Friday, January 22, 2010

யார் இந்த பெரியார்.....(12)

ராமு திடுதிப்பென ஈரோட்டை விட்டு காணமல் போனதும், பையன் எங்கே என்று கவலை பட ஆரம்பித்தார் அவர் அப்பா வெங்கட நாயகர். ஆரம்பத்தில் அவர் பையன் காணாமற்போனதை ரொம்ப ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை…..வேற எங்கே போவான்,? ஒரு வாலிபன், அதுவும் பணக்கார வீட்டு பையன், எங்கெல்லாம் போயிருக்க கூடும்? யாராவது மைனர் ஸ்நேகிதன் வீட்டில் தங்கியிருப்பான், அல்லது ஏதாவது தாசி வீட்டில் கிடப்பான் என்று அசட்டையாகவே இருந்தவர், இந்த இடங்களில் எல்லாம் தேடியும் பையன் கிடைக்கவில்லை என்றதும் தான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார்.


அதுவரை ராமு தன்னுடனேயே இருந்திருந்த போது, வெங்கடருக்கு பையனின் அருமை தெரிந்திருக்கவில்லை, ஆனால் தன் வலது கை மாதிரி எப்போதும் தன்னுடனேயே இருந்து தன் எல்லா வேலைகளில் பக்க பலமாய் இருந்த மகன் தன்னுடன் இல்லையே என்ற இழப்பை அவர் ஒவ்வொரு நாளும் வேதனையுடன் உணர்ந்தார். அதுவும் போதாதென்று ராமு தான் ஊருக்கே செல்லப்பிள்ளை ஆயிற்றே, எல்லோரும், “ராமு எங்கே?” என்று கவலை படும் போதெல்லாம் வெங்கடருக்கு பக் என்று அடித்துக்கொள்ளும்.

என்ன தான் அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தாலும், மூத்தமகன் கிருஷ்ணசாமி, கோயில், பக்தி, பாட்டு, பாகவதம், சித்தமருத்துவம் என்று குடும்ப தொழில் சாரா வேறூ துறைகளில் ஈடுபட்டிருந்ததினால், அவர் அம்மாவுக்கு தான் செல்லம். எவ்வளவு தான் குறும்புக்காரன், வாயாடியாக இருந்தாலும், வெங்கடருக்கு தன் இளைய மகன் மேல் தான் அதிக பாசம். எப்போதும் கூடவே இருக்கும் தன் துடுக்கான மகனை இழந்த தவிப்பில் அவர் தினம் தினம் மகனை தேடும் படலத்திலேயே இருந்தார்.

பையனை தேடி கண்டு பிடிக்க ஊர் ஊராய் ஆள் அனுப்பினார். ராமுவின் நண்பர்களின் வீடுகள், டிராமா கன்பேனிகள், என்று சந்தேகத்திற்கு இடமான எல்லா இடங்களில் தேடியும் மகன் கிடைக்கவில்லை. அந்த காலத்திலேயே கிட்ட தட்ட இரண்டாயிரம் ரூபாய் வரை செலவழித்து தந்தி, தபால், நேரே போய் தேடிவர ஆள் என்று அவர் எவ்வளவோ செலவழித்தும் பையன் மட்டும் கிடைத்த பாடே இல்லை.

”சரி தான், ஒரு பிள்ளையை இழந்தோம்”, என்ற முடிவுக்கே வந்து புத்திர சோகத்தில் வெங்கடர் வாடிபோனார். ஈரோட்டில் அப்பா இந்த பாடு பட்டுக்கொண்டிருக்க, ராமு காசியை விட்டு கிளம்ப முடிவு செய்தாலும், மீண்டும் ஈரோட்டிற்கு போவதாய் இல்லை. நேரே எல்லூர் போய் சேர்ந்தார்.

