Saturday, August 8, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 21

பொழுதை எப்படி செலவழிக்கிறான் என்பதை வைத்து ஆணை எப்படி தர நிர்ணயம் செய்வது என்பது பற்றி சென்ற ஸ்நேகிதியில் பார்த்தோம். இம்முறை நேரத்தை தவிர மீதமுள்ள வளங்களை அவன் எப்படி செலவழிக்கிறான் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?
நம் கலாச்சாரத்தில் பல காலத்திற்கு ஆணுக்கு மட்டும் தான் ஆஸ்தி, ஆண் மட்டும் தான் வெளி வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாடு இருந்துவந்ததால், ஆணிடம் தான் பணம் புழங்கியது. பெண் அவனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை ரொம்பவே மாறி இருந்தாலும், இன்றும் பல பிற்போக்கான ஆண்கள், மனைவியின் வருமானத்தையும் வாங்கி அதையும் தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம்மூர் பெண்களும், சம்பாதிக்கும் காசையெல்லாம் கணவன் கையில் கொடுத்து வைப்பது தான் “தமிழ் கலாச்சாரம்” என்று கண்டதுக்கெல்லாம் கலாச்சாரத்தோடு கனெக்ஷன் கொடுத்து குழம்பி போகிறார்கள். இது இப்படி இருக்க, இன்றும் பல குடும்பங்களில் பணம் என்பது கணவன் கையிலேயே புழங்கும் சமாசாரமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்கு கூட மனைவி, கணவனின் கையை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாள்.

இப்படி பெரும்பாலான பெண்கள் பொருளாதார விஷயத்தில் சார்பு நிலை ஜீவராசிகளாகவே வாழும் போது, இவர்கள் எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்? உதாரணத்திற்கு இரண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறேனே.
முதல் ஆசாமி பெரிய மில்லியனர். அவரின் ஒரு கை அசைவிற்கே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு செழிப்பான வேலையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆனது. மனைவியுடம் முதன் முதலில் ஹோடலுக்கு போனார்.

மனைவியும் தன்னை மணந்த கனவன் என்பதனாலேயே அவன் ஒரு பெரிய ஹீரோ என்றே நினைத்து விட்டாள். அதனால் தன் ஹீரோ தன்னிடம் மிக கனிவாக, என்ன சாப்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டு, உபசரித்து, அன்பு பாராட்டுவான் என்று நினைத்தால், தலைவர் அவளிடம் எதுவுமே பேசாமல் ஒரு பிட்சாவை வாங்கி இரண்டாக கிழித்து அவளுக்கு கால் வாசி வைத்து விட்டு, தான் முக்கால் வாசியை மென்று விழுங்க ஆரம்பித்தார். மனைவி தன் பேரதிர்சியை விழுங்கிவிட்டு பிட்சாவை கொறித்து முடித்தாள். அந்த கடையில் ஒரு பிட்சா வாங்கினால் ஒரு லோட்டா நிறைய கோலா இலவசம். அதனால் ஆளுக்கு பாதி கோலா குடித்தார்கள். அவ்வளவு தான், மணவாழ்க்கையின் முதல் வெளி சாப்பாடு இப்படியே இனிதே முடிய, மனைவி, மனமுடைந்து போய் அலுப்புடன் வெளியே நடக்க, பக்கத்து கடையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை கூட கவனிக்கும் நிலையில் தலைவி இல்லை. ஆனால் தலைவன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று கேட்க, “அப்பாடா, இப்போதாவது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, பரவாயில்லையே என் கணவன் அவ்வளவு மோசமில்லைப்பா” என்று மனைவி நிம்மதி பெருமூச்சுடன், “ஒகே” சொல்லி எல்லா பல்லையும் காட்டி தலையாட்ட, கணவன் சுருசுருப்பாய் ஐஸ்கிரீம் கடைக்கு நடந்தான்.

போன வேகத்திலேயே திரும்பியும் வந்தான். வெறும் கையுடன். “என்னாச்சு, ஐஸ்கிரீம்?” என்று மனைவி புரியாமல் விழிக்க, கணவன் படு கவலையாய் சொன்னான், “ரொமப் காஸ்ட்லியா இருக்கு, நூறு ரூபாயாம்” நூறு ரூபாய் எல்லாம் ஒரு காஸ்டிலியா, இது கூட செலவழிக்க முடியலை, நீ என்ன பெரிய மில்லியனர்? உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா! என்று எல்லாம் மனதில் பட்டதை கேட்கவா முடியும். புது கல்யாண பெண், “அட அல்பமே” என்று மனதிற்குள் ஏசிவிட்டு மௌனமாக இருந்துவிட்டாள். பிறகு தான் போக போக தெரிந்துக்கொண்டாள், அவன் பெரிய மில்லியனராக இருந்தாலும் எச்சை கையால் காக்காய் கூட ஓட்டாத வடிகட்டிய கஞ்சபிஸினாரி என்று.

