Sunday, May 31, 2009

பெண்களின் மனயிறுக்க நிவாரணம்: ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட்
நெய்வேலி லிக்நைட் கார்ப்பரேஷனில் பெண் ஊழியர்களுக்கான ஒரு சங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பெண் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய மன இறுக்கத்தை போக்கும் உபாயங்களை உபதேசிக்க போயிருந்தேன். இதே போல, சென்னை பெட்ரோகெமிகள் கார்பரேஷன் லிமிடெட், எனப்படும் CPCL, மற்றும் BHEL ஆகிய நிறுவனங்களிலும் இப்படி பெண் ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் உரையாற்றிய போது, சில பொது விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. அவையானவை:
1) எப்பேற்பட்ட நிறுவனமானாலும், எந்த உயர் பதவி வகித்தாலும், அந்த பெண்கள் எல்லாம், இது மாதிரி ஏதாவது விசேஷம் என்றால், சொல்லி வைத்த மாதிரி கல்யாண கலை சொட்ட அமர்க்களமாக டிரெஸ், நகைகள், என்று ஜமாய்த்துவிடுகிறார்கள். புரஃபெஷனல் உடை என்கிற கான்செப்டே பலருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை. பெண்கள் பலரும் காஞ்சி பட்டுடுத்தி,கலர் பொட்டு வைத்து, மஞ்சள் பூசி, பூ, கம்மல், ஜிமிக்கு, கொலுசு, மெட்டி சகிதம் வந்து விடுகிறார்கள். வேறு சில பெண்கள் கச்சிதமான காட்டன் சேலை, லைட்டா கொஞ்சம் மேக் அப், நகை என்று மார்டன் ஸ்டையிலையும் கடைபிடிப்பதை பார்க்க முடிகிறது. எது எப்படியோ, பெண் என்றால், அலங்கார பூஷிதமாய் தான் காட்சி அளிக்க வேண்டும் என்கிற இந்த கான்சேப்ட் மட்டும் இன்னும் உயர் பதவி வகிக்கும் பெண்கள் மத்தியிலும் தொடரத்தான் செய்கிறது
2) எந்த நிலையிலும் பெண்களுக்கு மிக பெரிய ஸ்டிரெஸ் பாக்டரே அவர்கள் குடும்பம் தான். அநேக பெண்கள் கேட்கும் கேள்விகள் எல்லாமே பிள்ளைகள், மாமியார், கணவன், அவர் குடும்பத்தினர் ஆகியோர் தரும் இம்சைகளை பற்றி தான் இருக்கின்றன.
3) ஆஃபீஸ் ஸ்டிரெஸ் என்று பெண்கள் கூறுவது: தகுதிகள் இருந்தும் உயர் பதவிகளுக்கு பெண்களின் பெயர்கள் சிபாரிசே ஆவதில்லையாம். கேட்டால், ஆணுக்கு இந்த உயர் பதவியை கொடுத்தால் அவன் குடும்பமே பலன் அடையும், உங்களுக்கு என்ன உங்கள் கணவர் தான் நல்ல வேலையில் இருக்கிறாரே, இந்த வேலை உயர்வின் கூடுதல் வருமானம் உங்களுக்கு தேவை இல்லை தானே, அதனால் தான் ஆண்களுக்கு அந்த வேலையை தருகிறோம் என்கிறார்களாம். அப்படியானால் தகுதிக்கு மதிப்பே இல்லையா, ஒரு பெண்ணின் கணவரை பற்றி கணக்கு பார்த்தா வேலை உயர்வுகளை தீர்மானிப்பது, இது அநியாயம் என்று நொந்துபோகிறார்கள் டாப் கேடர் பெண்கள்
4) எல்லா தரப்பு பெண்களும் சொல்வதும், சலித்து போவதும், சரி இது இப்படி தான், சனியன் போய் தொலையட்டும் என்று விட்டு வைப்பதும் ஒன்றே தான்: அது பெண் என்பதனால் ஆண் சகாக்கள் காட்டும், இலக்காரமும், கிண்டல் தோரனையும்.

