உங்களுக்கு ரூட் விடும் ஆள், பெண்களிடம் கண்ணியம், கொஞ்சம் பேச்சு சுவாரசியம், சொன்ன சொல் காப்பாற்றும் கற்பு இதெல்லாம் வைத்திருக்கிறவனா என்று தரப் பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? இந்த முதல் மூன்று விஷயங்கள் இருக்கிறவன் என்றால் அடுத்து நீங்கள் செக் அப் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் தலைவரின் வேலை.
அவன் எத்தனைதான் கண்ணியம் சொட்டச் சொட்ட பழகினாலும், தேனாய் தித்திக்கத் தித்திக்க பேசினாலும், சொன்ன சொல்லை எல்லாம் ஒன்று விடாமல் காப்பாற்றினாலும், ஆசாமிக்கு வேலை என்று ஒன்று இல்லை என்றால் அவர் ஆட்டம் அம்பேல்தானே!
இது ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாக வாழும் காலம்தானே, அதனால் ஆண் வேலைக்குதான் போய் ஆக வேண்டும் என்கிற கட்டாயமா என்ன? அவன் பாட்டுக்கு வீட்டிலேயே ஒரு நல்ல ஹவுஸ் ஹஸ்பெண்டாய் இருந்தால் ஆகாதா? என்று நீங்கள்கூட நினைக்கலாம். ஆமாம். ஆணும் பெண்ணும் சமம்தான். அதனால்தான் இருவருமே வேலைக்குப் போவது நல்லது. பெண்ணுக்கு மகப்பேறு, பிரசவம், பிள்ளை வளர்ப்பு மாதிரியான கூடுதல் சுமைகள் இருப்பதால் அவள் இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாத பட்சத்தில் வீட்டிலேயே இருந்து குழந்தைப் பராமரிப்பை பிரதானப்பணியாய் செய்கிறாள். ஆனால் ஆணுக்குதான் இந்தப் பணிகள் எதுவும் கிடையாதே, பிறகு அவன் வீட்டிலேயே இருக்க என்ன அவசியம்?
ஆக ஆண் என்பவன் கண்டிப்பாக வேலைக்குப் போயே ஆக வேண்டியவன். சரி, இப்போது உங்களுக்குப் பலவிதமான ஆண்களை அறிமுகப்படுத்துகிறேன். இவர்களில் உங்களுக்கு யாரை அதிகமாகப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆண் 1
எனக்கு வேலைக்குப் போகவே மூடு இல்லை. விட்டா ஆஃபீசுலேயே படுத்துத் தூங்கிடுவேன் என்று நினைக்கிற ரகம்.
ஆண் 2
இந்த ஆஃபீசுக்கெல்லாம் மனுஷன் போவானா? எல்லாம் என் தலையெழுத்து! என்ன பண்றது என்கிற ரகம்.
ஆண் 3
தாத்தா காலத்துலேர்ந்து கட்டிக் காப்பாத்திட்டு வர குலத் தொழில். இதை கண்டினியூ பண்றது என் கடமை இல்லையா? அதான் செய்யுறேன், என்கிற ரகம்
ஆண் 4
இந்த வேலைதான் எனக்கு உயிர். எனக்கு லைஃபே என் வேலைதான், என்கிற ரகம்.
ஆண் 5
கிடைச்ச வேலை எதுவா இருந்தாலும் கரெக்டா செய்யணும். ஆனா வேலை நேரம் முடிஞ்சி வீட்டுக்குப் போனா அதெல்லாம் அப்படியே மறந்துவிடுவேன்.
ஆண் 6
என் பாஸ்னா எனக்கு உயிர். அவருக்காகத்தான் இந்த வேலையச் செய்யறேன் என்கிற ரகம்.
ஆண் 1 : இவன் சரியான சோம்பேறி. எந்த விதமான வேகமோ, உத்வேகமோ, சாதிக்கும் வெறியோ இல்லாத இவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சூனியமாகி விடும். அதனால் `பாவம் பார்த்து தேர்ந்தெடுத்தேன். திருந்திடுவான்னு நினைச்சேன்' என்றெல்லாம் உங்கள் மேலான குணங்களை கற்பூர வாசனையே தெரியாத கழுதைகளுக்குக் காட்டி வீண்டிக்காதீர்கள்.
ஆண் 2 : எல்லா அலுவலகங்களிலுமே பாலிடிக்ஸ் இருக்கும். இதை எல்லாம் கடந்து ஜெயிக்கத் தெரிகிறவன் தான் ஃபிட்டான ஆண். அதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் குறை கண்டு பிடித்துக்கொண்டு, சதா அலுத்துக்கொள்ளும் இந்த வகை ஆண்கள், பெஸிமிஸ்டுகள் என்பதால், இவர்களுடன் நீங்கள் ரொம்ப நேரம் சேர்ந்திருந்தால் இவரின் இந்த இருட்டான அணுகுமுறை உங்களுக்கும், தொத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.
ஆண் 3 : தன் முனைப்பில்லாமல், வெறுமனே தன் பரம்பரை கௌரவம், அல்லது வருமானத்தை அடைகாக்கும் இந்த வகை ஆண்களுக்கு எல்லாமே சுலபமாக ரெடிமேடாகக் கிடைத்து விடுவதால், போராடும் குணம் அதிகமாக இருப்பதில்லை. அதனால் சோர்ந்து, மெத்தனமாய் கிடந்து உடல் ஊதிப் போய், சுவாரசியமே இல்லாமல் சலித்துக்கொண்டிருப்பார்கள் இந்த வகை ஆண்கள்.
