Thursday, July 23, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 20

ஆண்கள் செய்யும் வேலையை வைத்து அவர்களை தரபரிசோதனை செய்து பார்க்கும் சமாசாரத்தை பற்றி போன இதழில் பேசினோம். வெறும் வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் போதாதே. எனக்கு தெரிந்த ஒரு ஆசாமி, வேலையில் ஓர் வடிகட்டிய கரும வீரர், பொழுது விடுவதற்கு முன் வெள்ளென எழுந்துக்கொள்வார். காலைகடன்களை எல்லாம் கடகடவென்று முடித்து விட்டு, காரை எடுத்துக்கொண்டு வேலைக்கு போனார் என்றால், மாலையில் தான் வீட்டிற்கு வருவார்.

அங்கு தான் பிரச்சனையே, வீட்டுக்கு வந்தவுடன் மனிதர் சோபாவில் படுத்தார் என்றால், அப்படியே படுத்த படுக்கையாய் இருந்தபடி லைட்டாய் கொஞ்சம் தொலைகாட்சியை பார்த்து வைப்பார். அதன் பிறகு இரவு உணவிற்கு தான் எழுந்திருப்பாரே. உணவிற்கு பிறகு அப்படியே போய் கட்டிலில் விழுந்தார் என்றால் அப்புறம் அடுத்த நாள் காலையில் வேலைக்கு கிளம்ப தான் எழுந்திருப்பார். இப்படி all work and no play என்று இந்த ஆசாமி இருந்திட, மனைவி பொறுத்து பொறுத்து பார்த்து, “எங்கையாவது வெளிய போகலாம், சும்மா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம், ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது விளையாடலாம்….’ என்று எவ்வளவோ பேசி, கெஞ்சி, மன்றாடி, போராடி, சண்டை எல்லாம் போட்டு பார்த்தார். எதுவுமே சரிபட்டு வரவில்லை. கடைசி வரை தலைவர் வெறும் ஒரு நடமாடும் வேலை செய்யும் யந்திரமாக மட்டுமே இருந்திட, நொந்து போன மனைவி வேறு வழியாக போக ஆரம்பித்துவிட்டார்.

இந்த வம்பும், வலியும் வந்து சேரக்கூடாதென்றால் பெண்கள் எல்லோருமே ஆரம்பத்திலேயே மிக உஷாராய், ”இவன் வேலை வேலை என்று மட்டும் இயங்கும் யந்திரபடிவமா, இல்லை, உபறி நேரத்தை உயிர் துடிப்புடன் உற்சாகமாக செலவிட தெரிந்த ஸ்வாரஸ்ய துணையா?” என்று கண்டுபிடிக்க தெரிந்திருப்பது ரொம்பவே முக்கியம்.

இதை எப்படி கண்டு பிடிப்பது என்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். அந்த ஆசாமி தனக்கு கிடைக்கும் உபறி அவகாசத்தை எல்லாம் எப்படி பயன் படுத்துகிறார் என்று கவனியுங்கள். ஃபிரீ டைம் கிடச்சா போதும், நல்லா குரட்டை விட்டு தூங்கிக்கிட்டே இருப்பேன் என்று எவனாவது சொன்னால், உஷார்! ரொம்ப வேலை பளு, அதனால் ஃப்ரீ டைம் கிடச்சா தூங்குவேன், ஆன, அப்புறம் ஏஞ்சி ஏதாவது பொழுது போக்கில் ஈடுபடுவேன் என்றால் ஓகே. பொழுது போக்கே கிடையாது, வெறும் கும்பகர்ணத்தனம் தான் என்றால், இது பகுதி நேர சோம்போறி, என்றல்லவா அர்த்தம். இவன் இப்படி தேருவான்!

சோம்பேறி எல்லாம் இல்லை, சுருசுருப்பு சிகாமணி தான் என்றால், அப்படி சுருசுருப்பாய் என்ன செய்கிறான் இந்த சிகாமணி என்று பாருங்கள்…. லீவ் நாளிலே, ஷாப்பிங் மாலுக்கு போய், பொண்ணூங்களை எல்லாம் சைட் அடிப்பேன், என்றால், ஊகூம், நாட் ஓக்கே. ஏன் சைட் அடிச்சா அவ்வளவு தப்பா? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம். போகிற வழியில் வேலையோடு வேலையாய் வருகிற போகிற எதிர் பாலினத்தை வேடிகக்கை பார்த்து ரசிக்கும் சைட் அடிச்சிஃபிகேஷன் என்றால் ஓகே, அது இயற்க்கையாகவே அமையும் ஒரு உந்துதல். Basic instinct என்பதனால் அதில் தவறொன்றூம் இல்லை. ஆனால் இதையே ஒரு திருப்பணியாக எடுத்துக்கொண்டு, சோமவாரம் தோரும், பெண்கள் கூட்டம் அதிகம் புலங்கும் பிரகாரங்களாக பார்த்து, நேர்த்திக்கடன் மாதிரி இவன் 108 சுற்று சுற்றுவதையே மிக முக்கியம் என்று கருதுகிறான் என்றால், இவனை எல்லாம் எப்படி விளையாட்டில் சேர்த்துக்கொள்வது?

