Friday, February 20, 2009

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி, 11

அத்தியாயம் 11
மேன் வாட்சிங் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? உங்களுக்கு தெரிந்த ஆண்களை எல்லாம், பாடபொருளாக்கி, கவனமாய் பார்த்து, புரிந்துக்கொள்ள பழகி வருகிறீர்களா? அப்படியானால் ஆண்களின் அடுத்த இயல்பை நீங்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்களே.

“அடி செருப்பால, ராஸ்கல், அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ.

அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா?

ஆணின் இந்த இயல்பிற்கு அவன் காரணம் இல்லை. இயற்க்கை அவனை அப்படி இயங்கும் படியாகத்தான் வடிவமைத்திருக்கிறது. இந்த இயற்க்கைக்கு வேறு வேலை இல்லையா? போயும் போயும் இப்படியா ஆண்களை வடிவமைக்கணும்? என்று அதற்குள் அலுத்துக்கொள்ளாதீர்கள் ஸ்நேகிதி. இயற்க்கையின் இந்த ஏற்பாட்டில் நிறைய லாஜிக் இருக்கிறது.

மனித இனம் உருவான ஒன்றரை மில்லையன் வருஷத்திற்கு முன்னால் பூமியில் வேறு சில மனித குரங்குகளும் வாழ்ந்துக்கொண்டிருந்தன. இந்த எல்லா மனித குரங்குகளும் கிட்ட தட்ட ஒரே இனம் என்பதால் எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். உதாரணத்திற்கு பொனொபோக்களும், சிம்பான்ஸீக்களூம் வெவ்வேறு விதமான மனித குரங்குகள். பழக்கப்படாதவர் பார்வையில் இரண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு என்றே தோன்றிவிடும். ஆனால் உத்து பார்த்தால் வித்தியாசங்கள் தென் படும்.

இது போல தான் அந்த கால மனிதவர்க்கம். சேப்பியன் மனிதர்கள், நியாண்டிரதல் மனிதர்கள், ஃப்லொரிசியன் மனிதர்கள் என்று மூன்று வகையான, (யாருக்கு தெரியும் அதற்கு மேலும் இருக்கலாம்) மனித ஜாதிகள் ஒரே சமயத்தில் பூமியில் வாழ்ந்து வந்தன. இந்த மூன்றூம் ஒன்றுவிட்ட உறவுக்கார உயிரினங்கள் தான் என்றாலும், இவற்றில் கலப்பு நேர்ந்தால் மகசூல் இருக்காது. உதாரணத்திற்கு பூனையும், புலியும் ஒரே ரகமான ஒன்றுவிட்ட உறவுக்கார மிருகங்கள் தான். ஆனால், பூனையும் புலியும் சேர்ந்தால் மகசூல் ஏற்படாதே. அதனால் இயற்க்கை பூனைக்கு தனியாக இன குறீகளையும், புலிக்கு தனியாய் வேறு வித இன குறீகளையும் ஏற்படுத்தி இருக்கு. அந்தந்த மிருகம் அதன் அதன் இன குறியை சரிபாத்து புணரும் படியாக தான் இயற்கை அவற்றின் நரம்புமண்டலத்தை வடிவமைத்து வைத்திருக்கிறது.

இதற்கும் ஆண்கள் பெண்களை இப்படி கண்ட கண்ட இடத்தில் உத்து பார்ப்பதற்கும் என்னங்க சம்மந்தம் என்கிறீர்களா? இருக்கே. நிறைய சம்மந்தம்! பல வகை வானர ஜாதிகள் ஒன்றாக வாழும் போது, அதில் யார் நிஜ மனித பெண் என்பது எப்படி மனித ஆணுக்கு தெரியும்? அவளுக்கு என்று பிரத்தியேகமாய், மனித இன குறிகள் ஏதாவது இருந்தால் தானே, சரி, இது நம்ம ஜாதி என்று இவன் அடையாளம் கண்டு கொள்வான். அப்படி குறி பார்த்து சரியான துணையை தேடி பிடித்து, புணர்ந்தால் தானே மனித இனம் பெருகும். இவன் பாட்டுக்கு குறி தவறி வேற்றின பெண்குரங்குடன் உறவு கொண்டு விட்டால், மனித இனம் பரவாதே.
அதனால் தான் இயற்க்கை, மனித பெண்ணுக்கு என்று பிரத்தியேகமாய் சில இன குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதில் முக்கியமான ஒரு இன குறி தான் மனித பெண்ணின் மார்பகம். மற்ற எந்த வானரத்திற்கு இது போன்ற ஒரு கொழுத்த பாலூட்டும் கருவி இல்லை. மனிதர்களில் மட்டுமே இப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது.

அது சரி, மனிதர்களில் மட்டும் ஏன் இப்படி ஓர் ஏற்பாடு? ஏன் என்றால் மனித பெண் தான் மற்ற மிருகங்களை மாதிரி இல்லாமல், எப்போதுமே இரண்டு கால்களில் நடக்கிறாள். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? விஷயம் இது தான். மற்ற மிருகங்களில் பருவகாலம் வந்ததும் பெண் மிருகத்தின் உடம்பில் சில ஹார்மோன்கள் ஊரும். இந்த ஹார்மோனின் நெடி, காற்றில் பறந்து சுற்றியுள்ள பதினெட்டு பட்டிக்கும் பரவி விடும். இந்த ஹார்மோனால் ஈர்க்கப்பட்டு, வேறேதோ பிரதேசத்தில், மேய்ந்துக்கொண்டிருக்கும் ஆண் மிருகம் மோப்பம் பிடித்துக்கொண்டு, பெண்கள் இருக்கும் இடத்தை வந்து சேரும்.

