Tuesday, February 2, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 28

ஒரு ஆணை தேர்ந்தெடுக்க அவன் கல்வி தகுதி மட்டுமே அவ்வளவு ஒன்றும் முக்கியமில்லை, வெறும் ஏட்டு சுரக்காயாய், கார்டூன்பட புலியாய், அட்டைகத்தியாய் எல்லாம் அவன் இருந்துவிடக்கூடாதென்றால், அவன் டிகிரியை விட அதிக முக்கியம், அவனின் அறிவின் நிஜமான வெளிபாடுகளான: (1) சுயசிந்தனை (2) பகுத்தறிவு (3) திறந்தமனப்பான்மை (4) நகைச்சுவை உணர்வு (5) பரந்த மனப்பான்மை என்பது பற்றி எல்லாம் சென்ற ஸ்நேகிதியில் பார்த்தோம். இதை எல்லாம் சரிபார்த்து முடித்தாயிற்றா? வெரி குட், ஆண்களிடம் கட்டாயம் கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம் என்ன தெரியுமா? அவனுடைய சுய மதிப்பீடு, self esteem என்பார்களே அது!


சுய மதிப்பீட்டுக்கும், குடும்ப வாழ்கைக்கும் என்னங்க சம்மந்தம் என்கிறீர்களா? நம் உதாரண புருஷன் நம்பர் ஒண்ணை எடுத்துக்கொள்வோமே. இவன் ரொம்ப படித்தவன், பெரிய வேலையில் இருப்பவன், பெரிய வீடு, பெரிய கார், அழகான மனைவி என்று சகல சம்பத்தும் வாய்த்தவன்…..ஆனால் பார்க்க அவ்வளவு லட்சணமாக இருக்க மாட்டான். “பையன் நல்லா திருஷ்டி பூசனிக்காய் மாதிரி இருக்கான், கவலையே படாதெம்மா, இனிமே உனக்கு கண்ணே படாது,” என்று எல்லோரும் கேலி பேசும் அளவிற்கு தான் இருந்தான். ஆனால் அவன் மனைவிக்கு வெறும் வெளி தோற்றத்தை கண்டு யாரையும் எடை போடுவது பிடிக்காது. உருவு கண்டு எள்ளாத அவள் தன்மையினால், அவன் உடல் தோற்றத்தை அவள் கண்டுக்கொள்ள வில்லை. அதை தாண்டி, அவன் குழந்தைதனமான முகமும், வெகுளித்தனம் சொட்டும் அவன் செய்கைகளும் அவள் தாய்மை உணர்வுகளை பெருதும் தூண்டியதால், அவன் மீது அவளுக்கு அப்படி ஒரு “இது”. “இவன் மூஞ்சுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா, பையன் ரொம்ப கொடுத்து வைத்தவன் தான் போ” என்று தான் எல்லோரும் நினைப்பீர்கள்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அந்த பையனுக்கு தன் மீது பெரிய சுயாபிமானம் இல்லை என்பதால், எப்போதும் அவன் மனதில் ஒரு பெரிய சஞ்சலம், “என் முகத்தை தான் நான் தினமும் கண்ணாடியில் பார்க்கிறேனே. என் அம்மாவே நான் அழகா இல்லைனு அடிக்கடி குத்தி காட்டுறாங்க, அப்பா என்னடான்னா, வெயிட்டை குறைடா, பொண்ணுங்க எல்லாம் உன்னை வேண்டாம்னு சொல்லுறாங்கனு சொல்லி சொல்லி காட்டுறார்….இது வரை எவளும் என்னை திரும்பி பார்த்ததே இல்லை….ஆனா இவ மட்டும்….உண்மையிலேயே இவ என்னை நேசிக்கிறாளா, இல்லை வேற ஏதாவது உட்காரணம் இருக்கா?” என்று சதா மனைவியை சந்தேகப்பட ஆரம்பித்தான். அவனை பொருத்தவரை அவனிடம் இருந்த ஒரே கவர்ச்சி அவனுடைய பணம் தான். அவன் அம்மா வேறு எப்போது பார்த்தாலும், “ஜாக்கிரதைடா, உன் பணத்துக்காக உன்னை மயக்கி ஏமாத்தீட போறா, அவ கிட்ட உஷாரா இரு” என்று சதா ஓதிக்கொண்டே இருக்க, அவ்வளவு தான்! பையன் தன் மனைவியை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக அவள் தன் டைரியில் கிறுக்கிய வரிகளை மட மடவென படித்தான். தன்னை பற்றி குறையாக ஏதாவது எழுதி வைத்திருக்கிறாளா என்று தேடி தேடி பார்த்தான், கடைசியில் பார்த்தால், அவள் ஏதோ பாட புத்தகத்தை படித்துவிட்டு, எடுத்து வைத்த குறிப்புக்களை தான் டைரி முழுக்க கிறுக்கி வைத்து இருந்தாள்….அவளுடைய சொந்த அபிப்ராயங்கள் எதுவுமே அதில் இல்லை. உடனே சமாதானம் அடைந்தான். ஆனால் அடுத்து இன்னொரு சந்தேகம் தலைதூக்கியது. அவள் கைபைகளை சோதனை செய்தான். அதிலும் கள்ளத்தனமாய் எதுவுமே இல்லை, ஒரு தனி கவரில் அவன் புகைபடங்களை தான் வைத்திருந்தாள். அதை பார்த்து லேசாய் நம்பிக்கை தலை தூக்கினாலும் மனம் ஆறவில்லை.

