Sunday, December 26, 2010

எலும்பில்லா ஆண்

என்ன தான் ஆண்கள் குறி நீளத்தை வைத்து தங்கள் மதிப்பை அளவிட ஆரம்பித்து, இதை வைத்து தமக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி இட்டுக்கொண்டாலும், பெண்கள் மிக தெளிவாகவே இருந்தார்கள். வெறும் நீளத்தை வைத்து சுகத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பது தான் பெண்களுக்கு தெரியுமே! அதுமட்டுமல்ல, ஆடை இல்லாத காலத்தில் அமலில் இருந்த ஒரு தேர்வு வரையறையை ஆடைகள் அணியும் காலத்தில் எப்படி பின் பற்றுவது? ஆடை இருக்கும் சவுகரியத்தில் போலியான விளம்பரயுத்திகளில் பெரும்பாலான ஆண்கள் ஈடுபட ஆரம்பித்துவிட்ட பிறகு, இன்னமும் அதே தேர்வு கோட்பாட்டை வைத்து ஆண்களை தரம் பிரிப்பது முட்டாள்தனகாகாதோ?


அதனால் ஆண்கள் பாட்டிற்கு ஒரு பக்கம் ஆண்குறி அளவு குறித்த போட்டிகளில் தங்கள் நேரத்தை வீணடித்து ஏமாற்று, தந்திரத்தில் எல்லாம் ஈடுபட ஆரம்பிக்க, பெண்கள் சத்தமே இல்லாமல் தங்கள் தேர்வு வரையறையை மாற்றினார்கள்: நீளம் அகலம் எல்லாம் இருக்கட்டும், ”நீடித்த சுகத்தை தரமுடியுமா?” என்று வெளிதோற்றத்தை விட்டு விட்டு, செயல்பாட்டு திறனுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள் பெண்கள்.

அதனால் என்ன தான் பிரமாதமான அண்குறி சின்னத்தை அணிந்தவனாக இருந்தாலும், அவன் செயல்பாட்டில் சொப்லாங்கியாக இருந்தால், அவனை மரபணு சங்கலி ஆட்டத்திலிருந்து கழட்டிவிட்டார்கள் பெண்கள். ஆண்களினால் சுயமாய் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்ள முடியாதே, எப்படியும் பெண்ணுடல் தேவை படுமே. அந்த உடம்பை தர பெண் என்ன நிபந்தனை விதித்தாலும், அந்த நிபந்தனைக்கு ஏற்றாற்ப்போல தன்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். அல்லது மாற்றிக்கொண்டு விட்டதாக ஒரு பாவ்லாவாவது செய்தாக வேண்டும். இல்லை என்றால் மரபணு போட்டியில் அவனால் பங்கேற்கவே முடியாதே. இது தான் ஆணின் நிலை என்பதால், பெண்களின் இந்த கறாரான ”நீடித்த சுகம்” என்கிற தேர்வு விதியை அனுசரித்து ஆணின் மரபணுக்கள் மீண்டும் மாற ஆரம்பிக்க, இதனால் அவன் உடம்பில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது.

பொதுவாய் ஆண் விலங்குகள் அனைத்திற்கும், ஆண்குறியினுள் பாக்குலம் (Bacculum) என்கிற ஒரு எலும்பு இருப்பதுண்டு. இந்த எலும்பு தான் விரைப்பு தன்மையை நீட்டிக்க உதவுகிறது. சிம்பான்சீ மாதிரியான நம் நெருங்கிய உறவுக்கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது. ஆனால் மனித ஆண்களுக்கு மட்டும் இந்த பாக்குலம் என்கிற எலும்பு இருப்பதில்லை. ஏன் தெரியுமா? எலும்பின் உபயத்தால் விரைப்பு ஏற்படுவதை விட, எலும்பே இல்லாத போதும் நீட்டித்த விரைப்புடன் இருப்பது தான் நிஜ வீரியத்தின் வெளிபாடு….அதனால் மனித பெண்கள் எல்லோரும் எலும்பில்லாத ஆண்களுடன் கூடி அவர்களின் தரத்தை வித்தியாசபடுத்த ஆரம்பிக்க, காலப்போக்கில் மனித ஆண் தன் பாக்குலத்தை இழந்தான், அது இல்லாமலேயே விரைப்புறும் தன்மையை பெற்றான்.

பாக்குலம் இருப்பதில் ஆண் விலங்குகளுக்கு ஒரு மிக பெரிய சவுகரியம் இருந்தது. உதாரணத்திற்கு நாயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆண் நாய் பெண்ணுடன் புணர்ந்த பிறகும், கிட்ட தட்ட அரை மணி நேரத்திற்கு அப்பெண்ணை விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். காரணம் இந்த பாக்குலம் பெண் பாகத்தில் பூட்டிக்கிடப்பதால், அந்த ஆண் நினைத்தாலும் விடுபட முடியாது. வேறு வழி இல்லாமல் பெண்ணும் கிட்ட தட்ட அரைமணி நேரத்திற்கு அவனோடு ஒட்டிக்கொண்டே தான் இருந்தாக வேண்டும். இது தெரியாமல் பல பேர் புணர்ந்த நிலையில் இருக்கும் ஆண்களை கல்லால் அடித்து பிரிக்க பார்பப்துண்டு! ஆனால் இந்த ஆண் நாய் இப்படி அரைமணி நேரத்திற்கு பற்றிக்கொண்டே இருப்பதில் ஒரு முக்கியமான மரபணுவியல் காரணம் உண்டு. பெண் நாய்க்கு ஒரே சமயத்தில் ஏழெட்டு கருமுட்டைகள் உற்பத்தி ஆகும். ஒரு ஆணுடன் சேர்ந்த பிறகு உடனே அது இன்னொரு ஆணுடன் புணர்ந்து விட்டால், அந்த இரண்டாவது ஆணின் விந்தணுக்கள் சில கருமுட்டைகளோடு கலந்துவிட முடியும். இன்னொருத்தனின் மரபணுக்கள் பரவிவிட்டால், தன் சந்ததியினருக்கு போட்டி ஆகிவிடுமே என்று தான், கிட்ட தட்ட அரைமணி நேரம் பெண்ணை பிடித்துக்கொண்டே இருக்கிறது ஆண். இந்த அவகாசத்திற்குள் எல்லா கருமுட்டைகளையும் தன் விந்தணுக்களே அபகரித்துவிடும் என்பது தான் ஆணின் கணக்கு.

மற்ற விலங்குகளுக்கு இவ்வளவு அனுகூலமாய் இருக்கும் ஒரு முக்கியமான எலும்பு இந்த பாக்குலம். ஆனால் மனித பெண் மிக குறிப்பாய் பாக்குலமே இல்லாத ஆண்களாய் பார்த்து பல தலைமுறைகளாக தேர்ந்தெடுத்ததில், கடைசியில் மனித ஆண் பாக்குலம் இல்லாதவனாகி போய்விட்டான். இதில் பெண்களுக்கு ஒரு மிக பெரிய அனுகூலம் இருந்தது. வெறும் எலும்பின் உபயத்தால் விரைப்புறும் ஆணின் நிஜ வீரியத்தை நிர்ணயிப்பது சிரமம். ஆனால் எலும்பே இல்லாமல் வெறும் தன் உதிரத்தை மட்டும், புவி ஈர்ப்பு சக்தியை எதிர்த்து உயர்த்தி நிறுத்தி, இந்த சாதனையை தொடர்ந்து சில நிமிடங்கள் செய்து, பெண்ணை குஷி படுத்துகிறான் என்றால் அது அல்லவா நிஜ வல்லமை. உடல் நோய்களோ, மனநோய்களோ இருப்பவனால் இந்த சாதனையை செய்ய முடியாதே. வேறு எந்த தந்திரத்தாலும் இந்த சாதனையை செய்து காட்ட முடியாதே.

