Thursday, November 25, 2010

உயிர் மொழி: 10

அப்படி என்ன ரகசிய அஸ்திரங்களை மிக பகிரங்கமாய் பயன்படுத்தி ஆண் குழந்தைகளை அடக்கி ஆள்கிறார்கள் பெண்கள் என்று யோசித்தீர்களா? கண்டு பிடித்தீர்களா?


அஸ்திரம் 1: பிரசவிக்கும் அவள் தன்மை. பிரசவம் என்பது எல்லா உயிரனத்து பெண்பாலுக்கும் இயல்பு தான் என்றாலும் சில மனித தாய்மார்கள் மட்டும் இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது உண்டு. “பத்து மாசம் சுமந்து பெற்ற தாயடா” என்று இவள் ஆரம்பித்தாளே போதும், சப்தநாடியும் அடங்கி மகன் உடனே சரண்டர் ஆகிவிடுவான். பெண் குழந்தையிடம் இந்த பாட்சா பளிக்காது, காரணம், அவளும் பின் ஒரு நாள் இதே மாதிரி பிரசவிக்க தானே போகிறாள். அதனால் அம்மாவால் இந்த விஷயத்தில் மகளை டாமினேட் செய்ய முடியாது. ஆனால் ஆண் குழந்தைக்கு இது என்றுமே முடியாத ஒரு பெரும் சாதனை தானே. அதனால் தாய்மை என்றால் அவனுக்கு பிரமிப்பு, மிரட்சி, பயம், மரியாதை, எல்லாம். அதனால் அம்மா, “உன்னை கஷ்டப்பட்டு பெத்தேனே……..” என்று வசனத்தை ஆரம்பித்தாலே போதும், கர்ணனை மாதிரி சிறந்த வீரன் கூட உடனே கரைந்து உருகிவிடுவான். அதன் பிறகு சுயமாய் யோசிக்கும் தன்மையை இழந்தே விடுவான், “எனக்கு இந்த பிறவியை தந்த தாய்க்கு என்ன செய்தாலும் தகும்” என்கிற தியாகிமனப்பண்மைக்கு மாறிவிடுவான். கொஞ்சம் துடுக்கான பையன் என்றால், “யானை 22 மாதம் சுமக்கிறது, பத்து மாதத்தை பெரிதாய் பேசுகிறீர்களே,” என்றோ, “நானா பெக்க சொன்னேன்?” என்றோ கேட்டு அம்மாவின் வாயை அடைத்து விடுவான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அம்மா செண்டிமெண்ட் அதிகம் என்பதால் அதை மீறி இப்படி எல்லாம் அறிவியல் பூர்வமாய் அவர்களால் யோசிக்க முடிவதில்லை.

அ 2: பிறப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று நிர்ணயிப்பது அப்பாவின் விந்தணுவின் நீந்துவரும் குரோமோசோம்கள் தான். அப்பாவின் விந்தணுக்களில் பாதி X வகை குரோமோசோம்கள், பாதி Y வகை குரோமோசோம்கள். அம்மாவின் கருமுட்டையில் இருப்பதெல்லாமே X வகை குரோமோசோம்கள் தான். அப்பாவின் X அம்மாவின் X சோடு சேர்ந்தால் XX என்றாகி, பெண் குழந்தை பிறக்கும், அப்பாவின் Y அம்மாவின் X சோடு சேர்ந்தால் XY என்றாகி, ஆண் குழந்தை பிறக்கும். ஆக பிள்ளை ஆணா பெண்ணா என்று முடிவு செய்வதே அப்பா தான். ஆனால் ஆண் குழந்தையை பெற்றெடுப்பது என்னவோ அவளே சுயமாய் செய்த மிக பெரிய சாதனை என்கிற மாதிரி தான் சில பெண்கள் நடந்துக்கொள்கிறார்கள். இதனால் தங்கள் ஆண் குழந்தையை ஒரு அந்தஸ்து அறிகுறி, status symbol என்கிற மாதிரியே நடத்துகிறார்கள். அதிக விலையுள்ள பொருளை பொத்தி பாதுகாத்து, தான் மட்டும் வைத்து விளையாடி மகிழ்வது போல, தங்கள் மகனை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாமல், தான் மட்டும் சொந்தம் கொண்டாடி, over possessiveவாக, overproctectiveவாக இருக்கிறார்கள். மகனை எங்கும் அனுப்பாமல், யாருடனும் பழகவிடாமல் எப்போதும் தன் கண்காணிப்பிலேயே வளர்த்தும் விடுகிறார்கள். இப்படி பிரசவத்திற்கு பிறகும் தொப்புள் கொடியை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தால், பையன் எப்படி தான் வளர்வான்? கொடி சுற்றிய பிள்ளை மாதிரி, இந்த சிக்கலிலேயே மாட்டி அவன் முதிர்ச்சி அடையாமல் போய்விடத்தானே வாய்ப்பு அதிகம்! இப்படி ஒரு இன்செக்யூர் அம்மா, தன் மகனை கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவனை வளரவிடாமல் தடுப்பதை தான் persistent umbilical cord syndrome என்கிறோம்.