அவள் ஈ மெயிலை “எனக்கு திறந்து காட்டு, எனக்கு தெரியணும் நீ யாருக்கு என்ன எழுதுறனு?” என்று அடம் பிடித்தான். அவள் ஆரம்பத்தில் ஆட்சேபித்தாலும், அவன் இன்செக்யூரிட்டி ஒழிந்தால் சரி, எப்படியும் மடியில் தான் கணம் இல்லையே என்று தன் ஈ மெயிலை திறந்து காண்பிக்க, அதை நோட்டம் விட்டவன், தன்னை பற்றி அவள் எதுவுமே எழுதவில்லை, அவளுக்கு கள்ள காதலர்கள் யாரும் இல்லை, என்பதை கவனித்தான். ஆனாலும் “எனக்கு தெரியாம இன்னொரு ஈ மெயில் வைத்திருக்கியோ என்னவோ…?” என்று அவன் இழுத்த இழுப்பில் அவன் மனைவி மலைத்து போனாள்.

அந்த வீட்டிற்கு தச்சர், மின்சார ஊழியர் என்று யாரவது ஒரு ஆண் வந்தாலே போதும், “நீ வேற வீட்டுல தனியா இருந்திருந்தியே, அவன் என்ன பண்ணான்? நீ என்ன பண்ணே, எவ்வளவு நேரம் இருந்தான்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டு தன் மனதின் விகாரங்களை வெளிபடுத்த ஆரம்பித்தான்.

சரி தான் புருஷணுக்கு ஏதோ தாழ்வு மனப்பான்மை, என்று புரிந்தாலும், தன் அன்பு 100% அக்மார்க சுத்தம் தான் என்பது போக போக அவனுக்கு புரியாமலா போய் விடும் என்று அவன் மனைவி தைரியமாய் இருந்தாள்…. ஆனால் எவ்வளவு தான் தூய்மையான பசும்பாலாய் அன்பை பொழிந்தாலும், அதை ஏந்திக்கொள்ளூம் பாத்திரம் அசுத்தமானதாய் இருந்தால் பால் திரிந்துதானே போகும்! அவன் மனைவி என்ன தான் அன்பு, பாசம், அரவனைப்பு என்று அவனிடம் பழகினாலும், “இது நிஜம் தானா?” என்கிற அவன் சந்தேகம் மட்டும் தீர்ந்தபாடே இல்லை.

ஆக ஸ்நேகிதிகாள், ஒரு ஆண் எவ்வளவு படித்தாலும், பணக்காரனாய் இருந்தாலும், பெரிய பெரிய பதவிகள் வகித்தாலும், அவனுக்கு தன் மீது ஒரு சுய அபிமாணம் இல்லை என்றால் அவனும் நிம்மதியாக இருக்க மாட்டான், அவனை சார்ந்தவர்களையும் நிம்மதியாய் இருக்க விட மாட்டான்.

