Sunday, March 14, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 31

ஒரு ஆணை தேர்ந்தெடுக்கும் முன் அவன் அம்மாவின் குணம் நாடி குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி எல்லாம் போன ஸ்நேகிதியில் பார்த்தோம். இனி அவன் அப்பா கேரெக்டரின் முக்கியத்துவம் என்ன என்றும் தெரிந்துக்கொள்வோமே.

அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு. அதெப்படி என்று யோசிக்கிறீர்களா?

அந்த பெண் திருமணமாகி தன் கணவனுடன் வாழ போனாள். வண்டியில் அவன் பெற்றோர், பின் இருக்கையிலும், புது மணத்தம்பதிகள் முன் இருக்கையிலும் அமர்ந்து போய் கொண்டிருக்க, அந்த மாப்பிள்ளை பையன், மனைவியிடம், “என் தோலில் சாய்ந்துக்கொள்” என்று அடம் பிடிக்க, மணப்பெண்ணூம் நாணி, கோணி, மறுத்துப்பார்த்து, கடைசியில் அவன் ஆசையை நிறைவேற்ற, வண்டி இறங்கியதும், மாமியார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் உனக்கு நிமிர்ந்து உட்கார முடியாதா? அவனுக்கே இடம் பத்தாமல் கஷ்டபட்டுகிட்டு இருக்கான், நீ ஏன் அவன் மேல சாஞ்சி டிஸ்டர்ப் பண்ணே?”

இப்படி ஆரம்பித்து, தொடர்ந்து மாமியார் கோபமாகவே இருந்தாள். தன் வீட்டிற்கு அழைத்து போன மருமகளுக்கு ஒரு ஆரதி எடுக்க கூட அவளுக்கு மனமில்லை. வந்ததும் வராததுமாய் மருமகளிடம் வள் என்று விழுந்தாள், “இந்த வீட்டுல என்னென்ன இருக்குனு கவனிச்சி வெச்சிகிட்டு, உன் சொந்தகாரங்களுக்கு சொல்லீடாதே, அப்புறம் எல்லாரும் இங்கேயே வந்து உட்கார்ந்திடலாம்னு நினைச்சிக்க போறாங்க.” மகனின் அறைக்கு மருமகளை அழைத்து போனாள், “என் பையனோட டை, சாக்ஸை எல்லாம் எடுத்து உன் தம்பிக்கு குடுத்துடாதே, எல்லாம் வெச்சது வெச்சபடி இருக்கணும்….”

அந்த மாமியாருக்கு தெரியும் தான், அவள் மருமகள் பணக்காரி என்று, இருந்தாலும், அவளால் இப்படி எல்லாம் குத்தலாக பேசாமல் இருக்கவே முடியவில்லை. மருமகள் தன் கணவனுக்கு ஆசையாக எதையாவது சமைத்தால், ”இதை எல்லாம் மனிஷன் சாப்பிடுவானா,” என்று எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழைய சாம்பாரை எடுத்து தன் பையனுக்கு பரிமாறுவாள். மருமகள் தன் கணவனுக்கு கேக் என்றால் பிடிக்குமே என்று முட்டையை வாங்கி வந்தால், அதை ஒளித்து வைத்து விடுவாள் மாமியார். மருமகள் தன் கணவனின் சட்டைகளை தானே தன் கையால் இச்திரி செய்தால், “உனக்கு போட தெரியாது, நானே கடையில குடுத்து பண்ணிக்கிறேன், அது தான் அவனுக்கு பிடிக்கும்” என்பாள். இதை எல்லாம் விட பெரிய கூத்து, மகனும் மருமகளும் தனியாக இருந்தால் எங்கே மகன் மயங்கிவிடப்போகிறானோ என்று பயந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பையன் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள், “என்னமோ தெரியலை, உடம்பே சரியில்லை…..” என்ற ஒரு வசனத்துடன்.