ஆக ஆணின் நிஜ உடல்/உள்ள ஆரோகியத்தையும் அவை வெளிபடுத்தும் மரபணு வீரியத்தையும் தரபரிசோதனை செய்ய இதுவே ஒரு மிக சிறந்த வழியாகிவிட, இதில் பெண்களை ஏமாற்றுவது என்பது முடியாத காரியமானது. பெண்கள் இப்படி கறாராக மரபணுக்களை தேர்ந்தெடுப்பது தான் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே நல்லது என்பதால் தான் இன்று வரை உலகெங்கும் இருக்கும் எல்லா மதங்களும், மதம் சாராத சட்டங்களுமே கூட, விரைப்புறும் தன்மை இல்லாத ஆண்களை நிஜ அண் என்று கருதுவதில்லை. அதனால் இப்படி பட்ட ஆணோடு திருமணம் நடந்தாலும், அத்திருமணத்தை ஒரு நிஜ திருமணமாய் இவை அங்கீகரிப்பதில்லை.

இதை விட ஆண்களுக்கு பெரிய சவாலாக அமைந்தது என்ன தெரியுமா? ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் கலவியல் செயல்பாட்டில் இருக்கும் வேறுபாடுகள்.

மனித ஆணால் ஒரு கலவி அனுபவத்தில் ஒரே ஒரு தரம் தான் உச்ச சுகத்தை அடைய முடியும். ஆனால் மனித பெண்ணோ, ஒரே கலவி சேர்க்கையின் போது பல முறை உச்ச சுகத்தை உணரவல்லவள். அது மட்டும் அல்ல, கலவி கொண்ட பிறகு ஆண் அயர்ந்து விடுவது தான் அவனுக்கு இயல்பு, ஆனால் பெண் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருப்பாள். இவன் தூங்கிவிட்ட பிறகு இவள் பாட்டிற்கு அடுத்த சுகத்தை தேடி போய்விட்டால் என்னாவது? மனித ஆணுக்கு தான் பாக்குலமே இல்லையே, இவன் விந்தணுக்கள் எல்லாம் நீந்தியோடி அவள் கருமுட்டையை சென்று கலக்கும் வரை, அவளை அரைமணி நேரத்திற்கு அப்படியே பிடித்து பூட்டிவைக்க அவனால் முடியாதே!

ஆக பாக்குலம் இல்லாமல் போனது, பெண்ணுக்கு சாதகமான சூழலையும், ஆணுக்கு அவஸ்த்தையையும் ஏற்படுத்திவிட, ஆணின் மரபணுக்கள் சும்மா இருக்குமா என்ன? பாக்குலம் இல்லாமலேயே பெண்ணை தன் வசப்படுத்த புது புது யுத்திகளை உருவாக்கின ஆணின மரபணுக்கள். அதனால் மூன்றாவது முறையை மீண்டும் ஒரு முறை ஆணின் உடல் அமைப்பு மாற ஆரம்பித்தது.

அடுத்த இதழில் அது பற்றி.

Thursday, December 23, 2010

ஆண்குறி சின்னங்கள்

மனித பெண்கள் தமக்கு அதிக சுகத்தை தரும் ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்த காலத்தில், ஆண்களுக்குள் எக்க செக்க போட்டி தலைதுக்க ஆரம்பித்தது. ”அதிக சுகத்தை தர வல்லவன் நான்” என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்பட, இதற்குண்டான கருவியின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.


நீளமான தந்தத்தை கொண்ட கடாவை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண்யானைகள் கூடும், இதனலேயே ஆண் யானைகளுக்குள், தந்தத்தின் அளவை வைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது. அதே போலத்தான் மயில். மிக நீளமான தோகையை கொண்ட சேவல் மயிலோடு தான் பெண் மயில் சேர விரும்பும்….இதனால் சேவல் மயில்களுக்குள்,

“யாருக்கு நீண்ட தோகை?” என்கிற போட்டி நடக்கிறது. மிகவும் இனிமையாக பாடத்தெரிந்த ஆண் குயிலோடு தான் பெண் கூடும், இதனால் குயில் ஆண்களுக்குள் பாட்டு திறமையில் போட்டி நடப்பது உண்டு……….இப்படி உலகில் எல்லா ஜீவராசியிலும் பெண்ணை கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாய் வெளிபடுத்துவைதை போலவே, மனித ஆண்களும் தங்கள் இனபெருக்க உறுப்பை ஒரு “வீரிய விளம்பரமாய்” வெளிபடுத்த ஆரம்பித்தார்கள்

இதனால் மனித ஆணின உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான் மிகவும் நீளமாக இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது. இத்தனைக்கும் மனித பெண்ணின் ஜனன குழாய் என்னவோ எல்லோருக்குமே அதே பத்து செண்டிமீட்டர் தான், இதனுள் சென்றடைய அதே பத்து செண்டிமீட்டர் நீளமுள்ள கருவி இருந்தாலே போதும், ஆனால் போட்டி என்று வந்து விட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும். இதனால் மனித ஆணின உறுப்பு நீளத்தில் பல வேறுபாடுகள் ஏற்பட, இத்தனை வேறுபாடுகள் இருப்பதால் ஆண்களுக்குள் இது குறித்த ஒரு போட்டி மனப்பாண்மை உண்டானது.

ஆடைகளே இல்லாத அந்த காலத்தில், மிக சுலபமாய் தூரத்தில் இருந்தே ஒரு ஆணின் அளவுகளை கணக்கிட்டு, அவனை தரம் பிரித்திருக்க முடியும். பெண்கள் இதை எல்லாம் சட்டை செய்கிறார்களோ, இல்லையோ. ஆனால் ஆண்கள் மத்தியில் யாரும் சொல்லித் தராமலேயே இந்த ஒப்பீடு ஆரம்ப காலம் துவங்கி இன்று வரை நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. தன் நீளத்தை நினைத்து கவலைபடும் ஆண்கள் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றும் பெரும்பாலான ஆண்களின் சுயமதிப்பீடே அவர்களின் இந்த அளவை பொருத்து தான் இருக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு இது குறித்த தாழ்வு மனப்பாண்மையே ஏற்படுவதும் உண்டு. ”அளவை அதிகரிக்க ஒரு மாயஜால வைத்தியம்” என்று யாராவது போலி டாக்டர் பொய்யாக, ஒரு பிட் நோட்டீஸ் ஆடித்து ஒட்டினாலும் உடனே அதை நம்பி, இதற்காக பணத்தையும் நேரத்தையும் செல்விட தயாராக இருக்கிறார்கள்.

