Friday, February 26, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 29

ஒரு ஆணிடம் என்னென்ன கல்யாண குணங்கள் இருந்தால் பெண்ணின் வாழ்க்கை ஷேமமாய் இருக்கும் என்பதை எல்லாம் இத்தனை மாதங்களாக பார்த்துக் கொண்டு இருந்தோம். இப்போது எந்த மாதிரி குணங்கள் இருந்தால் அவனை எமர்ஜென்சியாக கழற்றிவிட்டே ஆக வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்!


1. கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே தன் வகுப்பின் பேரழகியான அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரமே, ‘‘கட்டுனா இவளைக் கட்டணும்டா’’ என்று ஒரு திடமான முடிவுக்கு வந்துவிட்டான் பையன்!

காதல் சொட்டும் பார்வைகள், அவ்வப்போது ஃபோன் கால்கள், வாழ்த்து மடல், வெட்டி அரட்டை, கல்லூரி கேண்டினில் தயிர்வடை என்று மெல்ல மெல்ல அவன் அந்தப் பெண்ணுக்கு ரூட் விட, அவன் இப்படி மெய் வருந்தியதற்கு கூலியும் கிடைத்தது!

இப்படி எல்லாம் இனிமையாய் ஆரம்பித்த அவர்களது காதல் சுபமாகத்தானே முடிந்திருக்க வேண்டும்? அதுதான் இல்லை. காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறந்த சில மாதங்களுக்கு எல்லாம் பையன் சொல்ல ஆரம்பித்தான். ‘‘நான் நேத்து ஃபோன் பண்ணப்போ ஏன் லைன் பிஸியா இருந்தது? இது நான் உனக்கு வாங்கித் தந்த ஃபோன் தானே, என்னைத் தவிர வேற யாருக்கும் இந்த நம்பர் தர கூடாதுன்னு சொன்னேனே, எவனோட பேசிக்கிட்டு இருந்தே?’’

இதைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி ஆனாள். தலைவரின் சினம் தணிந்ததும், ‘‘தங்கையிடம்தான் பேசினேன். கால் ஹிஸ்டரியில் நீயே பார்த்துக்கொள்’’ என்று தன்னிலை விளக்கமெல்லாம் தந்து அவனை தெளிவுபடுத்த, ‘‘இனிமே இப்படி எல்லாம் மடத்தனமா நான் உன்னை சந்தேகமே படமாட்டேன்’’ என்று அவன் உறுதி கூற, ஆஹா என்னருமை காதலன் இவ்வளவு சீக்கிரம் திருந்திவிட்டானே என்று இவள் சந்தோஷப்பட்டாள். அடுத்த நாளே ”புடவை கட்டுனாதான் முன்னாடி, பின்னாடி, சைட்ல, நடுவுலனு எல்லாமே தெரியுதே, மரியாதையா சுடிதார் போட்டா என்ன கேடு?’’

அந்தப் பெண் அன்று முதல் சேலை கட்டுவதை விட்டு விட்டு முழுக்க முழுக்க சுடிதாரிலேயே வலம் வர, ‘‘என்னதுக்கு இவ்வளவு டீப் நெக்? குனிஞ்சு குனிஞ்சு தர்ம தரிசனம் கொடுக்கவா, வெட்கமாயில்லடி உனக்கு?’’ என்று அவன் காறி உமிழ்ந்து திட்ட, அப்போதும் ஆஹா அவனுக்குத் தான் என் மேல் எவ்வளவு அன்பு என்று எல்லா ஏச்சையும் சகித்துக்கொண்டாள் அந்தப் பெண். திருமணமும் ஆனது. அந்தப் பெண்ணின் சித்திபையன், அவளை விட இரண்டு வயதுச் சின்னவன்.... ‘அக்கா’ என்று அவள் தோளை தொட்டபடி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க,அப்போதே சண்டை ஆரம்பித்துவிட்டது, இப்படி ஆரம்பித்த திருமண வாழ்க்கை உருப்படுவதற்கா? மெண்டல் டார்ச்சர் தாங்கவில்லை என்று அந்தப் பெண், விட்டால் போதும் என்று அவனை விட்டே போய் விட்டாள்.


ஆக, சிநேகிதிகளே... போனால் போகிறது காதலினால் தான் இவ்வளவு பொஸசிவ்வாக இருக்கிறான் என்றெல்லாம் நீங்களே ஏதாவது சால்ஜாப்பு சொல்லி ஏமாந்து விடாதீர்கள். சகித்துக்கொள்ளும் அளவிற்கு ‘‘நீ எனக்குத் தான் சொந்தம்’’ என்று உரிமை கொண்டாடினால் ஓகே. ஆனால் அன்பையே ஒரு ஆயுதமாக்கி, அதை வைத்து உங்கள் சுதந்திரம் பறி போகும் அளவிற்குக் கட்டிபோடுகிறானா? உஷார், இந்தப் பையன் தேருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே.