மகன் தனியாக மாட்டினால் போதும், அவன் மாட்டாவிட்டாலும் ஃபோன் செய்தாவது புலம்பித்தள்ளூவாள், “அம்மா உனக்காக எவ்வளவோ கஷ்டபட்டிருக்கேன், என்ன இருந்தாலும் அவ நேத்து வந்தவ…..” பொருத்து பொருத்து பார்த்த மருமகளுக்கு போக போக சகிப்புத்தன்மை தேய்ந்துக்கொண்டே போக, தன் கணவனிடம் தனக்குண்டான உரிமையை பெற அவள் முயற்சிக்க ஆரம்பிக்க, வழக்கம் போல குடும்பத்தில் பெரிய குருக்ஷேத்திரமே வெடித்தது…..

இதில் பெரிய கேள்வியே, “இந்த மாமியாரும் ஒரு பெண் தானே, அவளும் கல்யாணம், கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்தவள் தானே, ஒரு பெண்ணின் மனதை அவளும் புரிந்துக்கொண்டு நடப்பது தானே இயல்பு. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் அற்பமாக நடந்து வாழ வந்தவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறாள் இந்த அம்மாள்? ” என்பது தானே. இங்கே தான் மாமனாரின் கேரெக்டர் முக்கியமாகிறது.

அந்த ஆசாமி தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இந்த வம்பே வந்திருக்காது. ஆனால் அவர் அந்த காலத்து ரோமியோ, மனைவியை தவிற மற்ற பெண்களிடமெல்லாம் தித்திப்பாய் பேசியே தன் வாழ்வின் பெரும் பொழுதை கழித்திருந்தார். ரிடையர் ஆகும் வரை பெரிதாய் எதையும் சம்பாதித்திருக்கவும் இல்லை. வாய் கிழிய வீண் ஜம்பப்பேச்சு, சதா சுய பிரதாபம், என்று எப்போதுமே அரைக்குடமாய் இருந்த அவர், அறம், பொருள், இன்பம், வீடு என்று எல்லா விஷயத்திலும், மனைவிக்கு குறையை மட்டுமே வைத்து விட, அவர் மனைவி தான் பாவம் என்ன செய்வாள்?

வெளிநாட்டு பெண் என்றால், கணவன் சரியில்லை என்று கண்டு பிடித்த உடனே அவனை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்திருப்பாள், ஆனால் இவள் இந்திய பெண்ணாயிற்றே, அதுவும் அந்த காலத்து பெண். கல்லானாலும் அதே கணவனை கட்டிக்கொண்டு அழுவதை தவிற அவளுக்கு வேறு வழி இல்லை. ஆனாலும் அவளும் பெண் தானே. அவளுக்கும், பாசம், பற்று, அன்பு, அரவணைப்பு, எல்லாம் தேவைபடுமே. அவளை பாராட்டி, ஊக்குவித்து, ”உனக்கு நான் இருக்கிறேன், கவலை படாதே,” என்று ஆறுதல் சொல்ல ஒரு ஆண் மகன் கிடைக்க மாட்டானா என்று அந்த தாயும் ஏங்கத்தானே செய்வாள்? இந்த இமோஷனல் தேவையை எப்படி தீர்த்துக்கொள்வாள்? சந்தர்ப்பம் அமைந்து, அதற்குண்டான துணிச்சலும் இருக்கும் பெண்கள், யாராவது ஒரு கள்ளக்காதலனையாவது கொண்டு இந்த இமோஷனல் தேவையை தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவு துணிவில்லாத தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகனையே தன் இமோஷனல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வாள்…..

