ஆக அம்மாக்கள் தங்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் ஆண் குழந்தையை (சில வீடுகளில் பெண் குழந்தையையும்) அன்பெனும் அங்குசத்தை பயன்படுத்தி தனக்கு அடிமையாக்கிக்கொள்கிறார்கள். வலிமையான, புத்திசாலித்தனமான யானையை அடக்கி, பழக்கி, வெறும் ஒரு தேங்காய் மூடிக்காக கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைக்கிறார்களே, கிட்ட தட்ட அதே போல, தன் பிழைப்பிற்காக தன் மகனை பயன் படுத்திக்கொள்கிறார்கள் சில தாய்மார்கள். செய்தால் செய்துவிட்டு போகட்டுமே, அதனால் யாருக்கு என்ன நஷ்டமாம் என்கிறீர்களா?
சரி, இந்த கதையை கேளூங்கள், ஜெயம் ஒரு சராசரி இந்திய தாய். வறுமையில் பிறந்து, சதா உறவினரோடு தன்னை ஒப்பிட்டு, எப்படியாவது சாதித்து எல்லோர் மதிப்பு, மரியாதையையும் சம்பாதித்துக்கொண்டே ஆகவேண்டும் என்கிற வெறியோடு வளர்ந்தவள். டாக்டர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கொண்டு ஜம்பமாய் வாழலாம் என்பது தான் அவள் இள வயது கனவு. அவள் துரதுஷ்டம், எந்த டாக்டரும் அவளை திரும்பியும் பார்க்கவில்லை, அதனால் ஒரு ரயில்வே குமாஸ்த்தாவுக்கு அவளை மணமுடித்தார்கள். அவள் எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கை அமையவில்லை, ஏதோ ஒரு குக்கிராமத்தில் கூட்டு குடித்தன வாழ்க்கை தான் அமைந்தது. அவள் கணவனின் சொர்ப்ப மாத வருமானத்தை கவர் பிரிக்காமல் அப்படியே மாமனாரிடம் கொடுத்து விடவேண்டும், ஒரு ரூபாய் குறைந்தாலும், அப்படியே முகத்தில் விட்டெறிந்துவிட்டு கோபமாய் போய்விடுவார் மாமனார். இப்படிப்பட்ட நிலையில் இவள் எங்கிருந்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்வதாம். அதனால் தன் தனிப்பட்ட தேவைகளுக்கு தன் பெற்றோரையும், சகோதரர்களையும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாள் ஜெயம். எப்படியாவது ஒரு நாள் பெரிய பணக்காரி ஆகியே தீருவது என்கிற வைராக்கியம் இதனாலேயே அதிகரித்தது.
இவள் கவனமெல்லாம் பணம், நகை, சொத்து, வீடு, கார் என்றே இருக்க, கணவனை இவள் ஒரு சம்பாதிக்கும் யந்திரமாக நடத்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் கணவனோ சல்லாப பிரியன். மனைவியோ சதா பூஜை, விரதம் என்கிருந்த பரமபக்தை. இந்த இருவருக்கும் ரசனைகள் ஒத்து போகாததால், கணவன் தன் சக ஊழியைகளிடம் நைஸாக பேசியே தன் தேவைகளை தீர்த்துக்கொள்ள ஆரம்பிக்க, விஷயம் விபரீதமானது. வேறொரு பெண்ணோடு மனிதருக்கு காதல் ஏற்பட்டு, அவள் கர்பமாகியும் விட்டாள். விஷயம் தெரிந்த போது ஜெயத்திற்கு உலகமே திடீரென்று தலைகீழாய் புரண்டது. அதுவரை பணம் மட்டுமே பிரதானம் என்று இருந்தவள் இப்படி தடம் தவறும் கணவனை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டுமே என்கிற இக்கட்டுக்கு ஆளானாள். பெரியவர்கள் தலையிட்டு இருவரையும் அரும்பாடுபட்டு சேர்ந்து வைத்தார்கள். ஆனால் ஏற்கனவே காமத்தில் பெரிய ஈடுபாடே இல்லாமல் இருந்த ஜெயத்திற்கு அதற்கு மேல் கணவனின் மேல் நம்பிக்கையும் இல்லாமல் போக, அவர்களுடைய இல்வாழ்க்கை பிள்ளைகளை வளர்க்க மட்டுமே அதற்கு மேல் பயன்பட்டது.
