Monday, September 29, 2008

பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

அன்பார்ந்த ஆண்களே,

இந்த வலை பதிவில் ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்ற தலைப்பில் வரும் சமாசாரம் எல்லாமே, முழுக்க முழுக்க பெண்களுக்காக எழுத படும் மேட்டர் மட்டுமே. அதை ஆண்கள் படிக்கவே கூடாது:)

கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெண்களாய் தானே இருந்தோம், அதனால் ஒரு வகையில் பார்த்தால் எல்லா ஆண்களும் அடிப்படையில் பெண்களே, அந்த அடிப்படையில் எங்களுக்கும் படிக்க உரிமை உள்ளதாக்கும் என்று நீங்கள் தர்கம் செய்வதாக இருந்தால்....வாட் டு டூ, யூ ஆர் ரைட்....ஆனால் ஒரு நிபந்தனை, இதை படிக்கும் போது உங்களை முழுக்க முழுக்க ஒரு பெண்ணாய் தான் பாவித்துக்கொள்ள வேண்டும், ஆண் மனப்பான்மையை தற்காலீகமாய் ஆஃப் செய்துவிட வேண்டும். அப்படி ஆண்மையை ஆஃப் செய்துவிட்டு பெண் பாலாய் இதை படிக்க முடிந்தால் தாராளமாய் நீங்கள் இதை படிக்கலாம்.

அப்படி செய்ய முடியாதவரா நீங்கள்?

டோண்ட் ஒர்ரி, உங்களுக்காகவே பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்று ஒரு புத்தகத்தை ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன்....ஆளை அசத்தும் 60 கலைகள், நக்கீரன் பதிப்பகம்....அது முழுக்க முழுக்க ஆண்களுக்கான மேட்டர். நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக அதை படித்து ஆளை அசத்த கற்றுக்கொள்ளலாமே?!

Tuesday, September 23, 2008

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் என்று மனிதர்கள் எதை நினைக்கிறார்கள் தெரியுமா? ஆண்-பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் தரும் சந்தோஷத்தைத் தான்!

நம் இந்தியாவில் மட்டுமல்ல... உலகெங்கும் உள்ள எல்லா மனிதர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த சந்தோஷத்தைப் பற்றித்தான் எத்தனை கற்பனை, கனவு, கதை, கவிதை, சினிமா!

ஆசைப் படுகிறார்கள்... சரி... ஆனால் எத்தனை பேருக்கு அது சாத்தியம் ஆகிறது என்று பார்த்தால், மிகச் சில ஜோடிகளே தேறுவார்கள்.

கேட்கவும், கற்பனை செய்யவும், கதைகளில் படிக்கவும், சினிமாக்களில் பார்க்கவும் இலகுவாகத் தோன்றும் இந்த மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை, நிஜத்தில் அமைவது ரொம்பவே அபூர்வம்தான். காரணம், ஆரம்பத்தில் தித்திக்கும் இந்த ஆண், பெண் உறவில் போகப் போக நிறைய கசப்புணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கியக் காரணமே நம்மூர் பெண்களுக்கு ஆண்களை எப்படிக் கையாள்வது என்றே தெரிவதில்லை. காரணம் நம்மூரில் ஆண்களும் பெண்களும் சிறு வயதிலிருந்தே பேசிப் பழகி, ஒருவரை மற்றவர் எப்படி அணுகுவது என்று தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இருப்பதில்லை.

அதனாலேயே, என்னைப் போன்ற மனநல மருத்துவர்களுக்கு எல்லாம், ஆண் - பெண் உறவுகளைச் செப்பனிடுவதை எங்கள் பெரும் பணியாக ஆக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்படி எங்களை கிளினிக்கில் தனியே வந்து சந்திக்கும் பெண்களுக்கு, `ஆண்களைச் சமாளிப்பது எப்படி' என்று சிலபஸ் போட்டு கற்றுத் தந்தாலும் இதில் ஒரு சின்ன சிக்கலும் உள்ளது. இப்படி பெண்களுக்கு சொல்லித்தரப்படும் சமாச்சாரங்கள் எல்லாமே மிகவும் ரகசியமானவை. வழி வழியாக மூத்த பெண்கள் இளையவர்களுக்கு ஓதித்தரும் சீக்ரெட் அட்வைஸ்!