“உன் அப்பா சரியில்லை, பார் அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்குன்னு யார் இருக்கா? நீயாவது வளர்ந்து ஆளாகி, அம்மாவை பார்த்துகிட்டா சரி…” பையனிடம் புளம்பி தள்ளி அம்மா செண்டிமெண்ட்டை அதிக பட்சமாய் இவள் பிரயோகிக்க, பையனும், “பாவம் அம்மா, அப்பா தான் அவளிடம் அன்பாகவே இல்லையே, அம்மாவை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று சகலத்தையும் செலவழிக்க தயாரானான். சம்பாதிக்க ஆரம்பித்த உடனே, அம்மாவுக்கு புடவை, நகை, வீடு, வசதி, என்று மகன் தாராளமாய் செலவழிக்க, அம்மாவும் ”என் புருஷனால தான் நான் சுகப்படலை, என் மகனாவது என்னை நல்லா பார்த்துக்குறானே” என்று உச்சி குளிர்ந்து போனாள்…..அம்மா இவ்வளவு குஷியாவதை பார்த்து, மகனும் அவளை மேலும் மேலும் கவனித்துக்கொண்டே போக, கடைசி வரைக்கும் அந்த பையனுக்கு தெரியவே தெரியாது, அவன் தன் தாய்க்கு செய்வதெல்லாம், ஒரு கணவன் செய்ய வேண்டிய கடமைகளை என்று.

மகன் போய் கணவனின் கடமைகளை செய்வதா, அதுவும் இந்த புண்ணிய மண்ணிலா, இதென்ன அபாண்டம் என்று உடனே ஓவர் ரியாக்ட் செய்துவிடாதீர்கள். கணவனின் கடமை என்றால் உடனே கலவியல் கடமைகளை மட்டும் நினைத்துக்கொண்டால் எப்படி? பேச்சுத்துணை, பாராட்டு, அவசரத்தில் உதவி, போக்குவரத்து துணை, உடை, நகை, வீடு, வசதி, கேளிக்கை, கௌரவம், இதை எல்லாம் விட பெண்களின் மிக முக்கிய தேவையான பவர்! இப்படி எத்தனையோ விஷயங்களுக்காக பல பெண்கள் இன்னமும் ஆணையே நம்பி இருக்க, அவளுக்கு வாய்த்த கணவன் இதை எல்லாம் கொடுத்தருளவில்லை என்றால், உடனே அம்மாக்காள் இவற்றை எல்லாம் தன் மகனிடம் இருந்து தான் பெற முயல்கிறார்கள்.

இதை எல்லாம் மகன் செய்யும் போது, அவன் தன்னை அறியாமல் தன் தாயுக்கே, கணவன் ஸ்தானம் வகித்து விடுகிறான். அவளுக்கே அவளுக்கு என்று அந்த தாய்க்கு ஒரு நல்ல கண்வன் வாய்த்திருந்தால், “எனக்கு இதை எல்லாம் செய்ய உன் அப்பா இருக்கிறார், நீ உன் குடும்பத்தை பார்” என்று சொல்வாள். ஆனால் கணவன் சரியாக வாய்க்காத பெண்களால் இப்படி சொல்ல முடியாதே, “பொண்டாட்டி வந்துட்டானு அம்மாவை மறந்துடாதேடா” என்று தானே கெஞ்சுவாள்? மருமகளையும் ஏதோ, தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து கொண்டுபோக வந்த பூச்சாண்டி மாதிரித்தானே நடத்துவாள்?

இதனாலேயே, இது வரை தான் அனுபவித்த சொகுசான வாழ்க்கையையும், செக்யூரிட்டியையும் கெடுக்கவே வந்த எதிரி என்கிற மாதிரியே, பல மாமியார்கள் மருமகள்களை பாவிக்கிறார்கள். மருமகளை இப்படி எதிரியாக நினைப்பதினால் தான், ”அவ சரியில்லைடா, அம்மாவை மன்னிச்சிடு, நான் தெரியாம உன்னை இப்படி ஒரு பாழும் கிணத்துல பிடிச்சு தள்ளீட்டேன்” என்று மருமகளை மட்டம் தட்டி, “உனக்கு நான் முக்கியமா, அவ முக்கியமா?” என்று மகனிடம் சண்டைகள் போட்டு, ”தாயா தாரமா” என்று தேர்ந்தெடுக்கும் தர்ம சங்கடத்திற்கு அவனை தள்ளி, சின்னத்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். தன் மகனின் விஸ்வாசத்தை தன் பக்கமே நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியை சரிகட்டிக்கொள்ள…..

