த கலிகாலத்துல இவ்வளவு நல்லவனா என்று யாரும் அவனைப் பாராட்டவே இல்லை//

என்ன தான் கற்புக்கரசனா இருந்தாலும் ...15 வயசு ஆனாவே உடம்பு ,பருவம் தன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுமே...
அப்படி "நல்லவனா " யாரும் இருக்கற மாதிரி எனக்கு தெரியல ....