Thursday, May 21, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 17

சென்ற இதழில் சொன்ன மாதிரியே ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? அவனை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவனை ஊக்குவிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அவன் உண்மையிலேயே ஒழுங்கன்தானா என்றுசரி பார்த்திடுங்கள்.

பல சமயங்களில் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒரு வெற்று ஆசாமியின் மேல் உயிரையே வைத்துவிடுகிறார்கள். காதலால் கசிந்துருகி, அவனை கடவுள் ஸ்தானத்திற்கே உயர்த்தி, அவனுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்த பிறகுதான் தெரியவரும் அவன் ஒரு மோசமான கிராதகன் என்று. அவன் புலித்தோல் போத்திய பூனை, போலித்தனமான ஆசாமி, பெண்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் மலிவானவன் என்பதெல்லாம் தெரிய வந்த பிறகும், ``அய்யோ, அவன் கேவலமானவன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும், அவனை மறக்க முடியலையே, அவன் பேசுன பேச்செல்லாம் என் காதுல இன்னும் ஒலிச்சுகிட்டே இருக்கே'' என்று எத்தனையோ பெண்கள், ஆசைப்பட்டவன் ஆபத்தானவன் என்று தெரிந்த பிறகும் அவனை மனதிலிருந்து நீக்க முடியாமல் தவிப்பதுண்டு.

இந்த வம்பெல்லாம் வரவே கூடாது என்றால், எடுத்த எடுப்பிலேயே இவன் நம்பகமானவன்தானா? இல்லையா? என்று சரிபார்த்துவிடுங்கள்.

எப்படி? அவன் பேச்சை வைத்துதான். வெறும் பேச்சை வைத்து எப்படி ஒருவனை அளவிடுவது என்கிறீர்களா? சிம்பிள்!

சராசரி ஆண்களுக்கு அவ்வளவாகப் பேச வராது. கடிதம் எழுதச் சொன்னால், அதற்கு மேல் சொதப்புவார்கள். காரணம், ஆண் மூளையில் மொழிக்கான மையம் மிக சின்ன சைஸ் மட்டுமே. அதனால இயற்கையில் ஆண்களுக்கு பேச்சு சாமர்த்தியம் பற்றாது.

இது இப்படி இருக்க, சில ஆண்கள் மட்டும் அலங்காரமாகப் பேசுவார்கள். உங்களை பேச்சிலேயே மயக்கி, சோப்பு போட்டு, உலகிலேயே நீங்கள்தான் ரொம்பக் கவர்ச்சியான/சூப்பரான பெண் என்கிற அளவிற்கு உங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படி ஒரு ஆண் தித்திக்கத் தித்திக்க பேசுவது உங்கள் காதில் தேன் வந்து பாய்ந்தது போலத்தான் இருக்கும். காரணம், பெண்களுக்குத்தான் மூளையில் பெரிய மொழி வள மையம் உண்டே. அதனாலே யாராவது நன்றாகப் பேசினாலே போதும், பெண்கள் எல்லாம் அப்படியே மந்தை மந்தையாய் மயங்கிப் போவார்கள்.

ஆணுக்குத்தான் இயற்கையிலேயே பேச்சு சாமர்த்தியம் வராதே. அதை மீறி ஒருத்தன் பெண்களை கவருமாறு பேசுகிறான் என்றால் என்ன அர்த்தம்? பேச்சுதான் பெண்ணின் மனதை அடைவதற்கு உண்டான ஷார்ட் ரூட், என்கிற இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு, ``எப்படிப் பேசினால் பெண்களுக்குப் பிடிக்கும்?'' என்பதை ஒரு வித்தை மாதிரி கற்றுத் தேர்ச்சி பெற்று வைத்துக் கொள்கிறார்கள் சில வகை ஆண்கள். வேலை மெனக்கெட்டு இதைப் போய் அவன் கற்று தேர்ச்சி பெற்று வைத்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? இதையே தன் ஆஸ்தான வேலையாக அவன் வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்! வீடு, படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் தன் அவகாசத்தை பெண்களிடம் பேசி தேர்ச்சிபெற இவன் பயன்படுத்தினான் என்றால் என்ன அர்த்தம்? அவனுக்கு இதில் பெரிய நாட்டம் இருக்கிறது. இது அவனுக்கு முக்கியம் என்று படுகிறது. இதில் அவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது. அதனால் அவன் ஆர்வமாக இதைப் பயிலுகிறான்.

எத்தனை பெண்களிடம் பேசிய அனுபவம் இருந்தால் அவன் அதை ஒரு வித்தையாக உபயோகிக்கப் பழகி இருப்பான்?

