Thursday, October 22, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 24

என்ன சிநேகிதிகளே, ஆண்களின் பொறுப்பு விகிதத்தை கணக்கிட பழகிவிட்டீர்களா? ஆண்களிடம்இருந்தே ஆக வேண்டிய அடுத்த முக்கியமான குணநலன் என்ன என்று பார்க்க தயாரா? அந்த குணநலனை பற்றி சொல்வதற்கு முன்னால் உங்களுக்கு இரண்டு ஆண்களை பற்றின குட்டி கதைகளை சொல்லிவிடுகிறேன்.

ஆண் 1: மெத்த படித்த மேதவிலாசி. அவன் அம்மா அவனுக்கு பெண் தேடும்போது ‘என் பையனை மாதிரி புருஷன் கிடைக்க எந்த பொண்ணு கொடுத்து வைத்திருக்கிறாளோ, என் மகன் ஆஹா ஓஹோ’ என்றெல்லாம் செமையாய் அளந்து விட சரி இத்தனை பால் வடியும்முகத்துடன் இவ்வளவு வயசான பெண்மணி சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் போல என்று எல்லோருமே நம்பி விட்டார்கள். பையன் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரொம்ப நல்லவன், வல்லவன், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அப்புராணி என்று எல்லோருமே அவனை பற்றி சிறப்பாகவே சொல்லிக்கொண்டு வர, அந்த பெண்ணும் ‘இப்படிப்பட்ட நல்ல குணம் படைத்த ஆணுக்காக எதையும் விட்டு தருவது தகும்’ என்றே நம்பி, நல்ல வருமானம் தந்த தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரமும் உட்கார்ந்து திருமண வாழ்க்கையை பற்றி கலர் கலராய் கனவுகள் காண ஆரம்பித்தாள்.

திருமணமும் ஒரு வழியாக நடந்து முடிந்தது. அது வரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்று எதுவுமே பேசாமல் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருந்த மாமியார் மேடம். திருமணமான அடுத்த நிமிடமே அப்படியே மாயமாய் உருமாறினார். சூர்பனகை, மந்தரை, சகுனி ஆகிய முப்பெரும் சதிகாரர்களின் ஒருங்கிணைந்த உருவமாய் மாறி, புது மனைவியுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த தன் மகனை அழைத்துக்கொண்டு போயே போய் விட்டாள். மாப்பிள்ளை சாரும் அம்மா கூப்பிட்டவுடன் என்ன ஏது என்று கேட்காமல் அவள் வளர்த்த விசுவாசமான நாய் மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு அப்படியே போய் விட, அவன் மனைவி பேக்கு மாதிரி விழித்துக்கொண்டு அங்கேயே நின்றாள்.

‘‘என் பையனுக்கு கார் வாங்கித்தரலை, சீர் செனத்தி போதுமானதா இல்லை. கல்யாண சாப்பாடு எதிர்பார்த்த மாதிரி இல்லை. பொண்ணுக்கு போட்ட வைரநெக்லெஸ்ல கல் சின்னதா இருக்கு. சீர் முறுக்கு நமத்து போச்சு, பாத்திரம் பண்டமெல்லாம் பத்தலை. கல்யாண பொண்ணுக்கு பக்கத்துல அவளை விட அழகா சிகப்பா நின்னுக்கிட்டு இருந்த சொந்தகார பொண்ணை ஏன் எனக்கு கட்டித்தரலைனு என் பையன் கேட்டான்...’’ என்று மாமியார் மேடம் தன் அதிருப்திகளை அடுக்கிக்கொண்டே போய்,

‘‘சே, தப்பு பண்ணிட்டேண்டா கண்ணா, அவசரப்பட்டு அப்பா பார்த்த இந்த பொண்ணை உனக்கு கட்டி வெச்சிட்டேனே. இவளை எனக்கு பிடிக்கவே இல்லை’’ என்று திருமணமான அன்றே தன் மகனின் காதில் சங்கு ஊதிவிட்டாள்.

