Sunday, March 29, 2009

பால் கடவுள்

சாதாரணமாய் என் சொந்த அபிப்ராயங்களை பதிவு செய்யும் பழக்கமே எனக்கு இல்லை. என் அபிப்ராயம் பதிவு செய்யும் அளவிற்கு முக்கியமானதாய் எனக்கு தோன்றுவதே இல்லை....ஆனால் இன்று ஒரு முக்கியமான மேட்டர் என் கவனத்திற்கு வந்தது.

சைதாப்பேட்டை அரசு மாநகராட்சி மருத்துவனையில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதில் என்ன பெரிய அதிசயம் என்கிறீர்களா? விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்த உடனே அந்த தாயுக்கு போஸ்ட் பார்டம் டிப்ரெஷன் என்கிற பிரசவத்திற்கு பிறகான மனசோர்வு ஏற்பட்டு விட்டதால், அவள் சற்றும் அசையாமல், பற்களை அப்படியே இறுக கட்டிக்கொண்டு, சாப்பிடாமல், நீர் அருந்தாமல் இருக்க, தாய் பால் சுரக்காமல் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டான்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு தகுந்த மனநல சிகிச்சை அளிக்க முடியாமல் அந்த மருத்துவமனைகாரர்கள் கையை விரிக்க, அந்த பெண்ணையும் அவள் குழந்தையையும் மூட்டை கட்டிக்கொண்டு, அவள் கணவன் எமர்ஜென்ஸியாய் எங்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

ஞாயிற்றுகிழமை லீவு தான். ஆனால் அவசரம் என்று நான் ஓடிவந்தேன். அந்த பெண் அறுத்துப்போட்ட வாழைமரம் மாதிரி அப்படியே மயங்கி வீல் சேரில் சரிந்து கிடந்தாள். தொட்டால், தட்டினால், பெயர் சொன்னால், எதற்குமே விழிக்கவில்லை. சரி ஊசி போட்டு உசுப்பிக்கலாம், என்று குழந்தையை பார்த்தால், குழந்தை டீஹைட்ரேட் ஆகி, உடம்பில் நீர் சத்து வத்தி போய், உளர்ந்து இருந்தான். ”குழந்தைக்கு பால் குடுக்கலையா?” என்றேன்

“பிழுஞ்சி பார்த்தோம். பாலே வரலை,சர்க்கரை தண்ணீ கொடுத்தேன்”
“அதெல்லாம் கொடுக்ககூடாதே!. ஏன் அந்த ஆஸ்பிட்டல்ல குழந்தை பெத்த வேற யாராவது அம்மாகிட்ட கொடுத்து பால் குடுக்க சொல்லி இருக்கலாமே?”

“கேட்டோம். அவங்க தர மாட்டேனுட்டாங்க...” என்றார் கண்வர் ஒரு மாதிரியான குரலில்

“ஏன்?”

“நாங்க வேற சாமி கும்பிடுறோமாம், அவங்க வேற சாமி கும்பிடுறாங்களாம், அதனால் தர முடியாதுனுட்டாங்க”

“வாட் நான்சென்ஸ்” என்று நான் சொல்லும் போதே அந்த ஆசாமி நெளிந்து, “ஜாதி பிரச்சனை மேடம்” என்றார்.

பசிக்கு அழும் ஒரு குழந்தையின் உயரை காப்பாற்ற மனசில்லை, ஜாதி பற்றி பேச மட்டும் தெரிகிறது என்று எரிச்சல் சரக் என உரைத்தது....எத்தனை பேருக்கு ரத்தம் தந்து காப்பாற்றுகிறோம், எத்தனை பேருக்கு கிட்னி, ஈரல், கண் என்று உருப்பு தானம் செய்கிறோம்...இதற்கெல்லாம் ஜாதியா பார்க்கிறோம்? அந்த எல்லா விதமான தானத்திலுமாவது இழப்பு, வலி என்று ஏதாவது சில அசவுகரியங்கள் இருக்கலாம்....ஆனால் இலவசமாய் தாராளமாக சுரக்கும் பால், எந்த வித அசவுகரியமுமே இல்லாமல், சுலபமாய் கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றலாம்...அதை செய்ய ஒரு பெண் தயங்கினாள், அதுவும் சாமியின் பெயரால் என்றால், மனிஷியா அவள் என்று தானே கேட்கத்தோன்றுகிறது!