எல்லூரில் டி, என் சுப்ரமணிய பிள்ளை என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் மராமத்து இலாகாவில் மேற்பார்வையாளராய் பணிபுரிந்தார். முன்பு ஈரோட்டில் வேலையில் இருந்த காலத்தில் இருந்தே ராமுவோடு நல்ல பழக்கம். ரயில் நிலையத்தில் இறங்கியதுமே சுப்ரமணிய பிள்ளையின் வீடை விசாரித்து கண்டு பிடித்து போய் சேர்ந்தார் ராமு. அவர் போய் கதவை தட்டுவதற்குள் நள்ளிரவாகி விட்டிருந்தது. கதவு திறந்தது. பிள்ளை வெளிய வந்தார், துறவியாய் தன் எதிரே நின்ற ஆசாமி யாரென்று அவருக்கு தெரியவில்லை. ராமு தன்னை அறிமுக படுத்திய போது, அவர் குரலை கேட்டு தான், “ஈ வெ ராவா?” என்று சந்தேகம் வர, வெளிசத்தில் அவரை உற்று பார்த்து ஊர்ஜிதபடுத்தியதும், “வாங்க வாங்க” என்று உடனே வரவேற்றார் பிள்ளை.

உள்ளே வந்த சாமியாரை விசித்திரமாய் பார்த்த தன் மனைவிக்கு ராமுவை அறிமுக படுத்தினார். பணக்கார வீட்டு மைனராய், பட்டும், பொன்னுமாய் மின்னியே பார்த்திருந்த ராமுவை இப்படி முற்றும் துறந்த முனி கோலத்தில் பார்த்து பிள்ளையும் அவர் மனைவியும் சிரித்துவிட, பிள்ளை உடனே தன் சட்டை, துண்டை எடுத்து ராமுவுக்கு கொடுத்து உடுத்த சொன்னார்.

சுப்ரமணிய பிள்ளையின் வீட்டிலேயே ராமு தங்கிக்கொண்டார். பிள்ளையிடம் மட்டும் தன் காசியாத்திரை-துறவர கதை சொல்லிவைத்து, வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் ராமு. பிள்ளையும் இந்த ரகசியத்தை காப்பாற்ற வாக்களிக்க, ராமு ஒரு மாதம் முழுக்க அங்கேயே ஒரு வேடிக்கை ஸ்நேகிதராய் வசித்து வந்தார்.

இப்படி எல்லூரில், யாரோ ஒரு வாலிபன் என்கிற அடையாளமற்ற நிலையில் ராமு சுப்ரமணிய பிள்ளையுடன் சுற்றிக்கொண்டிந்த போது, கடை வீதி பக்கம் போனார்கள். அங்கே ஒரு கடைகாரர், எள் அளந்துக்கொண்டிந்தார். அதை பார்த்ததும் ராமுவுக்கு தன் மண்டி கடையின் நினைவுகள் மலர்ந்தேவிட, பல வருட பழக்கமான வியாபாரித்தனம் தலை தூக்க, தன்னை அறியாமல் எள்ளை கையில் அள்ளி, ”என்ன விலை?” என்றார் தன் வழக்கமான அதிகார தோரனையில். அந்த கடைக்கு சொந்த காரர் மோதே வெங்கன்னா கனிகர ஸ்ரீராமுலு என்பவர் இவரை நிமிர்ந்து பார்ப்பதற்குள், ராமு ஸ்வாரசியம் இழந்து எள்ளை அப்படியே விட்டுவிட்டு நடையை கட்ட, ஸ்ரீராமுலு, “எவரு இவரு?” என்று பின்னால் வந்த சேவகனை விசாரித்தார்.

அன்றே ஸ்ரீராமுலு ஒரு கடித உரையை எடுத்து, ஸ்ரீமான் வெங்கட நாயகர், மண்டித்தெரு, ஈரோடு, என்கிற முகவரிக்கு எழுதினார்: தங்கள் மகன் என் கடைக்கு வந்தார்; சரக்கை பார்த்தார். ஆனால் என் கடையில் கொள்முதல் செய்யாமல் வேறு கடையில் செய்திருப்பதாய் தெரிகிறது. நான் தங்களுக்கு என்ன குற்றம் செய்தேன்? இதுவரையில் எப்போதாவது நாணயம் குறைவாய் நடந்திருக்கிறேனா? தயவு செய்து உங்கள் மகனுக்கு எழுதி, எனக்கு சிபாரிசு செய்யுங்கள்”