லீவ் கிடைச்சால் போதும் ஜாலியா உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம் ஆடுவேன், சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம், விடிய விடிய கம்ப்யூட்டரும் கையுமா இருப்பேன் என்று சொல்லுகிற ஆசாமிகளும் சரியான மொக்கை போர் பசங்கள் தான். இவன் பாட்டுக்கு கம்ப்யூட்டரே கதி என்று இருந்து பழகிவிட்டான் என்று வையுங்கள்….அப்புறம் நீங்கள் என்ன தான் பேரழகியாய் பக்கத்தில் இருந்தாலும், “சும்மா இரு, இந்த கேம்மை முடிக்கணும்” என்று தான் அவன் மனம் தடம்புரளும். அப்புறம் சொல்ல வேண்டுமா, அவன் உங்களை விட கம்யூட்டருக்கு அதிக முக்கியத்துவம் தருவது உங்களை எந்த பாடு படுத்தும் என்பதை சொல்லவே வேண்டாமே!

இன்னும் சில வகை ஆண்கள் இருக்கிறார்கள். நேரம் கிடைத்தால், இல்லை கிடைக்காவிட்டாலும் இதற்காக வேலை மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி, அடிக்கடி ஏதாவது பார்னோகிராஃப் எனப்படும் செக்ஸ் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த வகை ஆண்களிடம் என்ன பெரிய பிரச்சனை என்றால், இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் அநேக ஆண்களுக்கு பார்ப்பது மட்டுமே பேரானந்தம் என்பதால் காரியத்தில் சுத்த சைபராக இருப்பார்கள். வேறு சில ஆண்களோ, இப்படி கண்ட குப்பையையும் பார்த்து விட்டு மனைவி/காதலியும் அதே மாதிரி இருக்க, இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பணத்திற்காக பாலியல் காட்சியில் நடிப்பவள் நாடக தோரணையில் செய்வதை எல்லாம், குடும்ப தலைவி செய்வாளா? மாட்டாள் தானே. உடனே, இந்த மக்கு, தன் எதிர்ப்பார்ப்பே அபத்தம் என்று உணராமல், ஏதோ தன் துணைவியிடம் தான் எல்லா தப்புமே என்பது மாதிரி பேசி வைக்கும். அதனால் பார்னோகிராஃபை மட்டுமே தன் ஒரே பொழுது போக்காய் வைத்திருக்கும் இந்த வகை ஆண்கள் ஏறக்கட்டுவது எப்போதுமே பாதுகாப்பு.

மற்ற சில ஆண்கள் இருக்கிறார்கள், சும்மா லைட்டா எப்போதாவது கொஞ்சம் பாப்கார்ன் மாதிரி பார்ன் படங்கள் பார்த்து தங்கள் அறிவை அகலமாக்கி வைத்திருப்பார்கள். மற்றபடி இதே கதி என்று விழுந்து கிடக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட தெளிவான ஆண் என்றால் சரிபட்டு வருவான்.

இன்னும் சில ஆண்கள் ஃபிரீ டைம் கிடைத்தாலே தண்ணீ தொட்டி தேடும் கண்ணுக்குட்டிகளாய் சரக்கு உள்ள இடமாய் பார்த்து போய் சேர்ந்து விடுவார்கள். இப்படி ரெகுலராய், மது அருந்தும் ஆண் என்றால் மிக அதிக பட்ச எச்சரிக்கை உணர்வு தேவை. காரணம் மது போதைக்கு பழகிய ஆண்களை மறுபடியும் நல்வழி படுத்துவது ரொம்பவே கஷ்டம். அதுவும் தவிர இந்த மது பழக்கமே அவர்களுக்கு பலதரப்பட்ட உடல் மற்றூம் மனநல குறைபாடுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் இந்த பழக்கத்திற்கு அடிமையான ஆண்கள் குடும்ப வாழ்விற்கு ரொம்ப ஒன்றும் ஒத்துவர மாட்டார்கள். இப்படி மொடாகுடியன் இல்லை, சும்மா சாஸ்திரத்திற்காக மீட்டிங்கில் லைட்டாய் ஒன்றிரண்டு பெக் மட்டும் தான் என்றால், சரி தான் களவும் கற்று மறக்கவும் தெரிந்த மனிதன் என்று அவனுக்கு ஒரு பெரிய ஓகே போடலாம்.