இதற்கு நேர் எதிராய், தனக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்த்த மாமியார்கள் எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி, மருமகளிடம் மிகவும் ஆசையாக பழகுகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பெருந்தன்மையாக நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவன் சரியில்லை, மகனை நம்பி தான் வாழ்க்கையே என்றிருக்கும் மாமியார்களோ, ராட்ஷசிகள் மாதிரி போராடி, மகனின் குடும்ப வாழ்க்கையே நாசமாக்கி விடுகிறார்கள். தன் மகனின் வாழ்க்கையை ஒரு தாயே பாழாக்குவாளா? என்று உங்களுக்கு ஆட்சரியமாக இருக்கிறதா?

உயிரியலில் இதெல்லாம் ரொம்ப சகஜம் தான்! ஆடு, மாடு, மான் மாதிரியான தாவிர பட்சினிகளாட்டும். நாய், பூனை, சிங்கம், கழுகு மாதிரியான மாமிசபட்சினிகளாகட்டும். தாய், தான் போட்ட குட்டிகளில் ஒன்றை தானே சாப்பிட்டு, தெம்பேற்றிக்கொள்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு செயலே. ஏன் அந்த தாய் அப்படி செய்துவிடுகிறது? இயற்கையில் எல்லாவற்றுக்குமே ஓர் உள்ளர்த்தம் இருந்தாக வேண்டுமே? விஷயம் இது தான், தான் போட்ட குட்டிகளில் பிழைக்க முடியாத ஏதாவது இருந்ததென்றால், அதை பிற மிருகங்கள் சாப்பிட்டுவிடும். எப்படியும் வீணாகப்போகும் அந்த எரிபொருளை எல்லாம் தாய் தானே உட்கொண்டு விட்டால், மற்ற குழந்தைகளை பராமறிக்கும் சக்தியாவது கிடைக்குமே. அதனால் தான் பிழைக்க தோதில்லா பிள்ளைகளை காட்டுவாசி தாய்கள் தாமே தின்றுவிடுகின்றன……அதே போல தான் மனித தாயும். தான், தன் மனைவி, என்று கூடி தன் மரபணுக்களை இம்மைக்கும் மறுமைக்கும் பரப்பிக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் இல்லாத மகன், அல்லது மகள் என்றால், அதன் வளங்களை தானே உட்கொண்டுவிடுகிறாள் மனித தாய்….. அவளுக்கென்று வளங்களை கொண்டு வந்து தரவேண்டிய அவள் கணவன் கையாளாகாதவனாய் இருந்தால்.

ஆக ஸ்நேகிதிகாள், பையனின் அம்மா அவனுக்கு நல்ல பண்புகளை சொல்லி தந்திருக்கிறாளா என்று பார்ப்பது முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம் அவன் அப்பாவின் ஹஸ்பெண்டிங்க் திறமை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு அப்பாவே இல்லை, அல்லது, இருந்தும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள துப்பில்லாத வெட்டி கேஸ் என்றால், உஷார்……இந்த இன்செக்யூரிட்டியே அந்த மாமியாரை இம்சை அரசியாக்கிவிடும். ஆண்களின் போரிலாவது ஆயுதங்கள் கண்ணுக்கு தெரியும், ஆனால் இந்த பெண் புரியும் போரில் அவள் பிரயோகிக்கும், ”அம்மா செண்டிமெண்ட்” என்கிற இந்த பிரம்மாஸ்திரம் இருக்கிறதே, உலகிலேயே அது தான் மிக சக்திவாய்ந்த ஆயுதமே! கண்ணுக்கே தெரியாத இந்த ஆயுதத்தை பயன் படுத்தித்தான் பல இந்திய தாய்மார்கள் தங்கள் சுயநலத்திற்க்காக தங்கள் மகன்களின் வாழ்க்கையை பஸ்பமாக்கிவிடுகிறார்கள்….எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியினால்…..