2. அவள் படித்த பெண். அவள் கணவனும் அவளுக்கு நிகராக படித்தவர்தான். படித்தவன் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் பகுத்தறிவு இருக்கும் என்று அவள் நம்பி கழுத்தை நீட்ட, அப்போது தான் அவன் வாழ்வது 2010 அல்ல, 18ஆம் நூற்றாண்டு என்றே புரிந்தது அவளுக்கு. ஆறு மணி ஆச்சுனா, விளக்கு ஏத்தணும்; விளக்கு வெச்சதும் வெளியே போகக் கூடாது. காலங்கார்த்தால எழுந்து வாசல் தெளிக்கணும், மாமியார் எதிரில் உட்காரவே கூடாது. வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்குற பெரியவர்களுக்குச் சமைத்துப் போடுவதையும், அவர்கள் அனத்துவதை கேட்பதையும்தான் திருப்பணியாக ஆற்ற வேண்டும். ஆரம்பத்தில் தன் கணவன் தானே என்று ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்துக்கொண்டே இருந்த பெண்ணுக்கு நாலாபக்கமும் கெடி பிடி அதிகமாகிக்கொண்டே வர, சகிப்புத்தன்மை குறைய ஆரம்பித்தது. ஒரு நாள் விடிய விடிய கணவனின் லீலைகளுக்கு உட்பட்டு, காலையில் தாமதமாக எழுந்தாள். வாசல் பெருக்கி கோலம் போட தாமதமானது. அதனால் என்ன, எந்தக் குடியும் முழுகி விட வில்லையே. ஆனால் அவள் மாமியார் அதற்கு ஒரு கத்து கத்தி கலாட்டா பண்ணினாள் பாருங்கள்...

சரி, மாமியார் தான் மகனின் கைங்கரியம் தெரியாமல் இந்தக் கத்து கத்தினாள் என்றால் பையனாவது ‘இன்னிக்கு ஒரு நாள் விடுங்கம்மா’ என்று மனைவிக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டாமா? அதை விட்டு விட்டு, இவனும் உடன் சேர்ந்துகொண்டு ‘‘குடும்பப் பொண்ணா லட்சணமா, காலங்காத்தால எழுந்து கோலம் போடவேண்டாமா?’’ என்று ஒத்து ஊத, மனைவிக்கு அதற்கு மேல் அவன் முகத்தில் விழிக்கக் கூட மனமே இல்லை. அதன் பிறகு தினம் காலை எழுந்து நாள் தவறாமல் வாசல் தெளித்தாள். ஆனால் எல்லா இரவும் கணவனுக்குத் தண்ணீர் காட்டினாள்....

3. இதை எல்லாம் விட மோசம் குறுகிய மனப்பான்மை வாய்ந்த கேசுகள். கூட வேலை செய்யும் ஆண்களிடம் அலுவலக ரீதியாக பேசினாலும் தப்பு, வீட்டைச் சுற்றி இருப்பவர்களிடம் பேசினால், ‘தெருவுல நின்னு பேச வெட்கமாக இல்லை உனக்கு?’ என்று அதற்கும் ஒரு குட்டு. அவள் சொந்தமாக ஏதாவது முடிவெடுத்தாலே தப்பு-சின்ன சமாசாரமாக இருந்தாலும் அவனிடம் பர்மிஷன் பெற்றே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கும் ஆசாமிகள்.... இப்படி எல்லாவற்றையுமே கடுகு சைஸ் மூளையுடன் பார்க்கும் ஆசாமியாய் அவன் இருந்தால், அன்றாடம் அவனை கன்வின்ஸ் பண்ணி, நாளை நகர்த்துவதே பெரிய கொடுமையாகிவிடுமே!

4. இதை எல்லாமாவது கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சுத்தமாய் வடிகட்டின சுயநலவாதியாய் ஒரு பையன் இருக்கிறான் என்று வையுங்களேன். உதாரணத்திற்கு இந்த ஆசாமி. திருமணமான இரண்டாவது நாளே, அவன் மனைவியிடம் அவன் சொன்னது ‘எனக்கு ஓரல் செக்ஸ் வேண்டும்’. பாவம் அவன் மனைவிக்கு அப்படி என்றால் என்ன என்று கூட தெரியாது. சரி திருமணமான புதிசு, கணவன் கேட்கிறார். அவன் சொல்வதுதான் வேதவாக்கு என்று கணவன் மனசு கோணாமல் அவள் நடக்க, ‘கல்யாணம் ஆகி இத்தனை மாசமாச்சே, ஏதாவது விசேஷமா?’ என்று எல்லோரும் விசாரித்தார்கள். எந்த விசேஷமும் இல்லை என்றதும், ‘செக்ஸ் லைஃபெல்லாம் நல்லா தானே போகுது?’ என்று யாரோ ஒரு உறவுக்கார அக்கா விசாரித்தபோது தான் தெரியவே வந்தது, அந்தப் பையன் அவன் மனைவியுடன் ஒரு தரம்கூட நார்மலான தாம்பத்யம் வைத்துக்கொள்ளவே இல்லை என்று...

5. இதை எல்லாம் விட மோசம்: எதற்கெடுத்தாலும் ‘‘இரு, நான் செத்துப் போயிடுறேன்’’ என்று ஸ்டண்ட் அடிக்கும் ஆசாமிகள். பிரச்னைகள் வந்தால் தன்னையும் தன் மனைவி மக்களையும் காப்பாற்ற வேண்டிய சமூகப் பொறுப்பை வகிக்கும் ஒரு ஆண் இப்படி தொட்டதற்கெல்லாம் ‘செத்துப் போயிடுறேன். பிளேடால கீறிக்கிறேன்’ என்று கோழைத்தனம் காட்ட ஆரம்பித்தால், வாழ்க்கை விளங்குமா?


6. இவை எல்லாவற்றையும்விட படு மோசம், மனைவி/காதலியை அடித்து, துன்புறுத்தி தன் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் ஆண்கள். இன்றைய நிலையில் மனிதன் மிருகத்தை அடித்தாலே அது சட்டப்படி குற்றம். இப்படி இருக்க, உடல் வலிமை அதிகமுள்ள ஆண், ஒரு பெண்ணைப் போட்டு அடிப்பது. இப்படி அடிப்பதையே தன் வழக்கமாக வைத்திருப்பது என்றால், அதுதான் உச்சகட்ட கொடுமை. சில ஆண்கள் நேரடியாக அடிக்காமல், வார்த்தைகளால் அடிப்பார்கள். இந்த ஆணை அவாய்ட் செய்வதே உத்தமம்.

