Wednesday, April 14, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? 32

ஒரு ஆணை தேர்ந்தெடுப்பதற்கு முன், அவன் அம்மா அப்பாவை நுனுக்கமாக கவனிப்பது எவ்வளவு அவசியம் என்பதை பற்றி எல்லாம் இந்த தொடரில் பார்த்தோம்….இனி அவன் வாழ்வின் மிக அத்தியாவசியமான அடுத்த உறவு, அவனுடைய பெண் தோழி/தோழியர்.

எல்லா ஆண்களுக்குமே பெண் தோழிகள் ரொம்பவே அவசியம். அந்த தோழி அவன் தாயாகவே இருக்கலாம்….. ஷே குயராவை பற்றி கேள்விபட்டிருப்பீர்களே. இவர் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த ஒரு மருத்துவர், ஆனால் இவரை கூபா நாட்டின் தீவிரவாத போராளியாக தான் உலகமே அறியும். இயற்பெயர் எர்னெஸ்டோவாக இருந்தாலும், செல்ல பெயரான ஷே தான் உலக பிரசித்தம். இப்படி எல்லாம் புகழ் பெற்றிருந்த இந்த ஷேவுக்கு உயிர் தோழி யார் தெரியுமா? அவன் அம்மா சீலியா தான்! ஷே எந்த நாட்டில் வசித்து வந்தாலும் சீலியாவுக்கு வரி வரியாக கடிதம் எழுதி தள்ளுவாராம்…..அவ்வளவு நட்பு அம்மாவுக்கும் பிள்ளைக்கும்.

அல்லது இந்த தோழி அவன் சகோதரியாக கூட இருக்கலாம்….உதாரணத்திற்கு இராஜராஜ சோழன். இவருக்கு இவர் சகோதரி குந்தவை தான் பெஸ்ட் ஃபிரெண்ட்!

அல்லது இந்த தோழி யாரோ ஒரு சொந்தக்கார பெண்ணாக இருக்கலாம், கிருஷ்ணனுக்கு பாஞ்சாலி சகியானது மாதிரி.

இப்படி எந்த தோழியும் அமையாவிட்டால் குறைந்த பட்சம் அவன் படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில் என்று இவனுக்கு அமைந்த வெளி தோழியாக இருக்கலாம், அதியமானுக்கு அவ்வையார் தோழியாக அமைந்த மாதிரி…..

எப்படியோ, யாராவது ஒரு பெண் தோழியாவது அவனுக்கு இருந்தே ஆக வேண்டும்!!!

அது ஏன் அப்படி, கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய அவசியம் என்ன? ஒரு பெண் தோழியினால் அப்படி என்ன பயன்? என்று நீங்கள் யோசித்தால், இதோ பயன்பாட்டின் பட்டியல்:

1. ஒரு பெண் தோழியுடனாவது பேசி பழக வாய்ப்பிருந்தால் தான் பெண்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு ஆண் புரிந்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு ஸ்நேகிதன்………….. அவனுடன் படித்த ஒரு சகமாணவிக்கு திருமணம் முடிவாகி இருந்தது. மாப்பிள்ளை பையன் தனக்கு போன் செய்யவில்லை, லெட்டர் போடவில்லை, ஒரு எஸ் எம் எஸ் கூட அனுப்பவில்லையே என்று அவள் நொந்துபோய் புலம்பி தள்ளினாள். இதை கேட்ட ஸ்நேகிதன் ரொம்பவே சீரியஸாய்,” என்னயா இது, இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்காங்க? கல்யாணமாகுறத்துக்கு முன்னாடியே ஃபோனெல்லாம் பண்ணனுமாமே….இது கொஞ்சம் ஓவரா இல்ல?” என்றான் பெரிய ஆட்சரியத்துடன். “நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன்ப்பா…..கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் அசிங்கமா பொண்ணுகிட்ட பேசி வழியவெல்லாம் மாட்டேன்ப்பா!”

