Sunday, November 30, 2008

பார்வை ஒன்றே போதுமே

என்ன ஸ்நேகிதிகளே, உங்களைச் சுற்றியுள்ள ஆண்களை எல் லாம் குற்றம் குறை யோடு அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டீர் களா? உங்கள் சகிப்புத் தன்மை அதிகமாகி யுள்ளதா? அப்படியானால், இந்த ஆண்களை ஹேண் டில் செய்யும் அரிய சாஸ்திரத்தின் அடுத்த லெசனைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

அடுத்த லெசனுக்குப் போவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு சின்ன மனமாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் எத்துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், இனி அடுத்து வரும் சில வாரங்களுக்கு உங்களை ஒரு மானுடவியல் நிபுணராய்க் கற்பனை செய்துகொள்ளுங்களேன். உங்களுக்கு ஆண்களோடு ஏற்கெனவே இருக்கும் அனுபவங்களை எல்லாம் தாற்காலிகமாய் ஏறக்கட்டி வைத்துவிட்டு, எந்த முன் அபிப்ராயங்களுமே இல்லாத வெற்றுத்தாளாய் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள் அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா? சிம்பிள், வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து இறங்கிய ஒரு புது அமானுஷய ஜீவராசியாய் உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள்! இதற்கு முன் நீங்கள், மனித ஆணைப் பார்த்ததே இல்லை, இப்போது தான் முதன் முதலில் பார்த்து அவனைப் பற்றிப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள். ஒரு தாவிரவியல் மாணவி செடி,கொடிகளை உற்று உற்றுப் பார்த்து இது என்ன? எப்படி? ஏது? எதனால்? என்றெல்லாம் புரிந்து கொள்வது போல, முழுக்க முழுக்க ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆண்களை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்துகொள்ளப் போகிறோம். என்ன ரெடியா?

உங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு x,y,z ஆணை எடுத்துக்கொள்வோமே. உங்கள் அமானுஷ்ய கண்களால் அவனை லைட்டாய்ப் பாருங்கள். அவன் ஒட்டுமொத்த நடை, உடை, பாவனை, தன் சுயத்தைப் பற்றிய வெளிப்பாட்டை வெறுமனே கவனியுங்கள். என்ன தெரிகிறது? நீங்கள் பார்க்கிறீர்கள் என்றதுமே, பார்வை தடுமாறி, வார்த்தைகள் தவறி, கொஞ்சம் அசௌகரியமாய் நெளிவது தெரிகிறதா? இது தான் ஒரு ஆணின் அடிப்படை கூச்சம்.

சிம்பிளாய் ஒரு உதாரணம் சொல்லட்டுமா? நாங்கள் கிராமங்களில் குழந்தைகளுக்கான மனநல முகாம்கள் நடத்தும் போது, குழந்தைகள், ``அய்யோ, டாக்டர், ஊசி போட வந்திருக்காங்க'' என்று பயந்துவிடக் கூடாதே என்பதற்காக சில கேளிக்கை விளையாட்டுக்களை முதலில் நடத்துவது வழக்கம். விளையாட்டு மூடில் குழந்தைகள் சற்று நேரம் ஜாலியாய் ஆடிப் பாடி முடித்த பிறகு முகாமை ஆரம்பித்தால், குழந்தைகள் பயப்படாமல் யதார்த்த மன நிலையில் இருப்பார்கள் என்பதற்காக இந்த யுத்தி.

இப்படி விளையாட்டு, கேலி, கேளிக்கை என்று குழந்தைகளை அழைத்து, ``ஒரு பாட்டுப் பாடேன்'' என்று சொன்னால், பெண் குழந்தைகள் ஆரம்பத்தில் கொஞ்சம் பிகு செய்துகொண்டாலும், வெட்கம் சீக்கிரமே ஆசை ஆசையாக, பாடவும் ஆடவும் செய்கிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகள், மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே, கூசி, ஒதுங்கி பின்னாலேயே நகர்ந்து போய்விடுவார்கள்.

ஆக, இயல்பிலேயே ஆண்களுக்கு இந்த விதமான சமூக கூச்சம் அதிகம் உண்டு. பெண் குழந்தைகளுக்கு மற்றவர்களின் முகபாவத்தைப் பார்த்து, அவர்கள் மூடை யூகித்து, இடம், பொருள் ஏவல் தெரிந்து நடப்பதென்பது இயல்பிலேயே வரும். காரணம் பிறவியில் இருந்தே பெண்களின் மூளைக்கு இப்படிப்பட்ட முகபாவம் புரிந்துகொள்ளும் தன்மை அதிகம். ஆனால் ஆண் குழந்தையின் மூளையில் இந்த முகபாவகிரகிப்பு மையம் குறைவு என்பதால், அவனுக்கு மனித முகங்களைக் கவனமாய்ப் பார்த்து குறிப்பு உணரும் தன்மை குறைவே.

