Wednesday, July 14, 2010

உயிர் மொழி

ஈரக்கூந்தலுடன் வந்து வாசலில் கோலம் போட்டு, கணவனுக்கு ஆவி பறக்கும் காபி கொடுத்து, துளசி மாடத்தை சுற்றிவந்து, கலாச்சார பாரம்பரியங்களை அடி பிரளாமல் கடைபிடிக்கும், “பொண்ணுனா இப்படி இருக்கணும்!” என்று பெயர் வாங்கும் பெண் அவள். அத்தனை அழகு, அடக்கம், ஒடுக்கம். தன் வீடு உண்டு வேலை உண்டு என்று இருப்பாள். அதிர்ந்துக்கூட பேச மாட்டாள். திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இரண்டு மணியான குழந்தைகள். யாரும் பார்த்தால் பொறாமை படக்கூடிய வாழ்க்கை தான். ஆனால் யாருக்கும் தெரியாத ரகசியம் என்னவென்றால் அந்த குடும்ப தலைவி, கணவன் வேலைக்கு போன அடுத்த நிமிடம் தன் செல்ஃபோனில் இன்னொரு காதலுடன் மணிக்கணக்கில் பேசி, சிரித்துக்கொண்டு இருந்தாள். அவனிடம் ஒரு நாள் பேசவில்லை, இல்லை, பேச கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் போதும் அவளால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. உடனே இருப்புக்கொள்ளாமல் தவிப்பதென்ன, பட படவென வருவதென்ன, பார்ப்பவர் மேலெல்லாம் எரிச்சலுற்று கோபப்படுவதென்ன. இந்த புதியவனுடன் பேச ஆரம்பித்ததிலிருந்து இவளுக்கு தன் கணவனுடைய நெருக்கமே பிடிப்பதில்லை…. தன் கணவனை விட்டு விட்டு இன்னொரு ஆளோடு இப்படி கொஞ்சிக்கொண்டிப்பது தவறு என்று அவளுக்கு குற்ற உணர்ச்சி குத்தாமல் இல்லை…..இருந்தாலும் இந்த வழக்கத்தை அவளால் விட முடியவில்லை. அதனால் மிக மிக ரகசியமாய் இவளது தொலைப்பேசிக்காதல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.


அதெப்படி, இந்த தமிழ் திருநாட்டில் ஒரு பெண் இப்படி கற்புக்கெட்டு நடக்கலாமா? இது பத்தினிதர்மத்துக்கு புறம்பானது அல்லவா? கட்டின கணவனை விட்டுவிட்டு ஒருத்தி இப்படி எல்லாம் கண்டவனோடு கடலை போட்டுக்கொண்டிருக்கலாமோ? என்று நாம் என்னதான் வியாக்கியானம் பேசினாலும், இது போன்ற நடப்புக்களை தடுக்க முடிவதில்லை. காரணம் மனிதன் நியமித்த விதிகள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாம் வல்ல இயற்கை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள வேறு சில விதிகளும் இருக்கின்றன. இந்த விதிகள் ரொம்பவே வலிமையானவை என்பதால், இவற்றுக்கு நாம் உட்பட்டுவிடுகிறோம். விரும்பியோ, விரும்பாமலோ.

இதற்கு நேர்மாறாகவும் நடப்பது உண்டு. அவன் அந்த பெண்ணை உயிருக்கு உயிராய் நேசித்தான், அவள் வேண்டாம் வேண்டாம் என்று பல தடைகளை முன் நிறுத்திய போதும், அவளை கன்வின்ஸ் பண்ணி மசிய வைத்தான். வேறு வேறூ ஜாதிகள் என்பதால் வழக்கம் போல பெருசுகள் பெரிதாய் மறுத்தார்கள். குடும்ப மானம், குல கௌரவம், லொட்டு லொசுக்கு என்றெல்லாம் அவர்கள் மொக்கை போட்டுக்கொண்டிருக்க, சத்தம் போடாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டு, பெற்றோருக்கு செக் வைத்தார்கள் காதலர்கள். வேறு வழி இல்லாமல் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள் இருவீட்டாரும். ஆனால் பையனின் அம்மா, “இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன்” என்று ஒரு தற்கொலை நாடகம் நடத்த, அன்றோடு தீர்ந்து போனது பையனின் ஆண்மை எல்லாம். அதற்கு பிறகு அவன் மனைவியுடன் அவனால் ஆசையாக இருக்கவே முடியவில்லை. காதலர்களாய் இருந்த போது, இவன் அவளை ஆசையாய் தொட்ட போதெல்லாம் அவள், “கல்யாணத்துக்கு அப்புறம்…” என்றூ காக்க வைத்த காலம் போய், இப்போது, இவள் அவன் எப்போதடா கிட்டே வருவான் என்று ஏங்கிக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் வந்ததும், “எங்கம்மாவை நீ மதிக்கிறதே இல்லை,” என்று ஆரம்பித்தான் என்றால் ராத்திரி முழுக்க ஒரே ரம்பம் தான். அழகான பெண்டாட்டி ஆவலாய் பக்கத்தில் இருக்கும் போது அந்த நேரம் பார்த்து, அம்மாவை மதிக்கவில்லை என்று கவலை படுபவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா? வாழ்க்கைய என்ஜாய் பண்ண தெரியாத முட்டாளா இருக்கானே, இவன் மூஞ்சுக்கெல்லாம் ஒரு கல்யாணமா? என்று நீங்கள் கூட அவனை நிந்திக்கலாம். ஆனால் கசப்பான உண்மை என்ன தெரியுமா? இந்த ஓவர் அம்மா சொண்டிமெண்டினாலேயே ஆண்மையை இழந்து வாழ்க்கையில் தோற்றுப்போன ஆண்கள் ஏராளம். தன்னால் இப்படி மகன் ஊனமானி போனான் என்று தெரிந்தும், பையனை தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தாய்குலங்கள் அதை விட ஏராளம். இப்படி கூட இருப்பார்களா?. இது இயற்கைக்கே புரம்பானதாயிற்றே. ஈ, கொசு, கரப்பான்பூச்சி கூட, யாரும் சொல்லித்தரமால் சமர்த்தாய் இனம் சேர்ந்து அடுத்த தலைமுறையை பெற்று பல்கி பெருகிக்கொள்கின்றனவே. இத்தனை அறிவும், ஆற்றலும் இருக்கும் மனிதன், இந்த பேசிக் மேட்டரில் கோட்டை விடுவானா? என்று நீங்கள் யோசித்தால், விந்தையான உண்மை என்ன தெரியுமா? இயற்கையின் விதிகளை மீறி, ஈ கொசு மாதிரியான ஜீவராசிகளுக்கு இயல்பாய் ஏற்படும் இச்சைகளை மீறி, மனிதர்களுக்கு என்று மட்டும் சில பிரத்தியேக விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு வாழ முயலும் மனிதர்களும் பலர் இருக்கிறார்கள்.