அப்புறம் அந்த அப்புராணி பையனுக்கு பெண்சகாக்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து லெக்சர் அடித்தார்கள், “அட மடசாம்பிராணீயே. கல்யாணம்ன உடனே இந்த பொண்ணு அவங்க வீடு வாசல் அப்பா அம்மா, சொந்தம் பந்தம்னு எல்லாத்தையுமே விட்டுட்டு அந்த பையனை மட்டுமே நம்பி தானே வருவா…..அவளுக்கு பயமா இருக்காதா? குறைந்த பட்சம் அவன் ஃபிரெண்டிலியா பேசி, அவளை ரிலாக்ஸ் பண்ணினா தானே அவளுக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்? அதுவும் இல்லாம, முன்ன பின்ன பேசி பழகாதவனோட திடுதிடுதிப்புனு எப்படியா ஒருத்தி தாம்பத்திய வாழ்க்கையில ஈடு பட முடியும்? முன்னாடியே பேசி, நம்பிக்கை ஏற்பட்டா தானே வாழ்க்கை ஸ்மூத்தா போகும்….” என்று விளாவரியாக புரியவைத்த போது தான் திருமணத்திற்கு முன்பே மணப்பெண்ணிடம் பேச வேண்டிய அவசியமே அவனுக்கு புரிந்தது…..

ஒரு வேளை இப்படி இந்த பெண்சகாக்கள் எல்லோரும் கூடி, அவனுக்கு கூட்டு ஆலோசனை செய்திருக்கவில்லை என்றால், அவனை கட்டு கொள்பவளின் நிலைமையை யோசித்து பாருங்களேன்!

2. பெண் ஸ்நேகிதிகள் இருந்தால் அதில் அடுத்த பெரிய நன்மை, ”ஏய் இந்த பைய எடுப்பா, இந்த நோட்டை அங்க வைய்யேன்…” என்று ஏதாவது ஏவல் செய்து பழகி இருப்பான். இப்படி ஏவலே செய்து பழகாத ஒரு மாப்பிள்ளை பையன் என்ன செய்வான்? அப்படி ஒரு கேஸும் எனக்கு தெரியும்…..அவன் மனைவி வாஷ்பேசினில் முகம் கழுவும் போது, அழைப்பு மணி அடிக்க, இவள், சாதாரணமாக, “கதவை திறங்களேன்” என்றது தான் தாமதம்….நெற்றிக்கண்ணை அகலமாக திறந்து விட்டான் பையன்…..”நான் என்ன உனக்கு கதவை திறந்து விடுகிற வேலைகார பையனா? நான் யார் தெரியுமா? என் அந்தஸ்து என்ன தெரியுமா? என் சொத்து கணக்கு தெரியுமா?” என்று இவன் ருத்ரதாண்டவம் ஆட, அவன் மனைவியோ, “அய்யே, இதுக்கு போய் இந்த அலட்டு அலட்டிக்கிறானே, சரியான முசுடு” என்று முகம் சுளித்துக்கொண்டாள்….இப்படி எல்லாம் பையன் ஓவர் ரியாக்ட் செய்ய கூடாதென்றால் அவனுக்கு பல பெண் ஸ்நேகிதிகள் இருந்து அவர்களுக்கு அவன் உபகாரங்கள் செய்து பழகி இருக்க வேண்டுமே.

3. பெண் ஸ்நேகிதிகளின் அடுத்த அவசியம்: அந்த மனைவிக்கு மாதவிடாய் சமயம். அவள் வயிற்று வலி என்று படுத்திருக்க, அவள் கணவன் வந்து “சும்மா என்ன சோம்பேறி மாதிரி சோஃபாவுல சாஞ்சிகிட்டு, ஏந்திரி, போய் என் லுங்கிய எடுத்துக்கிட்டு வா” என்று அவள் வயிற்றில் தட்டி எழுப்ப, இவளும் சினுங்கி, “எனக்கு பீரியட்ஸ்” என்று அறிவிக்க, அதற்கு அவன், “அதனால என்ன? ஓடு, சீக்கிரம் போய் லுங்கிய எடுத்துக்கிட்டு வா” என்று அதட்ட, “இதை கூட புரிந்துக்கொள்ளாத ஜடமா இருக்கானே” என்று மனைவி நொந்து போனாள்! இந்த பையனுக்கு யாராவது பெண் ஸ்நேகிதிகள் இருந்திருந்தால், குறைந்த பட்சம், இந்த மாதிரியான அசவுகரியங்களை புரிந்துக்கொள்ளும் பக்குவமாவது அவனுக்கு இருந்திருக்குமே!