இந்த ரகசிய ஆலோசனையை பகிரங்கமாக இப்படி ஒரு பத்திக்கையில் எழுதுவது நிறையப் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்தான். ஆனாலும் இது கொஞ்சம் ஆபத்தான காரியம், யாராவது ஆண் இதைப் படித்து விட்டால், அப்புறம் கதை கந்தலாகிவிடுமே! நல்ல வேளையாக இது பெண்கள் பத்திரிகை என்பதாலும் குறிப்பாக இந்தப் பகுதி `யூத்'க்கானது என்பதாலும் பல ஆண்கள் இதைப் படிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஒருவேளை யாராவது ஓட்டைவாய்ப் பெண் இதைப் படித்துவிட்டு, தன் கணவன், காதலன் என்று பிரியமான ஒருவனிடம் போய் ஒப்பித்து வைத்தால் பிறகு இந்த மேஜிக் வேலை செய்யாமல் போய்விடக்கூடுமே.

அதனால் ஆரம்பத்திலேயே நமக்குள் ஒரு ஒப்பந்தம்... இந்தத் தொடர் பெண்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. இதைப் படிக்கும் நீங்கள் இதில் சொல்லப்படும் தகவலை நல்ல முறையில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம், எல்லா அட்வைஸும் இலவசம்! ஆனால் ஒரு நிபந்தனை... இதிலிருந்து ஒரு சின்ன பிட் சமாசாரத்தைக்கூட எந்த ஆணிடமும் பகிந்துகொள்ளகூடாது. மீறிப் பகிர்ந்துகொண்டீர்கள் என்றால்அதனால் ஏற்படும் எல்லா பின்விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பு... சம்மதமா?

சம்மதம் என்றால் ஓ.கே. இத்தோடு ஆண்களை ஹாண்டில் செய்யும் ரகசிய சூட்சுமங்களை ஆரம்பிக்கலாம்.

அதைப் பற்றி விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ஆண் என்றால் என்ன என்று முதலில் புரிந்து கொள்வோமா? ``ப்பூ! இதென்ன பெரிய விஷயம்... ஆண் என்பவன் பெண்ணின் எதிர்பாலினம், அவனுக்கு மீசை உண்டு, பெண்ணுக்கு அது இல்லை'' என்பது மாதிரியான சிம்பிள் சமாச்சாரங்களைத் தாண்டி கொஞ்சம் ஆழ ஆரய்ந்தோம் என்றால் ஆண் என்பவன் உண்மையில் ஒரு மாறுபட்ட பெண்தான் தெரியுமோ?

ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பமுடியவில்லையா? என்ன செய்வது... இதுதான் உண்மை! ஜனிக்கும்போது எல்லாக் கருக்களுமே பெண்ணாய்த்தான் இருக்கின்றன. முதல் ஆறு வாரத்திற்கு எல்லா மனிதர்களுமே அவரவர் தாயின் கருவில் பெண்ணாகத்தான் சுருண்டு கிடக்கிறார்கள்.

இப்படி சுருண்டுகிடக்கும் கருவின் மரபணு அதாவது குரோமோஸோம்களில் ஒன்று `ஒய்' ரகமாக இருந்தால், அந்த குரோமோசோமில் உள்ள சில ஜீன்கள் அந்தக் கருவின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஒரு ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன் அந்த கருவின் உடம்பு முழுக்க மட மடவென்று பரவி, அது வரை பெண்ணாய் இருந்த அந்த உடலை அப்படியே ஆணாய் மாற்றிவடிவமைக்கிறது.

அதனால்தான் ஆணாக பிறக்கும் குழந்தைகளுக்கும், முலைகள் இருக்கின்றன. ஆண் என்பதால் இந்த மனித பிறவியில் எப்போதுமே பால்சுரக்கப்போவதே இல்லைதானே? பிறகு எதற்கு அவர்களுக்கு அநாவசியமாக இரண்டு முலைகள் என்று யோசித்தீர்களா? பிகாஸ், இந்த ஆண்குழந்தையின் உடம்பு உருவான அந்த ஆரம்ப ஆறு வாரங்களில், அது பெண்ணாய் இருந்ததால், பெண்ணின உறுப்புக்கள் ஏற்கனவே உருவாகிவிட்டன.!

இப்படி பெண் தன்மையாக உருவான பெரும்பாலான உறுப்புக்களையும் டெஸ்டோஸ்டீரொன் படிப்படியாக ஆண்மைப்படுத்துகிறது. தோல், எலும்பு, ரத்த அணுக்கள், சதைத் திசுக்கள் என்று ஆரம்பித்து, இனப்பெருக்க உறுப்புக்கள், மூளை, மனம் ஆகியவற்றையும் இந்த டெஸ்டோஸ்டீரொன் ஆண்மைப்படுத்திவிடுவதால்தான் எட்டாவது வாரத்தில் கரு முழுமையாக ஆணாகிவிடுகிறது.

