Tuesday, June 22, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி: 35

ஆண்களை ஹாண்டில் செய்வதெல்லாம் இருக்கட்டும்.  முதலில் ஆண் என்றால் யார், அவன் எப்படி தோன்றுகிறான்? என்பது பற்றி ஒரு குட்டி ஃபிலாஷ்பேக்.  இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சொன்ன சங்கதி தான்:  ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அதிகம், பெண்ணுக்கு அது மிக சொர்பமே. 
இந்த டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன், இரண்டு சமயங்களில் உற்பத்தி ஆகிறது. ஒன்று:  கரு உருவாகிய ஆறு வாரத்தில் அதன் மரபணுக்களில் ஒரு Y குரோமோசோம் இருந்தால், அது  டெஸ்டோஸ்டீரோனை சுரக்க வைக்கிறது. அதுவரை பெண்பாலை போலவே இருக்கும் இந்த வருங்கால ஆணின் உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோன் பாய்ந்த உடன் அந்த கருவின் உடலும், மூளையும் மனமும் ஆண்மை படுத்த பட்டுவிடுகிறது.  இது தான் முதல் கட்டம்.
அதன் பிறகு குழந்தை பிராயத்தில் மேற்கொண்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி ஆவதில்லை.  அதனால் தான் ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமும், குரலும், தோலும், பெண்ணை போலவே இருக்கின்றன.  ஆனால் இந்த பையன் வயதிற்கு வரப்போகும் காலம் நெருங்க நெருங்க, அவன் விந்தகங்கள் மீண்டும் டெஸ்டோஸ்டீரானை மிக அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் மீண்டும் ஒரு முறை, ஆண்மைபடுத்தும் படலம் அமலாகிறது.  இன பெருக்க உருப்புக்களின் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, குரல் மாறூதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகுவதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.
ஆனால் அவன் வயதிற்கு வந்த பின், நம் கண்ணுக்கு தெரியாமல் அவன் மூளையில் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.  எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காமம் சார்ந்த சிந்தனை, எந்த விஷயத்திலும் தீவிர கவனம், இதெல்லாம் போக கொசுறாய், அவனுக்கு திடீரென்று Dominance என்கிற ஆதிக்க மனப்பான்மையும் தோன்றிவிடும்.  எங்கு சென்றாலும் தான் முதன்மை இடத்தை பிடித்துவிட வேண்டும், எல்லோரையும் விட முந்திக்கொண்டு ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கும். அதனால் வயதிற்கு வந்தவுடன் ஆண் குழந்தைகள் தங்கள் தகப்பனோடோ சண்டை போடுவார்கள், தாயிடம் எதிர்த்து பேசுவார்கள், எல்லோர் எதிரிலும் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை ஷோ காட்டிக்கொள்ள முயல்வார்கள்.
ஏன் இப்படி?  பிகாஸ், இயற்கை வல்லமையே வெல்லும், survival of the fittest என்கிற ஒரு விதியை வைத்திருப்பதால், தான் ரொம்பவே ஃபிட் என்று காட்டிக்கொண்டால் தான் அந்த ஆணை பிறர் கவனிப்பார்கள்.  அப்போது தான் பெண் பாலினம் அவனை தேர்ந்தெடுத்து, மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஒரு வாய்ப்பை தரும்.  இதனால் தான் இயற்கை எல்லா உயிரினத்திலும் ஆண்பாலுக்கு மட்டும் இந்த டாமினென்ஸ் குணத்தை டெஸ்டோஸ்டீரோனின் மூலமாக தூண்டுகிறது.
ஆணின் இந்த டாமினென்ஸ் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவை பொறுத்தது. ஆனால் இந்த டெஸ்டோஸ்டீரோனோ எப்போதும் ஒரே மாதிரி அளவில் இருக்கும் ஹார்மோன் அல்ல. ஒரே நாளில் பல நூறு நானோ கிராம் அளவுற்கு அலைபாயும் தன்மை டெஸ்டோஸ்டீரோனுக்கு உண்டு.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோனை போலவே பெண்களுக்குள்ளும் இரண்டு பாலியல் ஹார்மோன்கள் உள்ளன….அவை தான் ஈஸ்டிரஜென், ப்ரொஜெஸ்டிரான்.  ஆனால் டெஸ்டோஸ்டீரானை போல இல்லாமல் இந்த பெண்பால் ஹார்மோன்கள் இரண்டுமே சொல்லி வைத்தாற் மாதிரி நிலையான அளவிலேயே இருக்கும். மாதவிடாய் நாளில் இருந்து அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணின் பாலியல் ஹார்மோன்கள் எந்த நாள் எந்த அளவில் இருக்கும் என்பதை துல்லியமாக அனுமானித்துவிட முடியும்.  ஆனால் ஆணின் உடலிலோ, ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் டெஸ்டோஸ்டிரோன் மேலும் கீழுமாய் நிலை இல்லாமல் அலைபாய்ந்துக்கொண்டே இருக்கும்.  எப்போது எவ்வளவு இருக்கும் என்பதை முன்னறியவே முடியாது.