ஒரு பெண் தனக்கென்று மட்டும் ஒரு ஆணைத் தேர்வு செய்வதில்லை. தன் குழந்தைகளுடைய தகப்பனையும் சேர்த்து தானே தேர்வு செய்கிறாள். சந்தேகப்பிராணியோ, ஓவர் பொசஸிவ் ஆசாமியோ, குறுகிய மனப்பான்மை கொண்டவனோ, பழைமைவாதியோ, சுயநல கேஸோ, கோழையோ, முரடனோ உங்கள் குழந்தைக்கு அப்பாவானால் அவர்கள் வாழ்க்கை எவ்வளவு பரிதாபமாக இருக்கும்?

அதனால் சிநேகிதிகளே, விழிப்போடு இருங்கள்.

இனி அடுத்து கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான அம்சம் என்ன என்பதைப் பற்றி அடுத்த சிநேகிதியில்...

Wednesday, February 17, 2010

Friday, February 12, 2010

ஆனந்த விகடனில்....
The original.....

என்னை பற்றி ஸ்பெஷலாய் சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. நான் பிறந்த போது அதிசயங்கள் எதுவும் நிகழவில்லை. எத்தனையோ குழந்தைகள் அதே தேதியில், ஏன் அதே நேரத்தில் கூட பிறந்திருக்கலாம், ஆனால் நான் இப்போது உள்ளபடி ஆவதற்கு முதல் காரணம் என் அப்பா. எங்கே போனாலும் நிறைய புத்தங்களை வாங்கிக்கொண்டு வருவார், அதனால் சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரே புத்தமோகம் தான். அம்மா சொல்லுவார்கள், மற்ற பிள்ளைகளை படி படி என்று மிரட்ட வேண்டி இருக்குமாம், என்னை மட்டும் படித்தது போதும் வந்து சாப்பிடேன் என்று மிரட்டினால் தான் புத்தகத்தையே மூடுவேனாம்.


எங்கள் வீட்டில் எல்லோருமே அறிவியல் ரீதியாகவே யோசிப்பார்கள். உணவு மேசையில் உட்கார்ந்து அறிவியல் பேசிக்கொள்ளும் விசித்திரமான குடும்பம் நாங்கள். அப்பா சொல்வார், வெறும் விந்தணுவிலிருந்து உயிர் வர்றாது, அதே போல வெறும் கருமுட்டையிலிருந்தும் உயிர் வர்றாது. இரண்டும் எந்த மதிப்புமே இல்லாத பூஜியங்கள் தான், ஆனால் இந்த இரண்டு பூஜியங்களும் இணைந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. ஆக ஆரம்பம் என்பது எப்போதுமே பூஜியம் தான், அதற்கு பிறகு கிடைப்பது எல்லாமே ப்ளஸ் தான், என்பார். இந்த அளவுக்கு அறிவியலையும் மெஞ்ஞானத்தையும் கலந்து பேசும் தன்மை கொண்ட அந்த அப்பாவுடன் சின்ன வயதிலிருந்தே நிறைய சையின்ஸ் பேசி பேசி, அறிவியல் ரீதியாக யோசிப்பதென்பதே என் இயல்பாகி விட்டிருந்தது.

அதனால் என் அம்மாவுக்கு என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் எனக்கு மெடிகல் காலேஜை பற்றியும், அங்கே போனால் படிக்க வேண்டிய குண்டு குண்டு புத்தங்களை பற்றியும் ஏற்கனவே தெரியும் என்பதால், அவ்வளவு எல்லாம் மெனக்கெட எனக்கு இஷ்டமே இல்லை. அதுமட்டுமல்ல, பதின் பருவத்தின் உச்சத்தில் எனக்கு புதிதாய் பல சிதறல்கள். நான் படித்ததென்னவோ ஹிந்தியை இரண்டாம் மொழியாய் கொண்ட CBSE பள்ளிக்கூடத்தில், மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள எல்லோரையும் போல நானும் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் இரண்டாம் மொழிக்கு மாறினேன்.

அப்போதெல்லாம் எனக்கு தமிழ் எழுத படிப்பதென்றால் ரொம்ப கஷ்டம், எந்த இடத்தில் எந்த ர, எந்த ல, எந்த ந வரும் என்று தெரியாமல் ரொம்ப திண்டாடுவேன். இந்த லட்சணத்தில் தமிழில் கட்டுரை எல்லாம் வேற எழுத வேண்டும். எங்கள் பள்ளியிலோ ஒவ்வொரு எழுத்து பிழைக்கும் கால் மதிப்பெண் கட் என்கிற விதி இருந்தது. இந்த கெடுபிடியில் நான் தப்பும் தவறுமாய் எழுதிய தமிழ் கட்டுரைக்கு முழு மதிப்பெண் கொடுத்திருந்தார், எங்கள் தமிழ் ஆசிரியை கல்யாணி வரதராஜன். எனக்கு பெரிய அதிர்ச்சி, அதை விட பெரிய அதிர்ச்சி, ஆசிரியை என்னை கூப்பிட்டு, ”அழகா எழுதுற, கவிதை போட்டிக்கு எழுது” என்று சொன்னது. எழுத்து பிழைகளை மீறி, எதிர்பாராமல் கிடைத்த இந்த ஊக்குவிப்பால், நான் தொபக்கடீரென்று தமிழ் மீது காதல் கொண்டேன்…..அப்பா பத்திரமாக சேர்ந்து வைத்திருந்த எட்டு தொகை பத்து பாட்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் என்று எல்லாவற்றையும் சுட்டு சுட்டு படிக்க ஆரம்பித்ததில், தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு உயிரியல் பாடத்திலும் எக்கசெக்க ஆர்வம் இருந்ததால், அதையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து படித்து கிழித்ததில் அதிலும் ஓவராய் மதிப்பெண் வாங்கிவிட, என் அம்மாவுக்கோ என்னை டாக்டராக்கியே தீரவேண்டும் என்கிற கனவு.