இந்த அம்மாள் பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே இப்படி அபஸ்வரமாய் ஷெனாய் வாசிக்க, எல்லா உறவுக்காரர்களும் ஒன்று சேர்ந்து அவளுக்கு புத்தி சொல்லி, ஒரு வழியாக புது பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்தார்கள். இந்தியாவில் இருக்கும் வரை இந்த உறவினர் அறிவுரை எல்லாம் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அமெரிக்க சென்றவுடன் தட்டிக்கேட்க யாருமே இல்லாத தைரியத்தில் மாமியார் மேடத்தின் ஆதிக்கம் மிதமிஞ்ச ஆரம்பித்தது. மருமகள் தன் கணவனுக்காக ஆசையாய் எதையாவது சமைத்து வைத்தால், ‘இதை எல்லாம் மனுஷன் சாப்பிடுவானா? இவ்வளவு கடுகு போட்டிருக்கியே. ‘என்று எல்லாவற்றையும் அப்படியே குப்பையில் கொட்டிவிட்டு, தான் செய்த உணவை மட்டும் தன் மகனுக்கு பரிமாறுவாள். இப்படியே சதா சர்வ காலமும் மருமகளை மட்டம் தட்டி, அவளை அழவைத்துக்கொண்டே இருப்பாள்.

சரி மாமியார் கேரக்டர்னா இப்படி தானே இருக்கும். இதுக்கெல்லாம் அந்த புருஷன் கேரக்டர் என்ன செய்தது என்று தானே கேட்கிறீர்கள்? புருஷன் கேரக்டரே இல்லாமல் அம்மாவை திருப்தி படுத்த மனைவியை புறக்கணிக்க ஆரம்பித்தான். அவனுக்காக, சொந்த ஊர், உற்றார் உறவினர், வேலை வெட்டி என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு அவனை மட்டுமே நம்பி வந்திருந்த மனைவியை எதிரி மாதிரி நடத்த ஆரம்பித்தான்.

அவன் அம்மாவும் எப்போதுமே ‘உன்னை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து, வளர்த்து, வயித்தை கட்டி வாயை கட்டி படிக்க வெச்சு, பெரிய மனிஷன் ஆக்கி இருக்கேன். இப்ப புது பொண்டாட்டி வந்தவுடனே அம்மாவை மறந்துடாதேடா. ஒண்ணு தெரிஞ்சிக்கோ, உனக்கு எத்தனை பொண்டாட்டி வேண்ணா கிடைக்கலாம். ஆனா உனக்கு அம்மானா அது நான் ஒருத்தி மட்டும் தான்...’’ என்று தாய் பாசம் சொட்ட சொட்ட எக்கச்சக்கமாய் டயலாக் அடிக்க பையனும் அம்மா செண்டிமெண்டில் அப்படியே உறுகி போனான்.

நீங்கள் கூட கேட்கலாம். இதென்ன அபத்தமான வசனம். இவன் அம்மா மட்டும் தான் அவனை கஷ்டப்பட்டு பெற்று போட்டு, வளர்த்து ஆளாக்கினாளா? அவன் மனைவி மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்து அப்படியே ரெடிமேட்டாக குதித்து விட்டாளா? அவளையும் தானே அவள் அம்மா ஆசையாய் பெற்று அரும்பாடுபட்டு வளர்த்திருப்பார். யாரோ பெற்ற பெண்ணை இப்படி இம்சிப்பது எப்படி நியாயம் ஆகும் என்று?..... சராசரி அறிவுள்ள எவருக்கும் இந்த லாஜிக் புரியும். ஆனால் இந்த பையன் தான் மெத்த படித்த மேதவிலாசியாயிற்றே. அதனால் இந்த மாதிரி சிம்பிள் லாஜிக் எல்லாம் அவனுக்கு புரியவே இல்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம். ‘இந்த பெண் வரும் வரை வீடே நிம்மதியாக இருந்தது? இவள் வந்த பிறகு என் அம்மா எப்போது:ம ஏதாவது குறை கூறி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்கிறாள். அப்படியானால் இதற்கு ஒரே தீர்வு, இந்த பெண்ணை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்து விட வேண்டியது தான்’’ என்பது தான்.