அ 3: பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி வளர்ப்பதும் அம்மாவின் பணிகளில் ஒன்று. இதை மிக சாதுர்யமாக பயன்படுத்தி, தனக்கு சாதகமான கதைகளை சொல்லி, பையனின் மனதில் தனக்கு ஒரு மைய பகுதியை அபகரித்துக்கொள்கிறார்கள் சில பெண்கள். உதாரணம் புத்லிபாய். குட்டி மோகன் தாஸுக்கு அவர் சொன்ன கதை என்ன தெரியுமா? கண்ணில்லாத பெற்றோரை கூடையில் வைத்து ஊர் ஊராய் சுற்றிய ஷ்ரவணின் கதை. ஷ்ரவண் பெற்றோர் மேல் வைத்த பாசத்திற்கு ஒரு பளிச்சிடும் உதாரணமாய் இருக்கலாம். ஆனால் இதனால் அவன் மரபணுக்கள் பரவவில்லையே. ஆக ஷ்ரவண் ஒரு genetic loser. இவன் கதையை போய் தன் மகனுக்கு சொல்லித்தருவாளா ஒரு தாய்? சொல்லித்தந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள், நம் கண் எதிரிலேயே, ஆனால் அது குழந்தைக்கு உபயோகமான கதை இல்லை என்றும், அது தாய் தன்னை பாதுகாத்துக்கொள்ள செய்யும் ஒரு long term யுத்தி என்றும் நமக்கு தான் புரிவதில்லை.

அ 4: பிள்ளைகளுக்கு வாழ்வியல் திறமைகளை சொல்லிதருவது தாயின் கடமை. ஆனால் எத்தனை வீடுகளில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரி வளர்க்கிறார்கள்? ஆண் என்பதினாலேயே, அவனுக்கு அதிக முக்கியத்துவம், சலுகைகள், சொகுசுகள், சில வேலைகளில் இருந்து விலக்கு என்று ஓரவஞ்சனையாக வளர்க்கும் அம்மாக்கள் தான் நம் ஊரில் ஏராளம். கூடவே, “ஆம்பிளை சிங்கத்தை பெற்றேன்…..” என்ற பெருமையை வேறு அம்மா அடித்துக்கொண்டால் கேட்க வேண்டுமா? மகன் என்னவோ தான் ஒரு தேவமைந்தன் என்கிற ரேஞ்சுக்கு தான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக்கொள்கிறான். அப்புறம் வெளிஉலகில் போய் அடிபட்டு, மிதிப்படும் போது தான் அவனுக்கு தெரியவே செய்யும், இந்த மிதப்பு எல்லாம் அம்மா ஏற்றிவிட்ட வெறும் மாயை என்று! அதுசரி, அது ஏன் ஆண் குழந்தைகளை மட்டும் அம்மாக்கள் இப்படி விழுந்து விழுந்து மிகையாய் கவனித்துக்கொள்கிறார்கள்? சில வீடுகளில் முப்பது நாற்பது வயதானாலும் மகனுக்கு தாய் தானே உடம்புக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு குளிபாட்டுவதுண்டு, தன் கையாலேயே அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதுண்டு. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆனால் இவ்வளவு மெனகெட்டு இந்த அம்மா இவ்வளவு செய்ய காரணம் என்ன தெரியுமா? மனிதர்கள் குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவற்றின் வாழ்க்கை விதிகள் பலது நமக்கும் அப்படியே பொருந்தும். காட்டில் வாழும் குரங்கு கூட்டங்களில் பெண்களும், குட்டிகளும், டாமினெண்ட் ஆண் குரங்கை, தொட்டு, தடவீ, பேன் பார்த்து, groom செய்துக்கொண்டே இருக்கும். இப்படி குரூம் செய்யும் குரங்குகளை அந்த ஆண் பாதுகாக்கும். ஆக அதிக குரூமிங் = அதிக பாதுகாப்பு. இதே விதியை தான் பெண்கள் தங்கள் இஷ்ட ஆண்களிடம் பயன் படுத்துகிறார்கள். இவள் தன் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள என்னை இப்படி எல்லாம் தாஜா செய்கிறாள் என்று புரிந்துக்கொள்ளும் விவஸ்த்தை எல்லாம் பல ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால், “அய், என்னை என்னமா கவனித்துக்கொள்கிறாள், இவளுக்கு என் மேல் எவ்வளவு ஆசை, இவளுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறோனோ…” என்று குறியே தவறாமல் மிக சரியாக வலையில் விழுந்து விடுகிறார்கள்.