கடைசியில் அம்மா என்னோடு ஒரு டீல் பேசினார்கள், ”நீ எனக்காக உன் வாழ் நாளின் ஐந்து வருடங்களை செலவழித்து MBBS படித்தாய் என்றால், அதன் பிறகு நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன், டாக்டருக்கு படித்துவிட்டு நீ வேறு என்ன வேண்டுமானாலும் படி, செய்”, என்றார்கள். பெற்ற தாய்க்காக என் வாழ்நாளின் 5 ஆண்டுகளை தியாகம் செய்து தான் தொலைப்போமே என்று சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியின் வரலாற்றிலேயே கரஸ்பாண்டென்ஸில் MBBS படித்த ஒரே மாணவி நானாகத்தான் இருப்பேன்….அவ்வளவு சொர்ப்ப அட்டெண்டென்ஸ் தான் எனக்கு. தினமும் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே எகிறி குதித்து மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவேன்……வழக்கமாக ஆண்கள் தான் இந்த வானர வேலைகளை செய்வார்கள் என்பதால் ஆசிரியர்கள் எல்லோருமே ஆண் மாணவர்களை தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் ஜன்னல் வழியே குதித்த கண்கொள்ளா காட்சியை காணத்தவறிவிடுவார்கள்! நான் பாட்டிற்கு வீட்டுக்கு ஓடி போய் கதை புத்தகங்களை படித்தும், எழுதியும் கொண்டிருப்பேன். சில சிறுகதைகளும், கவிதைகளும், நாவல்களும் பிரசுரமாகி என்னை எழுத்து மோகத்தில் ஆழ்தியும் விட்டன.

இப்படி எல்லாம் நான் ரொம்ப ஸ்ரத்தையாய் கட் அடித்துக்கொண்டிருந்த போது எங்களுக்கு முதலாம் ஆண்டின் அறிமுக பாடமாய் சைக்கியாட்டிரி பற்றி கிளாஸ் எடுக்க வந்தார் அப்போது எங்களுக்கு உதவி பேராசிரியராய் இருந்த மனநலமருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள். மிக ஸ்வாரசியமாக, தெளிவாக அவர் நடத்திய வகுப்பை ஒரே ஒரு நாள் தப்பித்தவறி கவனித்ததன் விளைவு, சைக்கியாட்ரிஸ்டாகியே தீரவேண்டும் என்று அன்றே முடிவு செய்துவிட்டேன். MBBS படித்து முடித்தால் தான் சைக்கியாட்டரி பக்கமே போக முடியும் என்கிற ஒரே காரணத்திற்காக, 5 வருடம் மாங்கு மாங்கு என்று மருத்துவம் படித்து முடித்து, மறு ஆண்டே மனநலமருத்துவம் படிக்க சேர்ந்துவிட்டேன்.

நான் மனநல மருத்துவம் தான் படிப்பேன் என்று அடம் பிடித்த போது, “பார்த்து, உங்க பொண்ணு மெண்டலாயிட போகுது” என்று பலர் என் அம்மாவை பயமுறுத்தினார்கள், ஆனால் என் அம்மா நாங்கள் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணின டீலை மதித்து ஆட்சேபிக்காமல் இருந்தார்கள், நான் மதுரை மருத்துவ கல்லூரியில் சைக்கியாட்டரி படிக்க சேர்ந்தேன். பாண்ட் சட்டை போட்ட மெட்ராஸ்கார பெண் என்பதாலேயே சில பல சிக்கல்களை நான் சந்திக்க நேர்ந்தாலும், என் பேராசிரியர் திரு கோவர்தனன் அவர்கள் எப்போதுமே எனக்கு பக்க பலமாய் இருந்தார், என்னை ஊக்குவித்து என் அறுவியல் பார்வையை மேலும் கூராக்கினார். எனக்கு கூடுதல் பொறுப்புக்களை கொடுத்து என் திறமைகளை வளர்த்தார். நான் படித்து முடித்து சைக்கியாட்ரிஸ்ட் ஆனேன். உடனே மேற்கொண்டு படிக்க வேண்டும், வெளி நாட்டிற்கெல்லாம் போய் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மற்ற மாணவர்களை போல நானும் யோசிக்க ஆரம்பித்த போது, “இந்தியாவிலேயே இருந்து நோயாளிகளை பார், ஒரு மருத்துவருக்கு புத்தகமே நோயாளிகள் தான்” என்று எனக்கு அறிவுறுத்தினார் மனநல மருத்துவர் முத்தழகன் அவர்கள். அவர் அறிவுரையின் படி நான் படித்து முடித்த அடுத்த மாதமே மைண்ட் ஃபோகஸ் என்கிற மனநல கிளினிக்கை ஆரம்பித்து பிராக்டிஸ் செய்தபடியே பி எச் டி ஆராய்சியையும் துவக்கினேன். இந்த ஆராய்ச்சி என்னை எத்தனையோ வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று, பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து எத்தனையோ பிரயோஜனமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. இதனால் என் பார்வை வட்டம் விரிந்துக்கொண்டே போனது.

