Tuesday, June 2, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 18

சென்ற ஸ்நேகிதியில் சொன்னது உங்களுக்கு உயயோகமாக இருந்ததா? ஜால பேச்சுக்காரனிடமிருந்து ஜகா வாங்கி விட்டு, சுருங்க பேசும் சின்சியர் ஆசாமிகளை இனம் கண்டுக்கொள்ள பழகினீர்களா? அப்படியென்றால் அடுத்த லெசனுக்கு போக நீங்க ரெடி!

எந்த வகை ஆணை நம்பலாம் என்கிற இந்த தர பரிசோதனை வரிசையில் ஷிவல்ரி, இயல்பான பேச்சு ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்து வரும் அதிமுக்கியமான ஐட்டம் கற்பு. உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதுதான் அடுத்த கட்ட தர ஆய்வு.

அதெப்படி ஆணிடம் போய் கற்பை எதிர்பார்ப்பது? கற்பு என்பது பெண் சம்பந்தப்பட்ட சமாசாரம் ஆச்சே, என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறதா; உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரிஜினலாய் கற்பு என்பது வெறும் பெண்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே கிடையாது.அது இரு பாலினருக்கும் பொதுவான மேட்டர்தான்.

தவிர கற்பு என்பது, சினிமாவில் வருவது போல, வெறும் உடல் ரீதியான ``கன்னித்தன்மை'' சம்பந்தமான விஷயமும் அல்ல. அது நாணயத்தைக் குறிக்கும் ஓர் சொல்.

ஔவையார் கற்பு பற்றிச் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?''

``கற்பெனப்படுதல் சொல் திறம்பாமை''. அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல், கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல், பேச்சு மாறாமல் நாணயம் காத்தல், இதைத் தான் கற்பு என்கிறார் ஔவையார். இப்படி சொல் திறம்பாமல் இருப்பவனே கற்புள்ள ஆண்.

அது ``வர சண்டே சினிமாவுக்குப் போகலாம்'' என்று சொன்ன சொல்லாக இருக்கலாம் அல்லது ``என் தங்கை கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்று கொடுத்த வாக்காக இருக்கலாம். அல்லது, ``உன்னை கண் கலங்காம காப்பாற்றுவேன்'' என்று கொடுத்த உறுதிமொழியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி, தன் சொல்படி நடப்பவன்தான் கற்புள்ள ஆண்.

இதற்கு மாறாக, ``நான் அப்படிச் சொல்லவே இல்லையே'' என்று மறுப்பவனோ, ``நான் அப்படியெல்லாம் சொல்லி இருக்கவே மாட்டேனே என்று சமாளிப்பவனோ, ``அப்ப என்னவோ தோணிச்சி சொன்னேன், ஆனா இப்ப மாறிட்டேன்'' என்று பேச்சு மாறுபவனோ, ``ஆமா சொன்னேன், சும்மா ஏதோ பேச்சுக்குச் சொன்னேன், இப்ப செய்ய முடியலை, அதுக்கு என்ன இப்ப?'' என்று மழுப்புகிறவனோ, கற்பு நெறியில் இருந்து தவறியவனே. இப்படி சொன்ன சொல்லைக்கூட காப்பாற்றத் துப்பில்லாதவன் எப்படி ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவான்?

அதனால் தான் காலம் காலமாய்,``சொன்ன சொல்லைக் காப்பாத்து-றவன்தான் நிஜமான ஆம்பிளை, அப்படி காப்பாற்றத் தவறுகிறவன் ஆம்பிளையே கிடையாது'' என்கிற பொது கருத்து நம்மூரில் இருந்து வருகிறது. இதனால்தான் ``பேச்சு மாறுறியே, நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?'' என்று திட்டுவது இயல்பாகிறது.

ஆக பேச்சு மாறுவது என்பது தான் உச்ச கட்ட அயோக்கியத்தனத்தின் அறிகுறி என்பதால், உங்களுக்கு ரூட் விடும் ஆணை கவனமாக ஆழம் பாருங்கள். சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை, அவன் சொல் திறம்பாமல் இருக்கிறானா என்பதைச் சரி பாருங்கள்.

அதற்காக, ரொம்ப பொடிபொடி விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி ``ஆறு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, ஏழு மணிக்கு வர்றியே, டிராஃபிக் ஜாமாவது மண்ணாவது. அதெல்லாம் கிடையாது, சொன்னக் சொல்லைக் காப்பாற்றலைனா நீ கற்பற்றவன்'' என்று உடனே இந்த விதியை ஓவர் கறாராக அமல்படுத்தி, உங்கள் ஆளை அல்லோலப் படுத்திவிடாதீர்கள். எந்த விதியாக இருந்தாலும், அதை கரிசனத்தோடு பயன்படுத்துவது-தானே மனித பண்பு!

