பொழுதை எப்படி செலவழிக்கிறான் என்பதை வைத்து ஆணை எப்படி தர நிர்ணயம் செய்வது என்பது பற்றி சென்ற ஸ்நேகிதியில் பார்த்தோம். இம்முறை நேரத்தை தவிர மீதமுள்ள வளங்களை அவன் எப்படி செலவழிக்கிறான் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?
நம் கலாச்சாரத்தில் பல காலத்திற்கு ஆணுக்கு மட்டும் தான் ஆஸ்தி, ஆண் மட்டும் தான் வெளி வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாடு இருந்துவந்ததால், ஆணிடம் தான் பணம் புழங்கியது. பெண் அவனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை ரொம்பவே மாறி இருந்தாலும், இன்றும் பல பிற்போக்கான ஆண்கள், மனைவியின் வருமானத்தையும் வாங்கி அதையும் தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்மூர் பெண்களும், சம்பாதிக்கும் காசையெல்லாம் கணவன் கையில் கொடுத்து வைப்பது தான் “தமிழ் கலாச்சாரம்” என்று கண்டதுக்கெல்லாம் கலாச்சாரத்தோடு கனெக்ஷன் கொடுத்து குழம்பி போகிறார்கள். இது இப்படி இருக்க, இன்றும் பல குடும்பங்களில் பணம் என்பது கணவன் கையிலேயே புழங்கும் சமாசாரமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்கு கூட மனைவி, கணவனின் கையை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாள்.
இப்படி பெரும்பாலான பெண்கள் பொருளாதார விஷயத்தில் சார்பு நிலை ஜீவராசிகளாகவே வாழும் போது, இவர்கள் எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்? உதாரணத்திற்கு இரண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறேனே.
முதல் ஆசாமி பெரிய மில்லியனர். அவரின் ஒரு கை அசைவிற்கே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு செழிப்பான வேலையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆனது. மனைவியுடம் முதன் முதலில் ஹோடலுக்கு போனார்.
மனைவியும் தன்னை மணந்த கனவன் என்பதனாலேயே அவன் ஒரு பெரிய ஹீரோ என்றே நினைத்து விட்டாள். அதனால் தன் ஹீரோ தன்னிடம் மிக கனிவாக, என்ன சாப்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டு, உபசரித்து, அன்பு பாராட்டுவான் என்று நினைத்தால், தலைவர் அவளிடம் எதுவுமே பேசாமல் ஒரு பிட்சாவை வாங்கி இரண்டாக கிழித்து அவளுக்கு கால் வாசி வைத்து விட்டு, தான் முக்கால் வாசியை மென்று விழுங்க ஆரம்பித்தார். மனைவி தன் பேரதிர்சியை விழுங்கிவிட்டு பிட்சாவை கொறித்து முடித்தாள். அந்த கடையில் ஒரு பிட்சா வாங்கினால் ஒரு லோட்டா நிறைய கோலா இலவசம். அதனால் ஆளுக்கு பாதி கோலா குடித்தார்கள். அவ்வளவு தான், மணவாழ்க்கையின் முதல் வெளி சாப்பாடு இப்படியே இனிதே முடிய, மனைவி, மனமுடைந்து போய் அலுப்புடன் வெளியே நடக்க, பக்கத்து கடையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை கூட கவனிக்கும் நிலையில் தலைவி இல்லை. ஆனால் தலைவன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று கேட்க, “அப்பாடா, இப்போதாவது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, பரவாயில்லையே என் கணவன் அவ்வளவு மோசமில்லைப்பா” என்று மனைவி நிம்மதி பெருமூச்சுடன், “ஒகே” சொல்லி எல்லா பல்லையும் காட்டி தலையாட்ட, கணவன் சுருசுருப்பாய் ஐஸ்கிரீம் கடைக்கு நடந்தான்.
