Monday, November 29, 2010

அறுபடாத தொப்புள் கொடிகள்

ஆக அம்மாக்கள் தங்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் ஆண் குழந்தையை (சில வீடுகளில் பெண் குழந்தையையும்) அன்பெனும் அங்குசத்தை பயன்படுத்தி தனக்கு அடிமையாக்கிக்கொள்கிறார்கள். வலிமையான, புத்திசாலித்தனமான யானையை அடக்கி, பழக்கி, வெறும் ஒரு தேங்காய் மூடிக்காக கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைக்கிறார்களே, கிட்ட தட்ட அதே போல, தன் பிழைப்பிற்காக தன் மகனை பயன் படுத்திக்கொள்கிறார்கள் சில தாய்மார்கள். செய்தால் செய்துவிட்டு போகட்டுமே, அதனால் யாருக்கு என்ன நஷ்டமாம் என்கிறீர்களா?


சரி, இந்த கதையை கேளூங்கள், ஜெயம் ஒரு சராசரி இந்திய தாய். வறுமையில் பிறந்து, சதா உறவினரோடு தன்னை ஒப்பிட்டு, எப்படியாவது சாதித்து எல்லோர் மதிப்பு, மரியாதையையும் சம்பாதித்துக்கொண்டே ஆகவேண்டும் என்கிற வெறியோடு வளர்ந்தவள். டாக்டர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கொண்டு ஜம்பமாய் வாழலாம் என்பது தான் அவள் இள வயது கனவு. அவள் துரதுஷ்டம், எந்த டாக்டரும் அவளை திரும்பியும் பார்க்கவில்லை, அதனால் ஒரு ரயில்வே குமாஸ்த்தாவுக்கு அவளை மணமுடித்தார்கள். அவள் எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கை அமையவில்லை, ஏதோ ஒரு குக்கிராமத்தில் கூட்டு குடித்தன வாழ்க்கை தான் அமைந்தது. அவள் கணவனின் சொர்ப்ப மாத வருமானத்தை கவர் பிரிக்காமல் அப்படியே மாமனாரிடம் கொடுத்து விடவேண்டும், ஒரு ரூபாய் குறைந்தாலும், அப்படியே முகத்தில் விட்டெறிந்துவிட்டு கோபமாய் போய்விடுவார் மாமனார். இப்படிப்பட்ட நிலையில் இவள் எங்கிருந்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்வதாம். அதனால் தன் தனிப்பட்ட தேவைகளுக்கு தன் பெற்றோரையும், சகோதரர்களையும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாள் ஜெயம். எப்படியாவது ஒரு நாள் பெரிய பணக்காரி ஆகியே தீருவது என்கிற வைராக்கியம் இதனாலேயே அதிகரித்தது.

இவள் கவனமெல்லாம் பணம், நகை, சொத்து, வீடு, கார் என்றே இருக்க, கணவனை இவள் ஒரு சம்பாதிக்கும் யந்திரமாக நடத்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் கணவனோ சல்லாப பிரியன். மனைவியோ சதா பூஜை, விரதம் என்கிருந்த பரமபக்தை. இந்த இருவருக்கும் ரசனைகள் ஒத்து போகாததால், கணவன் தன் சக ஊழியைகளிடம் நைஸாக பேசியே தன் தேவைகளை தீர்த்துக்கொள்ள ஆரம்பிக்க, விஷயம் விபரீதமானது. வேறொரு பெண்ணோடு மனிதருக்கு காதல் ஏற்பட்டு, அவள் கர்பமாகியும் விட்டாள். விஷயம் தெரிந்த போது ஜெயத்திற்கு உலகமே திடீரென்று தலைகீழாய் புரண்டது. அதுவரை பணம் மட்டுமே பிரதானம் என்று இருந்தவள் இப்படி தடம் தவறும் கணவனை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டுமே என்கிற இக்கட்டுக்கு ஆளானாள். பெரியவர்கள் தலையிட்டு இருவரையும் அரும்பாடுபட்டு சேர்ந்து வைத்தார்கள். ஆனால் ஏற்கனவே காமத்தில் பெரிய ஈடுபாடே இல்லாமல் இருந்த ஜெயத்திற்கு அதற்கு மேல் கணவனின் மேல் நம்பிக்கையும் இல்லாமல் போக, அவர்களுடைய இல்வாழ்க்கை பிள்ளைகளை வளர்க்க மட்டுமே அதற்கு மேல் பயன்பட்டது.

கணவனை நம்பி இனி பயனே இல்லை என்று புரிந்துக்கொண்ட ஜெயம், தன் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் இரண்டு மகன்களின் மேல் குவித்தாள். டாக்டருக்கு மனைவியாகத்தான் முடியவில்லை, தாயாக ஆகியே தீருவது என்று தீவிரமாய் இருந்தாள். மகன்களிடம் தன் பரிதாபக்கதையை சொல்லி அழுது, “அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மனிஷனோட வாழுறதே உங்களுக்காக தான்….” என்று சொல்லிகாட்டியே வளர்த்ததால், பையன்கள் இருவருக்கும் அம்மாவின் மேல் அதிக பாதுகாப்பு உணர்வும், அப்பாவின் மேல் அருவெறுப்பும் ஏற்பட ஆரம்பித்தது. எப்படியாவது அம்மாவை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்று, இருவருமே வேறு எந்த சிதறலுக்குமே இடம் தராமல் படிப்பிலேயே விழுந்து கிடந்து மெடிகல் காலேஜ் சேர்ந்தார்கள். வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட, அம்மா வேலைக்கு போய் மகன்கள் இருவரையும் படிக்க வைக்க உதவினாள். ஒருவழியாக இரண்டு மகன்களுமே டாக்டர்கள் ஆனார்கள். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் ஜெயம் வேலையை விட்டாள். மகன்களின் சாம்பாத்தியம் பெருக ஆரம்பித்தது. மகன்களின் முயற்ச்சியால் அது வரை வாழ்ந்த சின்ன வீட்டை விட்டு, ஒரு ஆடம்பர பங்களாவுக்கு மாறினார்கள். அதற்குள் கணவரும் ரிடையராகிவிட, ஜெயம் முழுக்க முழுக்க தன் மகன்களின் வருமானத்தை நம்பியே வாழ வேண்டிய நிலை.