ஆக ஆரம்பத்தில் பெண்ணாக ஜனித்தாலும், டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் ஆண்மைப்படுத்தப்படும் ஜீவராசிதான் ஆண்.

இப்படியாக ஆண்-பெண் இருவருக்கும் இடையே இருக்கும் பெரும்பாலான உடல் ரீதியான வித்தியாசங்களுக்கு மூலகாரணமே இந்தடெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரே ஹார்மோன்தான். அப்ப மனம் என்கிறீர்களா?

ஆண் மனமும் ஆரம்பத்தில் பெண் வடிவாய்தான் இருக்கிறது. பெண்ணின் மூளையில் மொழிக்கென்றே நிறைய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளின் உபயத்தால் பெண்களால் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், படிக்கவும், ஏன் விவாதிக்கவும்கூட முடியும். அதுவும் போக, பெண் மூளையின் கார்பஸ் கலோசம் என்ற தண்டு ரொம்ப அடர்த்தியாய் இருக்கும். இந்த கார்பஸ் கலோசம் மூளையின் வலது, இடது பாகங்களைஅடியிலிருந்து இணைக்கும் ஒரு நரம்பு பாலம் என்பதால் இது மூளையின் ஒரு பக்கத் தகவல்களை மிக வேகமாக மறுபக்கத்திற்கு கொண்டு செலுத்த உதவுகிறது. இந்த அடர்ந்த தண்டின் பலனால் பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளை மிக லாகவமாகச் செய்ய முடியும்.

அதுவும் போக ஒருவரின் முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளை யூகிக்கவென்றே சில பகுதிகள் பெண்களின் மூளையில் உண்டு. இதனால்தான் அம்மாக்கள் மிகச் சுலபமாக, `குழந்தை பசிக்கு அழுகிறதா? பூச்சுக்கடிக்கு அழுகிறதா?' `வீட்டுக்கு வந்திருப்பவன் யோக்கியனா, ஃபிராடா' என்று வெறும் முகபாவத்தை வைத்தே யூகிக்க முடிகிறது. ஆனால் ஆண்களால் இதெல்லாம் சுலபமாக முடியாது.

காரணம் ஆறாவது வாரத்திற்குப் பிறகு கருவின் மூளைக்குப் பாயும் டெஸ்டோஸ்டீரோன் அதன் மூளையை மாற்றி வடிவமைத்து விடுகிறது. அதனால், ஆண்மயமான பிறகு, அந்த சிசுவின் மூளையின் மொழி மையங்கள், கார்பஸ் கலோசம், முகத்தைப் பார்த்து உணர்ச்சியை யூகிக்கும் மையம் ஆகியவை எல்லாம் சுருங்கிவிடுகின்றன. அதனால்தான் ஆண்களால் பெண்களைபோல கட கடவென்று பேசவோ, எழுதவோ, படிக்கவோ முடிவதில்லை. அதைப்போலவே ஒரே சமயத்தில் பல வேலைகளை அவர்களால் கையாளவும் முடிவதில்லை. இவள் என்னநினைக்கிறாள் என்று முகம் பார்த்து யூகிக்கவும் அவர்களால் முடிவதில்லை.

இந்த பாழாய்ப்போன டெஸ்டோஸ்டீரோன் ஏன் இப்படி எல்லாம் மாத்தித் தொலைச்சது! ஆண்களும் பெண்களைப் போலவே மூளை வடிவம் கொண்டிருந்தால்தான் என்ன? அதைப் போய் ஏன் சுருக்கணும்? என்று நீங்கள் ஆட்சேபிப்பது புரிகிறது. ஆனால் இந்த டெஸ்டோஸ்டீரோன் இப்படி மூளையை மாற்றி அமைத்ததற்கும் ஒரு மர்ம காரணம் இருந்ததே!

அது பற்றி எல்லாம் அடுத்த சிநேகிதியில்!

Sunday, September 7, 2008

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?!

