Friday, July 23, 2010

உயிர் மொழி: மாமியார்த்தனம்….

தாயா தாரமா என்கிற இந்த குழப்பத்தில் நிறைய ஆண்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யவே பல ஆண்களின் பாதி பிராணன் போய்விடுகிறது. இன்றைக்கு இந்திய திருமணத்தில் ஏற்படும் மிக மோசமான விரிசல்களுக்கு காரணமே இந்த சமண்பாட்டு கோளாறு தான்.


உதாரணத்திற்கு இவரை எடுத்துக்கொள்வோமே, பெயரெல்லாம் சொல்லமுடியாது, தொழில் தர்மம் தடுக்கிறது, கதைக்காக வேண்டுமானால் இவரை பெயரை ரகு என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்கு இவர் அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு தினமும் மனைவியை டார்சரோ டார்சர்…சும்மா அவளையும் அவள் குடும்பத்தையும் குறைசொல்லிக்கொண்டிருப்பது, கிடைத்த சாக்கிற்கெல்லாம் அவளை மட்டம் தட்டி அவமானப்படுத்துவது, உங்க வீட்டில் செய்தது/கொடுத்தது/பேசியது இத்யாதி இத்யாதி சரி இல்லை என்று எல்லாவற்றையும் நொட்டை சொல்லிக்கொண்டிருப்பது. இப்படியே இருந்தால் பாவம் மனைவி தான் என்ன செய்வாள். வேலைக்காவது போய் சற்று நேரம் குடும்ப பிரச்சனைகளை மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்றால் அதற்கும், “படிச்ச திமிர், வேலைக்கு போகிற திமிரு” என்றெல்லாம் சொல்லி, சமையல், குழந்தை பராமறிப்பு மாதிரியான விஷயங்களில் ஆப்படிக்க ஆரம்பித்தார் மாமியார். இதை தட்டிக்கேட்க துப்பில்லாமல், ”பெரியவங்கன்னா அப்படித்தான் பேசுவாங்க, அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு போக தெரியலன்னா நீயெல்லாம் என்ன பொம்பளை,” என்று அதற்கும் மனைவி மேலேயே பழியை போட்டுவிட்டு எஸ்க்கேப் ஆனார் ஹீரோ.

பொருத்து கொள்ள முடியாமல் தனி குடித்தனம் போயிடலாமே என்று மனைவி மன்றாடி கேட்டுக்கொண்டால், “எங்கம்மா கிட்டேர்ந்து என்னை பிரிக்க பார்க்கிறியா?” என்று சண்டைக்கு வந்துவிட்டார் ரகு. சரி இதெல்லாம் இப்படி நடந்துக்கொண்டிருக்கும் போது மாமியார் என்ன செய்தார்? மாமனார் என்ன செய்தார் என்று தானே யோசிக்கிறீர்கள்? மகன் தன்னை விட்டு போய்விடுவான் என்கிற ஆதங்கத்தில் மாமியார் எல்லோருக்கும் ”நான் செத்துபோறேன்” என்று அறிவித்துவிட்டு, தடபுடலாக அதிகமாத்திரைகள் சாப்பிட்டு விட, மாமனார் அவசரமாக அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து ரகசியமாய் என்னை வந்து பார்த்து, சொன்னதாவது: ”என் மருமகள் பாவம் படாத பாடு படுகிறாள். ஒரு பெண்னை இன்னொரு பெண்ணே இப்படி துன்புறுத்துவதை என்னால் சகிக்கவே முடியவில்லை. என் மனைவியை எந்த காலத்திலும் என்னால் அடக்க முடிந்ததே கிடையாது, அழுகை, நச்சு, உண்ணாவிரதம், ”இந்த குடும்பத்திற்காக நான் எவ்வளவோ செய்தேனே, என்னை இப்படி படுத்துறீங்களே” என்கிற ஒப்பாறி, ”வீட்டை விட்டு போறேன்”, ”எல்லோருக்கும் சொல்லி நியாயம் கேட்குறேன்”, எதுவுமே பலிக்காவிட்டால் ”செத்து போறேன்” என்று பன்முனை தாக்குதலாக இமோஷனல் பிளாக்மெயில் செய்ய, நான் சூழ்நிலை கைதியாக ஏதும் செய்ய முடியாமல் மாட்டிக்கொள்கிறேன். இந்த லட்சணத்தில் இந்த தற்கொலை டிராமா வேறு. அவள் போட்டுக்கொண்டது வெறும் பத்து ஆண்டாசிட் மாத்திரை தான், அதில் எல்லாம் சாக மாட்டாள் என்று எனக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும். ஆனாலும் நான் அவளை இங்கே அட்மிட் செய்தது, கொஞ்ச நாளாவது நாங்கள் நிம்மிதியாக இருக்கலாம், அதுவும் இல்லாமல் நீங்கள் எப்படியாவது என் மனைவியை திருத்திவிடுவீர்கள் என்று தான்”