முதல் மகனுக்கு 35 வயது தாண்டிய பிறகும், “சரியான பொண்ணே அமையலைடா…” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் ஜெயம். அம்மா நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று ஆணீத்தரமாக நம்பிய மகன் # 1க்கு காலமாக ஆக லேசாய் சந்தேகம் தலை தூக்கியது. அதெப்படி இத்தனை கோடி பெண்கள் இருக்கும் இந்தியாவில் இவனுக்கு மட்டும் ஒருத்தி கிடைக்காமல் இருப்பாள்? கடைசியில் பையன் ஒரு பெண்ணை பார்த்து ரொம்பவும் பிடித்து போனதாய் சொல்ல, “அந்த பொண்ணோட அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சாம், போயும் போயும் கூத்தியாளுக்கு பிறந்தவளையா உனக்கு கட்டிவைப்பேன்?” என்று அதற்கும் ஒரு வெடி வைத்தாள் அம்மா. “இனி மேல் முடியாது, எனக்கு வயதாகிறது. இவளை கட்டி வைக்காவிட்டால், என் ஹாஸ்பிட்டலில் ஒரு விதவை நர்ஸுக்கு வாழ்க்கை தந்துவிடுவேன்” என்று மகன் மிரட்டல் விடுக்க, வேறு வழி இல்லாமல் முதல் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள் ஜெயம்.

ஆனால் மருமகளை கண்டால் அவளுக்கு என்னமோ பிடிக்கவில்லை. “மாமியார்னு ஒரு மரியாதை வேண்டாம், அதென்ன சரிசமமா சோபாவுல உட்கார்ந்துகிட்டு, தரையில உட்கார்ந்து பேசு….” என்று மருமகளையும், அவள் அம்மா அப்பாவையும் எல்லா சமயத்திலும் ஜெயம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்க, மிரண்ட போய் அந்த பெண் கணவனிடம் போய் முறையிட்டாள், மகன் சொன்னான், “எங்கம்மா எனக்கு தெய்வம். குடும்பத்துக்காக எவ்வளவோ கஷ்டபட்டு எங்களை படிக்க வெச்சவங்க, ….அவங்கள பத்தி ஏதாவது பேசினே…….இதோ இது தான் கதவு, வெளியே போயுடு”

எது நியாயம் என்று யோசிக்க கூட முடியாத கண்மூடித்தனமான அம்மாசெண்டிமெண்டில் சிக்கிக்கொண்டவனை வைத்து என்ன பேசுவது? என்னவோ இந்த உலகில் இவன் மட்டும் தான் அதிசயமான ஒரு டாக்டர் என்பது மாதிரி இவன் அர்த்த ராத்திரியில் குடை பிடித்து, அராஜகம் செய்ய, பிறந்த வீட்டிற்கு அவமானம் வரக்கூடாதே என்றூ அவன் மனைவி பொருத்துக்கொண்டே போனாள். குழந்தைகள் பிறந்தார்கள். அதன் பிறகு இவளுக்கும் கொஞ்சம் அந்தஸ்து உயர்ந்தது. இனிமேல் அவளை “வெளியே போ” என்று சொல்ல முடியாதே! தனக்கென்று ஒரு குடும்பமென்றான பிறகு முதல் மகனால் அதற்கு மேல் தன் அம்மாவுக்கு செல்வழிக்க முடியவில்லை.

முதல் மகன், தான், தன் குடும்பம் என்று திசைதிரும்பிவிட, ஜெயம் தன் இரண்டாம் மகனையே சார்ந்துவாழ ஆரம்பித்தாள். வருமானமே இல்லாத அவளுடைய எல்லா செலவுகளையும் இரண்டாவது மகனே கவனித்துக்கொள்ள, கணவனை வெறும் ஒரு காரோட்டி என்கிற லெவலுக்கு பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள் ஜெயம்.

இது இப்படி இருக்க, ஜெயம் தன் இரண்டாவது மகனுக்கும் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள். அவன் எதிரில் தக்‌ஷிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி வேண்டிக்கொள்வாள், ஆனால் “அந்த பொண்ணுக்கு இது நொட்டை இது நொள்ளை” என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனாள். எப்படியும் பெற்ற தாய் தனக்கு தீங்கா செய்துவிட போகிறாள் என்கிற நம்பிக்கையில் இருந்தான் மகன். எத்தனையோ பெண்களை பார்த்து என்னனவோ ஆசைகள் தோன்றியபோதும், அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும், அப்பா மாதிரி ஆகிடகூடாது என்று அவன் தன் புலன்களை எல்லாம் அடக்கி, படிப்பு, வேலை, உழைப்பு என்றே இருந்தான். அவன் உழைப்பு வீண் போகவில்லை. வசதியான வீடு, சொகுசான கார், தேவைக்கு அதிகமாய் பணம் என்று அவன் அம்மாவின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றினான். “என் மகனை கட்டிக்க கொடுத்து வெச்சிருக்கணும்” என்றூ பெருமைபட்டுக்கொண்டாள் ஜெயம். ஆனால் அதற்குள் பையனுக்கு நாற்பது வயது தாண்டிவிட்டது. இன்னும் ஒரு நல்ல பெண்ணை அவளால் கண்டே பிடிக்க முடியவில்லை!