கணவனை நம்பி இனி பயனே இல்லை என்று புரிந்துக்கொண்ட ஜெயம், தன் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் இரண்டு மகன்களின் மேல் குவித்தாள். டாக்டருக்கு மனைவியாகத்தான் முடியவில்லை, தாயாக ஆகியே தீருவது என்று தீவிரமாய் இருந்தாள். மகன்களிடம் தன் பரிதாபக்கதையை சொல்லி அழுது, “அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மனிஷனோட வாழுறதே உங்களுக்காக தான்….” என்று சொல்லிகாட்டியே வளர்த்ததால், பையன்கள் இருவருக்கும் அம்மாவின் மேல் அதிக பாதுகாப்பு உணர்வும், அப்பாவின் மேல் அருவெறுப்பும் ஏற்பட ஆரம்பித்தது. எப்படியாவது அம்மாவை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்று, இருவருமே வேறு எந்த சிதறலுக்குமே இடம் தராமல் படிப்பிலேயே விழுந்து கிடந்து மெடிகல் காலேஜ் சேர்ந்தார்கள். வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட, அம்மா வேலைக்கு போய் மகன்கள் இருவரையும் படிக்க வைக்க உதவினாள். ஒருவழியாக இரண்டு மகன்களுமே டாக்டர்கள் ஆனார்கள். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் ஜெயம் வேலையை விட்டாள். மகன்களின் சாம்பாத்தியம் பெருக ஆரம்பித்தது. மகன்களின் முயற்ச்சியால் அது வரை வாழ்ந்த சின்ன வீட்டை விட்டு, ஒரு ஆடம்பர பங்களாவுக்கு மாறினார்கள். அதற்குள் கணவரும் ரிடையராகிவிட, ஜெயம் முழுக்க முழுக்க தன் மகன்களின் வருமானத்தை நம்பியே வாழ வேண்டிய நிலை.
முதல் மகனுக்கு 35 வயது தாண்டிய பிறகும், “சரியான பொண்ணே அமையலைடா…” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் ஜெயம். அம்மா நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று ஆணீத்தரமாக நம்பிய மகன் # 1க்கு காலமாக ஆக லேசாய் சந்தேகம் தலை தூக்கியது. அதெப்படி இத்தனை கோடி பெண்கள் இருக்கும் இந்தியாவில் இவனுக்கு மட்டும் ஒருத்தி கிடைக்காமல் இருப்பாள்? கடைசியில் பையன் ஒரு பெண்ணை பார்த்து ரொம்பவும் பிடித்து போனதாய் சொல்ல, “அந்த பொண்ணோட அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சாம், போயும் போயும் கூத்தியாளுக்கு பிறந்தவளையா உனக்கு கட்டிவைப்பேன்?” என்று அதற்கும் ஒரு வெடி வைத்தாள் அம்மா. “இனி மேல் முடியாது, எனக்கு வயதாகிறது. இவளை கட்டி வைக்காவிட்டால், என் ஹாஸ்பிட்டலில் ஒரு விதவை நர்ஸுக்கு வாழ்க்கை தந்துவிடுவேன்” என்று மகன் மிரட்டல் விடுக்க, வேறு வழி இல்லாமல் முதல் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள் ஜெயம்.
ஆனால் மருமகளை கண்டால் அவளுக்கு என்னமோ பிடிக்கவில்லை. “மாமியார்னு ஒரு மரியாதை வேண்டாம், அதென்ன சரிசமமா சோபாவுல உட்கார்ந்துகிட்டு, தரையில உட்கார்ந்து பேசு….” என்று மருமகளையும், அவள் அம்மா அப்பாவையும் எல்லா சமயத்திலும் ஜெயம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்க, மிரண்ட போய் அந்த பெண் கணவனிடம் போய் முறையிட்டாள், மகன் சொன்னான், “எங்கம்மா எனக்கு தெய்வம். குடும்பத்துக்காக எவ்வளவோ கஷ்டபட்டு எங்களை படிக்க வெச்சவங்க, ….அவங்கள பத்தி ஏதாவது பேசினே…….இதோ இது தான் கதவு, வெளியே போயுடு”
எது நியாயம் என்று யோசிக்க கூட முடியாத கண்மூடித்தனமான அம்மாசெண்டிமெண்டில் சிக்கிக்கொண்டவனை வைத்து என்ன பேசுவது? என்னவோ இந்த உலகில் இவன் மட்டும் தான் அதிசயமான ஒரு டாக்டர் என்பது மாதிரி இவன் அர்த்த ராத்திரியில் குடை பிடித்து, அராஜகம் செய்ய, பிறந்த வீட்டிற்கு அவமானம் வரக்கூடாதே என்றூ அவன் மனைவி பொருத்துக்கொண்டே போனாள். குழந்தைகள் பிறந்தார்கள். அதன் பிறகு இவளுக்கும் கொஞ்சம் அந்தஸ்து உயர்ந்தது. இனிமேல் அவளை “வெளியே போ” என்று சொல்ல முடியாதே! தனக்கென்று ஒரு குடும்பமென்றான பிறகு முதல் மகனால் அதற்கு மேல் தன் அம்மாவுக்கு செல்வழிக்க முடியவில்லை.