சந்தோஷமான சேதி: இந்த வகை நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு செஸுவல் ஹராஸ்மெண்ட் அவ்வளவாக இல்லை!
கேட்டால் ஆண் சகா சொன்ன பதில்: இங்கே வேலை செய்யும் பெண்களுக்கெல்லாம் 40 வயதுக்கு மேல மேடம்! வாட் டஸ் தட் மீன்?!

Saturday, May 23, 2009

இலங்கை தமிழருக்கான மருத்துவ உதவி

கூட்டு பிரார்த்தனைக்குண்டான பலனா, அல்லது சம்பவங்களின் யதார்த்த தொடர்சியா, அரசியல் மாற்றங்களின் பின் விளைவா, ஏதோ, எப்படியோ, இலங்கை தமிழருக்காக உதவ, இந்தியாவிலிருந்து மருத்துவ குழு வவுனியா போயிருப்பதாய் தகவல்....அங்கே என்ன நடக்கிறது, இனி மேலும் எப்படி எல்லாம் உதவலாம், என்பவை எல்லாம் இனிமேல் தான் தெரியவரும். லெட் அஸ் வெயிட் அண்ட் ஸீ.....

Thursday, May 21, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 17

சென்ற இதழில் சொன்ன மாதிரியே ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? அவனை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவனை ஊக்குவிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அவன் உண்மையிலேயே ஒழுங்கன்தானா என்றுசரி பார்த்திடுங்கள்.

பல சமயங்களில் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒரு வெற்று ஆசாமியின் மேல் உயிரையே வைத்துவிடுகிறார்கள். காதலால் கசிந்துருகி, அவனை கடவுள் ஸ்தானத்திற்கே உயர்த்தி, அவனுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்த பிறகுதான் தெரியவரும் அவன் ஒரு மோசமான கிராதகன் என்று. அவன் புலித்தோல் போத்திய பூனை, போலித்தனமான ஆசாமி, பெண்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் மலிவானவன் என்பதெல்லாம் தெரிய வந்த பிறகும், ``அய்யோ, அவன் கேவலமானவன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும், அவனை மறக்க முடியலையே, அவன் பேசுன பேச்செல்லாம் என் காதுல இன்னும் ஒலிச்சுகிட்டே இருக்கே'' என்று எத்தனையோ பெண்கள், ஆசைப்பட்டவன் ஆபத்தானவன் என்று தெரிந்த பிறகும் அவனை மனதிலிருந்து நீக்க முடியாமல் தவிப்பதுண்டு.

இந்த வம்பெல்லாம் வரவே கூடாது என்றால், எடுத்த எடுப்பிலேயே இவன் நம்பகமானவன்தானா? இல்லையா? என்று சரிபார்த்துவிடுங்கள்.

எப்படி? அவன் பேச்சை வைத்துதான். வெறும் பேச்சை வைத்து எப்படி ஒருவனை அளவிடுவது என்கிறீர்களா? சிம்பிள்!

சராசரி ஆண்களுக்கு அவ்வளவாகப் பேச வராது. கடிதம் எழுதச் சொன்னால், அதற்கு மேல் சொதப்புவார்கள். காரணம், ஆண் மூளையில் மொழிக்கான மையம் மிக சின்ன சைஸ் மட்டுமே. அதனால இயற்கையில் ஆண்களுக்கு பேச்சு சாமர்த்தியம் பற்றாது.

இது இப்படி இருக்க, சில ஆண்கள் மட்டும் அலங்காரமாகப் பேசுவார்கள். உங்களை பேச்சிலேயே மயக்கி, சோப்பு போட்டு, உலகிலேயே நீங்கள்தான் ரொம்பக் கவர்ச்சியான/சூப்பரான பெண் என்கிற அளவிற்கு உங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படி ஒரு ஆண் தித்திக்கத் தித்திக்க பேசுவது உங்கள் காதில் தேன் வந்து பாய்ந்தது போலத்தான் இருக்கும். காரணம், பெண்களுக்குத்தான் மூளையில் பெரிய மொழி வள மையம் உண்டே. அதனாலே யாராவது நன்றாகப் பேசினாலே போதும், பெண்கள் எல்லாம் அப்படியே மந்தை மந்தையாய் மயங்கிப் போவார்கள்.