மகன் காத்துக்கொண்டே இருக்க, அவன் காசில் பெண் பார்க்க போகிறேன் என்று எல்லா ஊர்களுக்கும் போய்விட்டு வெறூம் கையோடு தான் திரும்பிவந்தாள் தாய். இப்போது சொல்லுங்கள்: இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்? தோற்றது யார்?

Thursday, November 25, 2010

உயிர் மொழி: 10

அப்படி என்ன ரகசிய அஸ்திரங்களை மிக பகிரங்கமாய் பயன்படுத்தி ஆண் குழந்தைகளை அடக்கி ஆள்கிறார்கள் பெண்கள் என்று யோசித்தீர்களா? கண்டு பிடித்தீர்களா?


அஸ்திரம் 1: பிரசவிக்கும் அவள் தன்மை. பிரசவம் என்பது எல்லா உயிரனத்து பெண்பாலுக்கும் இயல்பு தான் என்றாலும் சில மனித தாய்மார்கள் மட்டும் இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது உண்டு. “பத்து மாசம் சுமந்து பெற்ற தாயடா” என்று இவள் ஆரம்பித்தாளே போதும், சப்தநாடியும் அடங்கி மகன் உடனே சரண்டர் ஆகிவிடுவான். பெண் குழந்தையிடம் இந்த பாட்சா பளிக்காது, காரணம், அவளும் பின் ஒரு நாள் இதே மாதிரி பிரசவிக்க தானே போகிறாள். அதனால் அம்மாவால் இந்த விஷயத்தில் மகளை டாமினேட் செய்ய முடியாது. ஆனால் ஆண் குழந்தைக்கு இது என்றுமே முடியாத ஒரு பெரும் சாதனை தானே. அதனால் தாய்மை என்றால் அவனுக்கு பிரமிப்பு, மிரட்சி, பயம், மரியாதை, எல்லாம். அதனால் அம்மா, “உன்னை கஷ்டப்பட்டு பெத்தேனே……..” என்று வசனத்தை ஆரம்பித்தாலே போதும், கர்ணனை மாதிரி சிறந்த வீரன் கூட உடனே கரைந்து உருகிவிடுவான். அதன் பிறகு சுயமாய் யோசிக்கும் தன்மையை இழந்தே விடுவான், “எனக்கு இந்த பிறவியை தந்த தாய்க்கு என்ன செய்தாலும் தகும்” என்கிற தியாகிமனப்பண்மைக்கு மாறிவிடுவான். கொஞ்சம் துடுக்கான பையன் என்றால், “யானை 22 மாதம் சுமக்கிறது, பத்து மாதத்தை பெரிதாய் பேசுகிறீர்களே,” என்றோ, “நானா பெக்க சொன்னேன்?” என்றோ கேட்டு அம்மாவின் வாயை அடைத்து விடுவான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அம்மா செண்டிமெண்ட் அதிகம் என்பதால் அதை மீறி இப்படி எல்லாம் அறிவியல் பூர்வமாய் அவர்களால் யோசிக்க முடிவதில்லை.

அ 2: பிறப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று நிர்ணயிப்பது அப்பாவின் விந்தணுவின் நீந்துவரும் குரோமோசோம்கள் தான். அப்பாவின் விந்தணுக்களில் பாதி X வகை குரோமோசோம்கள், பாதி Y வகை குரோமோசோம்கள். அம்மாவின் கருமுட்டையில் இருப்பதெல்லாமே X வகை குரோமோசோம்கள் தான். அப்பாவின் X அம்மாவின் X சோடு சேர்ந்தால் XX என்றாகி, பெண் குழந்தை பிறக்கும், அப்பாவின் Y அம்மாவின் X சோடு சேர்ந்தால் XY என்றாகி, ஆண் குழந்தை பிறக்கும். ஆக பிள்ளை ஆணா பெண்ணா என்று முடிவு செய்வதே அப்பா தான். ஆனால் ஆண் குழந்தையை பெற்றெடுப்பது என்னவோ அவளே சுயமாய் செய்த மிக பெரிய சாதனை என்கிற மாதிரி தான் சில பெண்கள் நடந்துக்கொள்கிறார்கள். இதனால் தங்கள் ஆண் குழந்தையை ஒரு அந்தஸ்து அறிகுறி, status symbol என்கிற மாதிரியே நடத்துகிறார்கள். அதிக விலையுள்ள பொருளை பொத்தி பாதுகாத்து, தான் மட்டும் வைத்து விளையாடி மகிழ்வது போல, தங்கள் மகனை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாமல், தான் மட்டும் சொந்தம் கொண்டாடி, over possessiveவாக, overproctectiveவாக இருக்கிறார்கள். மகனை எங்கும் அனுப்பாமல், யாருடனும் பழகவிடாமல் எப்போதும் தன் கண்காணிப்பிலேயே வளர்த்தும் விடுகிறார்கள். இப்படி பிரசவத்திற்கு பிறகும் தொப்புள் கொடியை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தால், பையன் எப்படி தான் வளர்வான்? கொடி சுற்றிய பிள்ளை மாதிரி, இந்த சிக்கலிலேயே மாட்டி அவன் முதிர்ச்சி அடையாமல் போய்விடத்தானே வாய்ப்பு அதிகம்! இப்படி ஒரு இன்செக்யூர் அம்மா, தன் மகனை கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவனை வளரவிடாமல் தடுப்பதை தான் persistent umbilical cord syndrome என்கிறோம்.