மாமியார்களை திருத்துவதென்னவோ ரொம்ப சுலபம் மாதிரி அவர் சொல்லிவிட்டு போனார். முழுக்க முழுக்க மனநலம் குன்றிய மனிதர்களை கூட சீக்கிரமே சரி செய்து ஓரளவு அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற முடியும், ஆனால் மோசமான மாமியாருக்கு மனமாற்றம் செய்வதென்பது அதை விட கடினமான வேலையாற்றே, இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன் என்று பெருந்தலைவியை பார்க்க போனேன்.

பால் வடியும் முகமும், என்னை போல பாவமான பெண் உலகிலேயே இல்லை என்பது மாதிரி ஒரு பாவ்லாவுமாக படுத்திருந்தார் மாமியார் அவர்கள். தன் மகனை பெற்று வளர்க்க அவர் பட்ட பாடுகளை அடுக்கி, இப்படியெல்லாம் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கிய தன் மகனை ”அந்த மூதேவி தலையனை மந்திரம் ஓதி கைக்குள் போட்டுக்கொண்ட” கதையை மாம்ஸ் நீட்டி முழக்கி, “அவனுக்கு ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா டாக்டர், ஆனா இன்னொரு அம்மா கிடைபாளா?” என்று பஞ்ச் டைலாக் எல்லாம் அடித்து அசத்த, நான் இப்படி எல்லாம் பாடு பட்டு உங்கள் மகனை வளர்த்து ஆளாக்கியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது போங்கள் என்றதும் மாமியார் யோசிக்க ஆரம்பித்தார்.

புழு, பூச்சில் ஆரம்பித்து, சிங்கம், புலி, கரடி, மனிதன் வரை எல்லா ஜீவராசியிலுமே தாய் என்பது குட்டிகளுக்காக ரொம்பவே மெனக்கெடத்தான் செய்கிறது. எந்த குட்டியும் என்னை பெற்றுக்கொள், எனக்காக சிரம்படு என்று தாயிடம் வேண்டிக்கொண்டு பிறப்பதில்லை. தாய் தான் வேண்டுமென்றே குட்டிகளை பெறுகிறது. இப்படி எல்லாம் தன் உடலை வருத்தி தாய் ஏன் குட்டிகள் போடவேண்டும்? காரணம் இது மட்டும் தான் அவள் மரபணுக்களை பரப்பிக்கொள்ள இருக்கும் ஒரே வழி. ஆக, தன் மரபணுக்கள் பரவவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, முழுக்க முழுக்க சுயநலமாக தாய் செய்யும் காரியம் தான் இனவிருத்தி.