ஆனால் இதே `பரம்பரை' சொத்துக் கேட்டகரியில் வேறு சில ரக ஆண்கள் இருப்பார்கள். தாத்தா சின்ன கடைதான் வெச்சிருந்தார். நான் பெரிசா, புதுமையா, பிரம்மாண்டமா மாற்றி அமைக்கப் போறேன் என்று தன் தாத்தா விட்டுப் போன அஸ்திவாரத்தில் தன் சொந்த முயற்சியால் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முயன்று, பல சமயங்களில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகை முனைப்புள்ள ஆண்கள் என்றால் எப்போதுமே ஓ.கே. தான்.
ஆண் 4 : ``வேலை தான் உயிர்'' என்கிற ஆண்களை அநேகப் பெண்களுக்குப் பிடிக்கும். இவனை மாதிரி ஒரு கெட்டிக்காரனுக்கு வாழ்க்கைப்பட கொடுத்து வெச்சிருக்கணுமே என்று நினைப்பார்கள். ஆனால் இந்த வகை ஆண்களிடம் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் இவர்களுக்கு வேலை தான் காதலி, மனைவி, தாய், மகள் எல்லாமே. வேலை மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் அவர்களை முழு நேர ஷ்ஷீக்ஷீளீணீலீஷீறீவீநீ ஆக்கிவிடுவதால் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் சதா சர்வகாலமும் தன் தொழிலே கதி என்று இருந்துவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள், ``சே, எனக்காக கொஞ்ச நேரமாவது ஒதுக்குறானா? இவனுக்கு நான் முக்கியமே இல்லை போல'' என்று நினைத்து நினைத்தே நொந்து போவார்கள். காரணம், அளவிற்கு மீறிய இவனின் வேலை மோகம். அதனால் அவன் தொழிலே அவளுக்கு ஒரு சக்களத்தி ஆகிவிட, கசப்புதான் மிஞ்சும். ஆக இந்த வகை ஆண்கள் எல்லாம் வீட்டில் வைத்து மேய்க்க சிரமமானவர்கள் என்பதனால் இவர்களும் அவ்வளவாக தேறுவதில்லை.
ஆண் 5 : எதைச் செய்தாலும் சரியா செய்யணும், மத்தபடி, வேலைய முடிச்சமா வீட்டுக்குப் போனமான்னு இருக்கணும் என்கிற இந்த வகை ஆண்கள் பார்க்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கமாட்டார்கள். அதென்னது, மிஷின் மாதிரி வர்றான், வேலையை பற்றே இல்லாம செய்யுறான், முடிஞ்சதும் போயிகிட்டே இருக்கானே, என்று லேசாக எரிச்சல் கூட வரலாம். ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா, இந்த வகை ஆண்கள் தான் தொடர் உறவிற்குத் தோதானவர்கள். எதிலுமே ஓவர் ஈடுபாடில்லாமல், எப்போதுமே மிதமாக இருக்கும் சுபாவம் தான் உறவிற்கு பலத்தைக் கொடுக்கும். ஆக இந்த வகை ஆண் என்றால் எப்போதுமே ஓ.கே!
ஆண் 6 : இந்த வகை ஆண்கள் ஓவர் இமோஷனல் டைப் என்பதால், இவர்களின் இந்த அளவிற்கதிகமான உணர்ச்சி விகிதமே போகப் போக உங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும். அதனால், இந்த வகை ஆண்களும் ஊகூம்!
ஆக, சிநேகிதிகளே, உங்களை முற்றுகை இடும் ஆண்களைக் கூர்ந்து கவனியுங்கள். மேலே சொன்ன குணங்களின் கலவைகளாக பல ஆண்கள் இருக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும், நிறை, குறை இரண்டையும் எடை போட்டு, அவற்றுள் எது அதிகம் என்பதை சரியாகக் கணித்துப் பாருங்கள். வெறும் அவனுடைய வேலை, மற்றும் அது பற்றிய அவன் அபிப்ராயத்தை வைத்தே இத்தனை தரப்பரிசோதனை செய்ய முடியும் என்பதால் இந்த வாரம் இதையே ஹோம் ஒர்க்காக செய்து பாருங்கள்.
5 comments:
அவசியமான பதிவு டாக்டர்.
நெம்ப தேங்க்ஸ்ங்கோவ் ....!!! எங்குளுக்கும் இதுல நெறியா டிப்ஸ் கெடச்சிருக்குது....!! இனி நாங்குளும் பொண்ணுங்ககிட்ட பேசும்போது அலார்ட் ஆயிருவோம்...!!!!
மேலும் டிப்ஸ் குடுக்க வாழ்த்துக்கள்........!!!!!
nalla tips doctor... keep writing..
Very nice...i just read all ur 19 posts and ur full blog in a single go today...it is very much informative....thank you....thank you so much DR...
இந்த பதிவிற்கு தொடர்பில்லாத கேள்வி டாக்டர்...
அண்மையில் வெளிவந்த ஒரின சேர்க்கை தொடர்பான தீர்ப்பு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விரிவான பதிவினை இடுமாறு விண்ணப்பிக்கிறேன்.
Post a Comment