Sunday, November 30, 2008

பார்வை ஒன்றே போதுமே

என்ன ஸ்நேகிதிகளே, உங்களைச் சுற்றியுள்ள ஆண்களை எல் லாம் குற்றம் குறை யோடு அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டீர் களா? உங்கள் சகிப்புத் தன்மை அதிகமாகி யுள்ளதா? அப்படியானால், இந்த ஆண்களை ஹேண் டில் செய்யும் அரிய சாஸ்திரத்தின் அடுத்த லெசனைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

அடுத்த லெசனுக்குப் போவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு சின்ன மனமாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் எத்துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், இனி அடுத்து வரும் சில வாரங்களுக்கு உங்களை ஒரு மானுடவியல் நிபுணராய்க் கற்பனை செய்துகொள்ளுங்களேன். உங்களுக்கு ஆண்களோடு ஏற்கெனவே இருக்கும் அனுபவங்களை எல்லாம் தாற்காலிகமாய் ஏறக்கட்டி வைத்துவிட்டு, எந்த முன் அபிப்ராயங்களுமே இல்லாத வெற்றுத்தாளாய் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள் அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா? சிம்பிள், வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து இறங்கிய ஒரு புது அமானுஷய ஜீவராசியாய் உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள்! இதற்கு முன் நீங்கள், மனித ஆணைப் பார்த்ததே இல்லை, இப்போது தான் முதன் முதலில் பார்த்து அவனைப் பற்றிப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள். ஒரு தாவிரவியல் மாணவி செடி,கொடிகளை உற்று உற்றுப் பார்த்து இது என்ன? எப்படி? ஏது? எதனால்? என்றெல்லாம் புரிந்து கொள்வது போல, முழுக்க முழுக்க ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆண்களை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்துகொள்ளப் போகிறோம். என்ன ரெடியா?

உங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு x,y,z ஆணை எடுத்துக்கொள்வோமே. உங்கள் அமானுஷ்ய கண்களால் அவனை லைட்டாய்ப் பாருங்கள். அவன் ஒட்டுமொத்த நடை, உடை, பாவனை, தன் சுயத்தைப் பற்றிய வெளிப்பாட்டை வெறுமனே கவனியுங்கள். என்ன தெரிகிறது? நீங்கள் பார்க்கிறீர்கள் என்றதுமே, பார்வை தடுமாறி, வார்த்தைகள் தவறி, கொஞ்சம் அசௌகரியமாய் நெளிவது தெரிகிறதா? இது தான் ஒரு ஆணின் அடிப்படை கூச்சம்.

சிம்பிளாய் ஒரு உதாரணம் சொல்லட்டுமா? நாங்கள் கிராமங்களில் குழந்தைகளுக்கான மனநல முகாம்கள் நடத்தும் போது, குழந்தைகள், ``அய்யோ, டாக்டர், ஊசி போட வந்திருக்காங்க'' என்று பயந்துவிடக் கூடாதே என்பதற்காக சில கேளிக்கை விளையாட்டுக்களை முதலில் நடத்துவது வழக்கம். விளையாட்டு மூடில் குழந்தைகள் சற்று நேரம் ஜாலியாய் ஆடிப் பாடி முடித்த பிறகு முகாமை ஆரம்பித்தால், குழந்தைகள் பயப்படாமல் யதார்த்த மன நிலையில் இருப்பார்கள் என்பதற்காக இந்த யுத்தி.

இப்படி விளையாட்டு, கேலி, கேளிக்கை என்று குழந்தைகளை அழைத்து, ``ஒரு பாட்டுப் பாடேன்'' என்று சொன்னால், பெண் குழந்தைகள் ஆரம்பத்தில் கொஞ்சம் பிகு செய்துகொண்டாலும், வெட்கம் சீக்கிரமே ஆசை ஆசையாக, பாடவும் ஆடவும் செய்கிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகள், மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே, கூசி, ஒதுங்கி பின்னாலேயே நகர்ந்து போய்விடுவார்கள்.