இதனால் யாராவது அவர்களை உற்றுப் பார்த்தாலோ, ஒரு மாதிரியாகச் சிரித்தாலோ, தன்னை ஏதோ தவறாகப் பேசி, கேலி செய்கிறார்களோ என்ற பயம் ஆண்களுக்கு வந்துவிடுவதுண்டு. நீங்களே பரிசோதித்துப் பாருங்களேன். வேறு எதுவுமே செய்யாமல் ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையை அவன் கவனிக்கும் படி, வெறுமனே உற்றுப் பாருங்கள், உங்கள் முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி, உன்னிப்பாய் அவனை நீங்கள் தொடர்ந்து பார்த்தாலே போதும், குட்டிப் பையன் அழுது, அம்மாவைத் தேடி கத்தி ஊரையே கூட்டி விடுவான். அதுவே ஒரு வயது பெண் குழந்தையை நீங்கள் இப்படி முறைத்துப் பார்த்தால், அந்தக் குழந்தை உங்களை பதிலுக்கு முறைத்துப் பார்த்து, சிரித்து, கிட்டே வந்து கொஞ்சி, தாஜா செய்ய முயலும். இரண்டு குழந்தைகளுக்குமே, யாராவது தொடர்ந்து தங்களை முறைத்துப் பார்த்தால் பயமாகவே இருந்தாலும், ஆண் குழந்தை ஒதுங்கி ஆள் சேர்ப்பான். பெண் குழந்தை நைஸ் பண்ணி, நட்புண்டாக்க முயல்வாள்.

இப்படி ஆரம்பத்தில் சமூக கூச்சம் அதிகமாக இருந்தாலும், அநேக ஆண் குழந்தைகள் தொடர்ந்து பலருடன் பழகி, பக்கத்து வீடு, பள்ளிக்கூடம், விளையாட்டுத்திடல் என்று பல இடங்களுக்குப் போய், பல அன்னிய நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், இந்த கூச்ச சுபாவம் தணிந்து துணிந்து பேசிப் பழகும் பக்குவத்திற்கு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே பெண்களுடன் அரட்டை அடித்துப் பழகிய ஆண்களுக்கே பெண்களைப் போல, சரளமாய் வாயாடும் தன்மை தொற்றிக்கொண்டு விடுகிறது. இந்த வகை ஆண்களுக்கு சமூக கூச்சம் அவ்வளவாக இருப்பதில்லை.

இந்த அதிர்ஷ்டம் வாய்க்காத ஆண்கள் தான் நம்மூரில் அதிகம் என்பதால், சராசரி ஆணுக்குப் பெண்ணைக் கண்டால் கூச்சம் வந்துவிடுகிறது. இவனே இப்படிக் கூசி, பார்வை தடுமாறி, வார்த்தைகளை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும்போது, பெண் பாட்டிற்கு வள வள என்று பேச ஆரம்பித்து விட்டால், போயே போச்சு... பையன் அவள் பேச்சு வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போய் விடுவான்.

அத்தோடு, அவள் இவ்வளவு சுலபமாய், சரளமாய், தடையின்றிப் பேசுகிறாள், நான் மட்டும் ஏன் இப்படி தயங்கித் தொலைக்கிறேன்! என்கிற சுயபரிகாசமே, அவனின் கொஞ்ச நஞ்ச தைரியத்தைச் சூறையாடி விடுமே. அப்புறம் அவன் பாட்டிற்கு இந்த ஆட்டத்திற்கு நான் வரலைப்பா என்று ஒதுங்கிப் போய்விட்டால், உங்கள் இஷ்ட ஆணை நீங்கள் எப்படி ஹேண்டில் செய்யப் பழகுவதாம்?

அதனால் ஆண்களை முதன் முதலில் சந்திக்கும் போது, அவன் அதீத வெட்க உணர்வை மதித்து, பெண் கொஞ்சம் அவள் பார்வையைத் தாழ்த்தியோ, திருப்பியோ வைத்தால், தன் ஆரம்ப ``அய்யோ, பெண், பார்க்கிறாளே, என்ன செய்வேன்?'' என்ற பதட்டத்தில் இருந்து ஆண் மீண்டுகொள்ள அவகாசம் இருக்கும். அதுவரை பெண் கப் சிப் என்று இருந்தால், ``அய், என்னை விட இவளுக்கு கூச்சம் அதிகமா இருக்கே, இவளை விட நானே மேல்!'' என்று மகிழ்ந்து, தலைவர் திருவாய் மலர்ந்து பேச்சைத் துவக்குவார்.

இந்தப் பெண் உண்மையில் கூச்சமே படவில்லை, விட்டால் ஒரு நிமிடத்தில் ஒன்றரைக் கிலோ வார்த்தைகளை உதிர்த்துவிடும் வாயாடி இவள் என்பதெல்லாம் காலப் போக்கில் இந்த ஆணுக்குத் தெரிய வரும். இருந்தாலும் உறவின் ஆரம்பத்தில் அவன் கூச்சத்தை வெளிக்காட்டாமல் தைரியமாகப் பேச முடிந்தால் தானே இந்த உறவே தொடர வாய்ப்பு.

``ஆண் பிள்ளை வெட்கப்படக்கூடாது'', என்று சமுதாயம் வேறு விதிகளைப் போட்டுத் தொலைக்கிறதா, அதனால் அவன் கூச்சப்படுவதே ஒரு அவஸ்தை என்றால், அதை அந்தப் பெண் பார்த்து, தன்னைக் குறைவாக மதிப்பிட்டு விடுவாளோ என்ற கவலையே அதை விடப் பெரிய இம்சை.