இந்த இனவிருத்தியை மனித தாய் மட்டும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் செய்யும் அநிச்சை செயல் இது. மனிஷிக்காவது பிரசவிக்க, டாக்டர், பயிற்றுவிக்க வாத்தியார், கட்டுபடுத்த சட்டம், என்று எத்தனையோ ஊன்று கோல்கள் உள்ளன. ஆனால் பிறஜீவராசி தாய்மார்கள் இந்த எல்லா வேலையையும் தானே செய்கின்றன. ஆக தாய்மை சுமை என்று பார்த்தால் மனித தாயை விட, பிறஜீவராசி தாய்களுக்கு தான் அதிக பளு. இத்தனை செய்தும் இந்த பிற ஜீவராசிகள் தாய்கள் தன் கஷ்டத்தை சொல்லிக்காட்டி அதற்கு பிரதிஉபகாரம் எதிர்ப்பார்ப்பதில்லை. பிற ஜீவராசி குட்டீசும், இதை ஓவர் செண்டிமெண்டலாக எல்லாம் அனுகுவதில்லை, பிறந்தோமா, வளர்ந்தோமா, இனபெருக்கம் செய்தோமா, அடுத்த தலைமுறை எனும் தொடர் சிங்கிலியை உருவாக்கினோமா என்று மிக கேஷுவலாக வாழ்கின்றன. காரணம் இயற்க்கையை பொருத்த வரை, குட்டி வெற்றிகரமாய் இனபெருக்கம் செய்து தன் முந்தைய தலைமுறையிடமிருந்து பெற்ற மரபணுக்களை, சேதாரமின்றி, அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு அறுபடாத சங்கிலி தொடராய் பரப்புவதே குட்டி தாய்க்கு ஆற்றும் உதவியும் நன்றியும் ஆகும். இதை மீறி குழந்தை தாய்க்கு வேறு எதுவும் செய்ய வேண்டிய கடமை இருப்பதில்லை. சமூக கூட்டமாய் வாழும் யானை, டால்ஃபின், குரங்கு மாதிரியான ஜீவராசிகளில் முதுமையில் குட்டிகள் பெருசுகளை பராமறிக்கும், ஆனால் அதில் பாசம் இருக்குமே தவிற, கண்மூடித்தனமான அம்மா செண்டிமெண்ட் இருக்காது.

மற்ற ஜீவராசியில் எந்த தாயும், “நான் உன்னை பெற்றேனே, வளர்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?” என்றெல்லாம் பேரம் பேசி தாய் பாசத்தை பண்டமாற்றமாக்கி கொச்சை படுத்துவதில்லை. ஆனால் மனித தாய் மட்டும் கொஞ்சமும் சங்கோஜப்படாமல், மிக வெளிபடையாக தன் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறாள். சில சமயத்தில், தன் குட்டியின் இனபெருக்கமே தடைபடும் அளவுற்கு! மற்ற ஜீவராசி எதுலுமே இல்லாத இந்த விசித்திரம் மனித தாய்களில் மட்டும், அதிலும் சிலபேருக்கு மட்டும் நிகழ்வது ஏன் என்று யோசிக்கிறீர்காளா? இதற்கு விவகாரமான சில காரணங்கள் உள்ளன, அது பற்றி எல்லாம் அடுத்த இதழில்……………..

Wednesday, July 14, 2010

உயிர்மொழி: புது மாப்பிள்ளைக்கு….

அவளூடைய முன்னால் கணவனுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவள் திருமணம் என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதை நம்மூர் நீதி மன்றம் ஒரு செல்லா திருமணம் என்று தள்ளுபடி செய்துவிட்டது. செல்லா திருமணமா? ஏன்? என்றால், மேட்டர் இது தான், அவர்களுக்குள் முக்கியமான மேட்டரே நடக்கவில்லை. பிகாஸ் மாப்பிள்ளை சாருக்கு சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யவில்லை. சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யாதவனுக்கு இன்னொரு கல்யாணமா? என்று வியப்பாக இருக்கிறதா? அதை விட அந்த முன்னால் மனைவி சொன்னது இன்னும் வியப்பாக இருக்கும்: என்னை படுத்துன பாடு போதும், அவனால் இன்னொரு பெண்ணும் பாதிக்கபடக்கூடாதில்லை, அதனால் ஆம்பிளைனா எப்படி இருக்கணும், கல்யாணம்னா என்ன, பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும், செக்ஸ்னா என்னனு எல்லாம் அவனுக்கு புரியுறா மாதிரி நீங்க தான் சொல்லித்தரணும்….

அது சரி, இது மாதிரியான விசித்திரங்கள் சைக்கியாட்டியில் சகஜமாயிற்றே. இந்த பெண் தன் முன்னால் கணவனுக்காக வைத்த இதே கோறிக்கையை இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் நிகழ்கால கணவனுக்காக கேட்டுக்கொள்வது உண்டு…..கல்யாணம்னா என்னனே தெரியாம கட்டிக்கிட்டு, இப்ப போட்டு என் தாலிய அறுக்குறார். எப்படியாவது அவருக்கு புரியுறா மாதிரி சொல்லி கொடுத்து என் வாழ்க்கைய காப்பத்துங்க என்று புலம்பும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.