ஆடை இல்லாத அந்த காலத்தில் பெண்களும், அவர்களை விட அதிக மும்முரமாய் ஆண்களும், வெறும் பார்வையை வைத்தே எதிரில் இருக்கும் ஆணை மிக துல்லியமாய் அளவிட முடிந்தது, அதனால் அதில் போலித்தனங்கள் இருந்திருக்க வாய்பில்லை. ஆனால் ஆடை அணியும் கலாச்சார மாற்றம் ஏற்பட்ட உடனே, “யாருக்கு தெரிய போகுது, பேராண்மை மிக்கவனாகத்தான் காட்டிக்கொள்வோமே” என்ற போக்கு தலை தூக்க ஆரம்பித்தது. அவரவர் ஊரில் இவ்வடிவில் ஏதாவது வஸ்து தென்பட்டால் போதும், உடனே ஆண்கள் எல்லாம் அதை தேடிப்பிடித்து, எடுத்து, வந்து மிக சரியாக தங்கள் இடுப்பில் செருகி வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் குச்சி, காய், கொம்பு, மரவுறி மாதிரியான phallic symbolsசை அணிய ஆரம்பித்த ஆண்கள், வேட்டையில் இன்னும் தேர்ச்சி பெற ஆரம்பித்ததும், பிற மிருகங்களின் பல், தந்தம், தோகை, நகம், உலர்ந்த உடல் பாகம் என்று பலதையும் அணிய ஆரம்பித்தார்கள். இந்த சின்னம் அணியும் போக்கிலும் போட்டிகள் தலைதூக்க, அதிக சமூக அந்தஸ்து இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்பவன் இருப்பதிலேயே மிக நீளமான இந்த phallic symbolலை அணிய யத்தனித்தான். உலோகம் கண்டுபிடிக்கபிட்ட பிறகோ, கத்தி, வாள், அரிவாள், அதற்கு அப்புறம் வந்த காலத்தில் துப்பாக்கி, ரைஃபில், பிஸ்டல், என்று இந்த சின்னங்களை இடுப்பில் மாட்டிக்கொண்டார்கள் ஆண்கள்.

இந்த சின்னங்களை எல்லாம் கண்டு பெண்கள் உண்மையிலேயே மயங்கி போனார்களா என்பது கேள்விக்குறி தான், ஆனால் மிக வலிமையான சின்னங்களை அணிந்த ஆண்களை கண்டு பிற ஆண்கள் அடங்கிபோனதென்னவோ உண்மை தான். ஆனால் கலாச்சாரம் வளர வளர, இப்படி பகிரங்கமாய் விளம்பரபடுத்துவது அநாகரீகம் என்கிற கருத்து வலுபெற்றது. அதனால் நார்மலான ஆண்கள் இப்படி அப்பட்டமாய் வெளிபடுத்துவதில்லை. ஆனால் மனநலம் குன்றிய நிலையில் பல ஆண்கள் இதில் அப்பட்டமாய் ஈடுபடுவதை பார்க்கலாம். இவர்களை தவிற மற்ற ஆண்கள் எல்லோரும், மிக நாசூக்காக தங்கள் திறமைகளை கொண்டு தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயல்வதையும் மனித வரலாறு முழுக்க காணலாம். கற்களை செதுக்கும் ஆற்றலை பெற்றதுமே ஆண், மிக பெரிய ஆணின உறுப்பு வடிவங்களை செதுக்கி வைத்தான்…………இன்றும் இது போன்ற பல புராதன ஒபிலிஸ்க் சிற்பக்கற்களை எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் மாதிரியான நாடுகளில் பார்க்கலாம்.

இதன் பிறகு பெருமதங்கள் தோன்ற ஆரம்பிக்க, சமன துறவிகள், நிர்வாண கோலமாய் இருப்பதையே ஒரு மகத்தான் ஆண்மீக முக்திநிலை என கருதினார்கள். அதனால் ஆணின் நிர்வாணம் மீண்டும் அவன் பேராற்றலை பறைசாற்றுவதாக கருதப்படலானது. கிட்ட தட்ட 700 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் வேறு மூலைகளில் கிறுத்துவ பெருமதம் பரவ ஆரம்பித்தது. சமணம், நிர்வாணத்தை மேம்பட்ட ஒரு சாதனையாக கருதிய காலம் போய், ஆடை இல்லாத நிலையை “மஹாபாவம்” என்று கருதும் மனநிலைக்கு மனிதர்கள் மாறி இருந்தார்கள். அதனால் கிறுத்துவ தேவாலயங்கள் நிர்வாணத்தை தடை செய்தன. ஆனாலும் மனித ஆணின் ஆரம்பகால குணம் மாறி இருக்கவில்லை………..விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன.

அதற்குள் இந்தியாவிலும் சமய மாற்றம் ஏற்பட்டிருந்தது, சமணம் தோற்று, சைவம் ஓங்க ஆரம்பித்தது. சமணத்தில் முழு ஆணின் நிர்வாணம் வணக்கத்திற்குரியதாய் போற்ற பட்டிருந்தது. சைவத்திலோ இது இன்னும் நுணுக்கமாகி, ஆண் உடலில் மற்ற பாகங்களை நீக்கிவிட்டு, வெறும் அவனுடைய இனக்குறியை மட்டும் வழிபாட்டிற்கு உரியதாக கருதும் மனநிலை உருவாகியது. லிங்க வழிபாடு பரபலமாக, தன் வீரியத்தையும் ஆற்றலையும் செல்வாக்கையும் காட்டிக்கொள்ள முயன்ற ராஜ ராஜ சோழன் மாதிரியான அரசர்கள், இருப்பதிலேயே மிக பெரிய அளவு ஆணினச் சின்ன லிங்கத்தை ஸ்தாபித்து, தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயன்றார்கள். இன்றும் பல நாடுகள் தங்கள் பேரந்தஸ்த்தை காட்டிக்கொள்ள, மிக பெரிய கோபுறம், என்று மெனக்கெட்டு ஆணினக்குறி வடிவில் கட்டுவதை பார்க்கிறோமே. அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம்.

இப்படி எல்லாம் ஆணினச்சின்னங்களை விஸ்தாரமாய் விளம்பரபடுத்தினால் மற்ற ஆண்கள் பயந்து போட்டியில் இருந்து விலகிக்கொள்வார்கள்; பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்

Friday, December 17, 2010

பெண்வழி சமுதாயமும், ஆண்குறி போட்டியும்

பெண்கள் காலத்திற்கேர்ப்ப வரையறைகளை மாற்றி கலவியல் தேர்வு செய்தார்கள், இதை அணுசரித்து கெட்டிக்கார ஆண்களும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இப்படி மாறி வந்த ஆண்களின் மரபணுக்கள் பரவின, மாறாத ஆண்களின் சுடவே மறைந்து போனது. இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம்? என்கிறீர்களா? அதில் தான் ஸ்வாரஸ்யமே இருக்கிறது………..

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிந்தார்கள். பெண்கள் வேட்டைக்கு போனார்களா? அது ஆண்களின் வேலையல்லவா என்று ஆட்சரியப்படாதீர்கள்? எல்லா விலங்குகளிலும் ஆணை விட பெண் தான் அதிக வேட்டுவ தன்மை கொண்டிருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்புராணி, கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடித்து மலேரியாவை பரப்பும். காரணம், பெண்ணுக்கு தான் தன் குட்டிகளை கட்டிக்காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன், அவ்வளவு ஏன் துரித கதியின் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றை தகவமைத்திருக்கிறது. இந்த புலன் நுணுக்கத்தினாலேயே ஆணை விட பெண் அதிக திறம்பட வேட்டையாடவல்லதாகிறது.

மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாய் இறை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுட கூட்டங்களை பெண் தலைவிகளே வழி நடத்தி சென்றார்கள். ஆக பெண்கள் ஆண்களை எதற்குமே நம்பி வாழாத காலமது.

இப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்? என்கிறீர்களா?

ஆதாரம் ஒன்று: காங்கோ நதிக்கரையோரமாய் இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோபோ என்கிற வானர இனம். இந்த பொனோபோக்கள் அச்சு அசல் அப்படியே மனிதர்களை போலவே நடந்துக்கொள்பவை. இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால் செய்கை மொழியில் மனிதர்களுடனும் சம்பாஷிக்கின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவை எல்லாவற்றையும் விட விசேஷம்: இவை கலவி கொள்ளும் விதம் அப்படியே மனிதர்களை போலவே இருக்கிறது.