ஆக, இயல்பிலேயே ஆண்களுக்கு இந்த விதமான சமூக கூச்சம் அதிகம் உண்டு. பெண் குழந்தைகளுக்கு மற்றவர்களின் முகபாவத்தைப் பார்த்து, அவர்கள் மூடை யூகித்து, இடம், பொருள் ஏவல் தெரிந்து நடப்பதென்பது இயல்பிலேயே வரும். காரணம் பிறவியில் இருந்தே பெண்களின் மூளைக்கு இப்படிப்பட்ட முகபாவம் புரிந்துகொள்ளும் தன்மை அதிகம். ஆனால் ஆண் குழந்தையின் மூளையில் இந்த முகபாவகிரகிப்பு மையம் குறைவு என்பதால், அவனுக்கு மனித முகங்களைக் கவனமாய்ப் பார்த்து குறிப்பு உணரும் தன்மை குறைவே.

இதனால் யாராவது அவர்களை உற்றுப் பார்த்தாலோ, ஒரு மாதிரியாகச் சிரித்தாலோ, தன்னை ஏதோ தவறாகப் பேசி, கேலி செய்கிறார்களோ என்ற பயம் ஆண்களுக்கு வந்துவிடுவதுண்டு. நீங்களே பரிசோதித்துப் பாருங்களேன். வேறு எதுவுமே செய்யாமல் ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையை அவன் கவனிக்கும் படி, வெறுமனே உற்றுப் பாருங்கள், உங்கள் முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி, உன்னிப்பாய் அவனை நீங்கள் தொடர்ந்து பார்த்தாலே போதும், குட்டிப் பையன் அழுது, அம்மாவைத் தேடி கத்தி ஊரையே கூட்டி விடுவான். அதுவே ஒரு வயது பெண் குழந்தையை நீங்கள் இப்படி முறைத்துப் பார்த்தால், அந்தக் குழந்தை உங்களை பதிலுக்கு முறைத்துப் பார்த்து, சிரித்து, கிட்டே வந்து கொஞ்சி, தாஜா செய்ய முயலும். இரண்டு குழந்தைகளுக்குமே, யாராவது தொடர்ந்து தங்களை முறைத்துப் பார்த்தால் பயமாகவே இருந்தாலும், ஆண் குழந்தை ஒதுங்கி ஆள் சேர்ப்பான். பெண் குழந்தை நைஸ் பண்ணி, நட்புண்டாக்க முயல்வாள்.

இப்படி ஆரம்பத்தில் சமூக கூச்சம் அதிகமாக இருந்தாலும், அநேக ஆண் குழந்தைகள் தொடர்ந்து பலருடன் பழகி, பக்கத்து வீடு, பள்ளிக்கூடம், விளையாட்டுத்திடல் என்று பல இடங்களுக்குப் போய், பல அன்னிய நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், இந்த கூச்ச சுபாவம் தணிந்து துணிந்து பேசிப் பழகும் பக்குவத்திற்கு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே பெண்களுடன் அரட்டை அடித்துப் பழகிய ஆண்களுக்கே பெண்களைப் போல, சரளமாய் வாயாடும் தன்மை தொற்றிக்கொண்டு விடுகிறது. இந்த வகை ஆண்களுக்கு சமூக கூச்சம் அவ்வளவாக இருப்பதில்லை.

இந்த அதிர்ஷ்டம் வாய்க்காத ஆண்கள் தான் நம்மூரில் அதிகம் என்பதால், சராசரி ஆணுக்குப் பெண்ணைக் கண்டால் கூச்சம் வந்துவிடுகிறது. இவனே இப்படிக் கூசி, பார்வை தடுமாறி, வார்த்தைகளை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும்போது, பெண் பாட்டிற்கு வள வள என்று பேச ஆரம்பித்து விட்டால், போயே போச்சு... பையன் அவள் பேச்சு வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போய் விடுவான்.

அத்தோடு, அவள் இவ்வளவு சுலபமாய், சரளமாய், தடையின்றிப் பேசுகிறாள், நான் மட்டும் ஏன் இப்படி தயங்கித் தொலைக்கிறேன்! என்கிற சுயபரிகாசமே, அவனின் கொஞ்ச நஞ்ச தைரியத்தைச் சூறையாடி விடுமே. அப்புறம் அவன் பாட்டிற்கு இந்த ஆட்டத்திற்கு நான் வரலைப்பா என்று ஒதுங்கிப் போய்விட்டால், உங்கள் இஷ்ட ஆணை நீங்கள் எப்படி ஹேண்டில் செய்யப் பழகுவதாம்?