அ 3: பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி வளர்ப்பதும் அம்மாவின் பணிகளில் ஒன்று. இதை மிக சாதுர்யமாக பயன்படுத்தி, தனக்கு சாதகமான கதைகளை சொல்லி, பையனின் மனதில் தனக்கு ஒரு மைய பகுதியை அபகரித்துக்கொள்கிறார்கள் சில பெண்கள். உதாரணம் புத்லிபாய். குட்டி மோகன் தாஸுக்கு அவர் சொன்ன கதை என்ன தெரியுமா? கண்ணில்லாத பெற்றோரை கூடையில் வைத்து ஊர் ஊராய் சுற்றிய ஷ்ரவணின் கதை. ஷ்ரவண் பெற்றோர் மேல் வைத்த பாசத்திற்கு ஒரு பளிச்சிடும் உதாரணமாய் இருக்கலாம். ஆனால் இதனால் அவன் மரபணுக்கள் பரவவில்லையே. ஆக ஷ்ரவண் ஒரு genetic loser. இவன் கதையை போய் தன் மகனுக்கு சொல்லித்தருவாளா ஒரு தாய்? சொல்லித்தந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள், நம் கண் எதிரிலேயே, ஆனால் அது குழந்தைக்கு உபயோகமான கதை இல்லை என்றும், அது தாய் தன்னை பாதுகாத்துக்கொள்ள செய்யும் ஒரு long term யுத்தி என்றும் நமக்கு தான் புரிவதில்லை.

அ 4: பிள்ளைகளுக்கு வாழ்வியல் திறமைகளை சொல்லிதருவது தாயின் கடமை. ஆனால் எத்தனை வீடுகளில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரி வளர்க்கிறார்கள்? ஆண் என்பதினாலேயே, அவனுக்கு அதிக முக்கியத்துவம், சலுகைகள், சொகுசுகள், சில வேலைகளில் இருந்து விலக்கு என்று ஓரவஞ்சனையாக வளர்க்கும் அம்மாக்கள் தான் நம் ஊரில் ஏராளம். கூடவே, “ஆம்பிளை சிங்கத்தை பெற்றேன்…..” என்ற பெருமையை வேறு அம்மா அடித்துக்கொண்டால் கேட்க வேண்டுமா? மகன் என்னவோ தான் ஒரு தேவமைந்தன் என்கிற ரேஞ்சுக்கு தான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக்கொள்கிறான். அப்புறம் வெளிஉலகில் போய் அடிபட்டு, மிதிப்படும் போது தான் அவனுக்கு தெரியவே செய்யும், இந்த மிதப்பு எல்லாம் அம்மா ஏற்றிவிட்ட வெறும் மாயை என்று! அதுசரி, அது ஏன் ஆண் குழந்தைகளை மட்டும் அம்மாக்கள் இப்படி விழுந்து விழுந்து மிகையாய் கவனித்துக்கொள்கிறார்கள்? சில வீடுகளில் முப்பது நாற்பது வயதானாலும் மகனுக்கு தாய் தானே உடம்புக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு குளிபாட்டுவதுண்டு, தன் கையாலேயே அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதுண்டு. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆனால் இவ்வளவு மெனகெட்டு இந்த அம்மா இவ்வளவு செய்ய காரணம் என்ன தெரியுமா? மனிதர்கள் குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவற்றின் வாழ்க்கை விதிகள் பலது நமக்கும் அப்படியே பொருந்தும். காட்டில் வாழும் குரங்கு கூட்டங்களில் பெண்களும், குட்டிகளும், டாமினெண்ட் ஆண் குரங்கை, தொட்டு, தடவீ, பேன் பார்த்து, groom செய்துக்கொண்டே இருக்கும். இப்படி குரூம் செய்யும் குரங்குகளை அந்த ஆண் பாதுகாக்கும். ஆக அதிக குரூமிங் = அதிக பாதுகாப்பு. இதே விதியை தான் பெண்கள் தங்கள் இஷ்ட ஆண்களிடம் பயன் படுத்துகிறார்கள். இவள் தன் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள என்னை இப்படி எல்லாம் தாஜா செய்கிறாள் என்று புரிந்துக்கொள்ளும் விவஸ்த்தை எல்லாம் பல ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால், “அய், என்னை என்னமா கவனித்துக்கொள்கிறாள், இவளுக்கு என் மேல் எவ்வளவு ஆசை, இவளுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறோனோ…” என்று குறியே தவறாமல் மிக சரியாக வலையில் விழுந்து விடுகிறார்கள்.

அ 5: பெரும்பாலான தாய்மார்கள் ஆண்களுக்கு சமையல், சலவை, வீட்டு துப்புறவு பணிகள் மாதிரியான வேலைகளை சொல்லி தருவதே இல்லை. கேட்டால், இது எல்லாம் பெண்களின் வேலை என்று சொல்லி விடுவார்கள். பிரசவிப்பது ஒன்றை தவிற பெண்கள் மட்டும் செய்யும் வேலை என்று ஒன்று கிடையவே கிடையாதே. ஆனால் அம்மாக்கள் இப்படி ஒரு அப்பட்டமான பொயை ஏன் சொல்கிறார்கள்? இந்த வேலைகளை எல்லாம் அவனே சுயமாக செய்து பழகிவிட்டால் பிறகு அம்மாவின் தயவு அவனுக்கு தேவை படாதே. அப்புறம் எப்படி இந்த அம்மா, அவன் வாழ்வின் முக்கியமான நபர் என்கிற அதிகார அந்தஸ்த்தை பெற முடியும்?! அதனால், ஆண் குழந்தைகளுக்கு சுயபராமறிப்பு, சம்மந்தமான சூட்சமங்களை சொல்லியே தராமல் அவர்களை நிரந்திரமாக தன்னையே நம்பி வாழ வேண்டியவர் ஆக்கிவிடுகிறார்கள் சில தாய்மார்கள்