போன வேகத்திலேயே திரும்பியும் வந்தான். வெறும் கையுடன். “என்னாச்சு, ஐஸ்கிரீம்?” என்று மனைவி புரியாமல் விழிக்க, கணவன் படு கவலையாய் சொன்னான், “ரொமப் காஸ்ட்லியா இருக்கு, நூறு ரூபாயாம்” நூறு ரூபாய் எல்லாம் ஒரு காஸ்டிலியா, இது கூட செலவழிக்க முடியலை, நீ என்ன பெரிய மில்லியனர்? உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா! என்று எல்லாம் மனதில் பட்டதை கேட்கவா முடியும். புது கல்யாண பெண், “அட அல்பமே” என்று மனதிற்குள் ஏசிவிட்டு மௌனமாக இருந்துவிட்டாள். பிறகு தான் போக போக தெரிந்துக்கொண்டாள், அவன் பெரிய மில்லியனராக இருந்தாலும் எச்சை கையால் காக்காய் கூட ஓட்டாத வடிகட்டிய கஞ்சபிஸினாரி என்று.
இப்படி பணவிஷயத்தில் கருமியாக இருந்தால், சரி போனால் போகிறது, பணமா பெரிது, அன்பு தான் முக்கியம் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் பணத்தில் எத்தனை அற்பமாக இருந்தானோ, அதே போலத்தான் அவன் தன் அன்பை வெளிகாட்டுவதிலும்….மிக மிக சிக்கனமாய், ஒரு வாரத்திற்கு நாலு முத்தம் கொடுத்தான் என்றால் அதுவே அதிகப்படி! அதுவும் அவள் நச்சரித்தால் தான், இல்லை என்றால் தன் பக்கத்தில் ரத்தமும் சதையுமாய் ஒரு பெண் படுத்திருப்பதே தெரியாமல் நன்றாக குரட்டை விட்டு தூங்கினான்…..என்றால், இப்படி பட்ட ஆணுக்கு எத்தனை மார்க் போடலாம்?
அடுத்த கதாநாயகன் மில்லியனர் எல்லாம் இல்லை. அவன் ஒரு சாதாரண வேலையில் சாதாரண சம்பளத்தில் இருந்த ஒரு சாதாரணன். அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட். அவளை இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுடன் மணிக்கணக்கில் பேசினால் தான் அவனுக்கு தூக்கமே வரும். அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் அவனுக்கு பசி கூட எடுக்காது. அவளுக்காக செலவு செய்ய அவனிடம் அவ்வளவு பணம் கொட்டிகிடக்கவில்ல. என்றாலும் தாஜ் மகால் கட்டமுடியாவிட்டாலும் காதலில் தானும் ஒரு ஷா ஜெகான் என்று நினைக்கும் சுபாவம் அவனுக்கு. அவனால் அவளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கித்தர முடியாவிட்டாலும், அழகான பொருட்களை பார்க்கும் போதெல்லாம் அவளை தான் நினைத்துக்கொண்டான். அவளை வெளியே அழைத்து சென்ற போதெல்லாம், கணக்கு பார்க்காமல் பணம் செலவழிக்க தயாராக இருந்தான். அவன் இப்படி தாராளமாய் செலவழிக்க முன் வருவதை பார்த்து, இவளே, “இவ்வளவு செலவா, வேண்டாம்!” என்று ஆட்சேபிக்கலானாள். ஆனால் அவனால் அவளிடம் சிக்கனம் பார்க்க முடியவில்லை.
இப்படி பணத்தில் எந்த அளவு தாராளம் காட்டினானோ, அதே அளவிற்கு கணக்கு பார்க்காமல் தான் தன் அன்பையும் கொட்டி காட்டினான். அவளை தொடாமல் அவனால் இருக்க முடியாது. கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?