மனிதர்களை போலவே என்றால் என்ன அர்த்தமாம்? மிருக கலவிக்கு மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல், முன்னுக்கு பின் தான் கூடி புணரும். அதுவும் இனபெருக்க காலத்தில் மட்டும். எந்த வித சுகமுமே உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்பு சப்பில்லாத சம்பிரதாயமாய். ஆனால் முகம் பார்த்து, இன்னாருடன் புணருகிறோம் என்று அறிந்து, பருவகாலம் மட்டுமல்லாமல், தனக்கு பிடிக்கும் போதெல்லாம் ஆசைக்காக புணரும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்கு தான் உண்டு. ஒன்று மானுடம், இன்னொன்று பொனோப்போ. நடத்தையிலும், மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறதென்றால், மரபணுக்களில்? என்று பரிசோதனை செய்து பார்த்தால், ஆட்சர்யம் ஆனால் உண்மை…..பொனோப்போக்களின் மரபணு புரதங்கள் கிட்ட தட்ட 98% மனிதர்களை போலவே இருப்பதை கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். மரபணு நெருக்கத்தில் பார்த்தால் மனிதர்களும் பொனோப்போக்களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனகலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்க கூட வாய்ப்பிருக்கிறதென்றால் பாருங்களேன்.

ஆனால் இதை எல்லாம் விட மிக பெரிய ஆட்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய் வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல, நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பான்ஸீகளும் தாய்வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. அப்படியானால் மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூக முறையை கடைபிடித்திருப்பார்கள் என்று தானே அர்த்தம்.

ஆதாரம் இரண்டு: இன்றும் மனிதர்களுக்கு அம்மா செண்டிமெண்ட் தான் பலமாக இருக்கிறது. அப்பா செண்டிமெண்ட் அத்தனை பலமானதாய் இருப்பதில்லை.

ஆ 3: தொல்காப்பியம் மாதிரியான பண்டைய இலக்கண நூல்களும் மனிதர்கள் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூகமாய் தான் வாழ்ந்தார்கள் என்கிறது.

ஆ 4: தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன…..இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை…..உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

அதெல்லாம் சரி, நம்ம சங்கதிக்கு வருவோம். கொற்றவை காலத்து பெண் ஒருத்தியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். இவள் வேட்டைக்கு தானே போய்க்கொள்வாள். பெண் வழி சமூகமாய் வாழ்ந்ததால் இவள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவளுக்கு சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆக எதற்க்காகவும் ஓர் ஆணை அண்டிப்பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவள் இல்லை. இப்படி வாழும் இந்த பெண் எதற்க்காக ஒரு ஆணை நாடுவாள்?

சிம்பிள்…..அந்த ஆணினால் அவளுக்கு ஏற்படும் கலவியல் கிளர்ச்சிக்காக மட்டுமே. அந்த காலத்தில் தனி சொத்து என்கிற சமாசாரமே இல்லை, அதனால் கற்பு என்கிற நம்பிக்கையே ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் பெண்கள் தமக்கு பிடித்த ஆண்கள் பலரோடு கூடி மகிழ்ந்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் இந்த முறையை தான் பாலிஆண்டரி, polyandry என்போம்.

இப்படி பாலிஆண்டிரி புரியும் போது, பல ஆண்களோடு கூடி, தனக்கு அதிக சுகத்தை தருகிறவன் யார் என்பதை கண்டுகொள்ள வாய்ப்பு பெண்களுக்கு இருந்ததால், அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடினாள். இதனால் பெண்களை மகிழ்விக்க தெரிந்தவனின் மரபணுக்கள் மட்டுமே பரவின. மகிழ்விக்க தெரியாதவர்கள் மரபணு ஆட்டத்திலிருந்த நீக்க பட்டன. ஆனால் ஒரு கூட்டத்தில் பல ஆண்களுக்கு பெண்ணை மகிழ்விக்க தெரிந்திருந்தால், இவர்களுக்குள் போட்டி ஏற்படுவது இயல்பு தானே. அதனால் ஒருவரை அடுத்தவர் மிஞ்சிட ஆண்கள் முயல், இதனால் காலப்போக்கில் மனித ஆண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

அவற்றை பற்றி எல்லாம் அடுத்த உயிர் மொழியில்

Friday, December 10, 2010

கலவியல் தேர்வு

Sexual selection, கலவியல் தேர்வு என்கிற முறையில் தான் ஆண்களை எல்லாம் சலித்து, புடைத்து, தரம் பிரித்து, சிறந்த மரபணுக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அடுத்த தலைமுறைக்கு பாக் அப் செய்கிறார்கள் பெண்கள்.


இதை பெண்கள் தான் செய்ய வேண்டுமா, ஏன் ஆண்கள் செய்தால் ஆகாதா? என்றால், சபாஷ் சரியான கேள்வி தான். இதற்கு உண்டான பதிலுமே ரொம்ப விவகாரமானது தான்.

• ஆண் பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும், இதில் பெண்ணின் பங்கு தான் அதிகம். கலவியல் செல்கள், என்பவை இரண்டு பாலினருக்குமே பொது, இரண்டிலுமே 23 குரோமோசோம்கள் தான் இருக்கின்றன, என்றாலும், இவற்றின் எண்ணிக்கையிலும், வடிவமைப்பிலும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன.

ஒரு ஆண் ஒரு நாளைக்கு கிட்ட தட்ட எண்பது முதல் நூறூ மில்லியன் வரை விந்தணுக்களை உற்பத்தி செய்கிறான். அவன் வயதிற்கு வந்த அந்த கணம் முதல் அவன் வாழ்நாள் முழுவதுமே இப்படி மில்லியன் கணக்கில் விந்தணுக்களை உற்பத்தி செய்யவல்லவன் ஆண்.

ஆனால் பெண், ஒரு மாதத்திற்கு ஒரே ஒரு கருமுட்டையை தான் உற்பத்தி செய்கிறாள். அதுவும் வயதிற்கு வந்த பிறகு ஆரம்பித்து, மெனோபாஸ் ஆகும் வரை. கூட்டி கழித்து பார்த்தால் கிட்ட தட்ட 30 – 35 ஆண்டுகளுக்கு மட்டும். வருடத்திற்கு 12 கருமுட்டைகள், என்றால் தன் வாழ்நாள் முழுவதுமே சேர்த்து ஒரு பெண் உற்பத்தி செய்வது, மொத்தமே நானூற்று சொச்ச கருமுட்டைகள் தான்!

கருமுட்டையின் சைஸ்சையும் விந்தணுவின் சைஸையும் ஒப்பிட்டு பார்த்தால், விந்தணு ஒரு சின்ன புள்ளி மாதிரியும் கருமுட்டை அதை விட ஆயிரம் மடங்கு பெரிதாய், ஒரு உலக உருண்டை மாதிரியும் இருப்பதை நாம் காணலாம். காரணம், வந்தணுவில் வெறும் 23 குரோமோசோம்களும், அவற்றை நீந்த வைக்க ஒரு வாலும், அந்த வாலுக்கு நீந்து சக்தியை தர ஒரு குட்டி எஞ்சினும் தான் உள்ளன. கருமுட்டையிலும் அதே 23 குரோமோசோம்கள் என்றாலும், அந்த குரோமோசோம்களை சுற்றி, நிறைய கொழுப்பும், புரதமும் சக்தி கொடுக்க திரண்டு இருக்கும். காரணம் கருமுட்டை என்பது ஒரு சக்தி பிளம்பு. கருவுக்கு போஷாக்களிக்க வேண்டிய அளவு எரிபொருளும், ஆற்றலும், அதில் நிறைந்திருக்கிறது.

