Tuesday, September 23, 2008

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் என்று மனிதர்கள் எதை நினைக்கிறார்கள் தெரியுமா? ஆண்-பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் தரும் சந்தோஷத்தைத் தான்!

நம் இந்தியாவில் மட்டுமல்ல... உலகெங்கும் உள்ள எல்லா மனிதர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த சந்தோஷத்தைப் பற்றித்தான் எத்தனை கற்பனை, கனவு, கதை, கவிதை, சினிமா!

ஆசைப் படுகிறார்கள்... சரி... ஆனால் எத்தனை பேருக்கு அது சாத்தியம் ஆகிறது என்று பார்த்தால், மிகச் சில ஜோடிகளே தேறுவார்கள்.

கேட்கவும், கற்பனை செய்யவும், கதைகளில் படிக்கவும், சினிமாக்களில் பார்க்கவும் இலகுவாகத் தோன்றும் இந்த மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை, நிஜத்தில் அமைவது ரொம்பவே அபூர்வம்தான். காரணம், ஆரம்பத்தில் தித்திக்கும் இந்த ஆண், பெண் உறவில் போகப் போக நிறைய கசப்புணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கியக் காரணமே நம்மூர் பெண்களுக்கு ஆண்களை எப்படிக் கையாள்வது என்றே தெரிவதில்லை. காரணம் நம்மூரில் ஆண்களும் பெண்களும் சிறு வயதிலிருந்தே பேசிப் பழகி, ஒருவரை மற்றவர் எப்படி அணுகுவது என்று தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இருப்பதில்லை.

அதனாலேயே, என்னைப் போன்ற மனநல மருத்துவர்களுக்கு எல்லாம், ஆண் - பெண் உறவுகளைச் செப்பனிடுவதை எங்கள் பெரும் பணியாக ஆக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்படி எங்களை கிளினிக்கில் தனியே வந்து சந்திக்கும் பெண்களுக்கு, `ஆண்களைச் சமாளிப்பது எப்படி' என்று சிலபஸ் போட்டு கற்றுத் தந்தாலும் இதில் ஒரு சின்ன சிக்கலும் உள்ளது. இப்படி பெண்களுக்கு சொல்லித்தரப்படும் சமாச்சாரங்கள் எல்லாமே மிகவும் ரகசியமானவை. வழி வழியாக மூத்த பெண்கள் இளையவர்களுக்கு ஓதித்தரும் சீக்ரெட் அட்வைஸ்!

இந்த ரகசிய ஆலோசனையை பகிரங்கமாக இப்படி ஒரு பத்திக்கையில் எழுதுவது நிறையப் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்தான். ஆனாலும் இது கொஞ்சம் ஆபத்தான காரியம், யாராவது ஆண் இதைப் படித்து விட்டால், அப்புறம் கதை கந்தலாகிவிடுமே! நல்ல வேளையாக இது பெண்கள் பத்திரிகை என்பதாலும் குறிப்பாக இந்தப் பகுதி `யூத்'க்கானது என்பதாலும் பல ஆண்கள் இதைப் படிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஒருவேளை யாராவது ஓட்டைவாய்ப் பெண் இதைப் படித்துவிட்டு, தன் கணவன், காதலன் என்று பிரியமான ஒருவனிடம் போய் ஒப்பித்து வைத்தால் பிறகு இந்த மேஜிக் வேலை செய்யாமல் போய்விடக்கூடுமே.

அதனால் ஆரம்பத்திலேயே நமக்குள் ஒரு ஒப்பந்தம்... இந்தத் தொடர் பெண்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. இதைப் படிக்கும் நீங்கள் இதில் சொல்லப்படும் தகவலை நல்ல முறையில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம், எல்லா அட்வைஸும் இலவசம்! ஆனால் ஒரு நிபந்தனை... இதிலிருந்து ஒரு சின்ன பிட் சமாசாரத்தைக்கூட எந்த ஆணிடமும் பகிந்துகொள்ளகூடாது. மீறிப் பகிர்ந்துகொண்டீர்கள் என்றால்அதனால் ஏற்படும் எல்லா பின்விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பு... சம்மதமா?