நிச்சயம் ஐஸ்கிரீம் வாங்கி தர கணக்கு பார்த்த மில்லியனரை விட, கணக்கே பார்க்காமல் அன்பை கொட்டிய இந்த இரண்டாவது ஆசாமிக்கு தானே மார்க் அதிகமிருக்கும். காரணம் கணக்கு பார்த்து ஈடுபட்டால் அது காதல் இல்லை, இப்படி அன்பு காட்டவே கணக்கு பார்க்கும் ஆணை துணையாய் அடைவதை விட மோசமான துற்பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆகையால் ஸ்நேகிதிகாள், உங்கள் பட்டியலில் இருக்கும் ஆண்களின் குணாதிசயத்தை கவனியுங்கள். எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிற கஞ்சபிசினாரி அவன் என்றால், காலத்திற்கும் அவனோடு வாக்கு வாதம் செய்தே போரடித்து போகும் உங்கள் வாழ்க்கை. இந்த மாதிரி கருமிகள் பணத்தால் மட்டுமின்றி பாசத்தாலும் பட்டினி போட்டு விடுவார்கள் என்பதால் இந்த ரக அற்ப கேஸுகள் நாட் ஓகே அட் ஆல்.
அதற்காக, ஓவர் ஊதாடித்தனத்துடன் இருக்கிறதோ, இல்லையோ, கடன் வாங்கியாவது கொட்டி கவிழ்க்கிறேன் என்றிருக்கும், பணத்தின் அருமை தெரியாத கேஸாக இருந்தான் என்றால், காலத்திற்கும், கடன் காரர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் அந்த மாதிரியான ஊதாரி மன்னர்களும் நாட் ஓகே.
பணம் முக்கியம் தான், ஓரளவுக்கு சிக்கனமாய் இருக்க தெரிந்தவன் தான். ஆனால் நீங்கள் அவன் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம், அவன் சாம்பிராஜியத்தின் மஹாராணி நீங்கள் ஒருத்தி மட்டும் தான் என்பதனால், உங்களுக்கு சிறந்ததை மட்டுமே செய்கிறான், அதற்க்காக தன் உடல், பொருள், ஆவி, தன் அன்பு, பாசம், நேரம் என்று எல்லாவற்றையும் தாராளமாக செலவழிக்கிறான் என்றால், இவன் ரொம்ப ரொம்ப ஓகே!
அதனால் ஸ்நேகிதிகாள், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க் இது தான், உங்களுக்கு முற்றிகை இடும் ஆண் கஞ்சனா, ஊதாடியா, அல்லது உங்களுக்காக தன்னையும் தன் வளங்களையும் தாராளமாக செலவழிக்க விரும்பும் காதல் நாயகனா என்பதை சரிபாருங்கள்…..ஆண்களை அளந்து பார்க்க இன்னும் வேறு என்னென்ன தர பரிசோதனைகள் உண்டு என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்ப்போம்.
9 comments:
அன்புச் சகோதரி , நீங்கள் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வீர்கள் என்றே எதிர் பார்த்தேன். பல தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் ஆண்களின் மனோநிலையை உண்மையாக பெண்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இந்தப் பதிவு ஆண்களை கொஞ்சம் தரம் இறக்கி சிந்திக்க பெண்களுக்கு சொல்லிக்கொடுப்பதாகவே நினைக்கிறேன். நாங்களும் மென்மை உள்ளம் படைத்த மனிதர்களே. எங்களை ஹான்டில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அன்போடும் உண்மையாகவும் பழகினால் மனைவிக்காக உயிரையும் கொடுக்கும் தன்மை கொண்டவர்கள் தான் என்பதையும் புரிந்து உங்கள் பதிவைத் தொடர வேண்டுகிறேன்.
நன்றி.