Gene economics, மரபணு பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆணின் விந்தணுவை தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை, அதனால் ஒரே நாளில் பல மில்லியன்களை உற்பத்திசெய்து தள்ள முடியும். ஆனால் பெண்ணின் கருமுட்டையோ, ரொம்பவே costlyயான ஒரு படைப்பு, அதனால் தான் அது மாதத்திற்கு ஒன்று என்று தயாராகிறது. அதனால் எரிபொருளை இருப்பை வைத்து மதிப்பிட்டால், விந்தணு மலிவானதகவும், கருமுட்டை விலை உயர்வானதாகவும் ஆகிவிடுகிறது.

• ஆணின் விந்தணுக்களுக்கு செய்கூலி மிக குறைவு. அதனால் அது விரையம் ஆனாலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட போவதில்லை. அதனால் தான் ஆண் மிருகங்கள், பெண்ணின் சாயலில் இருக்கும் பிற வஸ்துக்களை கண்டாலும், உடனே விந்தணுக்களை வெளியேற்றி விடுகின்றன. அதனால் அம்மிருகத்திற்கு எந்த பெரிய இழப்பும் இல்லை. ஆனால் பெண் தயாரிப்பதே மாதத்திற்கு ஒரே ஒரு கருமுட்டை என்பதினால், அதை விரையம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதனால் பெண் தன் காஸ்ட்லியான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடனே அணுகுகிறது

• தன் மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஆண் அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதில்லை. ஒரு தகுந்த பெண்ணை தேடி பிடித்து, அவளை இசைய வைத்து, உடல் பாகங்களை பொருத்தி, விந்தணுக்களை முதலீடு செய்துவிட்டால் போதும் - சில நிமிட அசைவுகள், சில துளி விந்தணுக்கள் - இந்த சொர்ப்ப முதலீட்டிலேயே அவன் மரபணுக்கள் எளிதாக பரவிவிடும். அதன் பிறகு அந்த பெண் இருக்கும் திசை பக்கமே இவன் வரவில்லை என்றாலும், இவன் மரபணுக்கள் மிக ஷேமமாய் பரவித்தான் இருக்கும்.

ஆனால் பெண் தன் மரபணுக்களை பரப்பிக்கொள்வது இத்தனை சுலபமல்ல. இவள் மாதம் முழுக்க முயன்று, எத்தனையோ கிலோ ஜூல் எரிபொருளை கொட்டி குவித்து, ஒரே ஒரு கருமுட்டையை உருவாக்குகிறாள். அந்த கருமுட்டையை விந்தணுக்களோடு கலந்து கருவை தன் உடம்பிலேயே உருவாக்குகிறாள். இந்த கருவை மாதக்கணக்கில் தன் உடலில் தக்க வைத்து, போஷாக்களித்து, பிரசவத்தின் பெரும் துயர்களை எல்லாம் அனுபவித்து, குட்டியை ஈன்றும் புறம் தந்து அதற்கு பாலூட்டி, பத்திரப்படுத்தி, வாழ்வியல் வித்தைகள் சொல்லி தந்து……….ஆக பெண் தன் ஒட்டு மொத்த உடலையும் வாழ்வையும் பணயம் வைத்தாலே ஒழிய, அவளுடைய மரபணுக்கள் செம்மையாக பரவாது.

ஆக இனபெருக்க ஆட்டத்தில் ஆணின் முதலீடு மிக சொர்ப்பமே. ஆனால் பெண் செய்யும் முதலீடு மிக மிக அதிகம். இவ்வளவு அதிகமான முதலீட்டை எல்லாம் சும்மா ஏதோ ஒரு சோப்லாங்கியின் மரபணுக்களை பரப்பித்தர செலவழித்தால் அதை விட முட்டாள் தனம் வேறு என்ன இருக்க முடியும்? இதே சிரமங்களை ஏதோ ஒரு சூப்பர் மேனின் மரபணுக்களை பெற்று தர மேற்கொண்டால் அதில் இருக்கும் அர்த்தமே அலாதி தானே!

அதனால் தான் ஆண்களை எடைபோட்டு, இவன் தேருவானா, மாட்டானா? இவன் மரபணுக்கள் தேருமா? தேராதா? என்று மிக துல்லியமாக கணக்கிடும் ஆற்றலை இயற்க்கை பெண்களுக்கு பிறவியிலேயே படைத்திருக்கிறது. எல்லா ஜீவராசியிலும் பெண்பால் மிக மிக கறாராகத்தான் துணையை தேர்வு செய்கிறது.

மனிதர்களிலும் பெண்கள் எப்போதுமே மிக கணக்காய் தான் துணை தேர்வு, mate selectionனில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வாழும் காலம், பருவம், சூழல் எல்லாவற்றையும் சரி பார்த்து, எந்த மரப்பணுக்கள் இருந்தால் தன் குட்டி சுலபமாக பிழைக்க முடியும் என்பதை உணர்ந்து, அம்மரபணுக்களை சுமக்கும் ஆண்களாக தேர்வு செய்து புணர்கிறார்கள்.

இந்த செக்‌ஷுவல் செலக்‌ஷனை பெண்கள் செய்யும் விதமே ரொம்பவே ஸ்வாரசியமானது. மனித வரலாற்றின் வெவ்வேறு காலநிலைகளில் வெவ்வேறு தேர்வு வரையறைகளை வைத்து ஆண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பெண்கள். இப்படி மாறிக்கொண்டே வரும் அவள் ரசனையை புரிந்துக்கொண்ட புத்திசாலிமனித ஆணும் காலத்திற்கு ஏற்ப தன்னை தானே மாற்றிக்கொண்டே வந்திருக்கிறான். அதனால் தான் மானுடம் மற்ற எல்லா ஜீவராசிகளையும் முந்தி வந்திருக்கிறது. மாறாமல் பின் தங்கி போன மக்கு ஆண்களையும் அவர்களது மரபணுக்களையும் பெண்கள் வடிகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். இப்படி ஆணும் பெண்ணுமாய் மனிதர்கள் ஆடிய இந்த மரபணு ஆட்டங்களை பற்றி எல்லாம் அடுத்த இதழில்………

Monday, December 6, 2010

ஆல்ஃபா ஆண்கள்

தொல்காப்பியர் ஏன் அப்படி எழுதினார்? அடிமையாக இருப்பவன் பாட்டுக்கு தலைவனாக அதாவது ஹூரோவாக இருக்க முடியாது என்று ஒரு விதியை அவர் முன் வைக்க காரணம் என்ன? சிம்பிள்….சுய சிந்தனாசக்தியும், சுதந்திரமும் இல்லாதவன், ஏவல் செய்ய மட்டுமே லாயக்கியாவன். இப்படி பட்டவனை ஆண்களும் மதிக்க மாட்டார்கள், பெண்களும் காதலானாகவோ, கணவனாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


ஏன் பெண்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம் என்கிறீர்களா? உலகில் உள்ள எல்லா பெண்பாலின உயிரினங்களுக்கும் ஒரு பொது சுபாவம் உண்டு – அவை எல்லாமே தலைமை குணங்களை கொண்ட உயர் அந்தஸ்து ஆல்ஃபா ஆண்களை தான் இனபெருக்கத்திற்க்காக தேர்வு செய்கின்றன. தன் வாழ்வை சுயமாய் நிர்ணயிக்க முடியாத அடிமை நிலையில் இருக்கும் ஒமேகா ஆண்களை பெண்கள் ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை.

இந்த பெண்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? ஆல்ஃபாவாக இருந்தால் என்ன, ஒமேகாவாக இருந்தால் என்ன, எல்லோரும் ஒரே இனம் தானே, எல்லோருக்கும் சம உரிமை தரலாமே? என்று நீங்கள் ஆட்சேபித்தால், இதில் ஒரு பெரிய மரபணுவியல் சூட்சமம் இருக்கிறதே!