அதனால் ஆண்களை முதன் முதலில் சந்திக்கும் போது, அவன் அதீத வெட்க உணர்வை மதித்து, பெண் கொஞ்சம் அவள் பார்வையைத் தாழ்த்தியோ, திருப்பியோ வைத்தால், தன் ஆரம்ப ``அய்யோ, பெண், பார்க்கிறாளே, என்ன செய்வேன்?'' என்ற பதட்டத்தில் இருந்து ஆண் மீண்டுகொள்ள அவகாசம் இருக்கும். அதுவரை பெண் கப் சிப் என்று இருந்தால், ``அய், என்னை விட இவளுக்கு கூச்சம் அதிகமா இருக்கே, இவளை விட நானே மேல்!'' என்று மகிழ்ந்து, தலைவர் திருவாய் மலர்ந்து பேச்சைத் துவக்குவார்.

இந்தப் பெண் உண்மையில் கூச்சமே படவில்லை, விட்டால் ஒரு நிமிடத்தில் ஒன்றரைக் கிலோ வார்த்தைகளை உதிர்த்துவிடும் வாயாடி இவள் என்பதெல்லாம் காலப் போக்கில் இந்த ஆணுக்குத் தெரிய வரும். இருந்தாலும் உறவின் ஆரம்பத்தில் அவன் கூச்சத்தை வெளிக்காட்டாமல் தைரியமாகப் பேச முடிந்தால் தானே இந்த உறவே தொடர வாய்ப்பு.

``ஆண் பிள்ளை வெட்கப்படக்கூடாது'', என்று சமுதாயம் வேறு விதிகளைப் போட்டுத் தொலைக்கிறதா, அதனால் அவன் கூச்சப்படுவதே ஒரு அவஸ்தை என்றால், அதை அந்தப் பெண் பார்த்து, தன்னைக் குறைவாக மதிப்பிட்டு விடுவாளோ என்ற கவலையே அதை விடப் பெரிய இம்சை.

அதனால் அந்த ஆணை ஆட்கொள்ள வேண்டும் என்று ஏதாவது அபிப்ராயம் உங்களுக்கு இருந்தால், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து வைக்காதீர்கள். அவன் தன் கூச்சத்தை விழுங்கிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவனுக்குக் கொஞ்சமாவது அவகாசம் தாருங்கள். தலைவர் கூச்சம் நீங்கி, தானாய் பேசும் வரை, அவனைக் கவனியாது போல பார்வையை வேறு பக்கம் திருப்பி வையுங்கள். இப்படி நீங்கள் அவனை மறைமுகமாய் ஊக்குவித்தால், அப்புறம் பாருங்களேன், பையன் எப்படி, துணிந்து பேச்சை ஆரம்பிக்கிறான் என்று.

இந்த யுத்தி பெண்கள் எல்லோருக்குமே இயல்பிலேயே வருவதுண்டு. ஒரு பெண் ஒரு ஆணை விரும்ப ஆரம்பித்திருக்கிறாள் என்பதற்கான முதல் அறிகுறியே அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு அவனை ஊக்குவிப்பது தான். இந்த இயல்பு தான் பெண்கள் தங்களை அறியாமலேயே ஆண்களை ஊக்குவிக்க பயன்படுத்தும் அஸ்திரம் நம்பர் 3!

இதே அஸ்திரத்திற்கு இன்னொரு முனையும் உண்டு. யாராவது ஆண் உங்கள் விருப்பத்திற்கு விரோதமாய் உங்களை நோட்டம் விடுகிறான், அவனை ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றால், தலை குனிந்துகொண்டு, அவன் பார்வையை ஊக்குவிக்காமல், நிமிர்ந்து நேராய் அவன் கண்ணையே பார்த்து, ``சரிதான் அடங்குடா'' என்பது போல ஒரே ஒரு சிங்கிள் பார்வை விட்டாலே போதும், உடனே அண்ணன் ஒதுங்கி விலகிவிட ஆரம்பித்து விடுவார்.

பார்வை ஒன்றே போதும், யாரையுமே மிரட்டிவிடும்.

ஆக பார்வை என்ற இந்த மூன்றாம் யுத்தியை இம்முறை பழகிப்பாருங்கள். அடுத்த யுத்தியை அடுத்த சிநேகிதியில் சொல்கிறேன்!

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

//பார்வை ஒன்றே போதும், யாரையுமே மிரட்டிவிடும்//

நன்றாக சொன்னீர்கள் அம்மா!
உங்கள் குமுதம்.காம் நிகழ்ச்சி மிக அருமை, தொடர்ந்து கேட்டு வருகின்றேன்... என் பிளாக்கும் ஒரு முறை வந்துபோங்கள்.. உங்கள் பார்வை என் பிளாக்கில் படவேண்டும்.
http://aammaappa.blogspot.com/

எட்வின் said...

