Wednesday, January 28, 2009

1879, Sep 17th

1879 ஆம் ஆண்டு.

தாமஸ் ஆல்வா எடிசன், மின் விளக்கை கண்டு பிடித்தார்.

அதே ஆண்டு அமேரிக்காவில் பெண் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தில் வழக்காட அனுமதி தரப்பட்டது.

சார்லஸ் டார்வின், தி ஓரிஜன் ஆஃப் ஸ்பீஷீஸ் புத்தகத்தை எழுதி அத்தோடு இருபது வருடங்கள் ஆகி இருந்தன.

இந்த 1879 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் தேதி தான் வெங்கடசாமி நாயகருக்கும், சின்ன தாயம்மாளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தான். இந்த பையன் பிற்காலத்தில் என்ன ஆவான், எப்படி போவான் என்றெல்லாம் தெரியாத அவன் பெற்றோர்கள் அவனுக்கு ஆசையாய் ராமசாமி என்று பெயர் வைத்தார்கள். காரணம் அவர்கள் குடும்பம் ஆசாரமான வைஷ்ணவ மரபுகளை கடைபிடித்த பணக்கார வியாபாரி வர்க்கம். தொன்று தொட்டு ராமநாமத்தை ஜெபிக்கும் குடும்பம். அதனால் தங்கள் அருமை மகனுக்கு ராமனின் திரு நாமத்தையே சுட்டினார்கள்.

குட்டி ராமசாமியும் அப்பா அம்மா மீது அதிக பாசம் கொண்டு, அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடக்கிற மிக சமத்து பிள்ளையாக தான் இருந்தான்.

அவன் அம்மா வேறு தீவிரமான ராம பக்தையா, அதனால் அந்த ஊர் பக்கம் யாராவது வேதம், மதசொற்பொழிவு, கதாகாலஷேபம் என்று சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். வீட்டிற்கு வரவேற்று, ராஜ உபசாரம் செய்து, மதவிளக்கங்களை கேட்டு வைத்தால் நிறைய புண்ணீயம் கிடைக்கும் என்று சின்ன தாயம்மாள் நம்பினார். அதனால் ஈரோடு பக்கம் யாரவது மதப்பெரிசுகள் வந்தாலே போச்சு, குட்டி ராமன் வீட்டில் பெரிய தடபுடல் தான்.

இப்படி சின்ன தாயம்மாள் விருந்தோம்பிக்கொண்டிருக்க, அவர் வீட்டிற்கு வந்து பல பேர் மத போதனைகளையும், புராணக்கதைகளையும் சொல்ல, இதை எல்லாம் கேட்டே வளரும் வாய்ப்பு குட்டி ராமசாமிக்கு.

சாதாரணமாகவே குழந்தைகள் நிறைய கேள்வி கேட்பார்கள். என் தோழி ஒருத்தி, ஏரியா பொடிசுகளுக்கு நீதி கதைகள் சொல்வதற்காக தேவர்களையும், அசுரர்களையும் பற்றி ஏதோ ஒரு புராண கதையை சொல்லிக்கொண்டிருந்தாளாம். அப்போது அசுரர்கள் தலையில் கிரீடமும் கொம்பும் இருக்கும் என்றாளாம். குழந்தை கேட்டதாம், கிரீடத்து மேல எப்படி கொம்பு இருக்கும்? கொம்பு மேல எப்படி கிடீடத்தை வெக்க முடியும் என்று. கடைசியில் கிரீடத்தில் கொம்பை செருகி இருப்பார்கள், கிருஷ்ணன் கிரீடத்தில் மயில் தோகையை செருகிக்கொண்டதை போல என்று ஒரு வழியாக விளக்கம் சொல்லி முடித்தால், குட்டி கேட்டதாம், அதெப்படி கொம்பை மிருகத்து கிட்டேர்ந்து எடுக்கலாம், அது மிருக வதை, சட்ட விரோதமாச்சே என்று!

இப்படி குழந்தைகள் ஃப்ரெஷ்ஷாய் உலகை பார்ப்பதினால் பெரிசுகள் நமக்கு அதுவரை உரைக்காத பல விஷயங்கள் அவர்களுக்கு பட் பட் என்று தென்படுகின்றன. குழந்தைகளின் இந்த குணத்தை ரசிக்க தெரிந்த பெரிசு என்றால், இந்த சைல்டிஷ் க்யூடியாசிடியை ஊக்கு விப்பார்கள். ரசனையற்ற ஏதாவது முசுடு என்றால், “அதிக பிரசங்கிதனமாய் என்ன ஏடாகூட கேள்வி இது. வாய மூடிக்கிட்டு கதையை கேட்டு தொலை இல்லனா சாமி கண்ணை குத்தீடும் பார்!” என்று தன் இயலாமையை மறைக்க உதார் விட்டு நழுவ பார்க்கும்.