சமூககூட்டங்களால் வாழும், யானை, குரங்கு, ஓனாய், மானுடம், மாதிரியான விலங்குகளில் என்ன தான் நாம் எல்லோரும் ஒரே இனம், எல்லோரும் ஒரே தரம் என்று சமத்துவம் எல்லாம் பேசினாலும், இவற்றுக்குள் ஒரு சமூக அடுக்கு நிலை, social hierarchy இருக்க தான் செய்கிறது. அதிக பவர் இருக்கும், பேரஸ்ந்தஸ்து பெருந்தகை ஆல்ஃபா என்கிற தலைமை பதவியை வகிக்கும். அதற்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் பீட்டா, காமா, டெல்டா வகையராக்கள், உபதலைவர், மந்திரி, செயலாளர், மாதிரியான நிலைகளை நிரப்பும். இந்த எல்லா நிலைகளுக்கும் கீழே மிக குறைவான சமூக அந்தஸ்தில் இருக்கும் ஒமேகா ஏவலுக்கு கட்டுப்பட்டு இருக்கும்.

எப்படி புரட்டி போட்டாலும், கம்யூனிஸம், சோஷியலிசம் பேசினாலும், எல்லா மனிதர்ளும் சம நிலை வகித்தாலும், இந்த பவர் அணிவரிசை பின்புலத்தில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும். இப்படி இயங்கும் இந்த தரவரிசையில், ஒரு பெண், எந்த ஆணை தேர்ந்தெடுத்தால் அவள் குழந்தைகளுக்கு நல்லது? ஆல்ஃபா ஆணை தேர்ந்தெடுத்தால் தானே அவனுடைய உச்ச கட்ட அந்தஸ்து, அவனுக்கு கிடைக்ககூடிய ஏராளமான வளங்கள் ஆகியவற்றை கொண்டு அவள் பிள்ளைகளை ஷேமமாக வளர்த்து ஆளாக்க முடியும். அப்படியும் ஒரு வேலை இந்த ஆல்ஃபா ஆண் எப்போதாவது தோற்று போனாலும், முன்பு அவன் ஒரு ஆல்ஃபாவாக இருந்ததை வைத்து, காலத்தை ஓட்டலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், அவனுடைய மரபணுக்கள் ஆல்ஃபா தனம் ததும்புபவை என்பதால், அவனுக்கு பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் தாமும் ஆல்ஃபா ஆகிவிடலாமே.

ஆனால் ஒமேகா? அவனுடைய மரபணுக்களை உள்வாங்கிக்கொள்வதால் அவள் குழந்தைகளுக்கு பெரிய ஆதயமே இல்லையே….இதனால் தான் சமூக அடுக்கு அமைப்பில் வாழும் எல்லா உயிரின பெண்களுமே ஆல்ஃபா என்றால் உடனே இசைந்துவிடுகின்றன. ஒமேகா என்றால் ஒரங்கட்டி விடுகின்றன.

தன் எதிரில் இருக்கும் ஆண் ஒரு ஆல்ஃபாவா இல்லையா என்று கண்டுபிடிக்கும் திறமை பெண்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கிறது. பிரச்சனை வரும் போது பயப்படாமல், அசகாயசூரனாய் எதிர்த்து போராடி ஜெயிக்கிறானா? தன்னை விட வறியவர் என்றால் உடனே தன் பலத்தை கொண்டு ரட்ஷிக்க முன்வருகிறானா? யார் என்ன சொன்னாலும், உடனே கேட்டுக்கொண்டு ஏவல் செய்யாமல் தானே சுயமாய் யோசித்து கெட்டிக்காரதனமாய் செயல் படுகிறானா? அவனுக்கு மேல் தலைவர்கள் யாருமே இல்லை, அவன் தான் எல்லோருக்கும் மேல், என்பதை நிருபவிக்கிறானா? அவ்வளவு தான், பெண்கள் உடனே அவன் பக்கம் சாய்ந்துவிடுவார்கள். அது புத்தர் ஆகட்டும், ஏசு ஆகட்டும், காந்தியாகட்டும், பெரியாராகட்டும். ஏன், ஆல்ஃபா மாதிரி நடிக்க தெரிந்த எம் ஜி ஆர் ஆகட்டும், ரஜினிகாந்த் ஆகட்டும். உடனே பெண்கள் எல்லாம் கொத்து கொத்தாய் இவர்களை கண்டு மயங்கி போய்விடுகிறர்கள்.

இதுவே, சாஸ்திர சம்பிரதாயப்படி திருமணம் செய்துக்கொண்ட அவளுடைய சொந்த கணவன், ஆல்ஃபாவாக இல்லை, அட ஏதோ ஒரு பீட்டா, காமா, டெல்டாவாக இருந்தால் கூட அவள் பொருத்துக்கொள்வாள், ஆனால் அவனே ஒரு ஒமேகாவாக இருப்பதை அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்று வையுங்கள்……அவ்வளவு தான், பெரும்பாளான சந்தர்ப்பங்களில் பெண்கள் இந்த ஆண்களை புறக்கணித்துவிட்டு, வேறு ஆண்களை வேட்டையாடிக்கொள்ள கிளம்பிவிடுகிறார்கள். என்ன தான் தாலி செண்டிமெண்ட், கற்பு செண்டிமெண்ட், தமிழ் கலாச்சாரம் என்று நாம் மேம்போக்காய் பல தடுப்புக்களை முன்நிறூத்தினாலும், இயற்க்கையின் உந்துதல்களை இவற்றால் தடுக்கவே முடிவதில்லை.

அந்த காலத்திலாவது பெண்களின் இந்த வேட்டுவ இயல்பை மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சமூக மரபு, குல வழக்கம், கிராமத்து கட்டுபாடு என்று பல விதங்களில் கட்டுபடுத்த முடிந்தது. இத்தனை கட்டுபாடுகளை மீறியும் பல பெண்கள் அப்போதும் படி தாண்டிக்கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் இன்று உலகமே ஒரு சின்ன உருண்டையாகிக்கொண்டிருக்கும் இந்த globalization யுகத்தில், சுயகட்டுபாடு ஒன்றை தவிற பெண்களை கட்டுபடுத்த வேறு எந்த சக்தியுமே இல்லாத இந்த காலத்தில், ஒரு ஆண் தன் மானத்தையும் மரபணுக்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அவன் ஆல்ஃபா தனங்களை காட்டிக்கொள்கிறானோ இல்லையோ, கட்டாயமாக ஒமேகா அறிகுறிகளை தவிர்த்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறான்.

எல்லா மனிதர்களுக்குமே உடம்பு ஒன்று தான். அதனால் அதில் ஆல்ஃபா – ஒமேகா வித்தியாசங்கள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் இந்த மனம் இருக்கிறதே, இது தான் எல்லோருக்கும் வெவ்வேறு விதமாகத்தான் வேலை செய்கிறது. இந்த மனசும் பிறக்கும் போது எல்லோருக்கும் ஒரே விதமாகத்தானே இருந்தது, பிறகெப்படி வெவ்வேறாக மாறியது என்கிறீர்களா? இப்படி மாறும் தன்மை கொண்டிருப்பது தானே இந்த மனதின் பலமும் பலவீனமும்! பிறக்கும் போது எல்லோருக்குமே எந்த எல்லைகளுமே இல்லாத விசாலமான மனசு தான் என்றாலும், வளர வளர, நம் குடும்பங்களும், சமுதாயமும், பல விதமான நம்பிக்கைகளை வைத்து நம் மனதை கட்டிப்போட்டுவிடுவதுண்டு. அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், சகோதர செண்டிமெண்ட், என்று குடும்பம் நம் மனதை குறுக செய்வது போலவே, எஜமானர் விஸ்வாசம், அலுவலக பற்று, என்று நம் வேலை நம்மை அடிமை படுத்துவது போலவே, மதபற்று, ஜாதி பற்று, மொழி பற்று, தேச பற்று, என்று பல மாயைகளால் சமூதாயம் நம் மனதை முடக்கிவிடுகிறது. இந்த எல்லா மாயைகளும் முக்கியம் என்று நம்பிக்கொண்டு, இவற்றுக்காக நாமும் மெனக்கெட ஆரம்பித்துவிடுகிறோம். நம் நம்பிக்கையே நம் மனதை அடிமை படுத்திவிடுவதால், நம்மையும் அறியாமல் ஒமேகா மனநிலைக்கு தள்ள படுகிறோம். கண்மூடித்தனமான விஸ்வாசத்தில் வாழ்வை தொலைக்கிறோம்.

