Thursday, January 15, 2009
அந்த நான்கு குணங்கள்.....
பெண்ணின் மறுபக்கம் புத்தகத்திலிருந்து....
என் கல்லூரியில் ஒரு வழக்கம் இருந்தது. யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஒரு பெரிய வாழ்த்து மடலை வாங்கி, எல்லோருமே அதில் கையெழுத்திட்டு தருவார்கள். எனக்கு அப்படி ஒரு அட்டை தரப்பட, அது ஏதோ ஒரு பரணையில் தலைமறைவாய் கிடந்து வந்தது. ஒரு நாள் வேறு எதையோ தேடி பரணைக்கு ஒரு சாப விமோட்சனம் தந்து சுத்தம் செய்யும் போது தற்செயலாய் கையில் சிக்கியது. மஞ்சலும் பழுப்புமாய் மங்கிபோயிருந்த அந்த வாழ்த்து அட்டையை எடுத்து அசட்டையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் இனிய கல்லூரிக் கிறுக்குகள் எல்லாம் கிறுக்கியிருந்ததைப் படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கிறுக்கல்களில் ஒன்றில், "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - கிலோ எவ்வளவு? பெண்ணின் பெருமையைக் கெடுக்காதே..." என்று என்னைத் திட்டித் தீர்த்திருந்தான் கையெழுத்துப்போடாத ஒரு தைரியசாலி.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
எல்லோரையும் போல நானும் பெண்களின் இந்த நான்கு உயரிய குணங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த அச்சம், நாணம், மடம், பயிற்ப்பு என்றால் என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதை தெரிந்துக்கொள்வது அவ்வளவு முக்கியம் என்று தோன்றாததால் நான் பாட்டிற்கு என் வேலைகளின் மும்முரமாய் இருந்தேன். இப்படி வேலை நிமித்தமாக தான் டாக்டர் ரெஜீனா பாப்பாவை சந்திக்க நேர்ந்தது. டாக்டர் ரெஜீனா மகளிரியல் வித்தகர். தமிழகத்தில் மகளிரியலுக்காகத் தனியாக கல்லூரிப் படிப்புகளை உருவாக்கிய முன்னோடி. சதா சர்வகாலமும் அவர் பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாம் பெண்களின் நிலை பற்றியேதான். என்னைப் பார்க்கும்போதெல்லாம், "பெண் என்ற பிரக்ஞையே இல்லாமல் இருக்கியே! பெண்ணினத்தோடு ஒன்ற மாட்டேங்கிறியே!" என்று கண்டிப்பார்.
நான் என்ன செய்வது - என் தொழில் அப்படி! வெறும் ஒரு மருத்துவருக்கே ஆண்-பெண் பேதம் கிடையாது என்கிறபோது நானோ உளநலவியல் மருத்துவர். அன்றாடம் பெண்களால் அவதிப்படும் ஆண்கள், ஆண்களால் அவதிப்படும் பெண்கள்... என்று சமுதாயத்தின் நேரெதிர் துருவங்களுக்கு ஆறுதல் அளித்து, சிகிச்சை தருவது என் வேலையான பிறகு... எனக்கென்று ஒரு பாலினப் பற்றுதல் ஏற்படுத்திக்கொள்ளும் சொகுசுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் கடந்து, என் சொந்த விருப்பு வெறுப்புகள், என் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆகியவற்றை மறந்து, பாலினமற்ற ஒருவகை பிறவியாக இயங்குவது என் தொழில் தேவையாகிவிட்டது. இதனாலேயோ என்னவோ, உண்மையிலேயே, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பா, அதெல்லாம் கிலோ எவ்வளவு? என்று கேட்கும் அளவில் தான் அடியேளுக்கு அவற்றோடு பரிச்சயம்!
எப்படியோ, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த அச்சம் நாணம் இத்யாதி இத்யாதியை பற்றி பேச நேர்ந்த்து. "இந்த அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் என்ன மேடம்?" டாக்டர் ரெஜீனாவைக் கேட்டேன்.