ரமாவிற்கு முதல் பிரசவம். ஆண் குழந்தை என்றதுமே எல்லோருக்குமே பளிச் சிரிப்புதான். பிரசவ சேதி சொல்ல வந்த ஆயா கூட ஆண் பிள்ளை என்பதால் கொசுராய் கொஞ்சம் டிப்ஸ் வாங்கிக் கொண்டாள். ஆனால் அந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் மட்டும் படிப்படியாக சோகமாகிக் கொண்டே போய், திடீரென்று ஒரு நாள் `எனக்கு வாழவே பிடிக்கல'' என்று குமுறி அழ, எல்லோருக்கும் பகீர் என்றானது. அன்பான கணவன், பிக்கல் பிடுங்கல் தராத புகுந்தவீடு, மகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர் எல்லாம் இருந்தும் ஏன் இந்தப் பெண் இப்படி... எத்தனையோ கேள்விகளுடன் ரமாவை மனநல சிகிச்சைக்குக் கொண்டு போனால் பிரசவ கால டிப்ரெஷஜன் என்றார் டாக்டர். ``டிப்ரெஸ், ஆகுற அளவிற்கு என்ன மனக் கஷ்டம்' என்று எல்லோரும் ஆட்சேபிக்க மருத்துவர் ஒரே வார்த்தையாய் சொன்னது, ஆண் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இப்படி வர்றது சகஜம் தான். ஹார்மோன் பிரச்னையினால்தான் இப்படி. போகப் போக சரியாப் போயிடும்?

ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் தாயின் மனநலத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் வேறு சில உள்ளன. உஷாவும் ஒரு ஆண் குழந்தையின் தாய். ஏற்கெனவே ஒரு மகள் உண்டு. மகனுக்கு வயதாக ஆக உஷாவின் டென்ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. `என் மகளை வளர்க்க நான் இவ்வளவு கஷ்டம் படலப்பா. அவளே தன் வேலைகளைப் பார்த்துப்பா, தானா குளிச்சு ஸ்கூலுக்குக் கிளம்பி, தன் திங்ஸை பத்திரமா எடுத்து வச்சி, ஹோம் ஓர்க் செய்து எனக்கு எந்தத் தொந்தரவும் தந்ததே இல்லை. ஆனா இந்தப் பையன்! இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கே. எல்லாத்துக்கும் அம்மா அம்மாதான். எட்டு வயசாச்சு, இன்னும் நான் தான் எழுப்பி, பல் தேய்ச்சி, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, யூனிஃபார்ம் மாட்டி ஸ்கூலில் கொண்டு போய் விடணும். சாயந்திரம் அவனை ஹோம் ஒர்க் செய்ய வெக்குறதுக்குள்ள என் தொண்டையே வத்திப் போயிடுது. சதா விளையாட்டு, வீடியோ கேம்ஸ்னு லூட்டிதான். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. இவனை பெரியவனா வளர்த்து விடுறதுக்குள்ள என் பாடு திண்டாட்டம்தான்' என்று பார்ப்பவர் எல்லோரிடமும் புலம்பித் தள்ளுவாள். அவள் மட்டுமில்லை. அவளிடம் பேசும் அனைத்துத் தாய்மார்களின் ஒட்டுமொத்த கோரஸ் புலம்பலே இதுதான்.

இவர்கள் நிலைதான் இது என்றால் ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களின் தாய்க்குலங்கள் படும்பாடு இதைவிட ரொம்பவே பாவம்! வர வர அவனுக்கு கோபம் ஓவரா வருது. கைய நீட்டிப் பேசுற பழக்கம் வேற புதுசா!

முன்னே எல்லாம் பெரியவங்கனு பயபக்தியா இருந்தான் பையன். இப்ப என்னடான்னா `மொக்கை போடாதீங்க!னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்லிடுறான். அடிக்கடி மூட் அவுட் ஆயிடுறான். வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தாக்கூட முகம் கொடுத்துப் பேசறதில்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணோட ரொம்பப் பேசுறானேன்னு கவலைப்பட்டேன். கடைசியில பார்த்த `ஆண்ட்டி ஆண்ட்டி'னு அந்தப் பொண்ணோட அம்மாகிட்ட அப்படி ஒரு வழிசல்... ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெத்தோம்னு தோணுதுப்பா!