இதென்ன அநியாயம் கேள்வி கேட்டதுக்கெல்லாமா சாமி கண்ணை குத்தும், சரியான சிடுமூஞ்சி சாமியா இருக்கே! என்று குழந்தை அந்த சமையத்திற்கு வாயை மூடிக்கொண்டாலும், அதன் கேள்வி கேட்கும் இயல்பை அதனால் மாற்றிக்கொள்ள முடியாதே. அதுவும் போக, சாமி இத்தனை நாளா கண்ணை குத்தவே இல்லையே, அப்படினா இது டூப்பு என்று புத்திசாலி குழந்தைகள் புரிந்துக்கொள்வார்களே!

குட்டி ராமசாமி, ரொம்ப சுட்டியான புத்திசாலி குழந்தை என்பதால் அவனும் தன் வீட்டில் வந்து சொற்பொழிவு செய்த பெரிசுகளிடம் நிறைய கேள்விகள் கேட்டான், “ அதெப்படி, வாமணன் மூணே நடையில் மூணு உலகத்தையும் அளந்தார்? ஒரு கால் இந்த இந்த உலகத்துல இருக்குற ராஜாவோட தலையிலன்னா, அதெப்படி, இன்னொரு கால் உலத்துமேல படும்? “ இந்த கால குழந்தையாக இருந்தால், ”அப்ப ஒரு கால் குட்டியா, இன்னொரு கால் பெரிசா இருந்ததா? இரண்டு காலையும் இப்படி வெக்கணும்னா அப்ப இந்த சாமி எங்கே நின்னுகிட்டு இருந்ததாம், லாஜிக்கே சரியா இல்லையே? இந்த கதை சரியில்லை, வேற கதைய சொல்லு” என்றிருக்கும்.

இதே கேள்விகள் தான் அந்த கால குட்டி ராமசாமிக்கும் தோன்றின. கேட்டால், “கடவுளாச்சேனு கொஞ்சமாவது மதிக்கிதா பார், வாய்க்கு வந்த கேள்வி எல்லாம் கேட்குதே, இதெல்லாம் உருப்படுறத்துக்கே இல்லை. பிள்ளையா பெத்து வெச்சிருக்காங்க” என்று திட்டு தான் கிடைத்தது.

சரி தான் இந்த பெரிசுகளுக்கு பதில் தெரியலை போல, என்று அவர்கள் மேல் மரியாதை இழந்தான் குட்டி ராமசாமி.

அவர்கள் மேல் தான் மரியாதை போனதே தவிற அவர்கள் சொல்லித்தந்த போதனைகள் எல்லாமே உண்மை என்று தான் நம்பி இருந்தான். குழந்தை பெரியவர்கள் சொல்வதை நம்பித்தானே ஆகவேண்டும்.

பெரியவர்கள் சொன்னார்கள் இறைவன் எல்லோருக்கும் பொது என்று. ராமாவதாரத்தில் கடவுள், குகனை கட்டிபிடித்து, “நீ என் உடன் பிறந்தவனை போல” என்று சொன்னார் என்றால் என்ன அர்த்தம்? படகோட்டியும், ராஜகுமாரனும் சமம் என்று தானே அர்த்தம்.

ஆனால் அன்றாட வாழ்க்கையில் இப்படி சம்த்துவம் எதுவுமே பழக்கதில் இல்லையே.
உதாரணத்திற்கு குட்டி ராமாவின் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் ஒரு மாமி வீடு இருந்தது. தாகம் எடுக்கிறது என்று ராமா மாமியிடம் போய் தண்ணீர் கேட்டால், மாமி, “ஜலத்தை தூக்கி, வாயில் வைக்காமல் குடி” என்றாள். குட்டி பையன் தண்ணீரை தூக்கி குடித்தால், வாஅயில் படவில்லை தான், ஆனால் ஜலம் எல்லாம் மூக்கினுள் போய் புரக்கேறிக்கொண்டது. மாமி அது பற்றி எல்லாம் கவலை படவில்லை. அவளை பொறுத்த வரை, அவள் வீட்டு தம்பளர் ராமாவின் வாயில் படாத வரை ஷேமம்! என்று ராம உபயோகித்த தம்பளரை தண்ணீர் தெளித்து தீட்டு நீக்கி எடுத்துக்கொண்டு போய் விட்டாள்!