இப்படி ஆண் வந்து ஆஜராகி, பார்த்தால், அங்கே பல பெண்கள் கூட்டமாய் இருக்குமே. இத்தனை பெண்களின் யார் தனக்கு ஹார்மோன் சிக்னல் அனுப்பினாள் என்று எப்படி தெரிந்துக்கொள்வது? இதற்காக ஆண் மிருகம் பெண்களின் பின்னால் போய், யாருடைய பின் புறம் சிவந்து உப்பி போயிருக்கிறது என்பதை கவனிக்கும். காரணம், சூல் கொள்ளும் தன்மையுள்ள பெண்ணின் ஜனன உருப்பு, சிவந்து உப்பிபோகும். இப்படி ஒருத்தி வீங்கி இருந்தால், அவளிடம் தன் விந்தணுக்களை முதலீடு செய்தால், அடுத்த சில மாதங்களின் அடுத்த தலைமுறை ரெடி! இப்படி இதை கண்டால் இப்படி ரியாக்ட் செய் என்று இயற்கையில் இயங்கும் இது மாதிரியான உத்தரவுகளை தான் இன்னேட் ரிலீசிங் மெக்கானிசம் என்கிறோம். (Innate Releasing Mechanism) எல்லா மிருகங்களிலும் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிசங்கள் உண்டு. இந்த IRM தூண்டப்படாவிட்டால், அந்த மிருகத்தால் சரியாக ரியாக்ட் செய்யமுடியாது.

நான்கு கால்களின் நடமாடும் மிருகம் என்றால் இப்படி பின்னால் போய், யாருடைய ஜனன பகுதி உப்பி சிவந்திருக்கிறது என்று இன்னேட் ரிலீசிங் மெக்கானிசங்களை நோட்டம் விடலாம். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களின் செங்குத்தாக தானே நிற்கிறாள். அதனால் அவள் ஜனன பகுதி கண்மறைவாகி விடுமே. இதில் யார் கருவுற தயாராக இருக்கிறாள் என்பதை எப்படி ஆண் மிருகம் கண்டுபிடிப்பானாம்?

இன்றைகாவது ஜன தொகை பெருகி விட்டது, அதனால் யாரும் அடுத்த தலைமுறையை பெற்றுக்கொள்வது பற்றி பெரிதும் கவலை படுவதில்லை. ஆனால் மனிதவர்கம் உருவான அந்த மில்லயன் வருடத்திற்கு முன், நிலைமையே வேறு. அப்போது பூமியில் மனிதர்கள் மிக சொர்ப்ப எண்ணிக்கையில் தான் இருந்தார்கள். அதனால், மகசூலை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.

ஆனால் உயிர் உருவாகி, பாலின பிறிவினைகள் ஏற்பட்ட ஆதிகாலத்திலிருந்தே, ஜனன பாகம் உப்பி சிவந்திருக்கும் இன்னேட் ரிலீசிங் மெக்கானிசத்தை வெளிபடுத்தும் பெண்களோடு புணரும் படி தான் ஆண் மிருகங்கள் எல்லாவற்றின் நரம்பு மண்டலம் அமைக்கபட்டிருந்தது. இந்த IRM இல்லாத பெண்ணோடு புணர ஆண்களுக்கு உந்துதல் ஏற்பட்டதே இல்லை.
ஆக, உப்பும் பாகத்தை பார்த்தலே ஒழிய ஆணுக்கு கிளர்ச்சி ஏற்படாது, என்பதால் தான் இயற்க்கை மனித வர்க்க பெண்களுக்கு மட்டும் இந்த IRMமை கண்ணில் தெரியும் படி, இடமாற்றம் செய்தது. மற்ற மிருகங்களுக்கு இடுப்பெலும்போடு இனைந்திருக்கும் இந்த சமிக்ஞையை மனிதர்களில் மட்டும் மார்பெலும்போடு இனைத்துள்ளது.

இந்த இடமாற்றத்தினால், மனித பெண் முன் பக்கம் சமிக்ஞை பாகம் கொண்ட ஒரே வானர இனமாகி போனாள். அதனால் முன் பக்க வீக்கம் = மனித பெண். இந்த அமைப்பு இல்லாத பெண்= வேற்றின பெண் என்கிற முடிவிற்கு வந்தான் மனித ஆண். இந்த இனகுறீயை வைத்து அவன் தன் இன பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து உறவுக்கொண்டதால் தான் இன்று நாமெல்லாம் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு முக்கியமான மனித இன அடையாள குறியாக இருப்பதினால் மனித ஆணின் மூளையில் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிசத்திற்கான ஈர்ப்பு மிக அழுத்தமாய் ஏற்கனவே முன் பதிவு செய்ய பட்டுள்ளது. அதனால் தான் சின்ன குழந்தையில் ஆரம்பித்து தொண்டு கிழங்கள் வரை வெறும் இந்த பாகத்தின் மேல் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்.