ஆணுக்குத்தான் இயற்கையிலேயே பேச்சு சாமர்த்தியம் வராதே. அதை மீறி ஒருத்தன் பெண்களை கவருமாறு பேசுகிறான் என்றால் என்ன அர்த்தம்? பேச்சுதான் பெண்ணின் மனதை அடைவதற்கு உண்டான ஷார்ட் ரூட், என்கிற இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு, ``எப்படிப் பேசினால் பெண்களுக்குப் பிடிக்கும்?'' என்பதை ஒரு வித்தை மாதிரி கற்றுத் தேர்ச்சி பெற்று வைத்துக் கொள்கிறார்கள் சில வகை ஆண்கள். வேலை மெனக்கெட்டு இதைப் போய் அவன் கற்று தேர்ச்சி பெற்று வைத்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? இதையே தன் ஆஸ்தான வேலையாக அவன் வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்! வீடு, படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் தன் அவகாசத்தை பெண்களிடம் பேசி தேர்ச்சிபெற இவன் பயன்படுத்தினான் என்றால் என்ன அர்த்தம்? அவனுக்கு இதில் பெரிய நாட்டம் இருக்கிறது. இது அவனுக்கு முக்கியம் என்று படுகிறது. இதில் அவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது. அதனால் அவன் ஆர்வமாக இதைப் பயிலுகிறான்.

எத்தனை பெண்களிடம் பேசிய அனுபவம் இருந்தால் அவன் அதை ஒரு வித்தையாக உபயோகிக்கப் பழகி இருப்பான்?

ஆக, அழகாக, அலங்காரமாக, புகழ்ச்சியாக, இதமாக, இனிமையாகப் பேச ஒரு ஆண் கிடைக்கமாட்டானா என்பதே எல்லாப் பெண்களின் ஆசையாக இருந்தாலும், இப்படி எல்லாம் பேச எந்த ஆணுக்கும் இயல்பிலேயே வராது. பிகாஸ் ஆஃப் தி ஸ்மால் மொழி மையம். இந்த இயல்பை மீறி ஒருவன் அழகாகப் பேசினால் அவன் இயல்பானவனாக எப்படி இருக்க முடியும்? இது செயற்கையாக அவன் கற்றுக்கொண்ட வித்தை என்பதால் அவன் நம்பத் தகுந்தவனாக இருக்க வாய்பில்லை.

அதனால் ஸ்நேகிதிகள், உங்கள் காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு, எவன் என்ன பேசுகிறான் என்பதைக் கவனமாகக் கேளுங்கள். எவனாவது அநாவசியமாக அசடு வழிந்து, ஓவர் ஸ்வீட்டாய் பேசினான் என்றால், உஷார். பையன் பேச்சில் ஓவராய்த் தேர்ந்திருப்பதே அவன் செயற்கையானவன் என்பதன் வெளிப்பாடு.

இதற்கு நேர் எதிராய் சில ஆண்கள் இருப்பார்கள். சுட்டுப் போட்டாலும் அவர்களுக்குப் பேசவே வராது. எந்த சமயத்தில் என்ன பேச வேண்டும். யாரிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும், எதைச் சொல்லாம், எதைச் சொல்லக்கூடாது என்பதுகூட தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அவர்களது துறைசார்ந்த விஷயம் என்றால் மட்டும் நன்றாகப் பேசி விளாசி விடுவார்கள். இந்த வகை ஆண்கள் படிப்பு, வேலை, விளையாட்டு, வீடு, என்றே நேரத்தைச் செலவிடும் இவர்களுக்கு, பெண்களிடம் பேசி அவளை மயக்கவெல்லாம் அவகாசமே இருந்திருக்காது. பெண்களிடம் அதிகம் பேசாததால் பெண்ணுக்கு ஏற்ற மாதிரி நேக்காகப் பேச அவர்கள் கற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் காதலி, மனைவி, மகள், சகா என்று எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஆண்களிடம் பேசுவது போலவே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடுவார்கள். அல்லது லெக்சர் அடித்து, ஆபீசில் பேசுவது போல அதிகாரமாகப் பேசுவார்கள். ``எல்லாம் சரியா இருக்கான். ஆனா என் மனசைப் புரிஞ்சி பேச மட்டும் தெரியலையே'' என்று நீங்களேகூட நொந்து போவீர்கள்.