ஆக, அழகாக, அலங்காரமாக, புகழ்ச்சியாக, இதமாக, இனிமையாகப் பேச ஒரு ஆண் கிடைக்கமாட்டானா என்பதே எல்லாப் பெண்களின் ஆசையாக இருந்தாலும், இப்படி எல்லாம் பேச எந்த ஆணுக்கும் இயல்பிலேயே வராது. பிகாஸ் ஆஃப் தி ஸ்மால் மொழி மையம். இந்த இயல்பை மீறி ஒருவன் அழகாகப் பேசினால் அவன் இயல்பானவனாக எப்படி இருக்க முடியும்? இது செயற்கையாக அவன் கற்றுக்கொண்ட வித்தை என்பதால் அவன் நம்பத் தகுந்தவனாக இருக்க வாய்பில்லை.

அதனால் ஸ்நேகிதிகள், உங்கள் காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு, எவன் என்ன பேசுகிறான் என்பதைக் கவனமாகக் கேளுங்கள். எவனாவது அநாவசியமாக அசடு வழிந்து, ஓவர் ஸ்வீட்டாய் பேசினான் என்றால், உஷார். பையன் பேச்சில் ஓவராய்த் தேர்ந்திருப்பதே அவன் செயற்கையானவன் என்பதன் வெளிப்பாடு.

இதற்கு நேர் எதிராய் சில ஆண்கள் இருப்பார்கள். சுட்டுப் போட்டாலும் அவர்களுக்குப் பேசவே வராது. எந்த சமயத்தில் என்ன பேச வேண்டும். யாரிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும், எதைச் சொல்லாம், எதைச் சொல்லக்கூடாது என்பதுகூட தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அவர்களது துறைசார்ந்த விஷயம் என்றால் மட்டும் நன்றாகப் பேசி விளாசி விடுவார்கள். இந்த வகை ஆண்கள் படிப்பு, வேலை, விளையாட்டு, வீடு, என்றே நேரத்தைச் செலவிடும் இவர்களுக்கு, பெண்களிடம் பேசி அவளை மயக்கவெல்லாம் அவகாசமே இருந்திருக்காது. பெண்களிடம் அதிகம் பேசாததால் பெண்ணுக்கு ஏற்ற மாதிரி நேக்காகப் பேச அவர்கள் கற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் காதலி, மனைவி, மகள், சகா என்று எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஆண்களிடம் பேசுவது போலவே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடுவார்கள். அல்லது லெக்சர் அடித்து, ஆபீசில் பேசுவது போல அதிகாரமாகப் பேசுவார்கள். ``எல்லாம் சரியா இருக்கான். ஆனா என் மனசைப் புரிஞ்சி பேச மட்டும் தெரியலையே'' என்று நீங்களேகூட நொந்து போவீர்கள்.

ஆனால் விசித்திரம் என்னவென்றால், இந்த வகை ஆண்கள்தான் நம்பகமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஜாலப் பேச்சு, பெண்மனதைக் கவரும் வித்தை என்பவை எதுவுமே தெரியாது என்பதால், அவர்கள் முழுக்க முழுக்க இயல்பாகவே செயல்படுவார்கள். ``அய்யோ இவ இவ்வளவு வாயாடியா இருக்காளே, இவளை என்னால சமாளிக்க முடியலையே'' என்று நொந்து கொண்டு ``சும்மா சும்மா பேசு பேசுன்னா என்னத்தைப் பேசுறது. எனக்கதுக்கெல்லாம் டைம்மில்ல, ஆளைவிடு'' என்று வெட்டிப் பேச்சிலிருந்து தப்பிஓடிவிடுவார்கள்.

என்ன இவன் ``பேசவே மாட்டேன்றானே'' என்று பெண்கள் வாடினாலும், இப்படிப் பேசாமல் காரியத்தில் குறியாக இருப்பதுதான் ஆணின் இயல்பு என்பதை உணர்ந்து, அவனை அவனாகவே இருக்க நீங்கள் அனுமதித்தால், காலப் போக்கில் தன் ஆண் நண்பர்களிடம் பேசுவது போலவே உங்களிடமும் ஹாசியமாக பேச ஆரம்பித்துவிடுவான் இவன். ஆனால் அப்போதும் தித்திப்பாகவோ, அலங்காரமாகவோ பேசமாட்டான். டு தி பாயிண்ட், கரெக்டாய் மட்டுமே பேசுவான். அதுதான் அவன் இயல்பு என்று அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டீர்கள் என்றால் நோ பிராப்ளம்.

இந்த இரண்டு வகை ஆண்கள் போக, பெண் என்றால் உடனே படக் என பக்கத்தில் வந்து, தத்துப் பித்து என்று உளறி அப்பட்டமாய் ஜொள்ளுவிடும், முதிர்ச்சியே இல்லாத ஆண்கள், பெண் என்றாலே ஏதோ, அவனை மயக்கி, மாயம் செய்துவிடவே அவதாரம் எடுத்தவள் மாதிரி பாவித்து எரிந்து விழும் ஆண்கள், பெண்கள் என்றால் கூசி, வெட்கி, பேச வராமல் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் ஆண்கள், என்று பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.