அதனால், அன்பு சிநேகிதியே, எப்போதாவது ஒரு சமயம், ஏதோ நியாயமான காரணத்தினால் அவன் சூழ்நிலைக் கைதியாகி, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் போனால், இட்ஸ் ஓ.கே. சந்தர்ப்ப சூழ்நிலையினால் தானே அவன் சொல் திறம்பினான். ஆனால் உண்மையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயன்றான் தானே. ஆக அவன் உள்நோக்கம், சரி தானே? One cannot judge a man for his action we only judge his intentions, அதனால் போனால் போகிறது, intention சரியாக இருந்தால், சந்தேகத்தின் பலனை அவனுக்குத் தந்து, அந்த ஒரு தரம் மட்டும் அவனை பொறுத்தருளி மன்னித்து வையுங்கள்.

ஆனால் தொடர்ந்து இதே பாணியில் பெரிதாய் வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட்டு, அப்புறம் அதை எல்லாம் மறந்து போவதே வேலையாக அவன் வைளய வந்தால்... போச்சு, அவனுக்கு கற்பு இல்லை என்பதை அவனே நிரூபிக்கிறான்! கற்பு இல்லாத ஆணை எப்படி நம்புவது? கழுத்தறுத்துவிடுவானே!

அதனால் சொல் திறம்புவதே அவன் தொடர் குணமாக இருந்தால், ``பாவம், பரிதாபம், தயவு, தாட்சண்யம் என்று நேரத்தை விரயம் செய்யாமல் உடனே அவனுக்கு ஒரு `டா டா' சொல்லி ஏறக்கட்டி விட்டு, உங்கள் வழியைப் பாத்துக்கொண்டு நகர்ந்துவிடுங்கள். அதை விட்டுவிட்டு, ``போனால் போகிறது. இந்த ஒரே ஒரு தரம் மட்டும், பாவம் அவன் எந்தச் சூழ்நிலையில் இப்படிச் செய்தானோ என்னவோ, நான் அவனைத் திருத்தி நல்வழிப் படுத்திவிடுகிறேன், போகப் போக எல்லாம் சரியாகி விடும்''... என்றெல்லாம் ஏதாவது வெற்று செண்டிமெண்ட் பார்த்தீர்கள் என்றால், போச்சு, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்படி நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கும்போது அவன் சும்மா விடுவானா? உங்கள் அன்பில் இன்னும் இன்னும் குளிர் காய ஆரம்பித்து விடுவான். கற்பே இல்லை என்றாலும், அவனை நீங்கள் மன்னித்து ஏற்றுக்கொண்டே தான் இருக்கப் போகிறீர்கள் என்றான பிறகு, அதற்குப் பிறகு அவன் மெனக்கெட்டு கற்பை இனி புதிதாக உருவாக்க முயலவா போகிறான்? என்ன செய்தாலும் இவள் என்னை விட்டு இனி இருக்கவே மாட்டாள் என்ற மிதப்பில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போன கதையாய், இன்னும் இன்னும் சொல் திறம்பிக்கொண்டே இருப்பான்...

அதனால் சிநேகிதியே, விழிப்பாய் இருந்திடுங்கள். உங்கள் மனம் ரொம்பவே ஈடு இணையில்லா ஓர் பாகம். இதயம் போனால் இன்னொன்றைத் தானமாகப் பெறலாம். நுரையீரல், கிட்னி, கல்லீரல் என்று எந்த பாகம் போனாலும் மாற்றுக்கு வழி உண்டு. ஆனால் உங்கள் மனம்... அதற்கு வேறு மாற்றே இல்லை என்பதால் மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் மனதில் இடம் பெறும் அளவிற்கு உயர் தகுதி உள்ளவனுக்கே நீங்கள் உங்கள் உள்ளத்தினுள் நுழையும் அனுமதியைத் தரலாம். அதனால் உங்களுக்கு ரூட் விடும் ஆணுக்கு கற்பு எனும் இந்த முக்கியத் தகுதி இருக்கிறதா என்பதைக் கண்காணியுங்கள். வேறு என்ன என்ன தகுதிகள் இருந்தால் அவன் தேறுவான் என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில் பேசலாம்!

2 comments:

நாணல் said...

பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்... கற்புக்கு விளக்கம் நாணயம் என்பது புதிய கண்ணோட்டமாக இருக்கிறது...

revathi said...

very interesting.all of ur tips are very usful. go ahead dr. thank u sooooo much for ur valuable tips.