Friday, February 12, 2010

ஆனந்த விகடனில்....




The original.....

என்னை பற்றி ஸ்பெஷலாய் சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. நான் பிறந்த போது அதிசயங்கள் எதுவும் நிகழவில்லை. எத்தனையோ குழந்தைகள் அதே தேதியில், ஏன் அதே நேரத்தில் கூட பிறந்திருக்கலாம், ஆனால் நான் இப்போது உள்ளபடி ஆவதற்கு முதல் காரணம் என் அப்பா. எங்கே போனாலும் நிறைய புத்தங்களை வாங்கிக்கொண்டு வருவார், அதனால் சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரே புத்தமோகம் தான். அம்மா சொல்லுவார்கள், மற்ற பிள்ளைகளை படி படி என்று மிரட்ட வேண்டி இருக்குமாம், என்னை மட்டும் படித்தது போதும் வந்து சாப்பிடேன் என்று மிரட்டினால் தான் புத்தகத்தையே மூடுவேனாம்.


எங்கள் வீட்டில் எல்லோருமே அறிவியல் ரீதியாகவே யோசிப்பார்கள். உணவு மேசையில் உட்கார்ந்து அறிவியல் பேசிக்கொள்ளும் விசித்திரமான குடும்பம் நாங்கள். அப்பா சொல்வார், வெறும் விந்தணுவிலிருந்து உயிர் வர்றாது, அதே போல வெறும் கருமுட்டையிலிருந்தும் உயிர் வர்றாது. இரண்டும் எந்த மதிப்புமே இல்லாத பூஜியங்கள் தான், ஆனால் இந்த இரண்டு பூஜியங்களும் இணைந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. ஆக ஆரம்பம் என்பது எப்போதுமே பூஜியம் தான், அதற்கு பிறகு கிடைப்பது எல்லாமே ப்ளஸ் தான், என்பார். இந்த அளவுக்கு அறிவியலையும் மெஞ்ஞானத்தையும் கலந்து பேசும் தன்மை கொண்ட அந்த அப்பாவுடன் சின்ன வயதிலிருந்தே நிறைய சையின்ஸ் பேசி பேசி, அறிவியல் ரீதியாக யோசிப்பதென்பதே என் இயல்பாகி விட்டிருந்தது.

அதனால் என் அம்மாவுக்கு என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் எனக்கு மெடிகல் காலேஜை பற்றியும், அங்கே போனால் படிக்க வேண்டிய குண்டு குண்டு புத்தங்களை பற்றியும் ஏற்கனவே தெரியும் என்பதால், அவ்வளவு எல்லாம் மெனக்கெட எனக்கு இஷ்டமே இல்லை. அதுமட்டுமல்ல, பதின் பருவத்தின் உச்சத்தில் எனக்கு புதிதாய் பல சிதறல்கள். நான் படித்ததென்னவோ ஹிந்தியை இரண்டாம் மொழியாய் கொண்ட CBSE பள்ளிக்கூடத்தில், மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள எல்லோரையும் போல நானும் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் இரண்டாம் மொழிக்கு மாறினேன்.

அப்போதெல்லாம் எனக்கு தமிழ் எழுத படிப்பதென்றால் ரொம்ப கஷ்டம், எந்த இடத்தில் எந்த ர, எந்த ல, எந்த ந வரும் என்று தெரியாமல் ரொம்ப திண்டாடுவேன். இந்த லட்சணத்தில் தமிழில் கட்டுரை எல்லாம் வேற எழுத வேண்டும். எங்கள் பள்ளியிலோ ஒவ்வொரு எழுத்து பிழைக்கும் கால் மதிப்பெண் கட் என்கிற விதி இருந்தது. இந்த கெடுபிடியில் நான் தப்பும் தவறுமாய் எழுதிய தமிழ் கட்டுரைக்கு முழு மதிப்பெண் கொடுத்திருந்தார், எங்கள் தமிழ் ஆசிரியை கல்யாணி வரதராஜன். எனக்கு பெரிய அதிர்ச்சி, அதை விட பெரிய அதிர்ச்சி, ஆசிரியை என்னை கூப்பிட்டு, ”அழகா எழுதுற, கவிதை போட்டிக்கு எழுது” என்று சொன்னது. எழுத்து பிழைகளை மீறி, எதிர்பாராமல் கிடைத்த இந்த ஊக்குவிப்பால், நான் தொபக்கடீரென்று தமிழ் மீது காதல் கொண்டேன்…..அப்பா பத்திரமாக சேர்ந்து வைத்திருந்த எட்டு தொகை பத்து பாட்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் என்று எல்லாவற்றையும் சுட்டு சுட்டு படிக்க ஆரம்பித்ததில், தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு உயிரியல் பாடத்திலும் எக்கசெக்க ஆர்வம் இருந்ததால், அதையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து படித்து கிழித்ததில் அதிலும் ஓவராய் மதிப்பெண் வாங்கிவிட, என் அம்மாவுக்கோ என்னை டாக்டராக்கியே தீரவேண்டும் என்கிற கனவு.