தபால் கிடைத்ததும், வெங்கட நாயகரால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ” என் ராமு, எல்லூரிலா? ஏழு குண்டலவாடா, வெங்கட்ரமணா, என் பையன் கிடச்சிட்டான்!” என்று ஒரே குஷியாகிவிட்டார். இத்தனை வாரங்களாய் தேடியும் கிடைக்காமல் இருந்த ராமுவை பற்றிய தகவல் கிடைத்து தெரிந்ததும், வெங்கடரின் வீட்டாரும், சுற்றுவட்டாரத்தினரும் சந்தோஷப்பட, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “உடனே புறப்படறேன், ராமுவை போய் பார்த்து கையோட கூட்டீட்டு வர்றேன்” என்று அன்றே பையனை தேட கிளம்பிவிட்டார் வெங்கடர்.

அவர் நினைத்திருந்தால் வேறு யாராவது ஆளை அணுப்பி, ”இந்த சேதி உண்மையா என்று கண்டு பிடித்துவிட்டு வா, இது நம்ம ராமு தானானு ஊர்ஜிதபடுத்தீட்டு வா”, என்று வேறூ விதமாக செயல் பட்டிருக்க முடியும். ஆனால் தன் ஆசை மகனை காண வேண்டும் என்கிற அவர் தந்தை பாசம், மாற்று சிந்தனைக்கே வழி இல்லாமல் தடுக்க, நேரே எல்லூர் போய் சேர்ந்து கடிதம் எழுதிய ஸ்ரீராமுலுவை போய் பார்த்து, சுப்ரமணிய பிள்ளையின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு நேரே அவர் வீடு போய் சேர்ந்தார் வெங்கடர்.

அவர் சுப்ரமணியபிள்ளையின் வீட்டை அடைவதற்குள் இருட்டி விட்டிருந்தது. பையனை பார்க்கும் ஆவலில் நெரம் காலம் பார்க்காமல் வெங்கடர் கதவை தட்ட, பிள்ளை வந்து கதவை திறந்தவர், விருந்தாளியை பார்த்து ஆட்சரியப்பட்டு, உள்ளே அழைத்து வந்து உடகார வைத்தார். அப்பா வருவதை பார்த்து ராமு அவர் அருகில் வர, வெங்கடர் படு ஆவேசமாய், “ராமு எங்கே? முதல்ல என் பையன் எங்கிருக்கானு சொல்லுங்க, மத்தவிஷயத்தை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.”

அப்பாவின் தவிப்பை பார்த்து விட்டு, ராமு இன்னும் அவரை நெருங்கி, “நான் தான் நைனா” என்று அறிமுக படுத்திக்கொண்ட போது தான் வெங்கடர் தன் மகனையே கவனித்தார். “ராமா, என்னடா இப்படி ஆயிட்ட? அப்பா, உன்னை பெத்ததனால, பார்க்காத ஊரெல்லாம் பார்த்துட்டேன் நானு”, என்று கண் கலந்தினார்.

மகனை பார்த்த சந்தோஷமே அவர் மனதை நிறைத்துவிட, இரண்டு நாட்கள் வேறூ எதை பற்றீயுமே பேசாமல் அங்கேயே தங்கி மகனின் அருகாமையை அனுபவித்து மகிழ்ந்தவர், மூன்றாம் நாள், “ஊருக்கு போலாமா?” என்று பையனை கேட்டார். அதுவரை ஈரோட்டிற்கு போவது பற்றியே யோசிக்காமல் இருந்த ராமு, அப்பா கேட்டதுமே, “சரி” என்று தலையாட்டிவிட்டார்.

