Monday, January 12, 2009

கண்டுஃபிகேஷன்!

அடக்கி வாசித்து ஆண்களை உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளும் திறன், உறவின் ஆரம்பத்தில் பார்வையை தாழ்த்தி, அவனை ஊக்கு வித்தல், பிறகு சிரிப்பாலேயே ஒரு அழைப்பிதழ் விரித்தல் ஆகிய ஆரம்ப அஸ்திரங்களை நீங்கள் வெற்றிகரமாக கையாள கற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால், லெட் அஸ் மூவ் ஆன் டூ அஸ்திரம் நம்பர் 5, அதாகப்பட்டது, கண்டுஃபிகேஷன்.
இந்த அஸ்திரத்தை பற்றி சொல்வதற்கு முன்னால், ஆண்பாலின இயல்பை பற்றி உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் விலங்கினங்களை ஒரு முறை நன்றாக உற்று பாருங்களேன். அதே ஆடு, மாடு, நாய் , பூனை, கோழி, சேவல், கொசு, ஈ, எறும்பு, கரப்பாண்பூச்சி, தானே, இதில் புதிதாக பார்க்க என்ன இருக்கிறது? என்று அலுத்துக்கொள்ளாதீர்கள்....நீங்கள் அன்றாடம் பார்க்கும் இந்த விலங்குகளில் ஆண் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். உதாரணத்திற்கு பேடை கோழிக்கு தலைக்கு மேல் அழகான அந்த சிகப்பு கொண்டை இருக்காது, ஆனால் சேவலுக்கோ பளிச்சென்று ஒரு கொண்டை இருக்கிறதே. ஆண் அடுக்கு தான் தாடியும், வளைந்த வணப்பான கொம்புகளும் இருக்கும். காலை மாட்டுக்கு தான் முதுகில் பெரிதான அந்த வளைவு இருக்கும். ஆண் கரப்பாண்பூச்சு பெரிய ஆண்டனாவோடு திரியும்.....ஆக, யானை, சிங்கம், மான், மயில் என்று நீங்கள் எந்த விலங்கை எடுத்தாலுமே ஆண் பெண்ணை விட கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறதே, அது ஏன் என்று யோசித்தீர்களா?
இந்த ஆண் விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது, யாரை கவர? இவை இப்படி கவர்ச்சியாக இருந்து தொலைப்பதினால் தானே வேடர்களின் கையில் சுலபமாக மாட்டிக்கொள்கின்றன. ஆக இந்த விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது அதுகளுக்கே ஆபத்தாகியும் போவதுண்டு. அப்படி இருந்தும் இந்த விலங்குகள் எல்லாம் இத்தனை எக்ஸ்டிரா ஃபிட்டிங்ஸ்ச்சுடன் சுற்றி வருகிறதென்றால், இதெல்லாம் யாரை கவர்வதற்கான முயற்சி?
இந்த கேள்வி தான் சார்லஸ் டார்வினுக்கும் வந்தது. அவரும் பல தரப்பட்ட விருகங்களை பரிசோதித்து பார்த்து விட்டு, கடைசியில் கண்டு பிடித்த உண்மை என்ன தெரியுமா? இந்த ஆண் விலங்குகள் எல்லாம் இப்படி ஓவராய் ஷோ காட்டியதே பெண் மிருகங்களை கவரத்தானாம்!
பெண் மிருகங்களை ஆண் மிருகங்கள் ஏன் கவர வேண்டும் என்று பார்த்தால், மிருக ஜாதியில் இப்படி ஒரு நடை முறை இருந்ததை கவனித்தார்கள். பெண் மிருகம் தேமே என்று மேய்ந்துக்கொண்டிருக்கும். இனபெருக்க காலம் வரும் போது அதன் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்களை மோப்பம் பிடித்துக்கொண்டு, ஆண் மிருகங்கள் அந்தப்புறம் வந்து சேர, பெண் மிருகமோ, உடனே ஆணோடு கூடிவிடாது. வந்து சேர்ந்த அத்தனை ஆண்களுக்குள் முதலில் ஒரு பல பரிட்சை நடக்கும். கொம்புள்ள மிருகங்கள் தலையோடு தலை மோதி, யார் பெரிய கொம்பன் என்று போட்டியிடும். இதை ரட்டிங் (Rutting) என்போம்.