அ 5: பெரும்பாலான தாய்மார்கள் ஆண்களுக்கு சமையல், சலவை, வீட்டு துப்புறவு பணிகள் மாதிரியான வேலைகளை சொல்லி தருவதே இல்லை. கேட்டால், இது எல்லாம் பெண்களின் வேலை என்று சொல்லி விடுவார்கள். பிரசவிப்பது ஒன்றை தவிற பெண்கள் மட்டும் செய்யும் வேலை என்று ஒன்று கிடையவே கிடையாதே. ஆனால் அம்மாக்கள் இப்படி ஒரு அப்பட்டமான பொயை ஏன் சொல்கிறார்கள்? இந்த வேலைகளை எல்லாம் அவனே சுயமாக செய்து பழகிவிட்டால் பிறகு அம்மாவின் தயவு அவனுக்கு தேவை படாதே. அப்புறம் எப்படி இந்த அம்மா, அவன் வாழ்வின் முக்கியமான நபர் என்கிற அதிகார அந்தஸ்த்தை பெற முடியும்?! அதனால், ஆண் குழந்தைகளுக்கு சுயபராமறிப்பு, சம்மந்தமான சூட்சமங்களை சொல்லியே தராமல் அவர்களை நிரந்திரமாக தன்னையே நம்பி வாழ வேண்டியவர் ஆக்கிவிடுகிறார்கள் சில தாய்மார்கள்

அ 6: குழந்தைக்கு என்று ஒரு சுயமான வாழ்வு உண்டு, அதற்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை அனுசரித்து பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் சர்வதேச சிறுவர் உரிமை. ஆனால் சில தாய்மார்கள் குழந்தையின் வாழ்வை அப்படியே அபகரித்து, அக்குழந்தையின் மூலமாய் தாங்கள் வாழ்கிறார்கள். தனக்கு கிடைக்காத, அமையாத விஷயங்களை எல்லாம் குழந்தையை வைத்து சாதித்துவிட முயல்கிறார்கள். “என்னால் தான் முடியலை, நீயாவது செய், அதை பார்த்து நான் பெருமை பட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லியே குழந்தைக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்வே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இதை வேறு எந்த நபரோ, ஏன் அரசாங்கமோ செய்தால் கூட, மனித உரிமை மீறல் என்று உடனே கண்டிக்க நமக்கு தோன்றும், ஆனால் பெற்ற தாய் என்றூ வரும் போது, “அவளுக்கு இல்லாத உரிமையா?” என்றூ விட்டேற்றியாக இருந்துவிடுகிறோம்.

மிக கவனமாக யோசித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும். பெற்று, பாலூட்டி, பாதுகாத்து, கதைகள் சொல்லி, திறமைகளை வளர்த்து, அவனுக்கு என்று ஒரு வாழ்வை அமைத்து கொள்ள வழிகாட்டுவது தான் ஒரு தாயின் கடமை. ஆனால் இந்த ஒவ்வொரு பணியையுமே தனக்கு சாதகமாய் இருக்கும் படியே மாற்றி செய்து, அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்தியே மகனை தனக்கு மட்டுமே விஸ்வாசமாய் இருக்கும் அடிமையாக்கிவிடுகிறார்கள் தாய்மார்கள். இப்படி தாங்கள் அடிமையாக்கபட்டது தெரியாமல், “எங்கம்மா மாதிரி வருமா?” என்று கண்மூடித்தனமாய் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் ஆண்கள்.

1 comment:

Unknown said...

ந்ன்றி