Sunday, May 31, 2009

பெண்களின் மனயிறுக்க நிவாரணம்: ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட்
நெய்வேலி லிக்நைட் கார்ப்பரேஷனில் பெண் ஊழியர்களுக்கான ஒரு சங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பெண் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய மன இறுக்கத்தை போக்கும் உபாயங்களை உபதேசிக்க போயிருந்தேன். இதே போல, சென்னை பெட்ரோகெமிகள் கார்பரேஷன் லிமிடெட், எனப்படும் CPCL, மற்றும் BHEL ஆகிய நிறுவனங்களிலும் இப்படி பெண் ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் உரையாற்றிய போது, சில பொது விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. அவையானவை:
1) எப்பேற்பட்ட நிறுவனமானாலும், எந்த உயர் பதவி வகித்தாலும், அந்த பெண்கள் எல்லாம், இது மாதிரி ஏதாவது விசேஷம் என்றால், சொல்லி வைத்த மாதிரி கல்யாண கலை சொட்ட அமர்க்களமாக டிரெஸ், நகைகள், என்று ஜமாய்த்துவிடுகிறார்கள். புரஃபெஷனல் உடை என்கிற கான்செப்டே பலருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை. பெண்கள் பலரும் காஞ்சி பட்டுடுத்தி,கலர் பொட்டு வைத்து, மஞ்சள் பூசி, பூ, கம்மல், ஜிமிக்கு, கொலுசு, மெட்டி சகிதம் வந்து விடுகிறார்கள். வேறு சில பெண்கள் கச்சிதமான காட்டன் சேலை, லைட்டா கொஞ்சம் மேக் அப், நகை என்று மார்டன் ஸ்டையிலையும் கடைபிடிப்பதை பார்க்க முடிகிறது. எது எப்படியோ, பெண் என்றால், அலங்கார பூஷிதமாய் தான் காட்சி அளிக்க வேண்டும் என்கிற இந்த கான்சேப்ட் மட்டும் இன்னும் உயர் பதவி வகிக்கும் பெண்கள் மத்தியிலும் தொடரத்தான் செய்கிறது
2) எந்த நிலையிலும் பெண்களுக்கு மிக பெரிய ஸ்டிரெஸ் பாக்டரே அவர்கள் குடும்பம் தான். அநேக பெண்கள் கேட்கும் கேள்விகள் எல்லாமே பிள்ளைகள், மாமியார், கணவன், அவர் குடும்பத்தினர் ஆகியோர் தரும் இம்சைகளை பற்றி தான் இருக்கின்றன.
3) ஆஃபீஸ் ஸ்டிரெஸ் என்று பெண்கள் கூறுவது: தகுதிகள் இருந்தும் உயர் பதவிகளுக்கு பெண்களின் பெயர்கள் சிபாரிசே ஆவதில்லையாம். கேட்டால், ஆணுக்கு இந்த உயர் பதவியை கொடுத்தால் அவன் குடும்பமே பலன் அடையும், உங்களுக்கு என்ன உங்கள் கணவர் தான் நல்ல வேலையில் இருக்கிறாரே, இந்த வேலை உயர்வின் கூடுதல் வருமானம் உங்களுக்கு தேவை இல்லை தானே, அதனால் தான் ஆண்களுக்கு அந்த வேலையை தருகிறோம் என்கிறார்களாம். அப்படியானால் தகுதிக்கு மதிப்பே இல்லையா, ஒரு பெண்ணின் கணவரை பற்றி கணக்கு பார்த்தா வேலை உயர்வுகளை தீர்மானிப்பது, இது அநியாயம் என்று நொந்துபோகிறார்கள் டாப் கேடர் பெண்கள்
4) எல்லா தரப்பு பெண்களும் சொல்வதும், சலித்து போவதும், சரி இது இப்படி தான், சனியன் போய் தொலையட்டும் என்று விட்டு வைப்பதும் ஒன்றே தான்: அது பெண் என்பதனால் ஆண் சகாக்கள் காட்டும், இலக்காரமும், கிண்டல் தோரனையும்.

சந்தோஷமான சேதி: இந்த வகை நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு செஸுவல் ஹராஸ்மெண்ட் அவ்வளவாக இல்லை!
கேட்டால் ஆண் சகா சொன்ன பதில்: இங்கே வேலை செய்யும் பெண்களுக்கெல்லாம் 40 வயதுக்கு மேல மேடம்! வாட் டஸ் தட் மீன்?!

2 comments:

கட்டபொம்மன் said...

//சந்தோஷமான சேதி: இந்த வகை நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு செஸுவல் ஹராஸ்மெண்ட் அவ்வளவாக இல்லை!//

பெரும்பாலும் அரசு துறைகளின் ஒரு குறிப்பிட்ட அளவுவிற்கு மேல் அதிகாரியாய் உள்ள பெண்களுக்கு செஸுவல் ஹராஸ்மெண்ட் இருக்காது ஒன்று அவரது உயர் பதவியின் போது அவரது வயது 35-40 ஐ தாண்டியிருக்கும் தனது மேலதிகாரியை செஸுவல் ஹராஸ்மெண்ட் உட்படுத்தினால் என்ன நடக்கும் என்று கீழ் மட்ட ஊழியர்களு்ககு தெரியும். அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் கடை நிலை ஊழியர்களை விரும்புவார்களே தவிர தனக்கு கீழ் அதிகாரியாய் உள்ள 35-40 வயதுடைய பெண்களை விரும்ப மாட்டார்கள். கடை நிலை ஊழியரை மிரட்டுவது சுலபம்
கட்டபொம்மன் http://kattapomman.blogspot.com

பூமகள் said...

பலதரப்பட்ட நகரங்களுக்கும் சென்று, விதவிதமான பணிச்சூழலில் இருக்கும் பெண்களைச் சந்திப்பது பெரும் அனுபவமாகவே உங்களுக்கு இருக்குமென நினைக்கிறேன்.

அலங்காரம், ஆபர்ணம், புடவை இவற்றின் மேலான ஈர்ப்பு இருக்கும் வரை, பெண்களை இப்படிப் பார்ப்பதும் இருக்கவே செய்யும். சமூக கண்ணோட்டமும் அவ்வாறே இருப்பது வருந்தத் தக்கது. குணத்துக்கும் திறமைக்கும் மதிப்பளிப்பதை விட புற அலங்காரங்களைக் கண்டு மதிப்பளிக்கும் போக்கும் சமூகத்தில் கண்டிக்கத் தக்கவகையில் இருக்கவே செய்வது வேதனை. அவ்வகையில் அலங்கரித்து வெளிப்படுவது ஒருவகையில் அடிமைத் தனம் தான் என்று எப்போது பெண்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
அலங்காரப் பதுமைகளாகவே இன்னும் பெண்கள் உணரப் படுகிறார்கள் என்பதை என்று புரிவார்களோ??

மிஸ் இந்தியா முதல் மிஸ் **** என்று கிராமம் வரை பட்டியல் நீண்டு கொண்டே போவதும் இதற்கு ஒரு பெரும் காரணம்.

அங்கே வழங்கிய உரையையும் தொடர்ந்து அளித்தீர்களானால் பயனுள்ளதாக இருக்குமே.. கேள்வி பதில் எனில் அவ்வகையிலும் பதிவு வழங்குவீர்களா டாக்டர்?

தலைப்பில் சிறு பிழை திருத்தம்.

"பெண்களின் மனயிறுக்க நிவாரணம்:" மனயிருக்க என்று தவறுதலாக தட்டச்சியிருக்கிறீர்கள். மாற்றவும்.