ஒரு சராசரி இந்திய பெண்ணை போல நான், என் வீடு, என் குடும்பம், குட்டி என்று சின்ன குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல், உலகத்திற்கு உபயோகமாய் ஏதாவது செய்யும் ஆர்வம் அதிகரிக்க, மனநலசேவை மற்றும் ஆராய்சி அரக்கட்டளை என்கிற ஒன்றை உருவாக்கி பல கிராமங்களுக்கு போய் பொதுமக்களிடம் பணியாற்றிய போது தான் கவனித்தேன்…. இந்த கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடிமக்களிடம் எவ்வளவு அறிவியல் அறியாமை இருந்ததென்று. தன் உடம்பு எப்படி இயங்குகிறது என்று கூட தெரியாமல் ஆண்கள் படும் அவஸ்தையை பார்த்து ஆட்சரியபட்டேன். அப்போது ஒரு பத்திரிக்கையில் பாலியல் பற்றிய ஒரு தொடரை எழுத எனக்கு அழைப்பு வர, ஆரம்பத்தில் நான் தயங்கினேன்…..அப்புறம் என் பாட்டியின் எதற்கும் அஞ்சாதகுணம் எனக்குள்ளும் தலைதூக்க, அறிவியல்ல ஆண் என்ன பெண் என்ன, என்று களமிறங்கினேன். அதுவரை, கொச்சையாகவும் இழிவாகவும் மட்டுமே எழுதப்பட்டுவந்த காமத்தை பற்றி நான் கம்பீரமான அறிவியல் நடையில் எழுதியது பலரது கவனத்தை திருப்ப, மேலும் பல தொடர்களையும், புத்தங்களையும் எழுதும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன.

எனக்கு இயல்பிலேயே வந்த மொழிதிறன், அறிவியல் சிந்தனை, இரண்டையும் குழைத்து வெளிபடுத்துவது எனக்கும் ரொம்ப எளிதாக இருந்ததால், நிறைய எழுதவும் பேசவும் செய்தேன்….அதனால் தமிழ் கூறும் நல்லுலகில் என் பெயர் தலைதூக்க ஆரம்பித்தது. நான் எல்லோருக்கும் பரிச்சையமான நபரானேன்…. என் அம்மா உடனே சொல்லுவார்கள், ”பார் நான் சொன்னபடி நீ டாக்டருக்கு படிச்சதனாலே தானே உனக்கு இவ்வளவு பெருமையும்” என்று……..என்னுடன் நூற்றி எண்பது பேர் டாக்டருக்கு படித்தார்கள் அதே சென்னை மருத்துவ கல்லூரியில். ஆனால் நான் ஒருத்தி மட்டும் தான் தமிழும் படித்தேன். அதுவும் ஜன்னல்வழியே குதித்தோடிப்போய்! That has made all the difference!

Wednesday, February 3, 2010

Tuesday, February 2, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 28

ஒரு ஆணை தேர்ந்தெடுக்க அவன் கல்வி தகுதி மட்டுமே அவ்வளவு ஒன்றும் முக்கியமில்லை, வெறும் ஏட்டு சுரக்காயாய், கார்டூன்பட புலியாய், அட்டைகத்தியாய் எல்லாம் அவன் இருந்துவிடக்கூடாதென்றால், அவன் டிகிரியை விட அதிக முக்கியம், அவனின் அறிவின் நிஜமான வெளிபாடுகளான: (1) சுயசிந்தனை (2) பகுத்தறிவு (3) திறந்தமனப்பான்மை (4) நகைச்சுவை உணர்வு (5) பரந்த மனப்பான்மை என்பது பற்றி எல்லாம் சென்ற ஸ்நேகிதியில் பார்த்தோம். இதை எல்லாம் சரிபார்த்து முடித்தாயிற்றா? வெரி குட், ஆண்களிடம் கட்டாயம் கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம் என்ன தெரியுமா? அவனுடைய சுய மதிப்பீடு, self esteem என்பார்களே அது!