ஆனால் விசித்திரம் என்னவென்றால், இந்த வகை ஆண்கள்தான் நம்பகமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஜாலப் பேச்சு, பெண்மனதைக் கவரும் வித்தை என்பவை எதுவுமே தெரியாது என்பதால், அவர்கள் முழுக்க முழுக்க இயல்பாகவே செயல்படுவார்கள். ``அய்யோ இவ இவ்வளவு வாயாடியா இருக்காளே, இவளை என்னால சமாளிக்க முடியலையே'' என்று நொந்து கொண்டு ``சும்மா சும்மா பேசு பேசுன்னா என்னத்தைப் பேசுறது. எனக்கதுக்கெல்லாம் டைம்மில்ல, ஆளைவிடு'' என்று வெட்டிப் பேச்சிலிருந்து தப்பிஓடிவிடுவார்கள்.

என்ன இவன் ``பேசவே மாட்டேன்றானே'' என்று பெண்கள் வாடினாலும், இப்படிப் பேசாமல் காரியத்தில் குறியாக இருப்பதுதான் ஆணின் இயல்பு என்பதை உணர்ந்து, அவனை அவனாகவே இருக்க நீங்கள் அனுமதித்தால், காலப் போக்கில் தன் ஆண் நண்பர்களிடம் பேசுவது போலவே உங்களிடமும் ஹாசியமாக பேச ஆரம்பித்துவிடுவான் இவன். ஆனால் அப்போதும் தித்திப்பாகவோ, அலங்காரமாகவோ பேசமாட்டான். டு தி பாயிண்ட், கரெக்டாய் மட்டுமே பேசுவான். அதுதான் அவன் இயல்பு என்று அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டீர்கள் என்றால் நோ பிராப்ளம்.

இந்த இரண்டு வகை ஆண்கள் போக, பெண் என்றால் உடனே படக் என பக்கத்தில் வந்து, தத்துப் பித்து என்று உளறி அப்பட்டமாய் ஜொள்ளுவிடும், முதிர்ச்சியே இல்லாத ஆண்கள், பெண் என்றாலே ஏதோ, அவனை மயக்கி, மாயம் செய்துவிடவே அவதாரம் எடுத்தவள் மாதிரி பாவித்து எரிந்து விழும் ஆண்கள், பெண்கள் என்றால் கூசி, வெட்கி, பேச வராமல் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் ஆண்கள், என்று பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.

இத்தனை வகை ஆண்களில் உங்கள் ஆள் எந்த வகை என்பதைக் கவனியுங்கள். ஜாலப் பேச்சுக்காரன் என்றால், ஜெஸ்ட், வேடிக்கையாய் பேசி, பொழுது போக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் அவனை நம்பி, ``எனக்கு மட்டுமே உண்மையாய் இருப்பான்'' என்று நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டுவிடாதீர்கள். இவன் கழுத்தறுப்பு கேஸ், வெட்டிப் பேச்சுக்கு மட்டும்தான் லாயக்கி என்பதை மறக்காதீர்கள்.

அசட்டு ஜொள்ளு கேஸ், எரிமலை கேஸ், வெட்கசிகாமணி கேஸ் என்றால், என்னதான் உங்கள் அன்பைக் கொட்டி, அவனை நீங்கள், ``மாற்றிக் காட்டுகிறேன்'' என்று கங்கணம் கட்டிக் கொண்டு முனைப்பாய் செயல்பட்டாலும், வேஸ்ட். அதனால் உங்கள் கவனத்தை திசை திருப்பி, உருப்படியாக வேறு ஏதாவது வேலையைப் பாருங்கள்.

டூ தி பாயிண்ட் பேசும், பெண்களிடம் ஜொள்விடத் தெரியாத கண்ணிய சிகாமணி என்றால், ஓ.கே., பையன் நீண்ட நாள் உறவிற்கு ஒத்து வருவான் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரலாம். ஆல் ஆபவுட் தட் இன் அடுத்த ஸ்நேகிதி!