அதனால் இந்த ஆடவர் குல திலகம் ‘உன் தம்பி கல்யாணத்துக்கு போயிட்டு வாயேன், நீ ரொம்ப ஹோம்சிக்கா இருக்கே’ என்று டிக்கெட் வாங்கி கொடுத்து, மனைவியை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பேக் அப் செய்து விட்டு, எதுவுமே தெரியாத அப்புராணி மாதிரி அப்படியே நிசப்தமாகி போனான். எங்கே சொந்தக்காரர்கள் ஏதாவது கேட்டு தொந்தரவு செய்வார்களோ என்று தன்னுடைய எல்லா தொலைபேசி எண்களையும் மாற்றி வைத்துக்கொண்டான்.

இனி இரண்டாம் ஆணின் கதையை பார்ப்போமே. இவன் சரியான அறுந்த வாலு. சின்ன வயதில் இருந்து ஒரு குட்டி தெரு நாயை ஆசையாய் வளர்த்து வந்தான். அந்த நாய் தான் அவனுடைய முழு நேர விளையாட்டு துணை. பகுதி நேர பேச்சுத்துணை. இரண்டு பேருமாக சேர்ந்து அந்த ஏரியாவின் சந்து பொந்து விடாமல் ஊரையே அந்த சுற்று சுற்றி ஆராய்ந்திருந்தார்கள். இப்படி அந்த நாயுடன் ஆசையாய் உறவாடிய நேரம் போக, அந்த பையன் எப்படியோ பரிட்சைகளில் ஒப்பேற்றியதில் அவனுக்கு ஓரளவுக்கு உருப்படியான மதிப்பெண்களும் கிடைத்தன. கல்லூரியில் சீட்டும் கிடைத்தது. ஆனால் ஒரே சிக்கல், கல்லூரி வெளி மாநிலத்தில் இருந்தது. வெளி ஊருக்கு போய் படிக்கணுமா என்ற பயத்தை விட, அய், அம்மா அப்பாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம ஜாலியா இருக்கலாம் என்ற சுதந்திரமே அவனை பெரிதும் ஈர்க்க, ஆர்வமாய் கல்லூரிக்கு போக தயாரானான். ‘‘ஜிம்மிய பத்திரமா பார்த்துக்கோங்க’’ என்று எல்லோரிடமும் சொல்லி வைத்து விட்டு, இவன் பாட்டிற்கு ஹாயாய் கல்லூரிக்கு போய் இல்லாத கொட்டமெல்லாம் அடித்து என்ஜாய் செய்தான்.

இதற்கிடையில் ஜிம்மி அவனை பிரிந்த ஏக்கத்தில் வாடி, இளைத்து,நோய் வாய் பட ஆரம்பித்தது. ஜிம்மியை வெளியில் கூட்டி போக யாருமில்லை. அவன்இருந்தவரை ஜிம்மிக்கு பிடிக்குமே என்று தினமும் இளநீர் வாங்கி நீரை அ வன் குடித்து விட்டு, தேங்காயை கோரி அதற்கு கொடுத்துஅது சாப்பிடுவதை பார்த்து ரசித்து சிரிப்பான். அவன் இல்லாமல் அதற்கு வேளாவேளைக்கு சாப்பாடு வைக்க கூட யாருக்கும் நியாபகமே இருப்பதில்லை.