"உக்கும்!" என்று சலித்துக்கொண்டார் ரெஜீனா. "நால்வகைப் பெண்டிர் குணம் என்பார்கள். எல்லாப் பெண்களுக்கும் இருக்க வேண்டியதாகக் கருதப்படும் குணங்கள்."
"ஆமாமா, நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா மேடம், எனக்கு ஒண்ணு மட்டும் புரியல... அச்சம்னா பயந்தாங்கொளித்தனம், மடம்னா மடத்தனம்... ஏன் நம்ம சமுதாயம் தாய்க் குலத்துக்கிட்ட இந்த மாதிரி வெட்டி விஷயங்களை எதிர்பார்க்குது?"
"அப்படியில்ல. அச்சம்னா பயம், தயக்கம். மடம்னா மடமை, அதாவது அறியாமை. நாணம்னா வெட்கம், கூச்சம். பயிர்ப்புன்னா ஆண் தொட்டதும் மயிர்கூசிப் புல்லரிச்சுப் போறது..."
"ஓ, தொட்டால் பூ மலரும் மாதிரியா! அடடா - ரொம்ப செக்ஸியா இருக்கே!" என்று ஆச்சரியப்பட்டேன். காரணம் இந்த நால்வகைப் பெண்டிர் குணம் கலவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களாய் இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்லை.
"ஆமாமா, அந்த நால்வகைப் பெண்டிர் குணமும் முழுக்க முழுக்கப் பெண்களின் கலவியல் கவர்ச்சி, அதாவது செக்ஸ் அப்பீல் பற்றியதுதான். மிரண்ட, ஒண்ணும் தெரியாத, கூசி சிலிர்க்கிற பெண்ணைத்தான் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்ங்கிறதுனால இந்த குணங்களைத்தான் பெண்கள்கிட்ட எதிர்பார்த்தாங்க."
"ஆனா இப்படி மிரண்டு முழிச்சுக்கிட்டு இருந்தா, சொந்தமா சிந்திச்சு செயல்படுற அறிவோ ஆற்றலோ இல்லாத வடிகட்டுன பேக்குனு இல்ல அர்த்தம்! எவன் தொட்டாலும் ஊ, ஆன்னு கூசி சிணுங்குகிற தொட்டாச் சிணுங்கியா இருக்கிறதுல என்ன பிரயோஜனம் மேடம்!"
"இங்கதான் ஒரு விஷயத்தை நாம் புரிஞ்சுக்கணும் ஷாலினி. அந்தக் காலத்துப் பொம்பளைய யாரும் மனுஷியாகவே மதிக்கல. ஆணுக்கு சுகம் தர்றது, பெத்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குறது - இதைத் தவிர வேறு எதுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாகத்தான் நடத்தப்பட்டாங்க. சொன்னா ஆச்சரியப்படுவே - ஒண்ணுமே தெரியாதவளா இருக்குறதைத்தான் நல்ல பெண்ணுக்கு அழகுன்னு நெனைச்ச காலம் அது. காரணம், ஆய கலைகள் அறுபத்திநாலையும் தெரிஞ்சு வெச்சிக்குறது ஒரு பரத்தையோட தொழில் தேவை - அது நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு வேண்டாத வேலைனு கருத்து இருந்தது. அதனாலதான் வீட்டுப் பெண்களுக்கு எழுதப் படிக்கக்கூடச் சொல்லித் தராம இருந்தாங்க. தப்பான வழில போகிற பொண்ணுக்குத்தான் எழுதப் படிக்க வேண்டிய அவசியமாம். தனக்குன்னு ஓர் ஆம்பிளை இருக்குற பொண்ணுக்கு எழுதப் படிக்கிறது மாதிரியான வெட்டி வேலைக்கு அவசியமே இல்லையேன்றது அந்தக் கால லாஜிக்."
"அடக் கண்றாவியே! ஜமக்காளத்துல வடிகட்டின அடிமைத்தனமா இருக்கே!"
"அதுதானே அந்தக் காலத்து நிலவரம்! உனக்குத் தெரியுமா? இந்த நூற்றாண்டுக்கு முன் வரைக்கும் நம்மூர் பொம்பளைங்க யாருக்குமே மேலாடை அணிய அனுமதியே இல்லாமதான் இருந்தது. அரச குடும்பம், புரோகிதக் குடும்பம் தவிர மற்ற எல்லாப் பொதுப் பொம்பளைக்கும் மாராப்பு சட்டவிரோதமா இருந்தது..."