ஓ அப்படினா, நம்ம வீட்டை தவிற மற்றவர்கள் வீட்டில் தண்ணீரை இப்படித்தான் குடிக்கவேண்டும் போல, என்று குட்டி ராமா நினைத்துக்கொண்டான். பிறகு ஒரு சமயம் வேறொரு பெண் வீட்டில் தாகம் என்று தண்ணீர் கேட்டபோது, அந்த பெண்ணோ, “எங்க வீட்டுல எல்லாம் நீ தண்ணீயே குடிக்கக்கூடாதுப்பா,” என்றாள் பயந்துபோய். இல்லை ரொம்ப தாகம் என்ற போதோ, “சும்மா சப்பியே குடிப்பா” என்று அனுமதி தர, அப்பாடா, நிம்மதி என்று மட மடவென்று தண்ணீரை குடித்தான் ராமசாமி.

அப்புறம் தான் உரைத்து....அந்த மாமி துக்கி குடின்னு சொல்லுறாங்க, இந்த பெண்ணோ
முதலின் தண்ணீரே தரமாட்டேன் என்றார், பிறகு சப்பிக்குடி என்கிறாள்....ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். எல்லோருமே ஏன் ஒரே மாதிரி இல்லை, ஏன் இப்படி போட்டு குழப்புறாங்க என்று யோசிக்க ஆரம்பித்தான். இதுவே அவன் சின்ன மனதில் பிரதான சிந்தனையாகி விட “ஏன் இத்தனை வித்தியாசம்?” என்று கேட்டு கேட்டு பார்த்தான்.

யாரும் தெளிவான பதிலை சொல்லவில்லை.
அது அப்படி தான். அவங்க மேல் ஜாதி, இவங்க கீழ் ஜாதி.

மேல் ஜாதி என்றால் என்ன, கீழ் ஜாதி என்றால் என்ன?
மேல் ஜாதினா பிராமணர்கள், கீழ் ஜாதி என்றால் சூத்திரர்கள்.

பிராமணர்னா யார், சூத்திரர்னா யாரு?
பிராமணர்னா பூனூல் போட்டு, குடுமி வெச்சிருப்பாங்க, சூத்திரர்னா, அப்ப்டி இல்லை.

அப்படினா, பிராமணர் பூனூலை கழட்டி, குடுமியை வெட்டிக்கிட்டா, சூத்திரர் ஆயிடலாமா?
சீ, சீ, முடியாது

அப்ப, சூத்திரர், குடுமி வெச்சி, பூனூல் போட்டா பிராமணர் ஆயிடலாமா?
வாயை கழுவு, அதெப்படி முடியும். பிராமணர்னா பிரம்மாவோட தலைலேர்ந்து பிறந்தவங்க, சூத்திரர்னா பிரம்மவோட கால்லேர்ந்து பிறந்தவங்க...அதனால் பிராமணர்னா உசத்தி, சூத்திரர்னா மட்டம்.

ஓ, கால்லேர்ந்து பிறந்த மட்டமா?
இல்லையா பின்னே, ஆமா!

அப்ப, கால்னா மட்டமா?
ஆமா, ஆமா

அப்படின்னா....ஏன், எல்லாரும் பெரியவங்ளை பார்த்தா பாத பூஜை பண்ணுறாங்க, கால்ல விழுந்து கும்பிடுறாங்க? சாமி காலடியில் காணிக்கை வெக்குறாங்க. பாத கமலம், பாத புஷ்பம்னு சொல்லுறாங்க. கடவுளே உன் காலடியில் விழுந்து கிடக்குறேன்னு சொல்லுறாங்க?

இப்படியெல்லாம் அபத்தமா பேச எங்கே தான் கத்துகிட்டியோ. உன்னை எந்நேரத்துல பெத்தாங்களோ!

இப்படி தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலே தன் இளம் வயதை தாண்டி வந்தான் குட்டி ராமசாமி....

அதனாலேயோ என்னவோ, ராமசாமியின் மனநிலை பெரிய மாறுதலுக்கு உள்ளாயிற்று. அவன் அம்மா ஆசை ஆசையாய் வணங்கி வழிபட்டு, தன் மகனுக்கும் பெயர் வைத்து மகிழ்ந்த அதே ராமனை, சாமியே இல்லை என்று செருப்பால் அடுக்கும் தன்மைக்கு பிறகாலத்தில் மாறினான் இந்த ராமிசாமி. அவன் ஏன் அப்படி மாறி போனான்?

அனலைஸ் செய்து தான் பார்ப்போமே!

3 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

டாக்டர், நீங்கள் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றின் பல பகுதிகள் பற்றீ ஏழுதீ வருகிரீர்கள்.....நல்ல பதிவு....தொடர்ந்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்....நன்றீ...

RAMASUBRAMANIA SHARMA said...

எனது கருத்துக்கள் பற்றி தங்களின் விமர்சனம்..

Anonymous said...

Hello Madam,
See this link to hear 'Thanthai Periyar' Last Speech before his death at Chennai
http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000656