அ 6: குழந்தைக்கு என்று ஒரு சுயமான வாழ்வு உண்டு, அதற்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை அனுசரித்து பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் சர்வதேச சிறுவர் உரிமை. ஆனால் சில தாய்மார்கள் குழந்தையின் வாழ்வை அப்படியே அபகரித்து, அக்குழந்தையின் மூலமாய் தாங்கள் வாழ்கிறார்கள். தனக்கு கிடைக்காத, அமையாத விஷயங்களை எல்லாம் குழந்தையை வைத்து சாதித்துவிட முயல்கிறார்கள். “என்னால் தான் முடியலை, நீயாவது செய், அதை பார்த்து நான் பெருமை பட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லியே குழந்தைக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்வே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இதை வேறு எந்த நபரோ, ஏன் அரசாங்கமோ செய்தால் கூட, மனித உரிமை மீறல் என்று உடனே கண்டிக்க நமக்கு தோன்றும், ஆனால் பெற்ற தாய் என்றூ வரும் போது, “அவளுக்கு இல்லாத உரிமையா?” என்றூ விட்டேற்றியாக இருந்துவிடுகிறோம்.

மிக கவனமாக யோசித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும். பெற்று, பாலூட்டி, பாதுகாத்து, கதைகள் சொல்லி, திறமைகளை வளர்த்து, அவனுக்கு என்று ஒரு வாழ்வை அமைத்து கொள்ள வழிகாட்டுவது தான் ஒரு தாயின் கடமை. ஆனால் இந்த ஒவ்வொரு பணியையுமே தனக்கு சாதகமாய் இருக்கும் படியே மாற்றி செய்து, அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்தியே மகனை தனக்கு மட்டுமே விஸ்வாசமாய் இருக்கும் அடிமையாக்கிவிடுகிறார்கள் தாய்மார்கள். இப்படி தாங்கள் அடிமையாக்கபட்டது தெரியாமல், “எங்கம்மா மாதிரி வருமா?” என்று கண்மூடித்தனமாய் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் ஆண்கள்.

Tuesday, November 16, 2010

உயிர் மொழி: 9

ஆண் பெண்ணை அடிமை படித்திய கதை நம் எல்லோருக்கும் அத்துபடி, அதனால் அதில் விளக்கம் சொல்ல அதிகம் இல்லை. ஆனால் பெண் ஆணை பதிலுக்கு அடிமை படுத்திய கதை ரொம்பவே ஸ்வாரசியமானது. லேசில் வெளியே தெரியாத ரகசிய யுத்திகள் பல இதில் பயண் படுத்துப்படுகின்றன. அவற்றை பற்றி எல்லாம் சொல்வதற்கு முன்னால் மார்கெரெட் மேலரை உங்களுக்கு அறிமுக படுத்தியே ஆகவேண்டும்


மார்கெரெட் மேலர் ஹங்கேரியில் பிறந்து பிறகு அமேரிக்காவில் பணியாற்றிய ஒரு மனநலமருத்துவர். அவர் குழந்தைகளின் சமூக வளர்ச்சி பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். தாய் சேய் உறவில் பல நிலைகள் இருப்பதை அவர் கவனித்தார்

முதல் நிலை: பிறந்த குழந்தைக்கு புற உலகம் புரியாது, அது பெரும்பாலான நேரத்தை தூக்கத்திலேயே செலவிடுகிறது. ஆனால் மூன்று மாதம் தாண்டிய பின் அதற்கு தன் தாயை மிக நன்றாக தெரியும். ஆனால் தாய் என்பவள் வேறு, நான் என்பது வேறு என்பது குழந்தைக்கு தெரியாது. ”நான் என்றால் அது நானும் என் அம்மாவும்” என்கிற அளவில் தான் அந்த குழந்தையின் செயல்பாடு இருக்கும். அம்மா தன்னுடன் இருந்தால் தான் தன்னால் இயங்கவே முடியும் என்று நினைப்பதால் வெளியாட்கள், அம்மா இல்லாத தனிமை என்றால் குழந்தை உடனே பயந்து அழும். அம்மா பக்கத்து அறையில் இருந்தாலும், தன் கண் எதிரே இருந்தால் தான் அவள் தன்னுடன் இருப்பதாய் அர்த்தம் என்று எப்போதுமே தாயின் நேரடி பாதுகாப்பை நாடிக்கொண்டே இருக்கும்.

இரண்டாம் நிலை: ஆனால் இதே குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், பள்ளிக்கூடம், பக்கத்து வீடு, உறவினர்கள், நண்பர்கள் என்று வெளி உலக மனிதர்கள் பலரை அது சந்திக்கும். ஆக அம்மாவை தவிறவும் இந்த உலகில் பல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களும் என்னை பாதுகாப்பவரகள் தான் என்பதை குழந்தை உணரும். அதே சமயம் குழந்தையின் மூளையும் லேசாய் முதிர்வதால், அம்மா என் பார்வை வளைவில் இப்போது இல்லை என்றாலும் என் வட்டாரத்தில் எங்கேயோ இருக்க தான் செய்கிறாள், தேவையானபோது அவள் பாதுகாப்பிற்குள் தஞ்சம் புகுந்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை குழந்தைக்கு வரும். இப்படி தாயை கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், அவளை மனதில் ஒரு பிம்பமாய் உருவகப்படுத்தி, அவள் எப்போதும் என்னுடனே தான் நிரந்திரமாக இருக்கிறாள், அதனால் அவளை தேடிக்கொண்டே இருக்க வேண்டாம், என்கிற முதிர்ந்த நிலைக்கு குழந்தை வந்துவிடுகிறது. இதை ஆப்ஜெக்ட் கான்ஸ்டென்சி object constancy என்பார் மேலர்.