ஆக, பையனை ஓகே சொல்வதற்கு முன்பு, அவன் அப்பாவை தரபரிசோதனை செய்துபாருங்கள். அவர் நல்ல கணவனாக இருந்தால், உங்கள் கணவன் உங்களுக்கே தான். அவர் சுத்த வேஸ்டாக இருந்தால், போச்சு, உங்கள் கணவர் உங்கள் மாமியாருக்கு தான்!

15 comments:

Anonymous said...

HI

I think the title should be How to handle your MIL(Mother In Law) or Women not Men.

வல்லிசிம்ஹன் said...

ஆழ்ந்த ஆராய்ச்சி. மாமியார்களை இந்தக் கோணத்தில் நான் அணுகியதில்லை. ஏன் இந்தக் குடும்பம் இப்படிப் பாடுபடுகிறது என்று யோசித்திருக்கிறேன்.
இதே போல்ஒரு பையன்கல்யாணம் செய்து கொள்ளும் போது,பெண்ணின் அம்மாக்களையும் ஆராய்ந்தால் என்ன பலன் கிடைக்கும்!
ஏனெனில் தாய் எவ்வழி மகள் அவ்வழி என்று பழமொழி இருக்கிறதல்லவா.
காலம் கடந்த பிறகாவது எனக்குச் சில விஷயங்கள் புரிபடுகின்றன. மிக நன்றி ஷாலினி.

Vediyappan M said...

ஆண்களை யோசிக்க வைத்துள்ளீர்கள், நன்றி

சுரேகா.. said...

எவ்வளவு கோணங்கள்?
அத்தனையும் உண்மை!

நன்றி டாக்டர்!

sumathi said...

Dear Shailini

It is really true. It really make the people to think about this. I totally agree with that. Same problem may occur in daughters side too.

Swami said...

than pennin meethu overaffection vaithu avalin vazhkaiyai pazhakkum ammakkalin manothathuvathai patriyum ezhuthungal shalini.

Anonymous said...

To valli simhan,

u r really correct. if mother of the gal was not happy with her husband, she intrudes the gal's life. real life example is my story. now we re walking everyday to hospital, marriage councellor...

Nabi said...

Dear Doctor,
I can accept 50 % Mother in law attitude...apart form this I believe attachment is the route cause of the Problem. We can eliminate such issue only by knowledge...then required serious practice...then only we can understand our thoughts..and react based on the circumstances.
All Male / Female we have to learn how leave in this Society....we can't take granted from our kids.
we must think, Our children's are asset of this society..just they born thru us....so don't take granted for your rights ....Just do our duty and leave them freely.

Ganesan said...

இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கணுமான்னு ஒரு கட்டுரை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவு ஷாலினி. நெறைய பேருக்கு forward பண்ண பட வேண்டிய பதிவு. எல்லோருக்கும் பாடமும் கூட

Sendhu amma said...

Dear Shalini,

I have faced the same problem with my sister-in-law. Her husband was not good. Whatever her husband had to do, she got it done from my husband.

Kalaivani Sankar.

karthikeyan.B said...

Dear Dr,will you please write about the reality of so called gurus..Aanandaas.. &their followers.

Mahesh said...

fine.....
I accept your views.....in case of mothers with insecurity and widows, do u say we have to eliminate them from the main stream society.....
No civilized society will do that!
i guess solution lies with the guy who should remove the insecurity of the mother and be a good husband for his wife too...provide some solution for the same doc....

flower said...

man watching result:
1.manam oru kurangu.
2.oodu meen ooda uru meen varumalavum vaadiyrukkumaam kokku.
3.aangal ellaarum nallavargalthan...oru vaippu kidaikkumvarai.

Unknown said...

100% உண்மை