4. பெண் ஸ்நேகிதிகளின் மிக முக்கியமான பயன்பாடு: அவன் உடன் வேலை செய்யும் பெண் அவள். திருமணம் என்று அழைப்பிதழ் வழங்கினாள்….இவனும் அலுவலக நண்பர்களோடு சேர்ந்து கூட்டாய் பரிசு வாங்க தன் பங்கு காசை கொடுத்திருந்தான். திடிரென்று திருமணம் நின்று விட்டதாக சேதி வந்தது. ”டவுரி பிரச்சனை” என்று தெரியவந்தது. அதன் பிறகு அந்த பெண் சில நாட்களுக்கு வேலைக்கே வரவில்லை. வந்த பிறகும் சோகமே உருவாக, எப்போதுமே கண்ணில் ஜீவனில்லாமல் பரிதாபமாக இருக்க…..அப்போதே முடிவு செய்தான் பையன்…..”என் கல்யாணத்துக்கு நோ டவுரி கிவுரி நான்சென்ஸ்”.

5. பெண் ஸ்நேகிதியின் இன்னொரு பயன்பாடு: அவன் அலுவலக சகாவுக்கு குழந்தை பிறந்தது. மகபேற்று விடுப்பு காலம் முடிந்து அவள் வேலைக்கு வந்தாள். அலுவலகம், வீடு, பிள்ளை, என்றூ மூன்றையுமே கட்டி மேய்க்க முடியாமல் அவள் பாடு பட, அவள் அன்றாடம் புலம்பி தள்ளுவதை இவன் கேட்க நேர்ந்தது, “அவனுக்கும் இது பிள்ளை தானே, கொஞ்சம் கூட ஹெல்பே பண்ண மாட்டேன்றான்யா. நான் ஒருத்தியே எவ்வளவு வேலை செய்யுறது? கஷ்டமா இருக்கு, தூக்கமே இல்லாம கான்செண்டிரேட்டே பண்ண முடியலை…..” அவளுக்கு பாவம் பார்த்து, அவளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பிவிட இவனும் உதவி செய்திருந்தான். இந்த அனுபவத்தின் பயனாய், இவனுக்கு திருமணமாகி அவன் மனைவி தாயான போது, இவனும் வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாய் இருந்தான்.

6. பெண் ஸ்நேகிதியின் மிக பெரிய பயன்பாடு: அவனுக்கு அவன் மனைவிக்கு சண்டை. அலுவகத்திற்கும் வந்ததுமே, “என்ன டல்லா இருக்கே?” என்று கண்டுபிடித்துவிட்டாள் சகா. அவளிடம் பொய் சொல்ல முடியாமல், “அவங்க அப்பாவை திட்டீட்டேன்னு இனிக்கு காலை டிஃபென்னே பண்ணாம ஸ்டிரைக் பண்ணீட்டா…..ஒரே சண்டை” என்று இவன் உண்மையை போட்டு உடைத்தான். “பின்ன, அவங்க அப்பாவை தப்பா பேசினா, சும்மாவா இருப்பா? உன் அப்பாவை நான் தப்பா பேசினா நீ சும்மாவிடுவியா?” என்றாள் சகா. ”உன் பொண்டாட்டியாவது சமைக்காம இருந்ததோட சரி, நானா இருந்தா உன்னை இடிச்சு இடியாப்பம் கரச்சி இருப்பேன்….” என்று ஆரம்பித்து, அவன் மனைவியுடன் அவன் சமரசம் செய்துக்கொண்டு சமாதானமாக போகும் வரை விடாமல் ஊக்குவித்தாள் தோழி.