மூன்றாம் நிலை: குழந்தை மேலும் அதிகமாய் வளர்ந்து அதன் மூளை இன்னும் கொஞ்சம் முதிரும் போது, அதற்கு, ”நான் என்பது வேறு என் அம்மா என்பது வேறு”, என்பது புரிந்து போகும். தன்னை ஒரு தனி உயிரினமாய் கருதி, தனக்கென்று தனி அபிப்ராயம், தனக்கென்று தனி நம்பிக்கைகள், தனக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாழ்க்கை என்றெல்லாம் குழந்தை யோசிக்க ஆரம்பிக்கும். அதனால் அது தாய் தந்தையோடு முரண்படும். இப்படி தாயிடம் இருந்து பிரிந்து, தனக்கென்று ஒரு தனி சுயஅடையாளத்தை குழந்தை ஏற்படுத்திக்கொள்வதை தான் Separation-Individuation என்பார் மேலர். இப்படி பிரிந்து, தனித்துவமாவது தான் எல்லா ஜீவராசி குட்டிகளுக்கும் இயல்பு. இந்த நிலையை அடைந்தால் தான் குட்டி எங்கு சென்றாலும், பிழைத்துக்கொள்ளும் பக்குவத்தை பெறும்.

மார்கெரெட் மேலர் சொன்ன இந்த சங்கதி எல்லா உயிர்களுக்கும் பொது. பருவ வயதை அடையும் போதே எல்லா குட்டிகளும், “எனக்கென்றூ ஒரு தனி பிரதேசத்தை கண்டுபிடித்து என் தனி ராஜியத்தை அமைத்துக்கொண்டு இனி என் மரபணுக்களை பரப்பும் வேலையை பார்க்கிறேன்” என்கிற அனுகுமுறைக்கு மாறிவிடுகின்றன. இதே காலத்தில் எதிர்பாலின ஈர்ப்பும் மிக அதிகமாகிவிடுவதால், துணை தேடி, இனம் சேரும் உந்ததலும் தலை தூக்கிவிடுகின்றன.

இதெல்லாம் இயற்க்கையின் அமைப்பு. காலாகாலமாய் மனிதர்களும் இதற்கு உட்பட்டார்கள். அவ்வளவு ஏன் இன்றூம் கூட பெண்கள் அதிக சுதந்திரமாய் இருக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த முறையே பின் படுத்த படுகிறது. ஆனால் எங்கெல்லாம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, இன்செக்யூராக இருக்கிறார்களோ, அங்கெல்லாம், தம் பிழைப்பை அதிகரித்துக்கொள்ள, பெண்கள் இந்த விதியை அப்படியே மாற்றிவிடுகிறார்கள். தனக்கு அதிக பாதுகாப்பு தரும் குழந்தையை, எந்த வயதிலும் பிரிய விடாமல் தன்னுடனேயே தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

அம்மா இப்படி செய்தால் அவள் குழந்தைக்கு எங்கே போச்ச்சாம் அறிவு?….ஆடி, மாடு, புலி, சிங்கம், அவ்வளவு ஏன், எலி, அணில் மாதிரியான ஐந்தறிவு ஜீவன்கள் கூட சரியான பருவத்தில் தனித்துவமாகி, சுயமாக இயங்கும் போது, ஆறு அறிவு இருப்பதாக அலட்டிக்கொள்ளும் மனிதர்கள் இப்படி இன்னும் “அம்மாவும் நானும் ஒண்ணு” என்று முதிராத நிலையிலேயே நிற்கும் மாயம் என்ன? விஷயம் இது தான்: மனித தாய் மட்டும் தன் குழந்தையின் மனதை முழுமையாக வளரவிடுவதில்லை. தனக்கு சேவை செய்ய ஒரு பணியாள், ஏவல் புரிய ஒரு தொண்டன், ஆபத்துகளில் இருந்து பாதுக்காக்க ஒரு ஆயுதம், சம்பாதித்து தர ஒரு ஊழியன், பெருமை பட்டுக்கொள்ள ஒரு பொக்கிஷம், முதுமை காலத்திற்கு ஒரு காப்பீட்டு திட்டம்…….என்கிற அளவில் இயங்க மட்டும் தன் மகனை பழக்கிவைக்கிறாள். மற்றபடி தாயிடமிருந்து பிரிந்து தனித்துவமாகி, என்கிற சமிஞ்சை லேசுபாசாக தென்பட்டாலும், உடனே தன் அனைத்து அஸ்திரங்களையும் பயன் படுத்தி அதை எப்படியாவது தடுத்துவிடுகிறாள். சர்கஸ் சிங்கம் வெறுமனே ஒரு விசிலுக்கு கட்டுபட்டு நெருப்பு வளையத்தினுள் குதித்து வெளியே வருவது மட்டும் தான் தன் வாழ்வின் ஒரே இலக்கு என்கிற அளவிற்கு பழக்க படுத்துவது போல!