Wednesday, May 20, 2009

இலங்கை தமிழருக்கான உதவி

இலங்கை தமிழருக்கு மருத்துவரீதியில் உதவுவது இனிமேலாவது சுலபமாக இருக்கும் என்று நம்புவோம் என்று எழுதினேன். யாரோ பெயர் சொல்ல விரும்பாத பிரகஸ்பதி, விளையாடுகிறாயா, மண்டையில மூளை இல்லையா என்பது மாதிரி கமெண்ட் அடித்து, என் சிற்றறிவை தட்டி வேலை செய்ய வைக்க, ஏதோ என்னாலான சின்ன சின்ன துப்புக்கள் சில வற்றை துலக்குனேன்:
1) இலங்கையில் தற்போது எந்த தொண்டு நிறுவனமும் நிவாரண பணிகள் செய்ய வில்லையாம், ரெட் கிராஸை கூட வெளியேற்றி விட்டதாம் ராஜபக்‌ஷே அரசு. ஆக வெறும் இலங்கை ராணுவத்தின் தயவு தாட்ஷண்யத்தை தவிற வேறு எந்த கதியும் தமிழருக்கு இல்லையாம்
2)இந்தியா நிவாரண நிதி, மருந்துமாத்திரைகள் என்று டண் கணக்கில் அனுப்புவதாக அறிக்கை விடுத்தது. ஆனால் எதை எப்படி அனுப்பினாலும் அதெல்லாம் இலங்கை ராணுவம் தான் பெற்று விண்ணியோகம் செய்யுமாம்....பாரபட்சமின்றி பரோபகாரம் செய்யும் பக்குவம் எல்லாம் இந்த ராணுவ வீரர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் என்பதால், அனுப்பப்படும் உதவி பொருட்கள் கிடைக்க வேண்டிய அபலைகளின் கண்ணில் படாமலேயே ஸ்வாஹா ஆகிவிடும் அபாயம் அதிகம். அதனால் இந்த ஆப்ஷனும் அவுட்
3) மெடிசன் சான்ஸ் பார்டர்ஸ் மாதிரியான பண்ணாட்டு பாரபட்ஷம் பாரா மருத்துவ தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். இலங்கையில் வந்து பணியாற்ற இவர்கள் ஆர்வமாக இருந்தாலும், இது போன்ற மனிதர்களின் தொண்டை ஏற்றுக்கொள்ளும் ஆர்வம் ராஜபக்சே அரசுக்கு இப்போதைக்கு இல்லை.

ஆக கூட்டி கழித்து பார்த்தால், இலங்கை தமிழருக்காக இப்போதைக்கு நாம் செய்ய முடிந்ததெல்லாம் வெறும் பிரார்த்தனை மட்டும் தான்.....

பிரார்த்தனை என்றதும் தான் நினைவிற்கு வருகிறது. இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் இலங்கையில் மதம் சாகவில்லை. பௌதர்களும், கிறுத்திவர்களும் அங்கே மததொண்டாற்றிக்கொண்டு தானே இருக்கிறார்கள் இன்னும். யாருக்காவது அங்குள்ள மத அமைப்புகளோடு ஏதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்களேன். மனிதர்களுக்கு தானே தடைகள், மதங்களுக்கு தான் எப்போதும் தடையே இல்லையே.....இந்த ஒரு வழியாவது ஒர்க் அவுட் ஆகுமா என்று பார்ப்போம். வேறு ஏதாவது நல்ல ஐடியா இருந்தால், திட்டாமல் சொல்லித்தாருங்கள், தட்டாமல் செய்து முடிக்கலாம்.....

Sunday, May 17, 2009

இலங்கை தமிழருக்கான மனநல மேம்பாட்டு உதவிகள்

என்ன தான் அறிவியல் கண்ணோட்டம் என்று எல்லாவற்றையும் சமநிலையாக எடுத்துக்கொள்ள முயன்றாலும், தமிழரா, தெலுங்கரா, அல்லது வேற்றுலக ஜீவராசியா என்ற எல்லா பாகுபாட்டையும் தாண்டி, சின்ன சின்ன கைகுழந்தைகளுடன் சரியான உணவோ, உடையோ, உரைவிடமோ இன்றி லோல் படும் இலங்கை தமிழரை பார்க்கும் போது, இவர்கள் இவ்வளவு கஷ்டப்படும் போது, எதுவுமே செய்யாமல் பேடி மாதிரி சும்மாவே இருப்பது பெரிய அசிங்கமாகவே தோன்றுகிறது.

