Sunday, July 6, 2014

நம்ம ஊர் போலீஸ்

திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல்.  என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் பொடிசுகள் பெருசுகள் அனைவரையும் “இதோ இப்ப வந்து கொல்லுவேண்டி” + நிறைய கெட்ட வார்த்தை என்று மிரட்டியவன், அதற்கு முன் நாள் வரை, “நீங்க தான் தெய்வம், நீங்க எனக்கொரு அம்மா மாதிரி” என்றெல்லாம் சோப் அடித்துக்கொண்டிருந்த ஓர் ஓசி சவாரி ஆசாமி.
சரி, மிரட்டுகிறான், ஏடாகூடமான பழக்கங்கள் உள்ளவன் தான், எதற்கும் போலீஸில் சொல்லி வைத்துவிடலாம் என்று கலந்தாலோசித்து, காவல் நிலையத்திற்கு போய் புகார் கொடுத்தோம்.  இன்ஸ்பெக்டர், என்னிடம் தகவல் கேட்டுக்கொண்டே செல்ஃபோனில் ஏதோ தட்டிக்கொண்டிந்தார். தட்டி முடித்துவிட்டு நிமிர்ந்தார், “சம்மன் அனுப்பியாச்சி”.  எப்படி?  என்று யோசித்தால் சொல்போனை காட்டினார்....எஸ் எம் எஸில் சம்மன் அனுப்புறாங்கடோய்! வாவ், சென்னை காவல்துறை!
ஆனால்  நம்ம கொலைமிரட்டல் ஆசாமி, உடனே தன் செல்ஃபோனை நைஸாக ஸ்விட் ஆஃப் செய்து விட, உடனே ஒரு பீட் போலீஸை அனுப்பி அவனை அழத்து வர செய்தார் இன்ஸ்பெக்டர்.
அப்புறம் என்ன, நம்ம “நானும் ஒரு ரவுடி” தான் கேரக்டர் வந்தான்.  போலீஸ் எப்படி டா இப்படி நீ மிரட்டலாம் என்று கேட்டு அவனை ரவுண்ட் கட்டி முட்டிக்கு முட்டி தட்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை.  ”இனிமே இப்படி எல்லாம் மிரட்ட மாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு போ” என்று சர்வ அகிம்சாமுறையில் அவனிடம் எழுதி வாங்கினார்கள் பாருங்கள்........அங்கு தான் என்னமோ இடிக்கிறது.
“இதையும் மீறி அவன் என்னை என் குடும்பத்தாரை ஏதாவது செய்தால்?” எனறு கேட்டேன். இன்ஸ்பெக்டர் மிகவும் கம்பீரமாக சொன்னார், “law will take its own course" என்று..  அவன் என்னை கொன்றூவிட்ட பிறகு law அதன் courseசில் போனால் எனக்கென்ன, போகாவிட்டால் எனக்கென்ன?
அதனால் எதற்கும் உலக தமிழ் மக்களிடம் சொல்லிவைத்துவிடுகிறேன். law அதன் courseசில் போகிறதா இல்லையா என்று நீங்களாவது கண்டுக்கொள்ளூங்கள்.  அந்த கொலை மிரட்டல் விடுத்தவனின் ஊர், பெயர், புகைபடம் இத்யாதி இத்யாதி தேவைபட்டால் என்னை கேளுங்கள்:)