நாகரீகத்தின் துவகத்தில் பெண்கள் இந்த பாகத்தை மறைக்காமல் வெளிப்படையாகவே விட்டுவைத்தார்கள். ஆனால் மனித கலாச்சாரம் பெருகி, நான் எனது என்ற எண்ணங்கள் எழுந்த பிறகு, என் மனைவியின் மனித இன அடையாள குறியை வேறு எவனும் பார்க்கக்கூடாது என்ற கருத்தும் தலைதூக்கியது. அதனால் பெண்கள் மாராப்பு அணிந்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறினார்கள்.

என்ன தான் மாராப்பை அணிந்து கொண்டாலும், மனித பெண்ணின் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிச பாகத்தை கண்டு குஷிபடும் ஆணின் தன்மை இன்னும் மாறவில்லை. அதனால் தான் மனித ஆண் இன்னமும் பெண் என்றதும் உடனே அவள் இன குறி பாகத்தை கவனித்துவிடுகிறான். இந்த பாகத்தின் செழுமையை வைத்து அந்த பெண்ணின் வயது, பருவ நிலை, மகபேற்று வளம் ஆகியவற்றையும் யூகிக்க முயல்கிறான்.

இதெல்லாம் அந்த கால பெண்களுக்கு பெரிய விஷயமாய் இருந்ததோ இல்லையோ. காரணம் சமீபத்திய இருநூறு ஆண்டுகள் வரை தமிழ் பெண்கள் மாராப்பு அணிந்தது இல்லை, ஆனால் நாகரீகம் அடைந்து சுய மரியாதை பெற்ற பெண்களுக்கு எவனாவது தன் முகத்தை பார்க்காமல் கண்ட இடத்தை பார்த்து பேசினால் கோபம் வருகிறது. காரணம் முந்தய காலத்தில் சாமானிய பெண்ணுக்கு தன் உடலின் மீது கூட உரிமை இருக்கவில்லை. அதனால் எவன் வேண்டுமானாலும் மானாவாரியாக தன்னை உற்று பார்ப்பதை அவளால் ஆட்சேபிக்க முடிந்திருக்காது.

ஆனால் இன்றைய பெண்ணுக்கு சுய மரியாதை உண்டே. அவள் தன்னை ஆணூக்கு சரி சமம் என்று நினைப்பதால், தன் உடலின் மீது தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாய் அவள் நினைக்கிறாள். தன்னை எவன், எப்படி, எப்போது, எங்கே, எதற்க்காக பார்க்கலாம் என்பதை எல்லாம் அவளே முடிவு செய்கிறாள். அதனால் தான் அவள் அனுமதி இன்றி யாரும் அவள் உடம்பை உற்றூ பாத்தாலும் அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது.

இந்த நாகரீக வளர்ச்சி புரிந்த மார்டன் ஆண்கள், இதனாலேயே தங்கள் இயற்க்கை உந்துதல்களை அடக்கிக்கொள்ள பழகி வைத்திருக்கிறார்கள். சாப்பாடு, தூக்கம், கழிவகற்றல் மாதிரியான இயற்கை உந்துதல்களை பிறருக்கு சங்கோஜம் ஏற்படாத படி, இடம் பொருள் ஏவல் பார்த்து எந்த அளவிற்கு நாசூக்காக செய்கிறார்களோ, அதே போலவே இந்த மனித பெண்ணின குறியையும் அணுகுகிறார்கள்.

இந்த அளவிற்கு நாகரீகம் அடையாத ஆண்களோ, இன்னும் காட்டு மிராண்டிகளை போல, சந்தர்ப்பம் சூழ்நிலை என்று எதையும் கருதாமல், யாருடையது, அதை பார்க்க நமக்கு உரிமை இருக்கிறதா என்ற இங்கீதம் எல்லாம் ஏதும் இல்லாமல், பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்ப்பதை போல, இதையே பெரிய அதிசயமாய் உற்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க்…உங்களை சுற்றி உள்ள ஆண்களை வாட்ச் செய்யுங்கள். அவர்களில் எத்தனை பேர் நாகரீகம் அடைந்திருக்கிறார்கள், எத்தனை பேர் இன்னும் காட்டுமிராண்டியாக இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். நாகரீகம் அடைந்துவிட்ட ஆணாய் இருந்தால் அவனுக்கு ஒரு சபாஷ் போட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், ஆனால் அதற்காக நாகரிகம் இல்லாத ஆண்களை கண்டு வருத்தமோ, கோபமோ, பட்டுவிடாதீர்கள். அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று ஒரம் கட்டிக்கொள்ளுங்கள். அவனுக்கு நாகரீகம் இல்லாததற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்?

ஆண்களை ஹாண்டில் செய்யும் இன்னும் நிறைய ரகசியங்கள் அடுத்த ஸ்நேகிதியில்!