அதற்கு மேல் இது பற்றி பேசிக்கொண்டிருக்க நேரமில்லை, குழந்தைக்கு எப்படியாவது உடனடியாக பால் தேவையே என்று, குழந்தையை சரியாக போர்தி, மூடி, அள்ளி எடுத்துக்கொண்டு, நானும், நர்சும், எங்கள் மருத்துவமனையில் பிரசவமாகி இருந்த ஒரு பெண்ணின் அறைக்கு போனோம். “இந்த குழந்தையின் அம்மாவுக்கு பாலில்லை, ரெண்டு நாளா ஆகாரமே இல்லாம குழந்தை டீஹைட்ரேட் ஆகீட்டான், நீங்க கொஞ்சம் பால் தந்தா பிழைச்சிப்பான்” என்று குழந்தையும் கையுமாய் சிக்னலில் பிச்சை எடுப்பவரை போல, நானும் சிஸ்டரும், அம்மா தாயே போட, அந்த பெண், “அய்யோ, எனக்கு பாலில்லையே டாக்டர், லாக்டஜன் தான் தர்றேன், “ என்று உடனே திரும்பி, லாக்டஜன் டப்பாவை எடுத்து எங்களிடம் கொடுத்தாள். ”எவ்வளவு வேண்ணா எடுத்துக்கோங்க”

அவள் மனிஷியே இல்லை. அந்த கணத்தில் அந்த குழந்தைக்கு அவள் தான் தெய்வம்! தெய்வம் ஆவது இவ்வளவு சுலபமாக இருக்கும் போது, சிலர் ஏன் மனிஷியாக கூட இருப்பதில்லை?

Tuesday, March 24, 2009

சேலம் மாநகர சிறைகாவலர்களுக்கான பயிற்சி முகாம்




மனித உரிமையை பாதுகாக்கும் பரிணாம வளர்ச்சியை நம்மூர் சிறைசாலைகளும் அடைந்துவிட்டுள்ளன. சிறைவாசிகளை எப்படி உளநலரீதியில் கையாள்வது என்கிற ஒரு நாள் பயிலரங்கை 22/3/2009 அன்று முழுவதும் நடத்தினோம்.

PRISON MINISTRY OF INDIA, என்கிற சேவை நிறுவனமும், PSYCHIATRIC SERVICES AND RESEARCH FOUNDATION என்கிற எங்கள் அமைப்பும் சேர்ந்து நடத்திய பயிலரங்கு இது. இதனை சிறை கண்காளிப்பாளர் திரு பழனி அவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு ஊக்குவித்து துவக்கி வைத்தார்.

சேலத்தில் உள்ள DON BOSCO அன்பகம் என்கிற சிறுவர் விடுதியின் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடந்தது.



இந்த விடுதியை நடத்தும் அருட்தந்தை ஃபாதர் சேவியர் ரொம்பவே ஸ்பெஷலான ஆசாமி. வண்டி ஓட்டுனர் அங்கு இல்லாத போது, குழந்தைகளை மீட்டு கொண்டுவதற்குண்டான ஆட்டோவை அவரே ஓட்டுகிறார். ரோமாபுரிக்கு போய் நேரடியாக போப்பிடம் ஆசி பெற்று வந்த பந்தா இதுவுமே இன்றி, மிகவும் எளிமையாக இருக்கிறார். சிறப்பாக இயங்குகிறார்.

பி.கு: இந்த விடுதியில் வசிக்கும் சிறுவர்களில் ஒருவர் கூட கிறுத்துவர் இல்லை. எல்லாமே ஹிந்து குழந்தைகள் தான். அவர்களை யாரும் மதம் மாற்றம் செய்ய முயலவில்லை, அதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை.

Friday, March 20, 2009

உலக மகளிர் தினம்

திருப்பூரில்...






15/3/09 அன்று கொங்கு ஸ்போர்ட்ஸ் கிளப்,உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சி.
தமிழ் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், முனைவர் திரு ஞானசம்பந்தம் அவர்கள், ”வாழும் கலை” பற்றி பேசினார். அதற்கு பிறகு நான் கொஞ்சம் சைக்கியாட்டிரியை உதிர்த்துகொட்டி, பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.