ஒரு நல்ல தோழி இப்படி தான் இருப்பாள். ஆணின் மனதை விசாலமாக்க உதவுவாள். பெண்பாலை பற்றிய புரிதலை அவனுக்கு ஏற்படுத்துவதில் அவளுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது! பெண்பாலை பற்றிய புரிதலை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?

நாம் ஏற்கனவே இந்த தொடரில் பல முறை தெளிவுபடுத்திக்கொண்டது தான். ஆணின் மூளை அமைப்பும் பெண்ணின் மூளை அமைப்பும் வேறு வேறு. இதனாலேயே ஒரு ஆணால் சுயமாகவே ஒரு பெண்ணையோ, அவள் உலகையோ புரிந்துக்கொள்ளவே முடியாது. அவனுக்கு முன்கூட்டியே சில/பல பெண்களோடு பரிச்சையம் இருந்தால் தான், தன் மனைவியை அவன் சரியாக புரிந்துக்கொண்டு நடக்க முடியும். எப்படியும் அவனை பெற்றது ஒரு பெண் தானே, அவள் இதை எல்லாம் சொல்லி கொடுத்திருக்க மாட்டாளா? என்றால், அநேக சந்தர்பங்களில் பல தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு இதை எல்லாம் சொல்லி தருவதே இல்லை. காரணம் தாய்-மகன் உறவில் நிபந்தனைகள் இருப்பதில்லை, மகன் மோசமாக நடந்துக்கொண்டாலும் தாய் சகித்துக்கொள்வாள். பின்னே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!

இப்படி பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் மகன்களை பெண்களுக்கு தோதாக பக்குவப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தான், ஒவ்வொரு ஆணுக்கும் குறைந்த பட்சம் ஒரு தோழியாவது இருந்தே ஆக வேண்டும். அப்போது தான் அவனுக்கு பொதுவாக பெண்களின் மனம், குணம், உடலியக்கம், அவளுடைய தேவைகள், அபிப்ராயங்கள் ஆகியவற்றை புரிந்துக்கொண்டு பழக முடியும். பெண்களிடம் இப்படி கொஞ்சமாவது பரிச்சயம் இருந்தால் தான் அவள் என்ன பேசினால் அதற்கு என்ன அர்த்தம்? எந்த நேரத்தில் அவளிடம் எதை பேச வேண்டும் என்பது மாதிரியான விவஸ்தை அவனுக்கு உண்டாகும். இப்படி எல்லாம் பக்குவப்பட்டால் தானே அவன் சிறந்த ஹஸ்பெண்ட் மெட்டீரியில் ஆக முடியும்!

அதற்காக அவன் ஓவராய் நிறைய ஸ்நேகிதிகளோடு உறவாடி, அவர்களுக்கு சேவகம் செய்வதிலோ, கடலை போடுவதிலோ தன் முழு பொதுதையும் செல்வழித்தால், அப்புறம் இதனாலேயே பல புது பிரச்சனைகள் உருவாகும். யார் வெறும் ஸ்நேகிதி, யார் விவகாரமான ஸ்நேகிதி என்று தரம் பிரித்து, சண்டை போடுவதிலேயே காலத்தை வீண்டிக்க முடியாதே!

இதற்கு நேர் எதிராக, பெண்களை நிமிர்ந்தும் பார்க்காத உத்தம சிகாமணி எவனையாவது திருமணம் செய்தாலோ, அவன் அறியாமையிலேயே உறவை சொதப்பி கெடுத்துவிடுவான். அவனுக்கு பெண்ணியல் பாடங்களை சொல்லி தர மனைவி வருட கணக்கில் மெனக்கெட வேண்டி இருக்கும்!