சுய மதிப்பீட்டுக்கும், குடும்ப வாழ்கைக்கும் என்னங்க சம்மந்தம் என்கிறீர்களா? நம் உதாரண புருஷன் நம்பர் ஒண்ணை எடுத்துக்கொள்வோமே. இவன் ரொம்ப படித்தவன், பெரிய வேலையில் இருப்பவன், பெரிய வீடு, பெரிய கார், அழகான மனைவி என்று சகல சம்பத்தும் வாய்த்தவன்…..ஆனால் பார்க்க அவ்வளவு லட்சணமாக இருக்க மாட்டான். “பையன் நல்லா திருஷ்டி பூசனிக்காய் மாதிரி இருக்கான், கவலையே படாதெம்மா, இனிமே உனக்கு கண்ணே படாது,” என்று எல்லோரும் கேலி பேசும் அளவிற்கு தான் இருந்தான். ஆனால் அவன் மனைவிக்கு வெறும் வெளி தோற்றத்தை கண்டு யாரையும் எடை போடுவது பிடிக்காது. உருவு கண்டு எள்ளாத அவள் தன்மையினால், அவன் உடல் தோற்றத்தை அவள் கண்டுக்கொள்ள வில்லை. அதை தாண்டி, அவன் குழந்தைதனமான முகமும், வெகுளித்தனம் சொட்டும் அவன் செய்கைகளும் அவள் தாய்மை உணர்வுகளை பெருதும் தூண்டியதால், அவன் மீது அவளுக்கு அப்படி ஒரு “இது”. “இவன் மூஞ்சுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா, பையன் ரொம்ப கொடுத்து வைத்தவன் தான் போ” என்று தான் எல்லோரும் நினைப்பீர்கள்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அந்த பையனுக்கு தன் மீது பெரிய சுயாபிமானம் இல்லை என்பதால், எப்போதும் அவன் மனதில் ஒரு பெரிய சஞ்சலம், “என் முகத்தை தான் நான் தினமும் கண்ணாடியில் பார்க்கிறேனே. என் அம்மாவே நான் அழகா இல்லைனு அடிக்கடி குத்தி காட்டுறாங்க, அப்பா என்னடான்னா, வெயிட்டை குறைடா, பொண்ணுங்க எல்லாம் உன்னை வேண்டாம்னு சொல்லுறாங்கனு சொல்லி சொல்லி காட்டுறார்….இது வரை எவளும் என்னை திரும்பி பார்த்ததே இல்லை….ஆனா இவ மட்டும்….உண்மையிலேயே இவ என்னை நேசிக்கிறாளா, இல்லை வேற ஏதாவது உட்காரணம் இருக்கா?” என்று சதா மனைவியை சந்தேகப்பட ஆரம்பித்தான். அவனை பொருத்தவரை அவனிடம் இருந்த ஒரே கவர்ச்சி அவனுடைய பணம் தான். அவன் அம்மா வேறு எப்போது பார்த்தாலும், “ஜாக்கிரதைடா, உன் பணத்துக்காக உன்னை மயக்கி ஏமாத்தீட போறா, அவ கிட்ட உஷாரா இரு” என்று சதா ஓதிக்கொண்டே இருக்க, அவ்வளவு தான்! பையன் தன் மனைவியை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக அவள் தன் டைரியில் கிறுக்கிய வரிகளை மட மடவென படித்தான். தன்னை பற்றி குறையாக ஏதாவது எழுதி வைத்திருக்கிறாளா என்று தேடி தேடி பார்த்தான், கடைசியில் பார்த்தால், அவள் ஏதோ பாட புத்தகத்தை படித்துவிட்டு, எடுத்து வைத்த குறிப்புக்களை தான் டைரி முழுக்க கிறுக்கி வைத்து இருந்தாள்….அவளுடைய சொந்த அபிப்ராயங்கள் எதுவுமே அதில் இல்லை. உடனே சமாதானம் அடைந்தான். ஆனால் அடுத்து இன்னொரு சந்தேகம் தலைதூக்கியது. அவள் கைபைகளை சோதனை செய்தான். அதிலும் கள்ளத்தனமாய் எதுவுமே இல்லை, ஒரு தனி கவரில் அவன் புகைபடங்களை தான் வைத்திருந்தாள். அதை பார்த்து லேசாய் நம்பிக்கை தலை தூக்கினாலும் மனம் ஆறவில்லை.

அவள் ஈ மெயிலை “எனக்கு திறந்து காட்டு, எனக்கு தெரியணும் நீ யாருக்கு என்ன எழுதுறனு?” என்று அடம் பிடித்தான். அவள் ஆரம்பத்தில் ஆட்சேபித்தாலும், அவன் இன்செக்யூரிட்டி ஒழிந்தால் சரி, எப்படியும் மடியில் தான் கணம் இல்லையே என்று தன் ஈ மெயிலை திறந்து காண்பிக்க, அதை நோட்டம் விட்டவன், தன்னை பற்றி அவள் எதுவுமே எழுதவில்லை, அவளுக்கு கள்ள காதலர்கள் யாரும் இல்லை, என்பதை கவனித்தான். ஆனாலும் “எனக்கு தெரியாம இன்னொரு ஈ மெயில் வைத்திருக்கியோ என்னவோ…?” என்று அவன் இழுத்த இழுப்பில் அவன் மனைவி மலைத்து போனாள்.

அந்த வீட்டிற்கு தச்சர், மின்சார ஊழியர் என்று யாரவது ஒரு ஆண் வந்தாலே போதும், “நீ வேற வீட்டுல தனியா இருந்திருந்தியே, அவன் என்ன பண்ணான்? நீ என்ன பண்ணே, எவ்வளவு நேரம் இருந்தான்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டு தன் மனதின் விகாரங்களை வெளிபடுத்த ஆரம்பித்தான்.

சரி தான் புருஷணுக்கு ஏதோ தாழ்வு மனப்பான்மை, என்று புரிந்தாலும், தன் அன்பு 100% அக்மார்க சுத்தம் தான் என்பது போக போக அவனுக்கு புரியாமலா போய் விடும் என்று அவன் மனைவி தைரியமாய் இருந்தாள்…. ஆனால் எவ்வளவு தான் தூய்மையான பசும்பாலாய் அன்பை பொழிந்தாலும், அதை ஏந்திக்கொள்ளூம் பாத்திரம் அசுத்தமானதாய் இருந்தால் பால் திரிந்துதானே போகும்! அவன் மனைவி என்ன தான் அன்பு, பாசம், அரவனைப்பு என்று அவனிடம் பழகினாலும், “இது நிஜம் தானா?” என்கிற அவன் சந்தேகம் மட்டும் தீர்ந்தபாடே இல்லை.

ஆக ஸ்நேகிதிகாள், ஒரு ஆண் எவ்வளவு படித்தாலும், பணக்காரனாய் இருந்தாலும், பெரிய பெரிய பதவிகள் வகித்தாலும், அவனுக்கு தன் மீது ஒரு சுய அபிமாணம் இல்லை என்றால் அவனும் நிம்மதியாக இருக்க மாட்டான், அவனை சார்ந்தவர்களையும் நிம்மதியாய் இருக்க விட மாட்டான்.