கடைசியில் அம்மா என்னோடு ஒரு டீல் பேசினார்கள், ”நீ எனக்காக உன் வாழ் நாளின் ஐந்து வருடங்களை செலவழித்து MBBS படித்தாய் என்றால், அதன் பிறகு நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன், டாக்டருக்கு படித்துவிட்டு நீ வேறு என்ன வேண்டுமானாலும் படி, செய்”, என்றார்கள். பெற்ற தாய்க்காக என் வாழ்நாளின் 5 ஆண்டுகளை தியாகம் செய்து தான் தொலைப்போமே என்று சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியின் வரலாற்றிலேயே கரஸ்பாண்டென்ஸில் MBBS படித்த ஒரே மாணவி நானாகத்தான் இருப்பேன்….அவ்வளவு சொர்ப்ப அட்டெண்டென்ஸ் தான் எனக்கு. தினமும் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே எகிறி குதித்து மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவேன்……வழக்கமாக ஆண்கள் தான் இந்த வானர வேலைகளை செய்வார்கள் என்பதால் ஆசிரியர்கள் எல்லோருமே ஆண் மாணவர்களை தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் ஜன்னல் வழியே குதித்த கண்கொள்ளா காட்சியை காணத்தவறிவிடுவார்கள்! நான் பாட்டிற்கு வீட்டுக்கு ஓடி போய் கதை புத்தகங்களை படித்தும், எழுதியும் கொண்டிருப்பேன். சில சிறுகதைகளும், கவிதைகளும், நாவல்களும் பிரசுரமாகி என்னை எழுத்து மோகத்தில் ஆழ்தியும் விட்டன.

இப்படி எல்லாம் நான் ரொம்ப ஸ்ரத்தையாய் கட் அடித்துக்கொண்டிருந்த போது எங்களுக்கு முதலாம் ஆண்டின் அறிமுக பாடமாய் சைக்கியாட்டிரி பற்றி கிளாஸ் எடுக்க வந்தார் அப்போது எங்களுக்கு உதவி பேராசிரியராய் இருந்த மனநலமருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள். மிக ஸ்வாரசியமாக, தெளிவாக அவர் நடத்திய வகுப்பை ஒரே ஒரு நாள் தப்பித்தவறி கவனித்ததன் விளைவு, சைக்கியாட்ரிஸ்டாகியே தீரவேண்டும் என்று அன்றே முடிவு செய்துவிட்டேன். MBBS படித்து முடித்தால் தான் சைக்கியாட்டரி பக்கமே போக முடியும் என்கிற ஒரே காரணத்திற்காக, 5 வருடம் மாங்கு மாங்கு என்று மருத்துவம் படித்து முடித்து, மறு ஆண்டே மனநலமருத்துவம் படிக்க சேர்ந்துவிட்டேன்.

