ஆண்களிடம் ஒரு ஸ்பெஷல் திறமை உண்டு, அவர்கள் அறிவை எப்போதுமே நன்றாக தீட்டிவைத்திருக்கிறார்கள். நிறைய உலக ஞானமும், விஷய ஞானமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சும்மா அவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து கேட்டாலேயே கூட, நமக்கு “அய், இவ்வளவு மேட்டர் இருக்கா இதுல!” என்ற வியப்பு ஏற்பட்டு விடும்! அப்படி பல ஆண்களிடமிருந்து நான் பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டுள்ளேன்.
அப்படி சமீபத்தில் நான் posthumousசாய் கண்டுபிடித்த இந்த ஆண் ரொம்பவே சூப்பர்மேன் என்று தான் சொல்லவேண்டும். இந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் எனக்கு. இதில் என்ன பெரிய விசித்திரம் என்றால் நான் படித்த கல்லூரி அவர் பெயரிலான சாலையில் தான் இருக்கிறது. கட் அடித்த நாட்கள் போக மீத நாட்கள் எல்லாம் அவர் சிலையை தாண்டி தான் கல்லூரிக்கே போனேன். நான் ரொம்ப காலம் குப்பை கொட்டிய மருத்துவமனையின் முகவரியிலேயே அவர் பெயர் வரும்! போகிற ஊரெல்லாம் அந்த மனிதனின் சிலைகள் தான்....இத்தனை இருந்தும் இந்த ஆளை பற்றி எனக்கு பெரிதாக எதுவுமே தெரியாது.
ஏதோ மதங்களுக்கு எதிரானவர், கொஞ்சம் டேஞ்சரான ஆசாமி என்ற அளவில் தான் தலைவரை பற்றி எனக்கு தெரியும். மற்றபடி அவர் விஷயத்தில் நான் சுத்த சைஃபர்!
இது இப்படி இருக்க, ஒரு நாள், தூர்தர்ஷன் அலுவலகத்தில், “ஆசிரியர் உங்க பேச்சை கேட்டாராம், நேர்ல பாராட்டணும்னு சொல்லுறார், போன் போட்டு தர்றேன், பேசுறீங்களா?” என்று ஒருவர் கேட்க, என் ஆசிரியர்களில் யார், எனக்கு ஆண் ஆசிரியர்களே கிடையாதே என்று குழம்பும் போதே, ஃபோன் தரப்பட, அதை வாங்கி ஹெலோ சொன்னால், எதிர் முனையில் ஒருவர், “நான் திராவிடர் கழகத்துலேர்ந்து வீரமணி பேசுறேன்” என்றார் பாருங்கள். எனக்கு பெரிய அதிர்ச்சி, இவர் தான் ஆசிரியரா, யாருக்கு!....யோசிக்கும் போதே அவர் என் நிகழ்ச்சியை பாராட்டி, நேரில் சந்திப்போமே என்று சொல்ல நானும் ஓகே என்று வைத்தேன்.
அப்புறம் தான் தெரிந்தது, அவர் எனக்கு ஆசிரியர் இல்லை, விடுதலை என்ற பத்திரிக்கையின் ஆசிரியர், அதனால் எல்லோரும் அவரை அன்பாய் அப்படித்தான் கூப்பிடுவார்கள் என்று.
அவரை அடுத்த நாள் போய் பெரியார் திடலில் பார்த்தேன். என் வழக்கமான யூனிஃபார்மில். கை குளிக்கினோம். என் பேச்சை பாராட்டினார், பிறகு, “பெரியாரிஸ்ட் குடும்பமா நீங்கள்?” என்றார். பெரியாரிஸ்ட் குடும்பமா, அப்படினா, அப்படி எல்லாம் ஒன்று இருப்பதே தெரியாத கேஸாயிற்றே நான்! நான் பிளாங்காய் பார்த்ததை வைத்தே எனக்கு புரியவில்லை என்று உணர்ந்து, “இல்லை, பெரியார் சொன்னா மாதிரியே டிரெஸ் பண்ணி இருக்கீங்களே, அதான் கேட்டேன்..”என்றார்
”பெரியார் டிரெஸ் பண்ணுறதை பத்தி என்ன சொன்னார், எனக்கு தெரியாதே,” என்றேன்.
என் அறியாமையை கண்டு எரிச்சல் படாமால், “பெரியார் பெண்களை இப்படி தான் டிரெஸ் பண்ண சொன்னார்...” என்றார் ஆசிரியர் பொறுமையாய். “முழம் முழமாய் புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக, இருக்கிறதா, முந்தானை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல் வெளிநாட்டு பெண்கள் மாதிரி தமிழ் பெண்களும் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு, கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும் என்றார் ஐயா.”
நான் ஆட்சரியமாக பார்த்தேன், “அப்படினா, இன்னும் ஏன் தமிழ்நாட்டு அறிவியல் யூனிவர்சிட்டி வைஸ்சான்சலர் எல்லாம் பெண்கள் காலேஜுக்கு பாண்ட் சட்டை போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு ரூல் போடுறாங்க இன்னும்?”