அதலினால் ஸ்நேகிதிகாள், ஆரோகியமாய், அளவாய் பெண்களுடன் நட்புக்கொள்ள தெரிந்த ஒருவனை பார்த்து தேர்ந்தெடுங்கள். அந்த தோழிகளின் உபயத்தால் அவன் உங்களை சரியாக புரிந்துக்கொள்வான். இதனால் உங்கள் இல்வாழ்க்கை இன்பமாய் இருக்கும்!

நான் இதுவரை சொன்ன இன்கிரீடியண்ட்ஸ் எல்லாம் இருக்கும் ஆணாய் பார்த்து சலித்தெடுத்து தேர்வு செய்து விட்டீர்களா? வெரி குட். இவனை எப்படி எல்லாம் ஹாண்டில் செய்ய வேண்டும் என்கிற உயர் கல்வி சமாசாரங்களை இனிமேல் பார்ப்போம்!

Monday, April 12, 2010

ஜெண்டர் பயஸ்


இந்த படத்தை உற்று பாருங்கள்.  அப்போலோ ஹாஸ்பிடலின் தபால் தலை இது.  இதில் இருக்கும் மனிதர்களை கவனித்தீர்களா?  பெண்கள் எல்லாம் நர்ஸுகள், ஆண்கள் எல்லாம் டாக்டர்கள்!!

நான் அரசு மருத்துவமனையில் பணி செய்த போது இதே ஜெண்டர் பயஸை அனுபவித்ததுண்டு.....அங்கு ஆராய்ச்சி அறையில் நான் மட்டும் தான் டாக்டர், என்னுடன் வேலை செய்த மற்ற எல்லோருமே ஆண்கள். சைக்காலஜிஸ்ட்கள், சோஷியல் ஒர்கர்ஸ், லேப் டெக்னீஷியன்கள், உதவியாளர்கள், இத்தியாதி, இத்தியாதி. 

அதிலும் குறிப்பாக இந்த சோஷியல் ஒர்க் வேலை செய்த குமார், ஸ்டான்லீ ஆகிய இரண்டு பேரும் எனக்கு வலது கை, இடது கை மாதிரி இருப்பார்கள்.  துவார பாலகர்கள் மாதிரி இவர்கள் வளைய வர, முதல் முறை வரும் பேஷண்டுகள் நேரே, குமார்/ஸ்டான்லி இடம் போய், “டாக்டர் சார், ” என்று தான் ஆரம்பிப்பார்கள்.  ”என்கிட்ட சொல்லாதீங்க,  நான் டாக்டரில்லை, இவங்க தான்” என்று கை காட்டினால், என்னிடம் திரும்புவார்கள், ”ஸிஸ்டர், எனக்கு நாலு நாளா....” என்று ஆரம்பிப்பார்கள். 

”அவங்க சிஸ்டர் இல்லை, டாக்டர்” என்று சோஷியல் ஒர்க்கர் தெளிவு படுத்துவார். உடனே பேஷண்ட்,  என்னிடம் திரும்பி, “டாக்டர் சார், நாலு நாளா....” என்று திருத்திக்கொண்டு ஆரம்பிப்பார். .....அந்த அளவிற்கு அவர்கள் மனதில் பதிந்து போய்விட்டிருந்தது:  டாக்டர் = ஆண் பால், நர்ஸ் = பெண்பால்.  நான் பெண்பாலாக இருந்தும் டாக்டராக இருப்பதால், உடனே எனக்கு கவுரவ ஆண் அந்தஸ்து வழங்க பட்டு, நானும் ”டாக்டர் சார்” ஆகி போகும் இந்த போக்கு எங்களுக்கெல்லாம் ரொம்பவே வேடிக்கையாக இருக்கும்.

சரி, படிப்பறிவில்லாத பேஷண்டுகள் தான் அப்படி என்று பார்த்தால், நம் தபால் துறையும் அதே நிலை தானா?    பெண்கள் என்றாலே நர்ஸுகள் தான் என்று stereotypedடாய் யோசிக்கும் இந்த போக்கு, சே சே, ஷேம் ஷேம்!