அதற்காக ஓவர் சுய அபிமாணம் இருக்கிறவனாய் இருந்தாலும் கஷ்டம் தான். உதாரணத்திற்கு இன்னொரு ஆணை எடுத்துக்கொள்வோமே….இவன் ஏழை குடும்பத்தில் பிறந்து, தன் தாயில் கடும் உழைப்பு, சிக்கனம், தியாகம், ஊக்கம், தந்தையின் தந்திரம், ஆள் தொடர்பு, பக்க பலம், ஆகிய அத்தனை அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு ஒரு வழியாய் படித்து முடித்து உருப்படியான வேலைக்கு போய், உயர் பதிவிக்கும் வந்தான். அவன் ஒட்டுமொத்த வம்சாவழியில் இவன் தான் மிக பெரிய சாதனையாளன் என்று பெருமை பட்டு, “என் பையனுக்கு தான் ராஜவடு” என்று இவன் அம்மா எப்போதும் புகழாறம் சூட்டிக்கொண்டே இருக்க, இந்த பெருமை எல்லாம் பையன் தலைக்கே ஏறிவிட்டது. இந்த அண்ட சராசரத்திலேயே தன்னை மாதிரி அறிவாளி, திறமைசாலி, பேரழகன், பராகிரமசாலி, இத்யாதி, இதியாதி வேறு எவனுமே இல்லை என்று தன் மீதே அவனுக்கு அத்தனை காதல். இப்படி அளவிற்கதிகமான இந்த சுய அபிமானத்தை தான் narcissism என்போம்.

இப்படி நார்சிஸிட்டாக இருக்கும் இந்த ஆணை கட்டிக்கொண்டவளின் நிலையே யோசித்து பாருங்களேன்….தான் என்னவோ பெரிய கொம்பன், தன்னை கட்டிக்க இவள் பல யுகங்கள் தவம் இருந்திருக்க வேண்டுமாக்கும் என்கிற இலக்காரம் அவனுக்கு. “என்ன தெரியும் உனக்கு! அறிவுகெட்ட முண்டம், சொல்ற பேச்சை கேட்டுகிட்டு ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டுல இருக்குறதுனா இரு, இல்லன்னா, அதோ தெரியுது பார், அது தான் கதவு, வெளிய போ!” என்று தினமும் அவன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே இருப்பான். அவள் சின்னதாய் ஏதாவது தவறு செய்தாலும், ஏதோ உலகிலேயே மிக சொற்ப அறிவுள்ளவள் என்கிற அளவிற்கு அவளை மட்டம் தட்டி பேசி காயப்படுத்துவான். அவள் எதிரிலேயே மற்ற பெண்களின் அழகை, அறிவை, திறமையை, பிள்ளை வளர்ப்பு சாமர்த்தியத்தை என்று சகலத்தையும் ரசித்து வர்ணிப்பான், “அவளை பார்…என்னம்மா உடம்பை வெச்சிருக்கா, நீயும் இருக்கியே, மாடு மாதிரி சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க தான் லாயக்கி. நீ இப்படியே இருந்தீனா, நான் எவளையாவது சின்ன வீடா செட் அப் பண்ணீக்க வேண்டியது தான் போ”

இவன் இப்படி எல்லாம் சொல்லும் போது அவன் மனைவிக்கு பற்றிக்கொண்டு வரும், “உன் மூஞ்சை ஒரு தடவையாவது கண்ணாடியில பார்த்திருக்கியா? உன் கட்டிக்க மாட்டேன்னு எல்லா பொண்ணுங்களும் சொன்னதுனாலே தானேடா நீ என்னையே பார்க்க வந்தே. என் நிலைமை சரியில்லை, என் தலை எழுத்து, உன்னை கட்டிக்கிட்டேன்… உனக்கு பொண்டாட்டினு ஒருத்தி கிடைச்சதே அதிகம், நீ கெட்ட கேட்டுக்கு ஒரு வெப்பாட்டி வேற கேட்குதா? வாய் கிழிய பேசுகியே, பயந்தாங்கொளி! எந்த பிரச்சனை வந்தாலும் என்கிட்ட தானேடா வந்து அழுவுற…அப்ப மட்டும் நான் வேணுமா?” என்று மனதிற்குள் குமைந்துக்கொள்வாள். அவளுக்கும் ஒரு காலம் வந்தது….அவன் திமிரும் ஆணவமும் அவன் வேலை இடத்தில் அவனுக்கொரு கெட்ட பெயரையும், பிரச்சனைகளையும் சம்பாதித்து தர, அவன் பதிவிக்கு பேராபத்து வந்த போது இவள் மடியில் படுத்து தான் புலம்பிதள்ளினான். அதுவரை, அவளையும் அவள் குடும்பத்தையும், அவள் தாயில் கற்பு நெறியை பற்றியும் அவ்வளவு துச்சமாய் பேசியவன், அதன் பிறகு அந்தர்பல்டி அடித்து, சூப்பர் குட் பாய் ஆனான், என்றாலும் பழைய புத்தி அடிக்கடி திரும்பிவிடும். அவன் நிலைமை கொஞ்சம் முன்னேறினாலும் போதும், “இது தான் கதவு, வெளியே போ, நான் எவளாவது ஒரு வைப்பாடியுடன் டோரோ போரா போகிறேன்” என்பான்.

ஆக சுய அபிமானமே இல்லாதவனாக இருந்தாலும் ஆபத்து, சுய அபிமாணம் ஓவராய் ததும்பி வழிபவனாக இருந்தாலும் அதை விட ஆபத்து…..நியாயமான அளவு சுய அபிமானம் இருப்பவனாய் இருந்தால் தான் எப்போதுமே ஸ்திர நிலையாய் இருப்பான்.

