Showing posts with label பாலியல் கல்வி (gender studies). Show all posts
Showing posts with label பாலியல் கல்வி (gender studies). Show all posts

Sunday, March 8, 2009

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? - அத்தியாயம் 12

என்ன ஸ்நேகிதி, man watching செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? அப்படியானால் ஆண்களின் இன்னொரு பொது பழகத்தை நீங்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்களே!

”பரவாயில்லை ஆம்பிளை பொம்பளைனு வித்தியாசமெல்லாம் பார்க்காமல் சாதாரணமா பேசிதான் வைப்போமே,” என்றூ நீங்கள் மிக மிக யதார்த்தமாய் யாராவது ஒரு ஆணிடம் பேசி பாருங்களேன். பெண்களுடன் அதிகம் பேசி பழகி, பாலின வேறுபாடுகளை தாண்டி, அவளும் மனித இனம் தான், அதனால் அவளுக்கு சமமான மதிப்பு தந்து நடத்துவது தான் நாகரீகம் என்ற மார்டன் கண்ணோட்டம் கொண்ட ஆணாக இருந்தால், பிரச்சனை இல்லை. நீங்கள் இருவரும் நட்போடு பல விஷயங்களை பற்றி பேசி, கருத்து பரிமாறி, தோழைமையை கொண்டாடி மகிழலாம்.

ஆனால் பெண் =எதிர்பாலினம்.
எதிர்பாலினம் = ஈர்ப்பு. எதிர்பாலினத்தை சேர்ந்தவள் வந்து சகஜமாக பேசுகிறாள் என்றால், என்ன அர்த்தம்? அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு போல, அப்படினா, நான் ஒரு ஆணா என் பாலியல் பணியை செய்து காட்டீடுறேன் இரு, என்று முடிவுகட்டிவிடும் ஆண்கள் தான் துரதுஷ்டவசமாய், மிக அதிக எண்ணிக்கையில் இருந்து தொலைக்கிறார்கள்.

இந்த விதமான ஆண்களுக்கு பெண்ணை பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்க மட்டும் தான் தெரிகிறது. பாலினத்தை தாண்டி, அவளை ஒரு சமமான மனிஷியாய் பார்க்கும் பரிணாம வளர்ச்சி இந்த விதமான ஆண்களுக்கு இன்னும் ஏற்படவில்லை.

சில ஆண்களுக்கு இந்த மனமுதிர்ச்சி ஏற்பட்டிருக்கே, அப்புறம் ஏன் வேறு சில ஆண்களுக்கு மட்டும் ஏற்படவில்லை என்று நீங்கள் என்ன தான் நொந்துக்கொண்டாலும், இயறக்கையின் ஏற்பாடே இப்படி தான். தி பெஸ்ட் என்பது எப்போதுமே குறைந்த எண்ணிக்கையில் தான் கிடைக்கும். அதனால் பெண்களிடம் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் மிக தேர்ந்த மன முதிர்ச்சி அடைந்த ஆண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஆண்கள் எல்லாம் கண்ணியமா, அதெல்லாம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவில் தான் இன்னமும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியில் பின் தங்கிய ஆணை எப்படி கண்டுபிடிப்பது? சிம்பிள்…
நீங்கள் பேசி விட்டீர்கள், அதுவும் சிரித்து பேசி விட்டீர்கள் என்பதனாலேயே, அதிக உரிமை எடுத்துக்கொண்டு, உங்களை தொட முயல்வார்கள்!

அதுவும் ரொம்பவே நேக்காக. எப்படி தெரியுமா?

ஸ்டெப் 1: முதலில், தெரியாமல் தொட்டது போல, லேசாய் தொடுவார்கள். தோலை, கையை, முதுகை என்று லைட்டாய். பட்டும் படாமலும், ”தெரியாம கை பட்டிருக்கும் போல” என்று நீங்கள் அந்த தொடுகையை பெரிது படுத்தாத அளவிற்கு சன்னமாய் தொட்டு வைப்பார்கள். இந்த தொடுகையை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால், அடுத்த கட்ட தொடுகைக்கு முன்னேறுவார்கள்.