நான் மனநல மருத்துவம் தான் படிப்பேன் என்று அடம் பிடித்த போது, “பார்த்து, உங்க பொண்ணு மெண்டலாயிட போகுது” என்று பலர் என் அம்மாவை பயமுறுத்தினார்கள், ஆனால் என் அம்மா நாங்கள் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணின டீலை மதித்து ஆட்சேபிக்காமல் இருந்தார்கள், நான் மதுரை மருத்துவ கல்லூரியில் சைக்கியாட்டரி படிக்க சேர்ந்தேன். பாண்ட் சட்டை போட்ட மெட்ராஸ்கார பெண் என்பதாலேயே சில பல சிக்கல்களை நான் சந்திக்க நேர்ந்தாலும், என் பேராசிரியர் திரு கோவர்தனன் அவர்கள் எப்போதுமே எனக்கு பக்க பலமாய் இருந்தார், என்னை ஊக்குவித்து என் அறுவியல் பார்வையை மேலும் கூராக்கினார். எனக்கு கூடுதல் பொறுப்புக்களை கொடுத்து என் திறமைகளை வளர்த்தார். நான் படித்து முடித்து சைக்கியாட்ரிஸ்ட் ஆனேன். உடனே மேற்கொண்டு படிக்க வேண்டும், வெளி நாட்டிற்கெல்லாம் போய் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மற்ற மாணவர்களை போல நானும் யோசிக்க ஆரம்பித்த போது, “இந்தியாவிலேயே இருந்து நோயாளிகளை பார், ஒரு மருத்துவருக்கு புத்தகமே நோயாளிகள் தான்” என்று எனக்கு அறிவுறுத்தினார் மனநல மருத்துவர் முத்தழகன் அவர்கள். அவர் அறிவுரையின் படி நான் படித்து முடித்த அடுத்த மாதமே மைண்ட் ஃபோகஸ் என்கிற மனநல கிளினிக்கை ஆரம்பித்து பிராக்டிஸ் செய்தபடியே பி எச் டி ஆராய்சியையும் துவக்கினேன். இந்த ஆராய்ச்சி என்னை எத்தனையோ வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று, பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து எத்தனையோ பிரயோஜனமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. இதனால் என் பார்வை வட்டம் விரிந்துக்கொண்டே போனது.

ஒரு சராசரி இந்திய பெண்ணை போல நான், என் வீடு, என் குடும்பம், குட்டி என்று சின்ன குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல், உலகத்திற்கு உபயோகமாய் ஏதாவது செய்யும் ஆர்வம் அதிகரிக்க, மனநலசேவை மற்றும் ஆராய்சி அரக்கட்டளை என்கிற ஒன்றை உருவாக்கி பல கிராமங்களுக்கு போய் பொதுமக்களிடம் பணியாற்றிய போது தான் கவனித்தேன்…. இந்த கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடிமக்களிடம் எவ்வளவு அறிவியல் அறியாமை இருந்ததென்று. தன் உடம்பு எப்படி இயங்குகிறது என்று கூட தெரியாமல் ஆண்கள் படும் அவஸ்தையை பார்த்து ஆட்சரியபட்டேன். அப்போது ஒரு பத்திரிக்கையில் பாலியல் பற்றிய ஒரு தொடரை எழுத எனக்கு அழைப்பு வர, ஆரம்பத்தில் நான் தயங்கினேன்…..அப்புறம் என் பாட்டியின் எதற்கும் அஞ்சாதகுணம் எனக்குள்ளும் தலைதூக்க, அறிவியல்ல ஆண் என்ன பெண் என்ன, என்று களமிறங்கினேன். அதுவரை, கொச்சையாகவும் இழிவாகவும் மட்டுமே எழுதப்பட்டுவந்த காமத்தை பற்றி நான் கம்பீரமான அறிவியல் நடையில் எழுதியது பலரது கவனத்தை திருப்ப, மேலும் பல தொடர்களையும், புத்தங்களையும் எழுதும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன.

எனக்கு இயல்பிலேயே வந்த மொழிதிறன், அறிவியல் சிந்தனை, இரண்டையும் குழைத்து வெளிபடுத்துவது எனக்கும் ரொம்ப எளிதாக இருந்ததால், நிறைய எழுதவும் பேசவும் செய்தேன்….அதனால் தமிழ் கூறும் நல்லுலகில் என் பெயர் தலைதூக்க ஆரம்பித்தது. நான் எல்லோருக்கும் பரிச்சையமான நபரானேன்…. என் அம்மா உடனே சொல்லுவார்கள், ”பார் நான் சொன்னபடி நீ டாக்டருக்கு படிச்சதனாலே தானே உனக்கு இவ்வளவு பெருமையும்” என்று……..என்னுடன் நூற்றி எண்பது பேர் டாக்டருக்கு படித்தார்கள் அதே சென்னை மருத்துவ கல்லூரியில். ஆனால் நான் ஒருத்தி மட்டும் தான் தமிழும் படித்தேன். அதுவும் ஜன்னல்வழியே குதித்தோடிப்போய்! That has made all the difference!