சம்மதம் என்றால் ஓ.கே. இத்தோடு ஆண்களை ஹாண்டில் செய்யும் ரகசிய சூட்சுமங்களை ஆரம்பிக்கலாம்.

அதைப் பற்றி விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ஆண் என்றால் என்ன என்று முதலில் புரிந்து கொள்வோமா? ``ப்பூ! இதென்ன பெரிய விஷயம்... ஆண் என்பவன் பெண்ணின் எதிர்பாலினம், அவனுக்கு மீசை உண்டு, பெண்ணுக்கு அது இல்லை'' என்பது மாதிரியான சிம்பிள் சமாச்சாரங்களைத் தாண்டி கொஞ்சம் ஆழ ஆரய்ந்தோம் என்றால் ஆண் என்பவன் உண்மையில் ஒரு மாறுபட்ட பெண்தான் தெரியுமோ?

ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பமுடியவில்லையா? என்ன செய்வது... இதுதான் உண்மை! ஜனிக்கும்போது எல்லாக் கருக்களுமே பெண்ணாய்த்தான் இருக்கின்றன. முதல் ஆறு வாரத்திற்கு எல்லா மனிதர்களுமே அவரவர் தாயின் கருவில் பெண்ணாகத்தான் சுருண்டு கிடக்கிறார்கள்.

இப்படி சுருண்டுகிடக்கும் கருவின் மரபணு அதாவது குரோமோஸோம்களில் ஒன்று `ஒய்' ரகமாக இருந்தால், அந்த குரோமோசோமில் உள்ள சில ஜீன்கள் அந்தக் கருவின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஒரு ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன் அந்த கருவின் உடம்பு முழுக்க மட மடவென்று பரவி, அது வரை பெண்ணாய் இருந்த அந்த உடலை அப்படியே ஆணாய் மாற்றிவடிவமைக்கிறது.

அதனால்தான் ஆணாக பிறக்கும் குழந்தைகளுக்கும், முலைகள் இருக்கின்றன. ஆண் என்பதால் இந்த மனித பிறவியில் எப்போதுமே பால்சுரக்கப்போவதே இல்லைதானே? பிறகு எதற்கு அவர்களுக்கு அநாவசியமாக இரண்டு முலைகள் என்று யோசித்தீர்களா? பிகாஸ், இந்த ஆண்குழந்தையின் உடம்பு உருவான அந்த ஆரம்ப ஆறு வாரங்களில், அது பெண்ணாய் இருந்ததால், பெண்ணின உறுப்புக்கள் ஏற்கனவே உருவாகிவிட்டன.!

இப்படி பெண் தன்மையாக உருவான பெரும்பாலான உறுப்புக்களையும் டெஸ்டோஸ்டீரொன் படிப்படியாக ஆண்மைப்படுத்துகிறது. தோல், எலும்பு, ரத்த அணுக்கள், சதைத் திசுக்கள் என்று ஆரம்பித்து, இனப்பெருக்க உறுப்புக்கள், மூளை, மனம் ஆகியவற்றையும் இந்த டெஸ்டோஸ்டீரொன் ஆண்மைப்படுத்திவிடுவதால்தான் எட்டாவது வாரத்தில் கரு முழுமையாக ஆணாகிவிடுகிறது.

ஆக ஆரம்பத்தில் பெண்ணாக ஜனித்தாலும், டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் ஆண்மைப்படுத்தப்படும் ஜீவராசிதான் ஆண்.

இப்படியாக ஆண்-பெண் இருவருக்கும் இடையே இருக்கும் பெரும்பாலான உடல் ரீதியான வித்தியாசங்களுக்கு மூலகாரணமே இந்தடெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரே ஹார்மோன்தான். அப்ப மனம் என்கிறீர்களா?