Wednesday, March 18, 2009

ஆண்களை ஹேண்டில் செய்ய, அத்தியாயம் 13

ஆண்களை ஹேண்டில் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? இதோ ஆண்களைப் பற்றின அடுத்த ரகசியம்... அதைப் பற்றி சொல்வதற்கு முன்னால் சில சுவாரசியமான கதைகளை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

பெயர் வேண்டாம். ஒரு பெண், மின்னல் என்று வைத்துக்கொள்வோமே. மின்னல் சின்ன வயதிலிருந்து இருபாலினருக்கான பள்ளியில் படித்து வந்ததால் ஆண்களிடம் சகஜமாக பேசும் சுபாவம் உடையவள். அவள் வேலையிலும் தினசரி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல பேரை சந்தித்து சமாளிக்க வேண்டி இருந்ததால், மிகமிக கேஷுவலாக எல்லோரிடமும் பேசும் பழக்கம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவள் இப்படி இருக்க, வேலை நிமித்தமாய் இவளை ஒரு ஆசாமி பார்க்க வந்தான். மின்னலும் வழக்கம் போல, அவனைப் பார்த்து, பேசி, தன் பணிகளை மேற்கொள்ள, தொழில்ரீதியாக இருவருக்கும், பேச்சு வார்த்தை ஏற்பட்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ``நாம் ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போய், ஜாலியா இருக்கலாமா?'' என்ற ரீதியில் ஏதோ கேட்க, மின்னலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடப்பாவி, இவன் இப்படி நினைக்கும் அளவிற்கு நான் அவனிடம் எதுவுமே பேசவில்லையே. ரொம்ப ரொம்ப புரஃபெஷனலாக மட்டும் தானே இருந்தேன். அப்புறம் எப்படி, இவனுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? என்ன திமிர்! என்ன வக்கிரபுத்தி!'' என்ற மின்னல், ஒட்டு மொத்தமாய் ஆண் வர்க்கத்தையே சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

இன்னொரு பெண், இவள் பெயரை கொடி என்று வைத்துக்கொள்வோமே. இவள் ஹாஸ்டல் விடுமுறைக்காக சொந்த ஊர் போகும் போது, ரயிலில் உடன் வந்த ஒரு ஆசாமி தனக்கு பெட்டி எல்லாம் தூக்கி வைத்து உதவி செய்தானே என்று, அவனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆள் தனக்கு திருமணமாகி இருப்பதையும், வயதிற்கு வந்த இரண்டு மகள்கள் இருப்பதையும் சொல்ல, அட, நம்ம அப்பா மாதிரி என்று கொடியும், ``சேலம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அங்கிள்'' என்று தன் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர, அடுத்த நாளே, அங்கிள் ஃபோன் செய்தார், ``அடுத்த வாரம் சேலம் வர்றதா இருக்கேன். நாம் ரெண்டு பேரும் எங்கயாவது டின்னருக்கு போகலாமா?''

கொடிக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது... சும்மா இரண்டு வார்த்தை முகம் கொடுத்து, நன்றாக பேசி விட்டதாலேயே, டின்னருக்கு போகலாமா என்றால் என்ன அர்த்தம்? சீ சீ, இந்த ஆண்களே சரியான சபல கேசுகள், அவன் பொண்ணு கிட்ட எவனாவது இப்படி கேட்டா அப்பத் தெரியும்! என்று கொடி குமைய ஆரம்பித்தாள்.

மின்னல் ஆகட்டும் கொடியாகட்டும், நீங்கள் ஆகட்டும் நான் ஆகட்டும் எல்லா பெண்களுக்குமே இப்படி பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆண்கள் சலுகை எடுத்துக்கொண்டு அவர்களிடம் பேச முயல்கிறார்கள். தப்பித்தவறி அந்தப் பெண் சகஜமாக பேசிவிட்டால், அதுவும் சிரித்துப் பேசிவிட்டாள் என்றால் உடனே, ஓஹோ, பார்ட்டி சிக்னல் கொடுத்துடுச்சு போல என்று உடனே அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிறார்கள்.