22 comments:

butterfly Surya said...

ந்கைச்சுவையுடன் அருமையான எழுத்து நடை.

மேலும் சாதிக்க வாழ்த்துகள்.

அம்மாவிற்கு வணக்கங்கள்.

நேசமித்ரன் said...

உங்களின் தமிழ்முகம் அறிய வாய்ப்பாய் இருந்தது மருத்துவரே!

மிக்க மகிழ்ச்சி !சேவைகள் தொடரவும்
உயரங்கள் கடக்கவும் வாழ்த்துகள்!

ஜெ.பாலா said...

வணக்கம் சகோதரி,

தங்களின் தமிழுக்கும் அம்மாவிற்கும், முக்கியமாய் அப்பாவிற்கும் அன்பான வணக்கம்,
மொழிநடை மிக சிறப்பு. பெரிய தொடர்ந்த வார்த்தைகளானாலும் வாசிக்க தொய்வில்லாத நடை. தொடருங்கள்..

வால்பையன் said...

படித்தேன்! நன்றாக இருந்தது!

நீங்கள் மதுரையில் படித்த வருடம் தெரிந்து கொள்ளலாமா!?

கந்தகாமேஸ்வரன் நம்பர் கேட்டிருந்தேனே!

கண்ணகி said...

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...

PARIMALA said...

அதுமட்டுமல்ல, பதின் பருவத்தின் உச்சத்தில் எனக்கு புதிதாய் பல சிதறல்கள்---something fishy!!!wat's it?

sumathi said...

I read the same from the Vikatan magazine already. It is really impressing us to see such Tamil loving person. we (my husband and myself) used to talk after long time, our Tamil language is going to vanish completely. but looking at you the way of talking in pure Tamil. No way!, it is not going to happen. people still love Tamil ... I like it. Keep it up your writing in Tamil and your social work via your research center. we all need your service!

Prabu M said...

//எனக்கு இயல்பிலேயே வந்த மொழிதிறன், அறிவியல் சிந்தனை, இரண்டையும் குழைத்து வெளிபடுத்துவது எனக்கும் ரொம்ப எளிதாக இருந்ததால், நிறைய எழுதவும் பேசவும் செய்தேன்….//

உண்மை..

Unknown said...

உங்களது இந்தப் பதிவை படித்தவுடன் எனக்கு உங்களிடம் ஒரு விஷயத்தை பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது...அது என்னவென்றால்...

இப்போதெல்லாம் அடிக்கடி சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரை காண முடிகிறது(கிராமங்கள் உட்பட). மிகுந்த வலியும்,வேதனையும் என்னுள் எழும் தருணங்கள் அவை.அப்படி அவர்களை காணும் போதெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாத ஒரு கையாலாகதனம் என்னை வாட்டி வதைக்கும்.

உங்களிடம் நான் சொல்ல வருவது.... ஏன் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கென உங்கள் வேலைபளுவிற்கிடையில் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களது அந்த பரிதாப நிலைமாற உதவிகள் செய்ய கூடாது.

என் போன்றவர்களுக்கு இதில் உள்ள பிரச்சனைகள் என்னவென்றால்...

அவர்களை எப்படி அணுகுவது?
அப்படியே அவர்களை அணுகினாலும் அவர்களை எந்த மருத்துவரிடம் அழைத்து செல்வது?

அப்படியே அழைத்து சென்றாலும் அவர்கள் குணமடைவதற்கான முழு செலவினங்களையும் தனியொருவராய் எப்படி பொறுப்பேற்பது?போன்ற சிறுசிறு தயக்கங்களே ஆகும்.