ஸ்டெப் 2: முதல் ரக தொடுகைக்கு நீங்கள் மறுப்பு சொல்லவில்லை என்றால், உங்களை வழிநடத்தி கைட் செய்வது போல இன்னும் கொஞ்சம் அழுத்தமாக தொடுவார்கள். ”இப்படி போம்மா” என்று கையை பிடித்து வழி காட்டுவது, தோலை தொட்டு அனுப்புவது, என்பது மாதிரி, மிகுந்த அக்கறையாய் தொட்டு உதவுவார்கள்.

சீ, சீ தப்பா இருக்காது. அப்பா மாதிரி தானே, அண்ணன் மாதிரி தானே என்று நீங்கள் இந்த தொடுகையை கவனிக்காமல் விட்டீர்கள் என்றால் என்ன அர்த்தம்? இதை நீங்கள் பெரிது படுத்தவில்லை என்று தானே அர்த்தம்!

உங்கள் மறுப்பின்மை தந்த தைரியத்தில் தலைவர், இன்னும் துணிந்து, அடுத்த கட்டமாய், ஸ்டெப் 3 க்கு முன்னேறுவார். பெரிதாய் உங்கள் மேல் அக்கறை கொண்டு உதவுவதை போல உங்களை தொட ஆரம்பிப்பார். பையை திறக்க, வண்டியில் ஏற, நிதானப்படுத்த என்று, உங்கள் கையை, புஜத்தை, முதுகை தொட முயல்வார்.

இதையும் நீங்கள் அனுமதித்தால், சரி தான் அவளுக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது போல என்று அதற்கு மேல், இன்னும் துணிந்து, “இது என்ன காயம்/கொசுகடியா, மச்சமா, அடி பட்டுடுச்சா?” என்று உங்கள் கையையோ, கன்னத்தையோ தொட்டு, உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டவர் மாதிரி, குசலம் விசாரிப்பார்.

இப்போதும் நீங்கள் மறுப்பே தெரிவிக்கவில்லை என்று வையுங்களேன், அவ்வளவு தான், பொண்ணூ பச்சை கொடி காட்டிவிட்டால் என்று, அதற்கு மேல் தொட காரணமே இன்றி, சும்மாவே உங்களை தொட ஆரம்பித்துவிடுவார்.

தலையை தொடுவது, முதுகை தட்டுவது, முடியை ஒதுக்குவது, கன்னத்தை தட்டி வருடுவது என்று தட்ட ஆரம்பித்து, இதற்கும் மறுப்பு வரவில்லை என்றால், தடவ ஆரம்பித்து, அப்படியே தழுவியும் விட முயல்வார்.

இந்த அளவு அவன் முன்னேறீய பிறகு, “சீ விடு” என்று கத்துவதோ, கன்னத்தில் அடித்து கலாட்டாசெய்வதோ தான் பெண்களின் போக்காக உள்ளது. காரணம் இந்த அளவு அவன் போன பிறகு தான் பல பெண்களுக்கு அவன் அத்து மீறுவதே புரிகிறது. அதுவரை, அவன் தொடுவது தகாத செயல் என்று உரைத்தாலும், “சீ, சீ அவன் நல்லவன் தானோ, நான் தான் தப்பா நினைக்கிறேனோ?” என்ற சந்தேகத்திலேயே பெண்கள், அவன் ஆரம்பகாலத்திலிருந்து செய்துவரும் அத்து மீரலை கவனிக்க தவறுகிறார்கள்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெண்களின் ஆழ்மனதில் ஆணின் தொடுகை குறித்த ஒரு ஆட்டோமேட்டிக் அலாரமே இருக்கிறது. அந்த அலாரம் எந்த ஆண் தகாத எண்ணத்துடன் பார்த்தாலும், பேசினாலும், தொட்டாலும், “டாண்” என்று அடித்து உங்கள் கவனத்தை திருப்பும். கிட்ட தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலுமே இந்த அலாரம் 100% சரியாகவே இயங்குகிறது. அதனால் லேசு பாசாக கூட ஒருவனின், பார்வை/பேச்சு/தொடுகை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், உடனே அதனை கண்டியுங்கள். நீங்கள் கண்டிக்கவில்லை என்றால் ஒத்துழைத்து அவனை நீங்களே ஊக்குவிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும். அதனால் உங்கள் சம்மதம் இல்லாமல் எவனாவது உங்களை தொட்டான் என்றால், just protest. ஆட்சேபித்திடுங்கள், அவனை கண்டியுங்கள்.