Sunday, February 8, 2009

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி, அத்தியாயம் 10

என்ன ஸ்நேகிதியே, உணர்ச்சிவசப்படாமல், விமர்சிக்காமல், குற்றங்கண்டுபிடிக்காமல், பெண்பாலின கண்ணோட்டமில்லாமல், ஆண்களை வேடிக்கை பார்க்கும் man-watching என்கிற ஸ்வார்சியமான பொழுதுபோக்கிற்கு உங்களை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களா?
ஆல் ரைட்! இப்போது, திரும்பி, உங்கள் அருகே இருக்கும் யாராவது ஒரு x, y, z, இளைஞனை லைட்டாய் கவனியுங்கள். அது வரை தேமே என்று இருக்கும் ஆண், நீங்கள் அவனை பார்க்கிறீர்கள் என்ற உடனே, திடீரென உதவேகம் அடைகிறானா? தலையை சிலுப்பிக்கொள்வது, வாட்சை திருகுவது, அநாவசிய உடல் அசைவுகளில் ஈடுவடுவது, ஸ்டைல் செய்துக்கொள்ளுவது என்று ஏதேதோ புது மாற்றங்கள் அவனுக்குள் நிகழ்வதை கவனிக்கிறீர்களா?
தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்றதுமே லேசாய் அலர்ட் ஆவது எல்லோருக்குமே இயல்பு தான். ஆனால் பெண் அலர்ட் ஆனால், ஒன்று தன்னை தற்காத்துக்கொள்வதற்காக, தன் உடலை சிருக்கிக்கொள்ள முயல்வாள், கொஞ்சம் அலட்டல் பேர்வழி என்றால், தன் உடலை கொஞ்சம் விளம்பரப்படுத்த ஆரம்பிப்பாள். இது தான் பெண்களின் இயல்பு.

ஆனால் ஆண் அலர்ட் ஆனால், தோலை நிமிர்த்தி, முதுகை புடைத்து, புஜங்களை வெளிபடுத்தி, உடனே தன் உடலை பெரிதாக காட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான். இப்படி உடம்பால் மட்டும் இன்றி தன் குணத்தாலும் தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயல்வான். தன் தகுதிகள், திறமைகள், சாதனைகள், வெற்றிகள், தனக்கு இருக்கும் ஆள் பலம், அந்தஸ்து, தன் பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள், தன் பாரம்பரியத்தின் உயர்வுகள், தனக்கு பரிச்சையமான பெரிய மனிதர்கள், என்று எடுத்த எடுப்பிலேயே தன்னை பற்றி ஒரு பெரிய விளம்ப சுருளை விரிக்க ஆரம்பித்து விடுவான் ஆண்.

இதை எல்லாம் நான் கேட்டேனா? இவனாகவே எதற்காக இத்தனையும் சொல்லி தொலைக்கிறான் என்று உங்களுக்கு வியப்பாக கூட இருக்கும். ஆனால் நீங்கள் கேட்கிறீர்களோ, இல்லையோ, தன்னுடைய வீர தீர பரக்கிரமங்களை அவன் அடுக்கிக்கொண்டே போவான். அவனிடம் உள்ள வசதிகள், ஆடம்பரங்கள், அவனுடைய செல்வாக்கு, அவனுக்குள்ள பலங்கள் என்று தன்னை பற்றியே, கொஞ்சம் கூட கலைப்பே இல்லாமல் கிலோ கணக்கில் பேசிக்கொண்டே போவான்.

சும்மா ஒரு நாகரீகத்திற்க்காக தலையாட்டி, உம் கொட்டி வைப்போமே என்று நீங்களும், தன்னை பற்றி அப்பட்டமாய் பெருமை அடித்துக்கொள்வது அநாகரீகம் என்று உணராமல் அவனும் தொடர்ந்து இந்த உரையாடலை நீட்டிக்க, கடைசியில் யாராவது அல்லது எதுவாவது வந்து உங்களை மீட்டால் தான், அப்பாடா என்று நீங்கள் தப்பிக்கவே முடியும்.

இப்படி தன் சுய பிரதாபத்தை பாடிக்கொள்வது தான் ஆண்களின் ஒரு முக்கியமான இயல்பு. சில ஆண்கள் இதற்கு ஒரு படி மேலே போய்விடுவார்கள். தானே தன் சுயபிராதபத்தை பாடிக்கொள்வது கவுரவ குறைச்சல் என்று, இந்த புகழாரம் சூட்டும் வேலைக்கென்றே ஒரு ஆளை பக்கத்திலேயே வைத்துக்கொள்வார்கள். தன்னை பற்றி பேசிக்கொள்ள எல்லாம் பெரிய விருப்பம் இல்லாதவர் போல இவர் அமைதியாக இருக்க, கூடவே இருக்கும் இந்த ஜாலரா கோஷ்டி, “அண்ணன் ஆஹா ஓஹோ” என்று எடுத்து இயம்பும்.

ஆக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தன் புகழை மற்றவர்கள் தெரிந்துக்கொண்டே ஆக வேண்டும் என்று ஆசை படுவது தான் ஆணின் இயல்பு. இளைய வயதுக்காரர்கள், முதிர்ச்சியில் சின்னவர்கள் என்றால், தானே தன் புகழை பறைசாற்றிக்கொள்வார்கள். கொஞ்சம் நாகரீகம் தெரிந்த, வசதி வாய்ப்புக்கள் கொண்ட பெரிசு என்றால், இதற்காகவே ஆட்களை நியமித்துக்கொள்வார்கள். அந்த காலத்து அரசர்கள், அவைக்கு வரும் போது, முழம்முழமாய் அவரை போற்றி, உயர்த்தி பேசி, கடையில் “இத்தனை பெருமைகள் வாய்ந்த இந்த மன்னன், பராக், பராக், பராக்!” என்று முடிப்பார்களே, அதை போல!