ஆனால் இயற்கை மட்டும் மிக தெளிவாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நம்பிவிட்டு போங்கள், ஆனால் கடைசியில் எப்போதும், only the fittest shall survive. எப்படியும் இருக்கும் எல்லோரது மரபணுக்களும் பரவிவிட்டால் இந்த பூமி தாங்காதே, சிலரது மரபணுக்களை வடிகட்டி ஒதுக்கிதள்ளியே ஆக வேண்டும். வேட்டையின் போது வறிய உயிர்களை வடிகட்டும் வேலையை ஆணும் செய்யலாம். ஆனால் கலவி வழியாக வடிகட்டும் வேலையை பெண்ணால் மட்டும் தானே செய்ய முடியும். அதனால் தான் இந்த sexual selection, கலவியல் தேர்வில், பெண்கள் பாகுபாடோடு நடந்துக்கொள்கிறார்கள். அம்மாவுக்காக, அக்காவுக்காக, அலுவலகத்திற்க்காக, தாய்நாட்டிற்க்காக, தாய் மொழிக்காக, யாரோ ஒரு தலைவனுக்காக, எதோ ஒரு போதைக்காக, என்று அடிமையாகி போகும் ஆண்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, தனக்காகவும் தன் மக்களுக்காகவும் தன்னை அற்பணிக்கும் ஆல்ஃபா ஆண்களை மட்டுமே தேர்வு செய்து அவன் மரபணுக்களை பரப்பித்தருகிறார்கள் பெண்கள். இது தான் இயற்கையின் அமைப்பு என்றால் ஒரு புத்திசாலி ஆண் என்ன செய்ய வேண்டும்?

Saturday, December 4, 2010

அதிகார அம்மாக்களும் அடிமை ஆண்களும்

மகனுக்கு திருமணமே செய்யாமல் நாற்பது வயது தாண்டிய பிறகும் அவனை அப்படியே ஊருகாய் போட்டுவைத்த அம்மா. திருமணம் செய்து வைத்துவிட்டு, முதலிரவின் போது “நெஞ்சு வலிக்கிதே” என்று மயங்கி விழுந்த அம்மாக்கள். முதலிரவு தாண்டி, தேன் நிலவுக்கு மகனை தனியாக அனுப்ப முடியாது என்று தானும் உடன் போன தாய்கள். தப்பித்தவறி மகன் தனியாக மனைவியுடம் தேன் நிலவுக்கு போனாலும் நிமிடத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்து அவனை பற்றிக்கொண்டே இருந்த தாய்மார்கள்……


இவற்றையும் தாண்டி, மகனுக்கும் மருமகளுக்கும் கலவுறவு ஏற்பட்டுவிட்டால் மகன் எங்கே சொக்கிப்போய் அதற்கு மேல் அம்மாவை கண்டுக்கொள்ள மாட்டானோ என்று மகனை இரவு வேளைகளில், ஏதாவது காரணம் சொல்லி தன் பக்கத்திலே வைத்துக்கொண்டு தாமதமாக தனி அறைக்கு அனுப்பும் தாய்மார்கள், மகனின் படுக்கை அறை வாசலிலேயே படுத்துக்கிடக்கும் தாய்மார்கள். மகன் மனைவியோடு தனியாக இருக்கிறானே, என்கிற இங்கீதம் கூட இல்லாமல் கதவை கூட தட்டாமல் நேரே உள்ளே வந்து நிற்கும் தாய்மார்கள். மனைவி உடனிருந்தால் தானே இந்த வம்பெல்லாம் என்று ஏதாவது காரணம் சொல்லி புது மணப்பெண்ணை பிறந்த வீட்டிற்கே பேக் அப் செய்யும் தாய்கள்.

குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் என்னை மொத்தமாக மறந்துவிடுவானோ என்று மிக சரியாக மருமகளின் மாதவிடாய் தேதிகளை கணக்கிட்டு முக்கியமான அந்த நாட்களில் மட்டும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டு வைக்கும் தாய்மார்கள். குழந்தை பிறந்துவிட்டாலும் தன் மகள் வழி பேரன் பேத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, மகன் வழி பேரன் பேத்திகளை வித்தியாச படுத்தி நடத்தும் தாய்கள். தன் வாழ்நாள் முழுக்க, மருமகளை மட்டம் தட்டுவதை மட்டுமே தன் முழு நேர பொழுது போக்காய் கொண்ட மாமியார்கள்……….என்று பலவகை தாய்குலங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். கிட்ட தட்ட எல்லா வீடுகளில் இது மாதிரி ஏதாவது ஒரு சோகக்கதை இருக்க தான் செய்கிறது.

சரி, அம்மாவுக்கு தான் இன்செக்யூரிட்டி. இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு எந்த பவரையுமே தராததால் மகனை தன் வசப்படுத்தி, அவன் மூலமாய் தன் காரியங்களை சாதித்துக்கொள்கிறாள்…..ஆனால் பையனுக்கு பகுதறிவு வேண்டாமோ? எங்கெல்லாம் அம்மாக்கள் பையனை வைத்து பரமபதம் ஆடுகிறார்களோ, அங்கெல்லாம் தோற்றூ போகிறவர்கள் சாட்சாத் அந்த பையன்களே தான்.

உதாரணத்திற்கு ஒமரை எடுத்துக்கொள்வோம். ரொம்பவும் ஆசைபட்டு தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டான் ஒமர். அவன் மனைவி பேரழகி, பணக்கார வீட்டு பெண், இவன் மேல் பைத்தியமாக கிடந்தவள். இவனுக்கும் அவளை ரொம்பவே பிடிக்கும். இருவரும் ரொம்பவே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஒமர் வேலைக்கு போன பிறகு அவன் அம்மா தினமும் அவனுக்கு ஃபோன் செய்து, “உன் பொண்டாட்டி என்னை மதிக்கிறதே இல்லை. மதியானமே சப்பாத்தி சுட்டு ஹாட் பேக்கில வைக்காதே, அவன் ராத்திரி வந்த பிறகு சுடா சுட்டுக்கலாம்னு சொன்னா, என் பேச்சை கேட்காம நான் மதியானம் கொஞ்ச கண் அசந்த நேரத்துல எல்லா சப்பாத்தியும் சுட்டு வெச்சிட்டா, இது தான் நீ கட்டுன பொண்டாட்டி என்னை மதிக்கிற லட்சணம்…..” என்று அழுது வைக்க, ஒமருக்கு உடனே கோபம் பொசுக்கென்று தலைக்கேறும்.