அதெப்படி கல்யாணம் என்றால் என்ன என்று கூட தெரியாத பையன்கள் இருப்பார்களா? அதுவும் ’உயிர் தவசிறுது, காமமோ பெரிதே” என்று அந்த காலத்து பெண் புலவர்கள் பாடி வைத்த இந்த தமிழ் திருநாட்டில்! என்று நீங்கள் ஆட்சரியப் பட்டால், கசப்பான உண்மை இது தான்: இன்றூம் நிறைய ஆண்களுக்கு திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்த பிறகு, “அம்மா அப்பா, ஆசை படுறாங்க, எல்லாரும் செய்துக்குறாங்க நானும் செய்யலன்னா, அசிங்கமா போயிடும்” என்பதற்காக நடக்கும் ஒரு சடங்கு மட்டுமே. பெண்களையாவது சின்ன வயதிலிருந்தே, “இன்னொருத்தன் வீட்டுக்கு போக போறவ” என்று சொல்லி சொல்லியே ஏதோ ஒரு அளவிற்கு அவர்களை தயார் செய்து வைக்கிறார்கள் வீட்டு பெரியவர்கள். ஆனால் ஆண்களை இப்படி தயார் செய்வதில்லை, அதனால் தான் திருமணம் என்கிற இந்த அமைப்பில் ஆண்கள் ரொம்பவே திக்குமுக்காடி போகிறார்கள். அவர்களின் அறியாமை பெண்களையும் பாடுபடுத்தி விடுகிறது.

திருமணத்தின் முதல் நிலை: துணை தேர்வில் இருந்தே ஆரம்பிப்போமே. அந்த வாலிபன் மெத்த படித்து வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். முப்பது வயது நெருங்குகிறதே, கூட இருக்கும் பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே, எத்தனை நாள் தான் படம் பார்த்து படுக்கையில் புரண்டுக்கொண்டிருப்பதாம், என்றெல்லாம் பல வாராக யோசித்து, “பொண்ணு பாருங்க” என்று ஜாடை மாடையாகவும், அது பலிக்காத போது நேரடியாகவும் சொல்லி விட்டான் பையன். ஜாதகம் பார்த்து, நிறம், வசதி, வருமாணம், அந்தஸ்து பார்த்து, இதனால் பல நூற்றுக்கணக்கான பெண்களை கழித்து கட்டி, இறுதியில் மூன்றே பெண்களின் வரலாற்று குறிப்பை கொடுத்தார் அம்மா. அதில் ஒரு பெண்ணை காட்டி, “இந்த பொண்ணை தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அம்மா சொல்லிவிட, பையனும் சுறுசுறுப்பாக அம்மா சிபாரிசு செய்த பெண்ணை முதலில் போய் பார்த்தான். ஆனால் அந்த பெண் அவனுடைய உலகமயமான சிந்தனைக்கு ஒத்துவரவில்லை. லிஸ்டில் அடுத்த பெண்ணை பார்த்தான், அவளை என்னவோ அவனுக்கு பிடித்து போனது…..அம்மாவிடம் சொன்னால் முகம் சுளித்தாள். இப்போது பையனுக்கு ஒரே குழப்பம், தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா, அல்லது அம்மாவுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா? தனக்கு பிடித்த பெண் என்றால் அது அம்மாவுக்கு செய்யும் துரோகம் ஆகாதா? அம்மாவுக்கு பிடித்த பெண் என்றால் குறைந்த பட்சம் அம்மாவாவது திருப்தி அடைவார்கள், அம்மாவுக்காக தியாகம் செய்துவிட்டால் தான் என்ன, என்பது பையனின் பெருங்குழப்பம்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அம்மாவுக்கு தெரியாதா? பெரியவங்க பார்த்து பண்ணி வெச்சா தப்பா போகாது, அதனால அம்மா சொல்லுகிற பெண்ணை மனமாற ஏத்துகிட்டா, போக போக தானா ஆசை வந்திரும் என்கிற கட்சியா நீங்கள். கல்யாணம் யாருக்கு, உனக்கு தானே? நீ தானே வாழப்போறே, உனக்கு பிடிச்ச பொண்ணா பாருப்பா, என்கிற கட்சியா நீங்கள்?

உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறதென்று பார்போமே:

1. திருமணம் சொர்கத்தில் நிச்சையமானது என்கிற பேத்தல்களை எல்லாம் மீறி, திருமணம் என்பது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம், இரண்டு பாலினரின் மரபணுக்கள் கலந்து ஆரோகியமான அடுத்த தலைமுறை உருவாகிட சமூதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அதனால் தான் திருமணம் என்றாலே, “சாந்தி முகூர்த்தம்” என்கிற சடங்கை முதலில் செய்கிறார்கள்.

2. இப்படி ஒரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்றால் அவர்களுக்குள் செக்ஷுவல் கெமிஸ்டிரி சரியாக ஒருங்கிணைய வேண்டும். இந்த கலவியல் கவர்ச்சி என்பது அவரவர் சொந்த விஷயம், இதில் பெற்றவர்கள் கூட கருத்து சொல்லிவிட முடியாது.

3. அம்மா அப்பாவை திருப்தி படுத்த, அவர்களை பார்த்துக்கொள்ள, என்ற காரணங்களுக்காக எல்லாம் ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்வதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தமாகிறது. மனித விதிகளின் படி, ”அடடா, என்ன ஒரு அம்மா செண்டிமெண்ட், என்ன ஒரு குடும்ப அக்கறை” என்றெல்லாம் நாம் பாராட்டினாலும், இயற்க்கையை பொருத்தவரை, “உன் மரபணுக்களை எதிர்காலத்திற்கு பரப்பிக்கொள் என்றால், உன்னை பெற்றவர்களின் கடந்த கால மரபணுக்களை பராமறிக்க நேரத்தை வீண்டிக்கிறாயே.” ரிவர்ஸ் கியரில் மரபணு பயணம் செய்தால், சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்கிற இந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டதாய் தானே அர்த்தம்.

அதற்காக, அம்மா அப்பாவை அப்படியே விட்டுவிடுவதா, நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கியவர்களை இப்படி உதாசீனப்படுத்துவது அநியாயமாகாதா? அதுவும் சரி தான், இந்த ஈக்குவேஷனை எப்படி சமன் படுத்துவது என்பதை பற்றி எல்லாம் அடுத்த இதழில்

உயிர் மொழி

ஈரக்கூந்தலுடன் வந்து வாசலில் கோலம் போட்டு, கணவனுக்கு ஆவி பறக்கும் காபி கொடுத்து, துளசி மாடத்தை சுற்றிவந்து, கலாச்சார பாரம்பரியங்களை அடி பிரளாமல் கடைபிடிக்கும், “பொண்ணுனா இப்படி இருக்கணும்!” என்று பெயர் வாங்கும் பெண் அவள். அத்தனை அழகு, அடக்கம், ஒடுக்கம். தன் வீடு உண்டு வேலை உண்டு என்று இருப்பாள். அதிர்ந்துக்கூட பேச மாட்டாள். திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இரண்டு மணியான குழந்தைகள். யாரும் பார்த்தால் பொறாமை படக்கூடிய வாழ்க்கை தான். ஆனால் யாருக்கும் தெரியாத ரகசியம் என்னவென்றால் அந்த குடும்ப தலைவி, கணவன் வேலைக்கு போன அடுத்த நிமிடம் தன் செல்ஃபோனில் இன்னொரு காதலுடன் மணிக்கணக்கில் பேசி, சிரித்துக்கொண்டு இருந்தாள். அவனிடம் ஒரு நாள் பேசவில்லை, இல்லை, பேச கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் போதும் அவளால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. உடனே இருப்புக்கொள்ளாமல் தவிப்பதென்ன, பட படவென வருவதென்ன, பார்ப்பவர் மேலெல்லாம் எரிச்சலுற்று கோபப்படுவதென்ன. இந்த புதியவனுடன் பேச ஆரம்பித்ததிலிருந்து இவளுக்கு தன் கணவனுடைய நெருக்கமே பிடிப்பதில்லை…. தன் கணவனை விட்டு விட்டு இன்னொரு ஆளோடு இப்படி கொஞ்சிக்கொண்டிப்பது தவறு என்று அவளுக்கு குற்ற உணர்ச்சி குத்தாமல் இல்லை…..இருந்தாலும் இந்த வழக்கத்தை அவளால் விட முடியவில்லை. அதனால் மிக மிக ரகசியமாய் இவளது தொலைப்பேசிக்காதல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.