அதெல்லாம் சரி, ஆண்கள் ஏன் இப்படி, இத்தனை சிரமப்பட்டு, தங்களை பெரிய மனிதர்களாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்? யாருக்காக இத்தனை அலட்டல்? இப்படி பெரியமனிதனாய் தன்னை காட்டிக்கொள்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? என்று யோசிக்கிறீர்களா? வெரி, குட், இப்போது தான் சமர்த்தான அறிவியல் மாணவி என்று நிரூபவித்து இருக்கிறீர்கள்!

ஸோ, ஆண்கள் எதற்காக, தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்? அப்போது தான் மற்றவர்கள் அவனை மதிப்பார்கள் என்று. Lack of something to feel important about is the greatest tragedy a man can have என்பார்கள் தெரியுமா? தான் எந்தவித முக்கியத்துவமுமே இல்லாதவன் என்ற எண்ணம் தான் ஒரு ஆணுக்கு இருப்பதிலேயே மிக மோசமான துக்கம். அந்த சோகநிலை தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று தான் ஆண்கள் எல்லாம், தங்களை முக்கியமானவர்களாய் காட்டிக்கொள்ள பெரிதும் போராடுகிறார்கள். சொல்ல போனால், தன் வாழ் நாள் முழுவதையுமே அநேக ஆண்கள் இந்த முக்குயத்துவ விகித்தை அதிகரிப்பதற்க்காவே செலவிடுகிறார்கள்.

இத்தனை பாடுபட்டு, இந்த முக்கியத்துவ விகித்த்தை அதிகரிக்கத்தான் வேண்டுமா? மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்று ஏன் அவனுக்கு தோன்றுகிறது? பிறர் மதித்தால் அவனுக்கு அப்படி என்ன கிடைத்து விட போகிறது என்று நீங்கள் ஏலனமாக கூட நினைக்கலாம்....ஆனால் உண்மை என்ன தெரியுமா, பிறர் அவனை மதிக்கிறார்களோ, இல்லையோ, மற்றவர்கள் தன்னை மதிப்பதாக அவன் நம்பினால் தான் அவன் உடல் ரசாயணங்கள் சரியாகவே உற்பத்தி ஆகின்றன!

ஆண்கள் ஆண் தன்மையுடன் இருக்க காரணமே டெஸ்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன் தான். இந்த ஹார்மோனின் சுரத்தல் வெளிஉலக அனுபவத்தை பெருத்தே இருக்கிறது. ஒரு ஆண் தான் முக்கியமானவன், மற்றவர்களால் போற்றப்படுகிறவன், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமானவன் என்று நினைத்துக்கொண்டாலே ஒழிய அவனுக்கு போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரப்பதில்லை.

டெஸ்டோஸ்டீரான் போதுமான அளவில் சுரக்கவில்லை என்றால் ஆணின் மனம் சோர்வாகிவிடுகிறது, வாழ்வை வெறித்து, எதிலுமே நாட்டமில்லாமல் சோம்பிக்கிடக்கிறான் ஆண். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு மாநகரின் நடைபாதையோர கால்னடையை எடுத்துக்கொள்வோமே. குறிப்பாக நாய்கள். நாய்களின் இன்பெருக்கத்தை குறைக்கும் யுத்தியாய் மாநகராட்சிக்கார்ர்கள் ஆண் நாய்களை பிடித்து போய், விரை நீக்கம் செய்துவிடுகிறார்கள். விரைகளை நீக்கிவிட்டால், இனி விந்தணுக்கள் உற்பத்தி ஆகாது, விந்தணூக்களே இல்லை என்றால், இனம் பெருகாதே!

ஆனால் விரைகள் தான் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஆண்பால் ஹார்மோனை உறப்த்தி செய்கின்றன. விரைகள் நீக்கப்பட்டால், டெஸ்டோஸ்டீரோன் சுரத்தல் நின்று போய்விடும். அதனால் என்ன என்கிறீர்களா? மும்பை சாலைகள் அனைத்திலும், இரவு, பகல் பாராமல், குண்டு குண்டாய் சுருண்டு கிடக்கும் ஆண் நாய்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்! டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி இல்லாத்தால் இந்த நாய்கள் எல்லாம் உடல் உழைப்பில் ஆர்வமே இல்லாமல், வெறூமனே தூங்கிக்கொண்டிருப்பதினால், எடை பெருத்து, சோம்பேறியாகி விட்டிருக்கின்றன! எதிலுமே எந்த நாட்டமும் இல்லாமல், அக்கடா என்று கிடக்கின்றன!

ஆக, டெஸ்டோஸ்டீரான் இல்லாத ஆண்குலத்தின் நிலை இப்படி தான் ஆகிவிடும். எந்த வித வேட்கை உணர்வுமே இல்லாமல் சும்மா இருப்பதே சுகம் என்று மனிதர்கள் ஆகிவிட்டால், அப்புறம் மனித இனம் அழிந்தேவிடுமே.