அதற்காக ஓவர் சுய அபிமாணம் இருக்கிறவனாய் இருந்தாலும் கஷ்டம் தான். உதாரணத்திற்கு இன்னொரு ஆணை எடுத்துக்கொள்வோமே….இவன் ஏழை குடும்பத்தில் பிறந்து, தன் தாயில் கடும் உழைப்பு, சிக்கனம், தியாகம், ஊக்கம், தந்தையின் தந்திரம், ஆள் தொடர்பு, பக்க பலம், ஆகிய அத்தனை அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு ஒரு வழியாய் படித்து முடித்து உருப்படியான வேலைக்கு போய், உயர் பதிவிக்கும் வந்தான். அவன் ஒட்டுமொத்த வம்சாவழியில் இவன் தான் மிக பெரிய சாதனையாளன் என்று பெருமை பட்டு, “என் பையனுக்கு தான் ராஜவடு” என்று இவன் அம்மா எப்போதும் புகழாறம் சூட்டிக்கொண்டே இருக்க, இந்த பெருமை எல்லாம் பையன் தலைக்கே ஏறிவிட்டது. இந்த அண்ட சராசரத்திலேயே தன்னை மாதிரி அறிவாளி, திறமைசாலி, பேரழகன், பராகிரமசாலி, இத்யாதி, இதியாதி வேறு எவனுமே இல்லை என்று தன் மீதே அவனுக்கு அத்தனை காதல். இப்படி அளவிற்கதிகமான இந்த சுய அபிமானத்தை தான் narcissism என்போம்.

இப்படி நார்சிஸிட்டாக இருக்கும் இந்த ஆணை கட்டிக்கொண்டவளின் நிலையே யோசித்து பாருங்களேன்….தான் என்னவோ பெரிய கொம்பன், தன்னை கட்டிக்க இவள் பல யுகங்கள் தவம் இருந்திருக்க வேண்டுமாக்கும் என்கிற இலக்காரம் அவனுக்கு. “என்ன தெரியும் உனக்கு! அறிவுகெட்ட முண்டம், சொல்ற பேச்சை கேட்டுகிட்டு ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டுல இருக்குறதுனா இரு, இல்லன்னா, அதோ தெரியுது பார், அது தான் கதவு, வெளிய போ!” என்று தினமும் அவன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே இருப்பான். அவள் சின்னதாய் ஏதாவது தவறு செய்தாலும், ஏதோ உலகிலேயே மிக சொற்ப அறிவுள்ளவள் என்கிற அளவிற்கு அவளை மட்டம் தட்டி பேசி காயப்படுத்துவான். அவள் எதிரிலேயே மற்ற பெண்களின் அழகை, அறிவை, திறமையை, பிள்ளை வளர்ப்பு சாமர்த்தியத்தை என்று சகலத்தையும் ரசித்து வர்ணிப்பான், “அவளை பார்…என்னம்மா உடம்பை வெச்சிருக்கா, நீயும் இருக்கியே, மாடு மாதிரி சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க தான் லாயக்கி. நீ இப்படியே இருந்தீனா, நான் எவளையாவது சின்ன வீடா செட் அப் பண்ணீக்க வேண்டியது தான் போ”

இவன் இப்படி எல்லாம் சொல்லும் போது அவன் மனைவிக்கு பற்றிக்கொண்டு வரும், “உன் மூஞ்சை ஒரு தடவையாவது கண்ணாடியில பார்த்திருக்கியா? உன் கட்டிக்க மாட்டேன்னு எல்லா பொண்ணுங்களும் சொன்னதுனாலே தானேடா நீ என்னையே பார்க்க வந்தே. என் நிலைமை சரியில்லை, என் தலை எழுத்து, உன்னை கட்டிக்கிட்டேன்… உனக்கு பொண்டாட்டினு ஒருத்தி கிடைச்சதே அதிகம், நீ கெட்ட கேட்டுக்கு ஒரு வெப்பாட்டி வேற கேட்குதா? வாய் கிழிய பேசுகியே, பயந்தாங்கொளி! எந்த பிரச்சனை வந்தாலும் என்கிட்ட தானேடா வந்து அழுவுற…அப்ப மட்டும் நான் வேணுமா?” என்று மனதிற்குள் குமைந்துக்கொள்வாள். அவளுக்கும் ஒரு காலம் வந்தது….அவன் திமிரும் ஆணவமும் அவன் வேலை இடத்தில் அவனுக்கொரு கெட்ட பெயரையும், பிரச்சனைகளையும் சம்பாதித்து தர, அவன் பதிவிக்கு பேராபத்து வந்த போது இவள் மடியில் படுத்து தான் புலம்பிதள்ளினான். அதுவரை, அவளையும் அவள் குடும்பத்தையும், அவள் தாயில் கற்பு நெறியை பற்றியும் அவ்வளவு துச்சமாய் பேசியவன், அதன் பிறகு அந்தர்பல்டி அடித்து, சூப்பர் குட் பாய் ஆனான், என்றாலும் பழைய புத்தி அடிக்கடி திரும்பிவிடும். அவன் நிலைமை கொஞ்சம் முன்னேறினாலும் போதும், “இது தான் கதவு, வெளியே போ, நான் எவளாவது ஒரு வைப்பாடியுடன் டோரோ போரா போகிறேன்” என்பான்.