ஒரு விடுமுறையின் போது ஊருக்கு வந்த பையன், ஜிம்மி படும் பாட்டை பார்த்து கவலை பட்டான். ‘‘ஏன் யாரும் ஜிம்மிய கவனிக்கிறதே இல்லை?’’ என்று தன் அம்மாவிடம் சண்டை போட்டான். ‘‘எனக்கு ஆயிரம் வேலைடா, உன் நாயை பார்த்துக்கலாம் என்னால முடியாது...’’ என்று அம்மா கோபித்துக்கொள்ள, ‘‘எத்தனை தடவை சொல்லுறது நாய்னு சொல்லாதீங்க. ஜிம்மீனு சொல்லுங்க....’’ என்று கத்தியவன். அப்போதே ஒரு முடிவிற்கு வந்தான். ‘‘சரி, உங்களால பார்த்துக்க முடியலை இல்லை. ஜிம்மிய நானே கூட்டிட்டு போறேன்!’’

அவன் வீராப்பாய் சொன்னானே ஒழிய ஜிம்மிய உடன் அழைத்து போவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன 1) ஜிம்மிக்கு வயதாகி விட்டால் அதனால் முன்பு போல ஓடியாட முடியவில்லை. ரயில் பயணத்தை எல்லாம் அதனால் தாங்கிக்கொள்ள முடியுமோ முடியாதோ 2) ஜிம்மிக்கு கண் பார்வை மங்கிவிட்டதால் அதனால் புது இடங்களில் சமாளிக்க முடியுமோ, முடியாதோ 3) கல்லூரி விடுதியில் மனிதர்களை தவிர வேறு ஜீவராசிகள் வசிக்கக்கூடாது என்பது விதி. அதனால் நிச்சயம் ஜிம்மியை உள்ளே அனுமதிக்கவே மாட்டார்கள்.

ஆனால் ஜிம்மியை விட மனசு வராமல், எந்த பிரச்சனைனாலும் பார்த்துக்கலாம் என்கிற குருட்டு நம்பிக்கையில் அதனை தூக்கிக்கொண்டு ஹாஸ்டலுக்கு போனான் பையன். எடுத்த எடுப்பிலேயே வார்டன் சொல்லி விட்டார். ‘டாக்ஸ் நாட் அலவுட்.’’ ‘‘சார், ஜிம்மிக்கு வேற யாருமே இல்லை. என்னை மட்டுமே நம்பி இருக்கிற உயிரை நான் எப்படி கை விடுகிறது? ப்ளீஸ் சார். இவனால எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன். தயவு செய்து....’’ என்று பையன் ரொம்ப கெஞ்சி கேட்டதில் வார்டன் விதியை தளர்த்தி ஜிம்மியை ஹாஸ்டலில் தங்க அனுமதித்தார்.

ஆனால் சீக்காளி ஆகிவிட்ட ஜிம்மியை பராமரிக்க நேரம் பிடித்தது. அதனால் பையன் தினமும் கிளாசுக்கு தாமதமாக போனான். விரிவுரையாளனி திட்டி தீர்ந்தார். ‘‘தினமும் இப்படி லேட்டர் வர்றியே, உனக்கு வெட்கமாவே இல்லையா?’’

அவனுக்கு வெட்கமாகவே இல்லை. எவ்வளவு நேரமானாலும் ஜிம்மிக்கு அதன் வயதான காலத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகளை அவன் செய்துக்கொண்டே இருந்தான். அதன் கடைசி மூச்சு வரை.

இப்போது சொல்லுங்கள். இந்த இரண்டு ஆண்களில் யாருக்கு அதிக மதிப்பெண் தருவீர்கள்? தன்னையே நம்பி வந்த மனைவியை ஏமாற்றி நாடுகடத்திவிட்டு, எதுவுமே நடக்காதது மாதிரி கப் சிப் என்று இருந்துவிட்ட அந்த மேதவிலாதிக்கா? நாய் தான் என்றாலும், தன்னை நம்பி இருக்கும் உயிராயிற்றே என்று எதிர்ப்புக்களை மீறி தன் கடமையை செய்து முடித்த அந்த அறுந்த வாலு பையனுக்கா?