"என்னது! நிஜமாவா?"
"ஆமா. ஆடை அணியுற அளவிற்கு மரியாதைக்குரிய நபர்களாகப் பெண்கள் மதிக்கப்படலை. என்ன... ஆடு, மாட்டை விடக் கொஞ்சம் மேலானவர்கள் என்கிற மாதிரி நடத்தப்பட்டதனால கீழாடை மட்டும் அணிய அனுமதிச்சாங்க. அதனாலதான் நம்ம கோயில் சிற்பங்கள்ல எல்லாம் பெண் சிலைகள் வெற்று மார்பா இருக்கு. அதனாலதான் இன்னைக்கும் நம்ம கிராமத்துப் பாட்டிகள் மேலாடை போட்டுக்குறதில்ல..."
யோசித்துப் பாருங்கள் - அத்தனை பெண்கள் - எல்லாம் நமது மூதாதையர்கள் - அரை நிர்வாணமாக வலம் வந்தார்களா! "என்ன அநியாயம். பொம்பளைங்களை இப்படியா நடத்துறது!" என்னை மறந்து ஆட்சேபித்தேன்.
"ஏதோ இந்த ஒரு நூற்றாண்டாத்தான் பொம்பளைங்களுக்குக் கொஞ்சமாவது கரிசனம் காட்டுறாங்க. இந்தக் காலத்துப் பெண்களால படிக்க முடியுது, வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போக முடியுது, சொத்துரிமை இருக்கு, யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு சுதந்திரமா முடிவெடுக்க முடியுது... ஆனா இந்த சுதந்திரமெல்லாம் சுலபமா வந்துடல. நம்மோட பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாம் எவ்வளவோ அவமானம், அநியாயம், அக்கிரமத்தை சகிச்சுக்கிட்டாங்க... ஆனா உங்களை மாதிரி நாகரீக சிறுசுங்க, இந்த வரலாறே தெரியாத சுத்த மண்டுகளாய் இல்ல இருக்கீங்க. பெண் சுதந்திரம் என்பது என்னவோ நியூட்டனோட ஆப்பிள் மாதிரி அப்படியே தானா வந்து மடியில விழுந்தா மாதிரி இல்ல அசால்ட்டா இருக்கீங்க!"
என் பாலினப் பற்றற்ற நிலையை மீறி அவர் சொன்னது என்னைச் சிந்திக்கவைத்தது. காச் மூச் என்று கொதித்து பேசினாலும், இந்தப் பெண் விடுதலைப் போராளிகள் சொல்வதிலும் சமாச்சாரம் இருக்கத்தான் செய்கிறதோ என்று தோன்றிவிட அன்றிலிருந்து நான் ரொம்பவே சமர்த்தாய் மனிதப் பெண்களின் வரலாற்றைப் பற்றித் துப்புத் துலக்குவதில் மும்முரமாய் இறங்கிவிதட்டேனாக்கும்.
அதென்ன 'மனித'ப் பெண்கள் என்று புருவம் உயர்த்துகிறீர்களா?
ஜீவராசிகளிலேயே மனித குலம் மட்டும்தான் 'தன் மேலான பாதி'களை இவ்வளவு மோசமாய் நடத்துகிறது என்பது தெரிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற மிருகங்களைப் பொறுத்த வரை பெண்தான் ஆணை விடவும் உஷாராய் இருக்கும். ஆண் புலியை விடப் பெண் புலி சிறந்த வேட்டைக்காரி. ஆண் சிலந்தியை விடப் பெண் பெரியது. ஆண் பாம்பை விடப் பெண் பாம்பு அதிக விஷமமானது. அவ்வளவு ஏன்? மழை காலம் வந்தாலே நம்மை எல்லாம் கடித்தே பாடாய் படுத்துகிறதுகளே கொசு, அதில் கூட ஆண் கொசு அப்புரானி, கடிக்காது. பெண் கொசு தான் கடித்து மலேரியா கிருமிகளை மனிதர்களுக்கு விண்ணியோகம் செய்யும்!