அதனால் தான் மனித ஆண் தன் டெஸ்டோஸ்டீரான் அளவை முடிந்த மட்டும் அதிகமாக்கிக்கொள்ள முயல்கிறான். முக்கியத்துவம் என்ற அளவுக்கோளை வைத்து எப்போதுமே அவன் தன்னை தானே அளந்துக்கொண்டே இருக்கிறான்.

சோம்பிக்கிடக்கும் ஆணால் யாருக்கும் எந்த பயனும் இல்லையே, வேட்கை கொண்ட ஆண்கள் இருந்தால் தானே சமுதாயம் உருப்படும். அதனால் தான் ஆணின் இந்த இயல்பே பற்றி தெரிந்த கெட்டிக்கார மனித பெண்கள் எல்லாம், தாமும் கூட சேர்ந்து அவனுக்கு தூபம் போட்டு, அவன் டெஸ்டோஸ்டீரானின் அளவை அதிகரிக்க உதவுகிறார்கள்.

அவன் தன்னை பற்றி பீற்றிக்கொள்ளும் போது, ரொம்பவும் கவனமாய் அவனை ஊக்குவிக்கிறார்கள். இவர்களும் கூட சேர்ந்து ஒத்து ஊதி, ஆமாம் ஆமாம், நீ உண்மையிலேயே ரொம்ப பெரியவன் தான் என்ற மாயையை அவன் மனதில் ஏற்படுத்துகிறார்கள். புகழ் ஒரு பெரிய போதை என்பதால் ஆண்களும் அதற்கு அடிமையாகி போகிறார்கள். புகழ்ச்சிக்காகவே தன் தன்மைகளை மாற்றிக்கொள்ளவும் முயல்கிறார்கள்! ஆக, வெறும் புகழ்ச்சி என்கிற அங்குசத்தை வைத்தே எத்தனை பெரிய வலிய ஆண்களையும் வீழ்த்தி, தன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள் பெண்கள்!

ஆக, முக்கியத்துவம், புகழ்ச்சி, ஆகியவை தான் இந்த வாரத்து ஓம்வர்க். நீங்கள் உக்குவிக்க முயலும் ஆண்களை உயர்வாக நடத்துங்கள், அவர்களை “நீ பெரியவனாக்கும்” என்று நம்பவையுங்கள். பிறகு பாருங்களேன், இந்த நம்பிக்கை சுரக்க தூண்டும் டெஸ்டோஸ்டீரானின் உபயத்தால், உண்மையிலேயே பெரிய மனிதனாய் மாறி காட்டுவான் ஆண்!

இதற்கு நேர் எதிராக, யாரவது ஒரு ஆணை பார்த்து, “சீ, நீ எல்லாம் ஒரு மனித பிறவியா? உன்னை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை போடா!” என்று அட, நீங்கள் சொல்லக்கூட வேண்டாம், லேசாக உங்கள் முகத்தை ஒரு சுழி சுழித்தாலும் போதும், அவ்வளவு தான், அவன் ஈகோ எரிமலை வெடித்து கிளம்ப, தகித்து துடித்துப்போவான் ஆண்.

ஆக, பிறரின் நன்மதிப்பு- குறிப்பாக பெண்களின் நன்மதிப்பு தான் ஆண்கள் தங்கள் முக்கியத்துவத்தை அளவிடும் மீட்டர் என்பதினால், தரமான ஆண்களை கண்டால் தாராளமாக முக்கியத்துவம் தந்து ஊக்குவியுங்கள். தரங்கெட்ட ஆண் என்றால், ஜெஸ்ட் இக்நோர் ஹிம். பிரயோகித்துப் பாருங்களேன், இந்த முக்கியத்துவமீட்டரின் மகிமை அப்போது தான் உங்களுக்கு புரியும்!