ஏன் அப்படி என்று தானே கேட்கிறீர்கள்.  காரணம், டெஸ்டோஸ்டீரோனின் அளவு ஆணின் மனநிலையை பொருத்தே இருக்கிறது.  அவன் தன்னை ஒரு வெற்றியாளனாக, வீரனாக, உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டால் உடனே அவனுடைய ரத்ததில் டெஸ்டோஸ்டீரான் அளவு கூடிவிடுகிறது.  இதுவே அவன் தன்னை ஒரு தோத்தாங்கோலியாகவோ, ஏமார்ந்தவனாகவோ, கோழையாகவே நினைத்தாலும் போச்சு, சடாரென டெஸ்டோஸ்டீரான் அளவு சரிந்துவிடும்.
ஒரு மனிதனின் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமாய் இருக்கும் போது, அவன் சந்தோஷமாய் இருக்கிறான்.  தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியமும் அப்போது அவனிடம் அதிகமாக இருக்கும்.  ஆனால் அதே ஆணின் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்து போய்விட்டால் அவன் சோகமாகிவிடுகிறான்.  தேவையற்ற எரிச்சல், ஆத்திரம், பொறுமையின்மை, சுய பரிதாபம், தோல்வி மனப்பான்மை, கோழைத்தனம் எல்லாம் சேர்ந்து அவனை ஆட்டி படைக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் அவன் அதிக நோய்களுக்கு ஆளாகிறான். உடலாலும் மனதாலும் பெருத்த சங்கடத்திற்கு உள்ளாகிறான்.  அதற்கு மேல் போட்டி இட்டு ஜெயிக்கும் திராணியை அவன் இழந்துவிடுவதால் அவனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போகலாம்.
இது தான் டெஸ்டோஸ்டீரானின் தன்மை என்றால், இப்போது சொல்லுங்கள், உங்கள் ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் உங்களுக்கு லாபமா, அல்லது குறைவாய் இருந்தால் உங்களுக்கு லாபமா?
அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் அவன் சுலபமாய் அதிகமாய் சாதிப்பான்.  அவன் சாதனைகளின் மேல் நீங்கள் இலவச சவாரி செய்து சொகுசாய் வாழலாம்.  ஆனால் அவனுக்கு டெஸ்டோஸ்டீரான் குறைந்து போனால் அவனால் அதற்கு மேல் சாதிக்க முடியாது, அவனால் அவன் மனைவிக்கு பெரிய பயன்பாடு இருக்காது…….ஆக ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் லாபம்!!
இந்த டெஸ்டோஸ்டிரானை எப்படி அதிகமாக்கிவிடுவது என்று தானே யோசிக்கிறீர்கள்? சிம்பிள், அவன் தான் உயர்ந்தவன், வெற்றியாளன், வீரன் என்று அவன் நினைத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் அதிகமாகி விடுமே. வெளி உலகில் அவன் நிஜமாக ஜெயிக்கிறானா தோற்கிறானா என்பதெல்லாம் பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயமே அல்ல.  அதனால் அவன் வெளியே இருக்கும் போது அவன் டெஸ்டோஸ்டீரான் அளவை பெண்களால் கட்டுபடுத்த முடியாது.
ஆனால் அவள் வீடு என்கிற தனி சாம்பிராஜியத்திற்குள் அவன் வந்துவிட்டால், அதன் பின் அவன் டெஸ்டோஸ்டீரானின் அளவை நிற்னயிப்பதே பெண் தான். அவனை, பெரிய ஹீரோ மாதிரி நடத்தி, உன்னை மாதிரி ஒரு வெற்றீயாளன் யாருமே இல்லையடா என்று நம்பவைத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் அளவு ஆகாஷம் வரை பாயும், உடனே சந்தோஷமும், உற்சாகமும் பீறீட்டு விட, அவன் இன்னும் இன்னும் அதிகமாய் சாதிக்கும் ஆர்வத்தை பெறூவான்.
அதை விட்டு விட்டு, என் அப்பா மாதிரி வருமா? என் அண்ணன் மாதிரி வருமா? எதிர்வீட்டுகாரன் மாதிரி வருமா, என்று அவன் எதிரில் வேற்று ஆண்களை நீங்கள் பாராட்டி, இவனை மட்டம் தட்டிவிட்டீர்ங்கள் என்று வையுங்கள்……போச்சு, அவன் டெஸ்டோஸ்டீரான் அந்தர்பல்டி அடித்துவிடும், அவன் ஆக்ரோஷத்துடன் உங்களை அடிக்க கிளம்பிவிடுவான், அல்லது வேண்டாத பழக்கங்களால் தன்னை அழித்துக்கொள்ள கிளம்பிவிடுவான்.