நல்லவேளையாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இனி மேல் இலங்கைக்கு போவதும், அங்குள்ள மனதால்/உடம்பால் புண்பட்டு போன மனிதர்களுக்கு சிகிச்சை தருவதும் சுலபமாகும் என்று நம்புவோம். ஏற்கனவே சேவை மனப்பான்மை கொண்ட சில மருத்துவர்கள், “ஷாலினி, இலங்கையில் ஏதாவது வேலையிருந்தா என்னையும் கூப்பிடுயா, நானும் வர்றேன்” என்று முன் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
வெறும் எனக்கு தெரிந்த ஒரு சின்ன வட்டத்திற்கு மட்டும் இப்படிப்பட்ட சமூக பணிகள் செய்ய வாய்ப்பு தருவது சரிபடாதே. அதனால் இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். மிக விரைவில் இலங்கை தமிழருக்கான மனநல/உடல் நல சேவைகளை துவக்க முயன்றுக்கொண்டிருக்கிறோம். இந்த முயறச்சியில் எந்த விதத்திலாவது நீங்களும் பங்கு பெற விரும்பினால், தெரியப்படுத்தவும்.

Friday, May 1, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 16

சென்ற இதழில் வேண்டாத ஆண்களைக் கண்டால் எப்படி ஆஃப் செய்வது என்பதைப் பற்றிப் பேசினோம். இனி, உங்களுக்கு ஒரு ஆணைப் பிடித்திருந்தால் அவனை எப்படி ஊக்குவித்து, வசப்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோமா?

அப்பாடா, இப்போதுதான் மெயின் மேட்டருக்கே வந்தீங்களா, என்று பல சிநேகிதிகள் புன்னகை பூப்பது புரிகிறது... என்ன செய்வது, முதலில் வெத்து ஆண்களை எல்லாம் புடைத்தெறிந்து விட்ட பிறகு தானே தரமான ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அது சரி, இவன் தரமான ஆண் என்பதை எப்படி கண்டு கொள்வதாம்? ஒரு சிநேகிதி எனக்கு ஃபோன் செய்து, ``நம்மகிட்ட பேசுற ஆண்கள்ல எவன் நல்லவன், நம்பகமானவன், எவன் துரோகி, நயவஞ்சகன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெளிவாக விளக்குங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.

அதனால், ஆண்களைத் தரம் பிரித்து, தேருபவன், தேராதவன், உருப்படுபவன், உருப்படாதவன், சொத்தை, சொள்ளை, நிஜ குதிரை, மண் குதிரை என்பதை எல்லாம் எப்படிப் பாகுபடுத்துவது என்பதை இந்த இதழில் பார்ப்போம்.

நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.

பேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா?'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.

எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?

ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.

ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.

அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.

இரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.

அடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.

இப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்?
1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா? 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா? நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.

ஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.

இப்படி ஆண் பெண்ணிடம் கவுரவமாகப் பழகி, அவள் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவன் தேறுகிற ஆசாமி. அப்படி இல்லாமல், ``நான் ஆம்பிளை, அதனால் நான் தான் உசத்தி, பெண்கள் எல்லோரும் வந்து எனக்கு ஏவல் புரிய வேண்டுமாக்கும்'' என்று பெண்களைக் குறைவாக நடத்தி, அவர்களை அசவுகரியப்படுத்தும் அற்பனாக அவன் இருந்தால், போச்சு, பையன் தேரமாட்டான் என்று அர்த்தம்.

அதனால் ஆண்களை அலசி, தரம் பிரித்து பாகுபடுத்தும் இந்த ஆய்வின் முக்கிய அளவுகோள், அவன் பெண்களிடம் காட்டும் கண்ணியம்.