என்னதான் `சீ, தூ' என்றெல்லாம் பெண்கள் ஆண்களின் இந்த குணத்தை ஆட்சேபித்தாலும், உண்மை என்ன தெரியுமா? உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஆண் இனம் இப்படிதான் இயங்குகிறது. பெண்பால் என்ற ஒன்று எதிரில் இருந்தாலே போதும், ஆண் அலர்ட் ஆகி, தன்னை பெரியவனாய் காட்டிக்கொள்ளும். பெண் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு, விலகாமல், சும்மா அப்படியே நின்றாலும்கூட அதையே தன்னை ஊக்கப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு, நெருங்கி வரும். அப்போதும் அந்த பெண் விலகாமல் ஆதரவு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினால், உடனே ஒரு ஆணாய் தன் கடமையை ஆற்ற ஆயத்தமாகி விடும்.

உலக ஜீவராசிகளின் நியதியே இதுதான். பெண் எப்போதும், அசையாமல் ஆணை ஆழம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆணாகவே முன்வந்து அட்டெண்டென்ஸ் போட்டால், அவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். முடிவு எப்போதுமே பெண்ணைப் பொருத்ததுதான். ஆனால் முயற்சி செய்வது ஆணின் கடமை. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்களேன். பூவின் நட்டநடுவில் ஆடாமல் அசையாமல் பெண் உருப்பான கைனீஷியம் அமைந்திருக்கும். அது இப்படி சும்மா இருந்தாலும், எங்கிருந்தோ பல மகரந்தத் தூள்கள் பறந்தோ, மிதந்தோ, பிற ஜீவராசிகளின் மேல் தொற்றிக்கொண்டோ வந்து இந்த கைனீஷியத்தின் வாசலை அடையும். கடைசியில் எந்த மகரந்தத்திற்கு வெற்றி என்பதை அந்த கைனிஷியம்தான் முடிவு செய்யும். சூல் கொள்ள கைனிஷியத்திற்கு ஒன்றோ, இரண்டோ மகரந்தம்தான் தேவைப்படும். அப்படி இருந்தும், எல்லா பூக்களுமே தங்கள் மகரந்தத்தை பரப்பத்தானே செய்கின்றன. எந்தப் பூவும், ``எப்படியும் சிலதுதானே தேர்வாகும். எதற்கு வேலைமெனைக்கெட்டு இத்தனை மகரந்தத்தை உற்பத்தி பண்ணிக்கிட்டு, ஒரு வேலை நமக்கு சான்ஸ் கிடைக்கலைனா?'' என்று பெசிமிஸ்டிக்காய் இருப்பதில்லையே!

``சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, முன் ஏற்பாடாக போட்டிக்கு தயாராகிடணும், வெற்றி தோல்வி முக்கியம் இல்லை, விளையாட்டுல கலந்தே ஆகணும்'' என்ற ரீதியில்தான் எல்லா ஜீவராசி ஆண்களுமே களமிறங்குகின்றன.

இதே விதியை அனுசரித்துதான் மனித ஆணும், முன் ஏற்பாடாக எப்போதுமே, ``ரெடி ஸ்டெடி, ஸ்டார்ட், ஜூட்'' என்று தயாராகவே இருக்கிறான். எப்போது எங்கே தன்னை ஆதரிக்க ஒரு பெண் கிடைப்பாள் என்கிற இந்த வேட்கைதான் அவனுடைய இயல்பு. ஆண்கள் மட்டும் இப்படி இயங்கவில்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிர்வாழ முடியாது.

இது மற்ற ஜீவராசிகளை பொருத்தவரை எந்த சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் மனித வர்க்கத்தை பொருத்தவரை, ஆணின் இந்த ``எந்தப் பெண் கிடைப்பாள்?'' வேட்கை, அநாகரீகமாய் கருதப்படுகிறது. காரணம் மிருகம் மாதிரி, பெண்ணைப் பிடித்து புணர்ந்துவிட்டு, பிறகு அவளை மறந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போகும் போக்கு மனிதர்களுக்கு ஒத்து வராததே காரணம். மிருகக் குட்டிகளுக்கு அப்பா என்ற ஒரு கேரக்டரே தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்குத்தான் அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமே. இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தையின் வாழ்வு நல்லபடியாய் அமையும் என்பதினால்தான் இன்றைய புத்திசாலி ஆண்கள் ஒரே ஒருத்தியோடு, காலம் முழுக்க உறவு கொள்கிறார்கள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடுதான் குழந்தை வளர்ப்பிற்கு மிக சாதகமானது என்பதாலேயே முதிர்ச்சி அடைந்த கலாச்சாரங்கள் இதையே ஆதரிக்கின்றன. இந்த அளவு, புரிதலும், அறிவும் இருக்கும் ஆண்கள் இதனாலேயே, தன் துணை அல்லாத பிற பெண்களிடம் கண்ணியமாய், கட்டுப்பாடாய் பழகுகிறார்கள்.