ஆக சுய அபிமானமே இல்லாதவனாக இருந்தாலும் ஆபத்து, சுய அபிமாணம் ஓவராய் ததும்பி வழிபவனாக இருந்தாலும் அதை விட ஆபத்து…..நியாயமான அளவு சுய அபிமானம் இருப்பவனாய் இருந்தால் தான் எப்போதுமே ஸ்திர நிலையாய் இருப்பான்.

அதெல்லாம் சரி இந்த நியாயமான சுய அபிமாணம் இருக்கும் ஆணை எப்படி கண்டு பிடிப்பதாம்? என்று தானே கேட்கிறீர்கள்! சிம்பிள்! 1) சுய அபிமாணம் இருக்கிறவன், பிறர் தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்கு எல்லாம் ஓவர் முக்கியத்துவம் தரமாட்டான், தன் நம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து இருப்பான். அவன் மீது ஏதேனும் குறைகள் இருந்து அதை யாரும் சுட்டி காடினாலும், அதையும் ஸ்போர்டிவ்வாய் எடுத்துக்கொள்வான். சுய அபிமாணம் இல்லாதவன், மற்றவர் அவனை பற்றி நல்லதாய் சொன்னாலும், “உண்மைய தான் சொல்லுறாங்களா, இல்லை உள்ளூக்குள்ள வேற ஏதாச்சும் நினைக்கிறாங்களா?” என்றூ சதா சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பான். ஓவர் சுயாபிமாணம் இருப்பவனோ, பிறர் தன்னை பாராட்டவில்லை என்றாலும், “ஐ ஆம் தி கிரேட்டஸ்ட்!” என்று தானே நினைத்துக்கொண்டு பீற்ற ஆரம்பித்துவிடுவான்.

2) தன்னை பற்றி ஆரோகியமான சுய மதிப்பீடு வைத்திருப்பவன், தன்னை இன்னும் இன்னும் மேம்படுத்திக்கொள்ள பார்ப்பான். எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல், பழம் பெருமைகள் பேசிக்க்கொண்டே பொழுதை போக்காமல் புதுமைகளையும், புரட்சிகளையும் பரிட்சை செய்து பார்ப்பான். சுய மதிப்பு இல்லாதவன் தன்னை பற்றி பெருமை பட எதுவுமில்லை என்று,” எங்க தாத்தா, எங்க ஊர், எங்க ஜாதி, எங்க மொழி, எங்க தெருகோடி, எங்க வீட்டு சமையல்…” என்று பிறவற்றின் பெருமை நிழலியே இருந்துவிடுவான். ஓவர் சுயாபிமானம் இருப்பனா!, ஊருக்கே தெரிந்திருக்கலாம், அவன் அம்மா ஒரு பணப்பைத்தியம், அப்பா ஒரு ஸ்திரி லோலன், உடன் பிறந்தவன் ஒரு உதவாகரை என்று ஆனால் அவன் “என் பரம்பரை மாதிரி வருமா? என் குடும்பம் தான் இருப்பதிலேயே சூப்பர்!” என்றூ குருட்டுத்தனமாய் எதையாவது நம்பி, பிறரும் அதையே நம்பித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்துவான்.

