Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Wednesday, January 28, 2009

1879, Sep 17th

1879 ஆம் ஆண்டு.

தாமஸ் ஆல்வா எடிசன், மின் விளக்கை கண்டு பிடித்தார்.

அதே ஆண்டு அமேரிக்காவில் பெண் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தில் வழக்காட அனுமதி தரப்பட்டது.

சார்லஸ் டார்வின், தி ஓரிஜன் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தை எழுதி அத்தோடு இருபது வருடங்கள் ஆகி இருந்தன.

இந்த 1879 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் தேதி தான் வெங்கடசாமி நாயகருக்கும், சின்ன தாயம்மாளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தான். இந்த பையன் பிற்காலத்தில் என்ன ஆவான், எப்படி போவான் என்றெல்லாம் தெரியாத அவன் பெற்றோர்கள் அவனுக்கு ஆசையாய் ராமசாமி என்று பெயர் வைத்தார்கள். காரணம் அவர்கள் குடும்பம் ஆசாரமான வைஷ்ணவ மரபுகளை கடைபிடித்த பணக்கார வியாபாரி வர்க்கம். தொன்று தொட்டு ராமநாமத்தை ஜெபிக்கும் குடும்பம். அதனால் தங்கள் அருமை மகனுக்கு ராமனின் திரு நாமத்தையே சுட்டினார்கள்.

குட்டி ராமசாமியும் அப்பா அம்மா மீது அதிக பாசம் கொண்டு, அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடக்கிற மிக சமத்து பிள்ளையாக தான் இருந்தான்.

அவன் அம்மா வேறு தீவிரமான ராம பக்தையா, அதனால் அந்த ஊர் பக்கம் யாராவது வேதம், மதசொற்பொழிவு, கதாகாலஷேபம் என்று சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். வீட்டிற்கு வரவேற்று, ராஜ உபசாரம் செய்து, மதவிளக்கங்களை கேட்டு வைத்தால் நிறைய புண்ணீயம் கிடைக்கும் என்று சின்ன தாயம்மாள் நம்பினார். அதனால் ஈரோடு பக்கம் யாரவது மதப்பெரிசுகள் வந்தாலே போச்சு, குட்டி ராமன் வீட்டில் பெரிய தடபுடல் தான்.

இப்படி சின்ன தாயம்மாள் விருந்தோம்பிக்கொண்டிருக்க, அவர் வீட்டிற்கு வந்து பல பேர் மத போதனைகளையும், புராணக்கதைகளையும் சொல்ல, இதை எல்லாம் கேட்டே வளரும் வாய்ப்பு குட்டி ராமசாமிக்கு.

சாதாரணமாகவே குழந்தைகள் நிறைய கேள்வி கேட்பார்கள். என் தோழி ஒருத்தி, ஏரியா பொடிசுகளுக்கு நீதி கதைகள் சொல்வதற்காக தேவர்களையும், அசுரர்களையும் பற்றி ஏதோ ஒரு புராண கதையை சொல்லிக்கொண்டிருந்தாளாம். அப்போது அசுரர்கள் தலையில் கிரீடமும் கொம்பும் இருக்கும் என்றாளாம். குழந்தை கேட்டதாம், கிரீடத்து மேல எப்படி கொம்பு இருக்கும்? கொம்பு மேல எப்படி கிடீடத்தை வெக்க முடியும் என்று. கடைசியில் கிரீடத்தில் கொம்பை செருகி இருப்பார்கள், கிருஷ்ணன் கிரீடத்தில் மயில் தோகையை செருகிக்கொண்டதை போல என்று ஒரு வழியாக விளக்கம் சொல்லி முடித்தால், குட்டி கேட்டதாம், அதெப்படி கொம்பை மிருகத்து கிட்டேர்ந்து எடுக்கலாம், அது மிருக வதை, சட்ட விரோதமாச்சே என்று!

இப்படி குழந்தைகள் ஃப்ரெஷ்ஷாய் உலகை பார்ப்பதினால் பெரிசுகள் நமக்கு அதுவரை உரைக்காத பல விஷயங்கள் அவர்களுக்கு பட் பட் என்று தென்படுகின்றன. குழந்தைகளின் இந்த குணத்தை ரசிக்க தெரிந்த பெரிசு என்றால், இந்த சைல்டிஷ் க்யூடியாசிடியை ஊக்கு விப்பார்கள். ரசனையற்ற ஏதாவது முசுடு என்றால், “அதிக பிரசங்கிதனமாய் என்ன ஏடாகூட கேள்வி இது. வாய மூடிக்கிட்டு கதையை கேட்டு தொலை இல்லனா சாமி கண்ணை குத்தீடும் பார்!” என்று தன் இயலாமையை மறைக்க உதார் விட்டு நழுவ பார்க்கும்.

இதென்ன அநியாயம் கேள்வி கேட்டதுக்கெல்லாமா சாமி கண்ணை குத்தும், சரியான சிடுமூஞ்சி சாமியா இருக்கே! என்று குழந்தை அந்த சமையத்திற்கு வாயை மூடிக்கொண்டாலும், அதன் கேள்வி கேட்கும் இயல்பை அதனால் மாற்றிக்கொள்ள முடியாதே. அதுவும் போக, சாமி இத்தனை நாளா கண்ணை குத்தவே இல்லையே, அப்படினா இது டூப்பு என்று புத்திசாலி குழந்தைகள் புரிந்துக்கொள்வார்களே!