இத்தனை புத்திசாலித்தனம் இல்லாத ஆண்கள்தான் இன்னும் தொடர்ந்து மிருகபாணியில் மானாவரி சாகுபடி செய்கிறார்கள். எப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ஈஷிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் இப்படி மானாவாரியாக பெண்களுக்கு ரூட் விடுவது அத்தனை புத்திசாலித்தனமான போக்கில்லை என்றாலும் என்ன செய்வது, இன்னும் பல ஆண்கள் மிருகங்களாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் என்றால் மிருகம் என்று அவனை மகிஷாசுரமர்த்தினி மாதிரி வதைத்திருக்கலாம். ஆனால் இன்றைய சட்டமோ, மிருகவதையை தண்டிப்பதால், மர்த்தனம் எல்லாம் இனி செய்யமுடியாதே. அதனால் ஏதோ நம்மால் முடிந்தது, ``இந்த வேலையை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதே'' என்ற சிக்னலை வெளிப்படுத்தி, அவனை ஆஃப் பண்ண முயலலாம். எப்படி, ஆஃப் சிக்னலை கொடுப்பது என்கிறீர்களா? ஆல் அபவுட் தட் இன் நெக்ஸ்ட் சிநேகிதி.

Sunday, March 8, 2009

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? - அத்தியாயம் 12

என்ன ஸ்நேகிதி, man watching செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? அப்படியானால் ஆண்களின் இன்னொரு பொது பழகத்தை நீங்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்களே!

”பரவாயில்லை ஆம்பிளை பொம்பளைனு வித்தியாசமெல்லாம் பார்க்காமல் சாதாரணமா பேசிதான் வைப்போமே,” என்றூ நீங்கள் மிக மிக யதார்த்தமாய் யாராவது ஒரு ஆணிடம் பேசி பாருங்களேன். பெண்களுடன் அதிகம் பேசி பழகி, பாலின வேறுபாடுகளை தாண்டி, அவளும் மனித இனம் தான், அதனால் அவளுக்கு சமமான மதிப்பு தந்து நடத்துவது தான் நாகரீகம் என்ற மார்டன் கண்ணோட்டம் கொண்ட ஆணாக இருந்தால், பிரச்சனை இல்லை. நீங்கள் இருவரும் நட்போடு பல விஷயங்களை பற்றி பேசி, கருத்து பரிமாறி, தோழைமையை கொண்டாடி மகிழலாம்.

ஆனால் பெண் =எதிர்பாலினம்.
எதிர்பாலினம் = ஈர்ப்பு. எதிர்பாலினத்தை சேர்ந்தவள் வந்து சகஜமாக பேசுகிறாள் என்றால், என்ன அர்த்தம்? அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு போல, அப்படினா, நான் ஒரு ஆணா என் பாலியல் பணியை செய்து காட்டீடுறேன் இரு, என்று முடிவுகட்டிவிடும் ஆண்கள் தான் துரதுஷ்டவசமாய், மிக அதிக எண்ணிக்கையில் இருந்து தொலைக்கிறார்கள்.

இந்த விதமான ஆண்களுக்கு பெண்ணை பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்க மட்டும் தான் தெரிகிறது. பாலினத்தை தாண்டி, அவளை ஒரு சமமான மனிஷியாய் பார்க்கும் பரிணாம வளர்ச்சி இந்த விதமான ஆண்களுக்கு இன்னும் ஏற்படவில்லை.

சில ஆண்களுக்கு இந்த மனமுதிர்ச்சி ஏற்பட்டிருக்கே, அப்புறம் ஏன் வேறு சில ஆண்களுக்கு மட்டும் ஏற்படவில்லை என்று நீங்கள் என்ன தான் நொந்துக்கொண்டாலும், இயறக்கையின் ஏற்பாடே இப்படி தான். தி பெஸ்ட் என்பது எப்போதுமே குறைந்த எண்ணிக்கையில் தான் கிடைக்கும். அதனால் பெண்களிடம் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் மிக தேர்ந்த மன முதிர்ச்சி அடைந்த ஆண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஆண்கள் எல்லாம் கண்ணியமா, அதெல்லாம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவில் தான் இன்னமும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியில் பின் தங்கிய ஆணை எப்படி கண்டுபிடிப்பது? சிம்பிள்…
நீங்கள் பேசி விட்டீர்கள், அதுவும் சிரித்து பேசி விட்டீர்கள் என்பதனாலேயே, அதிக உரிமை எடுத்துக்கொண்டு, உங்களை தொட முயல்வார்கள்!