முதல் மகன், தான், தன் குடும்பம் என்று திசைதிரும்பிவிட, ஜெயம் தன் இரண்டாம் மகனையே சார்ந்துவாழ ஆரம்பித்தாள். வருமானமே இல்லாத அவளுடைய எல்லா செலவுகளையும் இரண்டாவது மகனே கவனித்துக்கொள்ள, கணவனை வெறும் ஒரு காரோட்டி என்கிற லெவலுக்கு பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள் ஜெயம்.
இது இப்படி இருக்க, ஜெயம் தன் இரண்டாவது மகனுக்கும் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள். அவன் எதிரில் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி வேண்டிக்கொள்வாள், ஆனால் “அந்த பொண்ணுக்கு இது நொட்டை இது நொள்ளை” என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனாள். எப்படியும் பெற்ற தாய் தனக்கு தீங்கா செய்துவிட போகிறாள் என்கிற நம்பிக்கையில் இருந்தான் மகன். எத்தனையோ பெண்களை பார்த்து என்னனவோ ஆசைகள் தோன்றியபோதும், அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும், அப்பா மாதிரி ஆகிடகூடாது என்று அவன் தன் புலன்களை எல்லாம் அடக்கி, படிப்பு, வேலை, உழைப்பு என்றே இருந்தான். அவன் உழைப்பு வீண் போகவில்லை. வசதியான வீடு, சொகுசான கார், தேவைக்கு அதிகமாய் பணம் என்று அவன் அம்மாவின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றினான். “என் மகனை கட்டிக்க கொடுத்து வெச்சிருக்கணும்” என்றூ பெருமைபட்டுக்கொண்டாள் ஜெயம். ஆனால் அதற்குள் பையனுக்கு நாற்பது வயது தாண்டிவிட்டது. இன்னும் ஒரு நல்ல பெண்ணை அவளால் கண்டே பிடிக்க முடியவில்லை!
மகன் காத்துக்கொண்டே இருக்க, அவன் காசில் பெண் பார்க்க போகிறேன் என்று எல்லா ஊர்களுக்கும் போய்விட்டு வெறூம் கையோடு தான் திரும்பிவந்தாள் தாய். இப்போது சொல்லுங்கள்: இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்? தோற்றது யார்?
5 comments:
நம்ப முடியவில்லை...
மகன் மகள் திருமணததை, தாய் தள்ளி போடுவதை பார்த்து இருக்கோம்..
ஆன 40 வயசு அகியும் திரும்ணம் பண்ணலைனா.. தாயின் வெற்றியும் இல்லை.. மகன் வாழ்கை சந்தோஷமா இல்லைனா, பிற் காலத்தில் அதே தாய் தான் , தன்னல் தான் மகன் வாழ்க்கை கெட்டதுன்னு வருந்தனும்.
தாய் , மகன் ரொண்டு பேரும் தோத்து விதி ஜெயிச்சதுன்னு வேன்ன சொல்லலம்..
நீங்கள் எல்லா அம்மாக்களையும் ஒரே தராசில் வைப்பது ஆச்சர்யம்.தாய்மை மற்ற உறவுகள் மாதிரி தான் என்பது ஒரு அளவு மட்டுமே உண்மை. எல்லாவற்றையும் அறிவியல் கொண்டு அளப்பது சரியல்ல.
இந்த போஸ்ட்-க்கு என்ன கமெண்ட் போடுறதுன்னே தெரியலை...
Sounds exactly like my maamiyaar. Avanga storya dhaan per maathi potu irukeengannu nenaikiren. Same thing about two sons, treating her husband like a servant, ellam.
Sounds exactly like my maamiyaar. Avanga story dhaan neenga per maathi pottu irukeengalonnu nenaikiren. Same as two sons, got her elder son married late, delaying her younger sons marraige still, brainwashing her kids that her husband is the worst on earth and she did all the sacrifice to bring them up, treating her husband like a servant etc. Ippadiyum manushangalannu kevalama irukku
Post a Comment