அதெல்லாம் சரி இந்த நியாயமான சுய அபிமாணம் இருக்கும் ஆணை எப்படி கண்டு பிடிப்பதாம்? என்று தானே கேட்கிறீர்கள்! சிம்பிள்! 1) சுய அபிமாணம் இருக்கிறவன், பிறர் தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்கு எல்லாம் ஓவர் முக்கியத்துவம் தரமாட்டான், தன் நம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து இருப்பான். அவன் மீது ஏதேனும் குறைகள் இருந்து அதை யாரும் சுட்டி காடினாலும், அதையும் ஸ்போர்டிவ்வாய் எடுத்துக்கொள்வான். சுய அபிமாணம் இல்லாதவன், மற்றவர் அவனை பற்றி நல்லதாய் சொன்னாலும், “உண்மைய தான் சொல்லுறாங்களா, இல்லை உள்ளூக்குள்ள வேற ஏதாச்சும் நினைக்கிறாங்களா?” என்றூ சதா சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பான். ஓவர் சுயாபிமாணம் இருப்பவனோ, பிறர் தன்னை பாராட்டவில்லை என்றாலும், “ஐ ஆம் தி கிரேட்டஸ்ட்!” என்று தானே நினைத்துக்கொண்டு பீற்ற ஆரம்பித்துவிடுவான்.

2) தன்னை பற்றி ஆரோகியமான சுய மதிப்பீடு வைத்திருப்பவன், தன்னை இன்னும் இன்னும் மேம்படுத்திக்கொள்ள பார்ப்பான். எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல், பழம் பெருமைகள் பேசிக்க்கொண்டே பொழுதை போக்காமல் புதுமைகளையும், புரட்சிகளையும் பரிட்சை செய்து பார்ப்பான். சுய மதிப்பு இல்லாதவன் தன்னை பற்றி பெருமை பட எதுவுமில்லை என்று,” எங்க தாத்தா, எங்க ஊர், எங்க ஜாதி, எங்க மொழி, எங்க தெருகோடி, எங்க வீட்டு சமையல்…” என்று பிறவற்றின் பெருமை நிழலியே இருந்துவிடுவான். ஓவர் சுயாபிமானம் இருப்பனா!, ஊருக்கே தெரிந்திருக்கலாம், அவன் அம்மா ஒரு பணப்பைத்தியம், அப்பா ஒரு ஸ்திரி லோலன், உடன் பிறந்தவன் ஒரு உதவாகரை என்று ஆனால் அவன் “என் பரம்பரை மாதிரி வருமா? என் குடும்பம் தான் இருப்பதிலேயே சூப்பர்!” என்றூ குருட்டுத்தனமாய் எதையாவது நம்பி, பிறரும் அதையே நம்பித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்துவான்.

3) தன் மீது நல்ல மதிப்பு வைத்திருப்பவன் பணிவாய் இருப்பான். பிறரையும் தன்னை போலவே சமமாக மதித்து நடத்துவான். இருப்பவரிடம் ஒரு மாதிரி, இல்லாதவரிடம் வேறு மாதிரி என்கிற பாரபட்சம் இல்லாமல் எல்லோர் இடமும் இன்முகமாய் பழகுவான். அனால் சுய மதிப்பில்லாதவன், பிறர் தன்னை பரிகாசம் செய்வதாய் எப்போதுமே நினைத்து அஞ்சுவதால், ஒதுங்கியே வாழ்வான், யாரிடமும் சகஜமாய் பழகமாட்டான். ஓவர் சுயாபிமானத்தில் மிதப்பனவோ, ”பணிவா, அதெல்லாம் கிலோ எவ்வளவு?” என்று கர்வம் ததும்ப, எப்போதுமே சுய பிரதாபம் பாடிக்கொண்டு, தன்னை சுற்றி ஒரு ஜால்ரா கோஷ்டியை மெயிண்டேன் பண்ணிக்கொண்டே இருப்பான்.

4) இதை எல்லாவற்றையும் விட முக்கியமாய், ஆரோகியமான சுயமரியாதை உள்ளவன் பெண்களை கண்ணியமாக நடத்துவான். பொம்பளை என்றால் மட்டம், என்றெல்லாம் மடத்தனமாய் சொல்லிக்கொண்டு திரியாமல், ”வேற்று பாலினமாய் இருந்தால் என்ன, அவளும் என்னை மாதிரி ஒரு மனிஷிதானே, எனக்கு இருக்கிற அதே உரிமை தானே அவளுக்கும்”, என்று இலகுவாக பழகுவான். அதுவே சுயமரியாதை கோளாறு உள்ளவனாய் இருந்தால், “பொம்பளையா அடக்கமா இரு, இல்லைனா உன்னை தரையோட போட்டு தேய்ச்சு எடுத்துடுவேன்” என்றெல்லாம் பிதற்றுவான்.

ஆக ஸ்நேகிதிகாள்….ஒரு ஆணிடம் பெரிய அழகே அவனுடைய சுயமரியாதை, தன்னை பற்றி அவன் பைத்திருக்கும் அந்த தன் மதிப்பீடு தான். அதில் குறை இருந்தாலும் கஷ்டம், கூடுதலாய் இருந்தாலும் இம்சை என்பதால், அளவான ஆரோகியமான சுய மதிப்பீடு, healthy self esteem இருக்கும் ஆணாய் பார்த்து தேர்ந்தெடுங்கள், உங்கள் வாழ்க்கை எப்போதுமே இனிமையாய் இருக்கும்.
அது சரி எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் நல்லது, எந்தெந்த அம்சங்கள் ஆணுக்கு அழகு என்று இத்தனை வாரங்களாய் பார்த்தோமே. எப்படி பட்ட அம்சங்கள் ஒரு ஆணுக்கு இருக்கவே கூடாது என்றும் தெரிந்துவைத்துக்கொள்வது முக்கியமாயிற்றே….அது பற்றி எல்லாம் அடுத்த ஸ்நேகிதியில்!