அதெப்படி, இந்த தமிழ் திருநாட்டில் ஒரு பெண் இப்படி கற்புக்கெட்டு நடக்கலாமா? இது பத்தினிதர்மத்துக்கு புறம்பானது அல்லவா? கட்டின கணவனை விட்டுவிட்டு ஒருத்தி இப்படி எல்லாம் கண்டவனோடு கடலை போட்டுக்கொண்டிருக்கலாமோ? என்று நாம் என்னதான் வியாக்கியானம் பேசினாலும், இது போன்ற நடப்புக்களை தடுக்க முடிவதில்லை. காரணம் மனிதன் நியமித்த விதிகள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாம் வல்ல இயற்கை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள வேறு சில விதிகளும் இருக்கின்றன. இந்த விதிகள் ரொம்பவே வலிமையானவை என்பதால், இவற்றுக்கு நாம் உட்பட்டுவிடுகிறோம். விரும்பியோ, விரும்பாமலோ.

இதற்கு நேர்மாறாகவும் நடப்பது உண்டு. அவன் அந்த பெண்ணை உயிருக்கு உயிராய் நேசித்தான், அவள் வேண்டாம் வேண்டாம் என்று பல தடைகளை முன் நிறுத்திய போதும், அவளை கன்வின்ஸ் பண்ணி மசிய வைத்தான். வேறு வேறூ ஜாதிகள் என்பதால் வழக்கம் போல பெருசுகள் பெரிதாய் மறுத்தார்கள். குடும்ப மானம், குல கௌரவம், லொட்டு லொசுக்கு என்றெல்லாம் அவர்கள் மொக்கை போட்டுக்கொண்டிருக்க, சத்தம் போடாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டு, பெற்றோருக்கு செக் வைத்தார்கள் காதலர்கள். வேறு வழி இல்லாமல் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள் இருவீட்டாரும். ஆனால் பையனின் அம்மா, “இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன்” என்று ஒரு தற்கொலை நாடகம் நடத்த, அன்றோடு தீர்ந்து போனது பையனின் ஆண்மை எல்லாம். அதற்கு பிறகு அவன் மனைவியுடன் அவனால் ஆசையாக இருக்கவே முடியவில்லை. காதலர்களாய் இருந்த போது, இவன் அவளை ஆசையாய் தொட்ட போதெல்லாம் அவள், “கல்யாணத்துக்கு அப்புறம்…” என்றூ காக்க வைத்த காலம் போய், இப்போது, இவள் அவன் எப்போதடா கிட்டே வருவான் என்று ஏங்கிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் வந்ததும், “எங்கம்மாவை நீ மதிக்கிறதே இல்லை,” என்று ஆரம்பித்தான் என்றால் ராத்திரி முழுக்க ஒரே ரம்பம் தான். அழகான பெண்டாட்டி ஆவலாய் பக்கத்தில் இருக்கும் போது அந்த நேரம் பார்த்து, அம்மாவை மதிக்கவில்லை என்று கவலை படுபவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா? வாழ்க்கைய என்ஜாய் பண்ண தெரியாத முட்டாளா இருக்கானே, இவன் மூஞ்சுக்கெல்லாம் ஒரு கல்யாணமா? என்று நீங்கள் கூட அவனை நிந்திக்கலாம். ஆனால் கசப்பான உண்மை என்ன தெரியுமா? இந்த ஓவர் அம்மா சொண்டிமெண்டினாலேயே ஆண்மையை இழந்து வாழ்க்கையில் தோற்றுப்போன ஆண்கள் ஏராளம். தன்னால் இப்படி மகன் ஊனமானி போனான் என்று தெரிந்தும், பையனை தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தாய்குலங்கள் அதை விட ஏராளம். இப்படி கூட இருப்பார்களா?. இது இயற்கைக்கே புரம்பானதாயிற்றே. ஈ, கொசு, கரப்பான்பூச்சி கூட, யாரும் சொல்லித்தரமால் சமர்த்தாய் இனம் சேர்ந்து அடுத்த தலைமுறையை பெற்று பல்கி பெருகிக்கொள்கின்றனவே. இத்தனை அறிவும், ஆற்றலும் இருக்கும் மனிதன், இந்த பேசிக் மேட்டரில் கோட்டை விடுவானா? என்று நீங்கள் யோசித்தால், விந்தையான உண்மை என்ன தெரியுமா? இயற்கையின் விதிகளை மீறி, ஈ கொசு மாதிரியான ஜீவராசிகளுக்கு இயல்பாய் ஏற்படும் இச்சைகளை மீறி, மனிதர்களுக்கு என்று மட்டும் சில பிரத்தியேக விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு வாழ முயலும் மனிதர்களும் பலர் இருக்கிறார்கள்.