இப்படியாக எல்லா உயிரினங்களிலும் பெண் இவ்வளவு உஷாராக இருந்தாலும் மனித வர்கத்தில் மட்டும் பெண் ஏன் ஆணை விட வீரியம் குறைந்தே காண்ப்படுகிறாள்? வீரியம் உண்மையிலேயே குறைந்தவளா, அல்லது காரணத்தோடு தான் அப்படி காணப்படுகிறாளா?
இத்தனைக்கும் மனித வர்க்கத்திலும் கூட ஆணை விடப் பெண் பலசாலி. உடலால் மட்டுமல்ல, மரபணுவாலும். பெண்களுக்கு இருக்கும் அந்தக் கொசுறு X குரோமோசோம் அவளை சுலபமாகப் பிறக்கவும் சீக்கிரமாய் நடக்க-பேசவும், குறைவாக நோய்வாய்ப்படவும், கொஞ்சமாய் ரிஸ்க் எடுக்கவும் வைக்கிறது. பொதுவாய் ஆணை விட அதிக காலம் வாழ வைக்கிறது. அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வெறும் பெண்களை வைத்தே உலக ஜீவனத்தைத் தொடரச் செய்ய முடியும்... குழந்தைகளை உருவாக்க இனி ஆணின் விந்தணு அவசியமில்லை என்கிற கருத்துக்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.
இத்தனை சக்தி. இவ்வளவு இன்றியமையாத தன்மை. இருந்தும் ஆண்கள் பெண்களைக் கேவலமாய்த்தான் நடத்துகிறார்கள். அதை பெண்களும் அனுமதிக்கிறார்கள்....இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கூட. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
எல்லாம் காரணத்தோடுதான். சாதாரணக் காரணங்கள் அல்ல. சில சுவாரசியமான, நியாயமான காரணங்கள்...
Labels:
பெண்ணின் மறுபக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
பதிவு நன்றாக இருந்தது நண்பரே.
தாங்கள் பதிவுகளை குங்குமம் வார இதழ்களில் படித்திருக்கின்றேன்.
தாங்கள் post a comment -ல் word verification காலத்தை நீங்கி விடவும்.
Food File பற்றி நான் வலைப்பூ வெளியிட்டுள்ளேன். நேரம்இருப்பின்
பார்க்கவும். தங்கள் மருத்துவ தொழிலுக்கு உதவலாம்.
முகவரி:-http://velang.blogspot.com/2009/01/food-file.html
வாழ்க வளமுடன்,
வேலன்.
"இத்தனைக்கும் மனித வர்க்கத்திலும் கூட ஆணை விடப் பெண் பலசாலி. உடலால் மட்டுமல்ல, மரபணுவாலும். பெண்களுக்கு இருக்கும் அந்தக் கொசுறு X குரோமோசோம் அவளை சுலபமாகப் பிறக்கவும் சீக்கிரமாய் நடக்க-பேசவும், குறைவாக நோய்வாய்ப்படவும், கொஞ்சமாய் ரிஸ்க் எடுக்கவும் வைக்கிறது."
இதனைப் புரிந்தவர் எத்தனைபேர், புரிந்தும் புரியாததுபோல பாவனை இன்னும் எவ்வளவு.
உங்கள் பதிவு அருமை ..வாழ்த்துக்கள் ,,,உங்களிடம் பிறப்பு உறுப்பு பற்றிய சந்தேகம் கேட்கலாமா டாக்டர் ,,,,
அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்.
hai.
Iam ur fun.web tv i watchur programs .this blogs is very informative one.
மனஅழுத்தம் ,குடும்ப பிரச்சனை என்று வந்தால் தூக்கமே வருவதில்லை .பிரச்சனைகளில் இருந்து மனதை திருப்புவது எப்படி ?
பெண்ணடிமை பெண்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கே எதிரானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.இன்னும் நமது ஊர்களில் பெண்ணடிமை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்பதும் உண்மை.மேலே உள்ள உங்கள் கட்டுரையில் கூறப்பட்ட சில விஷயங்களுக்கு விளக்கம் தர விழைகிறேன்.