இத்தனை வகை ஆண்களில் உங்கள் ஆள் எந்த வகை என்பதைக் கவனியுங்கள். ஜாலப் பேச்சுக்காரன் என்றால், ஜெஸ்ட், வேடிக்கையாய் பேசி, பொழுது போக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் அவனை நம்பி, ``எனக்கு மட்டுமே உண்மையாய் இருப்பான்'' என்று நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டுவிடாதீர்கள். இவன் கழுத்தறுப்பு கேஸ், வெட்டிப் பேச்சுக்கு மட்டும்தான் லாயக்கி என்பதை மறக்காதீர்கள்.

அசட்டு ஜொள்ளு கேஸ், எரிமலை கேஸ், வெட்கசிகாமணி கேஸ் என்றால், என்னதான் உங்கள் அன்பைக் கொட்டி, அவனை நீங்கள், ``மாற்றிக் காட்டுகிறேன்'' என்று கங்கணம் கட்டிக் கொண்டு முனைப்பாய் செயல்பட்டாலும், வேஸ்ட். அதனால் உங்கள் கவனத்தை திசை திருப்பி, உருப்படியாக வேறு ஏதாவது வேலையைப் பாருங்கள்.

டூ தி பாயிண்ட் பேசும், பெண்களிடம் ஜொள்விடத் தெரியாத கண்ணிய சிகாமணி என்றால், ஓ.கே., பையன் நீண்ட நாள் உறவிற்கு ஒத்து வருவான் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரலாம். ஆல் ஆபவுட் தட் இன் அடுத்த ஸ்நேகிதி!

10 comments:

Anonymous said...

ha ha.. ippadiyumaaa

Unknown said...

இப்புடி பதிவ போட்டு பொண்ணுங்கள அலார்ட் பண்நீடீங்கனா... !!! நாங்கல்லாம் என்ன பண்றது.....!!!!


ஏதோ எங்குகுளுக்கு தெருஞ்ச வித்தைய ( குட்டிகரணம் போடுறது , பைக்குல வீலிங் உட்டு காமிக்குறது , ) , இப்புடி ஏதோ நாலு வித்தைய காட்டி கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கிட்டு இருக்குறோம்....!!

இனி உங்க பதிவ படுச்சு நாங்க அலார்ட் ஆயுற வேண்டியதுதான்.....!!!!!
ஆனா உங்க "ஆண்களை ஹாண்டில் செய்ய: " அத்யாயங்கள் பூராவுமே.... நெம்ப ஒரிஜினலா இருக்கு.... !!

அருமை.... !!!! வாழ்த்துக்கள் மேடம்.......!!!!!

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கு டாக்டர்

நிறைய செய்திகள் (என் வரையில்) உண்மைதான்.

அது போல சில பெண்களிடம் மாட்டிக்கொள்ளும் நிலையும் ஏற்படுதே

அதுக்கு எதுனா தொடர் போடுவீங்களா

நட்புடன் ஜமால் said...

\\காரணம், ஆண் மூளையில் மொழிக்கான மையம் மிக சின்ன சைஸ் மட்டுமே\\

எதுனா மருத்துவ உண்மையா

சந்தேகத்தால் கேட்கலை, உறுதி செய்து கொள்ளத்தான்

இது எனக்கு ஆச்சர்யமாகத்தான் உள்ளது

kayal said...

Super!Chapters are becoming a ready reckoner for all XX out there.
Please release it as a book too.

சாணக்கியன் said...

நான் அத்தியாயம் 16-ல் கேட்டிருந்த கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் பதில் கிடைத்த மாதிரி இருக்கு....

பூமகள் said...

நல்ல பயனுள்ள அவசியமான விழிப்புணர்வுத் தொடர்.

கொஞ்சம் முன்னரே வந்திருந்தால் நிறையவே பக்குவம் அடைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆண்களின் உலகைப் பற்றிய விழிப்புணர்வை அழகாக எளிமையாக ஏற்படுத்துகிறீர்கள். அருமை டாக்டர்.

தொடருங்கள். தொடர்கிறோம். வாழ்த்துகளும் பாராட்டுகளும். :)

உங்கள் தோழி,
பூமகள்.

நாணல் said...

பல தரப்பட்ட ஆண்களை பற்றி நீங்க சொல்றது மிகவும் உதவியா இருக்கு... இப்ப எந்த ஆணைப் பார்த்தாலும் உங்களின் அத்தியாயங்களின் கோட்பாட்டின் கீழ் அலசி விட்டு தான் மறு வேலை பார்க்கிறேன்..சுவாரசியமா இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்....

dr.tj vadivukkarasi said...

very true & original.happy reading..

bharathi said...

hello sir/madem

you are saying only boys screct please tell girls serect.......................................