குட்டி ராமசாமி, ரொம்ப சுட்டியான புத்திசாலி குழந்தை என்பதால் அவனும் தன் வீட்டில் வந்து சொற்பொழிவு செய்த பெரிசுகளிடம் நிறைய கேள்விகள் கேட்டான், “ அதெப்படி, வாமணன் மூணே நடையில் மூணு உலகத்தையும் அளந்தார்? ஒரு கால் இந்த இந்த உலகத்துல இருக்குற ராஜாவோட தலையிலன்னா, அதெப்படி, இன்னொரு கால் உலத்துமேல படும்? “ இந்த கால குழந்தையாக இருந்தால், ”அப்ப ஒரு கால் குட்டியா, இன்னொரு கால் பெரிசா இருந்ததா? இரண்டு காலையும் இப்படி வெக்கணும்னா அப்ப இந்த சாமி எங்கே நின்னுகிட்டு இருந்ததாம், லாஜிக்கே சரியா இல்லையே? இந்த கதை சரியில்லை, வேற கதைய சொல்லு” என்றிருக்கும்.

இதே கேள்விகள் தான் அந்த கால குட்டி ராமசாமிக்கும் தோன்றின. கேட்டால், “கடவுளாச்சேனு கொஞ்சமாவது மதிக்கிதா பார், வாய்க்கு வந்த கேள்வி எல்லாம் கேட்குதே, இதெல்லாம் உருப்படுறத்துக்கே இல்லை. பிள்ளையா பெத்து வெச்சிருக்காங்க” என்று திட்டு தான் கிடைத்தது.

சரி தான் இந்த பெரிசுகளுக்கு பதில் தெரியலை போல, என்று அவர்கள் மேல் மரியாதை இழந்தான் குட்டி ராமசாமி.

அவர்கள் மேல் தான் மரியாதை போனதே தவிற அவர்கள் சொல்லித்தந்த போதனைகள் எல்லாமே உண்மை என்று தான் நம்பி இருந்தான். குழந்தை பெரியவர்கள் சொல்வதை நம்பித்தானே ஆகவேண்டும்.

பெரியவர்கள் சொன்னார்கள் இறைவன் எல்லோருக்கும் பொது என்று. ராமாவதாரத்தில் கடவுள், குகனை கட்டிபிடித்து, “நீ என் உடன் பிறந்தவனை போல” என்று சொன்னார் என்றால் என்ன அர்த்தம்? படகோட்டியும், ராஜகுமாரனும் சமம் என்று தானே அர்த்தம்.

ஆனால் அன்றாட வாழ்க்கையில் இப்படி சம்த்துவம் எதுவுமே பழக்கதில் இல்லையே.
உதாரணத்திற்கு குட்டி ராமாவின் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் ஒரு மாமி வீடு இருந்தது. தாகம் எடுக்கிறது என்று ராமா மாமியிடம் போய் தண்ணீர் கேட்டால், மாமி, “ஜலத்தை தூக்கி, வாயில் வைக்காமல் குடி” என்றாள். குட்டி பையன் தண்ணீரை தூக்கி குடித்தால், வாஅயில் படவில்லை தான், ஆனால் ஜலம் எல்லாம் மூக்கினுள் போய் புரக்கேறிக்கொண்டது. மாமி அது பற்றி எல்லாம் கவலை படவில்லை. அவளை பொறுத்த வரை, அவள் வீட்டு தம்பளர் ராமாவின் வாயில் படாத வரை ஷேமம்! என்று ராம உபயோகித்த தம்பளரை தண்ணீர் தெளித்து தீட்டு நீக்கி எடுத்துக்கொண்டு போய் விட்டாள்!

ஓ அப்படினா, நம்ம வீட்டை தவிற மற்றவர்கள் வீட்டில் தண்ணீரை இப்படித்தான் குடிக்கவேண்டும் போல, என்று குட்டி ராமா நினைத்துக்கொண்டான். பிறகு ஒரு சமயம் வேறொரு பெண் வீட்டில் தாகம் என்று தண்ணீர் கேட்டபோது, அந்த பெண்ணோ, “எங்க வீட்டுல எல்லாம் நீ தண்ணீயே குடிக்கக்கூடாதுப்பா,” என்றாள் பயந்துபோய். இல்லை ரொம்ப தாகம் என்ற போதோ, “சும்மா சப்பியே குடிப்பா” என்று அனுமதி தர, அப்பாடா, நிம்மதி என்று மட மடவென்று தண்ணீரை குடித்தான் ராமசாமி.

அப்புறம் தான் உரைத்து....அந்த மாமி துக்கி குடின்னு சொல்லுறாங்க, இந்த பெண்ணோ
முதலின் தண்ணீரே தரமாட்டேன் என்றார், பிறகு சப்பிக்குடி என்கிறாள்....ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். எல்லோருமே ஏன் ஒரே மாதிரி இல்லை, ஏன் இப்படி போட்டு குழப்புறாங்க என்று யோசிக்க ஆரம்பித்தான். இதுவே அவன் சின்ன மனதில் பிரதான சிந்தனையாகி விட “ஏன் இத்தனை வித்தியாசம்?” என்று கேட்டு கேட்டு பார்த்தான்.

யாரும் தெளிவான பதிலை சொல்லவில்லை.
அது அப்படி தான். அவங்க மேல் ஜாதி, இவங்க கீழ் ஜாதி.

மேல் ஜாதி என்றால் என்ன, கீழ் ஜாதி என்றால் என்ன?
மேல் ஜாதினா பிராமணர்கள், கீழ் ஜாதி என்றால் சூத்திரர்கள்.

பிராமணர்னா யார், சூத்திரர்னா யாரு?
பிராமணர்னா பூனூல் போட்டு, குடுமி வெச்சிருப்பாங்க, சூத்திரர்னா, அப்ப்டி இல்லை.

அப்படினா, பிராமணர் பூனூலை கழட்டி, குடுமியை வெட்டிக்கிட்டா, சூத்திரர் ஆயிடலாமா?
சீ, சீ, முடியாது

அப்ப, சூத்திரர், குடுமி வெச்சி, பூனூல் போட்டா பிராமணர் ஆயிடலாமா?
வாயை கழுவு, அதெப்படி முடியும். பிராமணர்னா பிரம்மாவோட தலைலேர்ந்து பிறந்தவங்க, சூத்திரர்னா பிரம்மவோட கால்லேர்ந்து பிறந்தவங்க...அதனால் பிராமணர்னா உசத்தி, சூத்திரர்னா மட்டம்.