நிச்சயம் அறுந்த வாலு பையன் தான் அறுதி பெரும்பாண்மையில் ஜெயிப்பான். ஏன் தெரியுமா? அவனிடம் தான் integrity அதாவது தார்மீகம் என்கிற உயர்ந்த பண்பு இருக்கிறது.

பணம், புகழ், பெயர், ஆட்பலம், அறிவு மாதிரியான எத்தனை வளங்கள் இருந்தாலுமே, வெறும் இந்த வளங்களுக்காக நாம் யாரையும் மதித்து விடுவதில்லை. இவை எல்லாமும் இருந்தும் அதர்மமாய் செயல்படும் மனிதர்களை நம்மால் மதிக்கவே முடிவதில்லை. காரணம், தர்மம் என்பது அத்தனை முக்கியமான மனித பண்பு.

இந்த பண்பு இருக்கிறவனாக பார்த்து நீங்கள் தேர்ந்தெடுத்தால் தான் அவன் உறவில் உண்மையாக இருப்பான். இல்லை என்றால் முதல் கதையில் வந்த மேதவிலாதி மாதிரி மனைவியை முதுகில் குத்தும் துரோகியாகி விடுவான்.

அதெல்லாம் சரி, ஆணுக்கு இண்டெகிரிட்டி இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்துக்கொள்வது? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்று தான், கண்களையும், காதுகளை நன்றாக திறந்து வைத்துக்கொள்ளுங்கள். அவன் என்ன பேசுகிறான். செய்கிறான். எப்படி நடந்துக்கொள்கிறான் என்று கவனியுங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். அவன் ஒட்டு மொத்த தார்மீக பொறுப்புணர்ச்சியை அவனுடைய சின்ன சின்ன நடவடிக்கைகளில் இருந்தே கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு முதல் கதையில் வந்த மேதவிலாசி. அவன் வீட்டில் இருக்கும் திரை சீலை, மேசை நாற்காலி, கட்டில், பீரோ, அவ்வளவு ஏன் அவன் தோட்டத்தில் இருக்கும் பூச்செடிகளில் கூட வாங்கிய விலை பட்டியலை அப்படியே விட்டு வைத்திருப்பானாம். ஏன் என்று கேட்டால், பிடிக்கலன்னா எப்ப வேண்ணா திருப்பி கொடுத்துட அப்ப தான் வசதி’’ என்பானாம். இப்படி எந்த கடைக்கு போனாலும் பொருளை வாங்கி வந்து ஒரு முறை உபயோகபடுத்தி பார்த்துவிட்டு, அதிலேயே திருப்தியாகி, அத்தோடு அப்பொருளை ரிடர்ன் செய்வது தான் தலைவரின் ஆஸ்தான பொழுதுபோக்கே. இவ்வளவு சொர்ப்ப இண்டகிரிட்டி இருப்பவன், அவன் மனைவியையும்இதே மாதிரி, வாங்கி பார்த்துவிட்டு, உடனே ரிடர்ன் செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை தானே!

ஆதலினால் சிநேகிதிகளே, சின்ன சின்ன விஷயத்தில் சின்னத்தனமாய் நடந்துக்கொள்வது. சில்லறை தனமாய் பேசுவது. பொதுவான தர்ம நியாயங்களுக்கு புறம்பாக நடந்துக்கொள்வது, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் தன் சுயநலத்திற்காக பிறரை காயப்படுத்தி, பலியிடுவது மாதிரியான ஈனத்தனங்கள் செய்கிறவனா? கவனித்த மாத்திரமே அவனை அப்படியே சுழற்றிவிடுங்கள்.