அதனால் அந்த ஆணை ஆட்கொள்ள வேண்டும் என்று ஏதாவது அபிப்ராயம் உங்களுக்கு இருந்தால், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து வைக்காதீர்கள். அவன் தன் கூச்சத்தை விழுங்கிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவனுக்குக் கொஞ்சமாவது அவகாசம் தாருங்கள். தலைவர் கூச்சம் நீங்கி, தானாய் பேசும் வரை, அவனைக் கவனியாது போல பார்வையை வேறு பக்கம் திருப்பி வையுங்கள். இப்படி நீங்கள் அவனை மறைமுகமாய் ஊக்குவித்தால், அப்புறம் பாருங்களேன், பையன் எப்படி, துணிந்து பேச்சை ஆரம்பிக்கிறான் என்று.

இந்த யுத்தி பெண்கள் எல்லோருக்குமே இயல்பிலேயே வருவதுண்டு. ஒரு பெண் ஒரு ஆணை விரும்ப ஆரம்பித்திருக்கிறாள் என்பதற்கான முதல் அறிகுறியே அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு அவனை ஊக்குவிப்பது தான். இந்த இயல்பு தான் பெண்கள் தங்களை அறியாமலேயே ஆண்களை ஊக்குவிக்க பயன்படுத்தும் அஸ்திரம் நம்பர் 3!

இதே அஸ்திரத்திற்கு இன்னொரு முனையும் உண்டு. யாராவது ஆண் உங்கள் விருப்பத்திற்கு விரோதமாய் உங்களை நோட்டம் விடுகிறான், அவனை ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றால், தலை குனிந்துகொண்டு, அவன் பார்வையை ஊக்குவிக்காமல், நிமிர்ந்து நேராய் அவன் கண்ணையே பார்த்து, ``சரிதான் அடங்குடா'' என்பது போல ஒரே ஒரு சிங்கிள் பார்வை விட்டாலே போதும், உடனே அண்ணன் ஒதுங்கி விலகிவிட ஆரம்பித்து விடுவார்.

பார்வை ஒன்றே போதும், யாரையுமே மிரட்டிவிடும்.

ஆக பார்வை என்ற இந்த மூன்றாம் யுத்தியை இம்முறை பழகிப்பாருங்கள். அடுத்த யுத்தியை அடுத்த சிநேகிதியில் சொல்கிறேன்!

Monday, November 3, 2008

ஆடவர் குணங்கள்

அடக்கி வாசித்து ஒளிவு மறைவாய் செயல்படுவது தான் ஆண்களை ஹேண்டில் செய்யும் முதல் அஸ்திரம் என்றெல்லாம் போன சிநேகிதியில் பார்த்தோமே... இத்தனை நாட்களில் நீங்கள் எத்தனை ரகசியங்களைக் காப்பாற்றினீர்கள்? எவ்வளவு ஒளிவு மறைவு சாதியப்பட்டது உங்களுக்கு? குறைந்த பட்சம் 35 சதவிகிதம் முடிந்தது என்றால் நீங்கள் பாஸ், அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள யூ ஆர் ரெடி. இல்லை என்றால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து உங்கள் ஓட்டை வாயை அடக்கிப் பாருங்கள். வெற்றிகரமாய் அடக்கிவிட்டீர்கள் என்றால், நீங்களும் அடுத்த அஸ்திரத்தைக் கற்றுக்கொள்ள ரெடி.

அடுத்த அஸ்திரம் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா? தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது. இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, ``சீ, இவன் தேறமாட்டான்'' என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இரண்டாம் பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம். அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள். இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று, வழிக்குக் கொண்டு வருகிறேன், என்று பெண்கள் ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

அதை விட்டுவிட்டு, குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், நேரம் வீணாவதோடு, அரை ஆணை முழு ஆண் ஆக்குவதுதான் ஆட்டமே என்றான பிறகு, ஆண் ஏன் அரையாக இருக்கிறான் என்று எடுத்த எடுப்பிலேயே விதண்டாவாதம் பேசினால், இந்த ஆட்டத்தில் எப்படி முன்னேறுவதாம்?

ஆக, ஆண்களை ஹேண்டில் செய்ய வேண்டுமா, நீங்கள் கற்றுப் பழக வேண்டிய அடுத்த பாடம், அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் முக்கியமான மேட்டரே, இந்த அப்படியே ஏற்றுஃபிகேஷன்தான். இது தான் உங்களுக்கான இந்த ஹோம் ஒர்க். உங்களைச் சுற்றியுள்ள உருப்பட்ட, உருப்படாத, ஆண்களைக் கண்டு மன சஞ்சலப்படாமல், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையைப் பழக்கிக் கொள்ள முயலுங்களேன்.

இதில் நீங்கள் தேர்ந்து விட்டீர்கள் என்றால், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த பாடத்தைக் கற்றுக் கொள்ள நீங்கள் ரெடி!