அன்புச் சகோதரன்
ராம்!
hey Ram,
1) மென்மையான உள்ளம் படைத்த உங்களை போன்ற ஆண்களை சப்போர்ட் பண்ணி தானே எழுதிக்கொண்டிருக்கிறேன்! ஒட்டு மொத்த ஆடவர் சமூகத்தையும் நான் ஆதிரித்தாலும், அதில் மோசமான நபர்களும் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களை தவிர்த்திட உதவுவதும் என் கடமை தானே
2) மோசமான அப்பாவிற்கு பிள்ளையாய் பிறப்பதை விட சோகமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால் தான் மனு தர்மத்திலும் கூட, “மோசமான ஆண் என்று தெரிந்தும் அவனுக்கு பிள்ளை பெற்று தருவது தான் ஒரு பெண் செய்யக்கூடிய மிக பெரிய பாவம்” என்றே குறிப்பிட பட்டுள்ளது.
3) உங்களை போல ஜெண்டில் மேன்கள் பலபேர் இருந்தாலும், பெண்களிடம் கண்ணியமாக நடந்துக்கொள்ளக்கூடத்தெரியாத சோப்லாங்கி ஆண்கள் பல பேர் இருக்கிறார்கள் என்பதும் நிதரிசனமான உண்மை தானே. அதற்காக பெண்கள் எல்லோருமே மஹா யோகியம் என்று சொல்ல வரவில்லை. கிப்லிங் சொன்னது மாதிரி, the female of the species is more deadly than the male தான். ஆனால் பொதுவாய் என்னை போன்ற திருமணசிகிச்சை செய்யும் marital therapistsகளின் புள்ளி விவரங்கள் படி, பெண்களை விட ஆண்களே அதிக திருமண முறிவுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த ஆணின் அம்மா என்கிற வேறொரு பெண் தான் என்பது ஸ்வாரசியமான கிளை கதை:)
4) இன்னொரு ஆங்கிள்: இதை ஒரு ஆண் என்கிற நிலைபாட்டில் இருந்து படிக்காமல், ஒரு பதினாறு வயது வெகுளி பெண்ணின் நிலையில் இருந்து படித்துப்பாருங்கள், அந்த பெண் உங்கள் சகோதரியாகவோ, மகளாகவோ இருந்தால், அவள் இதை படித்து விட்டு என்ன நினைப்பாள் என்று யோசித்துப்பாருங்கள்...
5) இந்த தொடர் ஆண்களுக்காக எழுதப்பட்டதில்லை. உங்களால் ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து இதை படிக்க முடியவில்லை என்றால், விடுங்கள் கவலையை. ஆளை அசத்தும் 60 கலைகள் என்ற என் முந்தைய புத்தகம் முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே எழுதப்பட்டதாக்கும், அதை வாங்கி படியுங்கள். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான மேட்டர், பெண்களுக்கான இந்த தொடரை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஆண்களுக்கான இந்த மேட்டரை எழுதிவிட்டேன், so, ஆண்களுக்கு தான் எப்போதுமே முதல் மரியாதை என்பதை இப்போதாவது புரிந்துக்கொள்ளுங்கள்:)
நன்றி சகோதரி, பொதுவாக இந்த பெண்ணியம், பெண்சுதந்திரம் போன்ற பேச்சுக்களில் பெரும்பாலும் ஆண்களை அவமதிப்பதில் தான் அதிகம் வீரம் காட்டுவார்கள். தூர்தர்ஷன் காலத்திலிருந்தே யாராவது பெண்களுக்காக பேசினாலே ஆண்களை மட்டம் தட்டுகிறார்கள் என்று ஒருவித அலர்ஜி எனக்கு இயல்பாகவே வந்து விடுகிறது. இதற்கு முப்பது வருடங்களாகவே சமூகத்தில் இருந்த அதீத பெண்ணியப்பேச்சுக்களே காரணம் என்பதும் என் எண்ணம். அதன் கொஞ்ச நஞ்ச வெளிப்பாடு தான் உங்கள் கட்டுரை பற்றிய எனது கருத்தும். இருப்பினும் நீங்கள் பல நேரங்களில் ஆண்களின் உணர்வுகளின் நல்ல விஷயங்கள் பலவற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை நான் மறக்கவில்லை. பல பேட்டிகளில் பார்த்திருக்கிறேன். அதற்கு நன்றிகள் பல. இந்தக் கட்டுரையை ஒரு பெண்ணாக இருந்து படித்துப்பார்க்க விரும்பவில்லை. நான் நானாகவே இருக்கிறேன்.உங்கள் கருத்துக்களை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் விளக்கத்திற்கு நன்றி சகோதரி. தொடருங்கள் வரவேற்கிறேன்.