கணவன் வீட்டிற்கு வரும் போது சப்பாத்தி சுட்டுக்கொண்டு நேரத்தை வீண்டிக்க வேண்டாமே, எல்லா வேலைகளையும் முதலிலேயே முடித்துக்கொண்டால் அவனுடன் அதிக நேரம் செலவிடலாமே என்பது நர்கீஸீன் திட்டம். அவள் மாலை அழகாக ஒப்பனை செய்துக்கொண்டு, அவனுக்காக ஆசையாய் காத்துக்கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் அவளை உதாசீனப்படுத்தினான் ஒமர். என்ன காரணம் என்று சொல்லாமல் அவன் நெற்றிக்கண்ணை திறந்து, “அப்படி என்ன சோம்பேறித்தனம்……என்ன வளர்த்து வெச்சிருக்காங்க உன் வீட்டுல..” என்று சரமாறியாக அர்ச்சனை செய்ய, இதனால் ஏற்பட்ட மனகசப்பினால் அன்றிரவு இருவரும் கட்டிலின் கோடிகளில் படித்துக்கொண்டு இருக்க, இப்படியாக சப்பாத்தி மாதிரி சின்ன விஷயங்கள் அவர்கள் திருமண வாழ்க்கையை சலிப்பிற்குள்ளாக்கின.

இதற்கிடையில் ஒமருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட, நர்கீஸ், இனியாவது அவன் தன்னை புரிந்துக்கொண்டு பிரியமாக இருக்க மாட்டானா என்று ஆசைபட, ஒமர் தொடர்ந்து தன் அம்மா, அக்கா, சித்தி, மாமி என்று எல்லோர் பேச்சையும் கேட்டுக்கொண்டு மனைவியை சதா குறை சொல்லிக்கொண்டே இருக்க, நொந்து போனாள் மனைவி. ஒரு சண்டையில் இவன் தன் வசமிழந்து அவளை போட்டு அடித்தும் விட, அவள் தகப்பானார் விஷயம் கேள்வி பட்டு ஓடிவந்தார். ”இந்த காட்டுமிராண்டியோடு என் மகளை இனி நான் விடவே மாட்டேன்”, என்று கூடவே அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

“அவளா தானே போனா, அவங்க அப்பன் பெரிய பணக்காரன்ற திமிர்ல தானே போனா, அவளா திரும்ப வரட்டும், நீ அவளுக்கு ஃபோன் கூட பண்ணாதேடா” என்று தாய்குலம் ஓதி வைக்க, ஒமரும் அடிபிரளாமல் அப்படியே இருந்தான். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி, கடைசியில் இரண்டு வருடங்கள் முடிந்தும் விட்டன.

“வீட்டுல ஒரு நாய் வளர்த்தா கூட அது சாப்பிட்டுச்சா, நல்லா இருக்கானு கவலை படுவோம். கட்டுன பொண்டாட்டியும், பெத்த பிள்ளையும் எப்படி இருக்காங்கனு ஒரு ஃபோன் கூட பண்ணிக்கேட்காத இவனெல்லாம் ஒரு மனிஷனா, அவனை மறந்திடு” என்று நர்கீஸுக்கு எல்லோரும் அறிவுறை கூறினார்கள். அவள் படித்த பெண், அதனால் ”சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு கவலை படுவதற்கு ஏதாவது வேலைக்காவது போகட்டுமே”, என்று அப்பா அவளுக்கு ஒர் பிஸ்னஸ் ஏற்படுத்தித்தர, பல பேரை தினமும் சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றாள் நர்கீஸ். அப்படி அவள் சந்தித்த நபர்களில், ரியாஸ் என்கிறவனுக்கு அவள் மேல் ஆசை, காதல், இரக்கம் எல்லாம் ஏற்பட்டுவிட, அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ள விரும்பி, அவள் பெற்றோரிடம் விண்ணப்பிக்க, ஆரம்பத்தில் ஆட்சேபித்த நர்கீஸும் போக போக இணங்க ஆரம்பிக்க, இருவருக்கும் திருமணம் முடிவானது.

உறவினர் மூலமாய் தான் ஒமருக்கு தெரியவந்தது. நர்கீஸ் அவனை தலாக் செய்துவிட்டு, ரியாஸை திருமணம் செய்துக்கொள்ள போகிறாள் என்று. அவள் தன்னை விட்டு நிரந்திரமாக போயே போய்விட போகிறாள் என்றதும் தான் அவனுக்கு தன் இழப்பின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. நர்கீஸோடு அவன் சந்தோஷமாய் இருந்த நாட்கள் நினைவிற்கு வர, தன் மனைவியை இன்னொருத்தன் தொட போகிறானே என்கிற தவிப்பும், என் மகளை அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயமுமே அவன் தூக்கத்தை கெடுத்துவிட்டன.

வீட்டில் இது பற்றி பேச்சு தலை தூக்கியபோது, “பொம்பளை அவளுக்கே இன்னொரு புருஷன் கிடைக்கும் போது, என் பையனுக்கு நான் இன்னொரு நிக்ஹா பண்ணி வெக்க மாட்டேனா?” என்று ஆரம்பித்தாள் அவன் அம்மா. “ஆமா முதல் பொண்டாட்டியோட ரொம்ப வாழ விட்டுட்டே, இன்னொரு பொண்ணு வந்து இந்த வீட்டுல கஷ்டப்படணுமா?” என்று அப்போது மட்டும் திருவாய் மலர்ந்தார் ஒமரின் அப்பா. “நான் ஒருத்தன் உன் கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது போதாதுன்னு, இப்ப என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டியே!” அப்போது தான் ஒமருக்கு சட்டென பொறி தட்டியது. அது வரை அம்மாவை மீறி எதுவும் சிந்தித்தும் பார்த்திராத ஒமருக்கு அப்போது தான் அம்மா என்கிற உறவை மறந்து ஒரு தனி மனுஷியாக அவளை எடை போட முடிந்தது. இவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடனும் ஒத்து போகாமல் எப்போதுமே இன்செக்யூராய் அம்மா இருந்தது லேசு பாசாய் அப்போது தான் அவன் நினைவிற்கு வந்தது. தங்கை தன் கணவனுடன் தங்க வந்தால், தன் படுக்கை அறையை அம்மா காலி செய்து தந்ததும், இவன் தன் மாமியார் வீட்டிற்கு போனால் மட்டும், “அங்கெல்லாம் போய் ராத்தங்காதேடா, அப்புறம் நம்மல மதிக்க மாட்டாங்க” என்று தடுத்ததும், இன்னும் இது போன்ற பல சம்பவங்களும் நினைவிற்கு வந்தன…..

அதற்குள் நர்கீஸ் ஜம்மாத்தில் சொல்லி விவாகரத்து வாங்கி ரியாஸை நிக்ஹா செய்துக்கொண்டாள். அடுத்த ஆண்டு அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தன….அப்போதும் ஒமருக்கு இன்னொரு நிக்ஹா செய்து முடிக்கவில்லை அவன் அம்மா. தன் அறையின் தனிமையில் தன் இழப்பை நினைத்து ஒமர் எவ்வளவோ வருந்தினான். ஆனால் அவன் அம்மா, “அந்த ராட்ஷசிகிட்டேந்து என் பையனை காப்பாத்தீட்டேன்” என்று எல்லோரிடமும் பெருமை பட்டுக்கொண்டாள்.

ஆக, எப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் அம்மாக்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் மரபணு அபிவிருத்தியில் தோற்றுத்தான் போகிறார்கள். அதனால் தானோ என்னவோ, தொல்காப்பியர் கூட அடிமையாகவோ, காவலனாகவோ, இருப்பனை ஒரு பாட்டிற்கு கூட தலைவனாக வைக்க கூடாது என்கிற விதியை வகுத்தார். பாட்டிற்கே தலைவனாக இருக்க லாயக்கி அற்ற அடிமை, எப்படி ஒருத்தியின் வாழ்க்கைக்கு தலைவனாக இருக்க முடியும்?