மயில், குயில் மாதிரி ஆண் பறவைகளோ, தோகையை விரித்து ஆடி காட்டி, அல்லது, தேன்மதுர குரலில் பாடி காட்டி, தன் திறமையை வெளிபடுத்தும்.
இப்படி ஆண்பால், மோதலில் ஜெயித்து, தன் அருமை பெருமைகளை எல்லாம் கடை பரப்பி, தன் பராக்கிரமத்தை எல்லாம் பரைசாற்றியதும், தான், பெண்பால் அதனோடு கூடவே இசையும்.
ஆக ஆண் பாலின் அனைத்து பிரையாசைகளுமே, பெண் பாலின் பார்வையில் தான் , “பெரியவன்” என்று காட்டிக்கொள்ளவே செய்யபடுகின்றன. இப்படி எல்லாம் விஞ்ஞானிகள் புட்டு புட்டு வைக்க, சே சே, அதெல்லாம் மிருக நடத்தையாக இருக்கலாம், ஆனால் மனித ஆண்கள் போயும் போயும் பெண்ணை கவருவதற்காக இப்படி எல்லாம் நடந்துக்கொள்ளவே மாட்டார்களாக்கும் என்று பல பேர் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.
ஆனால் மானுடவியல்காரர்கள் உலகம் முழுக்கும் இருக்கும் எல்லா விதமான மனித நாகரீகங்களையும் போய் பார்த்து, மனித நடத்தையை ஒரு விசாலமான பார்வையில் ஆராய்ந்துவிட்டு, கடையில் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? மனிதர்களிலும் ஆண், தன் கவர்ச்சிகளை கடைபரப்புவது பெண்ணின் கவனத்தை ஈர்க்கத்தான்! பல ஆண்கள் இதை தெரிந்தே செய்கிறார்கள், சில ஆண்கள் தங்கள் அறியாமலேயே செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்களே உங்களை சுற்றி இருக்கும் ஆண்கள் அனைவரையும் கவனித்து பாருங்களேன். கதை கவிதை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, வர்த்தகம், வணிகம், அறிவியல், ஆண்மீகம், பென்பொருள், என்று எத்துறையை சேர்ந்த ஆணாக இருக்கட்டுமே, அவர்களின் எல்லா பிரயர்த்தனைகளுமே கடைசியில் பெண்களுக்காக தான் என்பது புரியும்! வயதிற்கு வந்த அந்த தருணம் முதல், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆண்ணில் பெருபாண்மை பொழுதும், பெண்ணிடம் எப்படி நன்மதிப்பு பெருவது என்ற போராட்டத்திலே தான் போகிறது.
இதற்க்காக, அவன் கல்வி கற்று அறிவாளி ஆகிறான், பொழுதுபோக்குகள் பல கொண்டு திறமைசாலி ஆகிறான், நேர்த்தியாக, நாகரீகமாக, தன் நடை உடை பாவனைகளை மெருகேற்றிக்கொள்ள பாடுபடுகிறான், வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்க முயல்கிறான். நான் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் பார், என்று காட்டிக்கொள்வதறக்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாகனங்களையும் வாங்கி, பிரயோகித்து, தன் அந்தஸ்த்தை அதிகரிக்க பார்க்கிறான்....எல்லாம் எதற்க்காக? பெண்களிடம் நற்சான்றிதழ் பெருவதற்க்காக தானே!
அதனால் ஸ்நேகிதிகளே, ஆண்களின் இந்த அவஸ்த்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள். அவன் இத்தனை பாடுபட்டு, தன் கவர்ச்சி விகித்தை கூட்டிக்கொள்ள முயலும் போது, நீங்கள் அவனை சட்டை செய்யாமல் போனீர்கள் என்றால், அவனுக்கு எவ்வளவு வலி உண்டாகும். ஒரு மனிதனின் மனம் புண் பட நீங்கள் காரணமாக இருக்கலாமா? அதனால் உங்களை கவர முயலும் ஆண், உங்கள் எதிரில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள செய்யும் நடவடிக்கைகளை கவனியுங்கள். அவனை நீங்கள் ஒரு பெரிய ஹீரோவாக நினைக்க வேண்டும், உங்கள் மனதில் வேறு யாருக்குமே தராத பிரத்தியேக இடத்தை அவன் ஒருவனுக்கு மட்டுமே தர வேண்டும் என்றெல்லாம் அவன் ஆசை படுவதை புரிந்துக்கொள்ளூங்கள்.