அதற்காக பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவன் எல்லாமே மகா உத்தமன் என்று உடனே முடிவு கட்டி விடாதீர்கள். ஆண்களில் சில கில்லாடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களோடு நிறைய பரிச்சயம் இருப்பதினால், இப்படி நிறைய பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதையே தங்கள் முழு நேர பணியாக அவர்கள் மேற்கொள்வதினால், எப்படி எல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்குப் பிடிக்கும் என்கிற ஆளை அசத்தும் அத்தனை கலைகளும் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். அதனால் இந்த வகை சல்லாப கேசுகள், பெண்கள் எதிரில் பரம உத்தமன் மாதிரி வளைய வருவார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களுக்கெல்லாம் கரிசனம் காட்டி, ``உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா?'' என்று வலிய போய் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

ஆனால் வீட்டில் அல்லல் படும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகிய பெண்களுக்கு மறந்தும் உதவ முன்வர மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு உண்மையிலேயே பெண்களிடம் கண்ணியமாக இருப்பதில் கவனமே இல்லை. கண்ணியமாக இருப்பதுபோல நடித்து பெண்களைக் கவிழ்க்க பார்ப்பார்கள், ஒருத்தி கவிழ்ந்துவிட்டால், உடனே அவளை ஓரம் கட்டிவிட்டு, அடுத்தவளுக்கு வலை விரிக்க போய் விடுவார்கள். இந்த வகை ஆண்கள், றிக்ஷீணீநீ‡வீƒமீபீ நீலீணீக்ஷீனீமீக்ஷீƒ ஆக மிகவும் பழக்கப்பட்ட லீலை மன்னர்களாக இருப்பார்கள். நீங்கள் சொல்லாமலேயே உங்களுக்காக நிறைய செய்வார்கள். உருகி உருகி உபசரிப்பார்கள். கவனமாகப் பார்த்தால், அதில் கொஞ்சம் பந்தாவும் பகட்டும் தெரியும். தட் மீன்ஸ் வாட்? தலைவர் இதை உபசாரத்திற்காக செய்யவில்லை. அலட்டலுக்காகவே செய்கிறார். தட் மீன்ஸ் அவன் கை தேர்ந்த ஜாலக்காரன். அவனிடம் உஷாராக இல்லை என்றால், தலைவர் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார் என்று அர்த்தம்.

இதற்கு நேர் எதிராய் வேறு சில ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களோடு அதிகம் பழகும் அனுபவமில்லாததால், அவள் எதிரில் எப்படி நடந்துகொள்வது என்பதே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள்லேசாய் கொஞ்சம் ஹிண்ட் கொடுத்தால், உடனே பிடித்துக்கொண்டு, தக்கப்படி உங்களை கண்ணியமாக நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இந்த வகை அறியாத பிள்ளைகளை தகுந்தவாறு பழக்கி வைத்தீர்கள் என்றால், மிகவும் அக்கறையாய் பெண்களைக் கவனித்து பராமரிக்க பழகிக்கொள்வார்கள்.

இந்த இரண்டு வகை ஆண்களைத் தாண்டி, மூன்றாவது ஒரு ரகம் உண்டு. சுட்டு போட்டாலும் கண்ணியமாய் நடக்கவே தெரியாது. ``நான் ஆம்பிளை,'' என்கிற ஓவர் கர்வத்தில் பெண்களைத் துச்சமாய் மதிப்பிட்டு, வெறும் போகப் பொருளாகவோ அல்லது ஏவலாள் மாதிரியோ மட்டுமே பார்க்கத்தெரிந்த இந்த ஆண்கள், போகப் போக, நிறைய அடி பட்டு, இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது என்று ரொம்ப நாள் கழித்து வயது போன பிறகே புத்திபெறுவார்கள்.

இந்த மூன்று ரகமானவர்களையும் தாண்டி, நான்காவது ரக ஆண்களும் இருக்கிறார்கள். பெண் என்றாலே கூசி, அஞ்சி, ஒதுங்கி ஓடும் இந்த அதீத சங்கோஜ பேர்வழிகளுக்கு பெண் எதிரில் நிற்கவே நடுங்கும். அப்புறம் எப்படி அவன் வந்து அவளை உபசரித்து, சிறப்பு செய்வதெல்லாம்!

ஆக, கைதேர்ந்த லீலைக்காரன், கற்றுக்கொண்டு கலக்குபவன், கர்வத்திலேயே மிதப்பவன், கூச்சத்தினால் ஒதுங்குபவன் என்று இந்த முக்கியமான நான்கு வகை ஆண்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாம் ரக ஆணாகப் பார்த்து தேர்வு செய்வதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு. முதலில் இப்படி ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடியுங்கள். அவனை எப்படி எல்லாம் ஹேண்டில் செய்வது என்பதை அப்புறம் சொல்கிறேன்......