ஓ, கால்லேர்ந்து பிறந்த மட்டமா?
இல்லையா பின்னே, ஆமா!

அப்ப, கால்னா மட்டமா?
ஆமா, ஆமா

அப்படின்னா....ஏன், எல்லாரும் பெரியவங்ளை பார்த்தா பாத பூஜை பண்ணுறாங்க, கால்ல விழுந்து கும்பிடுறாங்க? சாமி காலடியில் காணிக்கை வெக்குறாங்க. பாத கமலம், பாத புஷ்பம்னு சொல்லுறாங்க. கடவுளே உன் காலடியில் விழுந்து கிடக்குறேன்னு சொல்லுறாங்க?

இப்படியெல்லாம் அபத்தமா பேச எங்கே தான் கத்துகிட்டியோ. உன்னை எந்நேரத்துல பெத்தாங்களோ!

இப்படி தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலே தன் இளம் வயதை தாண்டி வந்தான் குட்டி ராமசாமி....

அதனாலேயோ என்னவோ, ராமசாமியின் மனநிலை பெரிய மாறுதலுக்கு உள்ளாயிற்று. அவன் அம்மா ஆசை ஆசையாய் வணங்கி வழிபட்டு, தன் மகனுக்கும் பெயர் வைத்து மகிழ்ந்த அதே ராமனை, சாமியே இல்லை என்று செருப்பால் அடுக்கும் தன்மைக்கு பிறகாலத்தில் மாறினான் இந்த ராமிசாமி. அவன் ஏன் அப்படி மாறி போனான்?

அனலைஸ் செய்து தான் பார்ப்போமே!

Monday, January 26, 2009

பெரியார் - நதிமூலம், ரிஷிமூலம்

சரி, பெரியாரை பற்றி எனக்கு அனா ஆவன்னா தெரியாது என்கிற என் அறியாமையை நான் ஒத்துக்கொண்ட போது தான் எனக்கு அதன் மிக பெரிய சவுகரியமே புரிந்தது. ஏற்கனவே யாரோ எதையோ சொல்லி, அதை நான் வேறு நம்பி தொலைத்திருந்தேன் என்றால், என் மனம், முன் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால் என் சொந்த கருத்து என்று ஒன்று உண்மையில் இல்லாமல், யாரோ சொன்னதை வைத்து second hand டாய் உருவான கருத்தே மிஞ்சி இருந்திருக்கும். இப்போது அப்படி இல்லையே. பெரியாரை பற்றி a, b, c, d கூட எனக்கு தெரியாது என்பதால், காலி ஸ்லேட்டிலிருந்து புதிதாய் இனி நானே அவரை பற்றி, ஃப்ர்ஷ்ஷாய் தெரிந்துக்கொள்ளலாம், எந்த விதமான கலப்படமும், assumptionsசுமே இல்லாமல்!

தியானம் செய்யும் போது ஒரு டெக்னிக் சொல்லுவார்கள். மனதில் ஏற்கனவே இருக்கும் சரக்கை எல்லாம் இறக்கி வைத்து விட்டு, மனதை முதலில் காலி செய்துக்கொள்ள வேண்டுமாம், அப்போது தான் தெளிவு பிறக்குமாம். இந்த 0 நிலையில் இருந்து ஆரம்பித்தால் தான் சத்தியம் விளங்குமாம். ஆனால் இந்த 0 நிலைக்கு வருவது தான் இருப்பதிலேயே ரொமப கஷ்டமான காரியமாம். காரணம் இந்த மனம் என்கிற விசைக்குள் இதுவரை வாழ்ந்து, கேட்டு, பார்த்து, படித்து, அனுபவித்து, கற்பனை செய்து என்று பல பல குப்பைகள் ஏற்கனவே அடஞ்சிருக்குமாம். இந்த குப்பையை எல்லாம் ஒட்டடை அடித்து, பெருக்கி, கழுவி விட்டு, மனதை முதலில் சுத்தமாக காலி ஆக்கிக்கொண்டால் தான் எல்லா ஞானமும் சாத்தியமாம்.

அதிர்ஷடவசமாக, பெரியார் விஷயத்தில் என் மனம் டோட்டலால் squeaking cleanனாய் எந்த வித முன் தகவலுமே இல்லாமல் இருந்தது. இந்த காலி ஸ்லேட் மனதை வைத்துக்கொண்டு, பெரியார் என்கிற இந்த மனிதனை புரிந்துக்கொள்ள போகிறேன். பெரியார் பெரிய அவர், இவர் ஆஹா ஓஹோ என்று சும்மாவெல்லாம் நான் துதிப்பாடிக்கொண்டிருக்கப்போவதில்லை. பெரிய மாஹாத்மா என்று ஒரு நாடே ஒட்டு மொத்தமாய் போற்றித்தள்ளும் மனிதனில் எத்தனை விதமான வக்கரங்கள் இருக்கின்றன என்பது ஆராய்ந்து பார்த்தால் தானே தெரிகின்றன. எதற்கு சும்மா தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது, அப்புறம், அந்த மனிதனின் ஓட்டை உடைச்சல்கள் தெரிந்தபின், சீ நீ இவ்வளவு தானா என்று கீழே தூக்கிப்போட்டு உடைப்பது? ஆரம்பத்திலேயே நடுநிலையாய், எந்த வித பற்றுமே இன்றி, உள்ளதை உள்ளபடி பார்க்க பழகிவிட்டால் தானே நல்லது. இத்தனை வருட அறிவியல் என்னுள் ஏறபடுத்தி இருக்கும் default மன நிலையும் அது தான் என்பதால், யாரையும் ஒரேயடியாக புகழவும் எனக்கு வருவதில்லை, சாமினியர் தானே என்று யாரையும் குறைத்து மதிப்பிடவும் முடிவதில்லை. இதற்காக ”சரியான திமிர் பிடிச்ச கழுதை, கொஞ்சமாவது பயப்படுதா பாரேன்” என்று நிறைய பேரிடம் நிறைய அர்ச்சனை எல்லாம் வாங்கிகட்டிக்கொண்டிருக்கிறேன்! ஆனால் இந்த objectivity மட்டுமெ அடங்கவே மாட்டேன் என்கிறது.