அதுவும் ரொம்பவே நேக்காக. எப்படி தெரியுமா?

ஸ்டெப் 1: முதலில், தெரியாமல் தொட்டது போல, லேசாய் தொடுவார்கள். தோலை, கையை, முதுகை என்று லைட்டாய். பட்டும் படாமலும், ”தெரியாம கை பட்டிருக்கும் போல” என்று நீங்கள் அந்த தொடுகையை பெரிது படுத்தாத அளவிற்கு சன்னமாய் தொட்டு வைப்பார்கள். இந்த தொடுகையை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால், அடுத்த கட்ட தொடுகைக்கு முன்னேறுவார்கள்.

ஸ்டெப் 2: முதல் ரக தொடுகைக்கு நீங்கள் மறுப்பு சொல்லவில்லை என்றால், உங்களை வழிநடத்தி கைட் செய்வது போல இன்னும் கொஞ்சம் அழுத்தமாக தொடுவார்கள். ”இப்படி போம்மா” என்று கையை பிடித்து வழி காட்டுவது, தோலை தொட்டு அனுப்புவது, என்பது மாதிரி, மிகுந்த அக்கறையாய் தொட்டு உதவுவார்கள்.

சீ, சீ தப்பா இருக்காது. அப்பா மாதிரி தானே, அண்ணன் மாதிரி தானே என்று நீங்கள் இந்த தொடுகையை கவனிக்காமல் விட்டீர்கள் என்றால் என்ன அர்த்தம்? இதை நீங்கள் பெரிது படுத்தவில்லை என்று தானே அர்த்தம்!

உங்கள் மறுப்பின்மை தந்த தைரியத்தில் தலைவர், இன்னும் துணிந்து, அடுத்த கட்டமாய், ஸ்டெப் 3 க்கு முன்னேறுவார். பெரிதாய் உங்கள் மேல் அக்கறை கொண்டு உதவுவதை போல உங்களை தொட ஆரம்பிப்பார். பையை திறக்க, வண்டியில் ஏற, நிதானப்படுத்த என்று, உங்கள் கையை, புஜத்தை, முதுகை தொட முயல்வார்.

இதையும் நீங்கள் அனுமதித்தால், சரி தான் அவளுக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது போல என்று அதற்கு மேல், இன்னும் துணிந்து, “இது என்ன காயம்/கொசுகடியா, மச்சமா, அடி பட்டுடுச்சா?” என்று உங்கள் கையையோ, கன்னத்தையோ தொட்டு, உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டவர் மாதிரி, குசலம் விசாரிப்பார்.

இப்போதும் நீங்கள் மறுப்பே தெரிவிக்கவில்லை என்று வையுங்களேன், அவ்வளவு தான், பொண்ணூ பச்சை கொடி காட்டிவிட்டால் என்று, அதற்கு மேல் தொட காரணமே இன்றி, சும்மாவே உங்களை தொட ஆரம்பித்துவிடுவார்.

தலையை தொடுவது, முதுகை தட்டுவது, முடியை ஒதுக்குவது, கன்னத்தை தட்டி வருடுவது என்று தட்ட ஆரம்பித்து, இதற்கும் மறுப்பு வரவில்லை என்றால், தடவ ஆரம்பித்து, அப்படியே தழுவியும் விட முயல்வார்.