ஆண் மனமும் ஆரம்பத்தில் பெண் வடிவாய்தான் இருக்கிறது. பெண்ணின் மூளையில் மொழிக்கென்றே நிறைய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளின் உபயத்தால் பெண்களால் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், படிக்கவும், ஏன் விவாதிக்கவும்கூட முடியும். அதுவும் போக, பெண் மூளையின் கார்பஸ் கலோசம் என்ற தண்டு ரொம்ப அடர்த்தியாய் இருக்கும். இந்த கார்பஸ் கலோசம் மூளையின் வலது, இடது பாகங்களைஅடியிலிருந்து இணைக்கும் ஒரு நரம்பு பாலம் என்பதால் இது மூளையின் ஒரு பக்கத் தகவல்களை மிக வேகமாக மறுபக்கத்திற்கு கொண்டு செலுத்த உதவுகிறது. இந்த அடர்ந்த தண்டின் பலனால் பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளை மிக லாகவமாகச் செய்ய முடியும்.

அதுவும் போக ஒருவரின் முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளை யூகிக்கவென்றே சில பகுதிகள் பெண்களின் மூளையில் உண்டு. இதனால்தான் அம்மாக்கள் மிகச் சுலபமாக, `குழந்தை பசிக்கு அழுகிறதா? பூச்சுக்கடிக்கு அழுகிறதா?' `வீட்டுக்கு வந்திருப்பவன் யோக்கியனா, ஃபிராடா' என்று வெறும் முகபாவத்தை வைத்தே யூகிக்க முடிகிறது. ஆனால் ஆண்களால் இதெல்லாம் சுலபமாக முடியாது.

காரணம் ஆறாவது வாரத்திற்குப் பிறகு கருவின் மூளைக்குப் பாயும் டெஸ்டோஸ்டீரோன் அதன் மூளையை மாற்றி வடிவமைத்து விடுகிறது. அதனால், ஆண்மயமான பிறகு, அந்த சிசுவின் மூளையின் மொழி மையங்கள், கார்பஸ் கலோசம், முகத்தைப் பார்த்து உணர்ச்சியை யூகிக்கும் மையம் ஆகியவை எல்லாம் சுருங்கிவிடுகின்றன. அதனால்தான் ஆண்களால் பெண்களைபோல கட கடவென்று பேசவோ, எழுதவோ, படிக்கவோ முடிவதில்லை. அதைப்போலவே ஒரே சமயத்தில் பல வேலைகளை அவர்களால் கையாளவும் முடிவதில்லை. இவள் என்னநினைக்கிறாள் என்று முகம் பார்த்து யூகிக்கவும் அவர்களால் முடிவதில்லை.

இந்த பாழாய்ப்போன டெஸ்டோஸ்டீரோன் ஏன் இப்படி எல்லாம் மாத்தித் தொலைச்சது! ஆண்களும் பெண்களைப் போலவே மூளை வடிவம் கொண்டிருந்தால்தான் என்ன? அதைப் போய் ஏன் சுருக்கணும்? என்று நீங்கள் ஆட்சேபிப்பது புரிகிறது. ஆனால் இந்த டெஸ்டோஸ்டீரோன் இப்படி மூளையை மாற்றி அமைத்ததற்கும் ஒரு மர்ம காரணம் இருந்ததே!

அது பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

4 comments:

Anonymous said...

why cant you publsih e books

write more

vignathkumar said...

madem me being a male i read all female magazeen specialy tamil magazeens first reason is am intrested in women democrasy.compare to other psychartist who write in tamil magazeens ur views are good.male female relation ship problume is world wide i agree. but the intensity is different how mam?even in india it self the intensity is different how come?
even in western counties too women were not allowed to wear fashion dress some periods before and now it is decrased today womens have more dress democreasy. even in china the same thing happend.
i think the periodical change ,exposure change plays important role in men ,women relationship metords.

DR said...

பயங்கரமா இருக்குது போங்க...

Aishwarya Arunkumar said...

Dr, I don't hide anything from my husband. The first task is itself very tough for me!! But i have to accept i can succeed in winning his heart and live a happy life only when i do things in the way u have mentioned. Its true!! Implemented it for 3 days, and i'm able to keep things with myself...
-Aishu