அதனால் ஆண்களை ஸ்மார்ட்டாக ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகாள், அவனை எப்போதுமே பாராட்டுங்கள்.  உன்னால முடியும், நீ சாதிக்கவே பிறந்தவன், நீ நினைத்தால் முடியாததா என்றெல்லாம் அவனுக்கு கொம்பு வீவி விடுங்கள் பிறகு பாருங்கள் அவன் எவ்வளவு சாதிக்கிறான் என்றூ.
உதாரணத்திற்கு சக்ரவர்தி திருமகன் ராமனை எடுத்துக்கொள்ளூங்களேன்.  அவன் மனைவி சீதாவை ராவணன் கடத்திக்கொண்டு போய் அசோக வனத்தில் சிறைவைத்த போது, அவளை தேடி போய் கண்டு பிடித்த அனுமான், “என் தோளில் ஏறிக்கொண்டால் நான் இப்போதுமே உம்மை காப்பாற்றிக்கொண்டு செல்வேன்” என்று சொன்னான்.  அப்போது சீதை, “ஐ சூப்பர் ஐடியாவா இருக்கே,” என்றூ உடனே அவன் தோளில் ஏறிவிட்டாளா என்ன? இல்லையே, “நான் நினைத்தால் எப்போதோ இங்கிருந்து தப்பி போயிருப்பேன், ஆனால் அது ராமனின் வீரத்திற்கு கலங்கமாகிவிடும்.  அவர் மாவீரர், அவரால் ஆகாதது ஏதும் இருக்கிறதா?  அவர் வந்து என்னை மீட்பார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. போய் அவரிடம் இதை சொல்” என்றாள். இத்தனைக்கும் ராமன் காட்டில் சாப்பாட்டிற்கே லாட்டரி அடித்துக்கொண்டு, ஒரு குரங்கு கூட்டத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தான்.  அவனுக்கே இவ்வளவு ஊக்கம் தந்தாள் சீதை.
ராவணனோ பெரிய பராக்கிரம சாலி, ஏழு லோகத்தையும் வென்ற ஜித்தன்……ஆனால் அவனை அவன் மனைவி மண்டோதரி, “வேண்டாம், போருக்கெல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்ணாதே.  ராமன் உன்னை விட பலசாலி….” என்று ராமனோடு அவனை ஒப்பிட்டு மட்டம் தட்டி, டிஸ்கரேஜ் செய்து தடுத்தாள்.  இதனால் ராவணனின் டெஸ்டோஸ்டீரான் அளவு என்ன ஆகியிருக்கும்?  சந்தேகமே இல்லாமல் சுரத்தல் குறைந்திருக்கும்.  விளைவு, எவ்வளவோ சக்திவாயந்தவனாக இருந்தும் இராவணம் தோற்று போனான்.
சரியான சாப்பாடு இல்லாமல், குரங்குகளின் உதவியோடு போரிட்டாலும் இராமனே ஜெயித்தான்.  காரணம், அவன் மனைவி அவனை தூக்கிவைத்து பேசியதால் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமாக இருந்தது.  அதனால் அவனால் ஜெயிக்க முடிந்தது.
இதெல்லாம் புராணகதையாக இருந்தாலும், இதில் இருக்கும் அறிவியல் துணுக்கு இது தான்:  பெண்ணின் பாராட்டுக்கு ரொம்பவே அதிக பவர் உண்டு.  நீங்கள் உங்கள் கணவன்/காதலன்/மகன்/சகா/நண்பன்/ஊழியனை ஒரு முறை பாராட்டிப்பாருங்களேன்.  அவன் பெரிய பெரிய சாதனைகளை சுலபமாக புரிவான்.  இதற்கு நேர்மாறாய், அவனை மட்டம் தட்டி, உதாசீனப்படுத்தி, “டேய் சரியான வேஸ்டுடா நீ!” என்றூ இழிவு படுத்தி பாருங்கள்…..இந்த காயம் அவனை தோற்கடித்துவிடும்.
ஆகயால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் அன்பு ஸ்நேகிதிகாள்…..உங்கள் ஆணை ஹீரோ மாதிரி நடத்துங்கள், அவன் மென்மேலும் ஜெயித்துக்கொண்டே போவான்.  ஸீரோ மாதிரி நடத்தினீர்கள் என்றால் அவனுடன் சேர்ந்து நீங்களும் தோற்றுபோவீர்கள்.