அன்புச் சகோதரன்
ராம்
மதிற்பிற்குரிய டாக்டர் ஷாலினி அவர்களுக்கு நன்றிகள் பல,
நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் காலம் தொட்டே "அந்தரங்கம் இனிமையானது" என்ற தலைப்பில் வெளிவந்த தங்களுடைய கட்டுரைகளை குமுதம் இதழில் படித்து இருகிறேன். எங்களது குடும்பம் ஒரு காங்செர்வடிவான நடுத்தரகுடும்பம். என்னுடைய டீன் ஏஜ் குழ்ப்பங்கள் பலவற்றிற்கு தங்களுடைய கட்டுரைகள் பதிலாக அமைத்தது. இப்பொழுது நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். நீங்கள் எளிய நடையில் கருத்துகளை தெளிவாகவும் , ஆழமாகவும் எடுத்து கூறும் விதம் அருமை. உங்களுடைய ஆ.அ.60 கலைகளில் பெண்களை வசிகரிக்க கற்றுத்தருவது போல் சரியான பெண்களை வடிகட்டவும் சில கலைகளை உபயம் அளித்தால் நன்றாக இருக்கும். ஏன்னென்றால் தங்களுக்கே தெரியும்
"பெண்கள் எல்லோருமே மஹா யோகியம் இல்லை" என்று.
மீண்டும் என்னை போல் தங்களால் பலன் பெற்ற பலரின் சார்பாக நன்றிகள்.
yes Magesh, அது மாதிரி ஒரு தொடரை எழுதினால் ரொம்ப நன்றாகவே இருக்கும், ஆனால் என்ன செய்வது, இது வரை எந்த பத்திரிக்கையும் என்னை இதை பற்றி எழுத சொல்லவே இல்லையே:( let's see எதிர்காலத்தில் யாருக்காவது இந்த அற்புதமான ஐடியா தோன்றுகிறதா என்று:)
மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களுக்கு,
தங்களது 21 அத்தியாயங்களை படித்தவுடன் சட்டென்று என் மனதில் பட்டவை.
# தாங்கள் கொடுத்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி ஒரு பெண் ஒரு ஆணை தேர்வு செய்வது நடைமுறை வாழ்வில் எளிதானது அல்ல.
# அப்படியே அவள் தேர்வு செய்வாளானால் உண்மையில் அவள் தெளிவானவளாக இருக்க முடியாது. நித்தம் ஒரு வேறுபாட்டையும் புரிந்து கொள்ள இயலாத ஜடமாகி அன்றாட வாழ்வை எதிர் கொள்ள இயலாமல் தங்களை போன்ற மருத்துவர் வீட்டு வாசலில் நிற்பது உறுதி.
# உங்களுடைய இந்த கட்டுரையை பெண்களை விட ஆண்களே அதிகம் படித்திருப்பார். ஆக, இது பெண்ணுக்காக எழுதப்பட்டாலும் ஆணுக்கான கட்டுரையே.
# இந்த கட்டுரை பதின்பருவ பெண்டிர்க்கு என்றால், நீங்கள் கூறும் அளவுக்கும் ஆண்களை கூறு போட்டு பிறகு தெளிவு பெற்று அவனை தேர்வு செய்வதற்குள் அப்பெண்ணின் ஹார்மோன்கள் அப்பெண்ணை
புரியாத காரணத்திற்காக ஏதோ ஒரு ஆணிடம் அடைக்கலம் கொள்ள செய்து விடும்.