Tuesday, February 3, 2009

ஆண்-வாட்சிங்

என்ன ஸ்நேகிதி, உங்கள் வாழ்வின் முக்கியமான ஆண்களை எல்லாம் கண்டுஃபை பண்ண ஆரம்பித்துவிட்டீர்களா? வெரி குட். இப்படி அவர்களை நீங்கள் கவனிக்கும் போது, பல முக்கியமான அம்சங்கள் உங்கள் கண்ணில் படும். உதாரணத்திற்கு உங்கள் எதிரில் அந்த ஆண்களின் உடல் அசைவுகள், பேசும் விதம், பேசும் தலைப்புக்கள், குரலின் ஏற்ற இறக்கம், பேசும் தோரனை, இத்யாதி, இத்யாதிகள். இதை எல்லாம் சாதாரண கண்களால் பார்த்தால் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னேனே, அறிவியல் மாணவியாக மாறி, ஆண்களை உங்கள் பாடபொருளாக எண்ணிக்கொள்ளுங்கள் என்று. அப்படி நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றி, பெண் என்கிற பிரக்ஞையை விட்டு வெளியேறி, முற்றிலுமாய் விஞ்ஞான பூர்வமாய் ஆண்களை அணுக வேண்டும். அதனால் சாதாரண பெண்பால் கண்களை தொடைத்துவிட்டு, பாலினமே இல்லாத விஞ்ஞான கண்களால் ஆண்களை கவனியுங்கள். என்ன உங்கள் மனதையும், பார்வை கோணத்தையும் மாற்றியாச்சா? ஓகே, நவ் யூ ஆர் ரெடி டு டூ சம் man-watching!
இந்த Man watching என்பது ரொம்பவே ஸ்வாரசியமான ஒரு பொழுது போக்கு. பறவைகளை வேடிக்கை பார்க்கும் பர்ட் வாட்சிங், காடுகளுக்குள் போய் வனவிலங்குகளை நேரடியாக பார்த்து புரிந்துக்கொள்ள உதவும் சஃபாரி பயணம், கடலடியில் டைவ் அடித்து நீர் வாழ் உயிர்களை காண உதவும் ஸ்கூபா டைவிங் மாதிரி, மனித ஆண்ணினத்தை நேரடியாக பார்த்து, observe செய்து அவர்களை பற்றி புரிந்துக்கொள்ள உதவும் இந்த சமாசாரத்தை தான் Man Watching என்கிறோம். பறவைகள், விலங்குகள், கடல் பிராணிகள் மாதிரியான வற்றை பார்க்கவாவது காடு, மேடு, குலம், கடல் என்றெல்லாம் போய் மெனக்கெட வேண்டும். ஆனால் இந்த ஆண்-வாட்சிங் இருக்கிறதே, எந்த விதமான சிரம்முமே இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே ஜோராய் செய்து விடும் சுலபமான பொழுதுப்போக்கு இது.
ஆனால் இது வெறும் ஒரு பொழுது போக்கு மட்டும் அல்ல, இது ஒரு சயின்ஸ், அறிவியல் துறை என்பதால், சும்மா போகிற வருகிற எல்லோருக்கும் இந்த சமாசாங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட முடியாது. ஆண்-வாட்சிங் மாதிரியான மிக உயர்நிலையான இந்த பாடங்களை கற்றுக்கொள்ள உங்களுக்கு பல அடிப்படை தகுதிகள் இருந்தாக வேண்டும்.
அதில் முதல் தகுதி: உணர்ச்சிவசப்படக்கூடாது. தமிழ் சமுதாயம் என்ன தான் கலை, இலக்கியம், தொழில்நிட்பம், மாதிரியான பல துறைகளில் அந்த காலத்திலேயே பெரிய சாதனைகள் செய்திருந்தாலும், அறிவியலில் நாம் புதிதாக, பெரிதாக எதையும் கண்டுபிடித்துவிடவில்லை. காரணம் அறிவியலில் ஈடுபட உணர்ச்சியற்ற மனநிலை தேவைபடுகிறது. நமது சமுதாயமோ உணர்ச்சிக்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் தந்து வருவதால், உணர்ச்சிகளை மறந்து முழுக்க முழுக்க அறிவு பூர்வமாய், ஏன் எதற்கு எப்படி, எதனால் என்று கேட்டு, விடைகளை தேடும் பக்குவம் நமக்கு லேசில் சாத்தியமாவதில்லை. மனித மூளையின் டிசைன் எப்படி தெரியுமா? அடி மூளை உணர்ச்சி வசப்படும், மேல் மூளை பற்றற்று யோசிக்கும். எரிப்ரொருள் சிக்கனத்திற்காக, இந்த இரண்டில் ஒன்று வேலை செய்தால் இன்னொன்று ஆஃப் ஆகி விடும்படியாக தான் மூளை வடிவமைக்க பட்டுள்ளது. அதனால் தான் உணர்ச்சிவசப்படும் போது, தெளிவாக யோசிக்க முடியாமல் போகிறது. அதுவே அறிவியல் நோக்கோடு யோசிக்கும் போது, உணர்ச்சிகள் ஏற்படுவதில்லை. அதனால் ஸ்கிதிகாள், இந்த உணர்ச்சி மூளையை ஆஃப் செய்துவிட்டு, வெறும், அறிவு மூளையை ஆன் செய்யும் போக்கை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, விமர்சனமற்ற மனநிலை, being non-critical. நம் ஊரில் இது ஒரு பழக்கம். நமக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அது பற்றி, முழுதாய் தெரியுமோ, தெரியாதோ, ஆனால் எல்லாவற்றை பற்றியும் முன் கூட்டியே ஒரு அபிர்ராயத்தை, preformed conclusionனை ஏற்படுத்திக்கொண்டு விடுவோம். அந்த அபிப்ராயத்தை தவறு சரி என்று சீர்தூக்கிபார்க்காமல் விடாபிடியாக பிடித்துக்கொண்டே இருப்போம். இந்த அணுகுகுறை ஆண்-வாட்சிங் என்கிற நமது ஆட்டத்திற்கு கொஞ்சம் கூட சரிபடாது. எந்த பாடபொருளானாலும், அதை அதனுடைய சுபாவத்தோடே ஏற்றுக்கொண்டு, சரி தவறு என்று ஓவராய் விமர்சனம் செய்யாமல், எது எப்படி இயங்குகிறதோ, அதனை அப்படியே கவனித்து கொள்வது முக்கியம். அப்புறம் தானே, இப்படி இயங்குவதை வேறு எப்படி எல்லாம் மாற்றி இயக்கலாம் என்று யோசிக்கவே முடியும்!