இந்த அளவு அவன் முன்னேறீய பிறகு, “சீ விடு” என்று கத்துவதோ, கன்னத்தில் அடித்து கலாட்டாசெய்வதோ தான் பெண்களின் போக்காக உள்ளது. காரணம் இந்த அளவு அவன் போன பிறகு தான் பல பெண்களுக்கு அவன் அத்து மீறுவதே புரிகிறது. அதுவரை, அவன் தொடுவது தகாத செயல் என்று உரைத்தாலும், “சீ, சீ அவன் நல்லவன் தானோ, நான் தான் தப்பா நினைக்கிறேனோ?” என்ற சந்தேகத்திலேயே பெண்கள், அவன் ஆரம்பகாலத்திலிருந்து செய்துவரும் அத்து மீரலை கவனிக்க தவறுகிறார்கள்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெண்களின் ஆழ்மனதில் ஆணின் தொடுகை குறித்த ஒரு ஆட்டோமேட்டிக் அலாரமே இருக்கிறது. அந்த அலாரம் எந்த ஆண் தகாத எண்ணத்துடன் பார்த்தாலும், பேசினாலும், தொட்டாலும், “டாண்” என்று அடித்து உங்கள் கவனத்தை திருப்பும். கிட்ட தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலுமே இந்த அலாரம் 100% சரியாகவே இயங்குகிறது. அதனால் லேசு பாசாக கூட ஒருவனின், பார்வை/பேச்சு/தொடுகை உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால், உடனே அதனை கண்டியுங்கள். நீங்கள் கண்டிக்கவில்லை என்றால் ஒத்துழைத்து அவனை நீங்களே ஊக்குவிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும். அதனால் உங்கள் சம்மதம் இல்லாமல் எவனாவது உங்களை தொட்டான் என்றால், just protest. ஆட்சேபித்திடுங்கள், அவனை கண்டியுங்கள்.

கண்டிப்பதென்றால் எப்படி? முறைப்பது, அடிப்பது, கத்துவது, திட்டுவது எல்லாமே செய்யலாம் தான், அதுவும் குறிப்பாய் பொது இடங்களின் முன் பின் தெரியாத ஆண் வந்து இப்படி ஏடா கூடம் செய்தால், அவனை உடனே ஆஃப் செய்ய இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் உபயோகமாய் இருக்கும்.

ஆனால் இந்த அதிரடி எல்லாம், எல்லா சந்தர்பங்களுக்கும் பொருந்தாதே. சில சமயம் இப்படி அத்து மீறி இம்சை தரும் நபர் உங்கள் பாஸாக இருக்கலாம், அல்லது, உயர் அந்தஸ்து/பதவி வகிக்கும் ஆளாக இருக்கலாம். அந்த ஆசாமியை போய் அடிப்பதோ, திட்டுவதோ ஆபத்தான காரியமாக இருக்கலாமே.

இப்படி அதிகாரத்தையோ, பதவியையோ துஷ்பிரயோகம் செய்து உங்களை அல்லல் படுத்தும் ஆசாமிகளை எப்படி ஹாண்டில் செய்வதாம்? சிம்பிள், “டேய் டேய், தெரியுமடா உன் லீலை எல்லாம் எனக்கு. மனசுல என்ன பெரிய மன்மதன்னு நினைப்பா உனக்கு. அட மடையா, உன்னை எல்லாம் நான் மனிஷனா கூட நினைக்கலடா, அதனால் நீ கொஞ்சம் அடங்கு!” என்று நீங்கள் வாய் திறந்து சொல்ல கூட வேண்டாம். மனதிற்குள் நீங்கள் நினைத்தாலே போதும். உங்கள் மெய்பாட்டியல் குறி, அதாகப்பட்டது body languageஜே மாறி விடும். உங்கள் மோவாய் துணிந்து நிமிரும், கண்களின் ஒரு ஏலன சிரிப்பும், மூக்கின் மீது கோபமும், வாயோரம் ஒரு உதாசீன புன்னகையும் மின்னும் பாருங்கள்.

இதை பார்த்தாலே, “அடடா, மாட்டிக்கொண்டேனே, கண்டு பிடித்துவிட்டாளே. கண்டு பிடித்ததும் இல்லாமல் எள்ளி வேறு நகையாடுகிறாளே! போச்சு, போச்சு, இனி யார் யார் கிட்ட சொல்லி என் மானத்தை வாங்க போறாளோ!” என்று அந்த ஆசாமி அசவுகரியத்தில் நெளிய ஆரம்பித்து விடுவான்.