அம்மாக்களின் அவஸ்தை இது என்றால், ஆண்களால் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் படும்பாடு இதைவிட பெரிய கூத்து. அன்பா இருக்கான்னு நானும் மயங்கி போயிட்டேன்ப்பா. ஆனா வரவர அவன் குணமே சரியில்ல. நம்மூரு வெயிலுக்கு திக்காக டிரஸ் பண்ணிக்கச் சொல்றான். கொஞ்சம் `மெல்லிய காற்றோட்டமாக டிரஸ் பண்ணிக்கிட்டா யாரு பார்க்க'ன்னு கத்தறான். என் கூடப் பேசும்போதே போற வர்றவளை லுக் விடுற டைப். `என்னை சந்தேகப்படறானே ராஸ்கல்' என்று புலம்பும் பெண்கள் ஒரு பக்கம் என்றால், ``கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா விடமாட்டேன்றான்பா. தொடாம காதலிச்சா அது காதலே இல்லனுறான். இவனை எப்படி ஹாண்டில் பண்ணுறதுனே புரியல்லே!'' என்று புகார் சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாய்; கல்யாணமான புதுசுல அவ்வளவு ஸ்வீட்டா இருந்தார். நான் கூட ஆஹா இவரை மாதிரி ஒருத்தரை அடைஞ்சது நான் எந்த ஜென்மத்துலயோ பண்ண புண்ணியம்னு எல்லாம் ஓவர் சென்டிமென்டலா உருகி தொலைச்சிட்டேன். போகப் போக ஐயாவோட சாயம் வெளுக்குது! இவருக்கு சுய அறிவுனு ஒண்ணே கிடையாது. அவங்க அம்மா என்ன ஓதி அனுப்பினாலும் அதையே பிடிச்சிக்கிட்டு அழிச்சாட்டியும் பண்ணி உயிரை எடுக்கிறார். காலைலேர்ந்து வீடு, ஆஃபீசுனு மாடா உழைக்கிறேனே. எனக்கு ஒரு நாள் கூட உதவி செய்யுறதில்லை. அட உதவலைனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாமே. ஊகூம்! சதா ஏய் அதை எடு, இதை எடுன்னு என்னை ஏசிக்கிட்டே இருக்கிறது. எவன் கட்டுன பொண்டாட்டிக்கோ கரிசனம் கொட்டி ஹெல்ப் பண்ண ஓடுவார், கட்டுன பொண்டாட்டிதான் ஒண்டி ஆளா எவ்வளவு அல்லல்பட்டாலும் சட்டையே பண்ணுறதில்ல! ஏன்தான் இந்த ஆம்பிளைங்க இப்படி இருக்காங்களோ!'' என்று கணவர்களைப் பற்றி குறைபடும் பெண்கள் ஏராளமானோர். அநேகமாய் எல்லோர் வீட்டிலும் `இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான்பட்ட பாட்டைப் பத்தி சொன்னா ஒரு சினிமா படமே எடுக்கலாம். என்னை கொஞ்சமா படுத்தினார்' என்று புகார் சொல்லும் பாட்டிகள் உள்ளார்கள். அதையும் தவிர என்னை மாதிரி மருத்துவர்களைச் சந்திக்கும்போது வேறொரு பிரச்னையையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ``அந்த மனுஷனுக்கு 70 வயசு ஆகுது. இன்னும் அடங்கமாட்டேன்றாரேம்மா. பேரன், பேத்தி எடுத்தாச்சு. எனக்கென்ன இளமை ஊஞ்சலா ஆடுது? ரொம்ப தொந்தரவு பண்ணுறாரும்மா'' என்று நொந்து கொள்கிறார்கள் மூத்த சுமங்கலிகள்.

இதுதவிர இடி மன்னர்கள், பெண்கள் என்றாலே முகத்தைப் பார்த்துப் பேசத் தெரியாத பால்குடி மாறாத பராக்கிரமசாலிகள், உடன் வேலைபார்க்கும் பெண்களைச் சீண்டுபவர்கள் என்று தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆண்களைச் சமாளிக்கவே செலவிடும் பெண்களுக்கு `இந்த ஆண்களை ஹாண்டில் பண்ணுவது எப்படி?' என்கிற சாஸ்திரம் மட்டும் கிடைத்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?

இந்த முக்கியமான சாஸ்திரத்தைக் கற்றுத்தர நாங்கள் ரெடி! கற்றுக்கொள்ள நீங்கள் ரெடி என்றால், அடுத்த இதழில் இருந்து உங்களுக்கே உங்களுக்கென்று ஆரம்பமாகிறது ஆண்களை இயக்கும் அரிய சாஸ்திரம்!

பி கு: குமுதம் ஸ்நேகிதியிலிருந்து வெட்டி ஒட்டியது