Monday, April 5, 2010

உயிரை குடிக்கும் ஒருதலைக்காதல்

அந்த பையனுக்கு 25 வயது தான், திடுதிப்பென்று ஒரு நாள் அம்மாவிடம் வந்தான், தான் தன் உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணை அதி தீவிரமாக காதலிப்பதாகவும், அவளும் தன்னை ரொம்பவே விரும்புவதாகவும் சொன்னான், “இப்பவே கிளம்பு, அவங்க வீட்டுல போய் பொண்ணு கேட்கணும்”, என்றான். முதலில் காதல் கல்யாணமா? என்று ஆட்சேபித்த அம்மா, பையன், ஆக்ரோஷமாக, “வந்து பொண்ணு கேக்குறியா, இல்லை இதை எல்லாம் போட்டு உடைக்கட்டா?” என்று மிரட்டியதும், வேண்டா வெறுப்பாக பெண் கேட்கப்போனார். போய் பார்த்தால், இவன் காதலித்ததாக சொன்ன அந்த பெண்ணுக்கு இவன் யார் என்று கூட தெரிந்திருக்கவில்லை! இருவரும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், இவன் தான் அவளை தூரத்தில் இருந்து பார்த்து காதல் வயப்பட்டிருந்தான், ஆனால் அந்த பெண் இவனை பார்த்ததே இல்லை. இதை எல்லாம் விட விசித்திரம் அந்த பெண்ணுக்கு திருமணமாக அவளுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் இருந்தது!

பையனின் அம்மாவுக்கு அதிர்ச்சி + அவமானம். பையனிடம், “இதென்னடா கொடுமை?” என்றாள். ஆனால் பையன் அப்போதும் அடித்து பேசினான், “இல்லை அவ என்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுறா. புருஷன் குழந்தைன்னு சொல்லுறதெல்லாம் சுத்த பொய், எங்களை பிரிக்கிறத்துக்காக யாரோ அவளை மிரட்டி அப்படி சொல்ல சொல்லி இருக்காங்க” ஆனால் அம்மாவுக்கு பையன் ஏதோ அப்நார்மலாக இருக்கிறான் என்று புரிந்து விட்டது. காரணம் அவன் சில மாதங்களாகவே சரியாக குளிப்பதில்லை, சாப்பிடுவதில்லை, தன்னை தானே பராமறித்துக்கொள்வதுமில்லை. விடிய விடிய விழித்துக்கொண்டு ஏதோ கிறுக்கிக்கொண்டே இருந்தான். என்ன என்று எடுத்து பார்த்தால், ஏதேதோ சம்மந்தா சம்பந்தமில்லாத பெனாத்தால். அவ்வப்போது தனக்கு தானே முணுமுணுத்துக்கொள்வது, ஒரு தினிசாய் சிரித்துக்கொள்ளுதல்…..அக்கம் பக்கத்து வீட்டாரும் சொன்னார்கள், “தானா பேசிக்கிட்டே போறான், என்னன்னு கவனியுங்க”

அப்போதெல்லாம், “என் பையன் நல்லா தான் இருக்கான், அவனுக்கு அப்படி எல்லாம் எதுவுமே ஆகாது” என்று நம்பி இருந்த அம்மா, குழந்தையும் கையுமாய் நிற்பவளை காதலிப்பதாய் பையன் சொன்னதுமே, “சரி தான் பையனுக்கு மனநிலை சரியில்லை” என்று புரிந்துக்கொண்டார்.

அதற்குள் பையனின் அலுவலகத்தில் இருந்து புகார் வந்தது, அவன் ஆஃபீஸ் கோப்புகளிலும் கிறுக்கி வைத்தான், பெண் ஊழியர்கள் எல்லாம் அவன் தங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறான், பின் தொடர்கிறான் என்று புகார் கூறினார்கள்.