எல்லா அம்மாக்களுக்கு அப்படி இல்லை! எல்லாம் மகன்களும் அப்படி இல்லை என்று உங்களுக்கு ஆட்சேபிக்க தோன்றினால், நல்ல வேளையாக அது உண்மை தான். எல்லா அம்மாக்களும் இப்படி சுயநலமாக இருப்பதில்லை. எல்லா மகன்களும் இப்படி முட்டாளாக இருப்பதில்லை. ஆனால் துரதுஷ்டவசமாக இன்றும் இந்திய திருமணங்கள் பல முறிய பெரும் காரணமாக இருப்பது இப்படி பட்ட அப்நார்மல் அம்மாக்களும், முதிராத அவர்களது மகன்களும் தான். இயற்க்கைக்கு விரோதமான இப்படி பட்ட அதிசய அம்மா-மகன் உறவுகள் எப்படி உருவாகின்றன என்பதை அலசாமல் விடுவது ஆபத்து தானே!

அதுசரி, இந்த அம்மாக்களிடம் அப்படி என்ன அஸ்திரங்கள் இருக்கின்றன? இப்படி மகன்களை விசித்திரமாக பழக்கிவைக்க அவள் என்னென்ன யுத்திகளை பயன்படுத்துகிறாள்? பெண்கள் பயன்படுத்தும் அஸ்திரங்கள் எல்லாமே மனம் சம்பந்தபட்டவை, அதனால் அவை கண்ணுக்கு தெரிவதே இல்லை. இயற்க்கையாகவே அமைந்த சில அமசங்களை இவள் அஸ்திரங்களாக மாற்றி பயன் படுத்துவதால், அவை அஸ்திரங்கள் என்பதே நமக்கு ரொம்ப நேரத்திற்கு புரிவதே இல்லை. இப்படி பெண்கள் பயன்படுத்தும் இந்த improvised weapons என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளுங்க காத்திருங்கள், அடுத்த இதழில்…………

Monday, November 1, 2010

உயிர் மொழி: 8

மரபணு போட்டியில் ஜெயிக்க ஆண், “பெண்ணடிமைத்தனம்” என்கிற காயை நகர்த்தி, பெண்களை எல்லாம் நிராயுதபாணி ஆக்கினான். இதனால் பெண் ஆண்களை தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கலவி கொண்டு, உயரக மரபணுக்களை மட்டும் பரப்பிய காலம் மலையேறி போனது. கல்வி, அறிவு, சொத்து, வருமானம், தனி நபர் சுதந்திரம், சுயமரியாதை, தனக்கென ஓர் அடையாளம் என்று எதுவுமே இல்லாமல் வெறும் ஒரு பிரசவ யந்திரமாய் பெண்கள் மாறிவிட, இந்த யந்திரங்களை அபகரித்து, அவற்றினுள் தம் மரபணுக்களை விதைத்து, மானாவாரி சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள் ஆண்கள். இப்படி இவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, பெண்கள் மட்டும் சும்மா இருந்துவிடுவார்களா?


பெண் தான் பிறவி வேட்டுவச்சி ஆயிற்றே! ஆண் நகர்த்திய அதே காயை அவனுக்கு எதிராய் நகர்த்தி அவனுக்கே தெரியாமல் அவனை மீண்டும் தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள் பெண்…..எப்படி என்கிறீர்களா?

யுத்தி 1: அவள் உடம்பின் மீது ஆணுக்கு இருந்த மோகம் தான் அவளுக்கு தெரியுமே. அதனால் தன் உடல் பாகங்களை இன்னும் இன்னும் கவர்ச்சியாக வெளிபடுத்தி, ஆணை வசப்படுத்த முயன்றாள் பெண். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. எல்லா பெண்களுக்குமே அதே உடல் பாகங்கள் தானே இருக்கின்றன. ஒருத்தியின் கவர்ச்சியை விட இன்னொருத்தி அதிகமாய் கவர்ச்சியை காட்டிவிட்டால் போச்சு, ஆண் கட்சி மாறிவிடுவானே, அப்புறம் எப்படி அவனை அடிமை படுத்துவதாம்?

யு 2: சமையல், சேவை, உபசாரனை என்றெல்லாம் அவனுக்கு பிடித்த படி நடந்து அவனுக்கு சோப்பு போட்டு வைத்தால், அவன் இவள் துணையை இதற்க்காகவாவது மீண்டும் மீண்டும் நாடுவானே….ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. சமையலை ஆண்கள் கூட வெகு ஜோராய் செய்ய முடியுமே!. வேலையாள் கூட அவன் மனைவியை விட அதிக கீழ்படிதலுடன் சேவை, உபசாரனை மாதிரியான சமாசாரங்களை செய்து அசத்திவிட முடியுமே!

யு 3: படுக்கையில் அவனுக்கு பிடித்த மாதிரி எல்லாம் நடந்து அவனை அசத்தோ அசத்து என்று அசத்தி வைத்தால், ”என் மனைவி மாதிரி வருமா” என்று இவள் முந்தானையிலேயே விழுந்து கிடக்கமாட்டானா என்றால், ஊகூம். இவன் நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் படி தாண்டி, மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை முகர்ந்துவிடுவானே. ஆண், பெண், அரவாணி என்று யாரிடமும் சுகம் கொள்ளும் தன்மைதான் அவனுக்கு இருந்ததே. ஆக வெறும் கலவி சுகம் தந்து ஒரு ஆணை கட்டிபோடுவதென்பது முடியாத காரியமாகிவிடுமே.