அவர் சிரித்தார், “அவங்க எல்லாம் இன்னும் பிற்போக்கா இருக்காங்க, நீங்க வல்லத்துல இருக்க எங்க காலேஜுக்கு வந்து பாருங்க, அது பெண்களுக்கான எஞ்சினியரிங் காலேஜ், அங்கே எல்லா கேர்ச்சுக்கும் யூனிஃபார்மே பாண்ட் சட்டை தான். கிட்ட தட்ட இருவது வருஷமா அப்படித்தான்...”
”அட, பரவாயில்லையே!” நான் வியப்புடன் விழிக்க, அவர் கை நிறைய புத்தகங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார், “இதெல்லாம் ஐயா பெரியாரோட புத்தகங்கள், பெண் ஏன் அடிமையானாள், பெரியார் கழஞ்சியத்தோட தொகுப்பெல்லாம் இதுல இருக்கு, படிச்சிப்பாருங்க” என்றார்.
அத்தோடு விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டேன், வழியில் புத்தகங்களை புரட்டி பார்த்தால், பெரியாரின் எழுத்துக்களையும் அவை வெளிபடுத்திய அறிவியல் ரீதியான முற்போக்கு சிந்தனைகளும் எனக்கு அதிசயமாய் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னாடியே, இவ்வளவு அறிவுகூர்மையாய், லேட்டெஸ்ட் ஞானத்துடன் எழுதிதள்ளி இருக்கிறாரே, இந்த மனிதன் என்ன படித்திருக்கிறார் என்று புரட்டி புரட்டி பார்த்தால், அஞ்சாவதோ, ஆறாவதோ தான்!
ஆக, நம்மை போல, ஏட்டு சுரக்காய் அறிவில்லை, எல்லாமே சொந்த சிந்தனையா!! அப்படி என்றால் என்ன அபாரமான சிந்தனையாளராய் இருந்திருப்பார் அந்த மனிதர்!
இத்தனை நாளாய் இந்த ஆளை பற்றி எதுவுமே தெரியாமல், அவர் பெயரிலான சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வேறு முடித்திருக்கிறேன் என்று நினைத்தால், எனக்கு ரொம்பவே வெட்கமாகி விட்டது!
சரி, இப்போதாவது தெரிந்துக்கொண்டேனே பெட்டர் லேட் தென் நெவெர், என்று மனதை தேற்றிக்கொண்டு, அவர் புத்தகங்களை படித்ததும் தான், வெறும் ராமசாமி நாயகராக இருந்த இவரை பெண்கள் எல்லாம் சேர்ந்து பெரியார் என்று அழைக்க என்ன காரணம் என்று புரிந்தது. சும்மா சொல்லக்கூடாது, ஒன் மேன் ஆர்மியாய் மனிதர் எத்தனை பெரிய சமூக புரட்சிகள் செய்திருக்கிறார்! சாதாரண ஆண்களால் முடியாத பல சாதனைகளை இந்த தனி ஒரு ஆள் செய்து ஜெயித்தால் தான் பெண்கள் எல்லாம் அவரை பேராண்மைமிக்கவராய் கருதி, பெரியார் என்றார்கள் போல!
அப்படி என்ன செய்துட்டார் பெரியார் என்று கேட்கத்தோன்றுகிறதா? பெ. மு வில் நானும் அப்படி தான் இருந்தேன். எப்பேற்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று சட்டைசெய்யாமல் இருப்பது தான் என் வழக்கம். ஆனால் பெ.பியில் நான் கொஞ்சம் மாறிவிட்டேன். பெரியாரை கண்டு வியக்க ஆரம்பித்தேன்!
அது சரி, பெ.மு என்றால் என்ன, பெ.பி என்றால் என்கிறீர்களா? சிம்பிள், பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின். பெரியார் பரலோகம் போய் சேர்ந்து இத்தனை நாளான பிறகு என்ன பெ.மு, பெ.பி என்கிறீர்களா? எனக்கு அவரை இப்போது தானே தெரியும்!
அப்படி என்ன பெரிதாய் தெரிந்துக்கொண்டேன், இவ்வளவு வியக்கும் அளவுக்கு என்கிறீர்களா? ஒன் பை ஒன் சொல்லி புரியவைக்க முயல்கிறேன்....
4 comments:
உங்கள் பார்வையில் புரிதலில் பெரியாரா?!
படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! :)
பெரியாருக்கு முன்
பெரியாருக்குப் பின்!
நல்ல முயற்சி!
என் வலைக்கு வருக!
கவித்தேநீர் அருந்த!!!
தேவா....
I really wonder that U were not known about that great leader.. Because your speech,attitude, policies, attire etc.. are simply the dream of Periyar....
anyways I am so eager to read ur posts since I am great fan of both of U.. [Mannikavum, Thamizh font illamayal aangilathil reply]
இப்போது பல பெண்கள் உங்களைப்போல தான் உடை அணிகின்றார்கள். முன்பெல்லாம் சேலை கவுரவமாக கருதப்பட்டது. இப்போதெல்லாம் அப்படியல்லை.
உடலை மறைக்கதான் உடை எனும் போது உங்கள் உடையே மிகச் சிறந்தது. சேலையைக் கூட நாகரீகமாக உடுத்தலாம் செல்வி ஜெயலலிதாபோல. ஆனால் அது வேலை செய்கின்ற பெண்களுக்கு வசதியாக இருக்காது என்பதே உண்மை.@
Post a Comment