வேறு எதையும் கவனிப்பதை நிறுத்திவிட்டு, அவனுக்கு உங்கள் முழு undivided attention னையும் கொடுங்கள். அவனை ஆசையாய் பாருங்கள். அவன் பேசுவதை கவனமாய் கேட்டு, அவன் காரியங்களை ஊக்குவித்து, உம் கொட்டு வையுங்கள். இப்படி நீங்கள் அவனை கண்டுக்கொண்டே இருந்தால் தான், “அப்பாடா, கடைசியில என்னை கவனிச்சிட்டா!” என்று அவன் பட்ட பாட்டிற்கெல்லாம் பலன் கிடைத்த ஆனந்தம் அவனுக்கு கிடைக்கும். இன்னும் இன்னும் உங்களை மகிழ்வித்து பார்க்கும் ஆசை அவனுக்கு அதிகரிக்கும்.
நீங்கள் நேசிக்கும் ஆணை இப்படி கண்டுஃபை செய்தீர்கள் என்றாலே போதும், சூரியன் பட்டதும், போஷாக்கேற்பட்டு, செழிப்பாய வளரும் மரம் மாதிரி, அவன் தன்நம்பிக்கையும், சுய மரியாதையும் அதிகரிக்கும். சந்தோஷம் பெருகும். உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் ஆசையும் அதிகரிக்கும்!
ஆனால் ஒரு எச்சரிக்கை. பார்க்கும் எல்லா ஆண்களையும் கண்டுஃபை பண்ணி வைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் மேல் மையல் கொண்டு, “நீ என்னோட இல்லைனா என்னால உயிர் வாழவே முடியாது” என்று ஓவர் செண்டிமெண்டில் உருக ஆரம்பித்துவடுவார்கள் நீங்கள் கண்டுஃபை செய்த அத்தனை ஆண்களூம். இதுவே அநாவசிய பிரச்சைனைகள ஏற்படுத்தி விடுமே.
அதனால் இந்த கண்டுஃபிகேஷன் எல்லாம் நீங்கள் விரும்பும் ஆண்களுக்கு மட்டும் தான். பிற ஆண்களை கண்டுஃபை பண்ண இந்தியாவில் மட்டும் நூறு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் தந்தாக வேண்டுமே, அதனால் உங்கள் காதலன், கணவன், மகன், நண்பன், மருமகன், பேரன் மாதிரியான ஆண்களை மட்டும் கண்டுகொண்டு வையுங்கள். மீதமுள்ள மற்ற ஆண்களை கண்டுக்கொள்ள தான் அவரவர்க்கு என்று தாய் குலங்கள் இருப்பார்களே. அதனால் பேட்டை மாறி பரோபகாரம் செய்யாமல் உங்கள் எல்லைகளை உணர்ந்து இந்த கண்டுஃபிகேஷன் என்கிற அஸ்திரத்தை உபயோகித்து பாருங்கள்! ஆண்களை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸி என்பது புரியும்!

2 comments:

வேலன். said...

அருமையான பதிவு - இறுதியில் நச்சென்று முடித்துவிட்டீர்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Aishwarya Arunkumar said...

Dr, Only because of ur KANDUFICATION method, he dressed smart, tried to impress me in so many ways. but all these happened till we got engaged. Now he cuts his hair once in 3 months, doesn't shave regularly.. Why do men lose the interest of impressing their partner AFTER marriage?? I do tell him regularly "u look so handsome with a clean shave and especially with that kurtha... blah blah" I also try to encourage him by doing something very special on that day he is neat.. but nothing works out. Pls suggest something- Aishu.