//பார்வை ஒன்றே போதும், யாரையுமே மிரட்டிவிடும்//
சரிதான் டாக்டர்...பாவம் ஆம்பளங்கள ரொம்ப மிரட்டாதீங்க :)

ஆட்காட்டி said...

விஜய் டீவியிலா அடிக்கடி வாறிங்களே? அது நீங்க தானா?

ச.பிரேம்குமார் said...

வணக்கம் மருத்துவரே. நீங்கள் நன்றாக பேசுவீர்கள் என்று நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றும் போது கண்டிருக்கிறேன். அழகாக எழுதவும் செய்கிறீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் :)

Unknown said...

” பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கு தெரியும் ..அந்த பொம்பளைக்கும் தெரியும்..அந்த ஆழத்திலே என்ன உண்டு அட யாருக்குத் தான் தெரியும்”... ஆண்குலத்தின் ஒட்டு மொத்தமான இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க டாக்டர்... ஒரு டாக்டரா இருந்துகிட்டு ஒருதலைப் பட்சமா.. ஆண்கள் சைக்காலஜிய பற்றி மட்டும் உங்க சினேகிதிகளுக்கு வகுப்பு எடுக்கிறீங்களே.. இல்ல தெரியாம தான் கேட்கிறேன் இது உங்களுக்கே நியாயமாகப் படுதா ... பெண்கள் சைக்காலஜி பற்றி என்னை மாதிரி அப்பாவி ( ரொம்ப ஒவரா இருக்கோ) ஆண்களுக்கும் வகுப்பு எடுங்க... முதல் வகுப்புக்கு “ உள்ளேன் டாக்டர்” இப்பவே சொல்லிட்டேன்...

வால்பையன் said...

யோசிக்க வேண்டிய விசயம் தான், சபை கூச்சம் இருவருக்கும் பொதுவானது என்று இத்தனை நாளாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

இன்னொரு சந்தேகம் பெண்கள், முதலில் ஆண்கள் தான் காதலை சொல்ல வேண்டும் என்று எதிபார்ப்பது ஏன்?

pudugaithendral said...

உங்களது இந்தத் தொடரை இதழ்களில் படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்

தங்கமணிகளை ரங்கமணிகள் புரிந்து கொள்ளும் விதமாவும் தொடர் எழுதுங்க.

ஏதோ என்னால முடிஞ்சதா ஹஸ்பண்டாலஜி எழுதறேன்.

Dr N Shalini said...

வாசு சார், பெண்களுக்கான இந்த பாலியல் பயிற்சியை எழுதுவதற்கு முன்பே ஆண்களுக்கான இதே போன்ற எதிர்பாலின புரிதல் கையேட்டை எழுதி வைத்தேனே. ”ஆளை அசத்தும் 60 கலைகள்” என்று நக்கீரனில் வெளி வந்த தொடரை, அவர்களே புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள். so you see, always ஆண்களுக்கு தான் முதல் மரியாதை:)

வால்பையன் said...

//ஆண்களுக்கு தான் முதல் மரியாதை:) ///

புரிகிறது, ஆண்கள் தான் முதலில் கற்று கொள்ள வேண்டிய குழந்தைகள் சரியா

:)

குப்பன்.யாஹூ said...

good, but looks like very long

May be you could split or rite in short. Otherwise it gives a feeling of studying those text books in school days.

Anonymous said...

தயவு செய்து Word Verification எடுக்கவும்...

நான் உளவியல் மானவன் .....40 வயது ...எனக்கு இப்பொழுது எதிலும் விருப்பம் இல்லை

Aishwarya Arunkumar said...

Dear Doc, I married my man after being in relationship for 5 yrs. The first day we met happened in the way you have told. I kept silent and didnt even look at him. Good that it helped him start talking.. I couldn't understd why he isn't able to talk when i look at him. Now i'm able to figure out..

Aishwarya Arunkumar said...

Dr, I have a doubt!! Should this method be implemented everytime when he hesitates to talk? I understd for initial bonding of relationship, we need to make the guy comftortable. Its been 7 years now, still he hesitate sometimes during the start of conversation. Will try and check out!! - aishu