யு 4: அந்த ஆணின் மரபணுக்களை கொண்ட குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், தன் ரத்தம் என்கிற பாசப்பிணைப்பில், ”என் குழந்தையை பெற்றவளாயிற்றே” என்கிற தனி சலுகை தருவானே. இப்படி குழந்தையை வைத்து கொஞ்சம் பவரை சம்பாதித்துக்கொள்வது தான் பெரும்பாலான பெண்களின் ஆட்ட யுத்தியாக இருக்கிறது. உதாரணத்திற்கு ராமயண தசரத சக்ரவர்த்தியை எடுத்துக்கொள்வோமே. சோசலை, சுமித்திரை, கைகேயீ, மூவருமே, தங்கள் குழந்தைகளை வைத்து தானே காய்களை நகர்த்தினார்கள்.

ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை: குழந்தை என்றால் எந்த குழந்தை? பெண் குழந்தை என்றால், அது இன்னொருவர் வீட்டிற்கு போய்விடும், காலம் முழுக்க அக்குழந்தையை வைத்து காய்களை நகர்த்த முடியாது. ஆனால் ஆண் குழந்தை? அப்பாவிற்கு பிறகு அவன் தான் குடும்ப பெயர், வருமானம், ஆஸ்தி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் கட்டிக்காக்க போகிறவன். பெற்றோருடனே இருந்து, அவர்கள் மறைவிற்கு பிறகும் பித்ரு கடன்களை செய்ய கடமை பட்டவன்…….அதனால் ஆண் குழந்தையை பெற்றால், பெண்களுக்கு கையில் ஒரு ரெடிமேட் ஆயுதம் கிடைத்த திருப்தி. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை. ஒரு வேளை, அவள் கணவனுக்கு பல தாரங்கள் இருந்து எல்லோருமே ஆண் குழந்தைகளாக பெற்றிருந்தால், அப்புறம் எல்லா மனைவியருக்குமே சமமான பவர் என்றாகிவிடுமே. இப்படி இருந்தால் ஒருத்தி மட்டும் தன் பிழைப்பு விகிதத்தை எப்படி அதிகரித்துக்கொள்ள முடியும்?

யு 5: கொண்டவனை நம்பினால் தானே இப்படி கண்டவளோடு போட்டியிடும் நிலைமையே. தானே பெற்றெடுத்த தன் மகனை தனக்கு சாதகமாக வளர்த்து, கடைசி வரை அவனையே தனக்கு துணையாக வைத்துக்கொண்டால், எப்படியும் ஒரு காலத்தில் தந்தையின் எல்லா பவரும் அவனுக்கு தானே வந்து சேரும். அட தந்தையின் பவர் இல்லாவிட்டாலும், தனக்கென்று உள்ள ஆற்றலினால் மகன் சாதித்துவிட்டால், அவனை தன்னுடனே தக்க வைத்துக்கொள்வது, இந்த தாய்க்கு சாதகம் ஆகாதோ? அவனுக்கு ஆயிரம் மனைவியர் கிடைக்கலாம், ஆனால் தாய் என்றால் இவள் ஒருத்தி மட்டும் தானே?

ஆக ஆண் பெண்ணை அடிமை படுத்தி, அவளை வெறும் ஒரு பிரசவ யந்திரமாக பயன்படுத்தினான். ஆனால் பெண்ணோ, தன் பிரசவ இயத்தையே ஒரு எதிர் யுத்தியாக பயன்படுத்தி, தன் ஆண் குழந்தையை தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள்.

அதெப்படி, பெண்ணுக்காவது கல்வி அறிவில்லை, ஆனால் ஆண் அறிவில் சிறந்தவன், உலகம் அறிந்தவன், பெண்ணை காட்டுலும் பல விதங்களில் வலிமையானவன். இப்பேற்பட்ட ஆண் எப்படி பெண்ணுக்கு அடிமையாகி போனான்? எப்படி இதை அனுமதித்தான் என்றெல்லாம் உங்களுக்கு ஆட்சட்யமாக இருக்கிறதா? இவ்வளவு வலிமையான இந்த ஆணை அடக்கும் பல அங்குசங்கள் பெண்ணின் கையில் இருந்தனவே. அதுவும் தான் பெற்றெடுத்து, வளர்த்த பிள்ளை என்றால் அவனை எப்படி எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது இவளுக்கு தெரியாதா! யாரோ ஒருத்தி பெற்ற ஆணான தன் கணவனையே தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர, அவ்வளவு யத்தனிக்கும் இவளுக்கு, தானே பெற்ற மகனை தன் ஆதிக்கத்தினுள் கொண்டுவருவது பெரிய காரியமா என்ன?

ஆணின் மிக பெரிய தவறே, “போயும் போயும் பெண் தானே, இவளால் இனி என்ன செய்ய முடியும்?” என்கிற குறைந்த மதிப்பீடு தான். அவளிடம் அவன் எச்சரிக்கையாகவே இருப்பதில்லை. அதிலும் தன்னை பெற்ற தாய் என்றால் அவனுக்கு சந்தேகமே வருவதில்லை. பெண்கள் எல்லாம் சுத்த மோசம் என்று பொத்தம் பொதுவாய் பாடிவைத்த பட்டினத்தார் மாதிரியான ஆசாமிகள் கூட தன்னை பெற்ற தாய் என்றதும், “தாயை சிறந்த கோயில் இல்லை” என்று போற்றத்தானே செய்தார்கள். ஆண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் இந்த எடிபெஸ் காம்பிளெக்ஸ் தான் அவர்களின் மிக பெரிய பலவீனம். இந்த ஒரு பலவீனம் போதாதா? இதை வைத்தே, தன் மகனை கடைசி வரை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க பெண்கள் பல ரகசிய யுத்திகளை மிக பகிரங்கமாகவே பயன் படுத்துகிறார்கள். அவை என்னென்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? இல்லையா, அட்சர்யங்களுக்கு காத்திருங்கள், அடுத்த இதழில்…….