கண்டிப்பதென்றால் எப்படி? முறைப்பது, அடிப்பது, கத்துவது, திட்டுவது எல்லாமே செய்யலாம் தான், அதுவும் குறிப்பாய் பொது இடங்களின் முன் பின் தெரியாத ஆண் வந்து இப்படி ஏடா கூடம் செய்தால், அவனை உடனே ஆஃப் செய்ய இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் உபயோகமாய் இருக்கும்.

ஆனால் இந்த அதிரடி எல்லாம், எல்லா சந்தர்பங்களுக்கும் பொருந்தாதே. சில சமயம் இப்படி அத்து மீறி இம்சை தரும் நபர் உங்கள் பாஸாக இருக்கலாம், அல்லது, உயர் அந்தஸ்து/பதவி வகிக்கும் ஆளாக இருக்கலாம். அந்த ஆசாமியை போய் அடிப்பதோ, திட்டுவதோ ஆபத்தான காரியமாக இருக்கலாமே.

இப்படி அதிகாரத்தையோ, பதவியையோ துஷ்பிரயோகம் செய்து உங்களை அல்லல் படுத்தும் ஆசாமிகளை எப்படி ஹாண்டில் செய்வதாம்? சிம்பிள், “டேய் டேய், தெரியுமடா உன் லீலை எல்லாம் எனக்கு. மனசுல என்ன பெரிய மன்மதன்னு நினைப்பா உனக்கு. அட மடையா, உன்னை எல்லாம் நான் மனிஷனா கூட நினைக்கலடா, அதனால் நீ கொஞ்சம் அடங்கு!” என்று நீங்கள் வாய் திறந்து சொல்ல கூட வேண்டாம். மனதிற்குள் நீங்கள் நினைத்தாலே போதும். உங்கள் மெய்பாட்டியல் குறி, அதாகப்பட்டது body languageஜே மாறி விடும். உங்கள் மோவாய் துணிந்து நிமிரும், கண்களின் ஒரு ஏலன சிரிப்பும், மூக்கின் மீது கோபமும், வாயோரம் ஒரு உதாசீன புன்னகையும் மின்னும் பாருங்கள்.

இதை பார்த்தாலே, “அடடா, மாட்டிக்கொண்டேனே, கண்டு பிடித்துவிட்டாளே. கண்டு பிடித்ததும் இல்லாமல் எள்ளி வேறு நகையாடுகிறாளே! போச்சு, போச்சு, இனி யார் யார் கிட்ட சொல்லி என் மானத்தை வாங்க போறாளோ!” என்று அந்த ஆசாமி அசவுகரியத்தில் நெளிய ஆரம்பித்து விடுவான்.

ஒரு பெண்ணின் பார்வைக்கு இவ்வளவு சக்தி இருக்குமா என்று உங்களுக்கு ஆட்சரியமாய் இருக்கிறதா? ஒரு ரகசியம் தெரியுமா? மனிதர்கள் எல்லோருக்குமே பிறரின் பார்வை குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வு எப்போதுமே உண்டு. கண்ணூ பட்டு விட்டது, திருஷ்டி சுத்தி போடுவது, யார் கண்ணூ பட்டுதோ, என்று எல்லாம் நாம் கவலை படுவதே இந்த பயத்தினால் தான். இந்த கண்/பார்வை சார்ந்த அச்சம் ஆண் பெண் இருபாலோருக்கும் பொது தான் என்றாலும், பெண்ணின் ஏலன பார்வைக்கு ஒரு கூடுதல் ஸ்பெஷாலிட்டி உண்டு.