3) தன் மீது நல்ல மதிப்பு வைத்திருப்பவன் பணிவாய் இருப்பான். பிறரையும் தன்னை போலவே சமமாக மதித்து நடத்துவான். இருப்பவரிடம் ஒரு மாதிரி, இல்லாதவரிடம் வேறு மாதிரி என்கிற பாரபட்சம் இல்லாமல் எல்லோர் இடமும் இன்முகமாய் பழகுவான். அனால் சுய மதிப்பில்லாதவன், பிறர் தன்னை பரிகாசம் செய்வதாய் எப்போதுமே நினைத்து அஞ்சுவதால், ஒதுங்கியே வாழ்வான், யாரிடமும் சகஜமாய் பழகமாட்டான். ஓவர் சுயாபிமானத்தில் மிதப்பனவோ, ”பணிவா, அதெல்லாம் கிலோ எவ்வளவு?” என்று கர்வம் ததும்ப, எப்போதுமே சுய பிரதாபம் பாடிக்கொண்டு, தன்னை சுற்றி ஒரு ஜால்ரா கோஷ்டியை மெயிண்டேன் பண்ணிக்கொண்டே இருப்பான்.

4) இதை எல்லாவற்றையும் விட முக்கியமாய், ஆரோகியமான சுயமரியாதை உள்ளவன் பெண்களை கண்ணியமாக நடத்துவான். பொம்பளை என்றால் மட்டம், என்றெல்லாம் மடத்தனமாய் சொல்லிக்கொண்டு திரியாமல், ”வேற்று பாலினமாய் இருந்தால் என்ன, அவளும் என்னை மாதிரி ஒரு மனிஷிதானே, எனக்கு இருக்கிற அதே உரிமை தானே அவளுக்கும்”, என்று இலகுவாக பழகுவான். அதுவே சுயமரியாதை கோளாறு உள்ளவனாய் இருந்தால், “பொம்பளையா அடக்கமா இரு, இல்லைனா உன்னை தரையோட போட்டு தேய்ச்சு எடுத்துடுவேன்” என்றெல்லாம் பிதற்றுவான்.

ஆக ஸ்நேகிதிகாள்….ஒரு ஆணிடம் பெரிய அழகே அவனுடைய சுயமரியாதை, தன்னை பற்றி அவன் பைத்திருக்கும் அந்த தன் மதிப்பீடு தான். அதில் குறை இருந்தாலும் கஷ்டம், கூடுதலாய் இருந்தாலும் இம்சை என்பதால், அளவான ஆரோகியமான சுய மதிப்பீடு, healthy self esteem இருக்கும் ஆணாய் பார்த்து தேர்ந்தெடுங்கள், உங்கள் வாழ்க்கை எப்போதுமே இனிமையாய் இருக்கும்.
அது சரி எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் நல்லது, எந்தெந்த அம்சங்கள் ஆணுக்கு அழகு என்று இத்தனை வாரங்களாய் பார்த்தோமே. எப்படி பட்ட அம்சங்கள் ஒரு ஆணுக்கு இருக்கவே கூடாது என்றும் தெரிந்துவைத்துக்கொள்வது முக்கியமாயிற்றே….அது பற்றி எல்லாம் அடுத்த ஸ்நேகிதியில்!

5 comments:

Ganesan said...

அன்புள்ள மருத்துவருக்கு,

தங்களை மதுரை கருத்தரங்கில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி.
கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை தொகுத்து வழங்கியவன்.

அந்த நிகழ்வு பற்றிய பதிவு எழுதிகொண்டிருக்கிறேன்.
மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.

www.kaveriganesh.blogspot.com


அன்புடன்
காவேரி கணேஷ்

தேவன் மாயம் said...

சுயஅபிமானம் பற்றி நன்றாக விளக்கியுள்ளீர்கள்!!!

மதுரையிலும் உங்கள் கருத்துக்களும் பதில்களும் அருமை!!

தேவா.

தேவன் மாயம் said...

மதுரை கருத்தரங்கு பற்றி என் இடுகையை நேரமிருப்பின் படிக்கவும்.http://abidheva.blogspot.com/2010/02/blog-post.html

தேவா

PARIMALA said...

எல்லாவற்றையும் லேட்டாக தெரிஞ்சு கிட்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கிறேனே, இதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க டாக்டர்?

Anonymous said...

I am in abroad. How to buy your books online?