இப்படி சிலருக்கு ஏற்படும் இந்த காதல் பிரமையை தான் De Clerambault's syndrome என்றும் Erotomania என்றும் அழைக்கிறோம். இது ஒரு வகையான மனசிதைவு. இந்த பிரச்சனைக்கு உள்ளானவர் தன்னை ஒருவர் ரொம்பவே காதலிப்பதாகவும், அதனால் இவரும் அன்னாரை பதிலுக்கு ரொம்பவும் நேசிப்பதாகவும் கற்பனை செய்துக்கொள்கிறார்கள். ஆனால் இது வெறும் கற்பனை என்று அவர்களுக்கே தெரியாது. அதனால் தான் நேசிப்பதாய் நினைக்கும் மனிதரை பின் தொடர்வது, (Stalking) அவர்களுக்கு ரகசிய கடிதங்கள் எழுதுவது, ஃபோன் செய்து பேசாமல் இருப்பது, அவரை மையமாய் வைத்து பல காதல் கனவுகள், கவிதைகள், பாடல்கள் என்று பின்னுவது என்று இதிலேயே நேரத்தை செலவழித்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு பக்த மீரா, ஆண்டாள், இவர்கள் இருவருமே தி கிலாரெம்பால்ட் சின்ரோமால் பாதிக்க பட்ட பெண்கள். இதே கிலாரெம்பால்ட் சின்ரோம் ஆண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் இன்னும் தீவிரமாய் காதலை வெளிபடுத்துவதாய் நினைத்துக்கொண்டு, பெண்களை பின் தொடர்வது, அச்சுறுத்துவது, “என்னை மணந்துக்கொள்” என்று வர்புறுத்துவது மாதிரியான காரியங்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இது ஒரு வகை என்றால், இன்னும் சில வகை கைக்கிளை காதலர்கள் இருக்கிறார்கள்.

2. முதிர்ச்சி அடையாத சில மனிதர்கள், “நான் நினச்சதை அடஞ்சே தீருவேன். எனக்கு கிடக்கலன்னா, அது யாருக்கும் கிடைக்க கூடாது” என்று ஏடாகூடமாக எதையாவது நினைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு பெண்ணுக்கு பெட்டிஷன் போட்டு, அவள் அதை புறக்கணித்து விட்டால், உடனே ஓவர் ரியாக்ட் செய்து விடுகிறார்கள். அந்த பெண்ணை மிரட்டி இணங்க வைக்க முயல்வது, அவள் அப்படியும் மசியா விட்டால் ஆசிட் அடிப்பது, பிளேடில் கீறிவிடுவது, ஏன் கொலை கூட செய்வது என்று இருக்கும் இது போன்ற ஆபத்தான ஆசாமிகளுக்கு ஆளுமை கோளாறுகளும், சமூக விரோத தன்மையும் இருக்கலாம்.

3. இன்னும் சிலருக்கு அத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாத impulse control பிரச்சனை இருக்கலாம், இரண்டு நிமிடம் ஆறப்போட்டிருந்தால் செய்ய வேண்டாமே என்று தோன்ற கூடிய காரியங்களை சற்றும் யோசியாமல் அவசர அவசரமாய் செய்து முடித்து, அப்புறம் “சே இப்படி செய்து விட்டேனே” என்று வருந்துவார்கள்.

முதல் வகை ஆசாமிகளை பார்த்தாலே தெரியும்: யாரிடமும் சரியாக பேசாத சங்கோஜ பேர்வழிகளாய் இருப்பார்கள். “என்னமோ சரியில்லை” என்கிற எண்ணம் அவர்களை பார்த்த மாத்திரமே வந்துவிடும்.

இரண்டாம் வகை ஆசாமிகள், பந்தா பேர்வழிகளாக, சுய புகழ்ச்சிக்காரர்களாக, எதிலும் சகிப்புத்தன்மையே இல்லாதவர்களாக இருப்பார்கள். அடிக்கடி, ஈகோ பிரச்சனைகளாய் பிறருடன் பிரச்சனை பண்ணிக்கொள்வார்கள்.