கலாச்சார ரீதியாய், சமீபத்திய மூவாயிரம் சொச்ச ஆண்டுகளுக்கு ஆண்களே அதிக்கம் செய்து வாழ்ந்து வந்திருப்பதால், பெண்கள் ஆண்களை ஏறெடுத்து பார்ப்பதே மரியாதை குறச்சல் என்கிற கருத்து ஆண் ஆதிக்க வட்டாரங்களில் உண்டு. விஷயம் இப்படி இருக்க, ஒரு பெண் ஆணை இப்படி துணிந்து ஏளனமாய் பார்த்து சிரிப்பது என்பதே ஆண்களுக்கு பதவி இறக்கமாய் கருதப்படுகிறது. இப்படி ஒரு பெண் செய்தால், அவள் அதற்கு மேல் அந்த ஆணை பார்த்து பயப்படவில்லை என்று அர்த்தமாகிறது.

அவள் அவனை பார்த்து அஞ்சும் வரை தான் அவனால் அவளை ஆதிக்கம் செய்யவே முடியும். ”சரி தான் போடா, உன் மேல எனக்கு பயமே இல்லை,” என்று எப்போது ஒரு பெண் பகிரங்கமாக சிக்னல் கொடுக்கிறாளோ, அப்போது அவள் அவனுக்கு நிகராகிவிட்டாள் என்று தானே அர்த்தம். அதற்கு மேல் அந்த ஆணால் அவளை அடக்கி ஆள முடியாது, அவளை ஒரு காம பொருளாகவும் பார்க்க முடியாது. காம பொருளாக இல்லை என்றால் உங்களை திருட்டு தனமாகயேனும் தொடும் எண்ணம் அவனுக்கு எப்படி வரும்? அதனால் தான் இப்படி தனக்கு நிகராய் இருக்கும் பெண்களை தொட்டு பார்க்க இத்தகைய சாமாணிய ஆண்களுக்கு ஆசையே வருவதில்லை

அதனால் ஸ்நேகிதிகாள், ஆண்களின் தன்மையே இது தான். இவள் இசைவாள் என்று அவன் நினைத்தால், உங்களை தொட்டு உரிமை கொண்டாட அவன் முயல்வான். அது தான் அவன் இயல்வு.

அந்த ஆணை உங்களுக்கு பிடித்திருக்கிறது, அவன் தொடிகையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், வெல் ஆண்ட் குட், பார்வையை தாழ்த்திக்கொண்டு, அவன் தொடுகையை அனுபவியுங்கள். என் ஜாய் தி ரொமான்ஸ்!

நீங்கள் இசைய போவதில்லை. அவனை ரொமாண்டிக் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கவில்லை என்றால், ”நான் உன்னை எனக்கேற்ற ஆணாய் நினைக்கவில்லை. உன் எல்லை கோடு இது தான், இந்த எல்லையில் நின்று பேசு!” என்று உங்கள் இசையாமையை வெளிபடுத்தி வையுங்கள். Tresspassers not allowed என்கிற அனுமதி மறுக்கபடும் அறிவிப்பை உங்கள் body languageஜில் வெளிபடுத்துங்கள்.

இப்படி எல்லாம் பெண் அனுமதி இல்லை சமிக்ஞைகளை ஏன் பிரயோகிக்க வேண்டும்? இந்த ஆண் பாட்டுக்கு தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருந்து தொலைக்ககூடாதா? கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அவன் ஏன் கண்டவளை தொட முயல்கிறானாம் என்று உங்களுக்கு பல கேள்விகள் எழலாம். வெயிட் வெயிட், பதில்கள் அடுத்த ஸ்நேகிதியில்.