#"அந்தக்காலத்துல இருந்தே பெண்களை யாரும் மதிக்கவில்லை"....இதில் அந்தக் காலம் என்பது எந்தக் காலம்?
தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு தாய்வழிச் சமூகமாகவே இருந்து வந்துள்ளது.பழந்தமிழ் அரசர் காலத்தில் முக்கிய முடிவுகள் மன்னர்களால் பட்டத்துராணிகளிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்பட்டன..
பெண் என்கிற காரணத்திற்காக மட்டுமே ஆதிமுதல் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பது சரியல்ல.சங்க காலத்தில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்பாற்புலவர்கள் இருந்தார்கள்.அரண்மனைகளில் பெண் மந்திரிகள் இருந்திருக்கிறார்கள்.அந்தக்காலத்து அரண்மனை க்ளார்க்குகளாக பெண்கள் பணிசெய்திருக்கிறார்கள்.
சமீப கால வரலாற்றை நோக்கினால் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் வெகுவாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள்.1938 நடந்த ஹிந்தி எடிர்ப்பு போராட்டத்தில் பெண்களின் பங்கு ஆண்களின் பங்கிற்குச் சமமானதாகச் சொல்லப்படுகிறது(அது இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.)
#" கோயில் சிலைகளில் பெண்சிலைகள் மேலாடை இன்றி காட்டப்ட்டுள்ளன "
கோயிலில் பராசக்திக்கே மாராப்பு அணிவிக்கப் படவில்லை.அதற்காக சக்தி பெண் என்பதால் அவளை மதிக்கவில்லை என்று கூறக்கூடாது.சக்தி சாக்தர்கள் வணங்கிய ஒரே கடவுள் என்பதும் சிவனுடைய மனைவி சக்தி என்பது பின்னர் இட்டுகட்டி விடப்பட்ட கதை என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஒரு காலத்தில் நாம் மேலாடையே அணியாமல் இருந்திருக்கிறோம்.உலகெங்கும் இன்னும் ஏகப்பட்ட பழங்குடியினர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள்.டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்பீர்கள்.பின்னர் வெகுவாக மேலாடை அணிய ஆரம்பித்த பின்னர் சில குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப் படவில்லை.திருவிதாங்கூர் சமஸ்தான ராணி ஒருவர் தனக்கெதிரே மேலாடை அணிந்து வந்த கீழ்ச்சாதி பெண்ணின் கொங்கைகள அறுத்தெறிய உத்தரவிட்டார் என்று எங்கோ படித்தேன்.பெண்ணுக்குப் பெண்ணே இழைத்த இக்கொடுமையை ஒரு சாதிப்பிரச்சனையாகத்தான் நோக்க வேண்டுமென்பது எனது கருத்து.
இதே சமயத்தில் தன்னுடைய பெண் அடையாளத்தை பிரச்சனைகளுக்குக் கேடயமாகப் பயன்படுத்தும் பெண்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள்.எடுத்துக்காட்டுக்கு , எதேனும் ஒரு விவாதத்தையோ பிரச்சனையையோ தங்களுக்கு சாதகமாக திருப்பனும்னா உடனே அழுதுருவாங்க. அதுக்கப்புறம் ஒன்னுமே செய்யமுடியாது..அவங்க கேக்குறத அப்புடியே குடுத்துட்டு போயிகிட்டே இருக்கனும்.
சரி முடிவா என்னதான் சொல்ல வற்ர அப்டீன்னு கேக்குறீங்க.
சில ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நமது இனத்தில் சில நூறு ஆண்டுகளாக பெண்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது.இதற்கு வழி தவறி இறுகிப்போன நமது சமுதாய அமைப்பு ஒரு மிக முக்கிய காரணம்
பெண்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உள்விரிவு நிறைந்தவை, பன்முகத்தன்மை கொண்டவை.எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமா ஒரே காரணத்தை சொல்ல முடியாது.
///அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வெறும் பெண்களை வைத்தே உலக ஜீவனத்தைத் தொடரச் செய்ய முடியும்... குழந்தைகளை உருவாக்க இனி ஆணின் விந்தணு அவசியமில்லை என்கிற கருத்துக்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.///
இந்த ஆராய்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்
மிக சிறப்பாக விளக்கம் சொன்ன கார்த்திகேயனுக்கு நன்றி. பெண்ணின் மறுபக்கம் என்கிற இந்த புத்தகம் நீங்கள் விளக்கிய இந்த விஷயங்களை பற்றியது தான்....நீங்கள் படித்திருப்பது அதன் இண்ட்ரோவை தான். மீதத்தையும் படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்களேன்.
ஓ!... இன்ட்ரோவா அது...நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு உணர்ச்சிவசபட்டேன்
;-)
கண்டிப்பா உங்கள் புத்தகைத்தை முழுதாகப் படித்து அனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றி!
அன்பு சகோதரி,
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உங்களுடைய இந்த கட்டூரைகள் மிகவும் பயணளிக்க கூடியது.எனக்கு தெரிந்தவர்களிடம் இந்த கட்டூரைகளை படிக்க சொல்லி வருகிறேன்.
பல வேலைகளுக் கிடையேயும் தாங்கள் இடுகை இடுதல் எனக்கு வியப்பளிக்கின்றது.
தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
ஜகதீஸ்வரன்
Hi friend,
it is very useful to every human being. as a service to the human society it is good job. please continue it.thanks a lot to make clearance to people' common doubts.thanks a lot
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - கிலோ எவ்வளவு? பெண்ணின் பெருமையைக் கெடுக்காதே..." என்று என்னைத் திட்டித் தீர்த்திருந்தான் கையெழுத்துப்போடாத ஒரு தைரியசாலி".
கையெழுத்துப்போடாத அந்த தைரியசாலி "அவன்" தான் ..."அவள்" இல்லை என்று எப்படி முடிவு செய்தீர்கள்?
U R simply super, U know everything about man, But then why didn't you marry? -sathish
//ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் கடந்து, என் சொந்த விருப்பு வெறுப்புகள், என் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆகியவற்றை மறந்து, பாலினமற்ற ஒருவகை பிறவியாக இயங்குவது என் தொழில் தேவையாகிவிட்டது//
அப்ப நீங்க கர்ம யோகியா ??
//யோசித்துப் பாருங்கள் - அத்தனை பெண்கள் - எல்லாம் நமது மூதாதையர்கள் - அரை நிர்வாணமாக வலம் வந்தார்களா! "என்ன அநியாயம். பொம்பளைங்களை இப்படியா நடத்துறது!" என்னை மறந்து ஆட்சேபித்தேன்//
அததான் இப்ப TV ல தினம் தினம் வலம் வராங்களே ...இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கு ?
பெண்ணின் இருப்பை அறிவியல் ரீதியாக ஒப்பிட்டு அருமையான கருத்துக்களை அனைவருக்கும் புரியும் மொழி நடையில் அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள். இப்பொழுதே புத்தகதை வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. பணி தொடர வாழ்த்துக்கள்.
Mrs. Rani.Seetharan
Colombo
Srilanka
The article is very nice :)
Dear Dr, I got this book and read it at a stretch. really interesting. I found some spelling mistakes in it. I had written a mail also regarding that to psrfindia@gmail.com. I have not got any reply. I am ready to mail you the list if you are interested. i could have mailed the list directly. but i have to get the editor and typing tamil becomes little time taking.
Arulmozhi
தகவல்கள் நன்றாக இருந்தன . மேலும் தாங்கள் உரையாடிய இந்த வார "நீயா நானா " பார்த்துதான்
ஆண்களுக்கு என்று நான்கு குணங்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை பற்றி வெகு நேரமாக தேடிக்கொண்டிருக்கையில் தான்
உங்களுடைய வலைப்பக்கம் எனக்கு தெரிய வந்தது. ஆண்களின் அந்த நான்கு குணங்கள் பற்றி எங்கே படித்தீர்கள் அல்லது அவைகளை
பற்றி சற்று விளக்கம் தர முடியுமா . மிக்க நன்றி !
well said dr
Post a Comment