அதெல்லாம் முடியாது. அவன் திருந்திடுவான். நான் திருத்திக்காட்டுறேன். ஒரு பொம்பளை நினைச்சா முடியாத காரியமா? என்று அநாவசிய வீராப்பில், இந்த மாதிரி அற்ப கேசுகளுக்கு வாழ்க்கை தர மட்டும் நினைத்து விடாதீர்கள். காரணம் இந்த மாதிரி ஈயம் பித்தளை பேரிச்சம் பழம் கேசுகள் மனித வர்கத்திற்கே பெரிய இழுக்கு. அவனை சட்டமோ, மனநல மருத்துவமோ பார்த்துக்கொள்ளும். இவனை மாதிரியான antisocial சட்டவிரோதிகளை வைத்து மல்லுக்கட்டுவது உங்கள் வேலையே இல்லை.

‘‘என்னை நம்பி வந்தவளை கடைசி வரைக்கும் கண் கலங்காமல் காப்பாற்றுகிறவன் தான் நிஜ ஆண்’’, என்று தெரிந்தவனாய், தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்ட தார்மீக பொறுப்புணர்ச்சி கொண்டவனாக பார்த்து தேர்ந்தெடுத்தோமா? ஜாலியாய் வாழ்வை ஜமாய்த்தோமா என்று இருங்கள்! இதை செய்வதுதான் உங்களுக்கான இந்த வார ஹோம் வொர்க். உங்களை சுற்றி இருக்கும் ஆண்களின் தார்மீக உணர்வை ஸ்கோர் செய்து பாருங்கள். தொட்டதிற்கெல்லாம் அய்யோ பாவம் என்று உருகும் ஓவர் செண்டிமெண்டல் கேஸுகளையும், ‘‘பாவமா, அப்படினா கிலோ எவ்வளவு?’’ என்று கேட்கும் கல்நெஞ்சக்கார கேஸுகளையும், புடைத்தெடுத்து விட்டு, சூழலுக்கு பொருத்தமான அளவில் தர்மத்தை கடைபிடிக்கும் தலைவனாக பார்த்து தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

இன்னும் இன்னும் ஆண்களிடம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டிய பண்புகள் பலவற்றை பற்றி எல்லாம், அடுத்த சிநேகிதியில்.....

6 comments:

ஜோதி கார்த்திக் said...

if any girl reads this and try to apply all lessons that you told , then she has only 1% - 5 % chance to got married

very sorry to say this...
But this is truth ..
Your articles made the girls to dislike every man instead of make them to strong in choose a good man.

Abdul Rahman said...

very nice serial

bharathi said...

its very good 23 and 24.
thank you mam

and please give only one page for boys. we are all boys waiteing for this.
by
Bharathi Raja

நாணல் said...

integrity - நிச்சயம் இருக்க வேண்டிய விடயம் தான்...இரண்டு கதைகள் மூலமா அழகாக தெளிவாக புரிந்துகொள்ளமுடிகின்றன...

ரோஸ்விக் said...

பெண்ணோ, பெண்ணின் குடும்பத்தாரோ பையனின் குண நலன்களுக்கு தரும் முக்கியத்துவத்தை விட பையனின் வீடு, சொத்து, பார்க்கும் வேலை, அவன் செய்யும் பந்தா இதற்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். இது தவறு. நீங்கள் கூறும் அனைத்தும் பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்வு செய்ய உதவும் என நம்புகிறேன்.

பையன்களை சிறு வயதிலிருந்து நல்ல குண நலன்கள் உள்ளவனாக வளர்க்க வேண்டியது அவனது தகப்பனுக்கும், தாய்க்கும் உள்ள கடமை. அதை பலர் மறந்து விடுவதனால் தான் இது போன்ற பிரச்சனைகள் அதிகமாகிறது.

பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களது பெண்ணின் மறுபக்கத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


http://thisaikaati.blogspot.com

Smart Plan said...

madam how to neglect parents thats also important an wife also so how to handle.