அதுவும் நல்லதற்குத்தான். இந்த அப்ஜெக்டிவிட்டியோடே பெரியார் என்கிற இந்த ஆசாமியை அனலைஸ் பண்ணித்தான் பார்போமே என்று களமிறங்கினேன். இன்னொரு பி, எச்டி, மாதிரி, இதையும் ஆராய ஆரம்பித்தேன். எந்த ஆராய்ச்சியாக இருந்தாலும் review of literature தானே துவக்க பணி, அதனால் பல பேரிடம் பேசி, பல புத்தங்களை புரட்டி பெரியாரை பற்றி துளாவினேன்.

அப்போது தான் முதல் ஆட்சரியம் உண்டானது. பெரியாரை பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் நிச்சயமாய் தெரிந்திருக்கும், ஆனால் நான் தான் சைஃபர் ஆயிற்றே, அதனால் எனக்கு இது கொஞ்சம் பெரிய ஆட்சர்யமே. அது என்னவெனறால், தமிழ் நாட்டில் இத்தனை சமூக பணிகள் செய்த பெரியார் என்கிற இந்த ராமசாமி, உண்மையில் தமிழரே இல்லை. இவர் கர்னாட்டகாவை சேர்ந்த கன்னடம் சேசுகிற பலீஜா நாயிடு வகுப்பை சேர்ந்த வைஷிய குடும்பத்தை சேர்ந்தவராம். அவர் மூதாதையர்கள் ஈரோட்டிற்க்கு வந்து செட்டில் ஆகிவிட்டதால் தமிழோடு பரிச்சையம் ஏற்பட்டுவிட்டதாம்.
மற்றபடி, ஈ வே ராமசாமிக்கும், தமிழுக்கும் தமிழர்களுக்கும், எந்த விதமான ரத்த பாசமோ, பற்றோ இல்லை.

அப்புறம் எதற்க்காக இந்த மனிஷன் மற்ற ஆண்களை போல, தான் உண்டு, தன் வேலை உண்டு, பெண்ட்டாட்டி, பிள்ளை உண்டு என்றில்லாமல், பிழைக்க வந்த ஊர்காரர்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று தன் வாழ் நாளின் பெரும் பகுதியை செலவழித்தார்? what a waste of time! என்ன வியாபார குடும்பமோ போங்கள், இந்த பேஸிக் சர்வைவல் கூட தெரியாத பேக்காக தானே இருந்திருக்கிறார் இந்த மனிதன்! அறிவுள்ள எவனாவது பிழைக்க வந்த வேலையை விட்டு விட்டு பரோபகாரம் செய்கிறேன் என்று தன் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் இப்படி விரையம் செய்வானா?

ஆனால் இந்த மனிதன் செய்திருக்கிறானே, ஒரு நாள் இரண்டு நாளைக்கல்ல, தன் வாழ் நாள் முழுவதுமே. எதற்க்காக இந்த வேண்டாத வேலை இந்த ஆளுக்கு?

Friday, January 23, 2009

புதிதாய் பெரியார்!

யோசித்து யோசித்து பார்த்தேன், எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. நான் ஒன்றும் அவ்வள்வு மக்கு இல்லையே, வெளிஉலக பரிச்சையம் கொஞ்சமாவது உண்டு, நிறைய நபர்களோரு பேசுகிறேன், நிறைய புத்தங்கள் படிக்கிறேன், அப்புறம் எப்படி இத்தனை கழுதை வயதாகியும் பெரியாரை பற்றி இத்துனூண்டு தான் தெரிந்திருக்கிறது?

சரி, தமிழ் கொஞ்சம் தகராறு, அதனால் லோக்கல் பத்திரிக்கைகளை தவிர பெரிதாய் மொழிசார் புத்தகங்களை படித்ததில்லை. ஆங்கிலத்தில் இத்தனை படித்திருக்கிறேனே, அப்புறம் ஏன் பெரியாரை பற்றி எனக்கு தெரியவில்லை. அது சரி ஆங்கில புத்தகங்களில் தமிழர்களை பற்றி எழுத யாருக்கு பெரிய அக்கறை இருந்துவிடபோகுது?

சரி, வெளி புத்தங்களை படிக்கவில்லை என்றாலும் பள்ளிக்கூடத்தில் ஓரளவு உருப்படியாக படித்த கேஸ் தானே. ஏன் என் பள்ளிக்கூட பாடங்களில் பெரியார் என்ற ஒரு கேரக்டரை பற்றி எதுவுமே சொல்லித்தரவில்லை. சீ.பி, எஸ். சி சிலபஸ் கொண்ட பள்ளிக்கூடத்தில் ஹிந்தி
இரண்டாம் மொழியாய் கொண்டு படித்ததினால் பெரியாரை கோட்டை விட்டேனோ?

சரி, பள்ளிக்கூடத்தில் தான் சொல்லித்தரவில்லை, வீட்டிலாவது சொல்லி இருக்கக்கூடாதா என்றால் அம்மாவும் பீட்டர் பரம்பரை என்பதால் அவருக்கே தமிழ் கலாச்சாரமும் வரலாறும் பெரிதாய் தெரியாது. அப்பா பிஸி, இது பற்றியெல்லாம் பேச அவருக்கும் நேரமில்லை, வீட்டு பெரிசுகள் பெரும்பாலும் ஒரே பழம் பெருமை பேசித்தீர்ப்பார்கள் என்பதால், அவர்கள் புராணத்தை கேட்கத்தான் முடியுமே தவிர ஊர் விஷயம் எதுவும் வெளி வராது. ஆக வீட்டிலும் இது பற்றி சொல்வாரில்லை.