ஆக, எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாய் இருக்கும் சில universal விதிகள், மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும் சில தனி விதிகள் என்று இரண்டு நிலைகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த இரண்டு செட் விதிகளும் ஒத்துப்போகும் போதும் பிரச்சனைகள் இருப்பதில்லை, ஆனால் இவை முரண்படும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை! இவை ஏன் முரன்படுகின்றன? இதனால் தானே இவ்வளவு துன்பங்களும், குழப்பங்களும். யோசித்துபாருங்களேன்….ஆதிமனிதர்களுக்கு அதிசயமாய் இருந்ததெல்லாம் நமக்கு இன்று அற்ப சமாசாரமாகிவிட்டன. அவர்களுக்கு அற்ப மேட்டராய் இருந்ததெல்லாம் இன்று நமக்கு அசிங்கமாகிவிட்டன. ஆதிமனிதன் காலத்தில் இத்தனை வசதிகள் கிடையாது, உயிருக்கு எந்நேரமும் ஆபத்து, சாப்பாட்டிற்கு உத்திரவாதமே இல்லை, தனி மனிதனின் வாழ்விற்கு பெரிய மகிமை இருந்திருக்காது. ஆனால் இன்றூ, ஆதிமனிதன் நம்மை பார்த்தால், ஏதோ இறை அவதாரம் என்றல்லவா நினைப்பான்? நினைத்தால் பிடித்தவரின் முகத்தையும், குரலையும் செல்ஃபோனில் இருந்தே எடுத்து காட்டிவிடுவோம்! இதெல்லாம் ஆதிமனிதனுக்கு மாயாஜாலமாயிற்றே…..ஆனால் இத்தனை இருந்தும் என்ன, இன்னும் மனிதர்கள் சந்தோஷமாய் இல்லையே!

இத்தனைக்கும் இன்றைய மனிதர்களுக்கு சாப்பாட்டு பிரச்சனை இல்லை, வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, ஏன் உடல் கோளாறு கூட இல்லை….ஆனால் மனிதர்கள் இன்னமும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணமே உறவுகளில் ஏற்படும் விரிச்சல்கள் தான். எல்லா உறவுகளுமே இப்போது மெயிண்டேன் செய்வதற்கு கடினாகிக்கொண்டே போனாலும், இந்த ஆண் பெண் உறவு இருக்கிறதே, இது படுத்தும் பாடு ரொம்பவே அதிகம். அது ஏன் அப்படி? அதிலும் குறிப்பாக ஆண் பெண் அகஉறவுகளில், ஏன் இவ்வளவு பெரிய விரிசல்கள்? , உங்கள் மனதை ரொம்ப நாளாய் அறித்த அதே கேள்விகள் தான்…..ஆனால் அதற்கு நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத, திடுக்கிடும் பதில்கள். அடுத்த வாரத்தில் இருந்து……தவறாமல் படியுங்கள், திகைத்து போவீர்கள்!

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

சச்பென்சொடு காத்து இருக்கிறோம்

யாசவி said...

என்ன டாக்டர்,

மூன்று பதிவிற்கும் தொடர்பே இல்லாதது போல இருக்கிறது?

ஆனாலும் நன்று :)

யாசவி said...

:)

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

உங்களின் பார்வைகள் மிகவும் மாறுபட்ட வாழ்க்கை பதிவுகளை இங்கு சொல்லுகின்றன. நிறைய வலைப்பூவில் எழுதுங்களேன். ப்ளீஸ்...

Anonymous said...

excellent shalini mammmm