ஹைதரபாதில் தன் நண்பருக்கு திந்தி கொடுத்தார்….சொப்பு பெட்டி, எல்லா நகைகளுடனும் பத்திரமாக வந்து சேர்ந்தது. அதை தன் தந்தையிடம் சமர்பித்தார் ராமு. என்ன ஏது என்று தெரியாமல் பெட்டியை திறந்து பார்த்த வெங்கடர், உள்ளே ராமுவின் எல்லா நகைகளும் அப்படியே இருப்பதை கண்டு அதிர்ச்சி உற்றார். “அட ராமசாமி, இவ்வளவு நாளா எப்படியடா சாப்பிட்டே?” காரணம் அது நாள் வரை பையன் நகைகளை விற்று தான் சாப்பிட்டிருப்பானாக்கும் என்று அவரே முடிவெடுத்திருந்தார். “சாப்பாட்டு என்னடா பண்ணே?”

“இத்தனை நாளா ஈரோட்டுல எத்தனை பேருக்கு நீங்க சதாவிருத்தி அன்னதானம் செய்தீங்க, அதை எல்லாம் மொத்தமா வசூல் பண்ணீட்டேன்” என்று ராமு வேடிக்கையாய் சொல்ல, வெங்கடருக்கு ஒரு பக்கம் சிரிப்பு, தன் மகனின் பிழைக்கும் திறனை கண்ட பெருமை, இன்னொரு பக்கம், தன் ஆசை மகன் இப்படி எல்லாம் திண்டாடும் படி ஆகிவிட்டதே என்ற வருத்தம்.

“சரி, நகைகளை போட்டுக்கோ” என்றார். ராமுவிற்கு நகைகளின் மேல் நாட்டமில்லை, அதனால் அவற்றை அணிய மறுத்தார். “நீ இத்தனை நாளூம் இந்த நகைகளை விற்று தான் வயித்தை கழுவுனேனு ஊர்ல எல்லாரும் அநாவசியமா பேசுவாங்கடா, இப்ப போட்டுக்க, ஊருக்கு போய் சேர்ந்ததும் வேண்ணா கழட்டிக்கலாம்” என்று அப்பா அறிவுருத்த “சரி” என்று ரயில் சீட்டிற்க்காக விற்கபட்ட அந்த ஒன்றரை சவரன் மோதிரத்தை தவிர மற்ற எல்லா நகைகளையும் மாட்டிக்கொண்டார் ராமு.

எல்லூரை விட்டு கிளம்பி, சென்னை வழியாக ஈரோடு போய் சேர்ந்தார்கள் அப்பாவும் மகனும். பரிவிற்கு பிறகு மீண்டும் சேர்ந்ததினால், மகனின் மீது தனக்கிருந்த அதிக பட்ச பாசத்தை புரிந்துக்கொண்டார் வெங்கடர். ”அதிகமான பொறுப்புக்களை கொடுத்து வைத்தால் தான் பையன் சன்யாசம் கின்யாசம்னு எங்கேயும் போயிடாமல் என்னுடனேயே இருப்பான்” என்று வெங்கடர் தான் ரிடையர் ஆகிவிட முடிவு செய்தார். தன் மண்டியின் பெயர் பலகையை மாற்றி “ஈ வெ ராமசாமி நாய்க்கர் மண்டி” என்று பெயரிட்டார்.

வெங்கடரின் திட்டம் வேலையும் செய்தது. துறவு ஆசையை பற்றி யோசிக்கக்கூட நேரம் இல்லாத அளவிற்கு மண்டி வேலையிலேயே மும்முரமாய் ஈடுபட்டார் ராமு. துறவர எண்ணத்தில் முழுமையாய் ஈடுபட அவருக்கு நேரம் இருக்கவில்லையே தவிற ராமுவின் மனதில் அந்த துறவர மனநிலை அழியாமல் அப்படியே வேறூண்டி விட்டிருந்தது. அதை அவரே கூட அப்போது உணர்ந்திருக்கவில்லை.

4 comments:

kayal said...

அருமை . பெரியாரின் வாழ்கை இவ்வளவு சுவாரசியம் என்பதை இது வரை அறிந்ததில்லை ! நன்றி

PARIMALA said...

Dear Dr.
I read this article regularly.Soooo.... much to learn from this Great Man.But little I realised about him earlier.Better late than never.Thank you.

Unknown said...

Dear Mam, i read this article without fail, but this time u didnt post scanned pages. i saved that pages to refer my friends. If possible post like that. And ur writing is as usual interesting

flower said...

everybody must fallow periyar