தோழிகள் எல்லோரும் எப்போதுமே அழகு சாதனம், ஆண்கள் பிரதாபம், மிஞ்சி மிஞ்சி போனால் சப்ஜெக்ட்! தோழர்களோ வெறும் விளையாட்டு, படிப்பு, பெண்கள், வாகனங்கள், எதிர்காலம், பிளஸ் வெட்டி பேச்சு....இப்படியே இருந்ததால் பெரியார் என்ற ஆசாமியை பற்றி பெரிதாய் எதுவும் தெரியாமலேயே படிச்சு, பட்டமெல்லாம் வாங்கியும் விட்டேன், அதுவும் ஈ, வே, ரா பெரியார் சாலையில் உள்ள மருத்துவ கல்லூரியிலேயே!

நிறைய ரேடியோவும், டீ வியும், செய்தித்தாள்களும் சிறு வயதிலிருந்தே கேட்டு, பார்த்து, படித்ததுண்டு தான், அவற்றிலும் பெரியாரை பற்றி எதுவுமே கேள்விபடவே இல்லை. பெரியார் காலத்திற்கு பிறகு பிறந்ததினால், அவரது இன்ஃப்லூயென்ஸ் இல்லாமலே போய் விட்டதா எனக்கு?

அதெப்படி முடிந்தது, இத்தனை ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்து, செண்ட்ரலில் படித்து, திருவல்லிக்கேணியில் குப்பை கொட்டிய எனக்கு பெரியாரை பற்றி தெரியாமலே எப்படி இருக்க போச்சு? நினைக்கவே மஹா அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது எனக்கு.

ஆட்சரியம் தாளாமல், வீரமணி அவர்களிடம் கேட்டேன், “அதெப்படி சார், இத்தனை வருஷமா, இப்படி ஒரு மனிதன் வாழ்ந்து இவ்வளவு தொண்டு ஆற்றியதை பற்றியே தெரியாமல் காலத்தை ஓட்டி இருக்கேன். என் நிலைமையே இப்படின்னா அப்ப மத்தவங்க கதி?”

“பெரியாரை பத்தி எங்களை தவிர யாரும் பெரிசா பேசுறதில்லைம்மா” என்றார் வீரமணி, “ஐயாவை எல்லாருமே பிராமண எதிர்ப்பாளரா, கடவுள் மறுப்பாளரா தான் பேசுறாங்களே தவிர அவரோட மக்கள் தொண்டை யாரும் தெரியபடுத்துறதே இல்லை. உங்களுக்கு தெரியுமா, இனிக்கு ஒரு பெண்ணா நீங்க மருத்துவம் படிச்சு, இப்படி ஆணுக்கு சமமா வாழ காரணமே பெரியார் தான். பெரியார் படம் பாத்திருப்பீங்களே.” (நான் எங்கே அதை எல்லாம் பார்த்தேன்! அதற்கப்புறம் வீ சீ டீ வாங்கி போட்டு பார்த்தேன் என்பது வேறு கதை!) ”அவரை பத்தி உங்களுக்கு தெரியலன்னா என்ன, அவர் ஆசை பட்டமாதிரியே, உங்களை மாதிரி பெண்கள் இனிக்கு தமிழ் நாட்டுல இருக்குறதே பெரியாருக்கு பெரிய வெற்றி தானே?” என்றார்.

என்னது, என்னை மாதிரி ஒரு பெண் இனிக்கு தமிழ் நாட்டுல உருவாகக்காரணமே பெரியார் தானா? ஐ! அப்ப பழி எல்லாம் பெரியார் மேல தானா! என்று ஹாசியமாய் யோசித்தாலும், அப்படி என்ன செய்தார் இந்த பெரியார்? யாரிவர்? ஏன், எதற்காக, எப்படி, இதை எல்லாம் செய்தார்? இதை எல்லாம் செய்ததால் அவருக்கு என்ன கிடைத்தது? what is the story behind this man? என்று தீவிரமாய் பெரியார் என்கிற கேரக்டரை சைக்கோஅனலைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டேன் நான்!

Monday, January 19, 2009

தாமதமாக கண்டுபிடித்த ஆல்ஃபா ஆண்!

ஆண்களிடம் ஒரு ஸ்பெஷல் திறமை உண்டு, அவர்கள் அறிவை எப்போதுமே நன்றாக தீட்டிவைத்திருக்கிறார்கள். நிறைய உலக ஞானமும், விஷய ஞானமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சும்மா அவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து கேட்டாலேயே கூட, நமக்கு “அய், இவ்வளவு மேட்டர் இருக்கா இதுல!” என்ற வியப்பு ஏற்பட்டு விடும்! அப்படி பல ஆண்களிடமிருந்து நான் பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டுள்ளேன்.

அப்படி சமீபத்தில் நான் posthumousசாய் கண்டுபிடித்த இந்த ஆண் ரொம்பவே சூப்பர்மேன் என்று தான் சொல்லவேண்டும். இந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் எனக்கு. இதில் என்ன பெரிய விசித்திரம் என்றால் நான் படித்த கல்லூரி அவர் பெயரிலான சாலையில் தான் இருக்கிறது. கட் அடித்த நாட்கள் போக மீத நாட்கள் எல்லாம் அவர் சிலையை தாண்டி தான் கல்லூரிக்கே போனேன். நான் ரொம்ப காலம் குப்பை கொட்டிய மருத்துவமனையின் முகவரியிலேயே அவர் பெயர் வரும்! போகிற ஊரெல்லாம் அந்த மனிதனின் சிலைகள் தான்....இத்தனை இருந்தும் இந்த ஆளை பற்றி எனக்கு பெரிதாக எதுவுமே தெரியாது.