ஆக, எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாய் இருக்கும் சில universal விதிகள், மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும் சில தனி விதிகள் என்று இரண்டு நிலைகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த இரண்டு செட் விதிகளும் ஒத்துப்போகும் போதும் பிரச்சனைகள் இருப்பதில்லை, ஆனால் இவை முரண்படும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை! இவை ஏன் முரன்படுகின்றன? இதனால் தானே இவ்வளவு துன்பங்களும், குழப்பங்களும். யோசித்துபாருங்களேன்….ஆதிமனிதர்களுக்கு அதிசயமாய் இருந்ததெல்லாம் நமக்கு இன்று அற்ப சமாசாரமாகிவிட்டன. அவர்களுக்கு அற்ப மேட்டராய் இருந்ததெல்லாம் இன்று நமக்கு அசிங்கமாகிவிட்டன. ஆதிமனிதன் காலத்தில் இத்தனை வசதிகள் கிடையாது, உயிருக்கு எந்நேரமும் ஆபத்து, சாப்பாட்டிற்கு உத்திரவாதமே இல்லை, தனி மனிதனின் வாழ்விற்கு பெரிய மகிமை இருந்திருக்காது. ஆனால் இன்றூ, ஆதிமனிதன் நம்மை பார்த்தால், ஏதோ இறை அவதாரம் என்றல்லவா நினைப்பான்? நினைத்தால் பிடித்தவரின் முகத்தையும், குரலையும் செல்ஃபோனில் இருந்தே எடுத்து காட்டிவிடுவோம்! இதெல்லாம் ஆதிமனிதனுக்கு மாயாஜாலமாயிற்றே…..ஆனால் இத்தனை இருந்தும் என்ன, இன்னும் மனிதர்கள் சந்தோஷமாய் இல்லையே!

இத்தனைக்கும் இன்றைய மனிதர்களுக்கு சாப்பாட்டு பிரச்சனை இல்லை, வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, ஏன் உடல் கோளாறு கூட இல்லை….ஆனால் மனிதர்கள் இன்னமும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணமே உறவுகளில் ஏற்படும் விரிச்சல்கள் தான். எல்லா உறவுகளுமே இப்போது மெயிண்டேன் செய்வதற்கு கடினாகிக்கொண்டே போனாலும், இந்த ஆண் பெண் உறவு இருக்கிறதே, இது படுத்தும் பாடு ரொம்பவே அதிகம். அது ஏன் அப்படி? அதிலும் குறிப்பாக ஆண் பெண் அகஉறவுகளில், ஏன் இவ்வளவு பெரிய விரிசல்கள்? , உங்கள் மனதை ரொம்ப நாளாய் அறித்த அதே கேள்விகள் தான்…..ஆனால் அதற்கு நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத, திடுக்கிடும் பதில்கள். அடுத்த வாரத்தில் இருந்து……தவறாமல் படியுங்கள், திகைத்து போவீர்கள்!