இந்த மது போதை தவிர, பான் வகையறாக்கள், ரேஸ், ரீட், பெட், என்று இதையே பிரதான பொழுது போக்காய் கொண்ட ஆண்களும் தேரமாட்டார்கள். இதை எல்லாம் விட இன்னொரு பெரிய போதை மதம். இந்த போதைக்கு அடிமையாகி, சதா, கோயில், குலம், விரதம், ஹோமம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்றால் போயே போச்சு. எதற்கெடுத்தாலும், சாமி கண்ணை குத்தும் என்று தானும் பயந்து, நம்மையும் ஜாலியாய் இருக்க விடமாட்டார்கள் இந்த மாதிரி ஆண்கள். இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அளவிற்கு அதிகமான இறைபக்திகூட இல்வாழ்க்கைக்கு ஆபத்து தான் என்பதால் ஃபிரீ டைம் கிடச்சா அம்மாயோட கோயிலுக்கு போவேன் என்கிற இந்த வகை ஆண்கள் தான் இருப்பதிலேயே தேராத கேசுகள். ”சும்மா, பொழுது போக்கிற்காக போனேன், அம்மா கூப்பிட்டாங்களேனு துணையா போனேன், நேர்ந்திருந்தாங்களாம் அதனால் போனேன், கோயிலுக்கு போனா அமைதியா இருக்கும், மனசுக்கு இதமா இருக்கு, ஸ்தல வரலாறு பிடிக்கும் அதனால போனேன் என்று இயல்பான அளவில் ஞாயமான முறையில் பக்தி செலுத்தும் ஆண் என்றால் ஓகே. ஆனால் மதவெறி, கண்மூடித்தனமான பக்தி, மூடநம்பிக்கை என்று தெரிந்து குருட்டுத்தனமாக பின்பற்றும் விஸ்வாசம்…இவை எல்லாம் பின் தங்கிய மனதையே குறிக்கின்றன, இப்படி பின் தங்கிய மனிதனுடன் கூட்டு சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் என்னாவது? அதனால் பக்தி என்கிற இந்த விஷயத்தில் உங்கள் தலைவர் ஆரோகியமான மனநிலையில் இருக்கிறாரா என்று சரிபார்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.
ஆக வெறும் தூக்கம், வெட்டி அரட்டை, ஓவர் சைட் அடிச்சிஃபிகேஷன், டூ மச் கம்ப்யூட்டர், பார்ன், போதை, பக்தி, என்று இருக்கும் ஆண்களை ஓரம் கட்டுங்கள். அப்ப எந்த மாதிரி ஆணுக்கு தான் ஓ கே சொல்வது என்கிறீர்களா?

ஃபிரீ டைம் கிடைத்தால், தன் ரசனையை வளர்த்துக்கொள்ள உருப்படியான புத்தகம், சினிமா, கதை, கவிதை, கலை, உரையாடல், விளையாட்டு என்று பலதரப்பட்ட பொழுதுபோக்குகளினால் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே தன் அறிவை விஸ்தரித்துக்கொள்ளும் ஆண்கள் என்றால் எப்போதுமே ஓகே.

ஒரே இடமாக என்று இல்லாமல், ஊர் சுற்றிபார்க்கிறேன் என்று பையை மாட்டிக்கொண்டு தன் உலகத்தை ஆராய முற்படும் ஆணாய் இருந்தால் டபுள் ஓகே.

தான் ஆராய்ந்து, அனுபவித்து, யோசித்து, தெரிந்துக்கொண்ட விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி, தனக்கென்று ஒரு உறவினர்/நண்பர் வட்டம், அவர்களோடு, பேச்சு, சிரிப்பு, விளையாட்டு என்று பிறருடன் சுமூகமாக பழகும் ஆண்கள் என்றால் வெரி மச் ஓகே.

சுயமுனைப்பினால் தான் தெரிந்துக்கொண்ட விஷயங்களை தனக்கு தெரிந்தவர்களுடன் மட்டும் பகிர்ந்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு தெரிந்த விஷயத்தினால் இந்த உலகிற்கு பிரயோஜனமாய் இருக்க வேண்டும் என்று பிறருக்காக தன் பொழுதை செலவழித்து சின்ன சின்னதாகவாவது சில சமூக மாற்றங்கள் கொண்டு வர முயன்றால் அவன் ரொம்பவே ஒகே.

எந்த சமுதாயமாய் இருந்தாலும், அதில் எவ்வழி ஆடவரோ, அவ்வழி தான் பெண்டிர், எவ்வழி பெண்டிரோ, அவ்வழி தான் அடுத்த தலைமுறையே. அதனால் தான் காலா காலமாக சரியான ஆடவனாக பார்த்து தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கு இருந்து வருகிறது. அதனால் ஸ்நேகிதிகாள், அவன் சரியான துணையா என்று பார்த்து தேர்வு செய்யுங்கள். தேர்வான பிறகு அவனை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பது பற்றி அப்புறம் பார்ப்போம்!

Sunday, July 5, 2009

ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூலில்





இந்த பள்ளிக்கூடத்தின் 75ஆம் ஆண்டு நிறைவாகியுள்ளது, இதனால் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நிற்வாகத்தினர்.
சிஸ்டர் ஜெம்மா ஜான் “பிள்ளை வளர்ப்பு கலை” பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர உபயோகிக்க வேண்டிய யுத்திகளை பற்றி நான் பேசினேன். பள்ளி குழந்தைகளின் கவுனலிங் பற்றி தமிழரசி என்கிற செலேஷியன் சிஸ்டர் பேசினார். இவர் ரோம் நகருக்கு போய் அங்கு குழந்தைகளை பற்றிய சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டு வந்தவர்.