ஏதோ மதங்களுக்கு எதிரானவர், கொஞ்சம் டேஞ்சரான ஆசாமி என்ற அளவில் தான் தலைவரை பற்றி எனக்கு தெரியும். மற்றபடி அவர் விஷயத்தில் நான் சுத்த சைஃபர்!
இது இப்படி இருக்க, ஒரு நாள், தூர்தர்ஷன் அலுவலகத்தில், “ஆசிரியர் உங்க பேச்சை கேட்டாராம், நேர்ல பாராட்டணும்னு சொல்லுறார், போன் போட்டு தர்றேன், பேசுறீங்களா?” என்று ஒருவர் கேட்க, என் ஆசிரியர்களில் யார், எனக்கு ஆண் ஆசிரியர்களே கிடையாதே என்று குழம்பும் போதே, ஃபோன் தரப்பட, அதை வாங்கி ஹெலோ சொன்னால், எதிர் முனையில் ஒருவர், “நான் திராவிடர் கழகத்துலேர்ந்து வீரமணி பேசுறேன்” என்றார் பாருங்கள். எனக்கு பெரிய அதிர்ச்சி, இவர் தான் ஆசிரியரா, யாருக்கு!....யோசிக்கும் போதே அவர் என் நிகழ்ச்சியை பாராட்டி, நேரில் சந்திப்போமே என்று சொல்ல நானும் ஓகே என்று வைத்தேன்.
அப்புறம் தான் தெரிந்தது, அவர் எனக்கு ஆசிரியர் இல்லை, விடுதலை என்ற பத்திரிக்கையின் ஆசிரியர், அதனால் எல்லோரும் அவரை அன்பாய் அப்படித்தான் கூப்பிடுவார்கள் என்று.

அவரை அடுத்த நாள் போய் பெரியார் திடலில் பார்த்தேன். என் வழக்கமான யூனிஃபார்மில். கை குளிக்கினோம். என் பேச்சை பாராட்டினார், பிறகு, “பெரியாரிஸ்ட் குடும்பமா நீங்கள்?” என்றார். பெரியாரிஸ்ட் குடும்பமா, அப்படினா, அப்படி எல்லாம் ஒன்று இருப்பதே தெரியாத கேஸாயிற்றே நான்! நான் பிளாங்காய் பார்த்ததை வைத்தே எனக்கு புரியவில்லை என்று உணர்ந்து, “இல்லை, பெரியார் சொன்னா மாதிரியே டிரெஸ் பண்ணி இருக்கீங்களே, அதான் கேட்டேன்..”என்றார்

”பெரியார் டிரெஸ் பண்ணுறதை பத்தி என்ன சொன்னார், எனக்கு தெரியாதே,” என்றேன்.

என் அறியாமையை கண்டு எரிச்சல் படாமால், “பெரியார் பெண்களை இப்படி தான் டிரெஸ் பண்ண சொன்னார்...” என்றார் ஆசிரியர் பொறுமையாய். “முழம் முழமாய் புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக, இருக்கிறதா, முந்தானை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல் வெளிநாட்டு பெண்கள் மாதிரி தமிழ் பெண்களும் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு, கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும் என்றார் ஐயா.”

நான் ஆட்சரியமாக பார்த்தேன், “அப்படினா, இன்னும் ஏன் தமிழ்நாட்டு அறிவியல் யூனிவர்சிட்டி வைஸ்சான்சலர் எல்லாம் பெண்கள் காலேஜுக்கு பாண்ட் சட்டை போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு ரூல் போடுறாங்க இன்னும்?”

அவர் சிரித்தார், “அவங்க எல்லாம் இன்னும் பிற்போக்கா இருக்காங்க, நீங்க வல்லத்துல இருக்க எங்க காலேஜுக்கு வந்து பாருங்க, அது பெண்களுக்கான எஞ்சினியரிங் காலேஜ், அங்கே எல்லா கேர்ச்சுக்கும் யூனிஃபார்மே பாண்ட் சட்டை தான். கிட்ட தட்ட இருவது வருஷமா அப்படித்தான்...”

”அட, பரவாயில்லையே!” நான் வியப்புடன் விழிக்க, அவர் கை நிறைய புத்தகங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார், “இதெல்லாம் ஐயா பெரியாரோட புத்தகங்கள், பெண் ஏன் அடிமையானாள், பெரியார் கழஞ்சியத்தோட தொகுப்பெல்லாம் இதுல இருக்கு, படிச்சிப்பாருங்க” என்றார்.

அத்தோடு விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டேன், வழியில் புத்தகங்களை புரட்டி பார்த்தால், பெரியாரின் எழுத்துக்களையும் அவை வெளிபடுத்திய அறிவியல் ரீதியான முற்போக்கு சிந்தனைகளும் எனக்கு அதிசயமாய் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னாடியே, இவ்வளவு அறிவுகூர்மையாய், லேட்டெஸ்ட் ஞானத்துடன் எழுதிதள்ளி இருக்கிறாரே, இந்த மனிதன் என்ன படித்திருக்கிறார் என்று புரட்டி புரட்டி பார்த்தால், அஞ்சாவதோ, ஆறாவதோ தான்!

ஆக, நம்மை போல, ஏட்டு சுரக்காய் அறிவில்லை, எல்லாமே சொந்த சிந்தனையா!! அப்படி என்றால் என்ன அபாரமான சிந்தனையாளராய் இருந்திருப்பார் அந்த மனிதர்!
இத்தனை நாளாய் இந்த ஆளை பற்றி எதுவுமே தெரியாமல், அவர் பெயரிலான சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வேறு முடித்திருக்கிறேன் என்று நினைத்தால், எனக்கு ரொம்பவே வெட்கமாகி விட்டது!