இப்படி பணவிஷயத்தில் கருமியாக இருந்தால், சரி போனால் போகிறது, பணமா பெரிது, அன்பு தான் முக்கியம் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் பணத்தில் எத்தனை அற்பமாக இருந்தானோ, அதே போலத்தான் அவன் தன் அன்பை வெளிகாட்டுவதிலும்….மிக மிக சிக்கனமாய், ஒரு வாரத்திற்கு நாலு முத்தம் கொடுத்தான் என்றால் அதுவே அதிகப்படி! அதுவும் அவள் நச்சரித்தால் தான், இல்லை என்றால் தன் பக்கத்தில் ரத்தமும் சதையுமாய் ஒரு பெண் படுத்திருப்பதே தெரியாமல் நன்றாக குரட்டை விட்டு தூங்கினான்…..என்றால், இப்படி பட்ட ஆணுக்கு எத்தனை மார்க் போடலாம்?

அடுத்த கதாநாயகன் மில்லியனர் எல்லாம் இல்லை. அவன் ஒரு சாதாரண வேலையில் சாதாரண சம்பளத்தில் இருந்த ஒரு சாதாரணன். அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட். அவளை இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுடன் மணிக்கணக்கில் பேசினால் தான் அவனுக்கு தூக்கமே வரும். அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் அவனுக்கு பசி கூட எடுக்காது. அவளுக்காக செலவு செய்ய அவனிடம் அவ்வளவு பணம் கொட்டிகிடக்கவில்ல. என்றாலும் தாஜ் மகால் கட்டமுடியாவிட்டாலும் காதலில் தானும் ஒரு ஷா ஜெகான் என்று நினைக்கும் சுபாவம் அவனுக்கு. அவனால் அவளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கித்தர முடியாவிட்டாலும், அழகான பொருட்களை பார்க்கும் போதெல்லாம் அவளை தான் நினைத்துக்கொண்டான். அவளை வெளியே அழைத்து சென்ற போதெல்லாம், கணக்கு பார்க்காமல் பணம் செலவழிக்க தயாராக இருந்தான். அவன் இப்படி தாராளமாய் செலவழிக்க முன் வருவதை பார்த்து, இவளே, “இவ்வளவு செலவா, வேண்டாம்!” என்று ஆட்சேபிக்கலானாள். ஆனால் அவனால் அவளிடம் சிக்கனம் பார்க்க முடியவில்லை.

இப்படி பணத்தில் எந்த அளவு தாராளம் காட்டினானோ, அதே அளவிற்கு கணக்கு பார்க்காமல் தான் தன் அன்பையும் கொட்டி காட்டினான். அவளை தொடாமல் அவனால் இருக்க முடியாது. கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?

நிச்சயம் ஐஸ்கிரீம் வாங்கி தர கணக்கு பார்த்த மில்லியனரை விட, கணக்கே பார்க்காமல் அன்பை கொட்டிய இந்த இரண்டாவது ஆசாமிக்கு தானே மார்க் அதிகமிருக்கும். காரணம் கணக்கு பார்த்து ஈடுபட்டால் அது காதல் இல்லை, இப்படி அன்பு காட்டவே கணக்கு பார்க்கும் ஆணை துணையாய் அடைவதை விட மோசமான துற்பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆகையால் ஸ்நேகிதிகாள், உங்கள் பட்டியலில் இருக்கும் ஆண்களின் குணாதிசயத்தை கவனியுங்கள். எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிற கஞ்சபிசினாரி அவன் என்றால், காலத்திற்கும் அவனோடு வாக்கு வாதம் செய்தே போரடித்து போகும் உங்கள் வாழ்க்கை. இந்த மாதிரி கருமிகள் பணத்தால் மட்டுமின்றி பாசத்தாலும் பட்டினி போட்டு விடுவார்கள் என்பதால் இந்த ரக அற்ப கேஸுகள் நாட் ஓகே அட் ஆல்.

அதற்காக, ஓவர் ஊதாடித்தனத்துடன் இருக்கிறதோ, இல்லையோ, கடன் வாங்கியாவது கொட்டி கவிழ்க்கிறேன் என்றிருக்கும், பணத்தின் அருமை தெரியாத கேஸாக இருந்தான் என்றால், காலத்திற்கும், கடன் காரர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் அந்த மாதிரியான ஊதாரி மன்னர்களும் நாட் ஓகே.

பணம் முக்கியம் தான், ஓரளவுக்கு சிக்கனமாய் இருக்க தெரிந்தவன் தான். ஆனால் நீங்கள் அவன் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம், அவன் சாம்பிராஜியத்தின் மஹாராணி நீங்கள் ஒருத்தி மட்டும் தான் என்பதனால், உங்களுக்கு சிறந்ததை மட்டுமே செய்கிறான், அதற்க்காக தன் உடல், பொருள், ஆவி, தன் அன்பு, பாசம், நேரம் என்று எல்லாவற்றையும் தாராளமாக செலவழிக்கிறான் என்றால், இவன் ரொம்ப ரொம்ப ஓகே!

அதனால் ஸ்நேகிதிகாள், உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க் இது தான், உங்களுக்கு முற்றிகை இடும் ஆண் கஞ்சனா, ஊதாடியா, அல்லது உங்களுக்காக தன்னையும் தன் வளங்களையும் தாராளமாக செலவழிக்க விரும்பும் காதல் நாயகனா என்பதை சரிபாருங்கள்…..ஆண்களை அளந்து பார்க்க இன்னும் வேறு என்னென்ன தர பரிசோதனைகள் உண்டு என்பதை அடுத்த ஸ்நேகிதியில் பார்ப்போம்.