# தங்களின் கட்டுரை ஒரு பெண்ணுக்கு பல வகையான ஆணின் குணத்தை விளக்குவதாய் இருந்தாலும் அனுமான அடிப்படையிலேயே அமைந்து இருக்கிறது என்பது என் கருத்து.
# மேலும் நீங்கள் சொல்லும் கருத்துப்படி ஆண்களை புடம் பூட்டு தேர்வு செய்தால் சொற்ப சதவீத ஆண்கள் இருப்பார்கள். அந்த சொற்ப அளவு ஆண்களும் திருமணம் முடிந்தபின் என்ன ஆவார்கள் என்று யாருக்கும் தெரியாது.
பாலுணர்வு என்பது மிக இயல்பான உணர்வு. அதில் சமூகம் எந்தவித உள்ளீடும் கொடுக்காமல் இருந்தாலே அது மிக நேர்த்தியாக நடைபெறும். ஆனால் இன்றைய விஞ்ஞான உலகம் அதிகப்படியான உள்ளீடுகளை அனைவர்க்கும் வாரி வழங்குகிறது. விளைவு பாலியல் குழப்பங்களை, குற்றங்கள். விலங்குகளுக்கோ, வேறு எந்த உயிரினத்துக்கோ பாலுணர்வு இத்தனை குழப்பமாகவோ / சிரமமாகவோ இருக்கவில்லை. அனைத்தையும் விட உயர்வான அறிவு உள்ள மனிதனுக்கோ..????
பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு இங்கே பெண்ணை போக பொருளாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது பெண்களுக்கே தெரிவது இல்லை.
என்னதான் பெண்ணுக்கு தெளிவு வர வேண்டும் என்று நினைத்து விழிப்புணர்வு கொண்டு வந்தாலும் பெரும்பாலான ஆண்கள் தவறாக உள்ள சமூகத்தில் பெண் எப்படி அவள் நினைப்பது போன்ற வாழ்வை பெற்று விட முடியும்.?
தவறு - ஆண்களுடையது. அறிவுரை - பெண்களுக்கா?
பாலுணர்வு பற்றி ஆணுக்கு ஒரு தெளிவை உண்டாக்கினால் பெண்கள் தானாக நிம்மதி பெறுவர். ஆனால் இங்கே யாரும் ஆண்களை கண்டு கொள்வதில்லை. அதனால்தான் குற்றங்கள்.
- சின்னா.
hi anomica...dont be dejected looking at the depth of the subject.this is being written for a larger population. we always have the choice of applying strategies that are appealing to us... our own . every one of us would agree that there is not one perfect man and so a woman in this world.yet there are harmonious , compatible couple.. a lot many.i think the idea of the whole column is to help girls identify their compatible men in a more active way(the conservative matching system prevailing now wont hold good in today s world... in fact the most imp. causative factor in disputed marriages). so instead of searching an ideal man look for a compatible man. the author means to take a step against passivity of females in marriage selection system.let us all appreciate this for this only can hold our marriage system in coming years.
hello madem
you are giving very good support for girls and boys. so i can try to change.
நாங்கள் பென்கள் விருப்பபடி மாற முயர்சி செய்கிறொம்.
இதனை பென்களை விட ஆன்கள் தான் அதிகம் படித்திருப்பார்கள்.இது எங்களுக்கு மிகவும் உதவும்.
please பெண்கள் பற்றிவும் எழுதுங்கள்
மிக்க நன்றி.
by
பாரதிராஜா
//கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?//
புதுசுல கொஞ்சம் அப்படிதானு நான் நினைக்கிறன் .....
கல்யானமாகி ஒரு 5 , 10 வருஷம் கழித்து இவனும் அநேகமா அந்த மில்லியனர் கஞ்சன் மாதிரி ஆகி இருப்பானு நான் நினைக்கிறன் .....
Post a Comment