மூன்றாவது முக்கியமான தகுதி, குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவர்க்க வேண்டும், nonjudgmental மனப்பாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் உள்ள ஜீவன்கள், வஸ்துக்கள், ஜந்துக்கள் என்று எல்லாமே வேவ்வேறு விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்குகின்றன. புள் உயிர் தான், ஆனால் மான் அதை சாப்பிடுவதை பாவம் என்று கருதுவதில்லை. மானும் ஒரு உயிர் தான், புலி மானை சாப்பிடுவதை பாவம் என்று நினைப்பதில்லை. இரண்டும் உயிர்கள் தானே என்று மான் புலியை சாப்பிடுவதில்லை, புலியும் புள்ளை சாப்பிடுவதில்லை. அதே போல, இரண்டும் மான் தான் என்றாலும் ஆண் மானின் சுபாவமும் பெண் மானின் சுபாவமும் வெவ்வேறு. புலிகளும் அப்படியே. காரணம், ஒவ்வொரு உயிருக்கும், பாலினத்திற்கும் வேறு வேறு விதிகள்- இது தான் இயற்க்கையின் ஏற்பாடு என்பதால், இதை போய், ஹிம்சை-அஹிம்சை, சரி-தவறு, ஞாயம்-அநியாயம் என்றெல்லாம், மனித கண்ணோட்டத்தின் கோட்பாடுகளை இந்த சந்தர்பங்களுக்கு பொருத்தி பார்க்க முயல்வது வெட்டு வேலை மட்டுமல்ல, முட்டாள் தனமும் கூட. அதனால் இந்த சரி-தவறு என்கிற குறுகிய அணுகுமுறையை விட்டு வெளியேறி, அந்த அந்த உயிரை அதன் அதன் இயல்போடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் ரொம்ப முக்கியம்.
அடுத்த தகுதி: பாலியல் மறதி! நீங்கள் ஒரு பெண் என்பதை நீங்கள் மறந்தாக வேண்டும். முடிந்தால் உங்களை ஒரு ஆணாகவோ, அல்லது பாலினமே இல்லாத ஒரு வேற்றுலக அமானுஷயராகவோ கற்பனை செய்துக்கொள்ளலாம். அப்போது தான் ஆண்-பெண் என்கின்ற எல்லைகளை மறந்து, உங்கள் பாலினத்தின் ஓரவஞ்சனைகளை விடுத்து, முழு அறிவியல் கண்ணோட்டத்துடன் மனித ஆணை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.
கடைசி தகுதி: விளயாட்டு தனமாய் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை. ஆண்-வாட்சிங் என்பது ரொம்பவே ஜாலியான, தமாஷான, அதே சமயம் ஸ்வாரசியமான சமாசாரம். அதனை முழுவதுமாக என்ஜாய் செய்ய உங்கள் கெடிபிடிகளை விட்டு தொலையுங்கள். புதிய ஊருக்கு போய் அங்குள்ள முன் பின் தெரியாத மனிதர்களோடு பழகி அவர்களது கலாசாரத்தி புரித்துக்கொள்ள போகிறீர்கள் என்று வையுங்களேன். உம் என்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு, ஒரு ஓரமாய் உட்கார்த்து, சீ சீ இதுங்க எல்லாம் மனித் பிறவிகள் தானா! இப்படி இருக்குதுங்களே என்று நீங்கள் ஆயிரம் முறை அலுத்துக்கொண்டாலும், பாதிப்பு, அந்த ஊர்காரர்களுக்கு இல்லை. அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள போனவர் நீங்கள் தானே, அதனால் இழப்பு உங்களுக்கு தானே! இதற்கு தான் participant observer என்ற டெக்னிக்கை கையாள சொல்கிறார்கள் மானுடவியல்காரர்கள். அவர்களோடு பழகி, அவர்கள் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொண்டே அவர்களை புரிந்துக்கொளவது தான் மிக சிறந்த யுத்தி! அதனால் ஆண்-வாட்சிங் என்கிற அரிய விஷயத்தை கற்றுக்கொள்ள போகும் அதிர்ஷடசாலிகளே, இறுக்கம் தளருங்கள். ஈஸியாக இருங்கள். விளையாட்டு தனமாய் இருங்கள். ஆண்களோடு உறவு, வேலை, வியாபாரம், கல்வி, கூட்டு முயற்சி என்று எல்லா துறைகளிலும் பங்கு பெறுங்கள். அப்படியே ஸைட் பை ஸைட் அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை உணர்ச்சிவசப்படாமல், விமர்சிக்காமல், குற்றங்கண்டுபிடிக்காமல், பெண்பாலின கண்ணோட்டமில்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டே இருங்கள்.
The eyes cannot see what the mind does not know, என்பார்களே, உங்கள் மனதிற்கு ஏற்கனவே தெரியாதவற்றை உங்கள் கண்கள் பார்ப்பதே இல்லை. இத்தனை நாட்களாக, உங்கள் மனதுக்கு புரியாததால் நீங்கள் கவனிக்கத்தவறிய பல விஷயங்கள் இனி உங்கள் ஞான திரிஷ்டியில் தெரிய வரும். இப்போது பாருங்களேன், மனித ஆணின் உலகம் மாயகண்ணாடி மாதிரி அப்படியே உங்கள் கண் முன் தெரியும். இத்தனை நாட்களாக கூடவே இருந்தும் இது வரை நீங்கள் கவனியாத எத்தனையோ புதிய புதிய விஷயங்கள் இப்போது உங்கள் கண்ணில் படும்.