மூன்றாம் ரகம் தொட்டதற்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வரும் முன்கோபியாக இருக்கும். தணிந்ததும், சாந்தமாகி விடும் சுபாவம் இருக்கும்.

யார் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒரு தலை காதல்களில் சிக்கி விடாமல் இருக்க பெண்கள் பொதுவாக தெரிந்துக்கொள்ள வேண்டிய யுத்திகள்:

1. முன் பின் தெரியாத ஆண்களாய் இருக்கட்டும், தினமும் சந்திக்கும் ஆண்களாகட்டும், எல்லோரிடமும் ஒரு டிஸ்டென்ஸ் மெயிண்டேன் செய்வது அவசியம். நட்புக்காக நீங்கள் ஓவராய் ஈஷிக்கொண்டால் அதுவே பிரச்சனைகளுக்கான காரணமாகி விடலாம்.

2. எந்த ஆண் வந்து காதல் சொன்னாலும், அவனை அவமானப்படுத்தி விடாதீர்கள். அவன் காதல் ஒரு காம்ப்லிமெண்ட் தானே, அதனால் ”தாங்கஸ், ஆனா நாட் இண்டரெஸ்டெட். ஆல் தி பெஸ்ட்” என்று பொலைட்டாக சொல்லி நழுவி விடுங்கள்.

3. “அவன் அப்படி சொன்னாண்டி” என்று உடனே பெண்கள் மாநாட்டில் எல்லோருக்கும் சொல்லி அவன் மானத்தை வாங்கி விடாதீர்கள். நீங்கள் அவனை எப்படி மதிப்பிட்டாலும், யாருடைய சுய மரியாதையையும் காயபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை. அப்படி செய்வது அநாகரீகமும் கூட

4. நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து வழிகிறானா? ரக்ஷா பந்தன் இருக்கவே இருக்கு….அவன் கையில் ஒரு ராக்கியை கட்டி சகோதரனாக்கிக்கொள்ளுங்கள்!

5. அப்போதும் தொடர்ந்து வந்து வம்பு பண்ணுகிறானா? ஓ என்று அழுது, “இது எனக்கு கஷ்டமா இருக்கு. இப்படி செய்யாதே” என்று சிம்பத்தி சம்பாதியுங்கள். எக்காரணம் கொண்டும், “உன் கைய உடைப்பேன், உன் காலை உடைப்பேன்” என்று மிரட்டி விடாதீர்கள்.

6. இதையும் தாண்டி பின் தொடர்கிறானா? உங்கள் வீட்டில் சொல்லி உங்கள் பாதுகாப்பை அதிகரியுங்கள்.

7. பெண்களுக்குள் எவ்வளவு பாலிடிக்ஸ் இருந்தாலும், பாதுகாப்பு என்று வரும் போது, எல்லோரும் ஒத்துமையாய் இருந்தாலே problem characterகள் உங்களை அண்டமாட்டார்கள்.

8. உங்களை யாராவது பின் தொடர்ந்து வருவதாய், அல்லது தொலைபேசியில் தொந்தரவு தருவதாய் தோன்றினால், இதற்கு பெயர் ஸ்டாக்கிங் Stalking. இது சட்டப்படி குற்றம், இதற்கு தண்டனைகள் உண்டு. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்

இவை எல்லாம் பெண்கள் தெரிந்துக்கொள்ள கூடிய விஷயங்கள், எடுத்து கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள்….ஆனாலும் நம் நாட்டு சட்டமும், காவலும் இன்னும் போன நூற்றாண்டு பாணியிலேயே செயல் பட்டுக்கொண்டிருப்பதால், இப்படி பட்ட போஸ்ட் மார்டன் யுவதிகளின் பிரச்சனைகளை தீர்க்கவும் அவை கொஞ்சம் முன் வந்தால் தான் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க முடியும்.

குமுதம் ஸ்நேகிதி-இல் இருந்து வெட்டி ஒட்டியது