சரி, இப்போதாவது தெரிந்துக்கொண்டேனே பெட்டர் லேட் தென் நெவெர், என்று மனதை தேற்றிக்கொண்டு, அவர் புத்தகங்களை படித்ததும் தான், வெறும் ராமசாமி நாயகராக இருந்த இவரை பெண்கள் எல்லாம் சேர்ந்து பெரியார் என்று அழைக்க என்ன காரணம் என்று புரிந்தது. சும்மா சொல்லக்கூடாது, ஒன் மேன் ஆர்மியாய் மனிதர் எத்தனை பெரிய சமூக புரட்சிகள் செய்திருக்கிறார்! சாதாரண ஆண்களால் முடியாத பல சாதனைகளை இந்த தனி ஒரு ஆள் செய்து ஜெயித்தால் தான் பெண்கள் எல்லாம் அவரை பேராண்மைமிக்கவராய் கருதி, பெரியார் என்றார்கள் போல!

அப்படி என்ன செய்துட்டார் பெரியார் என்று கேட்கத்தோன்றுகிறதா? பெ. மு வில் நானும் அப்படி தான் இருந்தேன். எப்பேற்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று சட்டைசெய்யாமல் இருப்பது தான் என் வழக்கம். ஆனால் பெ.பியில் நான் கொஞ்சம் மாறிவிட்டேன். பெரியாரை கண்டு வியக்க ஆரம்பித்தேன்!

அது சரி, பெ.மு என்றால் என்ன, பெ.பி என்றால் என்கிறீர்களா? சிம்பிள், பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின். பெரியார் பரலோகம் போய் சேர்ந்து இத்தனை நாளான பிறகு என்ன பெ.மு, பெ.பி என்கிறீர்களா? எனக்கு அவரை இப்போது தானே தெரியும்!

அப்படி என்ன பெரிதாய் தெரிந்துக்கொண்டேன், இவ்வளவு வியக்கும் அளவுக்கு என்கிறீர்களா? ஒன் பை ஒன் சொல்லி புரியவைக்க முயல்கிறேன்....

Saturday, May 31, 2008

முதல் பெண்ணியவாதி

இன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள், நல்ல வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால் இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்து குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய் தான் இன்றைய பெண்கள் கொஞசமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது. இப்படி பெண்களுக்காக போராடியவர்களில் பல பேர் பெண்கள், இவர்கள் தங்களுக்காக தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால் தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகதீவிரமாக பெண்களின் உரிமைக்காக் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் திரு ராமசாமி.

ஆனால் ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை....சாதாரண மனிதர்களை தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்க்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேக சிறப்பு பெயரால் தானே அழப்போம். இப்படி சிறப்பு பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புபெயரே நிரந்திரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மஹான் தான். இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்கு பிரசித்தமான அவரது சிறப்பு பெயர் தான் தந்தை பெரியார். யோசித்து பார்த்தால், புத்தர், கிரிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தர சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள், பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்த்தற்காக பிரசித்திபெற்றவர். ஆனால், இந்த பெரியார் என்ற மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.

இன்று ஆணுக்கு பெண் சம்ம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூக கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை, அவளுக்குஆணை போலவே எல்லா சுத்ந்திரமும் உண்டு தான், இந்த பெண் விடுத்லை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன் நட்த்திய பெரும் போராட்ட்த்தின் நேரடி விளைவு தான். கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பாலிய விவாகம் செய்ய பட்டுவிடுவார்கள். இந்த குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அல்பாஅயிசில் மாண்டுபோனான் என்றால், இந்த குட்டி விதவைக்கு எல்லா சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்களி ஆக்கி முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்த குட்டிப்பெண் தன் மித ஜீவனத்தை முழு பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்த குட்டி பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து.

அமங்களியான் பெணின் கதி தான் இவ்வள்வு மோசம் என்று பார்த்தால், சுமங்களியாக இருந்த பெண்ளின் நிலையும் மட்டமாகவே இருந்த்து. அந்த காலத்து பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது, கல்விகற்க்கூடாது, வேலைக்கு போக முடியாது, சுயமாய் சம்பாதிக்க முடியாது, சொத்துரிமை கிடையாது, சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை, சுயமாய் வாழ்க்கைதுணையை தெர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்த சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனி பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளதோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்த்து...காரண்ம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள், அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது.

அந்த காலத்து ஆண்களும் பெண்களை பற்றி பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பாலியவிவாகம் தான் சரி, அப்போது தான் பெணின் கற்பு 100% தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரை போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள்.

ஆனால் பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர், மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்க தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவ சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்த்தவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத்த்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பட்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.

ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்பனை கூட செய்யமுடியாத காலத்திலேயே ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ ட வின்சியை போல, பெரியாரும், தம் காலத்தை மிஞ்சும் யோசிக்கும் தீர்க்கத்சிந்தனையாளராக இருதார். ஒரு சமூகவிஞ்ஞானியாய், தம் சம்காலத்தவர் சிந்தித்துக்கூட பார்க்க் முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண் இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா விதத்திலும் ஆணுக்கு சரி நிகர் சமானம் என்று முதல் முதலில் பெண்ணியம் பேசியவ்ரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காக் பல நூதன போராடங்களை மேற்கொண்டு, சமுக அமைப்புகளை எதிர்த்து தாக்கினார்.

அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல், அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை என கருதப்பட்டன. பெரியார் இந்த பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.

ஆணுக்கு பெண் சம்ம் என்ற பின் பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்தி காட்டி ஆணின் அங்கீகாரத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்க்ள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகிய்வற்றை கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காக், செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காக் செலவிடும் நேரத்தை கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல்; உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேளைகளில் செலவிடும் நேரத்தை தங்கள் அறிவை மேம்படுத்த பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளை துறந்ததை போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களை போல, மேலய நாட்டுப்பெண்களை போல, பேண்ட். சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெத்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே என்று ஐடியா சொன்னார் பெரியார்.

பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் வித்த்தை பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்த்து என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதை கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே! பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக்கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்கு சிந்தனையுள்ளவர் பெரியார்.

இது போலவே பிள்ளைபேறு பற்றியும், கீழ்படிதலை பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் யந்திரங்களாக பார்க்கவில்லை, அவர்க்ளை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களை போலவே பெண்களூம் நன்றாக படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற் அவரது புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால் அறிவு அவளை சுதந்திரப்படுத்தும், அதனால் பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார். பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போனதலைமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன் நம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தை காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்துக்கொள்வான் என்றார்.

பெண்கள் சமயல் அறையிலேயே முடங்கிக்கிடப்பதை பற்றியும் பெரியாரிக்கு எதிர்ப்பு இருந்த்து. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமயலே கதி என்று இருப்பதினால் தான் அவர்க்ளது அறிவை உபயோகமாக பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உண்வு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.

தமிழ் பெண்களின் உச்ச்க்கட்ட உண்ர்வான கற்பை பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களை கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்த குறிகிய வட்ட்த்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதை திருமணங்களை தோற்றுவித்தார். சாதாரண திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கபடுவாள். ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை வந்த பிறகு, பெண்னண தொரந்து ஏன் ஒரு பொருளாகவே நட்த்தவேண்டும்? தனக்கு பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளை தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமான்ப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கை துணையாய் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் ஒரு அவுரவமான கண்ணியமான, நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் தங்கள் சுய அவுரவத்தை பாதுகாத்துக்கொள்ள முடிந்ததால், இது சுயமரியாதை திருமணம் என்று பிரபளமானது.

ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துக்கொண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார்கள் பலர். இன்று வரை தமிழ் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டை பற்றி ஆஹா ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார், கால் நடைகளுக்கு தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிரு கட்டுவார்கள், பெண் என்ன விளங்கா, அவளுக்கு எதற்கு ஒரு கழுத்து கயிரு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெணும் சம்ம் ஆகிவிட்ட காரண்த்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதை போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்த சடங்கை கைவிடலாம், என்றார். தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமணம் செய்தால் அமங்களம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய் காட்டினார் பெரியார்.....இந்த பெண்கள் எல்லாம் சாஸ்திர ஸ்ம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம், ஆனால் அதனால் அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்த சுயமரியாதை திருமண்ங்கள் சட்ட படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா தமிழகமுதல் அமைச்சரானதும் முதல் வேளையாக இந்த சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கிவிட்ட்தால், பெரியாரின் இந்த நவீன திருமணம் மிக பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்த திருமணம் அமோக வரவேற்பை பெற ஒரு புது சமுக புரட்சியை ஏற்படுத்தியது.

இத்தகைய சுயமரியாதை திருமணத்திற்கு பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கண்வனை பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெத்து செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீண்டித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்கவேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்த காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்saரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காக பெற்றுக்கொடுத்தார்.

அதுவும் தவிற கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசம்ம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படிகிற சொல்லால் அழைபதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விழிசொல்லாய், துணைவர், இணைவர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பத்ங்களை பயன்படுத்த ஊக்குவித்தார். எதே போல எல்லா துறைகளிலும் மகளிர் அயராது உழைத்தார் பெரியார்..., சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்த்துரிமை என்ப்வை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பல பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார். அவரது சிந்தனை தெளியும், தர்கத் திறனும், எல்லோரது கண்களையும் திற்ந்து மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்த்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் பெரியார். அவரது கருத்துக்களை பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படி படியாக, அதுவே நாகரீகத்தின் உச்ச்க்கட்ட வெளிபாடானது. பெண்களை கண்ணியமாய் நடத்துவதே நாகரீமானது.

பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புது தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துக்கொண்டு விழிப்புற்றார்கள். பெரியாரும் பெண்களை ஊக்குவிக்கும் விதம்மாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மா நாடுகளை கூட்டினார். இப்படி 1936 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மா நாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்திற்காக் பெரிதும் பாடுப்பட்ட அவருக்குத்து ‘பெரியார்’ என்ற சிறப்பு பெயரைச்சூட்டினர். அன்று முதல் திரு ஈ வே ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பல பல சமூக சீர்திருத்தங்களை செய்திருந்தார்.....ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய் சேவை தான், வெறும் ராம்சாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாம்னிதன் ஆக்கியது.

பெரியாரும் தான் இந்த பெரயருக்கு மிக பொருத்தமானவர் என்பதை நிறுபவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையின் விட்டுச்சென்றார். அது வரை எந்த தலைவரும் தன் நிறுவனத்தின் பொருப்பை பெண்களிடம் ஒப்படைத்தாக சரித்திரமே இல்லை....ஒரு வேளை பெண்களால் பெரிய வகிக்கமுடியுமோ என்று மற்றவர்கள் சன்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால் பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

அவர் நம்பிக்கையை காப்பாற்றி, பெரியாரின் பெண்ணிய கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி தஞ்சை அருகே உள்ள வள்ளம் எனும் ஊரில் கிட்ட்தட்ட இருவது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட்து. இந்த கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட், சட்டை தான். யோசித்து பாருங்களேன், இன்று வரை தமிழ் கலாசாரத்தில் பெயரால், பெண்கள் கால்லூரிகளுக்கு பேண்ட் சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைகழக துணைவேந்தர்கள் எல்லாம் கரார் ஒடுக்குமுறை செய்வதை பார்த்தால் உடனே புரிகிறது, திரு ஈ வே ரா, உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மஹா முற்போக்குசிந்தனையாளர் தான். இந்த பெரிய மனிதருக்கு இன்றைய எல்லா பெண்களும் நன்றி சொல்லக்கடமை பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரதில் இருக்க காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறை படுத்த முயலும் சாமான்ய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காக் போராடினாரே, அவர் தான் பெரியார். எப்பேற்பட்ட பெரியார்!