ஒரு பெண்ணின் பார்வைக்கு இவ்வளவு சக்தி இருக்குமா என்று உங்களுக்கு ஆட்சரியமாய் இருக்கிறதா? ஒரு ரகசியம் தெரியுமா? மனிதர்கள் எல்லோருக்குமே பிறரின் பார்வை குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வு எப்போதுமே உண்டு. கண்ணூ பட்டு விட்டது, திருஷ்டி சுத்தி போடுவது, யார் கண்ணூ பட்டுதோ, என்று எல்லாம் நாம் கவலை படுவதே இந்த பயத்தினால் தான். இந்த கண்/பார்வை சார்ந்த அச்சம் ஆண் பெண் இருபாலோருக்கும் பொது தான் என்றாலும், பெண்ணின் ஏலன பார்வைக்கு ஒரு கூடுதல் ஸ்பெஷாலிட்டி உண்டு.

கலாச்சார ரீதியாய், சமீபத்திய மூவாயிரம் சொச்ச ஆண்டுகளுக்கு ஆண்களே அதிக்கம் செய்து வாழ்ந்து வந்திருப்பதால், பெண்கள் ஆண்களை ஏறெடுத்து பார்ப்பதே மரியாதை குறச்சல் என்கிற கருத்து ஆண் ஆதிக்க வட்டாரங்களில் உண்டு. விஷயம் இப்படி இருக்க, ஒரு பெண் ஆணை இப்படி துணிந்து ஏளனமாய் பார்த்து சிரிப்பது என்பதே ஆண்களுக்கு பதவி இறக்கமாய் கருதப்படுகிறது. இப்படி ஒரு பெண் செய்தால், அவள் அதற்கு மேல் அந்த ஆணை பார்த்து பயப்படவில்லை என்று அர்த்தமாகிறது.

அவள் அவனை பார்த்து அஞ்சும் வரை தான் அவனால் அவளை ஆதிக்கம் செய்யவே முடியும். ”சரி தான் போடா, உன் மேல எனக்கு பயமே இல்லை,” என்று எப்போது ஒரு பெண் பகிரங்கமாக சிக்னல் கொடுக்கிறாளோ, அப்போது அவள் அவனுக்கு நிகராகிவிட்டாள் என்று தானே அர்த்தம். அதற்கு மேல் அந்த ஆணால் அவளை அடக்கி ஆள முடியாது, அவளை ஒரு காம பொருளாகவும் பார்க்க முடியாது. காம பொருளாக இல்லை என்றால் உங்களை திருட்டு தனமாகயேனும் தொடும் எண்ணம் அவனுக்கு எப்படி வரும்? அதனால் தான் இப்படி தனக்கு நிகராய் இருக்கும் பெண்களை தொட்டு பார்க்க இத்தகைய சாமாணிய ஆண்களுக்கு ஆசையே வருவதில்லை

அதனால் ஸ்நேகிதிகாள், ஆண்களின் தன்மையே இது தான். இவள் இசைவாள் என்று அவன் நினைத்தால், உங்களை தொட்டு உரிமை கொண்டாட அவன் முயல்வான். அது தான் அவன் இயல்வு.

அந்த ஆணை உங்களுக்கு பிடித்திருக்கிறது, அவன் தொடிகையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், வெல் ஆண்ட் குட், பார்வையை தாழ்த்திக்கொண்டு, அவன் தொடுகையை அனுபவியுங்கள். என் ஜாய் தி ரொமான்ஸ்!

நீங்கள் இசைய போவதில்லை. அவனை ரொமாண்டிக் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கவில்லை என்றால், ”நான் உன்னை எனக்கேற்ற ஆணாய் நினைக்கவில்லை. உன் எல்லை கோடு இது தான், இந்த எல்லையில் நின்று பேசு!” என்று உங்கள் இசையாமையை வெளிபடுத்தி வையுங்கள். Tresspassers not allowed என்கிற அனுமதி மறுக்கபடும் அறிவிப்பை உங்கள் body languageஜில் வெளிபடுத்துங்கள்.

இப்படி எல்லாம் பெண் அனுமதி இல்லை சமிக்ஞைகளை ஏன் பிரயோகிக்க வேண்டும்? இந்த ஆண் பாட்டுக்கு தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருந்து தொலைக்ககூடாதா? கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அவன் ஏன் கண்டவளை தொட முயல்கிறானாம் என்று உங்களுக்கு பல கேள்விகள் எழலாம். வெயிட் வெயிட், பதில்கள் அடுத்த ஸ்நேகிதியில்.

Thursday, March 5, 2009