உங்களை போன்றவர்கள் இதில் முனைப்பெடுத்தால் நான் என்றில்லை எத்தனையோ தனியார் தொண்டு நிறுவனங்களாகட்டும்,இதில் ஊக்கமுடையவர்களாகட்டும் தங்களது கரங்களை உதவிட நீட்டுவர்.உங்களை போன்ற வேறு பல மருத்துவர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும்.அவரவர் வாழும் பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொண்டாலே போதும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்துவிடும்.

ஏதோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது சுட்டிகாட்டினேன். ஏற்றுக்கொள்ள முடிந்தால்....நீங்களே முனைப்பெடுக்கலாம்... என் போன்றவர்கள் நிச்சயம் கைகோர்ப்பார்கள்!!!!

Sita said...

Dear Dr.Shalini,
I happened to know you thru'
your mana nalam Programs in Podhigai.Thanks a Lot for your advice ,many of which have helped me not only in my personal life but alsowith others in my profession as a Teacher and Counsellor..I am curious[not idle] about your Phd.Thesis.Could you blog on that,too.?This is my first visit to your blog and I found many interesting headings .Could you kindly tell where those articles are? As a Tsunami survivor,I need to learn more on that?
thanking you in Advance.
Sita

flower said...

welcome. one more MAYAVATHI in tamil nadu.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களுக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கு பாராட்டுக்கள்..
அவர்களின் ஆசையை நிறைவேத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் :)

பனித்துளி சங்கர் said...

ரசிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியான எழுத்து நடை .இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் ! பகிர்வுக்கு நன்றி !

Sumathi. said...

ஹாய் ஷாலினி,
நான் இன்னைக்குத் தான் இந்த பக்கமே வர்ரேன். அழகா எழுதறீங்க. நான் கூட உங்களோட ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படிங்கற கட்டுரையை படிச்சுட்டு வர்றேன். எனக்கு ஒரு கேள்வி. என் கணவர் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு செல் இழப்பு ஏற்பட்டு இப்போது தேறிட்டாலும் கூட அவரோட நடவடிக்கை முன்பு போலில்லை. என் கேள்வியே இடு தான். ஒரு சாதாரண மனிதனின் நடவடிக்கையும் இதுபோல செல் இழந்தவரின் நடவடிக்கையும் மாறுபடுவது ஏன்? நானும் பல மனோதத்துவரிடம் காண்பித்துவிட்டேன், ஆனாலும் சரியான காரணங்கள் தான் கிடைக்கவில்லை.பதில் சொல்வீர்களா?

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள்...

DREAMER said...

பாராட்டுக்கள்..

-
DREAMER

அண்ணாமலையான் said...

சுவாரஸ்யமாக இருக்கிறது

எல் கே said...

congrats and wishes

Siddharth said...

hi Doctor,
we liked your simple but sweet story

பதி said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஷாலினி..

மற்றபடி, உங்களைப் பற்றி எங்காவது கூற நேர்ந்தால், நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியதை மறக்காமல் கூறுங்கள் !!!!

//என்னுடன் நூற்றி எண்பது பேர் டாக்டருக்கு படித்தார்கள் அதே சென்னை மருத்துவ கல்லூரியில். ஆனால் நான் ஒருத்தி மட்டும் தான் தமிழும் படித்தேன். அதுவும் ஜன்னல்வழியே குதித்தோடிப்போய்! That has made all the difference! //

:)

Unknown said...

மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

PRINCENRSAMA said...

அடடே... வாங்க டாக்டர்! ரொம்ப சந்தோசம்... மகிழ்ச்சி..! ஏறிக் குதிக்கும் மேட்டர் எனக்குத் தெரியுமே! அந்த ஆட்டோவில் நீங்க ஏறியதைப் பார்த்தப்பவே நான் டவுட் ஆனேன்!
anyway நட்சத்திர வாழ்த்துகள்! சிறப்பாக, தமிழில் உங்கள் நடையில்.. நட்சத்திர வாரம் ஜொலிக்கவும், அப்படியே இந்த episode 'யார் இந்த பெரியார்?'அய் சீக்கிரம் முடிக்கவும் வாழ்த்துகள் :P